Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?- கருணாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?- கருணாகரன்

kilinochchi_title1.jpg

Kilinochchi-board-150x150.jpg

நேரில் காணும்போதும் தொலைபேசியில் உரையாடும் போதும் அநேகமான வெளியூர் நண்பர்கள் முதலில் கேட்பது கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்குது? என்ற மாதிரியான கேள்விகளையே. இந்த மாதிரியான கேள்விகளை அவர்கள் இன்று நேற்று மட்டும் கேட்கவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த எழுபதுகளில் கிளிநொச்சி ஒரு நகரமாக வளரத்தொடங்கியபோது இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது காடாக இருந்த கிளிநொச்சி மெல்ல மெல்ல ஊர்களாக, சிறு பட்டினமாக வளரத் தொடங்கியிருந்தது. பாம்புகளோடும் பன்றிகளோடும் போராடிக் கொண்டிருந்த குடியேறிகள் மெல்ல மெல்ல ஊர்களிலிருந்து தங்களுடைய பட்டினத்தை, தங்களுக்கான பட்டினத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிப் பகுதிகளுக்குக் குடியேறப் போனவர்களின் நிலையைப் பற்றி அறிவதற்காக முதல்தலைமுறைக் கேள்விகள் எழுந்தன. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?

பிறகு, வன்செயல்களின் காரணமாக கிளிநொச்சிக்கு தெற்கிலிருந்து குறிப்பாக மலையகப் பகுதிகளிலிருந்து அகதிகள் வந்தனர். வந்தவர்கள் அத்தனைபேரும் விவசாயக் கூலிகளானார்கள். அவர்களுக்கு விவசாய நிலங்கள் கிடைக்கவில்லை. அதை யாரும் வழங்கவும் இல்லை. அப்படி அகதிகளாக வந்த சனங்கள் என்ன செய்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? என்று அறிவதற்காக கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது? என்ற இரண்டாம் தலைமுறைக் கேள்விகள் எழுந்தன. என்றபோதும் அந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கவில்லை.

ஆனால், எல்லாச் சனங்களையும் தன்னுள் வைத்துக் கொண்டு கிளிநொச்சி மெல்ல மெல்ல ஒரு பட்டினமாகியது. அப்படியே அது வடக்கின் முக்கிய தொடர்பாடல் களமாக, ஒரு வணிக மையமாக வளர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது தெற்கிலே ‘தம்புள்ள மாக்கெற்’ என்ற பெரும் விவசாயச் சந்தை இருக்கிறதைப் போல அப்பொழுது கிளிநொச்சி மாறியது.

வடக்கின் உற்பத்திப் பொருட்களையெல்லாம் தெற்கிலுள்ளவர்கள் கிளிநொச்சிக்கு வந்தே வாங்கினார்கள். தெற்கின் பொருட்களை அவர்கள் கிளிநொச்சியில் வைத்தே வடக்கிற்கு விற்றார்கள். யாழ்ப்பாணக்குடாநாடும் வன்னியும் கிளிநொச்சியில் கூடியது. இப்படியொரு சந்தை கூடினால் அது சும்மா இருக்குமா? கொண்டாட்டமும் கலகப்பும் களைகட்டியது. அந்த நாட்களில் (1970 களில்) கிளிநொச்சிக்கு புகழ்பெற்ற சினிமாக்காரர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்தார்கள். கொழும்பிலிருந்து நாடகக்காரர் வந்தனர். அன்று நட்சத்திர அந்தஸ்தில் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்களாக இருந்த கே.எஸ். ராஜாவும் யோக்கின் பெர்ணாண்டோவும் வந்தார்கள். ரி.எம். சவுந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி, கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் எல்லோரும் றொட்ரிக்கோ மைதானத்தில் பாடினர். ட்ரம்ஸ் மணி (சிவமணி) தன்னுடைய கைவண்ணத்தால் சனங்களைப் பித்துப் பிடித்து ஆட வைத்தார். இப்பொழுது சர்வதேச விளையாட்டு மைதானமாக மாறிக் கொண்டிருக்கும் மைதானமே அன்று றொட்ரிக்கோ மைதானமாக இருந்தது. காலம் மாறும்போது இப்படிப் பெயர்களும் வடிவங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த றொட்ரிக்கோ மைதானத்தில்தான் மரைக்கார் ராமதாசும் அப்புக்குட்டி ராஜகோபாலும் உபாலி விஜயசேகரனும் ‘கோமாளிகளா’கிக் கலக்கினார்கள்.

மைதானம் நிறையக் கூட்டம். நாலு திக்கிலும் இருந்து அள்ளு கொள்ளையாகச் சனம் திரண்டு வந்தது. வெளியூர் ஆட்களுக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஆக முப்பது ஆண்டுகால வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு இடத்தில் எப்படி இந்தளவுக்கு முன்னேற்றமும் கலகலப்பும் என்று. இருக்காதா பின்னே. கிளிநொச்சி 1910 க்குப்; பிறகே உருவானது. 50 க்குப் பிறகே எழுச்சியடைந்தது. 50 இலிருந்து 70 களுக்குள்ளான இருபது ஆண்டுகளுக்குள் அது புகழடைந்தது. எல்லாம் 1902 இல் இரணைமடுக்குளம் கட்டப்பட்டதிலிருந்தே ஆரம்பம். எனவே அவர்கள் தங்களுடைய மூன்றாம் தலைமுறைக் கேள்விகளைக் கேட்டார்கள், கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?

