Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதை ஒரு போராளியால் 17.05.2011 அன்று எழுதப்பட்டது. 2009 முள்ளிவாய்க்கால் வரை வாழ்ந்து உயிர் போகிற கடைசித்துளியிலிருந்து உயிர் மீண்ட தோழன் இவன். ஆவன் செய்த அதிர்ஸ்டமோ என்னவோ இப்போ புலத்தில் உயிரோடிருக்கிறான். தனது சுய வாழ்வு அனுபவத்தை அப்படியே எழுத்தாக்கியிருந்தான். அதனைச் செப்பனிட்டு முழுமையாக்கி இங்கே தருகிறேன்.

இவனுக்கு இப்போது நான் சூட்டியிருக்கிற பெயர் வசந்தன். காலம் ஒருநாள் இவனை அடையாளம் சொல்லும் நிலமை வரும்போது சொந்தப் பெயரைச் சொல்கிறேன்.

இரும்பென நினைத்தவர்களுக்குள் இளையோடிய காதலும் களவாழ்வும் கடைசியில் இவன் நேசித்த காதலி காற்றோடு காற்றாய் முள்ளிவாய்க்காலில் கரைந்ததும் இவனை இன்றுவரை உயிரோடு வதைத்துக் கொண்டிருக்கிறது.

நேசக்கரம் மூலம் அறிமுகமான இவனுக்குள் இத்தனை சோகங்கள் புதைந்திருக்குமென நம்பியிராத ஒருநாள் இவன் தன்னை தனது கதைகளைச் சொல்லத் தொடங்கினான். இவனது முழுமையான வாழ்வை தற்போது நாவலாக எழுதிக் கொண்டிருக்கிற இந்தப் போராளியின் சொந்த வாழ்வனுபுவத்தை இவ்வருட இறுதியில் நூலாக்கும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறோம்.

இனி வசந்தனின் கடைசிக் களம் பற்றிய கதையைப் படியுங்கள்.....

கதையை ஒலிவடிவில் கேட்க விரும்புவோர் ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பில் அழுத்துங்கள்.

play-button.gif?w=28&h=30http://www.tamilnews24.com/parthipan/nesakkaram/nesakkaram/audios/anu.mp3

காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்...

சூறாவளியாய் வந்து மனதுக்குள் புகுந்து சுழன்றடித்து இதயத்தை ரணமாக்கும் அவளது நினைவுகள். அவளை அந்த மரணபூமியில் தனிமையில் விட்டுவிட்டுத் தப்பித்து வந்த என்மீது கோபம் கோபமாய் வந்தது.

ஒரே கொள்கை ஒரே இலட்சியம் என்று வாழ்ந்த நமக்குள் நாமே எழுப்பி உயர்த்திய புனிதம் என்ற கற்பிதம் எல்லாம் கவிழ்ந்து நொருங்குவது போல மனசைத் துயர் காவிக் கொண்டு போய்விடுகிறது.

என்னால் மட்டும் எப்படி எல்லாவற்றையும் மறந்து லண்டன் வரை தப்பியோடி வரமுடிந்தது...?

ஓன்றாய் நாம் கழித்த எங்கள் வசந்தகாலம் எங்கே தொலைந்து போனது??????

இறந்த காலத்தில் மட்டுமே வசந்தத்தைக் காணுகிற என்னை இன்னும் இறந்து போகாத நினைவுகளை மட்டும் இழுத்து வைத்திருக்கிற இதயத்தை அவள் நினைவுகள் கூர்மிகு கத்தியாய் பலமுறை பிழந்து போட்டு விடுகிறது.

எத்தனை தான் பாதுகாப்பை எனக்கு லண்டன் அள்ளித் தந்தாலும் எப்போதும் ஒரு அச்சம் இரவுகளையும் கனவுகளையும் கழவாடிச் சென்றுவிடுகிறது.

000 000 000

யாரைத்தேட யாரை விட...? எதுவும் புரியாத வினாடிகள் அவை. எங்கள் பூர்வீக பூமியைக் கண்முன்னாலே யாரோ ஒருவனிடம் பறிகொடுத்துவிட்டு, 17.05.2009 அன்று அந்த முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வீதிவழியே சனத்தோடு சனமாக நானும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நடைப்பிணமாகப் போய்க் கொண்டிருந்தேன். எவ்வளவோ தோழ தோழியரின் இரத்தத்தால் சிவந்த மண்ணை விட்டுப் பிரியும் கடைசிச் கணங்களவை.

அந்தத் தாய் மண்ணில் நாங்கள் தோழில் சுமந்து விதைத்த எங்கள் மாவீரக்குழந்தைகளைத் தனியே விட்டு , அவர்களை விதைத்த ஒவ்வோரு முறையும் அவர்கள் கல்லறைகள் மன் உறுதிமொழியெடுத்துக் கொண்டு நிமிர்ந்த நாங்கள் பெற்ற உறுதியும் வலுவும் அன்று உருவழிந்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்தது.

எங்கள் இயலாமையும் துயரமும் கண்ணீராய் அந்த மண்ணை நனைத்துக் கொண்டிருக்க கால்கள் மட்டும் நடக்க மாற்றான் தேசம் நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.....

எல்லோருக்கும் கடைசியில் ஏதோவொரு நிறைவு இருந்தது போல எனக்குள்ளும் ஒரு நிறைவு. கடைசியாக அவளை வட்டுவாகலில் சந்தித்த நிறைவு. மௌனமாக எங்கள் இருவருக்கிடையில் பரிமாறிக்கொண்ட மௌனமொழி என் கால்களிற்கு ஓரளவிற்கு வலுச்சேர்த்துக் கொண்டிருந்தது. 6முறைக்கு மேல் கிழிக்கப்பட்ட எனது உடலைச் சுமந்து கொண்டு ஊன்றுதடியின் துணையோடு அவளிடமிருந்து அவளது பார்வைகளிலிருந்தும் விலகுகிறேன்.

