ராணுவ ரகசியம் --------------------------- நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. பொழுது இன்னும் விடிந்திருக்கவில்லை, நேரம் அதிகாலை நாலு அல்லது ஐந்து மணி ஆகியிருக்கும் போல. வெளியில் இருட்டு இன்னும் கும்மிக் கொண்டிருந்தது. இந்த நாய்கள் இவர்களுக்கு ஏன் அடங்கிப் போகின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேளை குலைக்கும் நாய்களை எப்படி குலைக்காமல் அடக்குவதென்று இந்திய ராணுவத்தில் ஒரு பயிற்சியும் இருக்கின்றதாக்கும். இதுவே இலங்கை ராணுவம் எவ்வளவு தான் பதுங்கிப் பதுங்கி வந்தாலும், எங்கள் ஊர் நாய்கள் விடாமல் குலைத்து, சில வேளைகளில் இலங்கை இராணுவத்திடம் அடிவாங்கி இழுபட்டு ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டே ஓடியும் இருக்கின்றன. இலங்கை இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இருந்த வித்தியாசங்களில் ஒன்று இந்திய ராணுவத்தின் மணம். அந்த மணம் அல்லது வாடை எங்கேயிருந்து அவர்களின் மேல் வருகின்றது என்று தெரியவில்லை. ஆனால் நண்பன் ஒருவன், அவன் ஒரு நாள் இவர்களிடம் தனியாக மாட்டுப்பட்டான், சொன்ன தகவல்களின் படி அந்த மணம் அவர்களின் சட்டை அல்லது நீண்ட காற்சட்டைப் பைகளுக்குள் இருக்கும் சப்பாத்திகளின் மணமே. இந்திய இராணுவத்தினர் சப்பாத்திகளை அங்கங்கே சுருட்டி வைத்திருக்கின்றார்கள் என்று அவன் சொன்னான். ஒரு பனங்கூடலுக்குள்ளால் அவனை நடத்தி கூட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்த போது அந்தச் சப்பாத்தியில் ஒன்றை அவர்கள் அவனுக்கும் கொடுத்ததாகச் சொன்னான். உயிரா அல்லது அந்தச் சப்பாத்தியா என்று நினைத்து அதை சாப்பிட்டதாகச் சொன்னான். அவன் வேறு சிலவும் சொன்னான், அவை பொதுநலம் கருதி இங்கே தவிர்க்கப்படுகின்றன. ஒரு தடவை இந்திய ராணுவம் ஊரைச் சுற்றி வளைத்து தேடுகின்றார்கள் என்ற செய்தி கேட்டு, நாங்கள் சிலர் விழுந்தடித்து அருகில் இருக்கும் ஒரு ஊருக்கு ஓடிப் போனோம். அங்கு ஒரு விளையாட்டுத் திடல் இருக்கின்றது. அந்த விளையாட்டுத் திடலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. அப்படி ஒரு பெயரை எந்த இடத்திற்கும் வைக்கவே கூடாது. ஆகவே அதையும் இங்கே தணிக்கை செய்கின்றேன். அந்த திடலின் மூன்று பக்கங்களிலும் அடர்த்தியான பனங்கூடல்கள் இருந்தன. ஒரு பக்கம் மட்டுமே வீடுகள் மற்றும் பாதை இருந்தன. மூன்று பனகூடல்களுக்குள்ளும் ஒற்றையடி பாதைகள் இருந்தன. அப்பாடா............ இன்றைக்கு இந்த இந்திய ராணுவத்திடம் இருந்து தப்பியாகி விட்டது என்று அந்த திடலின் ஒரு பக்கமாக நின்று சாவகசமாக கதைத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று எங்களுக்கு பின்னால் இருந்த பனைகளுக்கு இடையால் திபுதிபுவென்று இந்திய இராணுவத்தினர் வெளியே வந்தனர். எங்கேயிருந்து, எப்படி வருவார்கள் என்ற ஒரு வரையறை இவர்களுக்கு கிடையாது. இந்திய ராணுவம் வந்த ஆரம்ப நாட்களில் அவர்கள் சுற்றி வளைத்து எங்களை பிடிப்பது நாங்கள் சின்ன வயதுகளில் விளையாடும் கள்வன் - போலீஸ் விளையாட்டு போலவே. 