Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    6120
  • Joined

  • Last visited

  • Days Won

    68

Everything posted by Justin

  1. திரும்பும் வரலாறு- பாகம் 6 அதிரடி (Blitzkrieg) எனப்படும் துரித இராணுவ நுட்பம் மூலம், நாசிகள் சடுதியாக பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து, போலந்தையும் ஆக்கிரமித்து விட்டமையைப் பார்த்தோம். லண்டன் உட்பட்ட இங்கிலாந்து நகரங்கள் மீது, எட்டு மாதங்கள் நிகழ்ந்த நாசிகளின் கொடூர விமானக் குண்டுத் தாக்குதல்களால் பிரிட்டனை அடிபணிய வைக்க இயலவில்லை. மாறாக பிரிட்டனின் நாசிகளுக்கெதிரான நிலைப்பாடு உறுதி பெற்றது, ஏனைய நாடுகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள பிரிட்டன் உழைத்தது. இந்த உழைப்பிற்கு சேர்ச்சிலின் தலைமை வழிகாட்டும் துடுப்பாக இருந்தாலும், உழைப்பின் இயந்திரங்களாக இருந்த இரு தரப்பினர் பற்றிப் பார்க்கலாம்! பிரித்தானிய மக்களின் ஓர்மம் மக்கள் மயப்படுத்தப் படாத எந்த இராணுவ முயற்சியும் தோல்வியில் முடியுமென்பது வரலாற்றில் மீள மீள நிரூபிக்கப் பட்ட ஒரு கோட்பாடு. இதை ஆரம்பத்திலேயே வரலாற்றின் மாணவனான சேர்ச்சில் உணர்ந்து கொண்டதன் விளைவே பிரித்தானிய மக்களை இயலுமான வழிகளில் நாசி எதிர்ப்பு யுத்தத்தில் பங்களிக்க நடவடிக்கைகளை எடுத்தது. இந்த மக்கள் பங்களிப்பின் முதல் வடிவமாக, பிரித்தானியர்கள் நாசிகளின் கொடூரத் தாக்குதல்களை ஓர்மத்தோடு தாங்கிக் கொண்டனர். ஏனெனில், போருக்குப் பின் கைப்பற்றப் பட்ட கோயபல்சின் நாட்குறிப்புகளின் படி, நாசி விமானத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் பிரித்தானிய மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கி, பிரித்தானிய அரசின் மீது வெறுப்பேற்றுவதாகவே இருந்திருக்கிறது. இதனால், சேர்ச்சில் மீது எதிர்க்கட்சிகளே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சேர்ச்சிலை அகற்றி விட, நாசிகளுக்கு பிரிட்டனில் செங்கம்பளம் விரிக்கப் படும் என்று கோயபல்சே நம்பியிருக்கிறாரெனத் தெரிகிறது. இந்த நாசிக் கனவில் முதல் மண்ணை பிரித்தானிய மக்களே போட்டனர். ஏராளமான வதந்திகள், பொய் செய்திகள் கோயபல்சின் கட்டுப் பாட்டிலிருந்த ஆங்கில மொழி மூல வானொலிகள் மூலமும், ஐந்தாம் படையினர் மூலமும் பிரித்தானிய மக்களிடையே பரப்பப் பட்டாலும், எவையும் எதிர் பார்த்த மறை விளைவைத் தரவில்லை. இது எப்படிச் சாத்தியமானது? சேர்ச்சிலின் நிர்வாகம், மக்களைத் தம் பக்கம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பிரான்ஸ் வீழ்வதற்கு முன்னரே உணர்ந்து சில திட்டங்களைச் செயல்படுத்தியது ஒரு காரணம். உதாரணமாக, பிரித்தானிய மக்களிடையே சில ஆயிரம் தொண்டர்களைக் தேர்த்தெடுத்து, அவர்களுக்கு மக்களின் உணர்வுகளைக் கிரமமாகப் பதிவு செய்யும் பணி வழங்கப் பட்டது. Mass observation diary என்று அழைக்கப் பட்ட இந்தத் திட்டம் மூலம், பிரித்தானிய மக்களின் நாடித் துடிப்பை பிரித்தானியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு துல்லியமாகக் கணித்து வந்தது. இதனை நவீன அரசுகள் தற்போது நடைமுறைப்படுத்தும் ஒட்டுக் கேட்டு உளவறியும் முயற்சியாகப் பார்க்க முடியாது. ஏனெனில், இந்த மக்கள் குறிப்புகள் மூலம் தனி நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப் பட்ட நிகழ்வுகள் நடக்கவில்லை. மாறாக, மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறுவதற்கு முன்னரே அவற்றை இனங்கண்டு தீர்வுகளை வழங்கி விடும் நோக்கமே இந்தப் பாரிய முயற்சியின் நோக்கமாக இருந்தது. உதாரணமாக, லண்டன் நகர வாசிகள் தினசரி இரவு நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து தப்ப நிலக்கீழ் காப்பிடங்களுக்குச் சென்று விடுவர். ஆரம்பத்தில் அடிப்படை வசதிகள் அற்றிருந்த இந்தக் காப்பிடங்களை, அரச நிர்வாகம் ஒரு சீரான தரத்தில் வைத்திருக்கும் விதிகளை உருவாக்கி, மக்களின் இரவு வாழ்க்கையை இலகுவாக்கியது. இதன் விளைவுகள் அபாரமாக இருந்தன: லண்டன் வாசிகள் இரவை நிலக்கீழ் காப்பிடங்களில் கழித்து விட்டு, காலையில் வழமை போல தங்கள் தொழில்களைப் பார்க்கச் செல்லும் அளவுக்கு பிரித்தானிய மக்களின் நாளாந்த வாழ்க்கை சாதாரணமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஏராளமான பிரித்தானிய மக்கள் வெறுமனே பலியாடுகளாக இருக்காமல் தொண்டர்களாக நாசி எதிர்ப்புப் போர் முயற்சியில் இறங்கினர். நாசிகளின் இரவு நேரத் தாக்குதல்களில், நாசிகளுக்கேயுரித்தான குரூர நுட்பங்கள் பல இருந்தன. ஒவ்வொரு தாக்குதல் விமான அணிக்கும், முன்னணியாக இலக்குகளை அடையாளம் காணும் விசேட விமானங்கள் வரும். இந்த விசேட விமானங்கள் இலக்குகள் மீது எரி குண்டுகளை (incendiaries) வீசி, அந்த இலக்குகளை பிரகாசமாக எரியவைக்கும். பின் தொடரும் தாக்குதல் விமானங்கள், எரியும் இலக்குகள் மீது