வாட்ஸப்பில் இருந்து..
Dr முரளி வல்லிபுரநாதனின் குறிப்பு
—
மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன்.
இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும்.
இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ?
வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும்.
அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும்
ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை.
உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும்
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
4.8.2024
———-
பகுதி 2- மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் ?
ஏற்கெனவே முதலாம் பகுதியில், சில தினங்களுக்கு முன்னர் "மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக, இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்தவித சிகிச்சையும் இன்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார்" என்பதையும் "அதற்கு காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்து இருந்தேன்.
இந்த இரண்டாம் பகுதியில் ஒரு நோயாளி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதை விரிவாக ஆராய்வோம்.
"அதிகாலை இரண்டு மணியளவில் குருதிப் பெருக்குடன் அனுமதிக்கப்பட்ட தாயார் காலை 7.30 மணி வரை வைத்தியரினால் பார்வையிடப்படவில்லை" என்பதே தற்போது சம்பந்தப்பட்ட பலராலும் கூறப்படும் குற்றச்சாட்டாகும்.
1. வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்டு அனுமதிக்கும் வைத்தியர்
ஆரம்ப சிகிச்சை விடுதிகள் [preliminary care unit] உள்ள வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவில் உள்ள வைத்தியர் நோயாளர்களை முதலில் ஆரம்ப சிகிச்சை விடுதிக்கு அனுமதிப்பார்கள். அங்கு ஆகக் கூடியது நான்கு மணிநேரம் நோயாளர்கள் பராமரிக்கப்படுவார்கள். அதன் பின்னர் வீடு செல்லும் நிலையில் உள்ளவர்கள் வீட்டுக்கும் ஏனையவர்கள் உரிய விடுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவர்.
நோயாளி ஒருவரை விடுதிகளுக்கு அனுமதிக்கும் போது அவரது நோய்நிலையைக் கருத்தில் கொண்டு அனுமதிக்கும் வைத்தியர் (admitting officer) எந்த விடுதியில் நோயாளியை அனுமதிக்கவேண்டும் என்ற முடிவினை எடுப்பார்.
ஏனைய வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் நோயாளியைப் பார்வையிட்டு நோய்நிலை அடிப்படையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அல்லது சாதாரண விடுதிக்கு நோயாளியை அனுமதிப்பர்.
ஆரம்ப சிகிச்சை விடுதிகள் இருக்கும் வைத்தியசாலைகளில் கூட மகப்பேற்றியல் விடுதிக்குரிய நோயாளிகள் எவராவது விடுதியில் அனுமதிக்கப்பட வேண்டுமானால் -தாமதங்களைத் தவிர்த்து உடனடியாக உரிய துறைசார் வைத்தியர்கள் சிகிச்சைகளை ஆரம்பிக்க வசதியாக- நேரடியாகவே மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கும் நடைமுறை உள்ளது.
2. விடுதியில் கடமையில் இருக்கும் வைத்தியர் (duty officer)
ஒரு நோயாளி விடுதியில் அதுவும் மகப்பேற்று விடுதியில் இரவில் அனுமதிக்கப்பட்டால், அவரைப் பார்வையிட்டு உரிய ஆரம்ப சிகிச்சைகளை ஆரம்பிப்பது, தேவை ஏற்படின் மகப்பேற்றியல் நிபுணருக்கு அறிவிப்பது ஆகியன அவ்வேளையில் கடமையில் இருக்கும் வைத்தியரது பொறுப்பாகும்.
மன்னாரில் குறித்த தாயாரை வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்ட வைத்தியர், அவரை அனுமதிக்கும்போது "சிகிச்சைக்கள (ward ) வைத்தியர் உடனடியாகப் பார்க்க வேண்டும்" என்ற குறிப்புடன் அனுப்பி இருந்ததாகவும், தாயார் விடுதிக்குள் அனுமதிக்கப்பவுடன், விடுதித் தாதி விடுதிக் கடமையில் இருந்த வைத்தியருடன் தொடர்பு கொண்டு தகவலைக் கூறியும் வைத்தியர் வரவில்லை என்றும்" குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
3. கடமையில் இருந்த தாதியர்
நோயாளியின் நிலைமை மோசமடையும் போது சிகிச்சை களத்துக்கு பொறுப்பான வைத்தியர் நோயாளியை வந்து பார்க்கவில்லை என்றால் தாதி பொறுப்பான வைத்திய நிபுணருக்கோ அல்லது தாதிய நிர்வாகிகளுக்கோ அறிவிக்க வேண்டும்.
