Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணையில்லா கடவுளின் படைப்பு – மனிதர்கள்

Featured Replies

கருணை ரவியின் “கடவுளின் மரணம்” – ஒரு பார்வை

krunai-ravi-kdavul.jpg?w=500ஈழத்தில் நடைபெற்ற போரின் போதும் அதன் பின்பும் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு யோ.கர்ணன், தீபச் செல்வன், கருணாகரன், நிலாந்தன், அப்பு, கருணை ரவி… என சிலரினது படைப்புகளை மட்டுமே கதைகளாக, நாவலாக, கட்டுரைகளாக தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம். இன்னும் பெண் படைப்பாளிகள் எழுத ஆரம்பிக்கவில்லை. அல்லது நம் பார்வைக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. போருக்குள்ளும் மரணத்திற்குள்ளும் வாழ்ந்து போராடி மீண்ட இவர்கள் இவ்வாறு தொடர்ந்து எழுத வேண்டும். தங்களின் வலிகளை எழுதவேண்டும். எந்த மக்களுடன் வாழ்ந்தார்களோ அவர்களின் வலிகளை எழுதவேண்டும். குரலற்றவர்களின் குரலாக இவர்கள் ஒலிக்கவேண்டும். இதற்கு இவர்களை முதலில் எழுத விடவேண்டும். நமது (புலம் பெயர்ந்த மற்றும் தமிழக செயற்பாட்டாளர்களின்) எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, மதிப்பீடுகளை இவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்கள் அனுபவித்ததை அதனுடாகப் புரிந்ததை அவர்கள் விரும்பியவாறு எழுத ஊக்குவிக்க வேண்டும். இதை வாசிப்பதன் மூலம் அதே அனுபவங்களைப் நாம் பெறலாமோ தெரியாது. ஆனால் அவர்களின் வாழ்வையும் நிலைப்பாடுகளையும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். அதுவே இன்று அவசியமானது.

ஈழத் தமிழ் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்று இயக்கங்கள் உருவான ஆரம்பக் காலங்களில் வாழ்வில், போராட்டத்தில் நம்பிக்கை இருந்தது. ஆகவே யதார்த்த்திற்கு அப்பாலும் கனவு கண்டோம். அந்தக் கனவை அடையலாம் என மனதார முழுமையாக நம்பினோம். வாழ்ந்த சுழல் பெரும்பாலும் சிறிலங்கா அரச அடக்குமுறையால் சூழலப்பட்டிருந்தபோதும், சில காலம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தபோதும் யாரும் யாரையும் எதிர்த்து பயமின்றி குரல் கொடுத்த காலம் அது. அன்று ஆபத்து இருந்தபோதும் பயம் இருக்கவில்லை. போராட்டத்தைப் பொறுத்தவரை அது ஒரு நேர்மறையான காலம். அக் காலங்களில் வாழ்ந்த ஈழ மக்கள், படைப்பாளிகள் உணர்ந்தது வேறு. அப்பொழுது “மரணத்துள் வாழ்ந்து” மரணத்தை எதிர்கொள்கின்ற துணிவு இருந்தது. உண்ணதமான ஒரு எதிர்கால வாழ்விற்காக நம்பிக்கையுடன் மரணிக்க தயாராக இருந்தோம். இருப்பினும் பலர் இதற்கு முன்பும் இந்தக் காலங்களிலும் அதன் பின்பும் புலம் பெயர்ந்தனர். இவ்வாறு தொடர்ச்சியாக இயக்க முரண்பாடுகள், இலங்கை மற்றும் இந்திய இராணுவத்துடனான போர் நடைபெற்ற காலங்கள் எனப் பல காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்தார்கள். துரதிர்ஸ்டவசமாக இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் புலம் தொடர்பான சிந்தனையில் தாம் எந்தக் காலத்தில் புலம் பெயர்ந்தார்களோ அந்தக் காலத்திலையே இன்றும் வாழ்கின்றார்கள். ஆனால் புலத்தில் இதன் பின் பல மாற்றங்கள் நடைபெற்றுவிட்டன. அதனைப் புலம் பெயர்ந்தவர்கள் உள்வாங்கிக் கொண்டவர்களாகத் தெரியவில்லை.

இன்று போராட்டம் தோல்வியடைந்த பின் வாழ்கின்ற காலம். பல்வேறு இழப்புகளையும் வலிகளையும் சந்தித்த மனிதர்கள் வாழ்கின்ற காலம் இது. ஒருவர் மீது ஒருவர் மட்டுமல்ல சுற்றியிருக்கின்ற சுழல் மீதும் பயமும் சந்தேகமும் நிறைந்து காணப்படுகின்ற காலம் இது. போராட்டத்தின் மீது மட்டுமல்ல வாழ்வு மற்றும் மனிதர்கள் மீதும் நம்பிக்கையற்ற காலம். இது எதிர்மறையான காலம். இன்று ஈழத்தில் வாழ்கின்ற மக்கள், படைப்பாளிகள் உணர்வது வேறு. போராட்ட காலத்தில்  வாழ்ந்த மக்கள் உணர்ந்ததுபோல் இன்று இவர்களால் உணர முடியுமா என்பது ஒரு கேள்வியே. ஏனெனில் மரணத்தையும் இழப்புகளையும்  மீள மீளக் கண்டு… கண்டு… வெறுத்துபோய் அதிலிருந்து தப்பித்து வாழுகின்ற காலம். இதற்கு மேலும் கவலைகளை வலிகளை தாங்க முடியாது, இழப்புகளை ஏற்கமுடியாது, தப்பித்து வாழ்கின்ற காலம்.