000 000 000

எங்கள் இருவரது குடும்பத்திற்குமிடையில் துளிர்த்த குடும்ப நட்பு மூலம் நாங்களும் நட்பாகிக் கொண்டோம். சிறுவயது முதலே துளிர்த்த அந்த உறவு நாங்கள் வளர்ந்து பெரியவர்களாகியும் மிக நெருங்கிய நட்புறவாக மலர்ந்தது.

நாங்கள் பதின்மவயதை எட்டிய காலப்பகுதியில் அந்த நட்பு இன்னோர் உறவை உருவாக்கி நாங்கள் நமக்குள்ளே அவரவரையும் சுமக்கத் தொடங்கினோம். எங்கள் பதின்மக்காலம் மிகுந்த நெருக்கடி நிறைந்த காலம்.

அந்நியப்படைகள் எம்மைச்சுற்றி வளையமிட்டு எங்கள் தாய் மண்ணின் குரல் வளையை நெரித்துக் கொண்டிருந்த காலமது. உயிர் வாழ்வதற்கே எங்களுக்கு ஒரு வழிதான் ஒளியாய் தெரிந்தது. அந்தத் தெரிவை நானே முடிவு செய்து கொண்டேன். எனது முடிவை யாருக்கும் தெரிவிக்க அவகாசம் வைக்காமல் நான் காடுகளில் பயணிக்கத் தொடங்கினேன். கடும் பயிற்சி காவலரண் என ஆரம்பித்து களங்களில் நான் துப்பாக்கியோடு காவலிருக்கத் தொடங்கினேன். எனது கனவு ஒன்றே அது சுதந்திரதாயகமென்பதாகவே முடிவெடுத்துக் கொண்டேன்.

காலங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தது. அவள் பற்றிய ஞாபகங்களும் வருவதில்லை. களமுனை காவலரண் தோழர்களென எனது கவனம் முழுவதும் களம் தான். ஒரு களமுனையில் ஏற்பட்ட விழுப்புண். பொறுப்பாளரால் கட்டியனுப்பாத குறையாய் ஒரு வார விடுமுறை தந்தனுப்பினார்.

விடுமுறையில் வீட்டிற்குச் சென்றபோது அவளும் எங்கள் வீட்டில் இருந்தாள். அப்போது அவள் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்றுக் கொண்டிருந்தாள்.

கடுமையான பயிற்சிகளினால் இறுகிப் போன உடம்பை மறைத்து அணிந்திருந்த சேட் கழுத்தில் கட்டியிருந்த கறுப்பு நூல் என்னையே எனக்குள் பெருமைப்பட வைத்த நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட அலட்சியப்பார்வையுமென மாறியிருந்த எனது தோற்றம் அவளை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

அடிக்கடி என்னையே பார்ப்பதும் தனக்குள் ஆச்சரியப்படுவதும் ஏதோ ஒரு சந்தோசத்தில் மூழ்குவதும் எனக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. மறந்து போன ஞாபகங்களை அந்தக் குறிகய விடுமுறையில் புதுப்பித்துக் கொண்டோம். குனகாலம் வெளிமனித முகங்களைக் காணாமல் இருந்ததோ என்னவோ அவளை மீளச் சந்தித்ததோடு அவளுடன் அடிக்கடி கதைக்க வேண்டும் போலிருந்தது. சொல்லாமல் ஒளித்து வைத்திருந்த ஆயிரம் கதைகள் அவளுக்குச் சொல்ல வேண்டும் போல ஆயினும் எங்களுடைய கதைகள் பல்வேறுபட்ட துறைகளைச் சார்ந்ததாக முடிந்தது.

விடுமுறை முடிந்து எல்லோரிடமும் நான் பிரியாவிடை பெறும்நேரம்!! அவள் கண் கலங்குவதை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவளிடம் சொல்வதற்கு என்னிடம் நிறைய இருந்தது ஆனால் ஒரு சிறு புன்னகையை மாத்திரம் உதிர்த்துவிட்டு வாசலிற்கு வந்தேன். அவளும் வாசல்வரை வழியனுப்ப வந்தாள்.

அவளுடைய மௌனம் ஏதோ ஒன்றை என்னிடம் சொல்ல எத்தனிப்பதை புரிந்து கொண்டும் நான் ஏதும் கேட்கவில்லை. ஆனாலும் எல்லாவற்றிற்கும் முன்னால் எனது கடமை வந்து நின்று என்னை வேறு பக்கங்களில் சிந்திப்பதைத் தடுத்தது. அன்று விழிகளால் கதைபேசி மௌனங்களால் விடைபெற்றேன் அவளிடமிருந்து....

அதற்குப் பிறகு அவளைச் சந்தித்தது ஆனையிறவுக் களமுனையில் தான். அவள் சீருடை தரித்து

ஒரு அணியை வழி நடத்திக் கொண்டிருந்தாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த சீருடையில் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தாள். கிடைத்த ஒரு வாய்ப்பில் அவளுடன் கதைத்தேன். அதன் பிறகு பல தடவைகள் அவளுடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சந்திப்புகளின் போதெல்லாம் எங்களுடைய போராட்ட வாழ்க்கையின் அனுபவங்களை, நாம் சுமந்த இனிய நினைவுகளை, நண்பர்களை, துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டோமே தவிர ஒருமுறைகூட எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் எதிர்காலக் கனவுகள் பற்றியும் கதைத்துக் கொள்ளவேயில்லை.

ஆனாலும் இருவருக்கும் எங்கள் எதிர்காலம் பற்றிய ஏராளம் கற்பனைகள் மனதுக்குள் சிறகடித்துக் கொண்டிருந்தது. எமக்குள்ளான ஆழமான புரிந்துணர்வுடன் இருவரும் பிரிந்து செல்வோம்.

