Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கேனம்மா இயக்கமானீங்க ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கேனம்மா இயக்கமானீங்க ?

அம்மோய்....எப்பம்மா உடுப்பு வாங்குவீங்க ? மூத்தவன் நச்சரித்துக் கொண்டிருந்தான்.

அம்மாட்டைக் காசில்லத்தம்பி....! கொஞ்சம் பொறய்யா அம்மாக்கு வேலைகிடைச்சதும் வாங்கித்தாறன்....!

நீங்க பொய் சொல்றீங்க....சிணுங்கினான்;.

இப்படித்தான் தீபாவழிக்கும் சொல்லிச் சமாளித்தாள். தீபாவழி போகட்டும் புதுவருசத்துக்கு என்ற வாக்குறுதியும் பொய்யாகி இன்று சின்னவனும் அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.

கத்தியழுதாலும் காயம் ஆறாத வலியாகப் பிள்ளையின் கெஞ்சல் அவளைக் கொன்று கொண்டிருந்தது. ஒவ்வொரு நேரச்சோற்றுக்கும் அந்தரிக்கிற அவலத்தை எப்படித்தான் புரிவிப்பதோ என்ற பெரிய துயர் அவளுக்கு.

எல்லாம் உங்களாலையும் அம்மாவாலையும் தான்....! நீங்க மட்டுமேன் இயக்கமானீங்க...? நாங்க அனாதையாகவா...? நீங்க வேண்டாமெங்களுக்கு....! மாலையோடு அந்தக் குடிசையில் தொங்கிய தகப்பனின் படத்தை எடுத்து முற்றத்தில் எறிந்தாள் மகள் காவியா.

மகனைச் சமாளிப்பதில் கவனமாயிருந்தவளுக்கு ஏதோ உடைகிற சத்தம் கேட்டு முற்றத்திற்கு வந்த போது மூச்சே நின்றது போலிருந்தது.

மகள் என்னம்மா செய்றீங்க ? அப்பான்ரை படமெல்லம்மா....! எங்கட்டை மிஞ்சியிருக்கிறது இதுமட்டுமெல்ல மகள்....! அவள் அழுதபடி உடைந்த கண்ணாடித் துண்டுகளை விலக்கி தனது மாவீரனான கணவனின் படத்தைக் கையில் எடுத்தாள்.

நீங்கேனம்மா இயக்கமானீங்க ? அப்பா ஏனம்மா இயக்கமானவர் ? நீங்க ரெண்டு பேரும் இயக்கமாகாட்டிக்கி நாங்க நல்லாயிருந்திருப்பம்....! 12வயதான அந்தக் குழந்தையின் கேள்விகளுக்கும் கோபத்துக்கும் அவளால் எதையும் சொல்ல முடியாது போனது.

அம்மாவும் அப்பாமாதிரிச் செத்துப்போறன் நீங்க இருங்கோ.....அழுதழுது கணவனின் படத்தை சாமிப்படங்களோடு வைத்து மாலையையும் கொழுவிவிட்டு முற்றத்தில் வந்திருந்து அழுதாள்.

கடவுளே சாமி உனக்குக்கூட கண்ணில்லையா....? விழுந்த செல்லொண்டு என்ரை தலையிலயும் விழுந்திருக்காம ஏன் உயிரோடை வாழ வைச்சியோ.....? முள்ளிவாய்க்காலில எத்தினை உயிருகள் போச்சுது எங்களையும் அதில சாகடிக்காம ஏன் கடவுளே என்னை வாழ வைச்சா.....?

சின்னவன் ஓடிவந்து அவளோடு ஒட்டிக்கொண்டான். மூத்தவனும் மகளும் திண்ணையில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கண்களுக்குள் கூடுகட்டிய நீர்த்துளிகளை சின்னவன் துடைத்துவிட்டான். அவளின் கண்ணீரையும் கடவுளர்கள் மீதான கோபத்தையும் புரிந்து கொள்ள முடியாத 3வயதுக் குழந்தையான அவனின் கைகளே அவளை அப்போது ஆறுதல்படுத்திய பெரிய கையாகியது. அவளைப் பார்ப்பதும் அண்ணனையும் அக்காளையும் முறைப்பதுமாக அவனது சின்ன விழிகளையும் கோபம் முட்டிக்கொண்டது. அம்மாவின் கண்ணீருக்கு முழுக்காரணமும் அவர்கள் போல அவர்கள் மீதான தனது கோபத்தையும் தனது பார்வையால் தெரிவித்தான்.