தங்கள் குண்டுகளை வீசும். எனவே, தீயணைப்புத் தொண்டர்கள் எரியும் இலக்குகளை அணைக்கும் வேலை முக்கியமான ஒரு பணியாக இருந்தது. இதனை, உயிராபத்திற்கு மத்தியிலும் சாதாரண தீயணைப்புத் தொண்டர்கள் செய்தனர், உயிரையும் கொடுத்தனர். இன்னொரு குரூர நுட்பமாக, நாசிகள் நேரங்கழித்து வெடிக்கும் குண்டுகளையும் வீசினர். உடனடியாக வெடிக்காத இந்தக் குண்டுகள், மீட்புப் பணியில் ஈடுபடும் மக்களைக் குறி வைத்து வீசப்பட்ட தாமதித்து வெடிக்கும் (delayed fuse) குண்டுகள். இந்தக் குண்டுகளாலும் ஏராளமான பிரித்தானிய போர் முயற்சித் தொண்டர்கள் பலியாகினர். ஆனால், பிரித்தானிய மக்கள் ஒவ்வொரு தாக்குதல் இரவின் பின்னரும் பிரித்தானியாவை நாசிகள் ஆழ அனுமதித்தால் என்ன நிகழும் என்ற எச்சரிக்கையை ஆழமாக உணர்ந்து கொண்டதால், எட்டு மாத நரகத்தினூடாக நடந்த படியே இருந்தனர். இந்த இடத்தில், சமகால நிகழ்வுகளில் உக்ரைன் மக்களின் உணர்வுகளுக்கும், போரை வெளியே இருந்து பார்க்கும் ஏனைய மக்களின் உணர்வுகளுக்குமிடையிலான இடைவெளியை நாம் நினைவிற் கொள்வது பொருத்தமாக இருக்கும். உக்ரைனியர்களைப் பொறுத்த வரையில், ஒரு முழு ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின் விளைவுகளை உணர்ந்தமை, அவர்கள் போரில் முழுப்பங்காளிகளாக மாற வழி வகுத்திருக்கிறது - அவர்களைப் பொறுத்த வரை தெரிவு ஒன்றே ஒன்று தான்! பார்வையாளர்களாக இருக்கும் மக்களில் சிலருக்கோ, இத் தெரிவு முட்டாள் தனமாகத் தெரிகிறது. இது அனுபவங்கள், மற்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை அறியாமை காரணமாக எழுந்த ஒரு இடை வெளி. அலன் ரூறிங்கும் விஞ்ஞானிகளும் பிரித்தானியாவை நாசிகளின் தாக்குதல்கள் சுருள வைக்காமல் காத்த இரண்டாவது பெரிய சக்தி தொழில்நுட்பம். பிரித்தானியா, வரலாற்று ரீதியாக ஒரு தொழில்நுட்ப முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா எதையும் பிரமாண்டமாக (பல சமயங்களில் காரணமில்லாமல்) செய்யும். ஆனால், பிரித்தானியா பிரமாண்டத்தை விட, செயல் திறனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் - இது பல விடயங்களில் அவதானிக்கக் கூடிய ஒரு இயல்பு. இதே தொழில்நுட்ப மேன்மையை, பிரித்தானியாவின் நாசி எதிர்ப்பு யுத்தத்திலும் பயன்படுத்தினார்கள். இது ஒரு பாரிய குழு முயற்சியாக இருந்தாலும், பின்னணியில் இருந்து பணியாற்றியவர்களில் கணிதவியலாளரான அலன் ரூறிங் (Alan Turing) முக்கியமானவர். அலன் ரூறிங்கின் முக்கியத்துவம் அறிவதற்கு, நாம் ஜேர்மனியின் இரகசிய செய்தித் தொடர்பு இயந்திரமான "எனிக்மா" இயந்திரம் பற்றிச் சிறிது பார்க்க வேண்டும் எனிக்மா எனும் "சிதம்பர சக்கரம்" நாசிகளின் பயன்பாட்டிலிருந்த ஒரு எனிக்மா இயந்திரம். பட உதவி: நன்றியுடன் சைமன் சிங் இணையத்தள விம்ப சேகரிப்பு. இரண்டாம் உலகப் போர் காலத்தில் வானலைகள் வழியாக மோர்ஸ் சமிக்ஞை (Morse code) மூலமே இராணுவத் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்த மோர்ஸ் சமிக்ஞையை யாரும் இடை மறித்துக் கேட்க முடியும். எனவே, சங்கேத மொழியொன்றை உருவாக்கும் முயற்சியாக ஜேர்மனியர்கள் எனிக்மா (Enigma) எனும் இயந்திரத்தை போர் ஆரம்பிக்க முன்னரே தயாரித்தார்கள். சம்பந்தமில்லாத சொற்களை சங்கேதக் குறிகளாகப் பயன்படுத்தும் முறையை மாற்றி, ஆங்கில மொழியின் 26 எழுத்துகளில் ஒவ்வொன்றும் வேறொரு ஆங்கில எழுத்தாக (cypher) இந்த எனிக்மா இயந்திரத்தால் மாற்றப் படும். மாற்றப் பட்ட தகவல் சாதாரண கண்களுக்கு அர்த்தமற்ற எழுத்துக் கூழாகத் (Alphabetic soup) தெரியும். ஆனால், மோர்ஸ் கோட் மூலம் இந்த எழுத்துக் கூழ் அனுப்பப் படும் இடத்தில் இருக்கும் ஒருவரிடம், இந்த எனிக்மா இயந்திரத்தின் எழுத்துக் கூழை, உண்மையான சொற்களாக மாற்றிக் கொள்ளும் குறியீட்டு வழிகாட்டி (code) இருக்கும். இத்தகைய இரகசிய நீக்கம் (decryption) செய்வதற்கும், ஒரு எனிக்மா இயந்திரத்தைப் பயனபடுத்திக் கொள்ளலாம். எனிக்மா இயந்திரத்தின் கட்டுமானத்தைச் சிக்கலாக்குவதன் மூலம், இதன் மூலம் உருவாக்கப் படும் செய்திகளை எனிக்மாவின் உதவியின்றி ஒருவர் இரகசிய நீக்கம் செய்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை “பில்லியனில் ஒன்று” என்ற அளவுக்குக் குறைக்க முடியும். ஆனால், எனிக்மாவுக்கும் ஆப்பு வைக்கும் சில குறைபாடுகள் இருந்தன: ஒரு எனிக்மா இயந்திரத்தைக் கைப்பற்றினாலோ அல்லது எனிக்மா குறியீட்டுப் புத்தகத்தைக் கைப்பற்றினாலோ இதன் இரகசிய நீக்கம் சாத்தியமாகி விடும். பிரித்தானியா இந்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னரே, போலந்து விஞ்ஞானிகள் எனிக்மாவை உடைக்கும் முயற்சியை ஆரம்பித்தார்கள். இரகசியமாக போலந்து இராணுவக் கட்டமைப்பினருக்குக் கிடைத்த ஒரு எனிக்மா இயந்திரத்தை ஆராய்ந்து, தாங்களே ஒரு எனிக்மா இயந்திரத்தை போலந்து இராணுவம் வடிவமைத்தது. சில கணிதவியலாளர்களைப் பணியில் அமர்த்தி, சில ஜேர்மன் செய்திப் பரிமாற்றங்களையும் ஆராய்ந்து எனிக்மா செய்திகளை இரகசிய நீக்கம் செய்வதில் ஒரளவு வெற்றியும் கண்டார்கள். ஆனால், நாசிகள் தங்கள் மிக அடிப்படையான எனிக்மா இயந்திரத்தை மேலும் சிக்கலானதாக மாற்றி, தங்களது இரகசிய குறியீட்டுப் புத்தகத்தையும் தினசரி மாற்ற ஆரம்பித்த போது, போலந்தின் முயற்சிகள் முன்னேற முடியாமல் முடங்கின. ப்ளெட்ச்லி பார்க்- Bletchley Park ப்ளெட்ச்லி பார்க் அருங்காட்சியகத்தில் அலன் ரூறிங்கின் சிலை. 