விளையாட்டு நிகழ்சிகள், பொங்கல் விழாக்கள், நாடக அரங்குகள், இசை நிகழ்ச்சிகள், காணிவெல், கவியரங்கு என்று ஏதாவது அங்கே நடந்து கொண்டேயிருந்தது. போதாக்குறைக்கு நகர்ப்பகுதியில் இருந்தது கந்தசாமி கோவில். அதற்குப் பக்கத்தில் (முன்பு ஆஸ்பத்திரி இருந்த இடத்திற்கு அருகில்) மாதா தேவாலயம். சற்றுத் தொலைவில் இரணைமடுக்குளத்திற்குப் பக்கத்தில் கனகாம்பிகை அம்மன் கோவில். இங்கெல்லாம் திருவிழாக்கள் நடந்தன. கொண்டாட்டங்களுக்குக் குறைவேயில்லை.

thoddam.jpg

குளங்கள் நிரம்பின. வாய்க்கால் நீளம் தண்ணீர் பாய்ந்தது. வெளியிலும் வீடுகளைச் சுற்றியும் பயிரும் பச்சையும். பொன்னாய் அள்ளிக் கொட்டியது புதிய மண். கடையும் தெருவும் பொலிந்தன. நகரும் கிசுகிசுவென்று வளர்ந்தது. கூலிகள் உழைத்துத் தள்ளினர். முதலாளிகள் வளர்ந்தனர். முதலாளிகள் வளர்ந்தால் என்னதான் நடக்காது? அவர்களுக்கு ஏக்கர்கணக்காக நிலம் இருந்தது. நூற்றுக்கணக்காகக் கூலிகளும் இருந்தனர். கூலிகள் எல்லாவற்றுக்காகவும் உழைத்துத் தள்ளினார்கள்.

இன்னொரு பக்கத்தில் அருவி என்றும் களனி என்றும் இதழ்கள் வெளிவந்தன. கவியரங்குகள் முழங்கின. ‘வடக்கின் நெற்களஞ்சியம் கிளிநொச்சி’ என்று யாரோ புகழைச் சூடினார்கள். அப்படிச் சொன்னதற்கு ஏற்றமாதிரி விசுவாசமாக கிளிநொச்சியின் வயல்களும் விளைந்து தள்ளின. நெல்லைக் குற்றி அரிசியாக்கும் ஆலைகள் எங்கும் முளைத்தன. எங்கும் எங்குமே நெல்வாசனை பூத்துப் பொலிந்தது.

நகரில் இருந்தன மூன்று தியேட்டர்கள். அங்கே யாருடைய படங்கள் வந்தாலும் கூடுதலாக எம்.ஜி.ஆர் படங்களே வெற்றிவாகை சூடின. நான்கூட எம்.ஜி.ஆர் படங்களைத்தான் கூடுதலாகப் பார்த்துக் களித்தேன். இரண்டு போக வேளாண்மையிலும் உழைத்த காசை சனங்கள் என்னதான் செய்வது? வயலில் இருந்து வெளிக்கிட்டு ட்ரக்ரரில் ஏறினால், தியேட்டருக்கு வருவார்கள். அல்லது சந்தைப் பக்கம் போவார்கள். தங்களுடைய இளைய பட்டினத்தில் அவர்கள் இப்படித்தான் ஆடியும் பாடியும் களித்தார்கள். நகரத்துக்கு அப்பால் சிறு வீடுகளிலும் குடிசைகளிலும் வாழ்ந்து தொலைத்தார்கள்.

இப்படிக் களித்துக் கொண்டிருந்தபோதே வந்தது யுத்தம்.

ltte.jpg

யுத்தத்தை அங்கே யார் அழைத்து வந்தது, யார் அனுமதித்தது என்று தெரியவில்லை. ஆனால், அன்று படையினரும் திரிந்தனர். இயக்கப்பெடியளும் திரிந்தார்கள். இரண்டு பகையாளிகள் ஒரு மையத்தில் சந்தித்தால் என்ன நடக்குமோ அது நடந்தது. விரும்பத்தகாத எல்லாம் நடந்தன. எதிர்பார்க்காத எல்லாம் நடந்தன. தமிழ்ப்பகுதிகள் எங்கும் நடந்ததைப் போல, இலங்கை முழுவதிலும் நடந்ததைப்போல, வரலாற்றில் நடந்ததைப் போல, ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முயன்றனர். ஒருவரை ஒருவர் வெல்ல முயற்சித்தனர். இந்த அமளிக்குள் சிக்கிச் சிதறியது நகரம். நகரம் மட்டுமல்ல ஊர்களுந்தான். ‘யானைகள் மோதும்போது செடிகளுக்கே நாசம்’ என்பார்கள். நகரம் சிக்கி, நகரத்துக்கு அண்மித்திருந்த கிராமங்களும் சிக்கியபோது எல்லாமே நாசமாகியது. சனங்களும் நாசமாகினர். அவர்களுடைய வாழ்க்கையும் நாசமாகியது.

புதுப்பொலிவோடு எழுந்து வந்த சின்னஞ்சிறிய பச்சை நகரம், மிக இளைய பட்டினம் அப்படியே பாழடைந்து போனது. பாழடைந்த நகரத்தில் புற்களும் காய்ந்துதான் இருந்தன. அல்லது கருகிக்கிடந்தன. காடு மண்டிப் புதர் வளர்ந்து, வயலெல்லாம் பிணங்கள் மலியத் தொடங்கியபோது சனங்கள் கிளிநொச்சியை விட்டு நீங்கி அயற்கிராமங்களில் பதுங்கினர்.

யுத்தம் எல்லாவற்றையும் தீண்டியது. ஒரு பென்னாம் பெரிய விசப்பாம்பு தீண்டியதைப் போல புதிசாக முளைத்த நகரம் செத்து மடிந்தது. நாலு நாட்கள் இறைக்காமல் விட்ட கீரையைப் போல அது வாடிச் சோர்ந்தது. அப்போதும் கேட்டார்கள் கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்குது? என்று. இது நான்காம் தலைமுறைக் கேள்விகள்.

பிறகு இதுதான் தொடர்கதை. இடையில் மழைக்குத் துளிர்க்கும் காட்டுச் செடிகளைப் போல யுத்த ஓய்வு காலங்களில் அல்லது அரசியல் மாற்றம், அரசியல் விளைவுகளுக்கு ஏற்ற மாதிரி கிளிநொச்சி காய்வதும் துளிர்ப்பதுமாக இருந்தது.