000 000 000

13வயதில் பருவமடையும் முன்னமே போராளியாகிப் போனவள். பயிற்சிக் களத்திலிருந்து பயிற்சி முடித்து சண்டைக்களம் போனது முதல் பொறுப்பாளர்கள் வரையும் சின்னவளென்ற அடைமொழியோடு நேசிக்கப்பட்டவள். அவளுக்கு எழுதப்பட்ட காதல் கடிதங்களை நேரே கொண்டு போய் பொறுப்பாளரிடம் கொடுத்துவிடுகிற அவளது நேர்மையை நம்பிய பொறுப்பாளர்களுக்கும் சக போராளிகளுக்கும் அவள் மீதான நம்பிக்கையையும் மதிப்பையும் உயர்த்தியது.

அப்போது அவளுக்கு 17வயது நடந்து கொண்டிருந்தது. அவளுக்கெல்லாம் காதல் வராதென்று ஆழமாகவே நம்பினார்கள். அந்த நம்பிக்கையில் அவளே முன்னுக்கு எல்லா வேலைகளுக்கும் அனுப்பப்படுவது வளமை.

அதுவரையில் அவளுக்காக எழுதப்பட்ட கடிதங்களையெல்லாம் பொறுப்பாளரிடம் கொண்டு போய்க்கொடுத்த அசட்டுப்பிள்ளையான அவளுக்கு பயிற்சியாசிரியனாயிருந்த ஒரு போராளி அவள் மீதான தனது காதலைக் கடிதமாக்கி எழுதிக் கொடுத்தான். அந்தப்பதினேழாவது வயதில் அவளுக்கு எழுதப்பட்ட அந்த ஒரு கடிதத்தை அவள் மறைத்தேவி;ட்டாள்.

உங்கடை விருப்பத்தைச் சொல்லுங்கோ பிரச்சனையில்லை நான் பொறுப்பாளரோடை கதைக்கிறன்....பச்சைமட்டையடி விழுந்தா....அப்பிடியொண்டும் நடவாது என்னை நம்புங்கோ...என்ற அவனது வாக்கில் நம்பிக்கை வைத்து கடிதத்தோடு தனது சம்மதத்தையும் தெரிவித்தாள்.

அண்ணையாக்களுக்கு பச்சைமட்டையடி விழுறேல்லயோ ? கேட்டவளுக்குச் சொன்னான். உங்கடை அக்காக்கள் போல எங்கடை அண்ணாக்கள் பொல்லாதவங்களில்லை.....அப்ப எனக்கு அடிவிழாதுதான.... இல்ல...நானிருக்கிறன்....என்றவனில் நம்பிக்கை வைத்து அவனைக் கனவுகளில் ஏற்றிக் கொண்டாள்.

அவளது விருப்பத்தை அறிந்து கொண்டவன் மேலிடத்திற்குத் தனது விருப்பையறிவித்தான். இவளது பொறுப்பாளருக்கு விடயம் அறிவிக்கப்பட்டு இவள் பொறுப்பாளர் அக்காவின் முன் அழைக்கப்பட்டாள்.

காதலோ ? ஓமக்கா...? அவர்தான் கடிதம்...சொல்லி முடிக்க முதல் வாயைப்பொத்தி விழுந்த அடியில் மீதிச் சொற்கள் வரவேயில்லை. காதலுக்கான தண்டனைகள் ஏற்கனவே அறிந்திருந்தும் அந்த நிமிடம் வரை அதன் வலியை அவள் உணரவேயில்லை.

காதலுக்காக 10 பச்சைப்பனம் மட்டைகள் முறியும் வரை பொறுப்பாளர் அக்கா அடித்த அடிக்காயம் ஆறமுதல் காதலித்த குற்றத்திற்காக களமுனைக்கு அனுப்பப்பட்டாள். அவள் களத்திற்குச் செல்லப்பின்னடிக்காமல் தானாகவே போகிறேன் எனப் போனாள். களமுனை போன 4வது நாளில் காலொன்றில் காயமடைந்து பதுங்குகுளி வாசலில் விழுந்து கிடந்தது மட்டுமே ஞாபகம். பின்னர் கண்விழித்த போது மருத்துவமனையில் இருந்தாள்.