அதன்பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்ள முடியாது போய்விட்டது. இறுதியுத்தம் தொடங்கி எல்லாரும் கள முனைகளில் கவனமாகியிருந்தோம். விருப்பு வெறுப்பு எதையும் தெரிவிக்க முடியாத களநிலை மாற்றம் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் நமது கால்கள் களமே எங்கள் வாழ்வாகிப்போன நாட்களவை.

10.10.2008 ஈழப்பெண்களின் வரலாற்றில் மாலதியென்ற அத்தியாயம் எழுதப்பட்ட 21வருட நினைவுநாள் அது. எனது வாழ்நாளையும் அந்த அதிகாலை மாற்றிவிடுமென்று நான் எண்ணா விடியல் அது.

வன்னேரிக்குளப்பகுதியில் எனக்கான அணியோடு ஒரு முற்றுகைக்கான அணியை ஒழுங்குபடுத்தி முடித்தேன். தலைநிமிர முடியா வெடிச்சத்தங்கள் நடுவில் அந்தக் களநிலமை. எனது அணியை நெருங்கும் முயற்சியில் குண்டுமழைக்குள்ளால் தவண்டு சென்ற நான் களநிலமையில் உக்கிரத்தைப் புரிந்து எழுந்து ஓடுகிறேன். எனது ஓட்டம் விரைவாகி எனது அணியும் நானும் ஒரு முனையைக் கைப்பற்றிவிடுவோமென்ற நம்பிக்கை என்னுள் பதிகிறது.

ஓடிய எனது கால்கள் தொடர்ந்து இயங்காமல் ஓரிடத்தில் விழுந்துவிட்டேன். உடல் களைத்து என்னால் நகர முடியாதிருந்ததை அப்போதுதான் உணர்கிறேன். எனது வயிற்றில் நெஞ்சில் எதிரியின் குறிச்சூட்டாளின் இலக்கு என்மீது நிகழ்ந்ததை. வயிற்றைத் தொட்டுப் பார்த்தேன். இரத்தமும் உள்ளிருந்த உடற்பாகங்களும் வெளியில் வந்து சாவின் நுனியில் நான். இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. என்னைக் காக்க எனது அணியால் கூட எனது இடத்திற்கு வரமுடியாதளவு எறிகணை துப்பாக்கிச் சன்னங்கள் முழுவதும் எமது நிலைகள் யாவையும் சல்லடையாக்கிக் கொண்டிருந்தது.

என்னிடமிருந்து சாரத்தை எடுத்து வயிற்றைச் சுற்றிக் கட்டுகிறேன். இரத்தப் போக்கை சற்று நிறுத்தி வைக்கும் கடைசி முயற்சி. அத்தோடு உடலை இழுத்து இழுத்து 500மீற்றருக்கு மேல் தொலைவைச் சென்றடைந்தேன். எனது சக போராளிகளில் ஒருவன் எங்கோ கண்டுபிடித்த கயிற்றுச் சுருளொன்றை என்னிடம் எறிந்தான். அதனை என்னுடலில் கட்டுமாறு கூறினான். அதன் துணையோடு என்னை அவர்களது இடத்திற்கு எடுத்து மருத்துவத்துக்கு அனுப்பும் முடிவில் அவன் செய்த முயற்சிக்கு எனது ஒத்துழைப்பைத் தருமாறு கெஞ்சினான். காயத்தின் வலி அத்தனை தூரமும் உடலை இழுத்து வந்த காயம் எல்லாம் இனி என்னால் இயலாதென்று சொன்னது உடல். அப்படியே செத்துவிடவே விரும்பினேன். நான் கயிற்றைக் கட்டாது விட்டால் தான் என்னிடம் வந்துவிடுவதாகக் கத்தினான் அவன். உயிர் பிழைக்கிற முடிவில்லை ஆனாலும் அவனையும் சாகடிக்க விரும்பாமல் என்னைச் சுற்றிக் கயிற்றால் கட்டினேன்.

அவர்கள் என்னை கயிற்றின் துணையோடு இழுத்தார்கள். காயத்தின் வலியை விட அந்தக் கயிற்றில் இழுபட்ட வலி என்னை நானே அழித்துவிடலாம் போன்ற வலியாயிருந்தது. அயினும் அவர்களது முயற்சிக்கு என் வலியை நான் சகித்து அவர்களது காலடியில் போய்ச் சேர்ந்தேன்.

விடிகாலை 6.30 மணிக்குக் கயாமுற்ற நான் மதியம் ஆகியும் மருத்துவத்திற்கு செல்ல முடியாது மழையாய் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. நண்பர்கள் தம்மிடமிருந்த சாரங்களை எனக்குச் சுற்றி மாலை ஏழுமணிவரை எனது உயிரைக்காத்து இரவு 8மணிக்குக் கிளிநொச்சி மருத்தவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

எனது உடலிலிருந்து இரத்தம் வெளியேறி நான் பிணம் போலானேன். மனிதர்கள் நடமாட்டம் காயக்காரரின் வருகை சாவுகளின் அழுகை எல்லாம் எனது உணர்வுக்கு கேட்டுக் கொண்டிருந்தது. ஒருவர் எனது உடலைத் தட்டிப் பார்த்தார்.

ஆள் முடிஞ்சுது.....அனுப்புங்கோ...என்றார். எனது உயிர் என்னில் மிஞ்சியிருக்கிறதென்று சொல்லத் துடித்தேன். ஆனால் என்னால் ஒன்றும் சொல்ல முடியாதிருந்தது. என்னைப் பிணங்களோடு சேர்த்துவிட்டார் அந்த மனிதர்.

