துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஆடி 2017
தமிழர் தாயகத்தில் நடைபெறும் திட்டமிட்ட இனரீதியான சிதைப்பிற்கு எதிராகச் செயற்படும் சமூக ஆர்வலர்களை கொல்லும் ராணுவ புலநாய்வுத்துறையினரும், தமிழ் துணைராணுவக் கொலைப்படையினரும், அவர்களைக் காத்து நிற்கும் சிங்கள நீதித்துறையும், காவல்த்துறையும்
இலங்கையில் தமது பிராந்திய நலன்களைக் காத்துக்கொள்ளும் போட்டியில், தமிழர் மீதான திட்டமிட்ட இனக்கொலையினையும் அவர்களின் தாயகம் மீதான இனரீதியிலான சிதைப்பினையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு வரும் சர்வதேச, பிராந்திய சக்திகளின் போக்கினை தனக்குச் சாதகமாக பாவித்துவரும் சிங்கள இனவாத அரசு , தனது கருவிகளான ராணுவப் புலநாய்வுத்துறையினரையும், அவர்களினால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழுக்களினையும் தமது குற்றங்களிலிருந்து தொடர்ச்சியாகக் காப்பற்றியே வருகிறது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்ச் சமூகம் தனது தாயகம் சிதைக்கப்படுவதற்கு எதிராக , அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் சமூக ஆர்வலர்களின் தன்னலமற்ற முயற்சியினையே வேண்டிநிற்கின்றது என்றால் அது மிகையில்லை. ஆனாலும், அரச ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆக்கிரமிப்பிற்கெதிராகக் குரல்கொடுத்துவரும் தனி நபர்களைத் தனது துணைராணுவக் கொலைக் குழுக்கள் மூலம் முதலில் அச்சுருத்தியும், பின்னர் கொன்றும் தனது தடைகளை அரசு அகற்றி வருகிறது. அழிக்கப்படும் தமது தாயகத்திற்காக உதவியின்றிப் போராடிவரும் ஒரு சில தன்னார்வ சேவையாளர்களைக் கூட கொன்று தமது எஜமான விசுவாசத்தினைக் காட்ட இப்பகுதிகளில் இயங்கிவரும் தமிழ் ராணுவத் துணைக் குழுக்கள் பின்னிற்பதில்லை என்பது தமிழினத்தின் சாபமேயன்றி வேறில்லை.
ஆனாலும், தமிழர்களின் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும் அரசின் திட்டமிட்ட தாக்குதல்களும் படுகொலைகளும் அரச நீதித்துறையினராலும், காவல்த்துறையினராலும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு வருவதும், சர்வதேசத்தில் சிங்கள அரசுக்கான தாராள அனுமதியும் இவ்வாறான படுகொலைகளையும் தாக்குதல்களையும் மேலும் மேலும் தங்குதடையின்றி செயற்படுத்த வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னார்வ மனிதவுரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள் இதுபற்றிக் கூறுகையில், 2007 ஆம் ஆண்டின்பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா - பிள்ளையான் கொலைக் குழுக்களாலும், அரச ராணுவப் புலநாய்வுத்துதுறையினராலும், காவல்த்துறையினராலும் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் பற்றி முன்வைக்கப்பட்ட எந்த முறைப்பாடுகள் மீதும் நடவடிக்கைகளைனை எடுப்பதற்கு சிங்கள காவல்த்துறையும், நீதித்துறையும் மறுத்தே வருகின்றன என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.
கேதீஸ்வரன் தேவராஜா
2010, மார்கழி 31 ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் துணைராணுவக் கொலைப்படையான டக்கிளஸ் ஆயுதக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத்திற்கு முரணனான மணல் அகழ்வினை வெளிப்படுத்தியமைக்காக டக்கிளஸினால் படுகொலை செய்யப்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் கேதீஸ்வரன் தேவராஜா.
கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன், படுகொலை செய்யப்பட்ட நாள் 26, வைகாசி 2014
மதிசாயன் சச்சிதானந்தம் , படுகொலை செய்யப்பட்ட நாள் 25, வைகாசி 2015
பொலீஸாரினால் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்ஷன் சுகந்தராஜா மற்றும் கஜன் நடராஜா, கொல்லப்பட்ட நாள் 20, ஐப்பசி 2016
யோகராஜா தினேஷ், கொல்லப்பட்ட நாள் 8, ஆடி 2017
மட்டக்களப்பு மனிதவுரிமை ஆர்வலர்கள் இப்படுகொலைகள் பற்றிக் கூறுகையில் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் தான்னார்வத் தொண்டர்கள் மீதான படுகொலைகளை ஒத்ததாகவே கிழக்கில் அரச ராணுவத் துணைக்குழுக்களால் நடத்தப்படும் படுகொலைகளும் காணப்படுகின்றன என்று கூறுகிறார்கள்.
43 வயதுடைய மண்டூர் சமூக நல சேவகர் மதிசாயன் சச்சிதானந்தம் கருணா துணைக் கொலைப்படையினரால் கொல்லப்பட்டு 26 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை இதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ள காவல்த்துறை மறுத்து வருகிறது.
