Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது விடுதலைப் புலி உறுப்பினரான சாமந்தி கூறும் கதை ('சமூக சிற்பிகள்' அமைப்பு பதிவேற்றிய கதைகள் - 02:) {must read }

Featured Replies

முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

[விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான 30வயதான சாமந்தி என்பவர் மூன்று பிள்ளைகளுக்கு தாயாவார். 1990ல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட இவர் 2004 ல் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவரைத் திருமணம் முடித்த பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகிக் கொண்டார்.

பிரித்தானிய தொலைக்காட்சி சேவையான 'சனல் 04' தெலைக்காட்சி சேவையால் முதலில் வெளியிடப்பட்ட, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் நிற்கும் ஒளிப்படம் ஒன்றை உள்ளுர் பத்திரிகை ஒன்று மே 20, 2010 ல் பிரசுரித்திருந்தது. இந்த ஒளிப்படத்தில், ஆழம் குறைந்த பதுங்குகுழி ஒன்றில், இந்தப் பன்னிரெண்டு உறுப்பினர்களும் நிர்வாணமாக, அவர்களது கைகள் பின்புறத்தில் இறுகக் கட்டப்பட்டவாறு காணப்படுகின்றனர். இவர்களைச் சூழ இராணுவத்தினர் நிற்கின்றனர். சிறிலங்கா இராணுவ வீரர் ஒருவரின் செல்லிடத் தொலைபேசியில் எடுக்கப்பட்ட இந்தஒளிப்படத்தில் காணப்படும் 12 புலி உறுப்பினர்களில், புலிகள் அமைப்பில் பொறுப்பாளராகக் கடமையாற்றிய தனது கணவரும் நிற்பதை சாமந்தி அடையாளங் கண்டுகொண்டுள்ளார்.

யூலை 16,2010ம் ஆண்டிலிருந்து சாமந்தி தனது பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருகிறார். அவருக்கு வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது. அத்துடன் தனது கணவர் உயிருடன் உள்ளார் என்கின்ற நம்பிக்கையும் அவருக்கு உண்டு. அந்த ஒளிப்படத்தில் காணப்படும் 12 உறுப்பினர்கள் தொடர்பான எந்தவொரு தகவல்களும் மே 17, 2009ம் ஆண்டின் பின் கிடைக்கப் பெறவில்லை. துணிச்சலுள்ள, தன்னம்பிக்கையுள்ள, சமூக விழிப்புணர்வுள்ள, பிள்ளைகளைப் பராமரிக்கும் திறனுள்ள, சாதுரியமான சாமந்தி என்ற இந்தப் பெண்ணுக்கு தற்போது உதவி செய்யக் கூடிய சமூகத்தவர்கள் வாழும் இடம்மொன்று தேவைப்படுகின்றது.]

எனக்கு 15 வயதாக இருக்கும் போது, அதாவது 1990 ல் எனது சொந்த விருப்பத்தின் பேரில் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டேன். தியாகி திலீபன் அவர்களின் பேச்சுக்கள், அவரது உரைகள் என்னை புலிகள் அமைப்பின் பால் ஈர்த்துக் கொண்டன. தியாகி திலீபன் அவர்கள் மருத்துவ பீட மாணவராக இருந்த போது அதிலிருந்து விலகி தமிழ் மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். அவர் எமது பாடசாலையில் பல உரைகளை நிகழ்த்தியிருந்தார். இந்த நேரத்தில் எனது பெற்றோர் கனடாவில் குடியேறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட போதிலும், வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று வாழ நான் விரும்பவில்லை.

எனது குடும்பத்தவர்கள் அனைவரும் கனடா செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில், நான் புலிகள் அமைப்பில் இணைந்து கொள்வதெனத் தீர்மானித்தேன். அப்போது நான் இளமையாக இருந்தேன். அத்துடன் பலவற்றை சாதிக்கவேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் இருந்தது. 1995 ல் யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவான மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி இடம்பெயர்ந்து சென்ற வேளையில், நானும் அங்கு சென்றேன்;. அப்போது இராணுவம் யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றியிருந்தது.

1990 ல், எனது கணவனாக வரப்போகின்றவரை முதற் தடவையாக நான் சந்தித்தேன். பத்து ஆண்டுகளின் பின் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எனது கணவரின் தாயாருக்கு புலி உறுப்பினர்களை நன்கு தெரியும். புலிகள் அமைப்பிலிருந்த எனது கணவரின் இரு சகோதரிகளின் ஊடகவே நான் எனது கணவர் தொடர்பாக அறிந்திருந்தேன். இவ்விரு சகோதரிகளும் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டனர்.

எனது கணவர் தனது இரு சகோதரிகளையும் இழந்ததால், அவரது துன்பத்தில் பங்கேற்ற நான் பின்னர் இவரில் காதல் கொண்டேன். இதன் பின் ஐந்து ஆண்டுகளின் பின்னர், நாம் புலிகள் அமைப்பின் நடைமுறையின் படி திருமணத்துக்கான தகுதியான வயதை அடைந்த போது, எமது திருமணம் தொடர்பான பேச்சுக்களை ஆரம்பித்தோம். இந்நிலையில் டிசம்பர் 1999 ல் எனது கணவர் தனது நண்பர்களில் ஒருவரை என்னிடம் தூதாக அனுப்பி திருமணத்துக்கான எனது சம்மதத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் முதலில் இது தொடர்பாக நேரடியாக என்னிடம் பேசிக் கொள்ளவில்லை.

புலிகள் அமைப்பின் நிர்வாகப் பகுதிக்கான பணியில் நான் ஈடுபட்டிருந்தேன். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நிர்வாக அலுவலகத்தின் பொறுப்பு எனக்கு தரப்பட்டிருந்தது. புலி உறுப்பினர்களுக்கு தேவைப்படும் வழங்கற் பொருட்களை நான் வழங்குவேன். அவர்கள் தமக்கு பொருட்கள் தேவைப்படும் பட்சத்தில் என்னை சந்திப்பதற்காக எனது பணியகத்துக்கு வருவார்கள்.