2011, யூலை 15, அரசி இரண்டாம் எலிசபெத்தினால் ப்ளெட்ச்லி பார்க் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப் பட்டது. பட உதவி: நன்றியுடன், பிரித்தானிய தேசிய ஆவணக்காப்பகம். போலந்து, போர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்கள் முன்னர் தனது எனிக்மா இயந்திரம் மீதான முயற்சிகளை பிரிட்டனிடமும், பிரான்சிடமும் பகிர்ந்து கொண்டது. போலந்து வீழந்த பின்னர், போலந்தில் இருந்த எனிக்மா இயந்திரங்களில் ஒன்று பிரிட்டனின் உளவுத் துறையிடம் வந்து சேர்ந்தது. இது மட்டுமல்லாமல், பின்னர் நோர்வேயில் குறுகிய காலம் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுப், பின்வாங்கிய போதும் நாசிகளிடமிருந்து எனிக்மா இயந்திரமும், குறியீட்டுப் புத்தகங்களும் கைப்பற்றப் பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இந்த ஆரம்ப முதலீட்டை வைத்துக் கொண்டு எனிக்மாவின் இரகசியங்களை உடைக்கும் மிக ஆரம்ப காலக் கணணியை வடிவமைத்தவர் தான் அலன் ரூறிங். பற்சக்கரங்களும், மின் விளக்குகளும் கொண்ட இந்தப் பாரிய இயந்திரத்தை இன்று ப்ளெட்ச்லி பார்க் எனப் படும் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணலாம். சிக்கலான எனிக்மா இயந்திரத்தின் தகவல்களை, கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகி இரகசியம் நீக்கும் வேலையை இந்த ஆரம்ப காலக் கணனி செய்ததால், பல லட்சம் உயிர்கள் காக்கப் பட்டன. பிரிட்டன் உட்பட, போரில் நாசிகளை எதிர்த்த நேச அணியின் வெற்றியும் இதனால் உறுதி செய்யப் பட்டது. ப்ளெட்ச்லி பார்க் என்ற மாளிகையின், நிலவறையில் நடந்த இந்த முயற்சிகள் அதி உயர் இரகசியமாகப் பேணப்பட்டதால், நாசிகளுக்கு போர் முடியும் வரை தங்கள் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக் கேட்கப் படுவது தெரிய வரவில்லை. அதே நேரம், இந்த அரிய பணியைச் செய்த அலன் ரூறிங்கின் பெயரும் அப்போது வெளியே தெரியவரவில்லை. இந்தப் பிரபலமின்மையின் ஒரு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளராக இருந்த அலன் ரூறிங்கை பிரித்தானிய அரசு ஆண்மை நீக்க மருந்துகள் மூலம் குணமாக்க முயன்றதும், அந்த மருந்தின் பக்க விளவினால் அவர் தற்கொலை செய்து கொண்டதும், பெரிதாகப் பேசப் படவில்லை. ஓரினச் சேர்க்கையாளராக நீதிமன்றினால் தண்டிக்கப் பட்ட அலன் ரூறிங்கை, அவாது மரணத்திற்குப் பின்னர் மிக அண்மையில் பகிரங்கமாக அந்தக் குற்றச் சாட்டிலிருந்து விடுவித்தது பிரித்தானிய அரசு. - தொடரும்
  2. பிபிசிக்குப் போட்டியாக வரும் எண்ணமில்லையென்றாலும் 2003 இல் (20 வருடங்கள் முன்பு தான், 200 வருடங்கள் முன்பல்ல!) நடந்த சம்பவங்களை நினைவிலிருந்தும் செய்திகளின் படியும் சொல்வதில் தவறில்லை. அப்படிச் சொல்லாவிட்டால் "நேட்டோ ஈராக்கின் மீது படையெடுத்தது" என்று ரிக்ரொக் பார்த்து வரலாறு படிக்கும் பேர்வழிகள் சொல்வதை நம்ப வேண்டி வரும்!😎 ஈராக் மீது புஷ் குழுவின் படையெடுப்பை எதிர்த்தது அமெரிக்க, பிரிட்டன் மக்கள் மட்டுமல்ல . பிரான்ஸும் ஜேர்மனியும் வெளிப்படையாகவே இதை எதிர்த்தன. இதனால் சினமடைந்த அமெரிக்கப் படைத்துறையினர், ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படையினருக்கு அனுப்பும் உணவில் இருந்த French fries ஐ , "Freedom fries" என்று பெயர் மாற்றி அழைத்தனர்.
  3. ஏராளன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் பிரார்த்தனைகளும்!
  4. பாராட்டுக்கள், கறி நல்லா இருக்கு! இதை மீன் "தொப்புள்" கறியென்றே நானும் ஊரில் ரசித்துச் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால், மீனுக்கு தொப்பூள் கிடையாது அது முட்டையிலிருந்து வருவதால்!😂 இந்த சுவையான பகுதி, சில மீன்களில் இரைப்பைக்கு முன்னால் இருக்கும் அரைக்கும் பகுதி. இதை gizzard என்பார்கள். கோழிகளிலும் கிசார்ட் இருக்கிறது, இதே போல தசைப்பிடிப்பாகவும் சுவையாகவும் இருக்கும்!
  5. முகப்புத் தோற்றம் புத்துணர்வாக இருக்கிறது. நன்றிகள்! பி.கு: அதிகம் "நலமோடு நாம் வாழ" பகுதியில் கட்டுரைகள் இணைக்கும் ஏராளன், அந்தப் பகுதியை முகப்பில் தெரியக் கூடியவாறு செய்ய முடியுமாவென சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். இன்னும் நடக்கவில்லையென நினைக்கிறேன்.
