Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 1

 

 

ந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கை​யின் இறையாண்மையைக் காப்பாற்று​வதில் அந்தக் கட்சிக்கு அதீத அக்கறை முளைத்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. 

இலங்கை எல்லைக்குள் இருந்து உரிமைகளைப் பெற்று வாழ்வதா? அல்லது தனியாய் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா? என்பதை, ஈழத் தமிழினம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தமிழர்கள் உரிமைபெற்றவர்களாக வாழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது. இந்த நிலைப்பாடு அவர்களது கட்சி அறிவுஜீவிகளின் விருப்பம் சார்ந்ததும் படிப்பு சார்ந்ததும். ஆனால், தனித் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்பவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் விமர்சனம், அபத்தமானதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். கடந்தகால வரலாற்றின் சூழ்ச்சிகள் எதையும் உள்வாங்கிக்கொள்ளாத தன்மையும் கொண்டது.

 

p16.jpg''இன்றுள்ள ஏகாதிபத்தியம் கோலோச்சும் உலகச் சூழலில், அது வளரும் நாடுகளைத் துண்டாடச் செய்யும் முயற்சிகளையும், தந்திரங்​களையும் கணக்கில் எடுத்ததாக நிலைப்பாடு அமைய வேண்டும்'' என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி சொல்கிறார். ஒன்றுபட்ட இலங்கையில் இருந்து தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனித் தமிழீழம் அமைப்​பதை எந்த ஏகாதிபத்திய நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள்​தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஏகாதிபத்தியம் என்று வாசுகி சொல்வது, அமெரிக்க ஏகாதிபத்தியமாக மட்டுமே இருக்கும். மறந்தும் அவர்கள் சீனாவை ஏகாதிபத்திய நாடாகச் சொல்ல மாட்டார்கள். தலைக்கு ஒரு ஷாம்பூ; தாடிக்கு ஒரு ஷாம்பூ போடுவது சிலரது வழக்கம்!

 

தனித் தமிழீழத்தை அமைதி வழியில் முன்மொழிந்தவர் ஈழத் தந்தை செல்வா. அமைதி வழியில் அது சாத்தியம் இல்லை என்று உணர்ந்து ஆயுதம் தூக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இவர்கள் எந்த சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினார்களோ, அவர்களுக்குத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தது. ஆதரவு தந்தது. ஏகாதிபத்தியக் குணாசம்சத்தை சிங்களத் தலைவர்களுக்கு ஊட்டி வளர்த்தது. பேரினவாத எண்ணம் கொண்ட இலங்கை ஆட்சியாளர்களுக்குச் சாதகமானதைச் செய்துகொடுப்பதன் மூலமாக இலங்கையை கபளீகரம் செய்வதே ஏகாதிபத்தியங்களின் எண்ணமாக மாறியது.

முதலில் இதை பிரிட்டன் செய்தது. பிறகு அதை அமெரிக்கா பின்பற்றியது.

 

திரிகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம்தான் இலங்கையைப் பற்றி ஏகாதிபத்தியங்கள் அதிகம் கவலைப்படக் காரணம். ஆசியாவின் ராணுவ ரீதியான முக்கியத்துவத்தை இந்த இடம் தீர்மானித்தது. இதை கண்டுகொண்ட பிரிட்டன், 1947-ல் இலங்கைக்கு விடுதலை கொடுத்தாலும், தன்னை ஆதரிக்கும் ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியது. முதல் 10 ஆண்டுகள் (1948-58) பிரிட்டன் ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை ஆட்சியாளர்கள் எடுத்தனர். அதன்பிறகு, பிரிட்டனை கழற்றிவிட்டுவிட்டு கம்யூனிஸ்ட் ஆதரவு ஆட்சி (1956-1965) அமைந்தது. லேசான அமெரிக்கச் சார்பு 1970-ல் தொடங்கியது. அது வளரவில்லை. 1977-ல் கே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி, அமெரிக்காவுக்கு முழு வாசலை திறந்துவிட்டது. 1994 வரை பிரேமதாசா அதைத் தொடர்ந்தார். சந்திரிகா குமாரதுங்காவின் காலம், பல்வேறு நாடுகளை அனுசரித்துப்போவதாக இருந்தது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா அரவணைப்பாளராக அடுத்து வந்த ரணில் விக்கிரமசிங்கே இருந்தார். 2005-க்குப் பிறகான ராஜபக்ஷேவோ சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். அதற்காக அமெரிக்க உதவிகளை புறந்தள்ளிவிடவில்லை, இன்றுவரை!

 

இதில், 1977-ம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்தது அமெரிக்காவே தவிர வேறுநாடு அல்ல. இலங்கையில் நடந்தது ஒரு சிறுபான்மைத் தமிழ் இனத்​துக்கும் சிங்களப் பேரினவாத இனத்துக்குத் துணைபுரிந்த ஏகாதிபத்தியங்களுக்கும் நடந்த போர் என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஈழத் தமிழருக்கு சரியான தீர்வை யாரும் முன்மொழிய முடியும். இதை ஏற்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இல்லை போலும்!

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததால், தமிழருக்கு ஆதரவாக, தமிழீழத்துக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த நாடு p17.jpgமாறிவிட்டது என்று அடையாளப்படுத்துவது அரசியல் புரியாத சிலரின் குருட்டுச் சிந்தனை. அமெரிக்கா ஆதரிப்பதாலேயே எந்த நல்ல லட்சியமும் மோசமானதாக ஆகிவிடும் என்று நினைப்பதும் அறிவு நாணயமற்றது.

 

1983... சிங்களப் பேரினவாதத்​தின் கொலைகாரப் படலம் ஆரம்பம். 'சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகை​யில் பயங்கரவாதிகள் நடந்து​கொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இனக் கலவரமாகும்’ என்று, அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கையில் கூறியது. இதற்குக் காரணம் அமெரிக்கச் சார்பு அமைப்பான 'ஆசியனில்’ இலங்கை அதற்குமுன்தான் சேர்ந்திருந்தது. ஜெயவர்த்தனா பாகிஸ்தானுக்கும், அவரது சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனா சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கும் சென்றனர். 2009 பச்சைப் படுகொலையில் அங்கம் வகித்த நாடுகள்தான் இவை. அன்று முதல் ஆதிக்க எண்ணம் கொண்ட நாடுகள் அனைத்துமே இலங்கையின் பக்கம் நின்றன.

சோவியத் சார்பானவராக இருந்த இந்தியப் பிரதமர் இந்திரா, இந்தக் காலகட்டத்தில் மரணம் அடைகிறார். அதுவரை இந்திரா காந்திக்கு தராத முக்கியத்துவத்தை ராஜீவுக்கு அமெரிக்கா தந்தது. இலங்கையை இழுத்துவந்து இந்தியாவின் கையில் ஒப்படைப்​பதும், சோவியத் சார்பான இந்தியாவை அதனிடம் இருந்து நகர்த்து​வதும் அமெரிக்காவின் தந்திரம். எனவேதான் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஆதரித்த முதல் அறிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்தது. ராஜீவ் கையெழுத்துப் போட்ட மூன்று மணி நேரத்தில் ரீகன் பாராட்டுக் கடிதம் அனுப்பினார். 'ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை எமது கொள்கைகளும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒரே நேர்கோட்டில் உள்ளன என்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக உணர்ந்து திருப்தி அடைந்துள்ளோம்’ என்று, அமெரிக்க ராஜாங்க துணை உதவிச் செயலாளர் ராபர்ட் பெக் பேசினார். இந்த ஒப்பந்தத்தை அன்று 'ஏகாதிபத்தியமாக’ இருந்த சோவியத் ஆதரித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொழியில் சொல்வதானால், ஏகாதி​பத்தியங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் நிராகரித்தது. தமிழர்கள் நிராகரித்தனர். 'இந்துமாக் கடலை பங்கிடுவது மட்டுமே இவர்​களது நோக்கம். இந்த நோக்கத்தை ஏற்க மாட்டோம்’ என்று 1987-ல் இந்தியாவுக்கும், 2005-ல் அமெரிக்​காவுக்கும் புலிகளும் ஈழத் தமிழர்​களும் தெளிவுப்படுத்தினர். அதனா​லேயே பழிவாங்கப்பட்டனர். எனவே, ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடியில் ஈழத் தமிழனின் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டது என்பதே உலகியல் அறிவு கொண்டவர் உணரவேண்டியது.

 

ராணுவம், படை உதவிகள் செய்துவந்த ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு 2004 சுனாமி, வெளிப்​படையாக வாசலைத் திறந்துவிட்டது. உதவி, கடன், முதலீடு என்ற பெயரால் கடன் கொடுத்து உள்ளே வந்தன அந்த நாடுகள். 'எங்களுக்கு 15 ஆயிரம் கோடி தேவை’ என்று இலங்கை அறிவித்தது. 14 ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. ஒரு தேசம், சுனாமியின் பெயரால் அன்றுதான் விற்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா போன்றவை பனத்தை அள்ளிக் கொடுத்தன. உலக வங்கியையும் சர்வதேச நிதி நிறுவனத்தையும் தடையின்றி பணம் தர உத்தரவிட்டது அமெரிக்கா. இதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களிடம் அடிபணியாததுதான். இனப் பிரச்னையை தீர்க்க நார்வே நாட்டை  வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியது அமெரிக்கா. புலிகளுக்கு அமெரிக்க ராஜங்க இணை அமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள் என்ன தெரியுமா?