எனது கணவர் முதன் முதலில் எமது திருமண விடயம் தொடர்பாக பேசுவதற்காக எனது பணியகத்துக்கு வந்திருந்தார். "நீங்கள் உங்களது நண்பரிடம் தெரிவித்த விடயத்துக்கு சம்மதிக்கிறேன். நான் உங்களில் காதல் கொண்டுள்ளேன்" என அவரிடம் தெரிவித்த போது அவர் பெரிதாக ஒன்றும் கதைக்கவில்லை: சிரித்தார்.

இதன் பின் மே 18, 2000 ல் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எமது அமைப்பின் நடைமுறை விதிகளின் படி, இது தொடர்பாக நாம் எமது பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டியிருந்தது. எமது திருமணத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு எமது அமைப்பின் 'திருமணக் குழுவிடம்' இருந்தது. நாம் எமது நண்பர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைக்க முடிந்திருந்தது. ஏனெனில் அந்த வேளையில் யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் இடையில் போக்குவரத்து இடம்பெறவில்லை.

எமது திருமணம் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. இதற்கு ஒரு மணித்தியாலம் மட்டுமே தேவைப்பட்டது. எமது அமைப்பின் பிரகாரம், நாங்கள் இந்து அல்லது கிறீஸ்தவ மத முறைப்படி திருமணம் செய்து கொள்வதில்லை. எமக்கென தனிப்பட்ட, பொதுவான திருமண முறைமை நடைமுறையில் இருந்தது.

எமது திருமணத்தின் போது நாம் இருவரும் கைக்கடிகாரங்களை மாற்றிக் கொண்டோம். அத்துடன் 'புலிப் பல்' வடிவில் தங்கத்தால் செய்யப்பட்ட தாலியை அவர் எனது கழுத்தில் கட்டினார். திருமணக் குழுத் தலைவர் 'மதகுரு' போன்ற செயற்படுவார். அத்துடன் அவர் 'உறுதிமொழி' ஒன்றை எம்மிடம் சொல்ல நாம் அதைத் திருப்பிச் சொன்னோம். அதாவது திருமண பந்தத்தில் இணையும் நாம் இருவரும் எமது இருவர் தொடர்பாகவும் அக்கறை காட்டுவதாகவும், சாகும் வரை இருவரும் ஒன்றாக வாழ்வோம் எனவும் கருத்துப்பட இந்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

2002 ல் நான் பெண் மகவு ஒன்றைப் பெற்றெடுத்தேன். நான் கர்ப்பிணியாக இருந்த போது புலிகள் அமைப்பை விட்டு விலகிக்கொண்டேன். எனது கணவர் தொடர்ந்தும் புலிகளின் புலனாய்வுத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். வழமையாக ஏனையவர்களை விட புலிகள் அமைப்பைச் சேர்ந்த திருமணம் செய்த குடும்பங்கள் மகிழ்வாக வாழ்வது வழமையாகும். ஏனெனில் அமைப்பானது எமக்கு பல உதவிகளையும் ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தது. எமது வாழ்வின் ஒவ்வொரு செயற்பாடுகளும் திட்டமிட்டவாறு மேற்கொள்ளப்படும். அங்கு திட்டமிடல்கள் அதிகம் இருந்தன. அத்துடன் விடுமுறைகளும் வழங்கப்பட்டன.

எனது கணவர் திங்கள் தொடக்கம் சனி வரை பணியில் ஈடுபடுவார். பின் சனிக்கிழமை இரவு அவர் வீட்டுக்கு திரும்புவார். அன்று நான் அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். சிலவேளைகளில் அவர்களது கடமைகள் மற்றும் பொறுப்புக்களைப் பொறுத்து அது மாற்றமடையலாம். திருமணமான புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆண் உறுப்பினர் ஒருவர் அவரது வீட்டுக்கு அருகில் வேலை செய்தால் அவர் ஒவ்வொரு நாள் இரவும் வீட்டுக்குச் செல்லலாம். அல்லது வீடு தொலைவில் இருந்தால் சனி மற்றும் ஞாயிறு தினங்களை அவர்கள் தமது குடும்பங்களுடன் கழிக்க முடியும்.

ஞாயிறுகளில் நாம் மிக மகிழ்வாக இருப்போம். முல்லைத்தீவு கடற்கரைக்கு அடிக்கடி செல்வோம். ஏனெனில் எனது சிறு பராயத்திலிருந்தே இந்த இடம் எனக்குப் பிடித்திருந்தது. அத்துடன் முல்லைத்தீவில் இருந்த குழந்தை யேசுநாதர் ஆலயத்திற்கும் செல்வோம். சிலவேளைகளில், ஞாயிறு முழுமையும் எமது வீட்டிலேயே கழிப்போம். நாம் ஒன்றாக இருப்பதை எண்ணி மகிழ்வோம். 2005 வரை இவ்வாறான இயல்பான வாழ்வை நாம் வாழ்ந்திருந்தோம். ஏ-09 நெடுஞ்சாலை மூடப்பட்ட பின்னர், யுத்தம் தீவிரம் பெற்ற பின்னர், எமது நாளாந்த நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. அதன் பின் எனது கணவர் தனது பெரும்பாலான நேரங்களை அமைப்பில் செலவழித்தார். அப்போது அவர்கள் யுத்தத்திற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டனர். எப்போதும் களமுனைக்குச் செல்வதற்கான ஆயத்தங்களுடன் இருந்தனர்.