அப்பொழுதும் இப்படித்தான் யாராவது கேட்பார்கள் கிளிநொச்சி எப்பிடி இருக்கு? அங்க என்ன நடக்குது? என்று. தலைமுறைக் கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. தொடர்ந்து ஒவ்வொரு போதிலும் ஒவ்வொரு தரப்பின் கைகள் மேலோங்கும். முன்பு சொன்னதைப்போல ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முயற்சிக்கும்போது யாரோ ஒருவரின் கைகள் மேலோங்கின. அழிவதும் துளிர்ப்பதுமாக இருந்த நகரம் பொலிவை இழந்து இறுதியில் அப்படியே தன்னுடைய முழுப்பொலிவையும் இழந்து விட்டது.

kilinohi-school-300x225.jpg

என்றாலும் அதனுடைய உயிர்ப்பு மறையவில்லை. அறுகம்புல்லைப்போல அது வெளியே அழிந்ததாகத் தோற்றம் காட்டினாலும் ஒரு துளி ஈரத்தைக் கண்டதும் சட்டெனத் துளிர்க்கத் தொடங்கி விடும். ஒரு கட்ட யுத்தத்தின் பின்பு அது சடுதியாக எழும். பிறகு அடுத்த கட்ட யுத்தத்தில் அவ்வளவும் பாழாகிவிடும். மாரியும் கோடையும்போலத்தான் கிளிநொச்சியின் வரலாறும் ஆயிற்று.

இதைப் பார்ப்போருக்கு வேடிக்கையாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த ஆச்சரியத்திலிருந்தே அவர்களிடம் கேள்விகள் பிறக்கின்றன. கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்கிறது?

பாரம்பரியமெதையும் வலுவாகக் கொண்டிராத கிளிநொச்சியில் எப்படித்தான் வேர்கள் பாதிப்படையாமல் இருக்கின்றன என சிலர் கேட்டதுமுண்டு. நான் நினைக்கிறேன், கிளிநொச்சிக்கு வாய்த்த நீர், நிலம் போன்ற வளங்களும் உழைக்கக் கூடிய சனங்களின் திரட்சியும்தான் அதை உயிர்ப்போடு வைத்திருந்தன என்று. அதுதான் அதனுடைய பாராம்பரியமாகியது. அதைத்தவிர அதற்கு வேறு வழியுமில்லை.

யுத்த அரங்கு மூடப்படாத, யுத்தத்தின் கொதிநிலை மாறாத ஒரு மையமாக கிளிநொச்சி தொடர்ந்தும் இருந்தது. ஒரு பக்கம் ஆனையிறவு என்ற இராணுவக் கேந்திரம். இன்னொரு பக்கத்தில் கொக்காவில் என்ற இணைக் கேந்திரம். இடையில் நகரத்துக்கென உருவான பரந்தன், கிளிநொச்சி மத்தி என்ற துணைக்கேந்திரங்கள். இதெல்லாம் கிளிநொச்சியை யுத்தவலயமாக்கின.

எனவே, அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அழிவுகள் எல்லாவற்றுக்குள்ளும் அது சிக்கிச் சிதறியது. தொடர்ந்து காயங்களும் வடுக்களும் வலிகளும் நிரம்பிய நகரமாக அது மாறியது.

kilinochi-war-2-300x225.jpg

இன்றும் கூடக் கிளிநொச்சி யுத்த வடுக்களின், யுத்த வலிகளின், யுத்தக் காயங்களின் காட்சிக்கூடமாகவே உள்ளது. கிளிநொச்சிக்கு வருவோரிற் பலரும் கிளிநொச்சியின் காயங்களையும் வடுக்களையும் காணவே வருகிறார்கள். சிலர் துக்கத்தோடு பார்க்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள்.

இதைப் பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ வந்து பார்த்துச் செல்கிறார்கள். சடங்கைப் போலச் சம்பிரதாயமாக எல்லாவற்றையும் படமெடுத்துச் செல்கிறார்கள். அந்தப் படங்களை வைத்துக் கொண்டாடுகிறார்களா, குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் படங்கள் மட்டும் தாரளமாக எடுக்கப்படுகின்றன.

kilinochi-war-300x225.jpg

சிலருக்கு யுத்த அழிவும் காட்சிப் பொருள்தான். யுத்த வெற்றியும் காட்சிப் பொருள்தான். யுத்தத்தின் பின்னரான நிலைமைகளும், முன்னேற்றங்களும் முன்னேற்றமின்மைகளும் காட்சிப் பொருட்களேதான். சனங்களின் கண்ணீரும் துயரமும் காட்சிப் பண்டங்களே.

என்ன செய்வது உலகம் அப்படி மாறிவிட்டது. கண்ணீரையும் இரத்தத்தையும் மலிவாகவே விற்பதற்குத் துணிந்த பிறகு எதைப் பற்றித்தான் என்ன கூச்சம் வேண்டியிருக்கு? கெட்டிக்காரன் எதையும் விற்றுச் சரக்காக்கி விடுகிறான். வியாபார உலகத்தில் நீதியும் நியாயமும் மனச்சாட்சியும் மதிப்பிழந்து போகின்றன. அல்லது மௌனத்திற் குடிகொள்கின்றன.

போகட்டும் இது. நாம் மீதியைச் சொல்லிச் செல்வோம்.