 

'வன்முறையைக் கைவிட வேண்டும், தனிநாடு போராட்டத்தைக் கைவிட வேண்டும், இலங்கை முழுவதும் கொழும்பு அரசின் ஆளுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ - என்றது அமெரிக்கா. புலிகள் இதை ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை முறிந்ததும், இலங்கை அரசின் குரலை அமெரிக்க அதிகாரிகளும் அமைச்சர்களும் எதிரொலித்தனர்.

 

அமெரிக்க ராணுவக் கல்லூரி அதிகாரிகள் 20 பேர் கொழும்புவுக்கு வந்தனர். கண்ணி வெடியை அகற்ற 26 பேர் வந்தனர். யு.எஸ்.எய்ட் என்ற அமைப்பு திரிகோணமலையிலும் அம்பாறையிலும் அலுவலகம் திறந்தது. அமெரிக்க ஏவுகனைக் கப்பல் ஓகானே டிடிஜி77 வந்தது. ஹெலிகாப்டர் தாங்கிச் செல்லும் நவீன ரக கரையோர ரோந்து கப்பல் வந்தது.

 

'புலிகள் தமது அரசியல் ஆயுதமாக வன்செயலைப் பயன்படுத்துவதை கைவிடச் செய்யும் அழுத்தமாக அவர்களை அமெரிக்கா தொடர்ந்து வேட்டையாடும்’ என்று, ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அர்மிடேஜ் அறிவித்​தார். 'இந்த பிராந்தியத்தைச் சாராத சக்திகளை தேவையற்ற விதத்தில் முறையற்ற செல்வாக்குடன் இனப் பிரச்னைக்குள் தலையிட இடமளித்து, சமாதான நடவடிக்கைகளை குழப்பி வருகிறது இலங்கை அரசு’ என்று, புலிகள் எதிர் அறிக்கை வெளியிட்டனர். அதாவது, நார்வேவை வைத்து பேச்சுவார்த்தை நடத்திக்​கொண்டே சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்துக்கு அமெரிக்கா ஆதரவாக நின்றது.

 

2006 ஏப்ரல் மாதம், கனடா அரசு புலிகளைத் தடைசெய்தது. 2006 மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. இரண்டுமே அமெரிக்க நிர்பந்தத்தின் விளைவு (1997-ல், புலிகளை அமெரிக்கா தடைசெய்து விட்டது!). இலங்கை அரசு, புலிகள் இரண்டையும் ஒன்றாக வைத்து அமெரிக்கா சார்பில் நார்வே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததுமே, இஸ்ரேலின் கிபீர் விமானங்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் குண்டுகள் போடத் தொடங்குகின்றன. நார்வே பேச்சு நடத்தும்; இஸ்ரேல் குண்டு போடும். இதைத்தான் 'அமெரிக்​காவின் அமைதியான முகம் நார்வே. கொடூரமான முகம் இஸ்ரேல்’ என்று பிரபாகரன் சொன்னார். இந்த இரண்டு முகங்களாலும் சிதைக்கப்பட்டதே ஈழத் தமிழ் முகம்.

 

2006 ஜனவரி 11-ம் நாள். கொழும்பு தொழில் வணிகக் கருத்தரங்கில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லூன்ஸ்டெடு பேசும்போது 'புலிகள் பழைய நினைப்பில் இலங்கைப் படையுடன் மோத வேண்டாம். இப்போது இலங்கையிடம் இருப்பது அமெரிக்காவில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ராணுவம். அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்கள் இலங்கைப் படை வசம் உள்ளன. போர் முனையில் புலிகள் படுகேவலமாகத் தோற்றுப்போவார்கள்’ என்று சொன்னது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியுமா, புரியுமா எனத் தெரியவில்லை!

 

- தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் எதிர் அறிக்கைகளையும் வெளியிட்டதன் மூலம், உலகத்தைப் புரியாமல் பிரபாகரன் படை போர்புரியவில்லை என்பதை இந்தப் பதிவானது எல்லோருக்கும் எடுத்துக் காட்டியுள்ளது. உலகத்தின் போக்கை அறியாதவன் பிரபாகரன் என்பவர்கள் எல்லோரும் இங்கு தோற்றுப்போனார்கள்.

 

அப்புறம் பிரபாகரன் படை ஏன் தோற்றது என்ற கேள்விக்குப் பலகாரணங்களை அவரவர் சிந்தனைகளுக்கும், அனுபவங்களுக்கும் ஏற்பக் கூறமுடிந்தாலும்? சில காரணங்களிலுள்ள உண்மைகளை உணர்வதற்கும் முயலவேண்டும்!.

 

பிரபாகரன் காலத்திற்கு முந்தியவர்கள், தமிழையும் தமிழினத்தின் பெருமையையும் உலகிற்கு உணர்த்தவே பெரிதும் முயன்றனர். சுய பாதுகாப்பை உணர்த்த எவருமே முற்படவில்லை. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்திடல் வேண்டும் என்று பாரதியும் பாடினானே தவிர தங்களுக்குத் தாங்களே பாதுகாப்பை தேடிக்கொள்ள வேண்டும் என்பதை ஆழமாக உணரவோ, உணர்த்தவோ முயலவில்லை. முயற்சி மேற்கொள்ளப் பட்டிருந்தால் இன்று தமிழ்நாடும் தமிழர் நிர்வாகத்தின் கீழ் இயங்கியிருக்கும். ஈழத்தமிழர் போராட்டமும் தோல்வியின்றி வெற்றியை அடையும் வாய்ப்பைப் பெற்றிருக்கும்.

 

 

 

 

 

 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் "பொதுவுடமைவாதிகளின் கவனத்துக்கு" என்று உள்ளபடியால் பலர் வழக்கமான ஒரு கட்டுரைதான் என்று படிக்காமலே தாண்டிச் சென்றிருப்பார்கள்.. நானும் அப்படித்தான் செய்தேன்.. பான்ச் இன் பின்னூட்டத்தைப் பாரத்த பிறகுதான் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.. இந்தத் தொடரை மிகவும் எதிர்பார்க்கிறேன்.. கட்டுரையின் மூலம் எதுவெனத் தெரிந்தால் நல்லது..

மேலே உள்ள வரைபடம்தான் நிலையான எதார்த்தத்தைப் பிரதிபலிப்பது..

இந்தக் கட்டுரையின் மூலம் ஜூனியர் விகடன். மிஸ்ரர் பிழம்பு, மூலம் குறிப்பிட மறந்துட்டாராம். :icon_mrgreen:

 

கட்டுரையின் தொடர் ஜூனியர் விகடனில் வெளிவரும் போது இங்கும் மறக்காமல் இணைக்கப்படும் என்கின்றார் பிழம்பார்.

மூலம் இணைக்கா விட்டால்  எத்தனை சிகப்பு புள்ளி :D

 

புலிகளின் எதிர் அறிக்கைகளையும் வெளியிட்டதன் மூலம், உலகத்தைப் புரியாமல் பிரபாகரன் படை போர்புரியவில்லை என்பதை இந்தப் பதிவானது எல்லோருக்கும் எடுத்துக் காட்டியுள்ளது. உலகத்தின் போக்கை அறியாதவன் பிரபாகரன் என்பவர்கள் எல்லோரும் இங்கு தோற்றுப்போனார்கள்.

 

அப்புறம் பிரபாகரன் படை ஏன் தோற்றது என்ற கேள்விக்குப் பலகாரணங்களை அவரவர் சிந்தனைகளுக்கும், அனுபவங்களுக்கும் ஏற்பக் கூறமுடிந்தாலும்? சில காரணங்களிலுள்ள உண்மைகளை உணர்வதற்கும் முயலவேண்டும்!.

 

ஆம் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுடைய படை ஏன் தோற்றது .என்று பலர் பல ஆய்வுகளை செய்தாலும் ............எவராலும் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதே யதார்த்தம் ..அது மட்டுமல்ல ......அதற்குரிய உண்மையான காரணத்தை சொல்ல அவரைத்தவிர இந்த உலகில் எவருமே இல்லை என்பதும் யதார்த்தம் ..............

சரி தோற்றது தோற்றது என்கிரார்கள் ...............இறுதி யுத்தம் என்று சொல்ல[ப்படும் ] அந்த சாதாரண யுத்தத்தில் எத்தனை பல்லாயிரம் இராணுவம் மாண்டது, எத்தனை பல்லாயிரம் இராணுவம் அங்கங்களை இழந்து சிறிலங்கா படைகள் எத்தனை பெரும் இழப்புக்களை சந்தித்தது என்பதை ஏன் இந்த ஆய்வாளர்கள் இன்னும் ஆராய முற்படவில்லை .............அதை தற்போது சிறிலங்கா அரசின் வாய்களில் எதிர்பார்க்க முடியாது .................அதையும் கொஞ்சம் ஆராய்ந்தால் .......பல உண்மைகளை நாம் அறிந்து கொள்ள முடியும்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 

p26.jpg

கியூபா, வியட்நாம், தென்ஆப்ரிக்கா, நமீபியா, பாலஸ்தீனம் போலவே ஈழத்தில் நடந்ததும் விடுதலைப் போராட்டம். இதை உணர்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் தயக்கம் என்ன? இந்த நாடுகளின் கோரிக்கையை சில ஏகாதிபத்திய சக்திகள் ஆதரித்தன அல்லது ஆதரிக்கும் என்பதற்காக, அதன் போராட்ட நியாயங்களை சமூக - ஜனநாயக சக்திகள் புறந்தள்ளிவிட முடியுமா? 