வாழ்வின் மீதான மதிப்பும் மனித உயிரின் பெறுமதியும் எவ்வளவு உயர்வானது என உணரும் காலம் இது. இன்று ஒரு நோக்கத்திற்காக மரணிப்பதற்கோ உயிரை கொடுக்கவோ யாரும் விரும்பவுமில்லை. அதற்குத் தயாராகவுமில்லை. இதுவரை கொடுத்தது போதும் என்ற மனநிலையே இருக்கின்றது. இதனால்தான் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரையும் தம் வாழ்வையும் காப்பாற்றுவதினுடாகவே உன்னதாமான ஒரு வாழ்வை சமூக மாற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்ற காலம் இது. அவ்வாறான ஒரு மாற்றத்தை எவ்வாறு எந்த நிலைப்பாட்டில் உருவாக்க முயற்சிக்கின்றோம் என்பதிலையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்தடிப்படையில்தான் புலத்தில் (ஈழத்தில்) வாழ்கின்ற படைப்பாளிகள் பற்றிய மதிப்பீடு (புலம் பெயர்ந்த தேசங்கள் மற்றும் தமிழகம் போன்ற) வெளியிலிருந்து செய்யப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட வேறுபாடுகள் இதனால் ஏற்படும் அனுபவங்கள் அவர் அவர்களுக்கு உரியது. தனித்துவமானது. ஆகவே இந்த இரு காலங்களிலும் (அதாவது அன்றும் இன்றும்) கொண்டிருக்கின்ற அறம் சார்ந்த உணர்வும் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் வேறு வேறானது. இவற்றை ஒரே அளவு கோளைக் கொண்டு அளக்க முடியாது. இவ்வாறான ஒன்றை அளப்பதற்கான கருவியை உருவாக்குவதையோ அல்லது அதன் மூலம் அளப்பதற்கான அதிகாரத்தையோ இந்த அனுபவங்களை எதிர்கொள்ளாதவர்கள் கொண்டிருக்க முடியாது. மாறாக அவ்வாறு செய்வதுதான் அறமற்றது. ஏனெனில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற தேசங்களில் கூட நாம் குறைந்தபட்ச அறத்துடன் நம் நாளாந்த வாழ்வில் வாழ்வதில்லை. செயற்படுவதில்லை. ஆகக் குறைந்தது நாம் குடும்பத்திற்குள் கூட ஐனநாயகத்தை மதிப்பதுமில்லை அறத்துடன் செயற்படுவதுமில்லை. இவ்வாறு வாழாத நாம் போரின் பின்பும் இராணுவ சுழலிலும் வாழ்பவர்களிடம் அறத்தை எதிர்பார்ப்பது அநாகரிகமானது. மேலும் தமக்கான அறம் என்ன என்பதை அவரவர்தான் தெரிவு செய்ய வேண்டும். வேண்டுமானால் நாம் கருத்துக் கூறலாம். இன்னும் ஒரு படிமேல் சென்று விமர்சிக்கலாம். ஆனால் இதுதான் அறம் என வரையறுத்துக் கூறமுடியாது.

பெரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் அரச ஆதிக்கத்தின் கீழ் மட்டும் வாழ்ந்தவர்கள் என த.அகிலன் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார். ஆனால் பிற்காலங்களில் புலிகளின் தலைமையும் ஆதிக்க (நிழல்) அரசு ஒன்றைக் கொண்டிருந்தது. ஆகவே போர் முடிவடைவதற்கு முன்பு வாழ்ந்த மக்கள் அக புற ஆதிக்கங்கள் என இரு ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தவர்கள் என்கின்றார் அவர். பலர் இதனுடன் முரண்படலாம். ஆனால் இதை புலம் பெயர்ந்து வாழ்கின்றவர்கள் கவனத்தில் கொள்வது அவசியமானது. இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டே புலத்தில் இருந்து வருகின்ற படைப்புகளையும் படைப்பாளர்களையும் நாம் பார்க்கவும் அணுகவும் விமர்சிக்கவும் வேண்டும்.