  6. ☝️மேலே மெனக்கெட்டு எழுதியிருக்கிறேனே பையன்? வாசிக்கவில்லையோ?
  7. பேரழிவு ஆயுதங்கள் சதாமிடம் இருப்பதாக அமெரிக்காவும், பிரிட்டனும் பொய் சொன்னது இதற்காகத் தான். அணு ஆயுதம் தயாரிக்க முற்படுகிறார்கள் என்றிருந்தால், அமெரிக்கா போயிருக்க முடியாது. சர்வதேச நடைமுறைப்படி அணுவாயுத கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) போய் பரிசோதித்திருக்க வேண்டும். ஏற்கனவே 2003 ஜனவரியில் இப்படியான ஒரு பரிசோதனையை பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின் படி பூர்த்தி செய்து அணுவாயுத முயற்சிகள் இல்லையென IAEA முடிவு செய்து விட்டது. எனவே தான் இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் இருப்பதாகப் பொய் சொன்னார்கள். குர்திஷ் மக்கள் மீது 1988 இல் சதாமின் படைகள் நடத்திய சரின் (sarin) இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தியிருந்தமையால் (இதில் இது வரை இறந்தோரின் எண்ணிக்கை 12,000 மேல்) இதைச் சிலர் நம்பினர். எனவே, சதாமின் இரத்தக் கறை படிந்த வரலாறும் சேர்ந்து தான் அமெரிக்க, பிரிட்டன் அரசுகளின் பொய்க்குப் பலம் சேர்த்து அவருக்கு ஆப்பு வைத்தது. பி.கு: சிரியாவுக்கு ஈராக்கின் அணுவாயுதம் போகவில்லை. ஆனால், 2013 இல் சரின், மஸ்ரார்ட் gas தாக்குதலை சிரியாவின் படைகளும் மக்கள் மீது நடாத்தின. 1000 பேர், பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள் டமாஸ்கசில், இதனால் இறந்தனர்.
  8. கவனம்! "மேற்கு ஜேர்மனியில் வாழப் பிடிக்காமல், கிழக்கின் வசந்தத்தை நாடிப் போக முற்பட்ட மேற்கு ஜேர்மன் மக்கள் தான் பேர்லின் சுவரை உடைத்தார்கள்" என்று நம்புவோர் இங்கு இருக்கக் கூடும்! 😂
  9. ஐலண்ட், ஆம், பெரும்பாலானோரில் மருந்தை நிறுத்த முடியும், ஆனால் சில நிபந்தனைகள் இருக்கின்றன. கொலஸ்திரோல் - அதுவும் LDL கொலஸ்திரோல் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும் போது தான் சில வகையான கொலஸ்திரோல் குறைப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பர். அதைப் பரிந்துரைக்கும் போதே, உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும் அறிவுரையும் வழங்கப் படும். வருடாந்தம் இரத்தம் பரிசோதித்து, மருத்துவருடன் ஆலோசித்து கொலஸ்திரோல் குறைப்பு மருந்தைக் குறைப்பதா, முற்றாகக் கைவிட்டுப் பார்ப்பதா என்று தீர்மானிக்க முடியும். மருத்துவர் இந்த முடிவை எடுக்க, இரத்தக் கொலஸ்திரோலின் அளவோடு, உங்கள் ஏனைய நோய்கள் (நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்றன), உடல் பருமன், குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் உண்டா போன்ற காரணிகளையும் கவனத்திலெடுப்பர். எனவே, இது மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு முடிவு. வெகு சிலருக்கு (~300 பேரில் ஒருவர்) குறிப்பிட்ட ஜீன்களின் குறைபாடு காரணமாக கொலஸ்திரோல் அதிகரிக்கும். இவர்கள் தொடர்ந்து கொலஸ்திரோல் குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
  10. உண்மை தான் ஏராளன். இலங்கை போன்ற வளங்கள் குறைந்த நாடுகளில் பல சவால்கள் உண்டு. ஆனால், மருந்தே இல்லாத ஒரு நோயைத் தடுக்க கட்டாக்காலி நாய்கள் கட்டுப்பாடே ஒரே வழியென மக்கள் உணர்ந்தால் இருக்கும் வளங்களை வைத்தே வேலை செய்யலாம்: 1. கட்டாக்காலி நாய்களை பிடிக்கவோ, வைத்துப் பராமரிக்கவோ இயலாவிட்டால், முற்காலத்தில் செய்தது போல நகரசபைகள் பிடித்துச் சென்று அழிக்க அனுமதிக்க வேண்டும். ஆனாலும், கொடுமையான நஞ்சான strychnine மூலம் கொல்லாமல் மயக்க மருந்துகள் பாவிக்க வேண்டும். 2. அமெரிக்காவில் காட்டு விலங்குகள் (raccoon, fox, coyote) தான் றேபிஸ் பரப்பும் பிரதான மூலங்கள். அவற்றிற்கு வாய் வழியாக இறைச்சியினுள் மறைத்து வைத்துக் கொடுக்கும் றேபிஸ் தடுப்பு மருந்து பல ஆண்டுகளாக இங்கே பயன்பாட்டில் இருக்கின்றது, நன்கு பயன் தருகிறது. இதை ஏன் இலங்கையில் கட்டாக்காலி நாய்களில் பயன்படுத்துவதில்லையெனத் தெரியவில்லை. 3. வளர்ப்பு நாய்களில் றேபிஸ் தடுப்பூசியை முழுமையாகப் பயன்படுத்துவதும் மனிதர்களுக்கு றேபிஸ் தொற்றாமல் பெருமளவு காக்கும். எனவே, கட்டாக்காலி நாய்களுக்கு எதுவும் செய்ய முடியா விட்டாலும், இதை வீட்டு நாய்களில் தொடர வேண்டும்.
  11. இத்தகைய சிறிதளவான குறைவு ஆரோக்கியமான ஒருவரில் சோடியம் குறைவாகக் கருதப் படுவதில்லை. 136 - 145 mmol/L தான் சாதாரண அளவு. இரத்தம் எடுக்க முன்னர் நீங்கள் தண்ணீரை அதிகம் குடித்து விட்டுப் போயிருந்தால் இப்படி சோடியம் குறைவாகக் காட்டியிருக்கலாம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் விளைவுகள் இருக்காது. ஆனால், கால் வீக்கம் (நீர் தேங்குதல்), சீரியசான, நாள்பட்ட இதய நோய் போன்ற தெளிவாகத் தெரியக் கூடிய அறிகுறிகள் இருந்தால் குறைவான இரத்த சோடியம் பற்றி மருத்துவர் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்.