 

கியூபாவுக்கும் சோசலிஸ நாடுகளுக்கும் அமெரிக்கா செய்ததை, யாழ்ப்பாணத்துக்கும் வன்னிப் பகுதிக்கும் சிங்களம் செய்தது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் தடுத்தும், சொந்த தேசத்துக்குள் வர்த்தகம் அனைத்தையும் நிறுத்தும், விலைகொடுக்க முடியாத அளவுக்கு பொருட்களின் விலையை உயர்த்தியும், 'பொருளாதாரத் தடை’ செய்யப்பட்ட பகுதியாக தமிழீழத்தை சிங்கள இனவெறி நடத்தியது. அப்போது, இன்று ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவந்த அமெரிக்காவோ அல்லது தீர்மானத்தை ஆதரித்து நிற்கும் நாடுகளோ அன்று குரல் கொடுக்கவில்லை. காரணம், ஒன்றுபட்ட இலங்கைதான் அவர்களுக்குத் தேவை. அது இருந்தால்தான் தங்களது சந்தை செழிக்கும் என்று நினைத்தனர். 'ஒன்றுபட்ட இலங்கைக்குள்’ புலிகளை அமுக்கப் பார்த்தனர். அதனால், ஏகாதிபத்திய சக்திகள் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. புலிகளின் அரசியலைத் தீர்மானிக்கும் நபர்களில் ஒருவராக இருந்த கா.வெ.பாலகுமாரன், ''கியூபா எங்களுக்குப் ஒரு பாடமாக இருக்கிறது. நாளை நாங்கள் விடுதலைபெற்றாலும்கூட தொடக்கத்திலேயே எங்களுக்கு இப்படிப்பட்ட சில தடைகள் வரக் கூடும்'' என்று, அமெரிக்காவை மனதில்வைத்தே சொன்னார்.

 

ராஜபக்ஷேவை வைத்துப் புலிகளை வீழ்த்துவதும் பின்னர் ராஜபக்ஷேவை வீழ்த்துவதன் மூலமாக சீனாவை மிரட்டுவதும் என்ற தந்திரம் மட்டுமே ஜெனிவா தீர்மானமே தவிர, இது தமிழருக்கு ஆதரவானதும் அல்ல; சாதகமானதும் அல்ல. சர்வதேச அரசியலையே சர்வமும் யோசித்துக்கொண்டிருக்கக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 'தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கும்’ என்று நம்புவதுதான் ஆச்சர்யமானது.

 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் குறித்து 'தீக்கதிர்’ பத்திரிகையில் தோழர் உ.வாசுகி 'சாத்தான் வேதம் ஓதினால், சந்தேகம் வர வேண்டாமா?’ என்று ஒரு கட்டுரை எழுதி உள்ளார். கொலம்பஸில் தொடங்கி, லத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து, பாலஸ்தீனம் வழியாக வந்து, வியட்நாமைத் தொட்டு, ஈராக் அநியாயத்தை அடையாளப்படுத்தி விரிவாக எழுதியிருந்தார். ஆனால், இந்த நாடுகளில் நடந்த அட்டூழியங்களோடு ஒப்பிடும்போது கொஞ்சமும் குறையாதது ராஜபக்ஷே சகோதரர்கள் ஈழத்தில் நடத்தியது. ஆனால், அதைப் பற்றி கரிசனமான வார்த்தைகள் வர மாட்டேன் என்கிறதே... அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நுண்மையான அரசியல். இவர்களுக்குத் தூரப் பார்வைதான் உண்டு போலும். கிட்டப் பார்வை கிடையாதோ?

 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழுமையான சித்துவிளையாட்டுகள் பகிரங்கமாக நடந்த இடம் p28.jpgஇலங்கை. ஓஸ்லோவில் 2002-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தை அமைதியாகப் போய்க்கொண்டு இருந்தபோது, அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அமிட்ரேச் இடையில் புகுந்து, 'ஒரு தனியரசை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஸ்ரீலங்கா மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் விடுதலைப் புலிகள் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று மிரட்டல் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் இருந்தார். 'ஒரு சமாதானக் கூட்டத்தில் தமிழரின் சுதந்திரப் போராட்டத்துக்கு இகழ்ச்சியை உண்டு பண்ணும் நோக்கத்துடன் ஒரு உயர்தர அமெரிக்க அதிகாரி ஆத்திரமூட்டும் வகையில் எமது இயக்கத்தைச் சீண்டியது எனக்குச் சினத்தை ஏற்படுத்தியது. என்று பாலசிங்கம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டை 2003-ம் ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் செய்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள்தான் அதிக நிதி அளிக்க ஒப்புக்கொண்டன. அளவுக்கு அதிகமான நிதி இலங்கைக்குள் வருவதை புலிகள் அமைப்பு கண்டித்தது. இதை அமெரிக்கா விரும்பவில்லை.

 

ஜப்பானில் நடக்க இருந்த மாநாட்டுக்கு முன்னேற்பாடு செய்யும் ஆலோசனை மாநாட்டை வாஷிங்டனில் நடத்தப்போகிறோம் என்று திடீரென அறிவித்து, அதற்கு புலிகள் அமைப்பை அழைக்காமல்விட்டது அமெரிக்கா.  'எங்கள் நாட்டில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால், அவர்களை அழைக்க முடியாது’ என்று சொன்னார்கள். 'நாங்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே அமெரிக்காவில் நடத்தியுள்ளீர்கள்’ என்றார் பிரபாகரன். புலிகள் பங்கேற்காமலேயே அந்த மாநாடு வாஷிங்டனில் நடந்தது. 'நாசகாரச் சுழற்சிகள் நிலவும் அரசுகளது சர்வதேசக் கூட்டமைப்பின் சதிவலைப் பின்னலில் சிக்குண்டு நசுங்குவதை எமது இயக்கம் விரும்பவில்லை. பலம் பொருந்திய இந்த சர்வதேச சக்திகளின் பொறியில் விழுந்துவிடாது சுதந்திரமாகச் செயல்படவே நாம் விரும்பினோம்’ என்று பிரபாகரன் கடுமையாக அமெரிக்காவைக் கண்டித்தார். இனி பேசிப் பயனில்லை என்று புலிகள் முடிவுக்கு வந்தது அதன் பிறகுதான்.

 

இதுபற்றி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்துக்கு, அவர் பதில் அனுப்பவில்லை. ஆனால், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஆஸ்லி வில்ஸ் பதில் அனுப்பினார்.

 

'விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவதாயின், பயங்கரவாதத்தையும் வன்முறையையும் கைவிட வேண்டும். பெரும் படை அணிகளையும் ஆயுதங்களையும் வைத்திருப்பதால், புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. அது அவர்களுக்கு நெருக்கடியையே ஏற்படுத்தும்’ என்று, அமெரிக்கத் தூதர் சொன்னார். 'எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க நாம் ஆயுதம் வைத்துள்ளோம்’ என்று பதில் சொன்னார் பாலசிங்கம். 'இனப் பிரச்னையை இரு தரப்பும்தான் தீர்க்க வேண்டும். பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள வெளிநாட்டுச் சக்திகளை அநியாயமாகத் தலையீடு செய்யவைத்தது தவறு’ என்று ரணிலுக்கு புலிகள் கடிதம் அனுப்பினர். 'சமாதானத்தின் பெயரால் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் ரணில் அரசு விரித்த சர்வதேச சதிவலைப் பொறிக்குள் சிக்கிவிடாது இருப்பதில், எமது இயக்கத்தின் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. சமாதானப் பேச்சுக்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழரின் தேசிய இனப் பிரச்னையை சர்வதேசமயப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால் அதேவேளை, எமது மக்களின் விடுதலைப் போராட்ட லட்சியத்தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு தலையீடு செய்வதை நான் வன்மையாக எதிர்த்தோம்’ என்று பாலசிங்கம் அறிவித்தார்.

 

அதாவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தங்கள் சந்தை வளத்துக்கும் மூலதனத்துக்கும் புலிகளையும் தமிழர்களையும் பண்டமாக மாறுவதற்கு அமெரிக்கா கட்டாயப்படுத்திய வரலாறுதான் இவை. கொலம்பஸ் காலம் முதல் அமெரிக்க ஏகாதிபத்திய அராஜகங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இலங்கையில் நடத்தப்பட்ட அமெரிக்க நெருக்கடிகள் தெரியாதா? தெரிந்தும் பார்க்கத் தவறினார்களா?இதைப் பற்றிச் சொன்னால், தேசிய இனப் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்பதால் பீதி அடைகிறார்களா?