e0aea4e0af80e0aeaae0ae9ae0af8d-e0ae9ae0aஎழுநா வெளியீட்ட தீபச் செல்வனின் “போர் தின்ற நகரம்” என்ற நூலிலுள்ள கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் போரின் பின் ஏற்பட்ட பல இழப்புகளை துன்பங்களை துயரங்களை வலிகளை தகவல்களாக சுய அனுபவப் பதிவினுடாக கூறுகின்றன. இதனை தனது மற்றும் தான் அறிந்த நண்பர்கள் உறவுகள் ஆகியோரின் வாழ்வின் மூலமாக வெளிப்படுத்துகின்றார். உதாரணமாக கண், கால், முகம் இழந்த, மற்றும் தம் உறவுகளை இழந்தவர்களின் அனுபவங்களை, பிரச்சனைகளை, சாவால்களை குறிப்பிடுகின்றார். இதேபோல் வடலி வெளியீட்ட இரு நூல்களான “தேவதைகளின் தீட்டுத்துணி” மற்றும் “சேகுவேரா இருந்த வீடு” போன்றவற்றிலும் மற்றும் கட்டுரைகளிலும் போரிற்கு முன், போரின் போது, மற்றும் போரின் பின் நடைபெற்ற முரண்பாடுகளையும் எள்ளலுடன் கூறுகின்றார் யோ. கர்ணன். இவை பெரும்பாலும் இயக்கத்திற்குள் நடைபெற்றவற்றையும் போராளிகளுக்கு இடையிலான உறவையும் இவர்களின் தனிப்பட்ட உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மற்றும் சமூகத்திற்கும் இயக்கத்திற்கும் இடையிலான உறவுகளையும் வெளிப்படுத்துகின்றன. கருணாகரன் போரின் போதும் அதற்கும் முன்பும் என்னவிதமான அரசியல் இயக்கத்திற்குள் நடைபெற்றது என்பதை கோடிட்டு காட்ட முனைகின்றார். நிலாந்தன் கடந்த கால படிப்பினைகளிலிருந்து புதிய சூழலுக்கான அரசியல் கோட்பாடு ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றார் எனலாம்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஈழத்தில் போர் நடைபெற்ற காலங்களில் வாழ்ந்தபோதும் ஒவ்வொருவரும் பெற்ற அனுபவங்களும் அதைப்பற்றிய புரிதல்களும் இதனடிப்படையிலான நிலைப்பாடுகளும் வேறுவேறானவை. இதற்கு இவர்களது வயது, அனுபவம், அறிவு, புரிதல்… எனப் பல காரணங்கள் தாக்கம் செலுத்துபவையாக இருக்கின்றன. இருப்பினும் இவர்கள் வெளிப்படுத்துகின்றவை அல்லது படைக்கின்றவை ஒன்றைவிட ஒன்று குறைந்ததல்ல. அதனதன் தளங்களில் அதற்கான முக்கியத்துவம் இருக்கின்றது. இவர்களில் யார் சரியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதை எதிர்காலம்தான் குறித்துச் செல்லும். நாம் காலத்திற்கு முந்தி அதைப் பற்றிய ஒரு முத்திரையைக் குறிக்கத் தேவையில்லை. ஆனால் கவனத்தில் கொண்டு ஆராயலாம்.

இவ்வாறான ஒரு புரிதலினடிப்படையில் வடலி வெளியீட்ட கருணை ரவியின் “கடவுளின் மரணம்” சிறுகதைத் தொகுப்பு தொடர்பான ஒரு குறிப்பு இது. ஒருநாள் வேலைக்குப் போகின்ற ஒரு காலைப் பயணத்தின் போது இதில் இருந்த முதலாவது கதையான “கடவுளின் மரணம்” சிறுகதையை வாசித்தேன். வழமையாக இவ்வாறான தொகுப்புகளிலுள்ள கதைகளைத் தொடர்ந்து அடுத்தடுத்து வாசித்துக் கொண்டு செல்வேன். ஆனால் இக் கதையை வாசித்தவுடன் அடுத்த கதையை வாசிக்க முடியவில்லை. என்  உணர்வு அவ்வாறு இருக்கவில்லை. இரண்டாவது கதையான “பிரிகை” யை வேலை முடிந்து மீண்டும் வரும் பொழுதுதான் வாசித்தேன். இதுவும் முதற் கதைபோல் இருக்கக் கூடாது என நினைத்துக் கொண்டு வாசித்தேன். ஆனால் அவ்வாறுதான் இருந்தது. அடுத்த கதையைத் தொடர முடியவில்லை. ஆகவே அடுத்த நாள் பயணத்தின் போது  ”கப்பல் எப்ப வரும்” என்ற மூன்றாவது கதையை என்ன சொல்லப் போகின்றாரோ என்ற ஒரு வித பதைப்பு எதிர்பார்ப்பு உணர்வுகளுடன் வாசித்தேன்.

இந்த மூன்று கதைகளிலும் போரின் வலி, அதனால் ஏற்பட்ட இழப்பு மற்றும் வாழ்வின் மீதான நம்பிக்கை ….  என்பன தொடர்பாக எழுதியிருக்கின்றார். இந்த உணர்வுகளை வெளிப்படுத்த இவ்வாறு எழுதியதைவிட வேறு வகையில் இந்த தரத்திற்கும் எழுத முடியுமா என்பது சந்தேகமே. உண்மையிலையே என்னுள் எழுந்த உணர்வு தொடர்பாக எழுதுவதற்கு என்னிடம் சொற்கள் இல்லை. அல்லது எனக்கு எழுதத் தெரியவில்லை எனவும் கூறலாம்.  பெரும்பான்மையான கதைகள் ஆண் பார்வையில் சொல்லப்பட்டிருந்தபோதும் அதையும் மீறி போரின் வடுக்கள் நம்மைப் பாதிக்கின்றன. சிறு கதைதானே என்று அடுத்த கதைக்கு பக்கத்தைத் திருப்பிக் கடந்து போக முடியவில்லை.  தான் உணர்ந்த வலிகளை தனக்குள் இருக்கின்ற ஆறாவடுக்களை நாம் உணரும் வகையில் படைத்திருக்கின்றார். வாசகர் மீது எந்தக் கருணையுமில்லாது படைத்திருக்கின்றார் கருணை ரவி. எனது வாசிப்பு பரப்புக்குள் இலக்கியம் தொடர்பான எனது சிற்றறிவுக்குள் இந்த மூன்று கதைகளும் என் மீது ஏற்படுத்திய பாதிப்பு ஆழமானது. அந்த வகையில் இக் கதைகள் எனக்குள் பல வகைகளில் உயர்ந்து நிற்கின்றன.