2007 ல், நான் மீண்டும் கர்ப்பிணியாக இருந்தபோது, எனது கணவர் களமுனைக்கு சென்றார். எனது மகள் தந்தையைக் காணாது குழப்பமுற்றார். அத்துடன் தந்தையை தூர விட்டு விலகி இருக்க அவரால் முடியவில்லை. ஆனாலும் தனது தந்தையின் வீரத்தை நினைத்து அவர் பெருமைப்படுவார். 2007 ல், கிபிர் விமானங்கள் தாக்கதலைத் தொடங்கி குறிப்பிட்ட சில நாளில் ஒரே தடவையில் ஒன்பது கிபிர் விமானங்கள் ஒரே சமயத்தில் தாக்குதலை மேற்கொண்ட சம்பவங்களும் உள்ளன.

ஏப்ரல் 18, 2007 எனது மகளின் ஐந்தாவது பிறந்த நாள். அப்போது நான் எட்டு மாதக் கர்ப்பிணியாக இருந்தேன். எனது கணவர் மிக, மிகக் குறைந்த நேரத்தையே எம்முடன் செலவிட்டார். எமது நண்பர்களில் ஒருவர் எமது வீட்டுக்கு வருகை தந்திருந்ததால் நாம் அருகிலிருந்த ஆலயத்துக்குச் சென்றோம். செல்லும் வழியில், கிபிர் விமானம் தாக்குதலை ஆரம்பித்தது. எனது மகளுக்கு அப்போது வயது ஐந்தாக இருந்த போதிலும் தனது சைக்கிளிலிருந்து விரைவாக இறங்கி பதுங்குகுழி ஒன்றுக்குள் ஒடினார். அதாவது சிறுபராயாத்திலேயே தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வதென எனது மகளுக்கு நன்றாக தெரிந்திருந்தது.

மே 2007 ஒருநாள், கிபிர் விமானம் ஒன்று வந்து கொண்டிருக்கும் சத்தத்தை வைத்துக் கொண்டு இது எமது வீட்டுக்கோ அல்லது பக்கத்து வீட்டுக்கோ தாக்குதலை மேற்கொள்ளப் போகின்றது என நான் நினைத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் எமது வீட்டில் பதுங்குகுழி இருக்கவில்லை. கிபிர் தாக்குதலை மேற்கொண்ட போது அதன் குண்டுச் சிதறல்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடத்திலிருந்து 500 மீற்றர் தூரம் வரை விழுந்தன. எனது மகளும் நானும் பெரும் ஆபத்தில் மாட்டிக்கொண்டோம். நான் எனது மகளைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு அருகிலிருந்த பதுங்குகுழி ஒன்றுக்குள் ஒடினேன். எமது வீட்டுக்கு அருகிலிருந்த வீட்டைக் குறிவைத்தே கிபிர் குண்டுகளை வீசியது. நாம் பதுங்குகுழியை விட்டு வெளியே வரும் போது, எமது வீடு தரைமட்டமாக இருந்தது.

கிபிர் விமானங்கள் அடிக்கடி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டன. கிபிருக்கும் தலைமை கட்;டளையகத்துக்கும் இடையில் இடம்பெறும் உரையாடல்களை புலிகள் ஒட்டுக் கேட்பார்கள். இதேபோன்று நானும் சிலவேளைகளில் வாகனங்களில் சென்றுகொண்டிருக்கும் பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதலை நடாத்துமாறு கிபிருக்கு வழங்கப்படும் கட்டளைகளை கேட்டுள்ளேன். விமானநிலையத்தை விட்டு கிபிர் தாக்குதலுக்காக புறப்படுகின்ற போது புலிகள் அதனை அறிந்துவிடுவார்கள்.

இவ்வாறான தாக்குதல்களிலிருந்து போராளிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் எச்சரிக்கை மணி ஒன்றை அடிப்பார்கள். இந்த மணியின் ஒலியைக் கேட்டு புலிகளின் முகாங்களுக்கு அருகிலுள்ள பொதுமக்களும் பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள். கிபிரின் ஒலியைக் கேட்டவுடன் எமது வீட்டிலிருந்த இரு நாய்கள் ஊளையிடத் தொடங்கும். எமது நாய்கள் மட்டுமல்ல வேறு பல நாய்களும் இவ்வாறான எச்சரிக்கையை எழுப்புவது உண்டு.

செப்ரெம்பர் 22, 2007 நாய்கள் ஊளையிடத் தொடங்கின. நாங்கள் உடனடியாக பதுங்குகுழிக்குள் தஞ்சம் புகுந்துகொண்டோம். நாய்களும் பதுங்குகுழிக்குள் பாதுகாப்புத் தேடிஒடிவந்தன. இரு கிபிர் விமானங்கள் ஆறு தடவைகள் தாக்குதல்களை மேற்கொண்டன. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவை தாக்குதல்களை மேற்கொண்டன. அன்று எனது கணவர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்ததால் கிபிர் வருகின்ற சத்தத்தை அவரால் கேட்க முடியவில்லை. இதனால் இவர் இத்தாக்குதலில் காயமடைந்தார். எனது கணவர் தலையில் காயமடைந்த விட்டதாக எனது அயலவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அன்ற பாடசாலை இல்லை என்பதால் நான் எனது மகளை அயலவர் ஒருவரின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு குழந்தையாக இருந்த எனது மகனைத் தூக்கிக் கொண்டு புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு ஓடோடிச் சென்றேன்.

பொன்னம்பலம் வைத்தியசாலையின் பிரதான கிளை கிளிநொச்சியிலும் அதன் மற்றொரு கிளை புதுக்குடியிருப்பிலும் செயற்பட்டது. இங்கு பணிபுரிந்த பெரும்பாலான வைத்தியர்களும் மருத்துவ தாதிகளும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். அரசாங்க வைத்தியசாலையை விட இது மிகவும் நேர்த்தியான, சிறந்த முகாமைத்துவம் கொண்ட வைத்தியசாலையாக விளங்கியது. அங்கிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளை விட பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு செல்வதையே அதிகம் விரும்பினர்.