போரில் சிக்கியிருந்த போதும் கிளிநொச்சியில் பலவும் நடந்தன. தியேட்டர்களும் படங்களும் படுத்தாலும் வயல்களில் ஆட்கள் நின்றார்கள். றொட்ரிக்கோ மைதானத்தில் ஆட்களுக்குப்பதிலாக துப்பாக்கிகள் முளைத்திருந்தபோதும் தெருக்களில் சனங்கள் போய் வந்தார்கள். அப்படிப் போய் வரமுடியாத போது அவர்கள் சற்றுத் தள்ளியிருந்து கொண்டு அங்கே சிறிய சிறிய பட்டினங்களைக் கட்டினார்கள். மைதானத்தில் மாடுகள் படுத்துறங்கின. சந்தைக்கு வடக்கிலிருந்தும் ஆட்கள் வருவதில்லை. தெற்கிலிருந்தும் ஆட்கள் வருவதில்லை. வெளியாட்கள் வருவதற்கான வாசல்கள் மூடப்பட்டது. சிலபோது அங்கே உள்ளுர்ச்சனங்கள் கூடினர். பட்டினம் இடம்பெயர்ந்த போதெல்லாம் சனங்கள் தங்களோடு கடைகளையும் சந்தையையும் கூடக் காவிச் சென்றார்கள்.

அப்போதும் கேட்டார்கள், கிளிநொச்சியில் என்ன நடக்கிறது? அது எப்படியிருக்கிறது? என்று. இது ஆறாம் தலைமுறைக் கேள்விகள்.

இதற்கிடையில் நான் இன்னொன்றையும் சொல்ல வேணும்.

கிளிநொச்சிக்கு என்று சில காலங்களைச் சொல்வார்கள். இரணைமடுக் குளம் கட்டிய காலம், கிளிநொச்சியின் குடியேற்ற காலம், அதனுடைய எழுச்சிக் காலம், கிளிநொச்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, அதைத் தனி மாவட்டமாக்குவதற்காகப் பாடுபட்ட ஆனந்தசங்கரியின் காலம், கிளிநொச்சியை வளப்படுத்த முயற்சித்த குமாரசூரியர் காலம், பிறகு இலங்கை இராணுவத்தின் காலம், இந்திய இராணுவக் காலம், புலிகளின் காலம், இப்ப போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றக் காலம் என இந்தக் காலப்பட்டியல் நீளும்.

iranai-maduk-kulam-1-300x257.jpg

இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுச்சியும் வீழ்ச்சியும் தன்னியல்பாகவும் அந்தந்தத் தரப்பின் செயற்பாடுகளுக்கு அமையவும் ஏற்பட்டுள்ளன.

இதில் முக்கியமான காலகட்டங்கள் 80 களுக்கு முந்திய காலமும் புலிகளின் காலமும் தற்போதைய யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டமுமே.

கிளிநொச்சியின் பொற்காலம் என்பது 70 களுக்கும் எண்பதுகளுக்கும் இடைப்பட்ட காலம்தான். இந்தக் காலத்தில்தான் கிளிநொச்சி என்ற ஒரு மையத்தின் அடையாளம் துலங்கத் தொடங்கியது. கலையும் கல்வியும் பொருளாதார அடிப்படைகளும் இதையெல்லாம் இணைத்த வாழ்க்கையும் இந்தக் காலத்திலிருந்துதான் கிளிநொச்சிக்கென உருவாகின. ‘மண்ணின் மைந்தர்களும்’ இந்தக் காலத்தில்தான் முளைத்தார்கள்.

இதெல்லாம் இணைந்தும் கலந்தும் விளைந்த கிளிநொச்சியின் இரண்டாவது சிறப்பான காலகட்டம் 2000 க்குப் பின்னரானது.

2002 இல் புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது கிளிநொச்சிக்கான நல்லதொரு முகூர்த்தமாகவே, வாய்ப்பாகவே அமைந்தது. இதையடுத்து கிளிநொச்சி மிகப் பெரிய அளவுக்கு எழுச்சியடைந்தது. உலகத்தின் நான்கு திசைகளும் நான்கென்ன எட்டுத்திசைகளும் கிளிநொச்சியில் கூடின. இலங்கையில் இரண்டு தீர்மான மையங்கள் என்று சொல்லும் அளவுக்கு கிளிநொச்சி மாறியது. ஒன்று கொழும்பு. மற்றது கிளிநொச்சி என்று இதை ஆய்வாளர்களே குறிப்பிட்டார்கள். வெள்ளையர்களும் வெளியாட்களும் உதவிப் பணிகளுக்கும் அரசியல் விவகாரங்களுக்குமாக வந்திறங்கியிருந்தனர். வெளியேற்றப்பட்டிருந்த முஸ்லிம்களின் தரபபிலிருந்து ஹக்கீமும்அவருடைய தோழர்களும் கூட வந்தனர்.

அந்த நாட்களில் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாகப் பறந்தன வானூர்திகளும் வெளிநாட்டு ராஜதந்திரிகளின் வாகனங்களும். பல திசைகளில் இருந்தும் தலைவர்களும் ராஜதந்திரிகளும் கிளிநொச்சிக்கு வந்து சென்றார்கள். புலம்பெயர்ந்து போயிருந்த தூரதேசத்துப் பறவைகள் எல்லாம் கிளிநொச்சிக்கு வந்தன.

Tamilselvan-with-Airforce-helicopter.jpg

இரணைமடுக்குளம் தண்ணீரால் நிரம்பியதோ இல்லையோ கிளிநொச்சி சனங்களாலும் விருந்தாளிகளாலும் நிரம்பியது. கண்ணாடி மாளிகைகள் எங்கும் முளைத்தன. எல்லோருக்கும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இந்த ஆச்சரியம் எழுப்பியது மீண்டும் கேள்விகளை. ஏழாந்தலைமுறைக் கேள்விகளை. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்குது?