முதலாவது கதையில் ஒரு கடவுள் (மனிதர்) இறந்துபோக,  இழந்தவர், தான் இழந்ததும் தெரியாது, இருண்ட தன் தேசத்தில் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார் இன்னுமொரு கடவுளுக்காக. அவரைக் காப்பாற்ற இன்னுமொரு கடவுள் வந்தாரா….? இரண்டாவது கதையில் மனிதர்களுக்குள் பல முரண்கள், குறைபாடுகள் இருந்தபோதும் சில நேரங்களில் அவர்கள் கடவுளாகவே வாழ்கின்றனர் என்ற நம்பிக்கையைத் தருகின்றார். அல்லது அப்படி இல்லாது மிக மோசமான மனிதராகவும் அவர் வாழலாம். அதைத் தெரிவு செய்வதை நம்மிடம் விட்டுவிட்டார். ஆனால் மூன்றவாது  கதையில் இழந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் எந்த நம்பிக்கையையும் கடவுள் தரவில்லை. போருக்குள் அவஸ்தைப்படுகின்ற மாண்டுபோகின்ற மனிதர்களைக் காப்பாற்ற ஒரு கடவுளும் இருக்கவில்லை. கடைசியாக மக்கள் அநாதரவாக கைவிடப்பட்டநிலையில் எல்லாக் கடவுளரும் மரணித்துப் போனார்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலை இதனால் உருவாகின்ற  வெறுமை, பயம், இயலாமை எல்லாம் நம்மை உலுப்பி எடுக்கின்றது. நம் வாழ்வை கேள்விக்குள்ளாக்கின்றது. நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் எனக் கேள்வி கேட்கின்றது. வாசித்த எனக்கே இவ்வாறு எனின், இதை நேராக அனுபவித்தவர்களுக்கு…..?

நான்கவாது கதை முதுமையடைந்த ஒரு பெண்ணினது கதை. முதல் மூன்று கதையின் பாதிப்பால் எதிர்பார்ப்புடன் வாசித்த கதை. எதையும் தாங்குவதற்கு தயாராக இருந்த மனநிலை. அதனால் தானோ என்னவோ அதிர்ச்சியடையாது அமைதியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் ஒவ்வொருவரை இழந்து கடைசியாக எல்லாவற்றையும் இழந்து தனித்து நிற்கின்ற பெண்ணின் வாழ்வு. இவ்வாறு எல்லாம் முடிந்த பின்பும் அவருக்கு ஒரு விருப்பம் இருக்கின்றது. ஒரு பொறுப்பு இருக்கின்றதை உணர்கின்றார். முள்ளிவாய்க்காலில் அநாதையாக மரணித்த தனது கடைசி உறவின் இறுதிச் சடங்கை செய்கின்ற விருப்பம் அது.  அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றார். அது நிறைவேறியதா? மரணித்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்ற கதை. இந்தச் சடங்குகள் மரணித்தவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ தெரியாது. ஆனால் இழப்புகளை சந்தித்த பின்பும் வாழ்பவர்களுக்கு முக்கியமானது என்பதை வலியுறுத்துகின்ற கதை இது.

முதல் மூன்று கதைகளிலும் இருந்த வலி, வேதனை, துக்கம், முரண்பாடுகள் என்பவற்றுக்கான காரணங்கள் ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறையும் மற்றும் போராட்டத்தை ஒடுக்கவும் புலிகளின் தலைமைகளை அழிக்கவும் வல்லரசுகளின் ஆதரவும் இந்த அரசுக்கு இருந்தது எனலாம். இன்னுமொரு காரணம் ஈழத் தமிழ் சமூகத்திற்குள் இருந்த பல்வேறு வகையான அக முரண்பாடுகள். இதைத்தான் பின்னால் தொகுக்கப்பட்ட போரிற்கு முன்பான அல்லது இறுதிப் போருக்கு முன்பான கடந்த காலங்களிலும் அந்தக் கால அனுபவங்களின் அடிப்படையிலும் எழுதப்பட்ட கதைகள் கூறுகின்றன. இந்தக் கதைகள் பெரும்பாலானவை எழுதப்பட்டது மே 2009ம் திகதிக்கு முன்பு. அல்லது அங்கிருந்து ஆரம்பித்து போரின் பின்பு முடிகின்ற கதைகள். முதல் மூன்று கதைகளிலும் இருந்த இறுக்கம் அல்லது ஏதோவொன்று இவற்றில் இருக்கவில்லை எனலாம். இவை வழமையான சிறுகதைகளாகவே இருந்தன. ஆனாலும் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்த தவறவில்லை.