தேசிய இனப் பிரச்னையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்மையிலேயே உள்வாங்க மறுப்பதால்தான், ஏகாதிபத்தியப் போர்வைகளைப் போட்டுமூடி, நாட்டில் நடக்கும் அனைத்து விடுதலைப் போராட்டங்களையும் நிராகரிக்க வேண்டியுள்ளது.

 

அப்படியே அமெரிக்கா, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தால் என்ன முடிவெடுப்பது? இதற்கு லெனின் வழிகாட்டுகிறார்...

 

''ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு எதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்னொரு பெரிய வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். இதனால் சமூக - ஜனநாயகவாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்க மாட்டார்கள். அதேபோல், அரசியல் ஏமாற்றுக்காகவும் நிதிக் கொள்ளைக்காகவும் பல சமயங்களில் பூர்ஷ்வாக்கள் குடியரசுக் கோஷங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதற்காக சமூக - ஜனநாயகவாதிகள் தங்களது குடியரசுக் கொள்கையை விட்டுவிடப் போவதில்லை'' என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார்.

 

தேசிய இனப்பிரச்னை, சுயநிர்ணய உரிமை, பிரிந்துபோதல் ஆகியவற்றை எப்போது எழுதினாலும் லெனின், குடும்ப உதாரணம் ஒன்றைக் காட்டுவார். அதுதான் விவாகரத்து.

 

''சுயநிர்ணய சுதந்திரத்தை அதாவது, பிரிந்துபோகும் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்வது, விவாகரத்து உரிமையை ஆதரிப்பவர்களை குடும்ப பந்தங்களை அழிப்பவர்கள் என்று சொல்வதற்கு சமமானது'' என்கிறார் லெனின். குடும்பத்துக்குள் சித்ரவதை செய்யப்படும் பெண் ஒருத்தி, அதில் அடங்கி இருப்பதைவிட அந்த வீட்டைவிட்டு வெளியேறுவதுதான் நிம்மதியானது என்று நித்தமும் மாதர் சங்கங்கள் கவுன்சிலிங் நடத்துகின்றன. ஆனால், 'என்ன கொடுமை செய்தாலும், அந்த நாட்டுக்குள் வாழத்தான் வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்பு எடுக்கிறது. மாதர் சங்கத்தின் அறிவுரை குடும்பத்துக்குக் குடும்பம் மாறாது. ஆனால் மார்க்சிஸ்ட் நிலைப்பாடு நாடுகளுக்கு நாடு மாறுகிறதே?

 

- தொடரும்

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=32077

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்துபோகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, மார்க்சீய மூலவர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் முன்மொழிந்தது. அவர்கள் வழிநடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு உல்டா​வாகச் செயல்படுகிறது.

 

தோழர் உ.வாசுகி சொல்கிறார், ''குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அதாவது, ஏகாதிபத்திய இங்கிலாந்தின் நுகத்தடியில் இருந்து அயர்லாந்து பிரிந்துபோவது குறித்து மார்க்ஸ் சொன்னதையும், சோஷலிஸ தேசக் கட்டமைப்பில் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்று சேர்க்கும் சந்தர்ப்​பத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் சொன்னதையும் அப்படியே நகல் எடுத்து, எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்த முடியாது. மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல. குறிப்பான நிலைமைகளில் குறிப்பாகப் பொருத்திப் பார்க்கப்படும் அறிவியல் பார்வை'' என்கிறார். மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல. அப்படி ஆகிவிடவும் கூடாது.

 

ஆனால், 'மார்க்ஸ் சொன்னதையும், லெனின் வழிகாட்டியதையும் எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்த முடியாது’ - என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே சொல்ல ஆரம்பித்​திருப்பது காலக் கொடுமை. எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சூழலுக்கும் பொருந்தாத ஒரு தத்துவத்தை வைத்துக்கொண்டு ஏன் கட்சி நடத்த வேண்டும்?

 

 

'ஏகாதிபத்திய’ இங்கிலாந்துக்கு மார்க்ஸ் சொன்னது இலங்கை அரசுக்குப் பொருந்தாது என்றால், இலங்கை அரசு என்ன சோஷலிஸ அரசா? அதனிடம் ஏகாதி​பத்தியக் குணாம்சங்கள் இல்லையா? மக்களால் தேர்ந்தெடுக்கும் ஆட்சி முறையை வைத்துக்கொண்டு இலங்கையில் இப்போது நடப்பது மன்னராட்சி. 'நான் அரசு; நான் மட்டுமே அரசு’ என்று சொல்லும் சர்வாதிகார ஆட்சி. தனக்கு விரோதமாகத் தீர்ப்​பளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதி மீதே அவதூறுகள் கிளப்பி வீட்டுக்கு அனுப்ப அதிகாரம் படைத்த ஆட்சி. தேர்தல் கமிஷன்கூட சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் முடக்கிவைக்கப்படும் ஆட்சி. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று சொல்லும் ஆட்சி. பௌத்தம் தவிர மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழவேண்டியது இல்லை என்று சொல்லும் ஆட்சி. இந்துக் கோயில் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் ஆட்சி. ஹலால் முத்திரையிடப்பட்ட கறியை வாங்கத் தடைசெய்யும் ஆட்சி. ராஜபக்ஷேவின் குடும்பத்தினர் மட்டுமே அனைத்து அதிகார மையங்களிலும் இருக்கலாம் என்று அறிவித்த ஆட்சி. ராணுவத் தளபதியையே கைதுசெய்து சிறைவைத்த ஆட்சி. இது சிங்கள, பௌத்த, பேரினவாத ஏகாதிபத்தியம் அல்லவா? ஏகாதிபத்தியம் என்றால், பெரிதாக அமெரிக்கா போலத்தான் இருக்க வேண்டுமா? ஈராக், பாகிஸ்தான், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் என்று பல நாடுகளில் அத்துமீறி நுழைந்து குண்டு வீசுபவர்களைத்தான் ஏகாதிபத்தியம் என்பார்களா? மாற்று இனத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக சொந்த தேசத்து மக்கள் மீதே குண்டுபோட்ட அரச பயங்கரவாதிகள், இங்கி​லாந்து ஏகாதிபத்தியத்தைவிட எந்த விதத்தில் குறைச்சல்?

இங்கிலாந்து ஏகாதிபத்தியம் ஜாலியன் வாலாபாக்கில் நடத்திய பச்சைப்படுகொலைகளைப் போல ஈழத்தில் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். ஜெனரல் டயர் போல கொழும்புவில் 100 பேரை அடையாளம் காட்ட முடியும். என்ன நிலைமை மாறிவிட்டது?

 

ஏகாதிபத்திய இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிய வேண்டுமா கூடாதா என்று முடிவு எடுப்பதற்கு முன்னால், மார்க்ஸுக்கே குழப்பம் இருந்தது.

 

''இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்துபோவது நடக்க முடியாதது என நான் கருதியது உண்டு. ஆனால், அயர்லாந்தின் பிரிவினைக்குப் பின்னர் ஒரு கூட்டரசு தோன்ற நேர்ந்தாலும், இத்தகைய பிரிவினை தவிர்க்க முடியாதது என இன்று நான் கருதுகிறேன்'' என்று எங்கெல்ஸுக்கு மார்க்ஸ் (1867- நவம்பர் 2) கடிதம் எழுதினார்.

உலகப் பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை வலியுறுத்துவதையே தனது வாழ்க்கை லட்சியமாகக்கொண்ட மார்க்ஸ், இன்னோர் அதிர்ச்சிக்குரிய ஆலோசனையையும் சொன்னார். 'இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்தால், இங்கிலாந்து பாட்டாளிகள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டபோது, 'அயர்லாந்துடன் இங்கிலாந்துகொண்டிருக்கிற ஒன்றியத்தைக் கலைத்துவிட வேண்டியதுதான்’ என்று தீர்ப்பளித்​தார். ஒடுக்கும் இனம், ஒடுக்கப்படும் இனம் என்று பிரித்துப் பார்த்தார்.

 

ஒடுக்கும் இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர்கள், அயர்லாந்து நாட்டை தேசிய ஒடுக்குதலில் இருந்து மீட்டெடுப்பார்கள் என்று மார்க்ஸ் முதலில் நம்பியது உண்டு, சிங்களப் பாட்டாளிகள், தமிழ்ப் பாட்டாளிகளுக்காகப் பேசுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று நம்புவதைப் போல. ஆனால் அது சாத்தியமில்லை என்று மார்க்ஸின் சிந்தனை அப்போதே முடிவுக்கு வந்தது. இதை 150 ஆண்டுகள் கழிந்த பிறகு, ஏகாதிபத்தியங்களின் நகமும் முகமும் கூர்மை அடைந்த பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உணர மறுக்கிறது.