'மறுநாள் காலை 7.30 மணியளவில் குழந்தையைப் பார்ப்பதற்காக வந்த குழந்தைகளுக்கான வைத்தியரே குழந்தையின் தாயார் மிகவும் மோசமான நிலையில் அவதானித்து உரிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தார்' என்று வைத்தியசாலையின் உள்ளகத் தகவல் கூறுகிறது.
அதேவேளை, மரணமடைந்த இளம் தாயாரது தாயார் "மகளது நிலமை மோசமாக உள்ளதாக கூறியபோது "தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தம்மை விரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
'காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுததாகவும், நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியதாகவும்,தாம் மிகவும் கஷ்டப்பட்டுக் கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டதாகவும், இந்நிலையில் தாம் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள், பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள்' என்றும் கூறியுள்ளார்.
வயோதிபத் தாயாரது கூற்றின்படி "காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர். " என்பதும் தெரியவருகிறது.
இதிலிருந்து வயோதிபத் தாயார் விளங்கிக் கொண்டது போல ஏழு யணியளவில் அவரது மகள் விழுந்த பின்னரும் வைத்தியர்கள் வந்ததாகக் கொள்ள முடியாதுள்ளது. மாறாக உள்ளகத் தகவல் கூறியவாறு, 7.30 மணிக்கு குழந்தைகளுக்கான வைத்தியர் வந்தபோது இளம் தாயார் இருந்த நிலையைக்க கண்டு பதறி அழைத்த பின்னரே மருத்துவர் பலர் வந்துள்ளார்கள் எனக் கொள்ளவேண்டியுள்ளது.
மேலும், மகப்பேற்று விடுதியில் நோயாளியைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்வதற்குத் தாதியர்களோ சிற்றூழியர்களோ உதவவில்லை என்பதும் துலாம்பரமாகிறது. உதவவேண்டியது அவர்களது கடமையாகும். உதவியிருந்ததால் அவர்களுக்குத் தாயாரின் பாரதூரமான நிலைமை தெரியவந்திருக்கும்.
4. பொறுப்பான வைத்திய நிபுணர்
வைத்திய நிபுணர் தமது விடுதியில் அதுவும் மகப்பேற்று விடுதியில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உதாரணமாகக் கடமை வைத்தியர் அவசர அழைப்புகளுக்குக் குறித்த நேரத்திற்குள் வராது போனால் தாதியர்கள் நேரடியாக மகப்பேற்று நிபுணருக்கே அறிவிக்கும் ஒரு பொறிமுறையைச் செயற்படுத்தலாம்.
5.மருத்துவ அத்தியட்சகர்
மருத்துவமனைகளில் அன்றாடம் இடம்பெறக்கூடிய தவறுகளை இனங்கண்டு அவற்றை மீளவும் நடக்காதிருக்க உறுதிப்படுத்த வேண்டும். அதற்காகப் பல பல சுற்றறிக்கைகள், வழிகாட்காட்டிகள், மற்றும் விதிக்கோவைகள் உள்ளன.
இந்த விடயத்தில் தற்போதுள்ள -புதிதாகக் கடந்த மாதமே பொறுப்பேற்ற- வைத்திய அத்தியட்சகரைக் காட்டிலும் முன்னர் இருந்தவர்கள் கட்டாயமாகப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஆவர்.
மேலும் கடந்த கால மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், தமது சொந்த மாவட்ட வைத்தியசாலையின் இழிநிலையைக் கவனிக்காது வெளிநாட்டுப் பயணங்களையும் தமது சொந்த வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தார்மீகப் பொறுப்பாளிகள் ஆவர்.
வேறுவிதமாகச் சொல்வதானால் சிந்துஜாவின் அநியாயச் சாவுக்கான கர்ம வினையானது நோயாளியைப் பாராதிருந்த பெருங்குடி வைத்தியர், மற்றும் அசட்டையாக இருந்த தாதியை மட்டுமல்லாமல் மேலே குறிப்பிட்ட அனைவரையும் சேரும்.
இது இவ்வாறிருக்க,
'மேற்படி விடுதியில் அந்த இரவில் கடமையில் இருந்த மருத்துவர் தென்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மாதத்தில் 2 வாரங்களே மன்னாருக்கு வருகை தந்து கொண்டு- ஒவ்வொரு நாளும் வேலை செய்பவராகவும், அத்துடன் தினமும் 4-6 மணி நேரம் வேலை செய்வதாக போலி குறிப்புகளை எழுதி- மாதம் 120 மணி மேலதிக வேலை செய்வதாகக் கணக்குக் காட்டிப் பல மாதங்களாக முழுச் சம்பளத்தையும், அத்துடன் மேலதிகக் கொடுப்பனவாக மாதம் தோறும் பல இலட்சம் ரூபாய்களையும் சுருட்டியவர்' என்றும் உள்ளகத் தகவல் சொல்கிறது.