முதல் முன்று கதைகளையும் இறுதியாக சேர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் ஒரு நண்பர் கூறினார் முதல் மூன்று கதைகள் தரும் வெளிச்சம் பின்னால் தொகுக்கப்பட்ட கதைகளை புரிந்து கொள்ள உதவுகின்றது என்றார். நண்பர் கூறியபின் கதைகள் தொகுக்கப்பட்ட விதம் சரியான ஒழுங்கு முறை என்றே தோன்றியது. ஏனெனில் பின்னாலுள்ள கதைகள் நம் சமூகத்திற்குள் இருக்கின்ற பல்வேறுவகையான அக முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒருவகையில் இந்த முரண்பாடுகளின் விளைவுகள் தான் போரின் முடிவுகளுக்கு இருந்த பல காரணங்களில் ஒரு காரணம் எனலாம். இதில் சில கதைகள் போரின் நாயகர்களை உருவாக்கிய போதும் அவை வெளிவந்த காலங்களில் கருத்தில் கொண்டு அவற்றைப் புரிந்து கொள்ளலாம். அதேவேளை பல போராளிகள் மிக உயர்ந்த அர்ப்பணிப்புளை போராட்டத்தில் செய்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது வெளிப்படுத்துகின்றார்.

e0aeb5e0aea9e0af8de0aea9e0aebf-e0aeafe0aஅப்பு என்ற புனைப் பெயரில் எழுதப்பட்ட “வன்னி யுத்தம்” என்ற நாவல் அல்லது சுய அனுபவப் பகிர்வும் வாசிக்க கிடைத்தது. (நன்றி இளங்கோ). இதில் புலிகளின் ஆதிக்கத்திற்குள் இருந்த வர்க்க முரண்பாடுகளை குறிப்பிட்ட மனிதர்களை சுட்டிக்காட்டி வரையறுப்பதன் மூலம் அவர்களைப் பிரித்து திட்டவட்டமாகவும் உறுதியாகவும் சொல்கின்றார். இது தொடர்பாக டிசே இளங்கோவும் தனது குறிப்பில் கூறியுள்ளார். ஆனால் கருணை ரவி வர்க்க முரணை கதைகளினுடாகவும் கதை பாத்திரங்களினுடாகவும் இயல்பாக வெளிப்படுத்தி படைத்துச் செல்கின்றார். இதன் மூலம் பல்வேறு சமூக முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பை வாசகரின் கைக்கு… மனதுக்கு சிந்தனைக்கு விட்டுவிடுகின்றார்.

கருணை இல்லாத கடவுள் இருந்தென்ன இறந்தென்ன வாழுகின்ற மனிதர்களுக்கு அவரால் எந்த நன்மையும் இல்லை என எழுதி முடித்து விடலாம். ஆனால் அவ்வளவு இலகுவாக கடவுள் மீது மனிதர்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை அழித்துவிடமுடியாது. இந்த நம்பிக்கை அழிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. மாற்றப்பட வேண்டி ஒன்று.

மீராபாரதி

18.05.2013

நன்றி குளோபல் தமிழ் நியூஸ்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91855/language/ta-IN/article.aspx

 

 

சரியாக "புதிய மொந்தையில் பழைய கள்" என்பது இதை தான். கட்டுரை, தான் நவீன கருத்துக்களை அள்ளி வீசுகிறதாக நடிக்கிறது. ஆனால் வருவது அதே வாழைப்பழத்து ஊசிதான்.

 

நோக்கங்கள்:

தமிழர்களைப் பிரித்து வைப்பது.

வெந்த புண்ணில் குத்துவது.

அரசுக்காக  மக்களை ஏமாற்றி அரசியல் தீர்விலிருந்து மேய்த்து வெளியே அனுப்பி வைப்பது.

 

நனீன கருத்து சிங்கன்களாக காட்ட, எந்த ஒரு தொடர்பும் இல்லாமல், பெண்களில் ஆரம்பிக்கிறது கட்டுரை. ஜனநாயக முன்னேற்றம் கண்டிருக்கும் மேற்குநாடுகளில் பாலின சமத்துவம், பாலியல் சமத்துவம் என்பன அண்மையில் ஏற்பட்ட விழிப்புகள். அதனால்த்தான் அதில் ஆரம்பிக்கிறது கட்டுரை.  பெண்களின் எழுத்துக்கள் எங்கே என்று அங்கலாய்க்கிறது.  என்னையா இந்த நவீனத்துவ நாடகம்? சட்டிக்குள் அகப்பட்ட  அவித்த கீரையின் தயவு கூட கிடையாமல் சிங்கள இரணுவத்தின் பலியல் தேவைகளுக்காக சிறைக்குள் மாட்டுபட்டு இரவுபகல் கடையப்பட்ட போராளிப் பெண்களுக்கோ, திறந்த வெளியில் ஆமியின் அரைமணி தேவைக்காக பிள்ளைகளை, கட்டியவனை திரும்ப பார்க்க கிடைக்காமல் அழிக்கப்பட்டதுகளுக்கோ தங்கள் எழுத்துக்களை தியாகம் செய்த செம்மல் இனி அவர்கள் வாயல் கேட்ட பின் மிகுதி செய்யவென்று வாசலில் தவம் கிடப்பத்தாக நடிகிறார்கள். தூ............ கேவல சீவியம்.