 

அயர்லாந்து விவகாரத்தில் மார்க்ஸ் எடுத்த நிலைப்பாட்டையே சோவியத் நாட்டில் லெனின் அமல்படுத்தினார். இதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொருந்தாது என்கிறது. 'சோஷலிஸத் தேசக் கட்டமைப்பில் அனைத்துத் தேசிய இனங்களையும் ஒன்று சேர்க்கும் சந்தர்ப்​பத்தில் லெனின் சொன்னதை நகலெடுக்கக் கூடாது’ '' என்கிறார் வாசுகி. பிரிந்துபோகும் தன்மை​யுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது சோஷலிஸ அரசுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று லெனின் சொல்லவில்லை. 'சோஷலிஸத்தை அடைகிற வரையில் அந்தத் தேசிய இனச்சிக்கலை ஒதுக்கிவைக்காமல்...’ என்று அறிவுறுத்தியவர் லெனின். சோஷலிஸக் கூட்டமைப்பிலேயே தேசிய இனங்களுக்குப் பிரிந்துபோகும் உரிமை தரப்பட வேண்டுமானால், பேரினவாதக் கட்டமைப்பில் அதனுடைய அவசியம் இன்னும் முக்கியம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சி உணரத் தவறுவது ஏன்?

 

தேசிய இனச் சிக்கல் 19-ம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் எழுந்தது. அது கம்யூனிஸ்ட் புரட்சி இயக்கங்களுக்கே சிக்கலை ஏற்படுத்தியது. 1886-ம் ஆண்டு இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காவது பேராயம் லண்டனில் நடந்தபோது, தேசிய இனங்களின் தனிநாட்டு உரிமை தொடர்பான தீர்மானம் வந்தது. ''தேசிய இனங்கள் எல்லாவற்றுக்கும் தனி நாட்டுரிமை உண்டு. மேலும், எல்லா நாட்டு தொழிலாளர்களும் சேர்ந்து உலகளவில் வர்க்கப் போராட்டம் நடத்த வேண்டும்'' என்று தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும் தேசிய இனப் பிரச்னை விவாதம் ஆனது. வர்க்க முரண்பாடுகளை வென்றெடுக்க நினைக்கும் மார்க்சிய சிந்தனையாளர்கள் மத்தியில் இனப் பிரச்னை விவாதப் பொருளானது. அப்போது துணிச்சலாக தேசிய இனப் பிரச்னையையும், பிரிந்துபோகும் தன்மையுடன்கூடிய சுயநிர்ணய உரிமையையும் பேசியவர் லெனின்.

 

ஒன்றுபட்ட சோவியத் புரட்சியை முன்னெடுத்துக்கொண்டு இருந்த லெனின், அங்கு பெரும்பான்மை இனமான மாருசிய தேசிய இனத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையேபடாமல் தன் கருத்தைச் சொன்னார்.

 

''நம்முடைய சொந்த மாருசிய தேசிய இனத்தைச் சேர்ந்த சொந்த நாட்டவர்கள் கொண்டிருக்கிற தேசிய காழ்ப்புகளை எங்கே புண்படுத்திவிடுவோமோ என்னும் அச்சத்தைக் கருதி இந்த (தனிநாட்டு) உரிமையை முன்வைக்க நாம் மறக்கவோ தயங்கவோ செய்வோமாயின், 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்னும் அறைகூவல் அப்போது உதட்டளவிலான வெட்கங்கெட்ட பொய்யாக மட்டுமே இருக்கும்'' என்று எச்சரித்திருக்கிறார் லெனின்.

தேசிய இன உணர்ச்சி என்பது தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் முயற்சி, சோஷலிஸத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சி என்று லெனின் முன்பு நினைத்தது உண்டு. ஆனால் அவரே, ''ஒரு தனித் தேசிய அரசை அமைத்துக்கொள்கிற உரிமையாகிய பிரிந்துபோகிற உரிமையைவிட மிகப் பெரிய உரிமை ஏதேனும் ஒரு தேசிய இனத்துக்கு உண்டா?'' என்று கேட்கும் அளவுக்குப் போனார்.

 

ஸ்வீடனில் இருந்து நார்வே தனி நாடு ஆவதை (1905-ல்) ஆதரித்தார். பிரியலாமா வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடந்தது. பெரும்பான்மைத் தீர்ப்புப்படி நார்வே பிரிந்தது. 'நாடுகள் பிரிந்து​போவதை, நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் தீர்த்துவைக்கப்பட்ட ஒரே வழியில் மட்டும் தீர்த்துவைக்க வேண்டும்’ என்றும் லெனின் எழுதினார். ஸ்வீடனுக்குள் இருந்தாலும், தனக்கெனத் தனியாக நாடாளுமன்றம் வைத்துக்கொள்ளும் உரிமை நார்வேக்கு இருந்தது. 'ஸ்வீடன் மன்னர் எங்கள் மன்னர் ஆக மாட்டார்’ என்று தீர்மானம் போடும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக நார்வே நாட்டவர்கள் இருந்தனர்.

 

ஆனால், ஈழத்தில் பெரும்பான்மைத் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதியை ஒன்றிணைத்து ஒரு மாகாணம் ஆக்குவதற்கோ, அந்தப் பகுதியில் தமிழர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கோ, சிங்களப் பேரினவாதம் அனுமதிக்கவில்லை. யாரெல்லாம் நிலம் வைத்திருந்தார்களோ, அவர்களிடம் இருந்து அவையெல்லாம் பறிக்கப்பட்டு, தமிழர் நிலங்கள் அனைத்தும் சிங்களருக்கு, ராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

சிறுபான்மை இனத்தை வஞ்சத்தோடு வறுத்தெடுக்கிறது. வாழவிடாமல் தடுக்கிறது.

 

'அயர்லாந்து மக்களுக்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. அழிவதா அல்லது தனி நாடா?'' என்று கேட்டு உண்மையை உடைத்துச் சொன்னார் மார்க்ஸ். 'தமிழர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று சரணடைவது அல்லது கடலுக்குள் விழுந்து சாவது’ என்று அறிவித்தார் சிங்கள ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா.

மார்க்ஸ் படம் பிடித்த அதே குணாம்சம்தான் 150 ஆண்டுகள் கழித்து ஃபொன்சேகாவிடம் வெளிப்பட்டது. ஏகாதிபத்தியங்கள் மாறவில்லை. மார்க்சிஸ்ட்டுகள் மாறிப் போனார்கள்.

 

star.jpgstar.jpgstar.jpgstar.jpgstar.jpg

p28.jpg''அத்தகைய சூழல் உருவாகிவிடக் கூடாது!''

24.4.2013 தேதியிட்ட ஜூ.வி. இதழில் இலங்கையைச் சேர்ந்த தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலியின் பேட்டி வெளியானது. அந்தப் பேட்டி தொடர்பாக அவர் இப்போது, நமக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ''அந்தப் பேட்டியில் இலங்கையில் முஸ்லிம்கள் நிலையைச் சொல்லிவந்த நான், 'எங்களை ஒருவித​மான நெருக்கடிக்குத் தள்ளினால், அப்போது முஸ்லிம்களும் ஆயுதங்களைத் தூக்க வேண்டிய ஒரு துரதிஷ்டவசமான நிலையை அரசாங்கம் ஏற்படுத்திவிடுமோ என்ற ஒரு அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது’ என்ற அர்த்தத்தில்தான் நான் பேட்டியளித்தேன். அத்தகைய சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய எண்ணம்'' என்று தெரிவித்திருக்கிறார்.

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=32223

 

 

அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் விடுதலை அமைப்புக்களை பலமாக பாதித்து இருந்தன.  ஒபாமா  ஆட்சியை வென்றும் அவர் முழுமையாக கொள்கைகளை மாற்ற முன்னர் சில அமெரிக்க  புஸ் கால கொள்கைவாதிகளும் காங்கிரசும்  முழுமையாக பயன்படுத்தி விட்டன.

 

 

இன்று அமெரிக்காவும் இந்தியாவும் எந்தவிதமான பாரிய அரசியல் அழுத்தத்தையும் தர முடியாத நிலையில்  உள்ளன.

நன்றி பிழம்பு. அசாத் சாலியின் கைது விபரங்களை தேடிய போது இந்த மறுப்பை மட்டும் படித்தேன். கட்டுரையைத் தள்ளியேதான் வைத்திருந்தேன்.

 

உவாசுகி என்ற பெயரை ஆராய்ந்த போது இவர் கொங்கனியை தாய் மொழியாக கொண்டவர் என்பது தெரியவந்தது. கட்டுரை தோழர் உவாசுகியின் "சாத்தான் வேதம் ஓதினால்" என்ற கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்க எழுதப்பட்டது.

 

 

 

நாம் எதையும் ஆழமாக பார்க்க முடியாது. பலவற்றை ஊகங்களை வைத்து தட்டிகொண்டு போக வேண்டும்.

 

மாற்றம் ஒன்றுதான் மாறாது என்பது அவரின் சித்தாந்தம்.

 

ஆனால் அவர் இலங்கை, இந்திய அமெரிக்க சோவியத், சீன நாடுகளின் அரசுகளின் ஆட்சிகளில் மாற்றம் ஏற்பட்டுவிட்டன என்பதை கவனிக்கத்தவறிவிட்டர்.