இரவு 9மணி தாண்டிவிட்டது. என்னைத் தாண்டிப் போன மருத்துவர் சுயந்தன் திரும்பி வந்து என்னைத் தொட்டுப் பார்த்தார். எனது உயிர் இன்னும் இருப்பதனை உணர்ந்து என்னை அங்கே போட்டுப்போனவர்கள் மீது சீறினார்.

உது தப்பாது டொக்ரர்...! இதைவிட தப்பக் கூடிய கேசுகள் கனக்க இருக்கு...அதுகளைப் பாப்பம்....விடுங்கோ....எனச்சிலர் ஆலோசனை கூறினார்கள்.

ஆனால் மருத்துவர் சுயந்தனோ எல்லாரினதும் ஆலோசனையையும் விலக்கிவிட்டு நான் படுத்திருந்த கட்டிலை இழுத்துக் கொண்டு அவசர சிகிச்சையறைக்குள் போனார். துணையாக 3பிள்ளைகளையும் அழைத்தார். என்னை உயிர்ப்பிப்பேனென்ற நம்பிக்கையில் புது இரத்தம் ஏற்ற ஏற்பாடு செய்து தனது சிகிச்சையை ஆரம்பித்தார்.

சிறுகுடல் பெருங்குடல் மண்ணீரல் சிதைந்து சமிபாட்டுத் தொகுதி முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு சிறுநீரகம் முற்றாகச் செயலிழந்து மற்றையதும் உரிய முறையில் இயங்காது போனது. மார்பில் இரு எலும்புகளும் உடைந்து மார்புக்கூட்டில் இரத்தம் நிறைந்து சுவாசிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். அருகருகே தப்பிவிடுமென்று நம்பிய உயிர்களின் கடைசி நிமிடங்கள் ஏமாற்றமாகிக் கொண்டிருக்க சாவின் கடைசி விளிம்பில் நின்ற என்னை மருத்துவர் சுயந்தன் உயிர்ப்பிக்கத் தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளிலும் இறங்கினார். இறுதியில் சுயந்தனின் முயற்சி வென்று நான் உயிர் பிழைத்தேன். சுயந்தன் போன உயிர்களில் 90வீதமானவற்றைப் பெற்றுத் தந்திருக்கிறார் என்ற பலரது நம்பிக்கையை மீளவும் எனது உயிர்ப்பு உறுதிப்படுத்தியது.

ஆயினும் தொடர்ந்தும் இயங்க முடியாத அளவிற்குப் போய்விட்டேன். மருத்துவமனையில் கடுமையான நிலையில் வாழ்வா சாவா என்ற நிலமையில் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அவள் பலமுறை என்னைப் பார்க்க வந்தாள். ஆறுதடவைகள் கீறப்பட்ட வயிற்றையும் என்னையும் பார்த்த எல்லோரும் நான் சாகப்போகிற நாட்களைத் தான் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவள் மட்டும் எனக்குச் சாவில்லை வாழ்வு வருமென்று நம்பிக்கை தந்து கொண்டிருந்தாள்.

அவளுடைய ஆறுதலான பேச்சும் என்னை உயிர்ப்பிப்போமென நம்பிய மருத்துவர்களின் ஆறுதலும் எனக்குத் தெம்பும் நம்பிக்கையையும் ஊட்டி என்னைத் தேறவைத்தது. அவள் தனக்குக் கிடைக்கிற நேரங்களில் எனக்காகப் பிரார்த்திப்பதாகச் சொன்னாள். எனது உயிர் செத்துச் செத்துத் திரும்பி ஒருவாறு நான் நடக்கும் அளவிற்குத் தயாராகிவிட்டிருந்தேன்.

000 000 000

இறுதியுத்தம் கடைசிப் பிரதேசத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லாம் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. அடுத்தகட்ட முடிவை எடுக்கும் பொறுப்பு சுயமாக அனைவரிடமும் விடப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தத்தமக்குரிய முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தனர். நான் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் தான் அவள் இன்னும் சிலருடன் தங்கியிருந்தாள்.

அந்த இடம் எறிகணையும், துப்பாக்கிச்சன்னங்களும் மாத்திரம் நிறைந்த மயான பூமியாக இருந்தது. காயமடைந்து நடக்கமுடியாதவர்கள், இறந்தவர்கள் தவிர மக்கள் கூட்டம் அங்கு குறைந்து கொண்டிருந்தது.

நான் அடுத்து என்ன செய்வதென முடிவெடுக்க முடியவில்லை. எனது கழுத்தில் அந்தக் கறுப்புநூல்; தொங்கிக் கொண்டிருந்தது. மெதுவாக ஊன்றுகோல் உதவியுடன் அவளிடம் சென்றேன்.

யார் முதலில் கதைப்பது என்ன கதைப்பது என்ற குழப்பம். இருவரும் சிறிது நேரம் மௌனமாக ஒருவரையொருவர் பார்த்தவாறு நின்றிருந்தோம். அவள்தான் மௌனத்தைக் கலைத்தவாறு

'நீங்கள் சனத்தோட சனமாக போங்கோ' என்றாள்.

'அப்ப நீர் வரேல்லையோ' அவளிடம் கேட்டேன்.

அதற்கு அவள் ஒரு புன்னகையை மாத்திரம் உதிர்த்தாள். அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது. அப்போது அவள் எம்மிலிருந்து மறு திசையை சுட்டிக் காட்டினாள். அங்கு ஒரு போராளித் தந்தை தன் போராளி மகளுடன் நின்றிருந்தான். அவனுடைய மனைவியும் இன்னொரு மகளும் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அது அவர்கள் இறுதி விடைபெறும் நேரம். தந்தையும் மகளும் அங்கு நின்று கொண்டு தாயையும் தன் கடைசி மகளையும் வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் சிறிது தூரம் சென்றதும், அந்தக் குடும்பத்தின் கடைசி வாரிசு திரும்பவும் ஓடிவந்து தந்தையைக் கட்டிப்பிடித்து...