'ஆ..... உன்னைப் பார்த்தாச்சு.............. நீ அவுட்.............' என்று சொல்வது போல, எங்களைக் கண்டால் கூட்டிக்கொண்டு போவார்கள். ஏதாவது ஒரு பாடசாலை, கோவில் வீதி, மைதானம் இப்படி எங்காவது வைத்திருந்து விட்டு, அநேகமாக எல்லோரையும் அன்றே விட்டுவிடுவார்கள். அவர்கள் எங்களை விடுதலை செய்யும் வரை எங்களின் அம்மாக்கள் வந்து அந்த இடத்தை சுற்றியே நிற்பார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களைப் பிடித்து விட்ட பின்னர், வரும் வழியில் அந்த இராணுவத்தினரில் ஒருவருக்கு எவ்வளவு நீட்டு தலைமுடி என்று அம்மா ஆச்சரியத்துடன் சொன்னார். அம்மாவும் எங்களைப் போலவே இலேசாகத்தான் அங்கே வெளியில் நின்றிருக்கின்றார். ஆனால் மிக விரைவிலேயே நிலைமைகள் மாறியது. அமைதி என்று ஆரம்பித்தது அடிபிடியாகியது. சுற்றி வளைப்பில் பிடிபட்டால் சப்பாத்தி கொடுக்கும் காலம் முடிந்து, சப்பாத்தால் மிதித்தாலும் மிதிப்பார்கள் என்ற ஒரு கஷ்ட காலம் மீண்டும் வந்திருந்தது. எங்களின் ஆட்கள் சிலரே அவர்களுக்கு உதவியாளர்களாக மாறியது தான் பெரும் கலக்கமாக மாறியது. சுற்றி வளைப்பில் எங்களை பிடித்துக் கொண்டு போக, அங்கே உதவியாளர்களாக இருக்கும் நம்மவர்கள் தலையாட்டிகளாக மாறினார்கள். அவர்கள் எங்களைப் பார்த்து தலையை ஆட்டினால், தலையாட்டப்பட்டவர்கள் உள்ளே. மற்றவர்களை விட்டுவிடுவார்கள். உள்ளே போனவர்களை, பெரும்பாலும் எல்லோருமே அப்பாவிகள் தான், வெளியே எடுப்பதற்கு பலர் வரவேண்டும். பாடசாலை அதிபர்கள், ஊர்ப் பெரியவர்கள், மத குருக்கள், இப்படிச் சிலர் இந்தக் கடமையையும் செய்து கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த இந்திய ராணுவ முகாமில் பிரதான தலையாட்டியாக இருந்தவரை எனக்கு நல்லாவே தெரியும். அதைவிட முக்கியம், அவருக்கும் என்னை நல்லாவே தெரியும் என்பது தான். கிட்டத்தட்ட ஒரே வயது தான். அந்த பிரதான இராணுவ முகாம் ஊடாகவே பேருந்துகள் போய் வந்து கொண்டிருந்தன. பேருந்துகளில் போய் வந்து கொண்டிருந்த சில நண்பர்களை காரணமே இல்லாமல் இறக்கி நல்லாவே அடி போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். எங்களால் ஊகிக்க முடிந்த ஒரே ஒரு காரணம் அந்த பிரதான தலையாட்டி மட்டுமே தான். என்னையும் ஒரு நாள் தலையாட்டி பார்த்தார், ஆனால் இறக்கவும் இல்லை, அடிக்கவும் இல்லை. அப்பவும் நான் வம்பு தும்பு என்று எதற்கும் போவது இல்லை என்பது தான் காரணம் போல. இன்னொரு சின்னக் காரணமாக அவருடைய முறைப்பெண் முறையான ஒருவர் என்னிடம் படித்துக் கொண்டிருந்ததும் என்று நினைக்கின்றேன். வீட்டில் நின்று இந்திய ராணுவத்தின் கைகளில் சிக்கவே கூடாது என்ற முடிவை ஒரு சம்பவத்தின் பின் எடுத்திருந்தேன். ஒரு நாள் எல்லாப் பக்கத்தாலும் வீட்டுக்குள் அவர்கள் திடுப்பென வந்தார்கள். மூன்று நாய்கள் முற்றத்தில் அவர்களைக் கண்டும் காணாதது போல தங்கள் முகநாடிகள் தரையில் தேயும்படி படுத்திருந்தன. பின் வளவுக்குள் இருந்த பனம்பாத்தி என்ன என்பதே அவர்களின் முதலாவது கேள்வி. அவர்களுக்கு அதை