நிரூபணவாதி --------------------- இங்கே யார் அவர் என்று என்னுடைய பெயரைச் சொல்லி கேட்டான் அவன். அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது. விளையாட்டு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று ஒரு வழமையாக சொல்லியிருக்கின்றோம். நான் ஆறு ஐம்பது அளவில் அங்கே மைதானத்தில் நிற்பேன். ஏழு மணிக்கு ஓரிருவரும், ஏழரை மணி அளவில் சிலரும் என்று வந்து சேர்வார்கள், அப்படியே விளையாட்டை ஆரம்பித்துவிடுவோம். எட்டு மணி அளவில் அன்று வர இருந்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். 'நான் தான் அது............ நீங்கள்..............' 'என் பெயர் சிட்டா............ உங்களுடன் சேர்ந்து நானும் ஆட வந்திருக்கின்றேன்...............' என்று சொன்னவன் தன்னை யார் இங்கே அனுப்பியது என்றும் சொன்னான். 'நல்லது சிட்டா............. கொஞ்ச நேரம் வெளியில் நிற்பவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள்............... நான் இந்த செட்டை முடித்து விட்டு வருகின்றேன்...........' 'ஏன், உங்களிடம் இன்னொரு நெட் செட் இல்லையா................இரண்டு நெட் போட்டால் எல்லோரும் ஒரே நேரத்தில் ஆடலாமே............' சிட்டாவிடம் ஏராளமான தலைமைத்துவப் பண்பு இருப்பது அவனை சந்தித்த ஒரு நிமிடத்திலேயே தெரிந்தது. இதோ வந்து விடுகின்றேன் என்று சொல்லிவிட்டு நான் விளையாட்டைத் தொடர்ந்தேன். சிட்டா ஏழரை மணிக்கு பின்னர் வந்து வெளியில் நின்றவர்கள் ஒவ்வொருவருடனும் கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என்று நான்கு மொழிகளிலும் தன்னை அறிமுகப்படுத்தினான் என்றே காதில் விழுந்த அவனுடைய பேச்சுகளில் இருந்து தெரிந்தது. அவன் அநேகமாக தெலுங்கு தேசத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றே எனக்குப்பட்டது. தெலுங்கு மக்கள் அவர்களது பெயர்களின் ஒரு பகுதியாக தங்களது சொந்த ஊர்களின் பெயர்களையும் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கின்றது. சிட்டா என்பது அவனுடைய ஊரின் பெயரின் ஒரு சுருக்கிய வடிவமாக இருக்கலாம். அவனுடைய நண்பர்கள் அவனை இந்தப் பெயரால் கூப்பிட்டு அதுவே நிரந்தரம் ஆகிவிட்டது போல. சிட்டா என்பது சிட்டு என்பது போலவும் அழகாக இருந்தது. தமிழர்களிடமும் இதே வழக்கம் ஓரளவு இருக்கின்றது. எம்ஜிஆரில் இருக்கும் எம் என்பது மருதூர் என்பதையே குறிக்கும். அவர் இலங்கையில் இருக்கும் நாவலப்பிட்டி என்னும் ஊரிலேயே பிறந்திருந்தாலும், கேரளவில் இருக்கும் அவரது பெற்றோர்களின் ஊரான மருதூர் என்பதையே தன் பெயருடன் சேர்த்து வைத்திருந்தார். நாவலப்பிட்டி கோபாலன் ராமச்சந்திரன் என்ற பெயர் அவருக்கு இருந்திருந்தால், நடிகர் சிவாஜிக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் போட்டியாக வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் அவர்களை இரண்டாம் இடத்தில் தள்ள