'என்ரை கடைசித்துளி இரத்தமும் இந்த மண்ணில தான் சிந்தவேணும் நான் இந்த மண்ணைவிட்டு எங்கையும் போகமாட்டேன்' என அடம்பிடித்து நின்றாள்.

அந்த பதின்மவயதுப் பெண்ணை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு 'மகள் ! நீ அம்மாவோட

கட்டாயம் போக வேண்டும். எங்கட சரித்திரங்களைச் சொல்றதுக்காகவாவது நீ கட்டாயம்

இஞ்சையிருந்து போகத்தான ;வேணும்' என அவளைத் தேற்றி முத்தமிட்டு அனுப்பி வைத்தார்.

அவள் பேசநினைத்ததையெல்லாம் அந்தக் காட்சி எனக்கு உணர்த்தியிருந்தது. அதனால் நான்

ஒன்றும் திருப்பிக் கதைக்கவில்லை. சிறிது நேரத்தில் அந்த இடம் இரத்தச் சேறாகிவிடும். அங்கிருக்கிற உயிர்கள் எம் தேசத்துக் காற்றுடன் கலந்துவிடும்...ஆனால் அங்கு எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாத ஒரு கலகலப்பு நிலவியது.

றொட்டி சுடுபவர்கள் ஒருபுறம் தேனீர் வைப்பவர்கள் ஒருபுறம் என ஏதோ வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பது போல அவர்களின் மணித்துளிகள் கரைந்து கொண்டிருந்தது. அவள் தன்கையால் சுட்ட ஒரு றொட்டியை என்னிடம் கொண்டு வந்து கொடுத்து..

'இது நான் சுட்டது... எப்பிடி ரேஸ்ற்' என்று சிரித்தபடி கேட்டாள். நான் மௌனமாக அதை வாங்கிச் சாப்பிட்டேன்.

அவள் எனக்காய்ச் சொல்ல வைத்திருந்தது போல வாய் திறந்து சொல்லத் தொடங்கினாள். 'என்ரை வாழ்வோ, சாவோ அது இந்த மண்ணிலை தான். நாங்கள் சின்ன வயதிலயிருந்து ஒருத்தருக்கொருவர் மனதளவில நாங்கள் கனவு கண்டபடி வாழ்ந்திட்டம். ரெண்டு பேரும் இந்த தேசத்திற்கு என்ன செய்ய வேணுமோ அதைச் செய்தோம...; எங்கடை போராட்டம் வாழ்க்கை, காதல், எல்லாம் நாங்கள் இல்லாமப் போனாலும் உயிரோடை வாழ வேணும்...அதுக்கு நீங்கள் கட்டாயம் இங்கையிருந்து தப்பிப் போகத்தான் வேணும்'

அவள் எவ்வித தளம்பலுமின்றிச் சொல்லி முடித்தாள்.

துப்பாக்கிச் சத்தங்கள் எங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் எப்படியாவது என்னை அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தாள். தனது நாட்குறிப்பிலிருந்து ஒரு காகிதத்தைக்

கிழித்து அந்த வீரம்விழைந்த பூமியில் தான் சங்கமிக்கப்போகும் மண்ணில் கொஞ்சம் எடுத்து

சிறுபொதியாகச் சுற்றித்தந்தாள்.

முதல் முதலாய் அன்று அந்த நொடியில் அழுதேன். அவளையும் அவளும் நானும் சேர்ந்து காதலித்த அந்தத் தாய்மண்ணைப் பிரிய முடியாத கொடுவலி என் கண்ணீராய் பெருகிக் கொண்டிருந்தது.

அவள் என்னை விட்டுத் தள்ளிப் போனாள். திரும்பிப் பார்க்காமல் கையசைத்தாள். அத்துடன் எங்கள் தாயகத்திடமிருந்தும் அவளிடமிருந்தும் பிரிய மனமின்றி இறுதி விடைபெற்றேன்.

துப்பாக்கிச் சத்தங்கள் நெருங்கிவிட்டது. சிறிது நேரத்தில் அந்த இடம் புகைமண்டலமாக மாறும்,

அந்தப்புகையில் அவளும் அவளுடைய தோழிகளும் கரைந்து அவள் என்னைவிட அதிகமாய்

நேசித்த தாய் மண்ணுடன் கலந்து விடுவாள். நான் நடக்கிறேன். எனது உயிர் எனது காதல் எனது நேசிப்புக்குரிய அவள் நான் நடந்து கொண்டிருந்த அந்தக் காற்றோடு கலக்கிற சத்தத்தை உணர்கிறது என் காதுகள்.....திரும்பிப் பார்க்கத் துடித்த விழிகளை சனங்களுக்கு நடுவில் எறிகிறேன். கடைசிப் பிரிவில் அவள் கலங்காமல் போக நான் கண்ணீரோடு அவள் கலந்த காற்றைச் சுமந்து கொண்டு போகிறேன்.

ஒருகாலம் எமது எதிரிகள். எதிரியாகவே எம்மோடு போர் புரிந்தவர்கள் முன் நிராயுதபாணிகளாய் நிற்கிறோம். கேள்விகள் விசாரணைகள் என நாம் பிரிக்கப்படுகிறோம். எம்மிடம் எஞ்சியிருந்த எல்லாவற்றையும் சோதனையென்ற பெயரால் அவர்கள் கைப்பற்றுகிறார்கள். எனது காற்சட்டைப் பையில் பத்திரமாயிருந்த அவள் அள்ளித் தந்த மண்ணை ஒருவன் தட்டி விழுத்துகிறான்....என்னுயிரின் கடைசி நினைவும் கடைசி ஞாபகமும் அந்த இடத்தில் கால்களில் மிதிபடுகிறது.....