என்னவென்று ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லும்படி வீட்டில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். என்னுடைய விளக்கத்தின் பின்னும் அவர்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். நான் கொடுத்த பனம்பாத்தி விளக்கம் அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் நான் என்ன சொன்னேன் என்று எனக்கே புரிந்திருக்கவில்லை. தலையாட்டப்படாமலேயே அன்று தடுத்து வைப்பார்கள் என்று நினைத்தேன், அன்றும் பிரதான தலையாட்டி எனக்கு தன் தலையை ஆட்டவில்லை. ஆனால் எங்களின் நண்பர்களில் ஒருவனை தடுத்து வைத்துவிட்டனர். பின்னர் அன்றிரவு, வழமையான முயற்சிகளின் பின், அவன் விடுவிக்கப்பட்டான். அடுத்த நாள் ஒரு பெரிய தேடுதல் ஊரில் நடக்கப் போவதாக அப்பா வந்து சொன்னார். சல்லடை போட்டுத் தேடப் போவதாகாவும், பலரைக் கைது செய்யும் திட்டம் இருப்பதாகவும் சொன்னார். இந்த தகவல் மிகவும் இரகசியமானது என்றும், இந்திய ராணுவத்தில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு வீரர் மூலம் தெரிய வந்ததாகவும் கூட சொன்னார். அயலூர் ஒன்றைத் தவிர மற்றைய ஊர்கள் எல்லாவற்றையும் அதிகாலையிலேயே சுற்றி வளைக்கப் போகின்றார்கள் என்றும் சொன்னார். அந்த அயலூரில் மாமி ஒருவர் இருந்தார். ஆதலால் எல்லோரும் இப்பவே கிளம்பி மாமி வீட்டை போவோம் என்றும், நாளை மறுதினம் திரும்பி வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. எங்களின் வீட்டில் ஏராளமான ஆட்கள், அதை விட மாமியின் வீட்டில் இன்னும் அதிகம். எங்கள் எல்லோருக்கும் மாமியின் வீட்டில் இடம் இருக்கவில்லை. நல்ல காலமாக மாமியின் வீட்டிற்கு அருகில் ஒரு வீடு காலியாக இருந்தது. அந்த வீடு வரலாற்றில் மிக முக்கியமான ஒருவரின் வீடு. அவரின் பெயரையும் இங்கு தணிக்கை செய்து கொள்வோம். அவரின் குடும்பத்தார்கள் எப்போதோ இந்தியாவுக்கு போய்விட்டார்கள். மாமியிடமே அந்த வீட்டின் பொறுப்பு இருந்தது. மாமியின் வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு, நாங்கள் சிலர் அருகில் இருக்கும் அந்த வீட்டிற்கு போனோம். அந்த வீட்டில் படுத்திருக்கும் போது தான், விடிகாலையில் நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. இராணுவத்தினர் சாரைசாரையாக இங்கிருந்தும் அங்கே எங்களூருக்கு போகின்றார்கள் போல என்று நினைத்துக் கொண்டே மீண்டும் நித்திரையாகினேன். விடிந்து கொண்டு வர, முன் கதவைத் திறந்து கொண்டு ராணுவத்தினர் உள்ளே வந்தார்கள். எங்களைக் அப்படியே அள்ளிக் கொண்டு போய் ஒரு பாடசாலை மைதானத்தில் வைத்திருந்தனர். அன்றைய நாள் முடிவில் விசாரணைகள் முடிந்து எங்களை விட்டார்கள். நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் விபரங்கள் அங்கு வந்து எங்களைக் கொண்டு போன இந்திய இராணுவத்தினருக்கு தெரிந்திருக்காதது எங்களின் அதிர்ஷ்டம். அடுத்த நாள் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்தோம். எங்கள் ஊரில் எந்த சுற்றி வளைப்பும் நடக்கவே இல்லை என்று சொன்னார்கள்.