நான் பொன்னம்பலம் வைத்தியசாலையை அடைந்த போது, அங்கு பணியாற்றியவர்கள், எனது கணவருக்கு சிறிய காயம் என்றும் அதனால் கவலைப்படத் தேவையில்லை எனவும் நம்பிக்கை தந்ததுடன், சிறிய சத்திர சிகிச்சை ஒன்றுக்காக எனது கணவர் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதன் பின்னர் எனது கணவர் தலையில் கட்டுப் போட்டவாறு வீடு வந்தார். அந்த இரவு எனது கணவர் என்னிடம் "நான் என்ன நடக்கிறது எனப் பார்ப்பதற்காக எனது முகாமுக்குச் சென்று வருகிறேன்" எனக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

2008 முழுமையும் கிபிர் விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டன. கிபிர் விமானங்களின் தாக்குதல்களிலிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்கான வசதி வாய்ப்புக்கள் பாடசாலைகளில் காணப்படவில்லை. இதனால் இவ்வாறான தாக்குதல்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்குமாறு பாடசாலைகள் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்தன. இதனால் பாடசாலைகள் தொடர்ச்சியாக செயற்பட முடியவில்லை.

வன்னியில் வாழ்ந்த ஒவ்வொரு மக்களின் நலன்களும் கவனிக்கப்பட்டன. எங்களுக்கு மாதந்தோறும் கொடுப்பனவு வழங்கப்பட்டது. அத்துடன் எம்மிடம் உடைமைகள் இருந்தன. புலிகள் அமைப்புக்குள் எந்தவொரு சாதி வேறுபாடுகளும் காண்பிக்கப்படவில்லை. எல்லோரும் சமமாக மதிக்கப்பட்டோம்.

2008 ல், இராணுவத்தினர் மன்னார் தொடக்கம் கிளிநொச்சி வரையான இடங்களைக் கைப்பற்றத் தொடங்கினர். இக்காலப்பகுதியில், கிபிர் தாக்குதல் விமானங்கள் மக்களின் நடமாட்டங்கள் தென்படும் இடங்களில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதால் மருத்துவ சிகிச்சைக்காக கூட என்னால் வெளியில் செல்ல முடியவில்லை. நான் அப்போது மூன்றாவது தடவையாக கருவுற்றிருந்தேன். தர்மபுரம் என்ற இடத்தை இராணுவத்தினர் கைப்பற்றும் வரை நாம் எமதிடத்திலேயே தங்கியிருந்தோம். ஏற்கனவே இடம்பெயர்ந்து அங்கு தங்கியிருந்த மக்கள் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தை நோக்கி நகர்ந்தனர்.

புதுக்குடியிருப்பு வீதிகளில் சிறு குழந்தைகளைக் கைகளில் ஏந்தியவாறு வீதியோரங்களில் மக்கள் தங்கியிருந்தனர். அவர்கள் வீதியோரத்திலேயே சமைத்து உண்டனர். இந்த வீதியைப் பற்றி நான் கூறும் போது கைக்குழந்தை ஒன்றுடன் இவ்வீதியில் தங்கியிருந்த பெண்மணி ஒருவர் நினைவுக்கு வருகிறார்.

அந்தக் குழந்தை கத்தி அழுகிறது. ஆனால் அந்தப் பெண்ணிடம் கொடுப்பதற்கு எதுவுமில்லை. இதனால் அந்தக் குழந்தையின் தாயும் சேர்ந்து அழுகிறார். நான் உடனடியாக அவ்விடத்தை நோக்கிச் சென்றேன். ஏன் அவர்கள் அழுகிறார்கள் என வினவினேன். அழும் குழந்தைக்கு பால் கரைப்பதற்கான நீர் தன்னிடம் இல்லை என அந்தத் தாய் கூறினார். நான் உடனே அவர்களை எனது வீட்டுக்கு கூட்டிச் சென்று நீரும், பால்மாவும் கொடுத்தேன். அந்த நேரத்தில் நாம் புலிகள் அமைப்பின் குடும்பத்தவர்களாக இருந்தபோதிலும் கூட நாமும் இவ்வாறான பொருட் தட்டுப்பாட்டுக்கு முகங் கொடுத்தோம்.

மக்கள் இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தபோது இராணுவத்தின் புலனாய்வு முகவர்களும் மக்களுக்குள் ஊடுருவினர். அவர்கள் புலிகளின் குடும்பத்தவர்கள் வாழ்ந்த வீடுகள் மீது குண்டுகளை வீசினர். இதனால் நான் பெரிதும் திகிலடைந்தேன். மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது எனது கணவர் என்னிடம் பகிடியாக "நீங்களும் விரைவில் இடம்பெயர்ந்து இந்த மக்களைப் போல தங்குமிடம் இல்லாது அலைந்து திரிவீர்கள். ஆகவே இவர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்" என அடிக்கடி கூறுவார்.

ஜனவரி 17, 2009 நாங்களும் இடம்பெயர்ந்தோம். சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் 'யுத்த வலயமற்ற' பகுதி என அறிவிக்கப்பட்ட விசுவமடு என்ற இடத்தை நோக்கி நாம் நகர்ந்தோம். ஜனவரி 24,2009 வரை நாம் அவ்விடத்தில் தங்கினோம். கிபிர் தாக்குதல்கள் மற்றும் பல் குழல் எறிகணைத் தாக்குதல்கள் என்பன மேற்கொள்ளப்பட்டன. மக்கள் பலர் கொத்துக் குண்டுகளால் கொல்லப்பட்டனர்.

இதேவேளையில் 'விசுவமடு பாதுகாப்பு வலயமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தினர் விமானங்கள் மூலம் துண்டுப்பிரசுரங்களை போட்டனர். இறுதியில் எம்மைப் பராமரிப்பதற்கு எனது கணவருக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர் கிட்டத்தட்ட 15 நாட்களாக எம்மைப் பார்க்க வரவில்லை. எமது பிரதான வீதியை நோக்கி இராணுவத்தினர் நகர்ந்து வருவதை நான் அறிந்துகொண்டேன். அவர்கள் செறிவான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்துடன் கிபிர் விமானங்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டன.