இன்னொருவர் தான் வந்திருக்கவேண்டும். நாவலப்பிட்டி என்னும் ஊரின் பெயரே கோபாலன் ராமச்சந்திரனை ஒன்றும் இல்லாமல் ஆக்கியிருக்கும். மிகவும் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. மதுரை அவருடைய சொந்த ஊர், சண்முகவடிவு என்பது அவருடைய தாயாரின் பெயர். ஒருவரின் பெயரில் அவருடைய அன்னையின் பெயரும் சேர்ந்து இருப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. 'எப்படி இருக்கின்றீர்கள் சிட்டா...................... 'சூப்பராக இருக்கின்றேன்................. ஆமா, நீங்க கன்யாகுமரிப் பக்கமா..............' 'இல்லை சிட்டா, அதுக்கும் கீழே................. யாழ்ப்பாணம்.............' சிட்டா புரியாமல் ஒரு கணம் என்னையே பார்த்தான். நான் ஶ்ரீலங்கா என்றேன். சிட்டா தமிழ் இல்லை என்பது ஓரளவிற்கு உறுதியாகிவிட்டது. மொத்தமாக 18 பேர்கள் அன்று வந்திருந்தார்கள். சரியாக மூன்று அணிகளாக பிரிக்கலாம். ஒரு அணி வெளியில் நிற்க, மற்ற இரண்டு அணிகளும் 21 புள்ளிகள் அல்லது 15 புள்ளிகளுக்கு விளையாடலாம். தொடர்ச்சியாக இரண்டு செட்டுகள் விளையாடிய அணி வெளியே வந்து நிற்பார்கள். எங்களிடம் மூன்று நெட் இருக்கின்றன, ஆனால் 18 பேர்கள் இருக்கும் போது இரண்டாவது நெட் போடுவது அவ்வளவு நல்ல ஒரு யோசனை அல்ல என்று சிட்டாவிற்கு எங்களின் அடிப்படை பொறிமுறைகளை விளங்கப்படுத்தினேன். சிட்டா நிறையவே யோசித்தான். சிட்டா ஒரு படு மோசமான விளையாட்டுக்காரனாகவே இருந்தான். கரப்பந்தாட்டத்திற்கு தேவையான திறமைகள் எல்லாமுமே அவனுக்கு சராசரிக்கும் குறைவாகவே வாய்த்திருந்தன. ஆனால் மிகவும் நன்றாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தான். அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் தொழில்நுட்பத்துறையில் மென்பொருளாளராக வேலை செய்து கொண்டிருந்தான். அத்துடன் காப்புறுதி மற்றும் வேறு சில சேவைகளும் வழங்கும் ஒரு சிறிய நிறுவனத்தையும் சொந்தமாக நடத்திக் கொண்டிருந்தான். அவன் எங்களுடன் கரப்பந்தாட்டம் விளையாட வந்திருக்கின்றானா அல்லது வாடிக்கையாளர்களை சேர்க்க வந்திருக்கின்றானா என்று எவராவது கேட்டால் அது ஒரு நியாயமான கேள்வியே. எப்போதும் எட்டு மணி அல்லது அதற்கும் பிந்தியே வந்தான். அவனை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்வதற்கு எவரும் விரும்பி முன்வருவதில்லை. ஆனால் அங்கு வருபவர்கள் எல்லோருக்கும் விளையாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவரும் வெளிப்படையாக எதிர்ப்பதும் இல்லை. ஒரு நாள் சிட்டா ஏழு மணிக்கே வந்துவிட்டான். அங்கு நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். 'நான் இன்றிலிருந்து ஒரு ஸ்பைக்கர் ஆகப் போகின்றேன்........................' 'ஆகலாம் சிட்டா..............' 