 

அடுத்தது வழமையான புண்ணில் குத்தி பணிய வைப்பது. "நமக்கு உனது மொழி, பேச்சு, தொழில் உரிமைகளை பறிக்க நியாயம் இருக்கிறது. ஏ தாழ்ந்தவனே உரிமை கேட்டு அகிம்சை என்றாய். இனக்கலவரங்கள் செய்து , அவசரகாலச் சட்டங்கள் போட்டு  செய்து உன்னை தெற்கிலிருந்து துரத்தினோம். நீ கடைசி முடிவாக ஆயுதம் ஏந்தப் பார்த்தாய். உன்னை பூண்டோடு அழிக்க முடியும் என்று உன்மீது இரசாயன குண்டுகள் வீசினோம். கழிசடையே இன்னுமா நீ நிபந்தனை இல்லாதா அடிமையாக மாற மறுக்கிறாயா" . இது தான் வழமையான  புண்ணில் குத்தும் வசனங்கள். ஆனால் இது எம்மை போன்ற  பாமரகள் எழுதும் போது கேட்க வலிக்கிறது. ஆனால் மேலே எழுதிருப்பது போல பண்டிதர்கள் எழுதும் போது அது வாழைப் பழத்தில் ஊசி போல இதமாக ஏறும்.  இதையல்லவா புராண மதக்கதைகளில் எப்படி திராவிடர்கள் இழி குலத்தவர், சாதியில் குறைந்தவர்கள் வெற்றி என்றதை காணத்தாகதவர்கள் என்றெல்லாம் படித்த பண்டிதர்கள் போதித்து ஆரிய மாயையை ஏற்படுத்தி தெற்காசியாவை நிலையில்லாத சமூகம் ஆக்கினார்கள். "ஆகவே யதார்த்த்திற்கு அப்பாலும் கனவு கண்டோம்." "இன்று போராட்டம் தோல்வியடைந்த பின் வாழ்கின்ற காலம்" என்கிறது கட்டுரை. அப்போதெல்லாம் ஆரியர்களுக்கு, நமது இருக்கு வேத ததுவங்களை படிப்பித்தவர்களோ அல்லது வட மொழியை ஆக்கத்தக்க இலக்கண விகுதிகளை அமைத்துக்கொடுத்தவர்களோ எல்லாம் இப்படி ஒரு சில கோடரிக்கம்புகள் மட்டும் தான்.  அடிவருடி மாயை என்ற அலகுக்கு காட்டிலிருந்து ஒரு கொம்பு மட்டும்தான் தேவை. அதன் பின்னர் அந்த கோடாலி வடிவம் எடுத்த கொம்பு ஒன்றே அந்த காட்டை கீழே கொண்டுவந்துவிடும்.

 

நாய்க்கு எங்கு அடித்தாலும் காலைத் தூக்கும். எங்கு எது நடந்தாலும் அவற்றுக்கெல்லாம் சிங்கள அரசின் கைக்குள் இருந்து சறுக்கி, தவறிப்போய்விட்ட புலம் பெயர்ந்த மக்கள் தான் இலக்கு. முதல் தாக்கு அங்குதான்.  இதோ புலம் பெயர்ந்த முட்டாள்கள் புலம் பெயர்ந்த காலம் நிறுவப்படுகிறது. " உண்ணதமான ஒரு எதிர்கால வாழ்விற்காக நம்பிக்கையுடன் மரணிக்க தயாராக இருந்தோம். இருப்பினும் பலர் இதற்கு முன்பும் இந்தக் காலங்களிலும் அதன் பின்பும் புலம் பெயர்ந்தனர்." அதாவது "இந்த புலம் பெயர்ந்த என்ற தமிழின எதிரிகள் வெளியே வந்த காலம் கல் தோன்றி மண்தோன்றாக்காலத்திற்கு முன்தோன்றிய மூத்த குடி தோன்ற முந்தய காலம்"மாக வரையறுக்கிறது கட்டுரை. இதனால் இவர்கள், அனுபவப்படிருக்க வழியில்லை மட்டும் அல்ல  அறிவியல் மூலம் தன்னும் எதையும் அறிய முடியாது என்கிறது கட்டுரை. ஏன் எனில் இவரகள் புலம் பெயரும் போது முத்த மொழியான தமிழ் கூடத்தானே பிறக்கவில்லை. என்வே தாயக மக்களை பார்த்து "தமிழரை அறியாத இந்த காட்டிமிராண்டிகளை நம்பினீர்களாயின் ரத்தமும், சீழும் வடியும் உங்கள் புண்ணில் திரும்ப குத்து விழும்" என்று மிரட்டுகிறார்கள். இந்தக்  கட்டுரை எந்த நவீனத்தையும் காட்ட வில்லை. ஆனால் அதே பழைய புலம் பெயர், தாயக மக்களுக்கிடையில் ஆப்பிறுக்குவதில் மட்டும் நவீனமாக இருக்க பார்க்கிறது.

 

அதன் பின்னர் வழமையான கந்த புராண சொற்பொழிவுகள் மூலம் தமிழருக்கு என்ன தீர்வாக இருக்க வேண்டும் என்று தங்கள் முடிவை தமிழ் மக்கள் மீது கட்டிவிடுகிறது. தயவு செய்து எந்த பள்ளியில் இந்த பண்டிதர்கள் அரசியல் படித்தார்கள் என்றதை தமிழ் மக்கள் சற்று அறிந்து கொள்ள முடியுமா? இவர்களின் அரசியல் பாண்டித்தியம், அரசியல் அனுபவம் என்ன என்பதை சற்று விபரமாக கூறுவார்களா?  இவர்கள் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு பற்றி பரிந்துரை செய்ய முதல், புலம் பெயர் மக்களை எதிர்த்து, ஆனால் தாயக மக்களின் மனநிலையை அறிந்து அவர்களுடன் ஒட்டி உறவாடுவது போல நடிக்கும்  இந்த நாதாரிக் கூட்டம் முடிந்தால்  எந்த கட்சியிலாவது அல்லது சுயேட்சையாகவாவது வரும் வடமாகாண தேர்தலில் நின்று தங்கள் மதப் பிரசங்கத்தை  பற்றி தாயக மக்கள்  என்ன நினைக்கிறார்கள் எனபதை நிரூபித்து காட்ட முடியுமா?.