ஒரு வெள்ளிக்கிழமை அவளுக்கு காதல் சொல்லி பச்சைமட்டையடி வாங்க வைத்தவன் வந்திருந்தான். விழுந்த பச்சைமட்டையடிதான் நினைவுக்கு வந்தது. வாங்கிய அடிகூட அவனைக்கண்ட போது வலிக்கவில்லைப் போல சிரித்தாள்.

ஐயோ திரும்பியும் 10பச்சைமட்டையடி வாங்க என்னாலை ஏலாது...இடத்தைக் காலிபண்ணுங்கோ பனம்மட்டையைக் கண்டாலே காச்சல் வரும்போலையிருக்கு....இனியப்பிடியெல்லாம் நடக்காது ஆனா ஒரு சின்ன மாற்றம்...என இழுத்தான்.

என்ன...? உங்களுக்கு அரசியல் வகுப்பெடுத்த ஆளைத் தெரியுமா ? ஓம் புகழண்ணா...ம்..அவன் உங்களைக் கனநாளா விரும்பியிருக்கிறான்.... நான் அவனுக்கு உங்களை விட்டுக்குடுக்கிறன்.... அவனைக் கலியாணம் செய்யுங்கோ....நல்ல பெடியன்....என இன்னொருவனுக்கு சான்றிதழ் வழங்கிச் சிரித்தான்.

என்ன நான் சின்னப்பிள்ளையெண்டோடனும் ஆளாளுக்கு விளையாடுறீங்களா ? உண்மையிலேயே கோபித்தாள். நான் உங்களைத்தான் விரும்பினான்....புகழண்ணாட்டை போய்ச் சொல்லுங்கோ....எனச் சினந்தாள். அவன் சொல்ல முயற்சித்த சமாதானமெல்லாவற்றையும் மறுத்து முகத்தை மூடிக்கொண்டு படுத்தாள்.

என்னடா இது....வில்லங்கத்துக்கு காதலெண்டாங்கள் பிறகு இன்னொருத்தனுக்காக விட்டுக் குடுக்கிறதெண்டு....சிலவேளை அவன் விளையாட்டாகத்தான் தன்னைக் காதலித்தானோ என நினைத்தாள். கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது.

அன்றைய பின்னேரமே புகழ் வந்திருந்தான். புகழோடு அவள் காதலித்து காதலித்ததற்காக பச்சைமட்டயைடி வாங்க காரணமாயிருந்த பயிற்சியாசிரியனும் அவளது பொறுப்பாளரும் வந்திருந்தார்கள். புகழை அவள் திருமணம் செய்வதே பொருத்தமென தீர்ப்பு இறுதி முடிவாகியது.

நான் மாட்டன் என்னாலை ஏலாது....மறுத்தாள். இறுதி முயற்சியாக புகழ் அவளோடு தனியே கதைக்க வழிவிட்டு இருவரும் ஒதுங்கினார்கள். போதகர்களின் ஓதல் போல புகழின் பேச்சு... அவள் மீதான தனது காதலை வெளிப்படுத்த அவன் எடுத்த முயற்சிகள் பற்றியெல்லாம் புகழ் கதைகளாய் சொன்னான். ஆனால் அவளது முடிவு புகழ் வேண்டாமென்றதாகவே அமைந்தது.

000 000 000

அவள் நேசித்தவன் அவளை ஒருதரம் சந்தித்த போது சொன்னான்.

புகழை நீங்க கட்டாட்டி நானும் கட்டமாட்டன்....!

அப்ப நீங்கள் முடிவெடுத்திட்டீங்களா ? ஓம்....புகழ் பாவம்....அவனும் நானும் பயிற்சியெடுத்தது இயக்கத்துக்கு வந்தது எல்லாம் ஒண்டாத்தான்....அவனுக்காக இல்லாட்டியும் எனக்காக ஓமெண்டு சொல்லுங்கோ.....கடைசி முயற்சியாக இப்படித்தான் சொல்லிவிட்டுப் போனவன் பிறகு அவளைச் சந்திக்கவில்லை.