அவள் கொடுத்த ஒரு பிடி மண் சுற்றப்பட்டிருந்த அவளுடைய நாட்குறிப்பின் தாளில் எழுதப்பட்டிருந்த வரிகள் அவள் உரைத்த கீதையாக!!!! எனக்குள் நெருப்பை விதைக்கிறது....

காலமள்ளிக் கனவைக் களவாடிச் சென்றாலும் காதலியே என்னினிய கனவின் தேவதையே நீ விட்டுச் சென்ற காதலையும் உனது தேசப்பற்றையும் விடுதலையுணர்வும் எனது உயிரணுக்களில் சுமந்து கொண்டு போகிறேன்.....

வருடங்கள் இரண்டைக் காலம் எட்டித் தொட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அவளது நினைவுகள் வந்து நெஞ்சைத் துளைக்கிறது. அவளைத் தனியே விட்டுக் கடல் கடந்து வந்தது சுயநலம் என்று என் முகமே என்னை வெறுப்பது போல் என்னுள் ஆயிரம் கனவுகள் இரவுகளைக் கொல்கிறது....

(போராட்ட வரலாற்றில் பதியப்படாத உண்மை நிகழ்வு.)

17.05.2011

  • கருத்துக்கள உறவுகள்

நிஜங்களை கூற சில நிஜபோராளிகள் தமிழருக்கு தேவை.....தீட்டுதுணிக்கு மத்தியில் தூய துணிகளும் உண்டு..என்பதை எடுத்துகாட்டுகிறது இந்த படைப்பு....

நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சை நெகிழச் செய்கின்றன வரிகளும் சம்பவங்களும்! காலம் எல்லாவற்றுக்கும் பதில் தருமா தெரியவில்லை. தனிப்பட்ட துயரங்களை மறந்து, இருப்பது இன்னும் நம் சமூகத்துக்கென எண்ணியிருங்கள் தோழர்! நல்லது நடக்கட்டும்.

நிஜங்களை கூற சில நிஜபோராளிகள் தமிழருக்கு தேவை.....தீட்டுதுணிக்கு மத்தியில் தூய துணிகளும் உண்டு..என்பதை எடுத்துகாட்டுகிறது இந்த படைப்பு....

நன்றிகள்

ஒரு சமூகம் எப்பவும் ஒரே நிறத்தையும் ஒரே வகையான துணியையும் கொண்டிருப்பதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை நெகிழச் செய்கின்றன வரிகளும் சம்பவங்களும்! காலம் எல்லாவற்றுக்கும் பதில் தருமா தெரியவில்லை. தனிப்பட்ட துயரங்களை மறந்து, இருப்பது இன்னும் நம் சமூகத்துக்கென எண்ணியிருங்கள் தோழர்! நல்லது நடக்கட்டும்.

இந்தக்கதையை எழுதிய போராளி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பது தனக்காக இல்லை. தான் வாழ்ந்த சமூகத்துக்காகவே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். உங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் அவனுக்கு அஞ்சல் செய்கிறேன்.

நிஜங்களை கூற சில நிஜபோராளிகள் தமிழருக்கு தேவை.....தீட்டுதுணிக்கு மத்தியில் தூய துணிகளும் உண்டு..என்பதை எடுத்துகாட்டுகிறது இந்த படைப்பு....

நன்றிகள்

நிழலி கூறிய பதில் தான் எனதும் புத்தன்.

அவள் எனக்காய்ச் சொல்ல வைத்திருந்தது போல வாய் திறந்து சொல்லத் தொடங்கினாள். 'என்ரை வாழ்வோ, சாவோ அது இந்த மண்ணிலை தான். நாங்கள் சின்ன வயதிலயிருந்து ஒருத்தருக்கொருவர் மனதளவில நாங்கள் கனவு கண்டபடி வாழ்ந்திட்டம். ரெண்டு பேரும் இந்த தேசத்திற்கு என்ன செய்ய வேணுமோ அதைச் செய்தோம...; எங்கடை போராட்டம் வாழ்க்கை, காதல், எல்லாம் நாங்கள் இல்லாமப் போனாலும் உயிரோடை வாழ வேணும்...அதுக்கு நீங்கள் கட்டாயம் இங்கையிருந்து தப்பிப் போகத்தான் வேணும்'

அவள் எவ்வித தளம்பலுமின்றிச் சொல்லி முடித்தாள்.

துப்பாக்கிச் சத்தங்கள் எங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் எப்படியாவது என்னை அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தாள். தனது நாட்குறிப்பிலிருந்து ஒரு காகிதத்தைக்

கிழித்து அந்த வீரம்விழைந்த பூமியில் தான் சங்கமிக்கப்போகும் மண்ணில் கொஞ்சம் எடுத்து

சிறுபொதியாகச் சுற்றித்தந்தாள்.

கதையை முழுக்க வாசித்தேன் மனம் கவலையா இருக்கு . ஒருவகையில் இவர்களைப்போல் பலர் செய்த தியாகம் பொய்மையிலும் , கயமையிலும் கரைந்து போய்விட்டது . காதலும் வீரமும் விளைந்த பூமியில் பொய்மையும் , கயமையும் கூடிக் கும்மாளம் அடிப்பது எங்கள் தவறுதான் . ஆனால் இவர்களது குரல் உங்கள் மூலம் ஒலிக்க வேண்டும் சாந்தி :(:(:( 8 .

அக்கா! இந்தக் கதையினை வாசிப்பதற்கான அமைதியான சூழ்நிலையை உருவாக்கிய பின்னரே அதனை வாசிக்க ஆரம்பித்தேன். ஏனெனில்..... இது வலிகளையும், உணர்வுகளையும் ஒருங்கே இணைக்கும் உண்மைகள் என்பதனை உணர்வதற்கும்... அதன் வலிகளைப் புரிவதற்கும்.... அதனை பூரணமாக உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம்.