'நீங்களே அடிப்பதை பார்த்த பின் தான் எனக்கு ஒரு நம்பிக்கை.............. நீங்கள் அடிக்கும் போது நான் அடிக்க முடியாதா.............' உயரத்தையும், வயதையும் குறித்தே அதை அவன் சொல்லியிருக்கவேண்டும். அன்று நெட் கட்டுவதற்கும், எல்லைகளை போடுவதற்கும் ஓடியாடி உதவிசெய்தான். பின்னர் அடிப்பதற்கு ஆயத்தமாக வந்து நின்றான். 1, 2, 3 என்று மூன்று கால் அடிகள் ஓடி, மூன்றாவதில் பாய்ந்து, நெட்டிற்கு மேலே கையைச் சுற்றி நான் போடும் பந்தை அடிக்க வேண்டும் என்று சொன்னேன். முதல் முயற்சியில் பந்து அவன் கையில் படவேயில்லை. பந்து தலையின் பின்புறமாக விழுந்தது. இரண்டாவது முயற்சியில் அவன் பாய்ந்து எழும்பி மீண்டும் கீழே வந்து நின்று கொண்டு, ஒரு ஆளுக்கு அடிப்பது போல பந்தை அடித்தான். அது நெட்டின் கீழால் போனது. 'சிட்டா, நீ மேலேயே பந்தை சந்திக்க வேண்டும்....................' 'இன்னுமொரு தடவை போடுங்கள்................. இந்த தடவை பாருங்கள் என்னுடைய அடியை...............' 'சிட்டா, நீ குடித்திருக்கின்றியா.....................' அவன் கதைக்கும் போது மணம் வந்து கொண்டிருந்தது. 'ஆமாம்............... நான் எப்போதுமே குடித்து விட்டுத் தான் வருவேன்.............. ஏன், இங்கு விளையாடும் போது குடித்திருக்கக் கூடாதா................' 'அப்படியெல்லாம் ஒரு ஒழுங்குமுறை இங்கு இல்லை.............. ஆனால் உன்னால் சரியாகக் கவனிக்க முடியாமல் இருக்கும்............' எவ்வளவு குடித்திருந்தாலும் தன்னால் எப்போதும் விடயங்களில் கவனமாக இருக்க முடியும் என்று சொன்னான். தினமும் காலையிலேயே ஆரம்பித்து விடுவானாம் என்றான். எப்பொழுதும் காரிலும் இருக்கும் என்றான். இப்பொழுது எனக்கும் தரவா என்றும் கேட்டான். 'தினமுமா..................' 'ஆமாம்..............' 'ஈரல், உடல் பழுதாகிப் போகாதா..................' 'இல்லை........... அதற்கு நான் ஒரு கைமருந்து வைத்திருக்கின்றேன். சில மூலிகைகளை அவித்து, அந்தக் கஷாயத்தை தினமும் படுக்கைக்கு போக முன் குடிப்பேன். அது ஈரலையும், முழு உடலையும் சுத்தப்படுத்திவிடும்..................' இங்கு கோவிட் காலத்தில், வீட்டில் சுத்தமாக்க வைத்திருக்கும் குளோரெக்ஸ், லைசோல் போன்றவற்றில் கொஞ்சத்தை குடித்தால், உள்ளிருக்கும் கோவிட் வைரஸ் அழிந்து விடும் தானே என்று அன்று அதிபராக இருந்தவர் சொல்லியிருந்தார். அவர் தான் இப்போதும் மீண்டும் அமெரிக்காவின் அதிபர். சிட்டா சொன்னது அதை ஞாபகப்படுத்தியது. 'இதையெல்லாம் நீ ஏன் செய்ய வேண்டும், சிட்டா, ஓரளவாகப் போய்க் கொண்டிருக்க வேண்டியது தானே..................' 'இல்லை........... நான் ஒன்றை நிரூபித்துக் கொண்டிருக்கின்றேன்.................' 'என்ன அது.....................' 'இது ஒன்றும் கூடாத விடயம் அல்ல................ இதனால் உடலுக்கு ஒரு கேடும் இல்லை...........' 'யாருக்கு நிரூபிக்கின்றாய்..................' 