 

 

1. தோழர் உவாசுகியின் கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கையில் இடதுசாரிகள் சிங்களத்திடம் கொள்கைகளை விற்றது மாதிரியே காங்கிரசிடம் தன் கொள்கைகளை விற்ற கட்சி.  எனவே காங்கிரசுக்கு சோழகம் என்றால் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோழகம் இல்லையெல் இரண்டுக்கும் வாடை வீசும். எனவே இந்த கம்யூனிஸ்ட்கடசியை வைத்து செய்யப்படும் அரசியல் அலசல்கள் தமது யதார்த்தம் இழக்கக் கூடாது. சர்வதேச திறந்த பொருளாதாரத்தில் தமது பொருளாதார வளர்த்திருக்கும் சீனா, ரூசியா கூட இன்று சோசலிச கொள்ககைகளை விட்டுவிட்டார்கள். அந்த மறந்து போன மார்க்சிசத்தை வைத்து காங்கிரசுக்கு அடிமையாகிப்போய்விட்ட  கம்யூனிஸ்ட்கட்சியின் ஈழவிடுதலை எதிர்ப்பு கொள்கைகளை எதிர்க்க போய் நாம் எமது ராஜதந்திர பாதையில் இருந்து சறுக்குவது புத்திசாலித்தனம் அல்ல.

 

2. அண்மைய காலம் வரை, அமெரிக்காவின் ஈழத்தமிழர் விடுதலை கொள்கைகள் றீகன் காலத்தில் இருந்து வருபவை.  அந்த கொள்கைகள் இந்திராகாந்தி தமிழருக்கு உதவி, இந்தியாவும், சோவியத்தும் இலங்கையில் இறங்க பார்க்கின்றன என்ற அநுமானத்தில் கட்டி எழுப்பட்டவை. இது அமெரிக்க - சோவியத் இருதுருவ மேலாதிக்கம் இருந்த காலம். புஸ்காலத்தில், அமெரிக்க தனித்துவ மேலாதிக்கம் இருந்த போது இது மீளாயப்படவிலை.  இதனால் தமிழர் விடுதலையை அழிக்க அமெரிக்கா கண் மூடித்தனமாக உதவியது. இன்று அமெரிக்கா பலதுருவ மேலாதிக்கத்தன்மையை ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டிருக்கிறது. கொள்கைகள் மாறிவிட்டன. ஈழத்தமிழர் விடுதலைக்கு அமெரிக்க நிலைப்பாட்டை மாற்றப்பார்க்க வேண்டும். இதில், சீனா இலங்கைக்கு உதவி, இலங்கையில் இறங்குகிறது என்பது முதன்மையானது.  சோவியத் இல்லை. இன்று பாகிஸ்தான் அமெரிக்காவின் உண்மை நண்பன் இல்லை. பாலூஸ்தான் சுதந்திரம் அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொன்று. கிளின்டன் கஸ்மீர சுதந்திரந்தை வலியுறுத்தியவர். ஒபாமவை தமிழ்நாட்டு சுதந்திரத்தை வலியுறுத்த வைக்க வேண்டும். எனவே இந்த கம்யூனிஸ்ட்கட்டிசியை காங்கிரசிரசுடனதொட்டிப்போக கூடாது என்று அரசியல் ஆய்வுசெய்யக்கூடாது.

 

3. சோவியத் இல்லை. இந்திரா இல்லை. சோவியத் - இந்தியா உறவு இல்லை.  இந்திரா,  அமெரிக்காவின் நண்பன் பாகிஸ்தானை பலமிழக்க செய்த நிலை இப்போது இல்லை. இலங்கை பிரிவதால் அமெரிக்காவின் கவலை இப்போது வேறுகரை. இது இந்தியாவின் பிரச்சராமான "சீனா புகுந்து விடும் என்றதில் தான் எழுகிறது". இது இந்தியா 2008 ல் புலிகள் தோற்கிறார்கள் என்று கண்ட பின் பழிவாங்க ஆரம்பித்த புதிய எமாற்றுப் பழிவாங்கல் பாதுகாப்புக்கொள்கை. "சீன முத்து மாலையை" கண்டுபிடித்தது அமெரிக்க ஆய்வாளர்கள். அவர்கள் இந்தியா இரண்டாம் தரம் இலங்கையில் இறங்க முதலிலேயே முத்து மாலை ஆரம்பமாகி இலங்கையில் சீனா கால் பதித்துவிட்டது என்ற செய்தியை வாஜ்பாய் அரசாங்காத்தின் செயல் இன்மையாகவேதான் வெளிவிட்டிருந்தார்கள். எனவே இதில் இந்தியாவின் விளக்கம் அவர்களுக்கு தேவை இல்லை எனவே. நாம் அமெரிக்காவை நேராக ஆர்வம்கொள்ள வைக்க முயல வேண்டும். கம்யூனிஸ்ட்கட்சி இதில் தேவை இல்லை.

4. கட்டுரையாளர் உவாசுகியின் கருத்து தவறு என்று பல பழைய பலவற்றை வைத்து திடமாக நிரூபித்திருக்கிறார். இவை ரீகன்-இந்திரா காலத்தவை.ஆனால் உவாசுகியின் கவலை அமெரிக்கா இன்றைய நாளில் ஈழத்தமிழருக்கு உதவுவதாக இலங்கைக்கு வந்து விடுமா என்ற பயம். ஆனால் நாம் உவாசுகியின் கவலைப்பற்றி அக்கறை காட்டாமல் அதை உண்மையாக்க வேண்டும்.  உவாசுகியை சாந்தப் படுத்த அமெரிக்கா வராது என்றோ, வரவிலைத்தானே என்றோ நிரூபிக்க மினக்கேடக்கூடாது. மாறாக அமெரிக்காவை கொண்டுவந்து சேர்க்க வேண்டும்.அதில் ஒரு வழி அமெரிகாவின் பாரிய முதலீடுகளுக்கு தமிழ் நாட்டில் இடம் அளிக்க வேண்டும். அது, எப்படி எப்படி சீனா இலங்கையின் தெற்கின் பாதுகாப்பை ஊர்யிதம் செய்கிறதோ அது மாதிரி அமெரிக்காவுக்கு இந்தியாவின் தெற்கின் பாதுகாப்ப்பை ஊர்ஜிதம் செய்ய வேண்டிய தேவையை கொண்டு வரும்.

 

நமது நோக்கம் கம்யூனிஸ்ட் கட்சியை பிழை என்று காட்ட அமெரிக்கவிலிருந்து பிரிந்து போவதல்ல.  தோழர் உவாசுகி காங்கிரசுடன் தூங்குவதற்காக தமிழ் ஈழம் பிரியக்கூடாது என்பதை தள்ளிவைத்துவிட்டு மேற்கு நாடுகளைப் பயன் படுத்தி நமக்கு தீர்வை பெற முயல வேண்டும். அமெரிக்காவின் ஈழம் சம்பந்தமான கொள்கை றீகன்-இந்திரா காந்தி காலத்தினது. அன்று அமெரிக்கா இந்திரா காந்தியை எதிரியந்த்தான் பார்த்தார்கள். CIA அவரின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டது.  இன்றைய அரசியல் வேறு விதமானது. தமிழரை அழிக்க போன அமிர்தாஜ், பிளேக் இருவரும் தங்கள் தவறுகளைகூட ஏற்றுகொண்டது போல பேச்சுக்கள் பேசியும் இருக்கிறார்கள். மகிந்தா எந்த வழியிலும் இலகுவில் மேற்கு நாடுகளுடன் ஒட்ட முயலமாட்டர். மேற்குநாடுகள் இலங்கை அரசியலை விளங்காமல் தமிழரை அழித்து அவரை காப்பாற்றின. இப்போது அவரை அழிக்காவிட்டால் தெற்காசியாவிலிருந்து  மேற்நாடுகளை அவர் வெளியே தூக்கி எறிவார். அவர் மாலை தீவு, வங்காளத்தை கூட மேற்குநாடுகளுக்கு எதிராக திருப்பியும் விட்டார். மாலை தீவு அமெரிக்காவுடன் ஏற்றுக்கொண்ட இராணுவ உடன்படிக்கலை விடுத்து சீனாவிடன் சட்டலைட் தொடர்புக்கு போகிறது. மேற்கு நாடுகளுக்கு தெற்காசியாவில் ஒரு உறவு வேண்டு எம்ன்றால் அது தமிழ் ஈழத்தை உருவாகினால் மட்டுமே முடியும்.

 

புலிகளின் சோசலிச குடியரசு சாசனம் தற்கால திறந்த பொருளாதார கொள்கைகளுக்கு ஒத்துவராது என்பதால் புதிய தமிழீழ சாசனத்தில், தலைவரின் பிற்கால சிந்தனைகளுக்கேற்ப, அது திறந்த பொருளாதார கொள்கையாகவும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இன்று சீனாவோ, ருசியாவோ மார்க்சின் அடிப்படை கொள்கைகளை கூட மதிக்கிறார்கள் இல்லை. நாம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கட்டித்தூங்கத் தேவை இல்லை. அந்த கட்சிக்கு மத்தியில் காங்கிரஸ் ஒன்றுதான் தஞ்சம். அதை நாம் அங்கேயே விட்டுவிட வேண்டும்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4

 

'பிரிந்துபோவது பொருத்தமான தீர்வு அல்ல’ என்று சொல்லும் தோழர் உ. வாசுகி, 'இலங்கை அரசு இன ஒடுக்கு​முறையை மட்டுமல்ல, வர்க்க ஒடுக்குமுறையையும் கட்ட​விழ்த்திருக்கிறது. இத்தகைய சூழலில் இரு பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களும் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று​சேர்ந்து அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே பொருத்த​மான அணுகுமுறையாக இருக்கும்’ என்கிறார்.