அதனால் இக்கதையினை படிக்கும்பொழுதில்.... அந்த உண்மையான பாத்திரங்களின் வலிகளை உணர்ந்து கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது.

இதயத்தினை பிடுங்குவதனைப் போன்ற வலி... சத்தம்போட்டுக் கதறக்கூட சக்தியில்லாத ஒரு உணர்வு! :(

வீரம் எங்கு இருக்கின்றதோ...... அங்கு, ஆழமான அன்புக்குரிய காதலும் கூடவே இருக்கும்!

ஆனால், இதிகாசங்களில்... ஆண்கள் செய்ததை, எம் காலத்தில்..... எம் வீரப் பெண்களும் செய்தார்கள் என்பது பெருமையே!

நன்றி அக்கா....!

இன்றைய நிகழ்வுகளும்.... ஒருநாள் வரலாறாகும்!

Edited by கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை எழுதியுள்ள போராளி தனது வாழ்வையும் எமது போராட்ட வரலாற்றில் பதியப்படாத பக்கங்களையும் எழுத வேண்டும். இந்தத் தோழன் எழுதுகிற கதைகள் வெறும் காதால் கேட்ட 3ம் நபர் சொன்ன கதைகள் அல்ல. அவன் அனுபவித்த வாழ்ந்த விடுதலைப்போராட்ட வாழ்வு.

உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இவனது கதைபற்றிய தாக்கம் ஏதோவொரு வகையில் நிச்சயம் இருக்கும். இவனை ஊக்குவித்து தொடர்ந்து எழுதி முடிக்க உங்கள் ஒவ்வொருவரது ஆதரவும் தேவை. உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

உங்கள் ஊக்கம் அவனை ஒரு முழுமையான வரலாற்றை எங்களுக்குத் தரும். ஒரு நிமிடம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்கி,

இந்த இளைஞனுக்கு அருகாயிருந்து பழகுகிறவர்களே அறிந்து கொள்ளாத சோகங்களை தனக்குள்ளே சுமக்கிறான். நான் கதைக்கத் தொடங்கில காலங்களில் அவனது தோற்றமும் கதைகளும் ஒரு பெரும் புயலை மனசுக்குள் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதனை அறியவேயில்லை. நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்லத் தனது சோகங்களைச் சொல்லத் தொடங்கினான். இன்று வரையும் நாளுக்கு ஒருமுறை கதைக்கிறபோதெல்லாம் ஒவ்வொரு கதைகளாகச் சொல்லுவான்.

எவ்வளவு துயரங்களை நெஞ்சுக்குள் சுமந்து கொண்டு வாழ்கிறானே என்ற ஆச்சரியமும் பலமுறை எழுந்ததுண்டு. இவையெல்லாம் உங்கள் ஞாபகங்களோடு மறந்துவிடாமல் எழுதுங்கோ என்ற கட்டளையை முதலில் மறுத்தும் சலித்தும் இப்போ எல்லாவற்றையும் எழுதுகிறேன் என்று முன்வந்திருக்கிற வசந்தனின் காயங்களை அவனது எழுத்துக்களே ஆற்றமென்ற நம்பிக்கையுண்டு.

கல்கி நீங்கள் வேண்டியிருப்பது போல தனது காதலியின் கடைசி ஆசையை கனவை நிறைவேற்றும் கனவோடு போர்தின்றவர்களின் வாழ்வுக்காகன ஒளியேற்றும் முயற்சியில் தன்னை இணைத்து இயங்கிக் கொண்டிருக்கிறான் வசந்தன்.

கடைசிக்கள முடிவு ஜெயமண்ணா போன்ற தளபதிகளின் கடைசி முடிவுகள் பற்றியெல்லாம் கன புனைகதைகளைத் தான் பார்த்திருக்கிறோம். அவர்களது கடைசிநேர மகிழ்ச்சி கடைசிக்களம் எல்லாவற்றையும் இவன் அருகிருந்து அனுபவித்திருக்கிறான்.

இதயத்தினை பிடுங்குவதனைப் போன்ற வலி... சத்தம்போட்டுக் கதறக்கூட சக்தியில்லாத ஒரு உணர்வு! :(

இயத்தைப் பிடுங்கியெடுக்கிற வலியோடு வாழ்கிற வசந்தனை ஊக்குவித்து ஒவ்வொருவரும் உயர்த்துவோம் கவிதை. உங்கள் ஆதரவை தந்தமைக்கு நன்றிகள்.

ஒருவகையில் இவர்களைப்போல் பலர் செய்த தியாகம் பொய்மையிலும் , கயமையிலும் கரைந்து போய்விட்டது . காதலும் வீரமும் விளைந்த பூமியில் பொய்மையும் , கயமையும் கூடிக் கும்மாளம் அடிப்பது எங்கள் தவறுதான் .

பொய்மையும் கயமையும் தானே வென்று கொண்டு போகிறது. மிஞ்சியிருப்பது இத்தகையோரது துயரங்கள் தான் கோமகன். :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்கு சொந்தக்காரரான போராளியே தனது கதையை நேரடியாக கொண்டு வந்து யாழில் இணைக்கலாமே?...பாதுகாப்பு பிரச்சனை இருந்தால் தனது ஜபி ஜடியை மறைத்து வரலாமே...எங்களுக்கு எதாவது சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் நேரடியாக கேட்டுக் கொள்வோம் உங்களிடம் கேட்டால் நீங்கள் சொல்வீர்கள் அவரிடம் கேட்டுத் தான் பதில் சொல்ல வேண்டும் அதற்காகத் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

உங்கள் அக்கறைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்து இத்தகைய ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

மற்றும் இதில் கருத்தெழுதுவோர் தங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளும் பகுதியாக்காமல் இருந்தால் மிக நன்றாக இருக்கும்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அவனும் குணம்பெற்று விசா கிடைத்து அவனாகவே அந்த கதையை எழுதும்வரை பொறுமையாக இருந்திருக்கலாம். முடிந்தளவு அவனது அனுபவங்களை அவனாகவே ஒரு அனுபவ பதிவாக்கி புத்தகமாக்கவேண்டும். அவை நிச்சயம் காலம் கடந்து நிற்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசந்தன் எழுதிய மடலிலிருந்து....

