கொலைகாரப் புலிகளா அல்லது துணைராணுவக் குழுக்களை இயக்கும் அரசா?
கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியில் 2006 ஆம் ஆண்டு ஆனி மாதம் சிவிலியன்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னாலிருக்கும் உண்மையான சூத்திரதாரிகள் யாராக இருக்கலாம் என்பதுபற்றி ஆய்வாளர் நிமால், இலங்கைத் தமிழ்ச் சங்கம் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைத் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு, தமிழ்ப் பகுதிகள் மீது வானிலிருந்து கடுமையான குண்டுவீச்சினை ஆரம்பித்திருக்கும் அரசு, தனது தாக்குதல்களை ஒரு யுத்த நிறுத்த மீறலாகவோ அல்லது வலிந்து போரிற்குள் புலிகளை இழுத்துவிடும் கைங்கரியமாகவோ பார்க்காமல், கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியில் சிவிலியன் பேரூந்து மீது இனம் தெரியாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று நிறுவியவாறு, இத்தாக்குதலுக்கான வெறும் பழிவாங்கும் தாக்குதலே தனது வான்வழிக் குண்டுவிச்சு என்று கூறத் தொடங்கியிருக்கிறது.
சமாதானத்திற்கு தாம் எப்போதும் முன்னுரிமை கொடுத்துவருவதாகக் கூறிக்கொள்ளும் அதேநேரம், பேரூந்து மீதான தாக்குதலினை காரணமாக வைத்து, தமிழர் மீது பழிவாங்கும் தாக்குதலாக வான்குண்டுவீச்சினை மேற்கொண்டுவரும் அரசு, உண்மையிலேயே செய்துவருவது யாதெனில் தன்னிச்சையாக யுத்தத்தினை ஆரம்பித்திருப்பதுதான்.
கெப்பிட்டிக்கொல்லாவைப் பேரூந்து மீது இலக்குவைத்து வேண்டுமென்றே நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பெருமளவு சிறுவர்கள் உட்பட குறைந்தது 60 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். எதிர்பார்க்கப்பட்டதுபோலவே இத்தாக்குதல் கடுமையான சர்வதேச கண்டனங்களை எதிர்கொண்டதுடன், மிகவும் ஈவு இரக்கமற்ற மிருகத்தனாமன தாக்குதல் என்றும் விமர்சிக்கப்பட்டது.
பல நாடுகள் இத்தாக்குதலினைக் கண்டித்ததுடன், இதுதொடர்பான அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொண்ட போதும், அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகள் இன்னொரு படி மேலே சென்று உடனடியாகவே இத்தாக்குதல்களுக்கான பொறுப்பினை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தின. அதுமட்டுமல்லாமல் பல இணையவழி பத்திரிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஒன்றில் இத்தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது புலிகள் என்றோ அல்லது, அல்லது அவர்களே பிரதான சந்தேகநபர்களாக இருக்கவேண்டும் என்றோ கட்டியம் கூறியிருந்தன.
இத்தாக்குதல் தொடர்பான அரசின் நிலைப்பாடு
அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே அரசும், அதன் ஆதரவாளர்களும் தாக்குதல் பற்றிய செய்திகள் வந்தவுடனேயே இதற்குப் புலிகள்தான் பொறுப்பு என்று உடனடியாகவே கூறத் தொடங்கிவிட்டன.
தேசிய சமாதானப் பேரவையின் பிரதான திட்டமிடல் அதிகாரியான ஜெகான் பெரேரா இதுபற்றிக் கூறுகையில் "இத்தாக்குதல் மூலம் புலிகள் கூறும் செய்தி என்னவென்றால், தாம் ஒருபோதுமே தமது வன்முறைகளை நிறுத்தப்போவதில்லை என்பதைத்தான். தமது நிபந்தனைகள் ஏற்கப்படாதவிடத்து தாம் அப்பாவிப் பொதுமக்களைக் கூடக் கொல்லத் தயங்கப்போவதில்லை என்பதைத்தான் இதன்மூலம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலவேளை அரசாங்கத்தினை வலிந்து போர் ஒன்றிற்குள் இழுக்கவே அவர்கள் இத்தாக்குதல் மூலம் முயன்றிருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.