 

அதாவது, இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், இனரீதியாக ஒடுக்கப்​படுகிறார்கள் என்று பேசினாலே, 'தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் ஒடுக்கப்​படுகிறார்களே’ என்று திசை திருப்புவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கமாக இருக்கிறது. அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'தீக்கதிர்’ தீட்டி இருக்கும் தலையங்​கத்தில் (20.3.2013) 'இலங்கையில் உள்ள ராஜபக்ஷே அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமின்றி, அந்த நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கு எதிராகவும் எதேச்சதிகாரப் பாதையில் நடந்து அனைத்துப் பகுதி மக்களின் மனித உரிமைகளையும் மறுத்துவருகிறது என்பது கண்கூடு. இதற்குப் பல ஆதாரங்களைக் கூற முடியும்’ என்கிறது.

 

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை​களைப் பட்டியலிட்டால், 'சிங்களவர்கள் மீது மனித உரிமைத் தாக்குதல் நடந்துள்ளதே’ என்று சொல்வது தமிழர் படுகொலைச் சம்பவங்களின் வீரியத்தைக் குறைக்கும் திசை திருப்பும் காரியமே தவிர, வேறல்ல.

 

கொத்துக் குண்டுகளை முள்ளிவாய்க்காலில்தான் போட்டனர். அனுராதபுரத்தில் அல்ல. வெள்ளை பாஸ்பரஸ் தூவப்பட்டது வன்னி நிலத்தில்​தான். சிங்களப் பகுதியில் அல்ல. எதைவைத்து தமிழர்களையும் சிங்களவர்களையும் பொதுமைப்​படுத்துவீர்கள்?

 

ஜனதா விமுக்தி பெரமுனாவைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட உதாரணத்தை உ.வாசுகி காட்டுகிறார். 1971 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் நடந்தது ஒரு திடீர் கலகம். அவசர அவசரமாக உருவாக்கப்பட்டு அப்படியே உருக்குலைக்கப்பட்ட கொடூரம். அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்துடன் வீடுகளில் தயாரிக்கப்பட்ட குண்டுகள், உள்ளூர் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு திடீரென ஒருநாள் தேதி குறித்து, 'அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களையும் கைப்பற்றுவோம்’ என்று 1971ல் அறிவித்தது ஜே.வி.பி. இடதுசாரி சித்தாந்தம் என்று சொல்லிக்கொண்ட இனவாதம்தான் அதற்குள் இருந்தது. 'இந்திய விஸ்தரிப்புவாதம்’ என்று சொல்லி தமிழர் எதிர்ப்பு வகுப்புகளைத்தான் அவர்கள் நடத்தினர். 1987 காலகட்டத்தில் நடந்ததும், ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் மூலமாக தமிழர்களுக்கு சலுகைகள் தரப்படக் கூடாது என்பதே நோக்கம். எனவே, அவர்களை இடதுசாரிப் புரட்சியாளர்கள் என்று சொல்ல முடியாது. இரண்டு தடவை நடந்த அந்தக் p26h.jpgகலவரங்களும் நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்களைப் பலிவாங்கி அடக்கப்பட்டது. அதன் பிறகு, ஜே.வி.பி. இலங்கை அரசியலில் முக்கிய இனவாத இயக்கமாக வளர்ந்தது. இன்று இவர்கள் ராஜபக்ஷேவின் சலுகைகளுக்காக அவரது கூட்டணியில் கும்பிடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த இரண்டு கலகங்களும் அந்த நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்குப் பிரச்னையே தவிர, வர்க்கப் போராட்டம் அல்ல. சிங்கள இளைஞர்கள் மீது இத்தகைய கொடும் தாக்குதல் தொடர்ந்து நடந்ததா? ஆனால் கடந்த 40 ஆண்டுகளில்தானே ஓர் இனம் மொத்தமாக கருவறுக்கப்பட்டது. இரண்டையும் எப்படிப் பொதுமைப்படுத்த முடியும்?

 

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சிங்கள மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் தமிழர் துன்பங்களை உணர்ந்தனர். அவர்களைச் சிங்கள பேரினவாத அரசு விட்டுவைக்கவில்லை. லசந்த விக்கிரமசிங்கே மாதிரியான பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சுனந்த போன்ற சில பத்திரிகையாளர்கள் நாட்டைவிட்டுத் துரத்தப்​பட்டனர். தமிழர்களுக்கு ஆதரவான எண்ணம் துளிகூட வந்துவிடக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதத்தின் இரக்கமற்ற தன்மையை காட்டுகிறது என்றுதான் இதைப் பார்க்க​வேண்டுமே தவிர, தமிழர்களைப் போல சிங்களர்களும் சிதைக்கப்பட்டனர் என்று சொல்​வது மழுப்பல்.

 

ஒடுக்கும் நாட்டின் தொழிலாளர்களையும் ஒடுக்கப்படும் நாட்டின் தொழிலாளர்களையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் மார்க்சியப் பாலபாடம்.

'இரண்டு தரப்புத் தொழிலாளர்களையும் எப்படிப் பார்க்க வேண்டும்? இரண்டும் ஒன்றாக வா இருக்கின்றன?’ என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்ட  லெனின், ''இல்லை; இவை இரண்டும் ஒன்றே அல்ல'' என்றும் சொன்னார்.

 

''ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழி​லாளர்களையும் பெருந்திரள் மக்களையும் சூறையாடுகின்ற சொந்த நாட்டு முதலாளி வகுப்பினரின் கூட்டாளியாகவே, ஒடுக்குகின்ற நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள் ஓரளவுக்கு இருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது, அரசியல் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் மேலுரிமையைப் பெற்றிருக்கிற ஒரு நிலையைக்​கொண்டிருப்பதே அந்த வேற்றுமை'' என்று லெனின் எழுதியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைவாதிகள் படிக்க மறந்தார்களா? படித்ததை மறுக்கிறார்களா?

 

தமிழர் படுகொலையின் வீரியத்தைக் குறைக்கும் உத்தியாகவே, 'சிங்களர்களும் பாதிக்கப்​படுகிறார்கள்’ என்ற சமாளிப்பைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இதில் மட்டு​மல்ல, பிரபாகர​னின் மகன் பாலச்சந்திரன் கொலை குறித்த நிலைப்​பாட்டிலும் இது தெரிகிறது.

 

''தமிழர்கள் குருதியில் மூழ்கடிக்கப்பட்ட அந்த நாட்களில் இழைக்கப்பட்ட அநீதிகள், பறிக்கப்​பட்ட மனித உயிர்கள் குறித்து வெளிவரும் தகவல்​கள் மற்றும் புகைப்படங்கள் மனித இதயம் படைத்த யாரையும் நடுங்கவைப்பதாக உள்ளன. அதில் ஒன்றுதான் எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான படங்களாகும்'' என்று தலையங்கம் தீட்டிய 'தீக்கதிர்’, உடனே அந்தப் பக்கம் திரும்பி, ''ஆனால் இந்தப் படம் போலியானது என்று இலங்கை கூறுகிறது'' என்கிறது (9.3.2013).

அது போலியானது என்று இலங்கை அரசு சொல்லட்டும். அப்படித்தான் சொல்லும். மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதை உண்மையான படம் என்கிறதா? போலி என்கிறதா?

மதுரை லீலாவதி கொலை பற்றி எழுதும்​போதும் போராடும்போதும்... அரிவாள் எடுத்த ரௌடிகளின் மறுப்பு வாக்குமூலங்களைச் சேர்த்துச் சொல்வார்களா? மேற்கு வங்க இந்திய மாணவர் சங்கத் தலைவர் மரணம் தொடர்பாக மம்தா செய்த சமாளிப்பை, தலை​யங்கத்தில் சேர்ப்பார்களா? சேர்த்தாலும் மம்தா எத்தகைய பொய் சொல்கிறார் என்பதை நிரூபிக்க முயற்சிக்க மாட்டார்களா? அந்தத் துடிப்பு, ஈழத் தமிழர் பிரச்னையில் மட்டும் இல்லாமல்போகிறதே?

 

தமிழ்நாட்டு மாணவர்கள் அதிசயமாக, தெருவுக்கு வந்தனர். அந்தப் போராட்டம்தான் மத்திய அரசிடமும் கருணாநிதியிடமும் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மனமாற்றத்தை ஏற்படுத்​தியது. இதில் குறிப்பிட வேண்டிய செய்தி...

 

அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மா​னத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதையே வழிமொழிந்துகொண்டிருந்தபோது, இந்த மாணவர் அமைப்புகள்தான் மாறுபட்டு, 'உலகம் முழுக்க மனித உரிமை மீறல்களைச் செய்து​கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இந்த தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு எந்த யோக்கியதையும் இல்லை. அமெரிக்கத் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை’ என்று பகிரங்கமாக அறிவித்தனர். அமெரிக்க எதிர்ப்பில் (மட்டும்!) தீவிரமாக இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் இதுதானே? அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆதரித்து வளர்த்தெடுத்திருக்க வேண்டும்.