கிளிநொச்சியைப் புலிகளின் தலைநகரம் என்றும் சமாதான முயற்சிகளுக்கான நகரம் என்றும் குறிப்பிட்டனர் விமர்சகர்கள். யார் யாரெல்லாமோ வந்தார்கள். தினமும் கை குலுக்கல்கள் நடந்தன. றொட்ரிக்கோ மைதானம் கிளிநொச்சி மத்திய மைதானம் என்று அழைக்கப்பட்டது. அந்த மைதானத்தில் விளையாட்டுக்குப் பதிலாக, ஹெலிகொப்ரர்களே வந்திறங்கின. முன்னர் மலேசியா வாசுதேவனையும் ரி.எம். சவுந்தரராஜனையும் எல்.ஆர்.ஈஸ்வரியையும் கண்டு களித்த சனங்கள் பெயர்களை உச்சரிக்கக் கடினமான விருந்தாளிகளைப் பார்த்துக் கையசைத்தனர். இறுதியில் மரைக்கார் ராமதாஸின் கோமாளிகளையும் விட தாங்களே கோமாளிகள் என அவர்கள் உணர்ந்தபோது யுத்தம் அவர்களுடைய தலைக்கு மேலும் காலடியிலும் வந்திறங்கியிருந்தது.

பிறகென்ன?

மறுபடியும் யானைகளின் மோதல். செடிகள் துவம்சம். நகரத்தின் வேர்களைக் கிழப்பிக்கொண்டே அல்லது பிடுங்கிக் கொண்டே சனங்கள் பெயர்ந்தனர். பெயர்ந்தவர்கள் அயல் ஊர்களை நோக்கி, காடுகளை நோக்கிச் சென்றனர். காடுகளில் வாழ்க்கை என்பது எப்படியிருக்கும்? அது காட்டுத்தன்மையை ஒத்ததாகவே இருக்கும். அப்படித்தான் இருந்தது.

எல்லா யுத்தத்திற்கும் முடிவாக அந்த யுத்தம் இருந்தது. அது பெரும் யுத்தம். என்பதால், அது எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போனது. மிஞ்சியவற்றை அடித்துச் சிதைத்தது. சிதைத்து நொறுக்கியது.

அதற்குள் நாங்கள் கூரைகளையும் கழற்றிக் கொண்டு வேறிடங்களை நோக்கிச் சென்றோம். இறுதியில் காடுகளை, கடலை நோக்கிச் சென்றோம். போகும்போது கூரையை மட்டுமா கழற்றினோம். நட்ட பயிர்களைத் தவிர்த்து, வளர்த்த பிராணிகளை, சேர்த்த பொருட்களை, வாங்கிய பண்டங்களை என எல்லாவற்றையும் எடுத்துச் சென்றோம். எங்களுக்கு முன்னும் பின்னும் எங்களோடு சேர்ந்தும் சிந்தச் சிந்த ஒரு அரசைப் புலிகளும் காவிக் கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் உருவாக்கிய அரசே அவர்களுக்குப் பாரமாகியது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? எல்லாவற்றையும் அவர்களும் சுமந்து கொண்டே சென்றனர். நாங்களே எங்களின் வீட்டுக் கூரையைக் கழற்றிச் சென்றோம் என்றால், அதன் நிலையை எப்படிச் சொல்வது? சரியோ பிழையோ அதைத் தவிர எங்களுக்கு வேறு தெரிவுகளிருக்கவில்லை.

விதி வேறு முகத்தோடு வந்து பல்லை இளித்துக் கொண்டு முன்னே நிற்கிறதே.

kilinochchipeace.jpg

முழுக் கிளிநொச்சி நகரமுமே பெயர்க்கப்பட்டு இப்படிக் கொண்டு செல்லப்பட்டது. கொண்டு செல்லப்பட்ட நகரம் ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டது. அப்படி வைத்து, வைத்துக் காவிச் செல்லப்பட்ட நகரம் இறுதியில் கரைந்து காணாமலே போய்விட்டது. அந்த நாட்களில் ஒரு விமானமும் கிளிநொச்சியில் தரையிறங்கவில்லை. தரையிறங்காத விமானங்கள் தலைகளின் மேலே சுற்றின. குண்டுகளையே இறக்கின.

அப்போதும் கேட்டார்கள் கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்கிறது? எட்டாந்தலைமுறைக்கேள்விகள் இவை.

‘அங்கே ஒரு நாய் மட்டும் நின்றது’ என்று யாரோ ஒரு பத்திரிகையாளன் ஒரு தடவை எழுதியிருந்தான். ஆட்களற்றிருந்த 1996 இன் கிளிநொச்சியைப் பற்றிய சித்திரம் அது. அதையே நானும் திருப்பிச்சொன்னேன்.

பிறகு மீள்குடியேற்றக்காலம். அகதிகளாகச் சென்ற சனங்கள் மீள்குடியேறிகளாகி வந்தனர். வந்தவர்கள் கூரையில்லாத தங்களுடைய நகரத்தைக் கண்டனர். தெருக்களில்லாத ஊர்கள். ஆட்களில்லாத வளவுகள். பாழடைந்த நகரத்தை மீண்டும் அவர்கள் கட்டியெழுப்பத் தொடங்கினர். வாழ்வென்பதை எங்கிருந்து, எதிலிருந்து, எப்படித் தொடங்குவது என்று தெரியாமலிருந்தது எல்லோருக்கும்.

அப்போதும் கேள்விகள் கேட்கப்பட்டன. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது? ஒன்பதாம் தலைமுறைக் கேள்விகள் இவை.

நான் சொன்னேன்.

