நண்பர்களே, 2021 செப்டம்பர் மாதம் என் வாழ்க்கை ஒரு கணநேரத்தில் தகர்ந்து போனது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அன்று ஒரு பயங்கரமான நோயைக் கண்டறிவதாக மாறியது. Acute Lymphoblastic Leukaemia (ALL) எனும் இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவராகிய நான் உண்மையை அறிந்திருந்தேன்: Donor (தானமளிப்பவர்) ஒருவரிடமிருந்து Stem cell transplant சிகிச்சை இல்லாமல் முழு குணமடைவது கடினம். என் சகோதரரும் குடும்பத்தினரும் உடனடியாக சோதனை செய்து கொண்டனர், ஆனால் யாரும் முழு பொருத்தமாக இல்லை. அதிக அளவு chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சைகள் பழுதடைந்த என் bone marrow களை முற்றிலுமாக அழித்தே விடும். பிறகு Stem cell சிகிச்சை மூலமாக முழுமையாக குணமடைய முடியும். Stem cells (ஸ்டெம் செல்கள்) என்பது உடலின் “ஆரம்ப நிலை செல்கள்”. இவை எந்த விதமான செல்களாகவும் (ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு செல்கள், திசு செல்கள்…) மாறும் திறன் கொண்டவை. பொருத்தமான donor ஒருவரிடமிருந்து என்னுடலில் பொருந்தத்தக்க Stem cells களிற்காக காத்திருந்த ஒவ்வொரு நாளும் மரணத்தின் விளிம்பை அண்மித்துக் கொண்டிருத்ததை நன்றாகவே உணர்ந்தேன். நம்பிக்கை உலகளாவிய தானமளிப்பவர் பட்டியல் (Donor registry) -களுக்கு திரும்பியது. பொதுவாக பொருத்தம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் கிடைக்கும். நான் ஒரு இலங்கைத் தமிழர். Donor registry-களில் எமது சமூகம் மிகக் குறைவாகவே பதிவு செய்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும், பழங்குடி மக்களுக்கும் இதே கசப்பான உண்மை தான்: donor-கள் மிகக் குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பல உயிர்கள் தவிக்கின்றன. வாரங்கள் ஊர்ந்தன. பின்பு 2021 இறுதியில், ஒரு 100% பொருத்தம்! அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அந்நியப் பெண்மணி, பல வருடங்களுக்கு முன்பே registry-யில் பதிவு செய்திருந்தார். அவரது இரத்த HLA எனும் மரபணுக்கள் என்னுடையவற்றின் சரியான பிரதிபலிப்பு. எனது குடும்பத்திற்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் மீளவும் கொண்டு வந்தது. தயக்கமின்றி அவர் ஒப்புக் கொண்டார். தானம் செய்வது? ரத்தம் கொடுப்பது போலத்தான் எளிமையானது. சில நாட்கள் ஊசி போட்டு stem cell-களை அதிகரித்து, பின்பு மருத்துவமனையில் ஒரு நாள் செலவழித்து இரத்தத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பெரும்பாலான donor-கள் ஒன்று இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள் - சற்று சோர்வு மட்டுமே. ஆனால் இந்த தானம், நோயாளிக்கு அவர்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும். Registry-யில் சேர்வது மிக எளிமை: ஒரு கன்னத்துச் சோதனை (cheek swab), வாய் உட்புறக் கன்னத்தைத் துடைத்து DNA சேகரிக்கும் முறை மட்டுமே. பல வருடங்கள் அல்லது பல தசாப்தங்களுக்குப் பிறகு கூட நீங்கள் யாருக்காவது பொருத்தம் ஆகலாம். அப்போதுதான் உண்மையான உறுதிப்பாடு