 

புலிகளின் ஆதரவுடன் கட்டி எழுப்பட்ட கூட்டமைப்பு எல்லாப் பிரித்தல் தந்திரங்களுக்குள்ளாலும் தப்பி இன்னொரு தடவை வடக்கில் தாயக மக்கள் என்ன கேட்கிறார்கள் என்றதை  நிரூபித்து காட்டப் போகிறது என்ற பயத்தால் எழுதும் கட்டுரைகள் யார் மனத்தில் பீதியை விளைவிக்க முயல்கிறது?

 

வரும் வடமாகாணத் தேர்தல் முடிய சர்வதேசம்  ஈழத்தமிழ் மக்களிடமிருந்து எகமனத்தாக இனப்படுகொலை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுதப்பட வேண்டும் என்ற குரலை கேட்கப்போகிறது. அப்போது விளங்கும் 65 ஆண்டுகலாக தமிழ் மக்கள் என்ன சொல்கிறாகள் என்பது. அது புலம் பெயர் தமிழ் மக்களுக்கு தெரியவில்லையா அல்லது அரச அடிவருடிகளுக்குத்தான் தெரியவில்லையா என்பதும் புரிந்துவிடும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

புலியும் புலம்பெய்ர்ந்தவனும் இல்லாட்டி இவைகளுக்கு படைப்பே இல்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

புலியும் புலம்பெய்ர்ந்தவனும் இல்லாட்டி இவைகளுக்கு படைப்பே இல்லை.....

இருந்தாலும்

இல்லாவிட்டாலும்

சோறு அவர்களால்தான்... :(

புத்தனும் உந்த பட்டியலில் விழுந்துவிட்டார் போலிருக்கு .

நடந்தது எதுவுமே தெரியாமல் வந்து கருத்து கொட்ட யாழில் எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை .

மேலே பதிவிட்ட சிலர் உந்த விடயத்தில் ரொம்ப பேமஸ் .ஒரு ஒழுங்கான புத்தகம் வாசித்ததில்லை ,சினிமா பார்த்ததில்லை ஆனால் மற்றவன் எழுதும் விமர்சனத்திற்கு பக்கம் பக்கமா தாங்களும் பின்னூட்டம் எழுதுவார்கள் .

 

கருணை ரவியின் "கடவுளின் மரணம் "சிறுகதை தொகுப்பு வாசித்துமுடித்துவிட்டேன் .அது புலி கதையும் இல்லை புலம் பெயர்ந்தவன் கதையும் இல்லை .நாட்டில் எம்  மக்கள் பட்ட  அவலங்கள் 2000-2009 வரையிலான காலப்பகுதியில் நடந்தவை மிக அழகாக பதியபட்டிருக்கு .கடவுளின் மரணம் வாசிக்கும் போது எம் மக்கள் பட்ட தாங்கொணாதுயரங்களை எம் கண் முன்னே தனது யதார்த்தமான எழுத்தால் அதுவும் அந்த ஊர் பாசையில் இதை விட சிறப்பாக யாராலும் எழுத முடியாது என நினைக்கின்றேன் .

கடந்த பத்துவருடங்க்களில் அகிலனின் "மரணத்துள் வாழ்வோம்" கருணை ரவியின் "கடவுளின் மரணம் " இரண்டும் எம் மண்ணை பற்றிய எந்த வித அரசியல் சாயமும் அற்ற மிக சிறந்த படைப்புகள் என்பதுதான் எனது கருத்து .

Edited by arjun

புத்தனும் உந்த பட்டியலில் விழுந்துவிட்டார் போலிருக்கு .

நடந்தது எதுவுமே தெரியாமல் வந்து கருத்து கொட்ட யாழில் எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை .

மேலே பதிவிட்ட சிலர் உந்த விடயத்தில் ரொம்ப பேமஸ் .ஒரு ஒழுங்கான புத்தகம் வாசித்ததில்லை ,சினிமா பார்த்ததில்லை ஆனால் மற்றவன் எழுதும் விமர்சனத்திற்கு பக்கம் பக்கமா தாங்களும் பின்னூட்டம் எழுதுவார்கள் .

 

கருணை ரவியின் "கடவுளின் மரணம் "சிறுகதை தொகுப்பு வாசித்துமுடித்துவிட்டேன் .அது புலி கதையும் இல்லை புலம் பெயர்ந்தவன் கதையும் இல்லை .நாட்டில் எம்  மக்கள் பட்ட  அவலங்கள் 2000-2009 வரையிலான காலப்பகுதியில் நடந்தவை மிக அழகாக பதியபட்டிருக்கு .கடவுளின் மரணம் வாசிக்கும் போது எம் மக்கள் பட்ட தாங்கொணாதுயரங்களை எம் கண் முன்னே தனது யதார்த்தமான எழுத்தால் அதுவும் அந்த ஊர் பாசையில் இதை விட சிறப்பாக யாராலும் எழுத முடியாது என நினைக்கின்றேன் .

