உன்னால் முடியும் தம்பி -------------------------------------- இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். இருக்கைகள் அவர்களின் பொறுப்பில் வருவதில்லை என்றும், புறப்படும் கதவில் போய் கேளுங்கள் என்றும் சொன்னார்கள். கதவில் நின்ற அழகான, பணிவான பெண்ணிடம் அவரை விட பணிவாக நான் கேட்டேன். சிறிது நேரம் கணினியில் அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் இருப்பதெல்லாம் நடு இருக்கைகள் மட்டுமே, அவை கூட முன்னுக்கு பின்னாகவும் இல்லை என்றார். விமானம் விழுந்தால், கடைசிக் கணத்தில் நால்வரும் தனித்தனியாக விழப் போகின்றோமே என்ற கவலையும், அக்கம் பக்கம் சரிந்து அடுத்தவர்கள் தோள்களில் விழாமல் தூங்கி வழியவேண்டுமே என்ற யோசனையுடனும் என்னுடைய நடு இருக்கையில் அமர்ந்தேன். வலக்கை பக்கம் ஒரு பெரிய பெண் வந்து இருந்தார். இடைக்கை பக்கம் ஒரு பெரிய ஆண் வந்து இருந்தார். என்னுடைய கைகளை இன்னும் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு இந்தியர் விமானப் பயணத்தின் போது அருகில் இருந்த பெண்ணுடன் ஏதோ செய்து கைது செய்யப்பட்டிருந்தார். கைபடாமல் இருக்க வேண்டும். அந்தப் பெண் ஏதோ எடுத்துக் கொண்டு என் பக்கம் திரும்பினார். அவரின் பெரிய கை என் விலாவில் நேராக இறங்கியது. 'மன்னிக்கவும், மன்னிக்கவும்............' என்று பதறினார். இடைக்கை பக்கம் அமர்ந்திருந்தவர் மடியில் ஒரு புத்தகம் வைத்திருந்தார், 'The Road To Character' என்று புத்தகத்தின் தலைப்பு இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. அதில் இருந்த எழுத்தாளர் பெயரும் கொஞ்சம் கூட பரிச்சயமற்றது. அருகில் இருந்த பெண்ணின் முன்னால் இருந்த சிறிய திரை அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த திரையில் ஒவ்வொரு புள்ளியையும் தனது விரல்களால் அமத்தினார். திரை அசையவே இல்லை. ஒரு விமான பணிப்பெண்ணைக் கூப்பிட்டார். விமானத்தின் இந்தப் பகுதியில் நடுவில் இருந்து வலப்பக்க முடிவு வரை உள்ள எவருக்கும் திரை வேலை செய்யவில்லை என்றார் பணிப்பெண். அங்கே பாருங்கள், இவருடையை திரை கூட வேலை செய்யவில்லை என்று என் முன்னால் இருந்த திரையைக் காட்டினார். நான் பணிப்பெண்ணைப் பார்த்தேன். பணிப்பெண் என்னுடைய திரையைப் பார்த்தார். அருகில் இருந்த பெண் திரையையும் என்னையும் பார்த்தார். நான் அந்த திரையை ஒரு தடவை கூட தொட்டிருக்கவில்லை. அது அப்படியே இருட்டாகவே இருந்தது. சரிசெய்துவிடுகின்றோம் என்றபடியே பணிப்பெண் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். எனக்கு இரண்டு பக்கமும் இருந்தவர்கள் பெரும் குடும்பங்களாக வந்திருந்தார்கள். குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என்று இரு பக்கங்களும் கூட்டங்களாக இருந்தார்கள். அமெரிக்காவை சுற்றிப் பார்க்கப் போகின்றார்கள் என்று அவர்களின் உரையாடல்களில் இருந்து தெரியவந்தது. கொஞ்சம் துணிந்தவர்கள் போல. அதிபர் ட்ரம்பையும் மீறி இவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றார்கள். இடக்கை பக்கம் இருந்தவரின் இரண்டு வயதான குழந்தை ஒன்று மிகவும் சந்தோசத்துடன் முன்னுக்கு இருந்த இருக்கையை கால்களால் உதைத்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் போக, உதை வாங்கிக் கொண்டிருந்தவர், அவர் ஒரு இந்திய பெண்மணி, எழும்பி வந்தார். குனிந்து மெதுவாக அவர்களிடம் ஏதோ சொன்னார். சிரித்துக் கொண்டே உதைக்கும் இரண்டு வயது குழந்தை இப்பொழுது இடம் மாற்றப்பட்டது. தந்தையின் மடியில் அந்தப் புத்தகத்தின் மேல் அமர வைக்கப்பட்டார். எனக்கும் பின்னால் இருந்து இன்னொரு குழந்தையிடம் இருந்து உதைகள் விழுந்து கொண்டேயிருந்தது. பரவாயில்லை, குழந்தைகள் அழாமல், அடம்பிடிக்காமல் வருவதே பெரிய விடயம் என்று பேசாமல் இருந்துகொண்டேன். தந்தையின் மடியில் இருந்து மிகவும் சிநேகபூர்வமாக என்னைப் பார்த்து சிரித்தார். சுருட்டை முடியும், பளிங்குக் கண்களும் கொண்ட ஒரு அழகான பொம்மை போல அந்தக் குழந்தை இருந்தது. திடீரென இரு விரல்களை மடக்கிக் கொண்டு மூன்று விரல்களை காட்டியது. இது இரண்டு விரல்களால் காட்டப்படும் சமாதானத்திற்கும் மேலே. பக்கென்று சிரிப்பு வந்தது. என்னை விட அதிகமாக சிரித்தது குழந்தை. மூன்று விரல்களும், சிரிப்பும், சில கதைகளுமாக பயணம் பறந்து கொண்டிருந்தது. அந்த இந்தியப் பெண் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். விமானம் நின்றதும் ஒவ்வொருவராக வரிசையில் இறங்கினர். எனக்கு வலது பக்கம் இருந்த பெண் அவரது தலைக்கு மேலே இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு அவரது குடும்பத்துடன் இறங்கினார். என்னுடைய பொருட்கள் இடது பக்கம் மேலே இருந்தது. ஆனால் இடது பக்க குடும்பம் இறங்கவில்லை. எதையோ தேடிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் புகுந்து என்னுடைய பொருட்களை எப்படி எடுப்பது என்றபடியே எழும்பி நின்று கொண்டிருந்தேன். 'ஓ.............. மன்னிக்கவும், உங்களின் பொதி இங்கே மேலேயா இருக்கின்றது................' என்று கேட்டார் அந்தக் குழந்தையின் தாய். ஆமாம் என்றேன். அவரே அதை எடுத்துக் கொடுக்க முன்வந்தார். 'நீங்கள் ஏன் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவரே எடுத்துக் கொள்வார் தானே............' என்று இழுத்தார் அவரின் கணவர். அந்தப் பெண் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே என்னுடைய பொதியை எடுத்துக் கொடுத்தார். குட்டிக் குழந்தை மீண்டும் மூன்று விரல்களைக் காட்டி சிரித்தது. அப்படியே வலப்பக்கத்தால் நான் வெளியே வந்தேன். 'The Road To Character' என்ற அந்தப் புத்தகம் அந்த இருக்கையிலேயே அப்படியே திறக்கப்படாமல் கிடந்தது. அது வெறுமனே பயணம் போய் வருகின்றது போல.