ஒரு இடிந்த சுவருக்கு நான்காவது தடவையாகவும் கூரைகளைப் போடும் மனிதர்கள் இருக்கிறார்கள் இந்த நகரத்தில். கால்கள் இல்லாவர்களின் நகரமாக. பிள்ளைகளைத் தொலைத்தோரின் நகரமாக. பிள்ளைகளைத் தேடுவோரின் நகரமாக. என்றைக்கோ ஒரு நாள் உங்கள் அப்பா வருவார். அது வரை காத்திருங்கள் என்று தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பெண்களின் நகரமாக…

appa.jpg

கால்களே இல்லாமல் ஊர்ந்து செல்வோரின் நகரமாக, கண்களை இழந்த பின்னும் வாழவேண்டுமே என்ற தவிப்போடு அலைவோரின் நகரமாக, பெற்றோரைப் போரில் இழந்த பிள்ளைகளின் நகரமாக, வீடுமில்லை வாழ்வுமில்லை என்று அந்தரிப்போரின் நகரமாக, பள்ளிக்கூடங்களும் கோவில்களும் கூடச் சிதைந்து போன நகரமாக, காணுமிடமெல்லாம் பாதுகாப்புத் தரப்பினரின் அடையாளங்களே தெரியும் நகரமாக, கடனாளிகளின் நகரமாக கிளிநொச்சி இருக்கிறது என்று. இதுதான் கிளிநொச்சி. இப்படித்தான் கிளிநொச்சி இருக்கிறது என்று.

பிறகு மெல்ல மெல்லக் கிளிநொச்சி துளிர்க்கத் தொடங்கியது. யுத்தம் ஓய்ந்த இடங்களில் வழமையாக வந்து சேரும் அனைத்தும் கிளிநொச்சிக்கும் வந்தன. தொண்டு நிறுவனங்களோடு தொண்டுப் பணியாளர்கள் வந்திறங்கினர். வங்கிகள் வந்தன. லீஸிங் கம்பனிகள் வந்திறங்கின. கடன் வழங்கப்பட்டது. அதுவும் தாரளமாக. கேட்கக் கேட்கக் கொடுத்தன எல்லா நிதி நிறுவனங்களும். கடன் வழங்கப்பட்டது என்பதை விட கடன்பட்டனர் சனங்கள் என்று சொல்வதே சரி. கையிலே காசில்லாதவர்கள், வேறு என்னதான் செய்ய முடியும்? காசில்லாதவரின் நிலையைப் பயன்படுத்தின ஏராளம் வட்டி வசூலிக்கும் நிறுவனங்கள். நகரில் ஏனைய கடைகளை விட நிதி நிறுவனங்களே அதிகமாக முளைத்தன. நகரம் கிசு கிசு என்று வளரத் தொடங்கியது. அரச பிரதிநிதிகள் வந்தனர். அமைச்சர்கள் வந்தனர். ஜனாதிபதி வந்தார். அமைச்சரவை கூடியது. திட்டங்கள் வந்தன. கொடிகள் பறந்தன. புழுதியும் பறந்தது.

சனங்கள் மீள்குடியேறிகளாக இருந்தபோதும் அகதி நிலையில் இருந்து மாறுவதற்கு காலம் தாமதித்தது. இன்னும் அந்தத் தாமதம் உண்டு. படைகள் குறைந்தாலும் அமைதி வளர்ந்தாலும் யுத்தக் காயங்கள் இன்னும் ஆறவில்லை. நெருப்புத் தணிந்தாலும் சூடு ஆறவில்லை என்பார்களே அதுமாதிரித்தான் இன்னும் நிலைமை. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்கள் காணிகளுக்குப் பாதுகாப்பாக இதுவரை வைத்திருந்த சனங்களை வெளியே தூக்கிப் போடுகிறார்கள். அல்லது வெளியே போக மறப்போரை பொலிசில் கதைத்து உள்ளே தூக்கிப் போடுகிறார்கள். அநேகமாக இப்படிப் பாதிக்கப்படுவோர் இந்திய வம்சவழியினராகவே (மலையகத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்தவர்களாகவே) உள்ளனர். அவர்கள் போரின்போதும் சமாதானத்தின் போதும் இந்தக் காணிகளுக்குக் காவல் இருந்தார்கள். காடுகளை அழித்துப் பயிர்களை வளர்த்திருந்தார்கள். மூன்று நான்கு தலைமுறைக் காலத்தை இந்தக் காணிகளைக் கழித்திருந்தார்கள். என்றாலும் என்ன? சட்டமும் பணமும் ஆவணமும் இவர்களுக்குச் சார்பாக இல்லையே!

ki-no-student-300x225.jpg

வயல்கள் விளைகின்றன. வாய்க்காலில் நீரும் ஓடுகிறது. குளங்களைத் திருத்திக் கட்டுகிறார்கள். வீதிகள் செம்மையாகின்றன. நகரத்தை ஊடறுத்துப் போகும் ஏ 9 என்ற கண்டி – யாழ்ப்பாணம் பழைய ராசதானிகளுக்கான வீதி பிரமாண்டமாக அகலிக்கப்பட்டுள்ளது. வீடுகளிற் பலவும் புதிதாய் முளைத்துள்ளன. தெருவிலும் விளக்குகள் ஒளிரத் தொடங்கியுள்ளது. போதாக்குறைக்கு நகரத்தில் ‘சுப்பர் மாக்கற்’ மற்றும் தேசியக் கொம்பனிகள், பல்தேசியக் கொம்பனிகள் எல்லாம் நிறைந்து கொண்டிருக்கிறது. நியான் விளக்குகளின் ஒளி கண்ணையும் கருத்தையும் பறிக்கிறது. வண்டிகள் குறுக்கும் மறுக்குமாக விரைந்து பறக்கின்றன. எல்லாமே மாயமாக இருக்கிறது. இரண்டு வருசத்துக்கு முன்பு இங்கேதான் யுத்தம் நடந்தது என்று நகரத்தைப் பார்த்தால் யாருமே நம்பமாட்டார்கள். சத்தியம் செய்தாலும் நம்பக்கடினம்தான்.