அவ்வாறே இத்தாக்குதல் பற்றி மிகவும் ஆக்ரோஷமாக, எதிர்பார்த்தபடியே வெளியே வந்து பேசிய இலங்கை ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பின்வருமாறு முழங்குகிறார்,
"இந்தக் கொடூரமான தாக்குதல் நடந்த இடத்திற்கு நான் சென்று பார்வையிட்டேன். என்னைப் பொறுத்தவரை புலிகள் அமைப்பு அண்மைக்காலங்களில் மேற்கொண்ட மிகக்கொடூரமான படுகொலைகளில் இது மிகவும் கொடூமையானது".
"கெப்பிட்டிக்கொல்லாவை, கனுகஹ மற்றும் இப்பகுதிகளைச் சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயணித்த இப்பேரூந்து மீது புலிகள் கிளேமோர் தாக்குதலினை நடத்தியதாக நான் கேள்விப்பட்டபோது மிகுந்த வேதனையடைந்தேன்".
"தமது குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், உயர்கல்விப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும், புலிகளின் முன்னைய தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட ஊர்காவல்ப் படைவீரர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்றவர்களும் புலிகளினால் இலக்குவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இக்கொடுமையான தாக்குதலினை நானும், இந்நாட்டு மக்களும், சர்வதேசமும் மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்கிறோம்".
"தனது சொந்த மக்களுக்கான விடுதலையினை நோக்கிப் போராடுவதாகக் கூறிவரும் புலிகளின் கடந்த 20 வருடகால சரித்திரத்தினைப் பார்க்கும்போது, கண்மூடித்தனமான படுகொலைகளையும், வன்முறைகளையும் மட்டுமே அது கொண்டிருப்பதையும், அதன்மூலம் லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதையும், இன்னும் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதையும் தவிர வேறு எதனையுமே அவர்களின் போராட்டம் கொண்டுவரவில்லை என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்".
"மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள் இவ்வாறான வன்முறைகளில் ஒருபோதுமே ஈடுபடப்போவதில்லை".
"இந்நாட்டில் வாழும் அனைவரும் கெளரவத்துடனும், தன்மானத்துடனும் வாழும் வகையில் நிரந்தரமான அமைதியினை சமூக - பொருளாதார - ஜனநாயக வழியில் கொண்டுவரப்படும் நடைமுறையின்மூலம் ஒரு நிரந்தரமான சமாதானத் தீர்வொன்றினைக் கொண்டுவர நாம் முழுமனதுடன் முயற்சியெடுத்து வருகிறோம்".
"புலிகள் எவ்வளவுதான் காட்டுமிராண்டித்தனமான , மிலேச்சத்தனமான படுகொலைகளில் ஈடுபட்டாலும் கூட, நாம் எமது சமாதானத்தை அடையும் முயற்சிகளிலிருந்து ஒருபோதுமே விலகிடப்போவதில்லை. மக்கள் அனைவரும் சமாதானமாக, அச்சமின்றியும், ஒருவரில் ஒருவர் நம்பிக்கை கொண்டு வாழும் நிலையினையும் உருவாக்குவோம்". என்று கூறுகிறார்
ஆகவே, மகிந்தவைப் பொறுத்தவரை விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் புலிகளே நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் காரனமானவர்கள் என்பதுடன், சமாதானத்துக்கான மகான் ஆன தானும், தனது அரசாங்கமும் தொடர்ந்தும் சமாதானத்திற்காகப் பாடுபடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
உண்மைதான். சமாதானத்திற்கான மகானோ அல்லது அவரது அரசோ நிச்சயமாக அப்பாவிகள் மீது வானிலிருந்து குண்டுகளைப் பொழிவது எங்கணம்? அல்லது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகுவது எங்கணம்? சமாதானத்திற்கான மகானான மகிந்த புலிகளை வரலாற்று ரீதியான வன்முறையாளர்கள் என்று கூறினாலும், அவர் அரியணை ஏறியதன் பின்னரே வடக்கிலும் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றது என்பதையோ அல்லது அப்பாவிகள் வேண்டுமென்றே இலக்குவைத்துக் கொல்லப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதோ சாத்தியமானதா?