சிலமாதங்கள் இடைவெளி முடிந்து காயம் மாறி திரும்பியும் சண்டைக்குப் போகப்போவதாக அடம்பிடித்து பொறுப்பாளரின் முன் போய் நின்றாள். அவளைச் சந்திப்பதற்கான காரணங்களை ஏற்படுத்திக் கொண்டு அவளது இடத்திற்கு புகழ் போய்வரத் தொடங்கினாள். களமுனைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு அரசியல் பணிக்கு அனுபப்பட்டாள்.

மெல்லெனப்பாயும் நதியாய் புகழ் கல்லாயிருந்த அவளைக் கரையச் செய்தான். ஒருவருட முடிவில் புகழுக்கும் அவளுக்கும் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அவள் நேசித்தவனும் வந்திருந்தான். எதுவும் நடக்காதமாதிரியே அவனது கதைகள் இருந்தது. அவனைக் கண்டதும் நெஞ்சுக்குள் ஒரு வலி அவளைத் தாக்கிச் சென்றது பொய்யில்லை.

எனக்குக் கலியாணம் பேச வேணும் ரெண்டு பேரும் தான்....புதிய குண்டொன்றை இருவருக்கும் போட்டுவிட்டுப் போனான் அவள் முதல் நேசிப்புக்கு உரியவன்.

000 000 000

புகழோடு வாழத்தொடங்கி 1வது குழந்தை பிறந்திருந்த நேரம் குழந்தையைப் பார்க்க அவன் போயிருந்தான். அவனே எதிர்பார்க்காத ஆச்சரியம் அவனுக்காக புகழும் அவளும் செய்திருந்தார்கள். முதற்குழந்தை ஆண் குழந்தையாகியதால் அவனது பெயரையே பிள்ளைக்கும் சூட்டியிருந்தனர்.

எனக்கு கலியாணம் பேசுகினம்...! சொன்னான். பிடிச்சா சொல்லுங்கோ கட்டிறன்....என அவனுக்காக கேட்டுவந்த பெண்போராளியின் படத்தை அவளிடம் நீட்டினான். மறுநாள் வரை அவகாசம் கொடுத்துவிட்டுப் போனான். அவள் முடிவுக்காக.

மறுநாள் பின்னேரம் போனான். என்ன பிடிச்சுதோ ? நீங்க சொன்னா கட்டிறன்....அந்தப்பிள்ளைக்கு உங்களை விரும்பமோ ? கேட்டாள். வாழ்ந்தா நானெண்டு பிள்ளை நிக்குது....எனச் சிரித்தான். எனக்கும் பிடிச்சிருக்கு கட்டுங்கோ.....

அவனது திருமணத்திற்கு இவளும் புகழும் குழந்தையும் போயிருந்தார்கள். தனது மனைவிக்கு அவளைப்பற்றி எல்லாமே சொல்லியிருந்தான். அவளே அவளைத் தெரிவு செய்தாகவும் சொல்லியிருந்தான்.

காதல் பிரிவு இன்னொருவருக்காக விட்டுக்கொடுத்தமையென அவையெல்லாம் பெரிய பிரச்சனையாக இல்லாமல் இரு குடும்பத்திற்குள்ளும் நல்ல நட்பும் வளர்ந்திருந்தது.

நாட்டுநிலமையின் மாற்றம் களமாகியபோது இரண்டு வீட்டு ஆண்களும் களத்தில் நின்றார்கள். 2008இல் அவள் காதலித்தவன் வீரச்சாவென வானொலியில் செய்தியும் ஈழநாதத்தில் அஞ்சலியும் வந்திருந்தது. இவர்கள் இருந்த இடத்திலிருந்து அஞ்சலி நிகழ்ந்த இடத்திற்குப் போக முடியாத தூரமும் அவள் 3வது குழந்தையைக் கருவில் சுமந்து கொண்டிருந்தாள்.