தேவைப்படும். மார்ச் 2022: நான்கு விலைமதிப்பற்ற பைகளில் அவரது stem cell-கள் என்னிடம் வந்து சேர்ந்தன. திரவ வடிவிலான புதிய உயிர். என் நரம்புகளில் செலுத்தப்பட்டு, மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தன. குணமடைவது மிக மெதுவாக இருந்தது - தொற்று நோய்களும் பின்னடைவுகளும் நடந்தன. இன்று 2025: நான் என் குடும்பத்திடமும், வேலையிடத்திலும், வாழ்க்கையிலும் மீண்டும் அடியெடுத்து வைத்தேன். என் donor-க்கு தைரியமும், நேரமும், இதயமும் தேவைப்பட்டது. ஆனால் எனது உயிரைக் காப்பாற்றிய அந்த உன்னத ஜீவன் யார்? விதிகள் காரணமாக பல வருடங்கள் அவர் அடையாளம் மறைக்கப்பட்டு வைத்திருக்கும். 2025-ல் ஒஸ்ரேலியாவில் நடந்த ஒரு தொண்டு நிகழ்ச்சியில் திருப்பம்: ஒரு பெண்மணி என் நண்பரிடம் வந்து, “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் stem cell தானம் செய்தேன். எனது பெறுபவர் எனது வயதுடையவர், என் இனத்தைச் சேர்ந்தவர், ஒஸ்ரேலியாவில் வசிப்பவர் என்று மட்டும் கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார். நண்பர் அதிர்ச்சி அடைந்தார். விவரங்கள் அனைத்தும் பொருந்தின. தேதிகள், இரத்த வகை, கால அட்டவணை - எல்லாம் பொருந்தியது! இருவரது சம்மதத்துடன் என் நண்பர் எங்களை இணைத்தார். அந்த பெண் 2008-ல் அவரது 4 வயது மருமகனுக்கு stem cell transplant தேவைப்பட்டபோது registry-யில் சேர்ந்திருந்தார். எல்லா முயற்சிகளையும் செய்தும், அந்தக் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. 14 வருடங்கள் கழித்து அழைப்பு வந்தது - வேறொருவருக்கு அவர் stem cells பொருத்தம். நாங்கள் சந்தித்தோம். அணைத்துக் கொண்டோம். கண்ணீர் வழிந்தது. எனக்கு உயிர் கொடுத்த கையை இறுதியாகப் பிடித்தேன். சகோதர-சகோதரி சந்திப்பது போல இருந்தது. தன்னலமற்ற தானம் காரணமாக பிறந்த, தற்செயலால் இணைந்த, அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட பிணைப்பு. பிரியும்போது அவர் சொன்னது: “பின்னால் திரும்பிப் பார்க்காதே. மகிழ்ச்சியோடு எதிர்காலத்தை பார்.” ஒரு தாய் மகனிடம் சொல்வது போல இருந்தது. இது என் வாழ்க்கையின் அதிசயம் மட்டுமல்ல - இது அனைவருக்கும் அழைப்பு. ஒரு cheek swab-ஆல் அவர் என் உயிரைக் காப்பாற்றினார். நீங்களும் வேறொருவர் உயிர் காப்பாற்றுவீர்களா? ஒரு கன்னத்துச் சோதனை மட்டுமே போதும் registry-யில் சேர. பல வருடங்கள் கழித்து கூட நீங்கள் யாருடைய உயிரையாவது காப்பாற்றலாம். Stem cell தானத்தில் இனப் பொருத்தம் அரிது. நம் விழிப்புணர்வே சக்தி. யாரோ ஒரு நபர் வாழ்க்கை கதையில் நாயகி அல்லது நாயகனாகுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள். • US: nmdp.org • Australia: stemcelldonors.org.au • Canada: blood.ca/en/stemcells • UK: blood.co.uk/stem-cell-donor-registry/ • France: dondemoelleosseuse.fr • Germany: dkms.de • Sri Lanka: praana.lk • India: datri.org இந்த கதை - என் தானமளிப்பவரின் மருமகனுக்கு சமர்ப்பணம். அந்தக் குழந்தை விட்டுச் சென்ற நினைவு - என்றென்றும் நம்பிக்கையாக வாழ்கிறது. :J, Australia.