நான் சமையலறையில் அமைக்கப்பட்டிருந்த சீமெந்தினாலான புகைக்கூட்டின் கீழ் எனது பிள்ளைகளை பாதுகாத்து வைத்திருந்தேன். அதுவே வீட்டில் மிகப் பாதுகாப்பான இடமாக இருந்தது. இந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்தினர் நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி வீதி வழியாக வராது காட்டு வழியாக நகர்ந்து வந்து கொண்டிருப்பதாக எனது அயலவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். எனது கணவர் எங்கே என பிறிதொரு அயலவர் வந்து என்னிடம் கேட்டார். அவர் பணிக்காக சென்றிருந்தார்.

ஏற்கனவே எனது கணவர் என்னிடம் அறிவுறுத்தியிருந்தார். அதாவது "இராணுவத்தினர் நெருங்கி வந்து கொண்டிருந்தால் எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம். நாங்கள் உங்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியாது. நீங்கள் பொதுமக்களுடன் சேர்ந்து பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்லுங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

அதேநாள் இரவு எட்டு மணி, எனது கணவர் தனது தோழர்கள் இருவருடனும் நாம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்திருந்தார். "வேறிடம் செல்வதற்கு இன்னமும் பத்து நிமிடங்களில் ஆயத்தமாகவும்" என அவர் எம்மிடம் தெரிவித்தார். அப்போது நான் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்தேன். நான் எமது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான ஆயத்தத்துடனேயே இருந்தேன். கைவசம் குழந்தைப் பேறுக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய கூடை ஒன்றை வைத்திருந்தேன். அதனையும் மற்றைய இரு பிள்ளைகளுக்கும் தேவையான உடைகளையும் எடுத்துக் கொண்டு வேறிடம் செல்லத் தயாரானேன்.

"என்னை எதிர்பார்க்க வேண்டாம்" எனக் கூறியதுடன் அங்கு நின்ற மைத்துனர் ஒருவருடன் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். நான் எனது இரு பிள்ளைகளுடனும் அந்த மைத்துனருடன் இணைந்து இரு உந்துருளிகளில் விசுவமடுவை விட்டுப் புறப்பட்டோம்.

அதன்பின்னர், உடையார்கட்டு, சுதந்திரபுரம், இருட்டுமடு, தேவிபுரம், இரணைப்பாலை, வலையர்மடம்..... என எமது இடப்பெயர்வுகள் தொடர்ந்தன. இந்த இடங்களை இராணுவத்தினர் பாதுகாப்பு வலயங்கள் என அறிவித்திருந்தனர். ஆனால் நாம் எங்கே பாதுகாப்பாக இருக்கலாம் எனக் கருதுகின்றோமோ அங்கேயே தங்கியிருப்பது என தீர்மானித்தோம்.

40 வயதுடைய ஒருவரின் தலையில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் அவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். அவரைப் புதைக்கக் கூட முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தவர்கள் அவரின் இறந்த உடலத்தை துணியொன்றால் சுற்றிக்கட்டியவாறு மாட்டு வண்டி ஒன்றில் தாம் இடம்பெயர்ந்து செல்லும் இடத்துக்கு எடுத்துச் சென்றனர். இதை விட காயமடைந்த தமது உறவுகளையும் மக்கள் காவிச் சென்ற காட்சிகளையும் நான் கண்டுள்ளேன்.

எம்மால் சரியான பதுங்குகுழிகளைக் கூட அமைக்க முடியவில்லை. நாம் சமைப்பதற்கான தேவையான பொருட்களையும் அரிசியையும் கொண்டு வர மறந்தாலும் கூட பதுங்குகுழிகளை அமைப்பதற்குத் தேவையான மண்வெட்டியைக் எடுத்துச் செல்ல மறப்பதில்லை. எமது சேலைகளை பல பகுதிகளாக வெட்டி, அதற்குள் மண் போட்டு அவற்றை எம்மைச் சூழ அரணாக அமைத்து தங்கினோம். உடையார்கட்டுப் பிரதேசத்தில் நாங்கள் ஜனவரி 31, 2009 வரை தங்கியிருந்தோம். அதன் பின்னர் சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடுவில் 13 நாட்கள் மட்டுமே அதாவது பெப்ரவரி 13, 2009 வரை தங்கியிருந்தோம். நாம் அங்கு இருந்த போது பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெருமளவானோர் காயமடைந்தனர்.

அதன் பின் நாம் தேவிபுரம் என்னும் இடத்தை நோக்கி நகர்ந்தோம். இதுவும் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏழு நாட்கள் அதாவது பெப்ரவரி 20, 2009 மட்டும் நாம் அங்கு தங்கியிருந்தோம். பெப்ரவரி 21, நாங்கள் இரணைப்பாலை என்ற இடத்தில் பதுங்குகுழி ஒன்றுக்குள் இருந்தவேளையில், இராணுவத்தினர் வீசிய எறிகணைகள் எமது பதுங்குகுழிகளின் அருகில் வீழ்ந்து வெடித்தன. இதில் பல பொதுமக்கள் காயமடைந்தனர். இதன் பின்னர் நாம் வலையர்மடம் என்ற இடத்தை நோக்கி நகர்ந்தோம்.

எம்மிடம் இரு உந்துருளிகள் இருந்தன. எனது கணவரின் நண்பனிடம் உழவியந்திரம் ஒன்றிருந்தது. அவர் எம்மை உழவியந்திரத்தில் ஏற்றிச் செல்வார். வலையர்மடத்தில் ஒரு 'லெமன்பப்' பிஸ்கற் பெட்டியை ரூபா 800 கொடுத்து வாங்கினேன். வலையர்மடத்தில் நாம் ஒவ்வொரு நாளும் சோறு, பருப்புக் கறி மற்றும் மீன் ஆகியவற்றை சாப்பிட முடிந்தது. உணவைப் பெற்றுக் கொள்வதில் உண்மையில் நாம் நல்வாய்ப்பாளர்களாக இருந்தோம். ஏனெனில், எமக்கு நிறைய மக்களைத் தெரியும் என்பதாலும், குறிப்பாக நான் கர்ப்பிணி என்ற காரணத்தினாலும் அவர்கள் தம்மிடமிருந்த பொருட்களை எமக்கு தருவார்கள்.