மீண்டும் கிளிநொச்சியில் ஹெலிகொப்ரர்கள் வந்திறங்குகின்றன. வெள்ளை, கறுப்பு, செம்மஞ்சள் என்று பல வர்ணங்களில் மனிதர்கள் வந்து போகிறார்கள். ஆனால், சனங்கள் எதையும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. றொட்ரிக்கோ மைதானம், சர்வதேச மைதானமாக மாறிக்கொண்டிருக்கிறது. சனங்கள் உள்ளுரில் வயலோடும் வாய்க்காலோடும் கிடந்த மாய்கிறார்கள். பலருக்கு வீடும் இல்லை. வயலும் இல்லை. வாய்க்காலும் இல்லை. இதையெல்லாம் வழங்கி மக்களை ஈடேற்றுவதற்காக யாரோ சிலர் இரவும் ஓடிக்கொண்டும் உழைத்துக் கொண்டும்தானிருக்கிறார்கள். வரலாறு என்பது எல்லாவற்றினதும் கலவை என்பது சரியாகத்தான் உள்ளது.

என்றபோதும் எல்லாவற்றையும் கூர்மையாக அவதானிக்கின்ற, வங்கியொன்றின் தலைமை அதிகாரியாக இருக்கும் ஒரு நண்பர் கேட்கிறார், கிளிநொச்சி எப்படி இருக்கிறது? அங்கே என்ன நடக்கிறது? என்று. இவை பத்தாம் தலைமுறைக் கேள்விகள். ஆனால், புத்தம் புதிய கேள்விகள்.

kiduku-home-300x225.jpg

இலங்கையின் மிக இளைய பட்டினங்களில் ஒன்று கிளிநொச்சி. ஆனால், மற்றைய இளைய பட்டினங்களையும் விட, புகழ்வாய்ந்த மூத்த பட்டினங்களையும் விடக் கிளிநொச்சிக்கு மதிப்புண்டு, புகழுண்டு. போரிலும் அதற்குப் புகழுண்டு. சமாதான முயற்சிகளிலும் அதற்குப் புகழிருக்கு. போருக்குப் பிறகும் அது எழுச்சியாகவே உள்ளது.

எல்லாத் துயரங்களின் பின்னும் எப்படியோ ஒளியை வற்ற விடாமல் அது இருக்கிறது. அல்லது எப்படியோ சடுதியாக எழுந்து விடுகிறது. கிளிநொச்சியின் தாயூற்றாக இருக்கிற இரணைமடுக்குளம் கோடையில் வற்றி மாரியில் பொங்கிப் பிரவாகித்துப் பாய்வதைப் போல கிளிநொச்சியும் ஒரு போது அழிந்து இன்னொரு போதில் எழுந்து விடும் இயல்பைக் கொண்டது என்று சொன்னேன்.

ஆனால், உண்மையில் எனக்கும் தெரியவில்லை, அவருக்கும் தெரியவில்லை, கிளிநொச்சியில் என்னதான் நடக்கிறது என்று.

00

http://eathuvarai.net/?p=1856

1910ம் ஆண்டிலிருந்து 2012 ஆண்டு வரையிலான​ ஒரு நகரத் தின் சரித்திரத்தினை அதன் வளர்ச்சியில்,சரிவில்,சிதைவில் என​ அத்தனை கோணங்களில் இருந்தும் ஒருவரால் மிகவும் எளிமையான​ தமிழில்,இத்தனை விரிவாகக்(சிறப்பாகக்) கூற​ முடியுமா? கிளிநொச்சியில் வாழ்ந்தவர்களுக்கு புரியும்;இந்த​ சொற்களுக்குள் உயிப்புடன் இருக்கும் அர்த்தங்கள் பற்றி!அதற்குள் பொதிந்திருக்கும் வலியின் அளவு,கிளிநொச்சி மண்ணின் மகிமை தெரிந்தவர்களுக்கு தாங்க​ முடியாத​ ஒன்றாகவே இருக்கும்..

நிஜமாக​ சொன்னால் மனது வலிக்கிறது

கவிஞர் வைரமுத்து "தண்ணீர் தேசம் போல்,

கண்ணீர் தேசம் என்று ஒரு காவியம் படைத்தால்,

அது என் நாட்டுக் கதை சொல்ல​ வேண்டும்...

கரு தேடி எங்கும் போக​ வேண்டாம்..

ஈழத்தில் ஓரடி நிலம் போதும் ...

அவை ஓராயிரம் கதை சொல்லும்.

Edited by nirubhaa

  • கருத்துக்கள உறவுகள்

1910ம் ஆண்டிலிருந்து 2012 ஆண்டு வரையிலான​ ஒரு நகரத் தின் சரித்திரத்தினை அதன் வளர்ச்சியில்,சரிவில்,சிதைவில் என​ அத்தனை கோணங்களில் இருந்தும் ஒருவரால் மிகவும் எளிமையான​ தமிழில்,இத்தனை விரிவாகக்(சிறப்பாகக்) கூற​ முடியுமா? கிளிநொச்சியில் வாழ்ந்தவர்களுக்கு புரியும்;இந்த​ சொற்களுக்குள் உயிப்புடன் இருக்கும் அர்த்தங்கள் பற்றி!அதற்குள் பொதிந்திருக்கும் வலியின் அளவு,கிளிநொச்சி மண்ணின் மகிமை தெரிந்தவர்களுக்கு தாங்க​ முடியாத​ ஒன்றாகவே இருக்கும்..

நிஜமாக​ சொன்னால் மனது வலிக்கிறது

கவிஞர் வைரமுத்து "தண்ணீர் தேசம் போல்,

கண்ணீர் தேசம் என்று ஒரு காவியம் படைத்தால்,

அது என் நாட்டுக் கதை சொல்ல​ வேண்டும்...

கரு தேடி எங்கும் போக​ வேண்டாம்..

ஈழத்தில் ஓரடி நிலம் போதும் ...

அவை ஓராயிரம் கதை சொல்லும்.

