சபை முதல்வரின் கூற்றுக்கிணங்க , கோவாவிலிருந்து நேராக இலங்கை கிழக்கு மாகாணம் வந்திறங்கினார் வில்லி, பயணக்களைப்பை இரண்டுநாட்கள் ஓய்விலிருந்து கழித்துவிட்டு பாடசாலையை சுற்றி நோட்டம்விட தொடங்கினார். அந்த பாடசாலையும் ,அதன் சூழலும் அவருக்கு பிடித்துப்போனது, மெது மெதுவாக பாடசாலை மாணவர்கள்
ஆசிரியர்கள் என்று எல்லோரது மனதிலும் இடம்பிடித்த வில்லி,சில மாதங்களிலேயே முழுப்பாடசாலைக்குமே பிடித்துப்போன ஆசிரியராக மாறிப்போனார், பாடசாலை நேரம் தவிர்ந்த மாலை நேரங்களில் பாடசாலை கூடைப்பந்து அணிக்கு பயிற்சி வழங்கி மெருகேற்றினார், கிட்டத்தட்ட முழு இலங்கையிலும் முதன்முதலில் ரோனியோ மெஷினை ஐரோப்பாவிலிருந்து தருவித்து ரோனியோ மெஷின் பாவித்த முதல் பாடசாலை எனும் பெருமை பாடசாலைக்கு கிடைக்க வழிசமைத்தார்,
பிரதர் வில்லியம் என்று அழைக்கப்பட்டாலும் அவர் ரோனியோ மெஷின் இயக்குவதை அடிக்கடி பார்க்கும் சிறுவர்கள் எல்லாம் காலப்போக்கில் "ரோனியோ பிரதர்" என்று அழைக்க தொடங்கினர், இப்படி பாடசாலையில் ஒரு முக்கிய நபராக தன்னை தகவமைத்துக்கொண்டார் வில்லி. காலம் மெதுவாக நகர நகர
இவரது சபை இல்லத்திற்கு புதிய துறவிகள் மாற்றலாகி வருவதும் போவதுமாக இருக்கும் போது வில்லியின் வாழ்க்கையை புரட்டிபோடப்போகும் ஒருவரது அறிமுகம் கிடைத்தது
2003, கிழக்கு மாகாணம்
'தீபம்' பாடசாலையின் வெள்ளிவிழா சஞ்சிகை அவனுள் ஏற்படுத்தியிருந்த பிரமிப்புகள் ஏராளம்
100 வருட பாரம்பரியம் கொண்ட அந்த பாடசாலையில் இரண்டு சஞ்சிகைகளே வெளியாகியிருந்தது,
முதல் சஞ்சிகை வில்லியின் காலத்திலும் ,இரண்டாவது சஞ்சிகை இன்னுமொருஅதிபரின் காலத்திலும்
வெளியாகியிருந்தது, இரண்டினதும் பிரதம பதிப்பாசிரியர் வேறுயாருமில்லை அது அவனுடைய பாட்டி
அவரொரு பயிற்றப்பட்ட ஆசிரியராக பிரதர் வில்லியம் பணியிலிருக்கும் போதுதான் அவரது பாடசாலையில் இணைந்தார், வில்லியால் ஒரு பல்துறை விற்பன்னராக வளர்த்தெடுக்கப்பட்டவர் , இரண்டாவது சஞ்சிகை பதிப்பை 5 வயது சிறுவனாக வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்த நினைவுகள் அவனை வருடிச்சென்றன, இன்றும் அந்த இரண்டு சஞ்சிகைகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்.
சிறுவயதில் அவனது பாட்டியிடமிருந்து பல செவிவழி கதைகள் கேட்டு நினைவினில் வைத்திருந்தான்
நேரம் இரவு 8:30 பாடசாலையின் கூடைப்பந்து மைதானம் முன்னே அத்தனை பேரும் ஆஜர்
திட்டம் ஏற்கனவே தீட்டியதுபோல இரவு 11:00 மணிக்கு மூன்றாம் மாடி கட்டிடத்தினுள் உள்நுழைந்து நோட்டம் விடுவது, ஒவொருத்தராக மற்றவருடைய முகத்தை பார்த்துக்கொண்டு நேரத்தை போக்கிக்கொண்டிருந்தனர்
நேரம் 11:00 ஒருவர் பின் ஒருவராக கட்டிடத்தினுள் நுழைந்துகொண்டிருக்க காவலாளியோ வாங்கி வைத்திருந்த அரைப்போத்தல் சோம பானத்தை உள்ளே தள்ளிவிட்டு நிறைவெறியில் சாக்குக்கட்டிலில் உழன்று கொண்டிருந்தான், மேசைகளை அடுக்கி ஏறி நின்று கொண்டு ஒவ்வொருத்தராக நோட்டம் விட ஆரம்பித்தனர், நேரம் 11:49 ஆகும் போது, அந்த வளவினை ஒட்டியிருந்த புதர்கள் சர சரக்க அதனுள்ளேயிருந்து ஒரு நாய் வெளியே வந்தது, பார்த்தமாத்திரத்திலேயே அவனுக்கும்,சுலக்சனுக்கும்
புரிந்துவிட்டது இது அதே நாய் தான், வந்த நாய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அந்தவளவின் வாயிலில் சென்று படுத்துக்கொள்ள ஒன்றுமே நடப்பதாக தெரியவில்லை, நிமிடங்கள் கரைய மேசையில் நின்று கால்கள் வலித்தது தான் மிச்சம், ஒவொருத்தராக மேசையின் மீது திரும்பி உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள்ளே முறை போட்டுக்கொண்டு 15 நிமிடத்திற்கொருவர் என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்தனர்
நேரம் 12:55 "ஐடியா மணியின்" முறை திடிரென்று அருகில் திரும்பிப்பார்த்தவாறு உட்கார்ந்திருந்த அவனின் தலையை உசுப்பி எழும்புமாறு சைகை செய்ய முழு குழுவும் எழுந்து நின்று மெதுவாக தங்கள் தலையை உயர்த்தினர்..அப்போது அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க ஆரம்பித்தன
(தொடரும் )