மார்ச் 31, 2009 வரை அதாவது ஒரு மாத காலம் வரை நாம் வலையர்மடத்தில் இருந்தோம். மார்ச் 08, கடை உரிமையாளர் ஒருவர் தன்னிடமிருந்த உணவுப் பொருட்களை வாகனம் ஒன்றில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார். இதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதில் நானும் இணைந்து கொண்டேன். நான் அந்த வரிசையில் நகர்ந்து பொருட்களை வாங்கி அப்பால் செல்லும் போது அதில் விழுந்த எறிகணையில் வரிசையில் உணவுப் பொருட்களுக்காக காத்திருந்த ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். அவர்கள் பொதுமக்கள். இதில் எனது மகளுக்கு கற்பிக்கும் ஆசிரியரின் சகோதரி ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார். அவரது தலை வேறாகி பனைமரம் ஒன்றுக்குள் சிக்குண்டு கிடந்தது. உண்மையில் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பின்னர் நான் மனதளவில் குழப்பமடைந்தேன்.

எமது தமிழ் சமூகத்தின் வழமையின் படி, கர்ப்பிணியாக இருப்பவர் உண்மையில் இறந்த உடலத்தை பார்ப்பதில்லை. மரணித்தவர்களின் கல்லறைகள் இருக்கும் இடத்திற்கு அருகாகக் கூட பயணிக்க விரும்புவதில்லை. ஆனால் வலையர்மடத்தில், நாம் சுடுகாட்டில் தான் பதுங்குகுழி அமைத்து தங்கியிருந்தோம். எமக்கு அருகில் உடலம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது.

மாத்தளனில் உழவியந்திரம் ஒன்றில் ஆறு பேரின் உடலங்கள் ஒன்றாக ஏற்றிச் செல்லப்பட்டதை நான் நேரில் பார்த்தேன். குழி தோண்டும் இயந்திரம் குழி ஒன்றைத் தோண்ட அதற்குள் உடலங்களைப் போட்டு புதைத்த சம்பவமும் உண்டு. வலையர்மடத்தில், புதைக்கப்பட்ட இறந்த உடலங்களிலிருந்து கெட்ட மணம் ஒன்று எழும்பும். அவற்றை பறவைகள் கொத்தி தின்னும். நான் இவ்வாறான காட்சியைப் பார்த்து வாந்தி எடுத்திருக்கிறேன். அப்போதுதான் நான் முதல் தடவையாக எமது தலைவரை ஏசினேன்.

எல்லாப் பிள்ளைகளும் நோயால் அவதிப்பட்டனர். அத்துடன் வாந்திபேதி என்ற நோய் அவர்களை வாட்டியது. அந்த நேரத்தில் அங்கிருந்த குடும்பங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒருவர் வீதம் புலிகள் அமைப்புடன் இணையுமாறு அறிவிக்கப்பட்டது. பலாத்காரமாகவும் இணைக்கப்பட்டனர். மிகவும் பாதிக்கப்பட்ட மக்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் மூலம் வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றது.

2009 பெப்ரவரி தொடக்கம் புலிகளுக்கு தெரியாமல் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லத்தொடங்கினர். புலிகள் அமைப்பின் குடும்பங்கள் இவ்வாறு தப்பிச் சென்றன. எங்கள் தலைவர் சிறந்த திட்டம் ஒன்றை வைத்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் நாம் இறுதிவரை அங்கிருந்தோம். இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் மக்களை புலிகள் தடுத்தனர். மாத்தளனில், இவ்வாறு தப்பிச் சென்ற மக்களை தடுக்க முற்பட்ட புலி உறுப்பினர் ஒருவரின் கையை மக்கள் வெட்டினர். மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி தப்பிச் சென்ற வேளையில், புலிகள் மக்களை குறிவைத்து சுடவில்லை. அவர்கள் வானத்தை நோக்கியே சுட்டனர். இத்துப்பாக்கிப் பிரயோகத்தை இராணுவத்தினர் கேட்டபோது அவர்கள் பதில் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் மக்கள் இக்குறுக்கு சூட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டனர்.

எனது மூன்றாவது மகவைப் பெற்றெடுப்பதற்காக ஏப்ரல் 07 திகதி எனக்கு வழங்கப்பட்டிருந்தது. சத்திரசிகிச்சை செய்தே குழந்தை வெளியில் எடுக்க வேண்டி வரலாம் என வைத்தியர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர். வயிற்றிலிருந்த குழந்தையின் நிலை பற்றி அறிவதற்காக வலையர்மடத்திலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு செல்லுமாறு வைத்தியர்கள் எனக்கு அறிவுறுத்தினர். எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்ததால் என்னால் முள்ளிவாய்க்காலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் எனது கணவரின் உதவி எனக்கு தேவைப்பட்டது. அதன் பின் கணவர் நாம் இருந்த இடத்துக்கு வந்தார். நிலைப்பாட்டை விளங்கிக் கொண்ட அவர் என்னை முள்ளிவாய்க்காலில் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்த வைத்திய கலாநிதி சண்முகராஜாவிடம் கூட்டிச் சென்றார்.

பாதுகாப்பான இடங்களுக்கு குடும்பங்களை அனுப்புமாறு தலைவர் கட்டளையிட்டிருந்தார். இதனால் என்னை இந்தியாவுக்கு செல்லுமாறு எனது கணவர் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். அவருடன் தங்கியிருக்கவே நான் விரும்பினேன். இதனால் நான் அவரை விட்டுச் செல்ல மறுத்துவிட்டேன். முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையே இறுதியாக செயற்பட்டுக் கொண்டிருந்தது. இது வைத்தியசாலைக் கட்டடத்தில் செயற்படவில்லை. பாடசாலைக் கட்டடத்திற்குள்ளே இது செயற்பட்டது.