கண்ணீர் தேசத்தின் ஒரு அடி நிலம் போதும்

  • கருத்துக்கள உறவுகள்

"கிளிநொச்சி எப்படி இருக்கு?" என்று கேட்போர் ஒன்றும் தெரியாமல் கேட்பதை விட "நாம் கேள்விப்படுவதெல்லாம் உண்மையா?" என்ற கேள்வியைத் தான் அப்படிக் கேட்கிறார்கள். கிளிநொச்சி வாசிகளிடம் இதைக் கேட்டால் பல சமயங்களில் பதில்களும் மறைமுகமாகத் தான் இருக்கும். அண்மையில் கிளிநொச்சி போயிருந்தேன் (disaster tourism/போர் அனர்த்தச் சுற்றுலா அல்ல!). கால் நடைத் திணைக்கள அலுவலகங்களையும் நண்பர்களையும் கண்டு வந்தேன். புதிதாகக் கட்டப் பட்டு பூச்சு வாசனை மாறாமல் இருக்கும் அலுலவலகங்களில் வேலை செய்ய ஒரு மணி நேரம் பேருந்துப் பயணம் செய்து யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறார்கள் பெண் பணியாளர்கள். தனியே வசிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. அதனால் தங்கள் வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வாடகைக்கு யாரும் இடம் கொடுக்க முன்வருவதில்லை. அலுவலகத்திற்கு அண்மையிலேயே அரச ஊழியர் விடுதி கட்டினாலும் இந்த "பாதுகாப்பு" பிரச்சினை இருக்கும் என்பதால் யாரும் கட்டுவதைப் பற்றி அக்கறைப் படவில்லை. சில கேள்விகளுக்கான பதில்கள் ஒரு சில செய்திகள், சம்பவங்களிடையே மறைந்திருக்கின்றன. நாம் தான் கொஞ்சம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். திரும்பத் திரும்ப தலைமுறை நெடுகிலும் கேட்டுக் கொண்டிருப்பதில் பலன் இல்லை!

சிறி லங்கா காட்டு யானை தமிழ் செடிகளை மேய்ந்து கொண்டிருப்பதை பற்றி ஒன்றும் இல்லை.

புலிகள் தான் கிளிநொச்சியை காட்டு நகரில் இருந்து உலக நகராக்கினர். மற்றும் இந்த இலக்கியவாதி போர் எப்படி வந்தது தெரியாமல் அப்பாவியாகும் போது கட்டுரை இடிக்கிறது.

இலக்கியவாதிகளின் பொழைப்பே இதுதான்.

அதிகார மையங்களின் கீழிருந்து சுகங்களை அனுபவித்து விட்டு, அவர்களின் அழிவிற்குப் பின் விமர்சிப்பது.

கனகச்சிதமாக தற்கால அடக்குமுறைகளை விமர்சிப்பதை தவிர்த்து விடுவார்கள். நாளைக்கு அதுவும் உதவும்.

இலக்கியவாதிகளின் பொழைப்பே இதுதான்.

அதிகார மையங்களின் கீழிருந்து சுகங்களை அனுபவித்து விட்டு, அவர்களின் அழிவிற்குப் பின் விமர்சிப்பது.

கனகச்சிதமாக தற்கால அடக்குமுறைகளை விமர்சிப்பதை தவிர்த்து விடுவார்கள். நாளைக்கு அதுவும் உதவும்.

மிகவும் பிழையான ஒரு கண்ணோட்டம் .

முடிந்தால் உங்களால் இலங்கையில் போயிருந்து உண்மைகளை எழுதமுடியுமா ?.கடைசி நடந்தது என்னவேன்றாவது அவர்களால் கொண்டுவர முடியுது .

ஜனநாயக ஆட்சிகளில் கூட இதுதான் நடக்கின்றது .தேவையெனில் ஆயிரம் உதாரணம் தரலாம் .

.தேவையெனில் ஆயிரம் உதாரணம் தரலாம் .

உதாரண புருஷன் :lol::D:icon_idea::icon_mrgreen:

Edited by குருவி

மிகவும் பிழையான ஒரு கண்ணோட்டம் .

முடிந்தால் உங்களால் இலங்கையில் போயிருந்து உண்மைகளை எழுதமுடியுமா ?.கடைசி நடந்தது என்னவேன்றாவது அவர்களால் கொண்டுவர முடியுது .

ஜனநாயக ஆட்சிகளில் கூட இதுதான் நடக்கின்றது .தேவையெனில் ஆயிரம் உதாரணம் தரலாம் .

உங்கள் கருத்திலேயே இதற்கான பதில் உள்ளது.

இலக்கியவாதிகளை யாரென்று பார்த்தால் தெரியும். அதிகார மையங்களுக்கு சாமரம் வீசுபவர்களாக இருப்பார்கள். அடிப்படை நேர்மை இராது. அதிகமானவர்கள் 23 ம் புலிகேசியில் வரும் புலவர்கள் மாதிரி.

அதிகார காலத்தில் புலிகளுக்கு சாமரம். புலி அழிந்த பின் அவர்களைப் பற்றி விமர்சன இலக்கியம். இன்று கனகச்சிதமாக சிங்கள பேரினவாதம் பற்றித் தவிர்க்கப் பட்டிருக்கும்.

பொதுவாகச் சொல்ல வருவது, உரிய நேரத்தில் பிழைகளைச் சுட்டிக் காட்டாமல் பார்த்திருந்து விட்டு, தங்களுக்கு வசதியான நேரத்தில் இலக்கியம் படைப்பது யாருக்கும் பிரயோசனமில்லை.

கருணாகரன் முன்னர் புலிகளுக்கு சாமரம் வீசியதையும் இப்போ அரசுக்கு வீசுவதையும் பதிந்தால் நாங்களும் வாசிக்கலாம் தானே ?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஓரு சிலரால் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கிய எழுத்தாளர் என்று போற்றப்படுவர் போரின் உச்சக்கட்டத்தில் பெண்கள் மரத்தில் இருந்து மலம் கழித்ததை எழுதியுள்ளார். இது தான் தற்போதைய புதுமை "சோபா சக்திசம்".

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.