  12. 1.கடைச் சாப்பாடு 2. அதிகம் பதப்படுத்தப் பட்ட துரித உணவுகள் இவற்றோடு ... 3. வெளிநாடுகளில் எங்கள் ஆட்களின் விருந்துகளில் பரிமாறப் படும் "உப்பு, காரம், புளி" நிரம்பிய உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தாலே உப்பின் அளவைப் பெருமளவு குறைத்து விடலாம்!
  13. கட்டாக்காலி நாய்களால் உணவுச் சுகாதார, போக்குவரத்துப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் ஒரு சீரியசான உயிர்கொல்லிப் பிரச்சினையும் இருக்கிறது: றேபிஸ் எனப்படும் விசர்நாய்கடி நோய். ஒரு தீவான இலங்கையில், மக்கள் ஒத்துழைத்தால் றேபிஸ் நோயை முற்றாக ஒழிக்க முடியும், ஆனால் இன்னும் ஒவ்வொரு ஆண்டும் 150 பேர் வரை றேபிஸ் நோயினால் இலங்கையில் இறக்கின்றனர். இலங்கையில் றேபிஸ் மனிதர்களுக்குத் தொற்றும் முதன்மையான மூலமாக நாய்கள் இருக்கின்றன. எனவே, ஒன்று வலியில்லாமல் கொல்ல வேண்டும் அல்லது 75% வீதமான நாய்களுக்கு கிரமமாக றேபிஸ் தடுப்பூசி போட்டுப் பாதுகாக்க வேண்டும். அத்தோடு மேலதிகமாக பெண், ஆண் நாய்களுக்கு கருத்தடைச் சத்திர சிகிச்சையும் செய்து விட வேண்டும்.
  14. ஜொனியன்களுக்கு வாழ்த்துக்கள்! யாழ் மத்திய கல்லூரியினருக்கு, யாழ் இந்துவோடும் (+சுண்டுக் குழி மகளிரோடும்☺️) இருக்கும் அந்நியோன்னியம் ஏனோ பரி யோவான் பெடியளோடு இருப்பதில்லை! மத்திய கல்லூரியில் படித்த 12 ஆண்டுகளில், ஒரேயொரு தடவை தான் பரி யோவான் கல்லூரியினுள் நான் சென்றிருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில் பரி யோவான் முதல்வராக (Rector) இருந்த வண. நேசகுமார் செல்லையா யாழ்.மத்திய கல்லூரியின் பழையமாணவன் என்பது குறிப்பிடத் தக்கது!
  15. இந்த "அச்சுறுத்தல்" பறப்புகளை முதலில் வழமையாக்கியதே ரஷ்யா தான். ரஷ்யாவின் strategic bomber "கரடி - Bear" என்று அழைக்கப் படும் Tu-95 விமானங்கள், அலாஸ்காவின் எல்லை வரை வந்து போவதுண்டு. அமெரிக்க - கனடா கூட்டு வான்பாதுகாப்பு அமைப்பான NORAD இதை அச்சுறுத்தல் என்று குறிப்பிடுவதில்லை, ஏனெனில் இவை சர்வதேச வான்பரப்புகளை விட்டு விலகுவதில்லை. பல சமயங்களில் நோர்வேயின் வான் பரப்பிற்கு மிக அண்மையாக "கரடி" வந்ததால், நோர்வே விமானப் படை F-35 சண்டை விமானங்களை அனுப்ப வேண்டி வந்திருக்கிறது, ஆனால் எந்த எச்சரிக்கையும் இல்லாமல், எல்லையைக் குறித்துக் காட்டி "கரடியை"😂 சர்வதேசப் பரப்பிற்கு அனுப்பி வைத்தல் மட்டுமே நடந்தது!
  16. 😂ம்ஹ்ம்.... என்னுடைய திரும்பும் வரலாறு திரியில் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஹிற்லரும் நாசிகளும் பல நன்மைகளும் செய்தார்கள் (ஆனால், மேற்கு மறைத்து விட்டது, தீயதை மட்டும் பாடப்புத்தகத்தில் ஏற்றி விட்டது!) . ஆறு மில்லியன் யூதர்களை நாசிகள் கொல்ல காரணங்கள் இருந்தன (அவர்கள் செய்த அநியாயங்கள் உங்களுக்குத் தெரியுமா?), இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்! இந்தப் பார்வை, நாசி , ஹிற்லர் ஆதரவுப் பார்வை தான். அங்கேயும் உங்கள் கருத்துகளுக்கு தரவு ஆதாரங்கள் கேட்டேன், ஆனால் பேசாமல் விலகிப் போய் விட்டீர்கள். இங்கேயும் இணையவன் தரவுகள் கேட்டார், ஆனால் குதர்க்கம் தவிர வேறு பதில்கள் உங்களிடமில்லை என நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையென நான் நினைப்பது: உங்களிடம் அறத்திசை காட்டி (moral compass) என்று ஒன்று இல்லை அல்லது உடைந்து விட்டது. எல்லாம் அநியாயங்களுக்கும் பக்கத்தில் இன்னொரு அநியாயத்தைப் பக்கத்தில் நிறுத்தி வைத்து விட்டு "இந்தா பார் எல்லாம் ஒன்று தான்!" என்று கொடுந்தீமைகளையும் சாதாரண மயப்படுத்தி விடும் குதர்க்கத்தின் தோற்றுவாய் இது தான் என நான் நினைக்கிறேன்.