தனது கிராமமான மண்டூர் ஆலயத்தில் நடைபெற்றுவந்த நிதிமுறைகேடுகள் மற்றும் கருணாவினால் அமைக்கப்படவிருந்த ஆற்றையன்றிய விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் பற்றிப் பேசியதால் அவர் கருணா கொலைக்குழுவால் கொல்லப்பட்டார். பொலீஸாரால் இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு துணைராணுவக் குழு உறுப்பினர்களும் அப்போது பதவியிலிருந்த துணையமைச்சர் ஒருவரின் அழுத்தத்தினாலும், அவருக்கு ஆளும்வர்க்கத்துடன் இருந்த தொடர்புகளினாலும் விடுவிக்கப்பட்டதாக பொலீஸார் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறே 13 மாதங்களுக்கு முன்னர், குடும்பிமலைப் பகுதியில் குடியேறிவரும் சிங்களவர்களுக்குப் பாதுகாப்பளிக்க அமைக்கப்பட்ட ராணுவ முகாமிலிருது செய்ற்பட்டு வந்த ஐந்து ராணுவத்தினர் மரங்களை வெட்டி தெற்குச் சிங்கள வியாபாரிகளுக்கு விற்றுவருவதை அறிந்து அவர்களை விசாரித்த கிராம சேவகர் சண்முகம் குருவை இழுத்துச்சென்று, கடுமையாகத் தாக்கி வாழைச்சேனை வைத்தியசாலையில் எறிந்துவிட்டுச் சென்ற நிகழ்வும் நடந்திருந்தது.
தாக்கப்பட்ட கிராம சேவகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போதே தனக்கு நடந்த விடயத்தை வெளியே சொன்னால் கொல்லப்படுவாய் என்று ராணுவப் புலநாய்வுத்துறையினரால் மிரட்டப்பட்டதும், இவ்வதிகாரிக்கு தகவல் வழங்கிய மாவீரர் குடும்பத்தை கருணா கொலைக்குழு
"மீதமிருக்கும் அனைவரையும் வெளியே இழுத்துச் சுட்டுக் கொவோம்" என்று மிரட்டியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.
மட்டக்களப்பு மாவட்டம் புன்னக்குடா வீதி தளவாயிலும், ஏறாவூர்ப் பகுதி சவுக்கடியிலும் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்து வெளியாருக்கு விற்கமுயன்ற கொழும்பின் அரசில் துணையமைச்சராகவிருந்த ஒருவரின் முயற்சிக்கு எதிராகக் குரல்கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த அமைச்சின் இயக்குநர் விமலராஜ் நேசகுமார் இவ்விடயத்துடன் தொடர்புபட்ட ஆயுததாரிகளால் சுடப்பட்டு கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், பொலீஸார் இந்த தாக்குதல்பற்றி நடவடிக்கை எதனையும் எடுக்க மறுத்துவருவதாகவும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆளும் வர்க்கத்துடன் இருக்கும் மநெருக்கமே இதற்குக் காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவை தமிழர் தாயகத்தில் தமிழ் ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்டுவரும் ஒரு சில சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே. இவைபோன்ற பல சம்பவங்கள் முறையிடப்படாமலேயே விடப்பட்டு வருகின்றன.
பல தடவைகளில் சாதாரண உடையில் வரும் ஆயுததாரிகள், இலக்கத் தககடற்ற வாகனங்களில் பலரைக் கடத்திச் செல்வதாகவும், பலர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாவதாகவும், சட்டத்திற்குப் புறம்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சிலர் கொல்லப்படுவதாகவும் கூறும் சமூக ஆர்வலர்கள், இந்த மனிதவுரிமை மீறல்கள்பற்றிப் பேசினால் குடும்பங்களைக் கொன்றுவிடப்போவதாகவும் பலர் அச்சுருத்துப்பட்டுவருவதாகவும் கூறுகின்றனர்.
தமிழர் தாயகத்தில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் ராணுவ மற்றும் துணை ராணுவக் குழுக்களின் அக்கிரமங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேசத்தில் நிலவும் நிலைமை உதவிவருவதாகவும், இதன்மூலம் அவர்கள் தமது குற்றங்களிலிருந்து இலகுவாகத் தப்பிவிடுவதாகவும் அந்த ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இதே பாணியிலான வன்முறைகள் யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அரச சார்பு ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன், அரசின் செல்வாக்கு இவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை மழுங்கடிக்க முயலும் அரசும் காவல்த்துறையும், இவ்விசாரணைகளை நாட்டிற்கு வெளியேயான அமைப்பொன்றிடம் கொடுத்த்தன் மூலம், இந்த விசாரணைகளை திசைதிருப்பி மக்களின் மனங்களிலிருந்து அகற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் வசித்துவந்த முன்னாள் தமிழீழக் காவல்த்துறை அதிகாரியான நகுலேஸ்வரன் தனது பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வந்தார். அரச ராணுவத்தாலும், கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழரின் நிலங்கள் தொடர்பாக தொடர்ச்சியாகப் பேசிவந்ததற்காக நகுலேஸ்வரன் 2014 ஆம் ஆண்டு கார்த்திகை 12 அன்று அரச புலநாய்வுத்துறை ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை தொடர்பாக சிலரை மன்னார் காவல்த்துறை கைதுசெய்தபோதும், அரசின் ஆதரவுடன் அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவம், சிங்களக் குடியேற்றக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மரக்கடத்தல், மணற்கொள்ளை மற்றும் போதைவஸ்த்து வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உள்ளூரில் இயங்கிவரும் அரச ஆதரவுடனான துணைராணுவக் குழுக்களுக்கும் பங்கிருக்கின்றதென்று மக்கள் கூறுகின்றனர்.