அக்கா,

நான் எழுதும்போது இல்லாத உணர்வுகள் உங்கள் உருக்கமான குரலில் இக்கதையைக் கேட்கும் போது தோன்றுகிறது.

பின்னணியில் உயிரைப்பிழியும் சோகமான மெல்லிய இசை ஓடிக்கொண்டிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

என்னவோ தெரியவில்லை காலமள்ளிப்போன வசந்தகால நினைவுகளை மீண்டும் தொட்டுப்பார்க்கும் போது வலியிருந்தாலும் அதில் ஒரு சுகம் கிடைக்கிறது.

எனக்குள் புதைத்துவைத்திருந்த வீரமும் காதலும் கடமையுமென களிந்து இறுதியில் ஓரிரவில் அனைத்தையும் துறந்து நடைப்பிணங்களாகிய கதையையும் அக்கதைக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஏராளமான பாத்திரங்களையும் கிளறி வெளியில் எடுத்துவிட்டீர்கள்.

இப்போது எனக்குள் ஒரு திருப்தி... மனது இலேசாகியதான ஒரு உணர்வு... ஒரு சகோதரியாக நண்பியாக எனது அலட்டலை பொறுமையுடன் கேட்டு கதையாக்கியதோடு மட்டுமல்லதாது எனது மனக்குமுறல்களிற்கும் ஒரு வாடிகாலாக இருக்கிறீர்கள்.....

நீங்கள் விரும்பியதுபோலவே எனது கதையை முழுமையாக எழுதுகிறேன்.

அன்பு தம்பி *****

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை துயரங்களையும் இழப்புகளையும் அவற்றிற்கிடையே சின்னச்சின்ன சந்தோசங்களையும் அள்ளிக்கொண்டு ஒரு போராட்டமாக வழிந்தோடிய கந்தக பூமியின் கண்ணீர்க்கதைகளை காலம் அள்ளிப்போகாமல் எழுத்துக்களினூடு சந்ததிகளுக்கு கடத்தப்படவேண்டும்... தொடர்ந்து எழுதச்சொல்லுங்கள் அந்தப் போராளியை..உங்கள் எழுத்துக்களினூடு அவனது வாழ்வை நேர் நிண்டு பார்த்ததுபோல் தரிசிக்க வைத்திருக்கிறீர்கள்...ஒலிப் பதிவு இன்னும் உயிர்ப்பைக் கூட்டி கண்ணீரை வரவழைத்துவிட்டது..சில நாட்களாய் இந்தக்கதையின் பாதிப்பு என் மனதில் இருந்து எதையும் எழுதவிடவில்லை..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசந்தன் எழுதிய மின்னஞ்சல்:-

அக்கா

உண்மையில் அசாதாரணங்களைக்கடந்து சாதாரணமானவனாக வாழ நினைக்கின்ற ஒவ்வொரு கணமும் வேர்களின் விசும்பல்கள் இதயத்தைப் பிழிகின்றது. ஒரு குறுகிய பொழுதோடு அடியோடு அழிக்கப்பட்ட இறந்தகால நினைவுகள் நிழலாக முன்னும் பின்னும் அலைகின்றது.

கொடிய காலம் என்னுடைய அன்புக்குரியவளை மட்டுமல்ல வழமையான தூக்கத்தையும் அள்ளிச்சென்றுவிட்டது..அதனால் கனவு காண்பது கூட கடினமான ஒன்றாகிவிட்டது. இருந்தும் துவண்டுவிடவில்லை. துயரங்களை தாண்டி மீளெழும் பக்குவம் பதினைந்து வயதிலேயே அதனைப் பார்த்தனால் எனக்கு புகட்டப்பட்டுவிட்டது.

அனைத்திலுமிருந்து மீண்டௌ முயற்சிக்கின்றேன்...அதில் பலமுறை தோற்றுப் போனாலும் இறுதி விடைபெறும்நேரம் என் இனியவளிற்கும் எனக்குமிடையில் பார்வையாலும் வார்த்தைகளாலும் பரிமாறிக்கொண்ட உறுதிமொழி என்னை எழவைக்கிறது. அவள் நினைவோடும் அவள் சுமந்த கனவுகளோடும் விழவிழ மீண்டும் எழுந்து என் இனியவழும் இன்னும் ஆயிரமாயிரம் பேரும் நேசித்த மனிதர்களை வாழவைக்கின்ற பணியில் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன். அதுதான் அவள் என்னிடம் கடைசியாக வேண்டிநின்றதும்.இந்தப்பணியே என்னுள் அவளை வாழவைக்கும்.....

இறந்த காலமாகிப் போனாலும் நிகழ்காலத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வலியை அதன்வீரியத்தை உங்களிடம் கொட்டிவிட்டேன். அதை நீங்கள் யாழில் கொட்டிவிட்டீர்கள். பல நண்பர்களும் நண்பிகளும் பல பல கருத்தை கூறியிருப்பது மிகவும் மகிழ்ச்சி....சாதலிற்குள் வாழ்வை தந்து காதலுடன் காவியமான என் அன்பிற்குரியவழும் இன்னும் பலரும் பலருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வரலாறுகளையும் தொடர்ந்தும் வெளிக்கொணர்வோம்.... அவர்கள் நேசித்ததை நாமும் நேசிப்போம்... அவர்களை மீண்டும் வாழவைப்போம்....காதல் மீண்டும் புத்துயிர்க்கும்..... காதல் மீண்டும் வாழும்...

என்றும் அன்புடன்

*****

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.