"அனைவருக்கும் எம் இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!" --- உங்கள் "2026" பயணத்தை இனிதே ஆரம்பித்து நீங்கள் கொண்ட கனவுகள் பலிக்கவும் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவும் என் முழுமனத்தோடு உங்களை வாழ்த்துகிறேன்!.
வீடும் நாடும் இனிய எனின் எம் வாழ்க்கையும் இனிதே என்பதை இந்த புது ஆண்டு 2026 இல் உணருங்கள்!!.
"யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."
[புறநானூறு பாடல் 191 - பாடியவர் - பிசிராந்தையர்]
“தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன் ----
“சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.” புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான். அப்படியான ஒரு வாழ்வு, அப்படியான ஒரு நாடு உங்களுக்கு கிட்டட்டும் .
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பண்டைய தமிழ் பாடலில் இருந்து உங்களுக்கு ஒரு வாழ்த்து [மதுரைக் காஞ்சி / ஆசிரியர் - மாங்குடி மருதனார்]
"முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பல் மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி
இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே"
"கடலின் நடுவில் சூரியன் பிரகாசிப்பது போலவும், பல நட்சத்திரங்களுக்கு நடுவில் சந்திரன் ஒளிர்வது போலவும், செழித்த/மலர்ந்த உறவினர்களுடன் பிரகாசமாக, அழகாக விளங்கி,
அழகிய அணிகலன்களை அணிந்த பெண்கள் பொற்கிண்ணங்களில் வாசனை நிறைந்த தேறலை (மதுவை) ஊற்றித் தர, நீ தினமும் மகிழ்ச்சியுடனும் இனிமையுடனும் வாழ்க; நீ பெற்ற இந்த நல்ல வாழ்க்கையை (ஊழியை) மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ்வாயாக!"
அன்புடன்
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid033aDU7J4b39aeWz2DtwETREGGLkaQYRJhoehLLdX5cqkjeVtzeWn82Dy8d1utaRwVl?
By
kandiah Thillaivinayagalingam ·