2009மாசிமாதம் ஒருநாள் நிகழ்ந்த எறிகணைத் தாக்குதல் அவர்கள் வாழ்ந்த தறப்பாளின் அருகருகாயும் விழுந்து வெடித்துக் கொண்டிருந்தது. பதுங்குகுளிக்குள் இறங்கும் அவசரத்தில் 7வது மாதக்கற்பிணியாய் இருந்த அவளை யாரோ அவசரத்தில் தள்ளிவிட பதுங்குகுளியில் விழுந்துவிட்டாள். என்ன நடந்ததோ அன்றே அவள்; குழந்தையைப் பெற்றுக்கொண்டாள்.

ஒருவகையாக அவளது குழந்தை உயிர்காக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் போய்ச் சேர்ந்தார்கள். புகழ் களத்தில் அவள் 3குழந்தைகளோடும் பதுங்குகுளியும் பட்டினியுமாக எல்லோரோடும் போய்க்கொண்டிருந்தாள். கடைசிக்குழந்தையின் உயிர் போய்விடும்போன்ற நிலமையிலும் நம்பிக்கையோடு குழந்தையை காப்பாற்றிக் கொண்டு போனாள்.

மேமாதம் 12ம் திகதி புகழ் அவள் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து வந்திருந்தான். அவனைக் கண்ட நேரம் அழுகையாலே அவனை வரவேற்றாள். வந்தவன் சரணடையும் முடிவைச் சொன்னான். கடைசியாய் கழத்திலிருந்து குப்பியையும் எறிந்துவிட்டதாகச் சொன்னான். அவரவர் தங்களது முடிவுகளைத் தேடிக்கொள்ள புகழும் அவளும் 3பிள்ளைகளோடும் மே16ம் திகதி எதிரியிடம் சரணடைந்தார்கள். அவள் போராளியென்றது மறைக்கப்பட்டு அவன் மட்டுமே போராளியென அடையாளம் காட்டப்பட்டான்.

அவளும் பிள்ளைகளும் முகாமுக்குப் போக அவன் தனியாகக் கொண்டு செல்லப்பட்டான். பிள்ளைகளோடு முகாமில் அவள் பட்ட வலிகள் சொல்ல வார்த்தைகளில்லை. ஒருநாள் உணவுக்கு வரிசையில் நின்ற போது எதிர்பாராத வகையில் அவள் காதலித்தவனின் மனைவியைக் கண்டாள். இவளைக் கண்டதும் அவள் அழுதாள். கையில் ஒரு பெண் குழந்தையோடு வரிசையில் நின்றாள். இவளும் அழுதாள். பின்னர் இருவரும் சுகநலம் விசாரித்தார்கள் எல்லோருக்கும் பொதுவான கண்ணீரும் துயரமும் இருவரிடமும் சொல்ல முடியாத துயங்கள் நிறைந்திருந்தது.

000 000 000

மீள்குடியேற்றம் என்ற போது வன்னிக்குள் போயிருக்க அவளுக்கு யாருமில்லாது போனதால் தனது ஊருக்குப் போக பதிவு செய்தாள். சட்டம் பதிவு விசாரணையென எல்லாக் கதவுகளையும் தாண்டி ஊருக்குப் போய் உடன் தாயிடம் தான் போனாள்.

எல்லாவற்றையும் இழந்து போய் வருகிற மகளை அம்மாவும் சகோதரர்களும் ஓடிவந்து அணைப்பார்கள் என்று நம்பியவளுக்கு எல்லாம் தலைகீழாக நிகழ்ந்தது. அவள் சொத்தாக கொண்டு வந்த சில உடுப்புகளையும் அள்ளியெறிந்தாள் அம்மா.

எங்க வாறா இப்ப....? எங்களை விட்டிட்டு பதிமூணு வயசில போகேக்க அம்மா அப்பா தெரியேல்ல இப்ப வாறாவாம்....தாயின் வாயில் வந்த பேச்சும் அண்ணன்களின் அண்ணிமாரின் ஆற்ற முடியாத திட்டும் அவளைத் தெருவில் நிறுத்தியது.

தன்னோடு கூடவிருந்த ஒரு போராளியின் வீட்டில் போய் தனது ஏமாற்றம் இயலாமை அழுகை எல்லாவற்றையும் கொட்டியழுதாள். சுpலநாட்கள் அந்தப் போராளியே இவளுக்கான தங்குமிடம் உணவு யாவற்றையும் கொடுத்து அடைக்கலமாதாவானாள்.