 

'இப்போது தேர்வுகள் நெருங்கிக் கொண்டுள்​ளதால் மாணவர்கள் போராட்டங்களை விலக்கிக்​கொண்டு கல்வி நிலையங்களை அமைதியான முறையில் நடக்க முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்’ - இப்படிப் பேசியது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்படி பேசினார். 'மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை விடுத்தார். மேற்கு வங்க மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை ஒட்டி, இந்தியா முழுக்க மாணவர் புரட்சி நடப்பதாகக் குதூகலிப்பதும்... தமிழகத்தில் 17 நாட்கள் அனைத்துக் கல்லூரிகளும் செயல்படாத நிலை ஏற்பட்டதை உணர மறுத்து, 'படிப்பு முக்கியம்’ என்றதும், தமிழர் பிரச்னைக்கு ஒரு சிந்தனை... மேற்கு வங்கத்துக்கு மறுசிந்தனை அல்லாமல் வேறு என்ன?

 

இந்த இரட்டை அளவுகோல் தானே ஈழத் தமிழர் தீர்விலும் எதிரொலிக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துப் புரிந்துவரும் அட்டூழியத்தைக் கண்டிப்ப வர்களுக்கு சிங்களப் பேரினவாதத்தின் கூரிய நகம் கண்ணுக்குத் தெரியாமல் போவதால்தானே, தமிழர் நிம்மதியைவிட சிங்களர் நிலம் துண்டாடப்படக் கூடாது என்ற அக்கறையே அதிகம் இருக்கிறது.

 

சமீபத்தில் ஒரு கார்ட்டூன் வெளியானது. 'தனி ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தது. இது ராஜபக்ஷே மகிழ்ச்சி அடையும் முடிவு என்று கிண்டலடிக்கிறது அந்தக் கார்ட்டூன். ராஜபக்ஷேவின் இரு புறத்திலும் நின்று பிரகாஷ் காரத்தும் ஜி.ராமகிருஷ்ணனும் டான்ஸ் ஆடுவதுபோல வரையப்பட்டு இருந்தது. 'இது கேலிச்​சித்திரம் அல்ல, கேலிக்கூத்து’ என்று அந்தக் கட்சியின் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் எழுதி இருக்கிறார். (5.4.2013- தீக்கதிர்)

கார்ட்டூன் பார்த்துக் கோப்படுகிறார் தோழர் டி.கே.ஆர். ஆனால், கம்யூனிஸ்ட் மூலவரான லெனினே அப்படித்தான் சொல்கிறார்.

 

'ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் பூர்ஷ்வா தேசியவாதத்துக்கு உதவி விடுவோமோ என்ற அச்சத்தால் சில ஆட்கள், ஒடுக்கும் தேசிய இனத்தின் பூர்ஷ்வா தேசியவாதத்துக்கு உதவிவிடுகிறார்கள்’ என்பது  லெனின் வாதம்.

 

ஆசான் சொன்னதும் கேலிக்கூத்தா?

 

 - தொடரும்

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=32308

 

இந்த கட்டுரை தொடரின் 10 கருத்து பதிவுகளின் பின்னர் 450 தடவை பார்க்கப்பட்டிருக்கிறது. மனவருத்தமான விடையம்.

 

கட்டுரை, வழமையில் கொள்கைவாதிகளாக இனம் காணப்படும்  இலங்கை இடதுசாரிகள் காட்டிய அதே தகிடுதத்தங்களை தமிழ்நாட்டிலும் காட்டப்படும்போது அவற்றை நீண்ட ஆய்வாக புட்டுவைக்க முயல்கிறது.

 

இப்படியான கட்டுரையை பின் பற்றி வந்த்திருக்க வேண்டிய காரசாரமான விவாதங்கள் இங்கே இல்லாதது ஏமாற்றதை அளிக்கிறது. 

 

யாழ் அரசியல் சார்பான களமாக கொள்ளபட்டாலும் வாசகர்கள் எதை தேடுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகலாம்.  அந்த கேள்விக்கு இசைக்கலைஞன் தனது விளக்கத்தை ஏற்கனவே மேலே கொடுத்திருக்கிறார். ஆனால் நான் என்மீது கண்ட ஏம்மாற்றதை மூடி மறைப்பது கஸ்டம். நான் இதில் அசாத் சாலியின் மறுப்பை இதே கட்டுரையுடன் கண்டிருந்தும் அசாத் சாலியின் மறுப்பை பதிந்திருந்தேன். கட்டுரையை தவற விட்டிருந்தேன்.

 

அசாத் சாலியின் கதை வந்ததால் அதை தொடர்ந்து இன்று யாழில் கண்ட இன்னொரு சுவையான விபரத்தையும் சொல்ல வேண்டும்.  அசாத் சாலி விடுவிக்கப்பட்டத்தாக நேற்று செய்திகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. இது யாழில் பதியபட்டிருக்கு. இதை தொடந்து அதன் கீழ் 5 வேறு பதிவுகள் வந்துவிட்டன.  அதில் அசாத்சாலி தனது விடுதலையை மண்டியிட்டுப் பெற்றர் என்ற மாதிரி விளக்கங்களும் உண்டு. அதேநேரம் அசாத் சாலி சட்டப்படியாக ஜனாதிபதிக்கு எழுதிய அப்பீல் கடித விபரமும் இருக்கு. அதை முறையை ஏற்று  ஐ.தே கட்சியின் விளக்கமும் இருக்கு. மனோகனேசன் போன்றோர் அசாத் சாலியை ஆஸ்பத்திரியில் சென்று தனது ஆதவை காட்டிய விபரமும் இருக்கு. அந்த திரி 5 பதிவுகளின் பின்னரும் 250 தடவை பார்க்கப்படவில்லை.  அதாவது ஒரு கருத்துக்கு 25 பாரவை கிடைக்கவில்லை. 

 

ஆனால் அதே அப்பீல் கடித விபரம் மட்டும் அதே தலைப்பில் இன்னொரு திரியில் பதியப்பட்டிருக்கு அது சட்ட பூர்வமனதாக இருந்தும் தலைப்பு "தனது விடுதலைக்காக அசாத் சாலி ஜனாதிபதிக்கு அளித்த சத்திய வாக்குறுதி இதோ" இப்படி சுடச் சுடவாக இருக்கிறது. இதில் அவர் உண்மையாக எந்த வையான புது வாக்குறுதியும் கொடுத்து இல்லை. அந்தத் திரி 750 தடவை பார்க்கப் பட்டிருக்கு. 

 

இந்த நடத்தை யாழில் நாம்  எல்லோருமே தலைப்பை வைத்து ஏற்றுக்கொள்வதும் தள்ளிவிடுவதுமாகத்தான் இருக்கிறோம் என்ற இசை கலைஞனின் கருத்தை ஆமோதிப்பதாக இருக்கிறது.

 

எனவே நான் இதை சொல்கிறேன்:

பதிபவர் தனது கணிப்பாக தலைப்புகளுக்கு  ஒன்றிலிருந்து 10 வரை புள்ளிகள் கொடுக்கலாம். இதை வைத்து வாசகர்கள் தலைபை வைத்து திரியை தள்ளிவிடுவதை தவிர்க்கலாம். நேரம் கிடைக்கும் போது திரும்பி வந்து குறைந்த புள்ளி தலைபுகளையும் படிக்கலாம். இதை நிர்வாகத்தால் செய்ய தொழில்த்துறை இடம் இல்லையாயின் தலைப்பின் இறிதியில் பதிபவர் தான் அளிக்கும் சுட்டேண்ணை பதிந்துவிடாலாம். 

 

"தனது விடுதலைக்காக அசாத் சாலி ஜனாதிபதிக்கு அளித்த சத்திய வாக்குறுதி இதோ" 5 என்று பதிவதால் பதிபவர் இதில் நான் என்ற புதிய வாக்குறுதியையும் பார்க்கவில்லை என்று சொல்வதாகிறது.

 

 

"தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா?" 9 என்று பதிவதால் நான் இதை வெறும் வரட்டு ஆய்வாக கொள்ளவில்லை என்றதாகிறது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் மார்க்ஸிஸ்ட் கட்சி ஈழ ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்ததாகத்தான் ஞாபகம்.. இந்திய கம்யூனிஸ்ட்தான் மற்றமாதிரி.. இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது..

  • 2 weeks later...

இரண்டு communist கட்சிகள் தாங்கள் அடிபடுவதற்கு ஈழத்தை உருட்டுகிறார்கள் ..கட்டுரைகள், பின்னூட்டங்கள் எல்ல்லாம் சர்ர்ர்ர்ர்ர்ரியான நீநீளளளம்

 

  • கருத்துக்கள உறவுகள்
பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துப் புரிந்துவரும் அட்டூழியத்தைக் கண்டிப்ப வர்களுக்கு சிங்களப் பேரினவாதத்தின் கூரிய நகம் கண்ணுக்குத் தெரியாமல் போவதால்தானே, தமிழர் நிம்மதியைவிட சிங்களர் நிலம் துண்டாடப்படக் கூடாது என்ற அக்கறையே அதிகம் இருக்கிறது
இதைத் தான் நம்மட ஒரு சில ப(பு)ரட்சிவாதிகளும் சொல்லுயினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.