முதலில் இதில் புலி உறுப்பினர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களில் பெருமளவானோர் காயமடைந்ததால் மக்களுக்கான சிகிச்சையும் வழங்கப்பட்டது. நாம் வைத்தியசாலையை அடைவதற்கு சற்று முன்னர் வைத்தியசாலை மீது எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. நான் வைத்தியசாலையின் வாயிற்புறத்தை அடைந்த போது அப்போது தான் கொல்லப்பட்ட சிறுமி ஒருவரின் உடலத்தை நான் பார்த்தேன். அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். காயமடைந்த மக்கள் பலர் பெருத்த குரலில் அழுதுகொண்டிருந்தனர்.

அதன் பின்னர் நாம் வைத்திய கலாநிதி சண்முகராஜாவை சந்தித்து 'ஸ்கான்' பண்ணிக் கொண்டோம். அவர் குழந்தை நிலை இயல்பாக இருப்பதாகவும் கூறினார். அத்துடன் நான் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் குழந்தைப் பேறுக்காக வேறிடம் செல்ல வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். நான் வைத்தியசாலையில் இருந்த மலசலகூடத்துக்கு சென்ற போது அங்கே ஏழு வயதேயான சிறுவன் ஒருவன் ஒன்றரை வயது நிரம்பிய தனது தங்கையுடன் நிற்பதைக் கண்டேன். அவர்கள் இருவரும் அழுதுகொண்டிருந்தனர். அச்சிறுவனிடம் விசாரித்த போது அவர்களின் தந்தையார் சுதந்திரபுரத்தில் கொல்லப்பட்டு விட்டார் என்றும் தாயார் சற்றுமுன் நடந்து முடிந்திருந்த எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் எனவும் கூறினான்.

இந்த இரு சிறார்களின் நிலையைப் பார்த்த எனது கணவர் என்னிடம் "நீங்கள் இப்போது கப்பலில் போக மறுத்தால் எமது பிள்ளைகளும் இவ்வாறு தான் அழுதுகொண்டு நிற்பார்கள்" எனக் கூறினார். ஏப்ரல் 07 எனது கணவர் எமக்கான கப்பல் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். ஏப்ரல் 12 இரவு எம்முடன் கணவர் வலையர்மடத்தில் தங்கினார். இந்த இரவு நாம் எல்லோரும் ஒன்றாகத் தூங்கினோம்.

நான், எனது கணவர், எமது மகன் ஆகிய மூவரும் பதுங்குகுழிக்கு வெளியே படுத்திருந்தோம். எமது மகளும் எனது கணவரின் சகோதரனும் பதுங்குகுழிக்குள் உறங்கினர். நள்ளிரவு ஒரு மணி, இராணுவத்தினர் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். காலையில் நான் பார்த்த போது எறிகணையின் துண்டு ஒன்று எனது கணவருக்கும் மகனுக்கும் இடையில் விழுந்து கிடப்பதை நான் பார்த்தேன். ஆனால் அது எம்மை காயப்படுத்தவில்லை.

நாம் பயணிக்கவிருந்த கப்பல் எம்மிலிருந்து 250 மீற்றர் தொலைவில் தரித்து நின்றது. வழி நெடுக வாகனங்கள் மற்றும் ஆட்கள் நிரம்பியிருந்ததால் கப்பலைச் சென்றடைய கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் தேவைப்பட்டது. கணவரின் சகோதரன் உந்துருளி ஒன்றில் எமது பையை எடுத்து வந்தார். கணவர் எம்மை உந்துருளி ஒன்றில் ஏற்றிக் கொண்டு சென்றார். நாம் கப்பலை சென்றடைவதற்குள் கப்பல் புறப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் எமக்கு வந்தது. இதனால் எனது கணவர் மாத்தளன் ஊடாக செல்வதெனத் தீர்மானித்தார். அவ்வீதியால் பயணித்தால் இராணுவம் எறிகணைகளை மேற்கொள்ளும் என்பதால் இறுக்கி தன்னைப் பிடித்திருக்குமாறு கூறிய எனது கணவர் மிக வேகமாக உந்துருளியை ஓடினார். எமது ஏழு வயது நிரம்பிய மகள் உந்துருளியின் முன்புறத்திலும் ஒன்றரை வயதான மகன் எம் இருவருக்கும் இடையில் இருக்க எனது கணவர் வேகமாக உந்துருளியை செலுத்திய போது இராணுவத்தினர் எம்மீது தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். ஆனால் நாம் பாதுகாப்பாக கப்பலைச் சென்றடைந்தோம்.

கப்பல் சற்றுத் தொலைவில் நின்றதால் சிறிய படகொன்று மக்களை கப்பல் நின்ற இடத்துக்கு காவிச் சென்றது. வயதுபோனவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்களும் கப்பலில் ஏற்றப்பட்டனர்.

"நான் கப்பலுக்கு அருகில் வரவில்லை. ஏனெனில் எனது முகத்தை அடையாளங் கண்டுகொள்பவர்களால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம்" என எனது கணவர் தெரிவித்தார். பின்னர் அவர் எம்மை படகடியில் கொண்டு சென்று விட்டார். அவர் எம்மைப் பார்த்தவாறு நின்றார். நான் மகளை அவரிடம் அனுப்பினேன். மகள் தனது தந்தையிடம் இறுதி விடைபெற்று மீண்டும் படகுக்குள் வந்தார்.

"அம்மா, சகோதரன், புதிதாக பிறக்கவுள்ள குழந்தை மூவரையும் பார்க்கவேண்டியது நீங்கள் தான்" என எனது கணவர் மகளிடம் தெரிவித்தார். நாம் கப்பலைச் சென்றடையும் வரை அவர் எம்மைப் பார்த்தவாறு கரையில் நின்றார். பிரியும் போது அவர் அழவில்லை. நானும் அழவில்லை. கப்பல் நகரத் தொடங்கிய போது நான் அழத் தொடங்கினேன்.