தனது காணியில் இவளுக்கொரு துண்டை எழுதியும் கொடுத்தாள். வரும் போது மிஞ்சிய மகளின் தோடும் ஒரு சங்கிலியையும் விற்று பிள்ளைகளுக்காகவும் தனக்காகவும் 30ஆயிரம் ரூபாவிற்கு ஒரு குடிசை போட்டாள். இயலாத தனது காலோடு தானே எல்லாவற்றையும் செய்து குடிசையை அமைத்தாள்.

உதவி வேண்டி அந்த மாவட்டத்திலிருந்த பல நிறுவனங்களுக்கு ஏறியிறங்கினாள். தனது பிள்ளைகளுக்குப் படிப்பையேனும் வழங்க உதவிகள் வேண்டினாள். எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக கிறிஸ்தவ திருச்சபையொன்றில் போய் தனது கவலைகளையெல்லாம் மதகுரு ஒருவரிடம் கொட்டியழுதாள்.

என்னாலை படிக்க முடியாமப்போட்டுது....என்னாலை இப்ப ஒரு தொழிலையும் செய்ய முடியாம இருக்கு என்ரை பிள்ளையளைத் தத்தெடுங்கோ பாதர்....என மண்டியிட்டு அழுதாள். அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்லாத பிள்ளைகளைத் தானம்மா நாங்க பொறுப்பெடுக்கலாம் அம்மா நீங்கள் உயிரோடை இருக்க அதை நாங்க செய்யேலாதம்மா....அப்ப நான் செத்துப்போறன் பாதர் என்ரை பிள்ளையளை எடுங்கோ...என்ரை பிள்ளையளை படிப்பிச்சு விடுங்கோ பாதர்.....என அழுதவள் அந்த மதகுருவின் காலில் விழுந்து கெஞ்சினாள்.

அவ்வளவு நேர மன்றாட்டையும் விட அவள் காலில் விழுந்தது அந்த மதுகுருவையும் கரைத்து விட்டதோ என்னவோ பிள்ளைகளை மாணவர் விடுதியொன்றில் சேர்த்து விடுவதாக ஒத்துக் கொண்டார். ஆனால் பிள்ளைகளுக்கான சவர்க்காரம் , உடுப்பு , கல்வியுபகரணங்கள் யாவும் இவள் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு மூத்தவனையும் மகளையும் அந்த மதகுருவிடம் பொறுப்புக் கொடுத்தாள்.

தன் சிறிய பிள்ளைகள் இரண்டையும் பிரிய மனமில்லாத வேதனை ஒளித்துக் கொண்டு பிள்ளைகள் இரண்டும் அழஅழ மாணவர் விடுதியில் விட்டுப் போனாள். மாதம் ஒருமுறை போய்ப் பார்த்துவருவாள். பிள்ளைகள் இரண்டும் வீட்டுக்கு கொண்டு போகச் சொல்லி ஒவ்வொரு முறையும் அழுகிற கண்ணீரை தாங்க முடியாது வீட்டில் வந்து தன்னை நெருப்பால் சுட்டு அழுது ஆற்ற முடியாத துயரில் கரைவாள்.

பிள்ளைகளின் பிரிவு அவளாலும் தாங்க முடியாத கட்டம் வந்த போது மாதத்தில் இரண்டு வார இறுதி நாட்களில் பிள்ளைகளை வீட்டுக்கு கொண்டு வந்து திங்கள் திருப்பியனுப்புவாள். வீட்டுக்கு வந்து திரும்புகிற ஒவ்வொரு முறையும் வீடு மரண வீடுபோலிருக்கும். 13வயதில் தாயை உறவுகளைப் பிரிந்த பாவமோ தன்னையும் பிள்ளைகளிடமிருந்து பிரிக்கக் காரணமோ எனவும் கனதரம் யோசித்திருக்கிறாள்.