  17. ஏறத்தாழ இதே போல தூரப் பார்வையில் எடுக்கப் பட்ட ஒரு முள்ளிவாய்க்கால் படம் இருக்கிறது. அதை இங்கே இணைத்தால் யாரைத் திட்டுவார்கள் புட்டின் காதலர்கள் என்று யோசிக்கிறேன்!🤐
  18. திரும்பும் வரலாறு- பாகம் 5 டன்கர்க் 1940, மே மாதம் 10 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் தரைப்படைகள் பிரான்சினுள் சடுதியாக ஆக்கிரமித்து ஊடுருவின. பிரான்ஸ் தரப்பில் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுத் தரைப்படையினர், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ் இராணுவம் (British Expeditionary Force), சில பத்தாயிரம் பெல்ஜியம், கனேடியப் படையினர் என பெரும் இராணுவ அணியை நாசிகள் டன்கர்க் எனும் வட கிழக்கு பிரான்ஸ் கடற்கரையோர நிலப் பரப்பில் சுற்றி வளைத்தனர். பாதுகாப்புகளற்ற கடற்கரை வெளியில் சிக்கிக் கொண்ட நான்கு இலட்சம் வரையான இப்படைகளை, நாசி விமானங்கள் இடைக்கிடை குண்டு வீசிப் பெரும் உயிர்ச்சேதமெற்படுத்தின. கடல்வழியாக இந்தப் படைகளில் ஒரு பகுதியினரையாவது மீட்டெடுக்கும் முயற்சியாக ஒபரேசன் டைனமோ மே 26 இல் ஆரம்பிக்கப் பட்டு, அடுத்த ஒரு வாரத்தினுள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ், பிரெஞ்சு, கனேடிய படையினர் டோவர் நீரிணையின் வழியாக மீட்கப் பட்டனர். கடல் வழி மீட்புப் பணியில் ஒரு சாதனையாக இது வரை கருதப் பட்டு வரும் டன்கர்க் மீட்புப் பற்றி பல நூல்களும், அண்மையில் ஒரு பிரபல திரைப் படமும் வெளியாகி இருக்கின்றன - வாசகர்கள் இந்த மூலங்களில் டன்கர்க் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம். சமாதானப் புறாக்கள் 1940 ஜூன் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாசிகளிடம் சரணடைந்து 80% ஆன பிரான்ஸ் நிலப்பரப்பை நாசிகளிடம் ஒப்படைத்தது. இவ்வாறு பிரான்ஸ் சரணடைவதற்கு முன்னர், நாசிகள் பாரிசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையிலும் வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரான்ஸ் அரச தலைவர்களை பிரான்சிலேயே நேரடியாகச் சந்தித்து தொடர்ந்து போராடும் படி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். இந்த வலியுறுத்தலின் காரணங்கள் பல. பிரான்ஸ் வீழ்ந்து விட்டால் கடல்வழியாக பிரிட்டனை நாசிகள் ஆக்கிரமிக்க அதிக காலம் எடுக்காது. அத்துடன், பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நாசி விமானங்கள் பறக்க வேண்டிய தூரமும் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, பிரான்சின் பாதுகாப்பு என்பது இங்கிலாந்தின் பாதுகாப்புத் தான் என்பது தெளிவு. எனவே, இறுதியில் பிரான்ஸ் வீழ்ந்த போது, அடுத்த நாசி இலக்கு இங்கிலாந்து தான் என்பது சேர்ச்சிலுக்கு மட்டுமன்றி பிரிட்டன் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்தது. ஆனாலும் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக ஹிற்லர் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை உடனே வழங்கவில்லை. ஏன்? ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாசிகள் தம் ஒவ்வொரு எதிரிகளையும் ஒவ்வொரு தரத்தில் வைத்திருந்தனர். யூதர்களும், றோமாக்களும் கரப்பான் பூச்சிகள், ரஷ்ய சிலாவிக் மக்கள் "கீழ் நிலை மனிதர்கள்" என வெவ்வேறு தரங்களில் பார்த்தனர் (இன்று நாசிகள் இருந்திருந்தால் மண்ணிறத் தோல் கொண்ட ஆசியர்களை கரப்பான் பூச்சிகளை விடக் கீழ் நிலையிலேயே வைத்திருந்திருப்பர்!). ஹிற்லர், பிரித்தானியர்களை, ஜேர்மனிய ஆரியர்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நாகரீக இனமாகப் பார்த்தார். எனவே, இராணுவ ரீதியில் தாக்காமலே அவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கத்தில் இருந்தார். ஹிற்லர் நீட்டும் நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டு இங்கிலாந்து சமாதானத்தைப் பேண வேண்டுமென வாதிட்ட எட்வேர்ட் மோஸ்லி (இவர் பிரிட்டன் பாசிச யூனியன்- British Union of Fascists எனும் அமைப்பின் தலைவர்), டியூக் ஹமில்ரன் (Duke of Hamilton) போன்ற சிலரும் பிரிட்டனில் இருந்தனர். சமகாலத்தில், சர்வாதிகாரிகளாக வலம் வரும் உலகத் தலைவர்களைப் போற்றும் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் மேற்கு நாடுகளில் பல்வேறு போர்வைகளினுள் ஒளிந்து வலம் வருவதைக் காண்கிறோம். இத்தகைய வில்லனுக்குப் பொன்னாடை போர்த்தும் போக்கு, நாசிகள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். வளையாத கருங்கல்! "கருங்கல் உடையும், வளையாது!" எனும் புதுவையின் வரிகளின் பிரதிபலிப்பாக, வின்ஸ்ரன் சேர்ச்சில் நாசிகளோடு பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பேயில்லையென மறுத்து விட்டார். பிரிட்டன் பாராளுமன்றிலும் சரி, பொது மக்களுக்கு வானொலி மூலம் ஆற்றும் உரைகளிலும் சரி, சேர்ச்சிலின் உரைகள் இரு பகுதிகளைத் தவறாமல் கொண்டிருந்தன. ஒன்று: எந்த நிலையிலும் பிரிட்டன் சரணடையாது போராடும் என்ற உறுதி, இரண்டு: இந்தப் போராட்டம், பிரிட்டன் மக்களுக்கு ஒரு கொடிய நரகமாக இருக்கும் என்ற யதார்த்தம். இது ஒரு அற்புதமான செயல்திறன் மிக்க உளவியல் நுட்பம். எதிர் கொண்டு வரும் கடின நாட்கள் பற்றிய உண்மையை மீள மீளச் சொல்லி விட்டால், மக்கள் பூப்படுக்கையை எதிர்பார்க்காமல் இருப்பர், ஏமாற்றம் கொள்ளாமல் காரியத்தைப் பார்ப்பர். அதே வேளை நம்பிக்கையை இழப்பது மட்டும் நடக்கக் கூடாதென மனதில் ஊன்றி விடுதல் மூலம், போராட்டக் குணத்தைத் தக்க வைத்தல். இவை இரண்டையும் ஒருங்கிணைத்து ரத்தின சுருக்கமாக சேர்ச்சில் சொன்ன ஒரு வாக்கியம்: “If you are walking through hell, keep walking!” "நரகத்தினூடு நடக்க வேண்டியிருக்கிறதா? நடந்து கொண்டேயிருங்கள்!" காத்திருந்த கழுகுகள் மறு கரையில் நாசி ஜேர்மனியில், பி.