பிள்ளைகள் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதையே எனது கணவர் விரும்பினார். யுத்தத்தினால் அவர் தனது கல்வியை இடைநிறுத்தியதாலேயே அவரின் மனதில் பிள்ளைகளை சிறந்த கல்விமான்களாக ஆக்க வேண்டும் என்ற இலட்சியம் இருந்தது. அத்துடன் எமது பிள்ளைகள் தமிழ் தேசியத்தில் பற்றுள்ளவர்களாக வளரவேண்டும் எனவும் அவர் எதிர்பார்த்தார். நான் எனது பிள்ளைகளுக்கு தூய தமிழ் பெயர்களையே வைத்துள்ளேன். மூன்றாவது குழந்தையை நான் வவுனியா வைத்தியசாலையில் பெற்றெடுத்தேன். அப்போதும் நான் தூய தமிழ் பெயரையே எனது பிள்ளைக்கு வைத்தேன்.

தற்போது ஒவ்வொரு தமிழ் கட்சிகளும் பல்வேறு திசைநோக்கிப் பயணிக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். மக்களை ஒன்றாக வழிநடாத்தக் கூடிய தலைமை ஒன்று தற்போது இல்லை என்றே நான் கருதுகிறேன். தமிழ் மக்களாகிய நாம் எமது வாழ்வை, உடைமையை, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். நாம் அவற்றை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் மிகப் பலமான, அர்ப்பணிப்புள்ள தலைமை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவை.

யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த, காணாமற் போன தமிழ்ப் பெண்கள் தமது பிள்ளைகளை வளர்த்தல் மற்றும் பொருளாதார விடயங்களில் அதிகம் துன்பங்களை சந்திக்கின்றனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் ஏழ்மையில் வாழ்கின்றனர். இதனால் அவர்கள் தமது பிள்ளைகளை சரிவரப் பராமரிக்க முடியாது உள்ளனர். எனது பிள்ளைகள் தொடர்பில் நான் மிக விழிப்பாக இருக்கிறேன்.

எனது கணவர் கொல்லப்பட்டு விட்டார் என்றோ அல்லது அவர் தற்போதும் உயிர் வாழ்கின்றார் என்பது பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. இதனாலேயே கனடாவில் வாழும் எனது தகப்பனார் என்னை அங்கு வருமாறு அழைக்கின்ற போதும், இரு ஆண்டுகளாக மறுப்புத் தெரிவித்து வருகிறேன். எனது கணவர் தொடர்பான செய்தியை அறியும் வரை நான் கனடா செல்ல விரும்பவில்லை.

மாவீரர் தினமன்று எனது மகள் விளக்கேற்ற விரும்புவார். இது அவர் தானாக விரும்பி செய்வது. நான் அவரின் முயற்சியைத் தடுப்பதில்லை. ஏனெனில் அவர் தமிழ் கலாசாரத்தில் வளர்ந்த பிள்ளை என்பதால் மாவீரர்களுக்கு விளக்கேற்ற வேண்டும் என்பதை உணர்ந்துள்ளார். எனது மூன்று பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதன் பின் அவர்கள் தமது வாழ்வை தாமே தீர்மானித்துக் கொள்வார்கள். நாங்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்போம்.

நாம் இந்தக் கிராமத்துக்கு வந்தபோது இங்குள்ளவர்கள் எம்முடன் நட்பாக பழகினர். ஆனால் இங்கு தொடர்ச்சியாக படுகொலைகள் இடம்பெற்ற போது அவர்கள் எம்முடன் பழகுவதைத் தவிர்த்தனர். ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் என்பன மக்களின் மனங்களில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளன. நான் தற்போது வாழும் கிராமத்திற்கு அருகில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. வன்னியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்லது புலிகளுக்கு ஆதரவானவர்கள் இவ்வாறு அதிகம் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் உள்ளனர். இதன்காரணமாகவே எனது அயலவர்கள் என்னுடன் கதைக்க விரும்பவில்லை. சிலவேளைகளில் நான் தனிமையை உணர்கிறேன்.

http://www.puthinappalakai.com/view.php?20120328105880

*The Social Architects -TSA are comprised of a diverse group of writers, intellectuals and working professionals. While most of TSA’s members hail from the country’s North and East, the group also includes other scholars and activists who have been working on issues related to Sri Lanka. TSA seeks to educate, to inform and to provide timely, thoughtful analysis on a range of topics.

மனத்தை பிழிந்தது.

இன்று எமது மக்களுக்கு ஒரு அரசியல்தீர்வை நாம் பெறுவது மூலம் எமது மக்களின் நீண்டகால நல்வாழ்க்கையை உறுதிப்படுத்த அனைவரும் பங்களிக்கவேண்டும்.

நெஞ்சம் கனக்கிறது.

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மனசு கனக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

இந்த மக்களுக்கு நாங்கள் என்ன செய்ய போகிறோம்.

உரிமையுடன் வாழும் ஒரு நாட்டை பெற்று கொடுப்பதை தவிர.

மனதை பிழியும் சோகம், ஆனால் அதையும் மீறி கொண்ட நெஞ்சுரம் என்று பிரமிக்க வைக்கும் பெண். ஓர் தாயாக மனைவியாக அவன் வருகையுடன் ஆனந்தமாகட்டும் அவள் வாழ்வு வெகு விரைவில் என்று பிரார்த்திக்கிறேன்... நன்றிகள் தங்கள் பகிர்வுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிரந்தரமான நல்ல முடிவு ஒன்று தேவை என்பதை மீண்டும் அடித்து கூறுகிறது மேற்படி பெண்ணுக்கு நடந்தது போன்ற பல சம்பவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மிகவும் கவலையாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.