பிள்ளைகளைப் பிரிதல் துயராயினும் அவர்கள் படித்து முன்னேறிவிட வேண்டுமென்ற கனவில் பிரிவின் துயரையும் வெளிக்காட்டாமல் மனசைக் கல்லாக்கினாள். மாதம் இருமுறை பிள்ளைகளை கொண்டு வந்து திருப்பியனுப்பும் போதும் அவர்களுக்குத் தேவையான சவர்க்காரம் முதற்கொண்டு யாவும் வாங்கிக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் நிறைவேற்ற பணமே முன்னுக்கு தேவை. கிடைத்த நிவாரணத்தை விற்றும் தெரிந்தவர்களிடம் கையேந்தியும் சமுர்த்தி வேலைக்குப் போய் கிடைக்கிற அரிசி, மா , சீனியை விற்றும் சமாளித்தாள்.

அப்போதுதான் வெளிநாட்டுத் தொடர்பொன்று கிடைத்தது. தொடர்பில் வந்தவன் அக்கா அக்காவென தினமும் இலங்கைநேரம் 6மணிக்கு அவளைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வான். அவளுக்கு சுயதொழிலாக கடையொன்று போட்டுத் தருவதாகவும் சயிக்கிள் எடுத்துத் தருவதாகவும் பிள்ளைகளின் கல்விக்கு உதவவுதாகவும் வாக்குறுதி கொடுத்தான். 3வாரம் கதைத்து முடிய 5ஆயிரம் ரூபா அவளது வங்கிக்கு அனுப்பி வைத்தான்.

5ஆயிரம் ரூபா அனுப்பிவிட்டு தினமும் தொலைபேசியில் பேசி நம்பிக்கையை விதைத்தான். 2மாதம் தொடர்ந்து அழைப்பதும் இதோ கடை திறப்பதற்கு ஒரு லட்சரூபா வருகிறதென கதைசொல்லிக் கொண்டிருந்தவன் தொடர்பையறுத்துக் கொண்டான். அவன் கொடுத்த தொலைபேசியிலக்கத்திற்கு அழைத்தும் பதிலில்லை. 4மாதம் முடிந்தது. தொலைபேசியும் இல்லை உதவியும் இல்லை. உதவுகிறேன் என வந்தவனும் பொழுது போக கதைத்திருக்கிறான் போல. ஒரு கட்டத்தில் சலிப்பும் வெறுப்பும் ஒன்றாகி ஏனடா வாழ்க்கையென்ற நிலமையாகிவிட்டது.

கையில் முதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாத நிலமை. நாளுக்கு நாள் ஏறிப்போகிற விலைவாசியில் சம்பலும் சோறும் கொடுக்கவே பெரிய திண்டாட்டமாக வாழ்க்கையை எப்படிக் கொண்டு போவதென்ற சொல்ல முடியாத துயரை இந்தப்பிள்ளைகளுக்கு எப்படிப் புரிய வைப்பதென்று தெரியவில்லை. ஒன்றாய் பிள்ளைகளையும் அழித்துத் தானும் செத்துப்போய்விட வேணும் போலிருந்தது.

01.06.2012

http://mullaimann.bl.../blog-post.html

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக எல்லாவற்றையும் தந்தவர் நிலை கண்டு

வலிக்கிறது

கனக்கிறது

சுமக்க முடியாமை கண்டு கண்கள் பனிக்கின்றன....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உன்னதமான ஒரு நோக்கத்திற்காகப், போராடப் போனதில்லும் தவறில்லை!

அவர்களுக்கும், மனித உணர்ச்சிகள் தலை காட்டியதிலும் தவறில்லை!

எதையும் அறியாத, அந்தக் குழந்தையின் ஏக்கத்திலும் தவறில்லை!

கண்ணீரை வரவழைக்கும், கதை சாந்தி!

ஏதோ ஒரு குற்றவுணர்வும்,இயலாமையும் மனதை உறுத்திக் கொண்டிருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

கதை தாயக் சோகத்தை சொல்கிறது எழுத்துநடை மிகவும் அபாரம். பாராட்டுக்கள்.

மிச்சம் மீதி இருக்கும் எம் உறவுகளையும் வாழ வைக்க முடியாத இயலாமை வருத்துகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்தின் பெருந்துயர்

எப்போது கலையும்?