பி.சி வானொலியைத் தவறாமல் கேட்ட படி சமாதான சமிக்ஞைக்காகக் காத்திருந்த நாசிப் பிரச்சார பீரங்கி கோயபல்ஸ் பிரிட்டனுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நாள் நெருங்கி விட்டதாக தன் டயரியில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். பிரிட்டனின் சரணடைவை விரைவாக்கும் "லங்காபுவத்" பாணி பிரச்சார நடவடிக்கைளும் கோயபல்சால் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டிருந்தன. இன்று இணையவழியில் ரஷ்யாவின் அரச அமைப்புகள் பொய்ச்செய்திகளையும், எதிர் நாட்டில் பிரிவினையூட்டும் போலி ஆய்வுகளையும் கசிய விடுவது போல, அன்றைய நாட்களில் பிரபலமாக இருந்த மக்கள் தொடர்பாடல் ஊடகமான வானொலி மூலம் நாசிகள் பிரச்சாரம் செய்தனர். பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளிலிருந்து ஆங்கில மூலத்தில் இந்தப் பிரச்சாரங்கள் ஒலிபரப்பாகின. ஹிற்லரின் உள்வட்டத்திலேயே பிரிட்டனை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. இந்த முரண்பாடுகளின் ஒரு காரணம், யார் தலைமை நாசியான ஹிற்லரிடம் நல்ல பெயர் வாங்குவதென்பதில், ஹிற்லரின் கூட்டுக்களிடையே இருந்த கடும் போட்டி. ஹிற்லரின் நம்பர் 2 ஆக இருந்த ருடோல்f ஹெஸ் சமாதானம் பேச வேண்டுமென்று வலியுறுத்தினார் (பின்னர் அவரே ஒரு விமானத்திலேறி ஸ்கொற்லாந்துக்குப் பறந்து போனது இன்னொரு சுவாரசியமான கதை!). கோயபல்ஸ் உள்பிரிவினையால் பிரிட்டனையும் சேர்ச்சிலையும் பலவீனப் படுத்திய பின்னர் கடல்வழியாக ஆக்கிரமிக்க வேண்டுமென்றார். நாசி விமானப்படையின் தலைவரான கோறிங், ஒரே வாரத்தில் தன் விமானப் படையின் தாக்குதல்களால் பிரிட்டன் அடி பணியும் என்று ஹிற்லருக்கு நம்பிக்கையூட்டினார் (மூன்று நாட்களில் உக்ரைனின் கியேவ் விழும் என்று வாக்குறுதி கொடுத்த ரஷ்ய இராணுவத் தலைவர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!). இறுதியில், கோறிங்கின் இந்த வான்வழித் தாக்குதல் தான் பிரிட்டனை அடிபணிய வைக்கும் வழியென ஹிற்லர் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்தார். கழுகின் நாள்! பிரான்சின் வடக்குக் கரையோரத் தளங்களிலிருந்து கிளம்பி, ஆயிரத்திற்கு மேற்பட்ட, பல வகை நாசி விமானங்களை உள்ளடக்கிய விமான அணி இங்கிலாந்தை நோக்கி முதலில் தாக்குதல் செய்ய ஆரம்பித்தது 1940, ஆகஸ்ட் 13. இந்த முதல் நாளை கோறிங் "கழுகின் நாள்- Eagle Day (Adlertag)" என்று பெயரிட்டு தயார் செய்து கொண்டிருந்த போது, பேர்லினில், பிரிட்டன் தோற்ற வெற்றிப் பேரணியைக் கொண்டாடும் அலங்கார வேலைகளை இன்னொரு நாசிக் குழு செய்ய ஆரம்பித்திருந்தது. அவ்வளவுக்கு, தனது விமானத் தாக்குதலால், சில நாட்களில் பிரிட்டன் சுருண்டு விடும் என்று நம்பினார் கோறிங். ஆனால், முதல் நாளிலேயே ஏமாற்றம் காத்திருந்தது. பிரிட்டனின் மீதான மோசமான வானிலையும், றோயல் விமானப் படையின் எதிர்த்தாக்குதலும் சேர்ந்து, இலக்குகளை அடையாளம் காணாமலே குண்டுகளை வீசி விட்டுத் திரும்ப வேண்டிய நிலை நாசி விமானங்களுக்கு ஏற்பட்டது. ஆனால், நான்கு நாட்களில் றோயல் விமானப் படையை அழித்து விடுவோம் என்று உறுதியெடுத்த கோறிங், தன்னுடைய கணிப்பை மாற்றிக் கொள்ளவில்லை, எனவே படை படையாக நாசி விமானங்களை இங்கிலாந்தின் வான்பரப்பினுள் அனுப்பும் அணுகுமுறை தொடர்ந்தது. அடுத்த சில நாட்களில், இந்தப் பகல் நேர நாசி விமானத் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு மேலதிகமாக, இரவில் பேர்லின் மீதும் றோயல் விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குமளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தன. இரவு நேரம், நிலாக் காலம்! நாசி விமானப் படை ஒரு புதிய நுட்பத்தைக் கையாள ஆரம்பித்தது. பகலில், றோயல் விமானப் படையின் விமானங்கள் நாசி விமானங்களை வானில் எதிர் கொண்டு தாக்குவதைத் தவிர்க்க, இரவுகளில் பிரிட்டன் மீதான தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். றோயல் விமானப் படையின் சண்டை விமானங்களில் ரேடார் வசதிகள் இருக்கவில்லை. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளாலும் இரவில் குறி பார்த்துச் சுட இயலாது. ஆனால், நாசி விமானங்கள் இரவிலும் தரையில் இலக்குகளை அடையாளம் கண்டு தாக்க இயலும், இதற்கு ரேடார் அவசியமில்லை. எனவே, நிலா வெளிச்சம் நிரம்பிய இரவுகள், பிரிட்டன் நகரங்களுக்கு நரக நாட்களாக மாறின. இரவு நேர நாசி விமானத் தாக்குதல்களால் எரிந்து சிதைந்த இலண்டன் பொதுக் கட்டிடங்கள். பட உதவி: நன்றியுடன் அமெரிக்க ஆவணக்காப்பகம். நிலா வெளிச்சமில்லா நாட்களில் கூட நாசிகள் துல்லியமாக கட்டடங்களையும், இலக்குகளையும் தாக்குவதற்கு ஒரு வானலைத் (Radio beacon) தொழில்னுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். விமானங்கள் ஓடுபாதைகளில் துல்லியமாகத் தரையிறங்குவதற்கெனப் பயன்பாட்டிலிருந்த லொறென்ஸ் (Lorenz) தொழில்னுட்பத்தை செம்மைப் படுத்தி சில நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கும் இலக்குகளை அடையாளம் காண நாசிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்கள். அனேக உயிர், உடைமைச் சேதங்கள் பிரிட்டனில் இந்த இரவு நேரத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன. ஏனைய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், இலண்டன் நகரை நாசிகள் தொடாமல் விட்டிருந்தது, சேர்ச்சில் மனம்மாறி நாசிகளுடன் சமாதானம் பேச வருவார் என்ற நம்பிக்கையினால். அந்த நம்பிக்கை இப்போது சேர்ச்சிலின் வானொலி உரைகளால் தகர்ந்து விடவே, 1940 செப்ரெம்பர் 7 இல் முதன் முறையாக இலண்டன் நகரமும் நாசிகளின் இரவு நேரத் தாக்குதலுக்குள்ளானது. ஒரு இரவில், மத்திய இங்கிலாந்திலிருக்கும் கொவென்ட்றி நகரத்தின் மீதான தாக்குதலில் மட்டும் ஐநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 1940, செப்ரெம்பர் 7 ஆம் திகதி முதல், 1941 மே 11 வரையிலான எட்டு மாத காலம், செறிவான நாசி விமானத் தாக்குதல்களை இலண்டன் உட்பட்ட நகரங்கள் எதிர் கொண்டதில், மொத்தம் 44, 652 மக்கள் பலியானார்கள். இவர்களுள் 29,000 பேர் இலண்டனில் பலியானார்கள். பிரித்தானியாவில், நாசி விமானத் தாக்குதல்களால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5,626. ஏமாற்றம், திசை மாற்றம்! 1940 டிசம்பரில், ஹிற்லர் பிரிட்டனின் வீழ்ச்சிக்காக இனிக் காத்திருக்கப் போவதில்லையெனத் தீர்மானித்து, தனது தளபதிகளுக்கு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார்: "கேஸ் பார்பரோசா (Case Barbarossa)" எனும் சங்கேதப் பெயர் கொண்ட அந்த ஆணை, சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறும் திட்டங்களை வரையுமாறு கட்டளையிட்டது. இந்தத் திட்டம், ஒப்பரேசன் பாபரோசாவாக 1940 ஜூன் மாதம் ஆரம்பித்தமை தான், பிரிட்டன் மீதான நாசி விமானப் படையின் தாக்குதல்கள் ஒரு ஆளியைச் சொடுக்கியது போல நின்று போகக் காரணம். இதை பாகம் 7 இல் விரிவாகப் பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்னாகப் பார்க்க வேண்டியது: நாசிகளின் கொடிய விமானத் தாக்குதல்களால் பிரிட்டன் துவண்டு விடாமல் காத்தது சேர்ச்சில் மட்டுமா? இந்தத் துவழாத பிரிட்டனின் தூண்களாக இருந்த இரு தரப்பினர் பற்றி அடுத்த பாகத்தில் பேசலாம்! - தொடரும்
  19. எதையும் கொழுத்த முதல் அமெரிக்காவில் வசிக்கும் இந்தக் குடியேறி சொல்வதையும் கேட்டு விடுங்கள்😂: 1. அனேக அமெரிக்க இந்தியர்கள்/இலங்கையர்கள் (அல்லது அவர்களது பெற்றோர்) நீலக் கட்சியின் (Democrats) லிபரல் கொள்கைகளின் உதவியுடன் அமெரிக்கா வந்து, படித்து, வேலை செய்து சொத்து சேர்த்தவர்கள். ஏனெனில் சிவப்புக் கட்சி (Republicans) குடியேறிகளை சுதந்திரமாக அனுமதிப்பது அரிது! 2. இதில் பெரும் சொத்துச் சேர்த்தவர்கள் (ராமசாமி போல!) ஒரு கட்டத்தில் தங்கள் பிசினஸ், வருமான வரிகள் அதிகரிப்பதாக குறை சொல்ல ஆரம்பிப்பார்கள்.நிதிப் பழமை வாதிகளோடு (Fiscal conservatives) இவர்கள் சேர்ந்து கொள்வர். 3. இவர்களுள் ஒரு பகுதியினர், ஒரு படி மேலே போய் ஒரு பாலினத்தினர், இடைப்பாலினர், பால்மாற்றம் செய்வோர் இவர்களுக்கெதிரான மனப்பான்மையை வளர்த்துக் கொள்வர். மோடி வாலாக்களாக இருப்போர் (இங்கே யாழிலேயே இருக்கின்றனர் சிலர்😎!) முஸ்லிம்களையும் எதிர்க்க ஆரம்பிப்பர். இவர்கள் சமூகப் பழமைவாதிகளோடு (Social conservatives) சேர்ந்து கொள்வர். மேல் #2, #3 நடந்த பிறகு சிவப்புக் கட்சி இவர்களை ஈர்த்துக் கொள்ளும்! சிவப்புக் கட்சியினால் "தடுத்தாட்கொள்ளப் பட்ட" பின்னர், சிவப்புக் கட்சி காவும், வெள்ளையின மேலாண்மை, குடியேறி எதிர்ப்பு, கறுப்பின மக்களுக்கு ஆதரவான சமத்துவத்திற்கு (affirmative action) எதிர்ப்பு என ஏனைய எல்லாக் குப்பைகளுக்கும் தங்கள் பொன்வாயால் நியாயம் கற்பித்து அமெரிக்காவின் சிறந்த குடியேறியாக (poster boy immigrant😂) காட்சி தருவர்! இவர் போல பலர் இருக்கின்றனர் அமெரிக்க அரசியல் அரங்கில். 2016 இல் ட்ரம்ப் வென்ற தேர்தலில், ஒரு உள்ளூர் பதவிக்கு போடியிட்டு தோற்ற "ஈமெயிலைக் கண்டு பிடித்த" தமிழர் ஐயாத்துரையும் இப்படி பட்டவரே! அவரது கருத்துக்கள் ட்ரம்பின் அலட்டலை விட மோசமானவை! எனவே, பார்த்துக் கொழுத்துங்கோ!
  20. ரஷ்யா உக்ரைன் விடயத்தில் "சமாதானப் புறாக்களாக" வலம் வருகிற ஆட்களை நினைத்தால் வியப்பு மேல் வியப்பெனக்கு! அமரர் விவேக் சொன்னது போல "எப்படி இருந்தவர்கள் இப்படியா ஆகிட்டாங்களே!" 😂
  21. முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது 👆 ஸ்மார்ட்டான chat gpt ஐயும் கிரகிப்பில் பிரச்சினையுடையோர் பாவித்தால் பலன் இருக்காது என்பதற்கு, பெருமாள் நல்ல சாட்சி பகர்ந்திருக்கிறார் என நினைக்கிறேன்!😎 இன்புழுவன்சாத் தொற்றினால் அரை மில்லியன் பேர் இறந்ததாகச் சொல்லியிருக்கிறேன், அவர் அப்படியே வெட்டி ஒட்டியிருக்கிறார். மொழிபெயர்க்கும் போது எழுவாய் பயனிலை எல்லாவற்றையும் குழப்பியிருக்கிறது. அதை அப்படியே நம்புகிறார்! Chat gpt:1, பெருமாள்:0😂 இதை ஏற்கனவே நான் பாகம் 2 இல் எழுதியிருக்கிறேனே? வரலாற்று ஆய்வாளர்கள் எழுதாமல் எங்கேயிருந்து நான் எடுத்தேன் என்று நினைக்கிறீர்கள்? வாசிக்காமல் சொல்லும் கருத்துக்கள், (அல்லது வாசிக்காமல் கொப்பி செய்து chat gpt இல் ஒட்டி வரும் கருத்துக்கள்😂) இவற்றிற்கு தனித் தனியாகப் பதில் சொல்லும் நேரம் இல்லை! எனவே இணைந்திருங்கள் அல்லது விலகியிருங்கள் - உங்கள் இஷ்டம்!👍
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.