தலித் என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் - சிதைக்கப்பட்டவர்கள். இந்திய சாதிய அமைப்பில், சாதிகளின் பிரிவுக்கு வெளியே, அதாவது ஆக குறைந்ததாக கருதப்படும் சாதியிலும் குறைவாக, அதாவது சாதிய கட்டமைப்புக்கு வெளியே உள்ள மக்கள் தான் தலித் என விளிக்கப்பட்டனர். ஆங்கிலத்தில் out-cast என்றனர். இதன் மாற்று பெயர்களாக தீண்டதகாதவர் (untouchables) என்பது வழங்கியது. இதை மாற்றி இவர்கள் கடவுளின் பிள்ளைகள், எனவே இவர்களை ஹரிஜனம் என அழைக்க வேண்டும் என்றார் காந்தி. பழைய விகடன், குமுதத்தில் இந்த சொல் கையாளப்பட்டிருக்கும். ஆனால் இப்படி ஒரு பெயரை தமக்கு அளிப்பது தலையை தடவி இழிக்கும் போக்கு (patronizing) என கூறிய அம்பேத்கர் அதை மறுதலித்து, எதை இழிசொல்லாக கூறினரோ அதுவே எம் பெருமை மிகு அடையாளம் என தலித் என்ற சொல்லை முன்னிறுத்தினார். கூடவே அவர் சமைத்த அரசியல் ஆட்டம் இந்த சாதிகளை ஒரு பட்டியலில் இட்டதால் அவர்கள் பட்டியலினத்தவர் (schedule castes) என்றும் வழங்கப்படுகிறனர். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் எழுச்சி, அதை தொடர்ந்து வந்த விசிக, தேவேந்திர குல வேளாளர் சாதிய அமைப்புகளின் எழுச்சி இந்த சொல்லின் பாவனையை, தலித்-மக்கள் மைய அரசியலை அதிகரித்தது. நிற்க, இங்கே ஆரம்பத்தில் நான் கூறிய தலித் என்ற அடையாளத்துள், அதாவது சாதிய கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட மக்கள் கூட்டம் என இலங்கையின் வடக்கு-கிழக்கில், மூன்று மக்கள் கூட்டங்கள் மட்டுமே இருப்பதாக எனக்கு படுகிறது. அவையாவன, பறையர், நளவர், பள்ளர் (தமிழ் நாட்டில் தேவேந்திரகுல வேளாளர்). ஆகவே இவர்கள் மட்டுமே இலங்கையில் தலித் என்ற அடையாளத்துக்குள் அடங்க கூடியவர்கள். ஆனால் பிரிதானியர் கூட இவர்களை சாதிய கட்டமைபுக்கு அப்பாற்பட்டோர் என, பட்டியல் இடவில்லை என்பது நோக்கத்தக்கது. ஆகவே, இந்த மூன்று மக்கள் பிரிவினர் கூட, இலங்கையில் outcast ஆக நடத்தபட்டனரா, படுகிறனரா என்பது கேள்விக்குரியது. இலங்கை சாதிய கட்டமைப்பு இவர்கள் மூவரையும் சாதிய கட்டமைபுக்குள் உள்வாங்கியே உள்ளது என்போரும் உளர். அப்படியாயின் இவர்கள் கூட தலித் என்ற அடையாளத்துள் வரார். அதேபோல் இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டம் தனியே இவர்களை மையபடுத்தி மட்டும் அல்ல, அது வெள்ளாள சாதிய அடக்குமுறைக்கு எதிராக, முற்போக்கான ஒரு சில வெள்ளாளர் உட்பட வெள்ளாளர் அல்லாதோரின் உரிமை போராட்டமாகவே அமைந்தது. இலங்கையில் நடந்த, நடக்கின்ற சாதி எதிர்ப்பு அரசியல் - நீங்கள் சொன்ன சாதியினர் + தலித் என்ற அடையாளத்துள் வரும் சாதியினர் அனைவருக்குமான, வெள்ளாள ஆதிக்க எதிர் அரசியலே ஒழிய - அது தலித் மைய அரசியல் அல்ல. உதாரணம் மூலம் சொல்வதாயின், திருமாவளவன் தலித் மக்களின் நலனை முந்தள்ளும் தலித்திய அரசியல்வாதி. பெரியார் பிராமணர் அல்லாதோர் நலனை முந்தள்ளிய பிராமண ஆதிக்க எதிர்ப்பு அரசியல்வாதி. இலங்கையில் திருமாவின் அரசியல் நடக்கவில்லை. இலங்கையில் நடந்தது, நடப்பது வெள்ளாள ஆதிக்க எதிர்ப்பு அரசியல். வரும் காலத்தில் இலங்கையில் நளவர், பள்ளர், பறையர் சாதியிரனரை மட்டும் பிரதிநிதிதுவபடுத்தி ஒரு அரசியல் முன்னெடுக்கப்படின் - அதை தலித் அரசியல் எனலாம்.