இசைக்குரல்கள்

ஒலியிழந்து

ஒழுகும் ஊமை அழுகையை

நிறுத்தும்

அனைத்துக் கைகளும்

நன்றிக்குரியவை

அப்போதுதான் வெளிநாட்டுத் தொடர்பொன்று கிடைத்தது. தொடர்பில் வந்தவன் அக்கா அக்காவென தினமும் இலங்கைநேரம் 6மணிக்கு அவளைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வான். அவளுக்கு சுயதொழிலாக கடையொன்று போட்டுத் தருவதாகவும் சயிக்கிள் எடுத்துத் தருவதாகவும் பிள்ளைகளின் கல்விக்கு உதவவுதாகவும் வாக்குறுதி கொடுத்தான். 3வாரம் கதைத்து முடிய 5ஆயிரம் ரூபா அவளது வங்கிக்கு அனுப்பி வைத்தான்.

5ஆயிரம் ரூபா அனுப்பிவிட்டு தினமும் தொலைபேசியில் பேசி நம்பிக்கையை விதைத்தான். 2மாதம் தொடர்ந்து அழைப்பதும் இதோ கடை திறப்பதற்கு ஒரு லட்சரூபா வருகிறதென கதைசொல்லிக் கொண்டிருந்தவன் தொடர்பையறுத்துக் கொண்டான். அவன் கொடுத்த தொலைபேசியிலக்கத்திற்கு அழைத்தும் பதிலில்லை. 4மாதம் முடிந்தது. தொலைபேசியும் இல்லை உதவியும் இல்லை. உதவுகிறேன் என வந்தவனும் பொழுது போக கதைத்திருக்கிறான் போல. ஒரு கட்டத்தில் சலிப்பும் வெறுப்பும் ஒன்றாகி ஏனடா வாழ்க்கையென்ற நிலமையாகிவிட்டது.

பூனைக்கு விளையாட்டாம் சுண்டெலிக்குச் சீவன் போகுதாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக எல்லாவற்றையும் தந்தவர் நிலை கண்டு

வலிக்கிறது

கனக்கிறது

சுமக்க முடியாமை கண்டு கண்கள் பனிக்கின்றன....

எங்களுக்காக எல்லாவற்றையும் தந்து இன்று எதுவுமற்றுப் போயினர் ஆயிரமாயிரம்....

எதையும் அறியாத, அந்தக் குழந்தையின் ஏக்கத்திலும் தவறில்லை!

இப்போது பிள்ளை வீட்டிற்கு வந்து விடுதிக்கு திரும்பும்வரை தகப்பனின் படத்தை தாய் ஒளித்து வைத்துவிடுகிறாள்.

மிச்சம் மீதி இருக்கும் எம் உறவுகளையும் வாழ வைக்க முடியாத இயலாமை வருத்துகின்றது.

சின்னச் சின்ன உதவிகளே அவர்களை இன்றும் நம்பிக்கையுடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

காலத்தின் பெருந்துயர்

எப்போது கலையும்?

பெருந்துயரைக் கரை(லை)க்கின்ற பெருங்கரமாய் தமிழர்கள் ஒன்றானால் சிறுதுகளே யாவும்....

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா...................வேண்டாம் என் மனது இவற்றை தாங்க முடியாது உள்ளது..... எமக்காக் போராடியவர்கள் இன்று வீதிகளில் நெஞ்சே வெடிக்கின்றது.....அக்கா அந்த உறவின் தகவல்களை தாருங்கள் என்னால் முடிந்தால் என் அலுவலகம் ஊடாக ஏதும் சுயதொழில் வாய்ப்புகளை அவர் வசிக்கு மாவட்டத்தில் ஏற்படுத்த முயற்சிக்கின்றேன்.........

”முடியாதது என்று எதுவுமே இல்லை”

தாயகத்தில் இருந்து நீலவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீலவன்,

இன்றுதான் உங்கள் கருத்தை கவனித்தேன். குறித்த உறவுக்கு நேற்று சுவிசிலிருந்து ஒரு உறவு விபரத்தை பெற்று கதைத்து உதவியையும் இன்று அனுப்பியுள்ளார். அச்செய்தியை இங்க எழுத வந்த போதே உங்கள் கருத்தை பார்த்தேன்.

உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.