இந்தியா vs ஜிம்பாப்வே: வெற்றிக்கு வித்திட்ட இளம் இந்திய அணியின் 'புதிய பாணி'
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், க.போத்திராஜ்
பதவி, பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இளம் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு, பும்ரா, சிராஜ், சஹல், குல்தீப், ஹர்திக், ரிஷப் பந்த், ஆகிய அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் இளம் இந்திய அணி முதல் தோல்விக்குப் பிறகு வென்ற டி20 தொடர் இது.
அடுத்த தலைமுறை மாற்றத்துக்கு இந்திய அணியை மாற்றும் விதத்தில் இந்தத் தொடருக்கு வீரர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். இதில் பெரும்பாலான வீரர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஏராளமான வீரர்கள்
குறிப்பாக தொடக்க ஆட்டத்துக்கு மட்டும் ஜெய்ஸ்வால், கெய்க்வாட், கில், அபிஷேக் என 4 வீரர்கள் இருப்பதால் இதில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சுழற்பந்துவீச்சில் ரிங்கு சிங், வாஷிங்டன், குல்தீப், சஹல், வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், தேஷ்பாண்டே, கலீல் அகமது, முகேஷ் குமார் என ஏராளமான வீரர்கள் இருப்பதால் அடுத்தடுத்து வரும் தொடர்களில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது புதிய பயிற்சியாளர் கம்பீருக்கு சவாலான பணியாக இருக்கும்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஹராரேவில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. 153 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 28 பந்துகள் மீதமிருக்கையில் 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.
ஜிம்பாப்வே பேட்டர்கள் கடினமாகச் சேர்த்த இந்த 152 ரன்கள்கூட இந்திய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கவில்லை. ஜிம்பாப்வே அணி வீரர்கள் மொத்தமாகவே 10 பவுண்டரிகள்தான் அடித்திருந்தனர்.
ஆனால் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மட்டுமே 13 பவுண்டரிகள், கேப்டன் கில் 6 பவுண்டரிகள் என 19 பவுண்டரிகளை விளாசியிருந்தனர்.
சேஸிங் மட்டும் குறி
வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், “சேஸிங்கை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று மட்டும் ஆலோசித்தோம். முதல் போட்டியைப் போல் அல்லாமல் சிறப்பாக முடித்திருக்கிறோம்.
சிறந்த வீரர்களைக் கொண்ட ஆகச் சிறந்த அணியாக இது இருக்கிறது. அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று முன்னோக்கி நகர்வோம். வீரர்களை மாற்றுவது குறித்து இதுவரை ஆலோசிக்கவில்லை, டாஸ் போட்ட பிறகு வீரர்கள் மாற்றம் குறித்து தெரிவிப்பேன்,” எனத் தெரிவித்தார்.
ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன்
பட மூலாதாரம்,GETTY IMAGES
அதிரடியாக பேட் செய்த ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களுடனும்(13 பவுண்டரி, 3 சிக்ஸர்), கேப்டன் கில் 39 பந்துகளில் 58 ரன்களுடனும் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை ஜெய்ஸ்வால் வென்றார்.
தொடக்கம் முதலே ஜெய்ஸ்வால், கில் ஜிம்பாப்வே பந்துவீச்சை வெளுத்தனர். ரிச்சர்ட் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகளை விளாசினார். சதாரா வீசிய முதல் ஓவரிலும் 4 பவுண்டரிகளை ஜெய்ஸ்வால் வெளுத்தார்.
நான்கு ஓவர்களுக்குள் இருவரும் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். இந்திய அணி 3.5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியதில், ஜெய்ஸ்வாலின் ஸ்கோர் மட்டும் 39 ரன்களாக இருந்தது. பவர்ப்ளே ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்து ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை உயர்த்தியது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். 10 ஓவர்களுக்குள் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.
இருவரையும் பிரிக்க கேப்டன் சிக்கந்தர் ராசா பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பந்துவீசச் செய்தும் எந்தப் பலனும் இல்லை. கில், ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து ஜிம்பாப்வே பந்துவீச்சை துவம்சம் செய்தனர். கில் 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். 14.5 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற்றது.
இளம் இந்திய அணியின் புதிய பாணி
ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரிகளை விளாசியுள்ளார். ஜெய்ஸ்வால் தான் எதிர்கொண்ட 53 பந்துகளில் 2 பந்துகளை மட்டுமே தற்காப்பு ஆட்டத்தில் விளையாடியுள்ளார். மற்ற பந்துகளில் எல்லாம் ரன்களை சேர்த்து, பெரிய ஷாட்களையும் அடித்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன் இருந்த இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் முதலில் தங்கள் விக்கெட்டை பாதுகாத்துக் கொண்டு, நிலைப்படுத்தி அதன் பிறகுதான் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுப்பார்கள்.
ஆனால், ஜெய்ஸ்வால் தொடக்கமே அதிரடியாக இருக்கிறது, புதிய இளம் இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறாத நிலையில் அபிஷேக் 2வது டி20 போட்டியில் 46 பந்துகளில் சதம் அடித்து இளம் இந்திய அணி ஆக்ரோஷமானது என்பதை வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வால் 3வது மற்றும் 4வது டி20 போட்டிகளில் பங்கேற்று ஆடியதும், அவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய பாணியைக் கையில் எடுத்துள்ளார்.