'இந்த உலகத்துக்கு.........................' பலருக்கும் உலகமே ஒரு போட்டியாக அல்லது எதிரியாக தெரிகின்றது போல. இவர்கள் உலகம் என்று சொல்வது ஒரு நாலு மனிதர்களாக இருக்கலாம், நாற்பது மனிதர்களாக கூட இருக்கலாம். யார் என்றாலும் அவர்களுக்கு என்று சொந்த வேலைகளும், சிக்கல்களும் இருக்கும் தானே. யார், எதை நிரூபிக்கின்றார்கள் என்றா சகமனிதர்கள் இங்கே அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை தினமும் நியாயப்படுத்த முயல்வது பரிதாபமான ஒரு நிலையே. சிட்டா ஒரு ஸ்பைக்கர் ஆகவில்லை, ஆனால் தினமும் வந்து கொண்டேயிருந்தான். ஒரு நாள் விளையாடி முடிந்த பின் என்னுடன் தனியே கதைக்க வேண்டும் என்று கூட்டிச் சென்றான். இனிமேல் விளையாட வரமாட்டேன் என்று சொன்னான். யாராவது அவனை ஏதாவது சொல்லி அல்லது திட்டி விட்டார்களா என்று கேட்டேன். அவனின் நிறுவனம் அவனை அமெரிக்காவின் மேற்கு கரையில் இருந்து கிழக்கு கரைக்கு மாற்றுகின்றார்கள் என்று சொன்னான். குடும்பத்தை இங்கே விட்டுவிட்டு அவன் மட்டும் உடனடியாக தனியே அங்கே போவதாகச் சொன்னான். பின்னர் அந்த வருட பாடசாலை ஆண்டு முடிந்தவுடன் குடும்பமும் அங்கே வந்து விடுவார்கள் என்றான். சில கணங்கள் இறுக்கிப் பிடித்தபடி நின்றான். பின்னர் சடாரென்று ஒன்றுமே சொல்லாமல் அவனுடைய காரை நோக்கி நடந்தான். விளையாட்டுத் திடலில் இருந்த மின் விளக்குகள் ஏற்கனவே அணைக்கப்பட்டிருந்தன. கார்களின் தரிப்பிடத்தில் மட்டும் தெரு விளக்குகள் மஞ்சள் நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. அவனுடைய காரைத் திறந்த சிட்டா ஒரு கணம் அங்கிருந்து என்னைப் பார்த்தான். அவனுடைய கண்கள் மினுமினுத்தன. பல வருடங்களின் முன் இங்கு மிகப் பிரபலமான ஒரு தொழில்முறை கூடப்பந்தாட்ட வீரர் பார்வையாளர் ஒருவரை அடித்துவிட்டார். அந்தப் பார்வையாளர் தான் வீரரை மிகவும் தகாத வார்த்தைகளாள் சீண்டியிருந்தார். மிகவும் முன்கோபியான அந்த வீரரால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இங்கு தொழில்முறை வீரர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமானவை. அந்த வீரரை ஒரு வருடம் விளையாட்டுகளில் இருந்து இடைநிறுத்தினார்கள். அந்த வருடக் கொடுப்பனவும் இல்லாமல். அது ஒரு 20 அல்லது 30 மில்லியன் டாலர்கள் வரும். அது பெரிய செய்தியானது. அந்த வீரரின் பாடசாலை நாட்களில் அவருடைய பயிற்றுவிப்பாளராக இருந்தவரிடம் ஒரு பேட்டி எடுத்தார்கள். அவர் இப்படிச் சொல்லியிருந்தார் - நான் தினமும் செய்திகளைப் பார்க்க ஆரம்பிக்கும் முன் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன். இந்த வீரன் நேற்றிரவு துப்பாக்கியால் யாரையோ சுட்டான் என்ற செய்தி இருக்கவே கூடாது என்று தினமும் வேண்டிக் கொள்வேன் என்றார். சிட்டா இங்கிருந்து போன பின் அவனுடன் எந்த விதமான தொடர்புகளும் இல்லாமல் போனது. சிட்டாவைப் பற்றிய தகவல்கள் எதுவும் என்னை வந்தடையவே கூடாது என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன்.