டமார்…..காதை கிழிப்பது போல ஒரு பெரும் சப்தம். எங்கும் கந்தக நெடி… நாசி எங்கும் ரத்தமும், சதையும் கந்தகமும் நிரம்பி மூச்சு முட்டுவதை போல ஒரு உணர்வு.
ஓடு…ஓடு…பங்கருக்குள் ஓடு…மனம் ஆட்காட்டி பறவையாய் ஓலமிடுகிறது.
எப்படியாவது உயிர் வாழ்ந்து விட்டால் போதும் என்ற உத்தரிப்பு. பெரியார், கால்மார்க்ஸ், கடவுள் மறுப்பு எல்லாம் கண நேரத்தில் மறந்து போக, வாய் தன் பாட்டில் “நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க” என முணுமுணுக்கிறது.
இங்கே அருகில் மரம் போல கிடப்பது அப்பாவா?
“அப்பா எழும்புங்கோ, மிக் அடிக்குது பங்கருக்க ஓடுவம்”.
இந்த மனிசன் ஏன் அசையாமல் கிடக்குது…. உடம்பு வேற சில்லிட்டு போச்சு…. ஐயோ அப்பா…எழும்பனை எண்ட ராசா….
இதோ இன்னொரு மிக்கின் மிகை ஓலி வெடிப்பு. வேற வழி இல்லை கட்டிலுக்கு கீழ பாயுவம்.
பொத்…..எங்கும் ஒரே இருட்டு…..
திடீரென லைட் எரிகிறது …..
“என்னப்பா மறுபடியும் கனவே….”
சலித்துக்கொண்டு கட்டிலுக்கு திரும்புகிறாள் 83 இல் கைக் குழந்தையாக வெளி நாடு வந்து விட்ட மனைவி. கட்டிலில் நாளை வாட்டர் பார்க் போகும் சந்தோசத்தோடு சலனம் இன்றி உறங்கிகொண்டிருக்கிறான் மகன்.
அப்பா?
போடா பைத்தியக்காரா என ஏளனமாக சிரிக்கிறது கட்டில் அருகே இருக்கும் விளக்கு மேசையின் கால்.
மறுநாள்
“மிஸ்டர் ராஜு உங்களுக்கு இருப்பது சிறுவயது யுத்த அனுபவங்கள் தந்த Post Traumatic Stress Disorder - நீங்கள் கொஞ்சகாலம் இந்த உக்ரேன் செய்திகளை பார்க்காமல் விடுங்கள்”.
அட்வைஸ் பண்ணுகிறார் ஆங்கில வைத்தியர் மில்லர்.
“உங்கள் வலியை என்னாலும் உணர முடிகிறது ராஜு”. மில்லரின் கண்கள் பரிவை சொரிகிறன.
“இது வலி இல்லை டாக்டர், வடு. ஆழ்மனதில் பதிந்து விட்ட அனுபவச் சுவடு. இன்னுமொருவனுக்கு அதுவே நடக்கும் போது இந்த சுவடு என்னை அறியாமலே தலையை தூக்கி பார்க்கும். இதை நீங்கள் அறியவோ, உணரவோ முடியாது”.
வாய் வரை வந்த வார்த்தைகளை வலுகட்டாயமாக விழுங்கியபடி, “தங்க்யூ டொக்டர்” வினநயமா விடை பெற்றான் ராஜு.