ரோஹித் சர்மாவுக்கு அடுத்தார்போல் பவர்ப்ளே ஓவர்களுக்குள் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் பேட்டர் ஜெய்ஸ்வால்தான்.கடந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால் பவர்ப்ளே ஓவர்களுக்குள் 25 பந்துகளில் 53 ரன்களை சேர்த்திருந்தார்.
டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருருந்தாலும், ஜெய்ஸ்வாலுக்கு கடைசி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு ஜெய்ஸ்வால் விளையாடாத நிலையில் அவரின் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழுந்தன. ஆனால், அனைத்தும் கடந்த 2 போட்டிகளில் ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்துள்ளார்.
தவறைத் திருத்திய ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே பேட்டர்கள் இந்திய அணிக்குப் பெரிய இலக்கை நிர்ணயித்துவிட வேண்டும் என்ற நோக்கில் ரன் சேர்க்கப் போராடினர்.
ஆனால், கடந்த 3 டி20 போட்டிகளிலும் பவர்ப்ளே ஓவர்களுக்குள் குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளை ஜிம்பாப்வே இழந்து வந்தது. ஆனால், இந்த முறை அந்தத் தவறை ஜிம்பாப்பே பேட்டர்கள் செய்யவில்லை. மாறாக பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்தனர். மருமனி, வெஸ்லே இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்து 8.4 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.
மூன்றாவது ஓவரிலேயே மருமனி ஆட்டமிழந்திருக்க வேண்டியது. ஆனால் ஷிவம் துபே கேட்சை கோட்டைவிட்டாதால், 32 ரன்கள் சேர்க்க முடிந்தது. இருவரின் விக்கெட்டுகளையும் எடுக்க முடியாமல் இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர் என்றுதான் கூற வேண்டும்.
பிரதான பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம்
இதையடுத்து, பகுதிநேரப் பந்துவீச்சாளர்களான ஷிவம் துபே, அபிஷேக் ஷர்மாவை பந்துவீச கேப்டன் கில் அழைத்தார். அதற்கு பலன் கிடைத்து, மருமனி 32 ரன்களில் அபிஷேக் பந்துவீச்சிலும், மாதவரே 25 ரன்களில் துபே பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ஜிம்பாப்பே இழந்தது. 33 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை விரைவாக ஜிம்பாப்வே அணி இழந்தது.
சிக்கந்தர் விளாசல்
பட மூலாதாரம்,GETTY IMAGES
அணியை மீட்க வேண்டிய நிலையில் கேப்டன் சிக்கந்தர் ராசா களமிறங்கி, கேமியோ ஆடினார். 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 28 பந்துளில் 46 ரன்களை சிக்கந்தர் ராசா சேர்த்தார். கலீல் அகமது வீசிய கடைசி ஓவரில் மேயர்ஸ் 12 ரன்களில் கலீலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மதன்டே 4 ரன்களில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை பேட்டர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர். கேப்டன் சிக்கந்தர் ராசாவுக்கு ஈடு கொடுத்து பேட் செய்யவும் பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை. ஒருவேளை சிக்கந்தருக்கு இணையாக ஒரு பேட்டர் விளையாடியிருந்தால் கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருக்கும்.
சவாலாக வருவோம்
ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா கூறுகையில், “நாங்கள் 160 ரன்களை எதிர்பார்த்தோம். ஆனால் இந்த விக்கெட்டில் 180 ரன்கள் சேர்த்தாலும் போதாது என்ற அளவில் விக்கெட் மெதுவாக இருந்தது.
நாங்கள் இந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தோம் என்பது கௌரவமாக இருக்கிறது. விரைவில் நாங்கள் அனைத்து அணிகளுக்கும் சவாலாக வருவோம். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 55 ரன்கள் சேர்த்தோம். இந்த டி20 தொடரை இந்திய அணி வென்றாலும் கடைசி ஆட்டத்தில் வென்று 2-3 என்ற கணக்கில் வெல்ல முயல்வோம்” எனத் தெரிவித்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சு மோசம்
இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில் சிறப்புக்குரியதாக இல்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
குறிப்பாக தேஷ்பாண்டே தனது முதல் 2 ஓவர்களில் 21 ரன்களை வாரி வழங்கி 3 ஓவர்களில் 30 ரன்களை கொடுத்தார். கலீல் அகமது 4 ஓவர்களை வீசி ஓவருக்கு 8 என்ற ரன்ரேட் வீதம் வழங்கினார்.
சுழற்பந்துவீச்சில் பிஸ்னோய் ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசினாலும், வாஷிங்டனும் ஓவருக்கு 8 ரன்களை வாரி வழங்கினார். 6 பந்துவீச்சாளர்கள் நேற்று பந்துவீசியும் ஒரு பந்துவீச்சாளர்கூட ஓவருக்கு 5 ரன்களுக்குள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.bbc.com/tamil/articles/cw0y89100zpo