இதை விடத் தென்பகுதியில் பல பதவி வெற்றிடங்கள் இருந்த போதும் 'ஐஸ் அடிப்பதற்காக' வடக்குக்கு வந்தவர் என்பதும், 'இரவு 9 மணிக்கு பின்னர் இவர் வேறு உலகத்தில் இருப்பதாகவும், நோயாளிகளைக் கவனிப்பதில்லை' என்பதும் வைத்தியசாலையினுள் கூறப்படும் குற்றச்சாட்டாகப் பொதுமக்கள் மத்தியில் பேச்சடிபடுகிறது.
இந்த வைத்தியரை ஆரம்ப விசாரணையின் பின் தண்டனைக்குரிய குற்றம் என்ற பெயரில், அவரது சொந்த இடத்துக்குப் பாதுகாப்பாக "தண்டனை இடமாற்றத்தின் மூலம்" அனுப்ப GMOA மாபியா திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலே குறிப்பிட்ட அனைத்து நடைமுறை மீறல்களுக்கும் வழிகாட்டிகளாக, பாதுகாவலர்களாக சுகாதாரத்துறைத் தொழிற்சங்கங்களே உள்ளன. நோயாளியைச் சுத்தப்படுத்த முன்வராது சம்பளம் பெறும் சிற்றூழியரில் தொடங்கி, கடமைக்கே வாராது சம்பளம் பெறும் வைத்தியர்கள் மற்றும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது கையறுநிலையில் உள்ள மருத்துவ நிர்வாகிகள் அனைவரும் தத்தமது கடமைகளைச் செய்ய வேண்டுமானால் முதலில் சுகாதாரத் தொழிற்சங்க மாபியாக்கள் இல்லாதொழிக்கப்படவேண்டும்.
எனவே, சிந்துஜாவின் சாவு மன்னாரில் இடம்பெற்ற கடைசி அநியாயச் சாவாக இருக்க வேண்டுமாயின்,
1. கவனக்குறைவாக இருந்த குற்றவாளி தண்டிக்கப்பட்டுச் சிறைக்கு அனுப்ப பட வேண்டும். அதைச் செய்வதற்குத் தன்னார்வ சட்ட ஆலோசகர் ஒருவர் இறந்தவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது, ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்களால் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, அந்த கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணிகளாலேயே இந்த வழக்கு முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திறமையுள்ள சட்டத்தரணிகள் எவரையும் கொண்டிராத இந்தக் கட்சி உறுப்பினர்கள் அவர்களை நம்பிய வைத்தியர் அர்ச்சுனாவை விளக்கமறியலில் இருந்து மீட்கும் முயற்சியில் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில், இவர்களால் வழிநடத்தப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய நட்டஈடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே சுயாதீன நீதியாளர்கள் அக்குடும்பத்தைப் பாரமெடுத்து நீதி பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.
2. தற்போதைய மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை என்பது உண்மையில் -GMOA மாபியாக் கும்பலால் வழங்கப்படும் ஆதரவுடன்- அறுபது வைத்தியர்களில் அரைவாசி வைத்தியர்களே ஒரு குறித்த நாளில் கடமைக்கு சமூகமளிப்பதால் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைப் பற்றாக்குறை என்பதைப் புரிந்து கொண்டு, அனைத்து வைத்தியர்களும் தினசரி கடமைக்குச் சமூகமளிப்பதை உறுதி செய்யும் வகையில் தீவிர கண்காணிப்பும் கணக்காய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும். உரிய கணக்காய்வுகளை மேற்கொண்டால் மோசடி செய்யப்பட்ட பல மில்லியன் ரூபாய்களை மீளப்பெற முடியும் என்பதுடன் அனைவரையும் வேலைக்கு வரவைக்கவும் முடியும்.
3. இனியாவது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் தமது பிரதேச வைத்தியசாலையில் என்ன நடக்கிறது என்பதைக் கண் திறந்து பார்த்து உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும். கடந்த காலத்தில் சுகாதாரத் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட நிபுணராக கடமையாற்றியவன் என்ற வகையில் மாவட்ட பொது வைத்தியசாலையாக மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்க நான் எப்போதும் தயாராக உள்ளேன்.
3. சூட்டோடு சூடாக மன்னார் மக்கள் ஒன்று திரண்டு கவன ஈர்ப்புப் போராட்டங்கள் ஊடாக உரிய அழுத்தத்தைச் சுகாதாரத் தொழிற்சங்க மாபியாக்களுக்கு எதிராகப் பிரயோகிக்க தவறினால் இன்னும் பல சிந்துஜாக்களை மன்னார் இழக்க நேரிடலாம்.
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்
6.8.2024