கடந்த பத்துவருடங்க்களில் அகிலனின் "மரணத்துள் வாழ்வோம்" கருணை ரவியின் "கடவுளின் மரணம் " இரண்டும் எம் மண்ணை பற்றிய எந்த வித அரசியல் சாயமும் அற்ற மிக சிறந்த படைப்புகள் என்பதுதான் எனது கருத்து .

 

 

PhD கறுமங்களுக்கு நான் எழுதிருப்பது இதில் காணப்படும் கட்டுரைக்கு பதில் என்பதை விளங்காத போது கடவுளின் மரணத்தை பற்றி என்ன விளங்கினதாக நடிக்கிறார்களோ. இதில் காணப்படும் பிரசாரத்திற்கும், காணப்படும் புத்தகத்தின் பெயருக்கும் தொடர்பு இருக்க சந்தர்ப்பம் இல்லை என்று கூறிகொண்டே தான் நான் கருத்தை ஆரம்பித்திருந்தேன். என்னை தாக்குவதாக நினைத்துகொண்டு நான் ஆரம்பம் தொடக்கமே சரி என்று நிரூபிக்கிறது இந்த கருத்து.

 

மண் புழு மாதிரி சாப்பிடுவது நேரே வெளியே போய்விடுகிறது போல் இருக்கு.  அதனால் படிப்பவற்றால் அறிவு வளர்வதில்லை.

 

அரசியல் சாயம் இல்லாத புத்தகத்தைபற்றி அரசியல் சாயமூட்டி கட்டுரை வரைந்த தப்பை அரச்சுனும் சேர்ந்து கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எனது  தாய்மண்ணைப்பற்றி  எழுத

எனது மக்களைப்பற்றி  எழுத

எங்களது போராட்டத்தைப்பற்றி  எழுத...

 

கற்பனை கதாசிரியர்களின் கதைகளைப்படித்து தெரிந்து கொள்ளணும் என்று சொல்வது ஒரு PHD...??? :(

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனும் உந்த பட்டியலில் விழுந்துவிட்டார் போலிருக்கு .

.

 

அர்ஜூன் எம்மவரின் துன்பங்கள் இந்த எழுத்தாளார்கள் சொல்வது போன்று ...புலிகள் காலத்தில் மட்டும் நடக்கவில்லை .அதற்கு முதலும் நடந்தது அதையும் எழுதவேண்டும்...புலிகளையும் புலம்பெயர்ந்தவனை பிழை பிடிப்பதால் ஒரு நன்மையும் வரப்போவதில்லை...

Edited by putthan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் கண் முன்னே தனது யதார்த்தமான எழுத்தால் அதுவும் அந்த ஊர் பாசையில் இதை விட சிறப்பாக யாராலும் எழுத முடியாது என நினைக்கின்றேன் .

கடந்த பத்துவருடங்க்களில் அகிலனின் "மரணத்துள் வாழ்வோம்" கருணை ரவியின் "கடவுளின் மரணம் " இரண்டும் எம் மண்ணை பற்றிய எந்த வித அரசியல் சாயமும் அற்ற மிக சிறந்த படைப்புகள் என்பதுதான் எனது கருத்து .

 

அது அகிலனின் மரணத்தின் வாசனை.

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

‘கடவுளின் மரணம்’

(சிறுகதைத் தொகுப்பு)

இலக்கியம் சார்ந்த வடிவம் மற்றும் மொழியாடல்களும், அரசியல் சார்ந்த போரினது மூலம் மற்றும் இயங்குவிதங்களும் பற்றியவையான ஒரு விசாரணை

-தேவகாந்தன்-

கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’ சிறுகதைத் தொகுப்பு மிக்க கவனம்பெறவேண்டிய ஒரு படைப்பு என்று தோன்றுகிறது. அதன் வெளியீடும் கருத்தாடலும் 2013ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் கனடாவின் ரொறன்ரோ நகரில் நடைபெற்ற உடனடிப் பின்னால் ஒருமுறையும், அதன் நினைவுத் தாக்கத்தில் அண்மையில் மேலும் ஒருமுறையுமாக வாசித்த பின்னர் முதல் வாசிப்பில் அதன் மேலெழுந்திருந்த உணர்வுரீதியான மதிப்புகள் அடங்கி, ஏற்பட்டுள்ள விமர்சனரீதியான மனநிலையில் அதுபற்றி எழுதுவது அவசியமென்று பட்டது.

பதினாறு கதைகளை உள்ளடக்கியுள்ள இந்தத் தொகுப்பின் முதலாவது கதையினதே மொத்தத் தொகுப்புக்குமான தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது, இதுவே இத்தொகுப்பின் சிறந்த கதையென்று அறுதியிட முடியாதபோதும்.

எந்த ஒரு தொகுப்பும்போலவே இதுவும் மிகச் சிறந்த, சிறந்த, மற்றும் சாதாரண கதைகளைக் கொண்டிருப்பினும், இதன் மிகச் சிறந்த கதைகள் கட்டவிழ்க்கும் அர்த்தங்கள் அலாதியானவை. இவற்றின் கட்டுடைப்பிலும் பல்வேறு அர்த்தங்கள் வெளியாகின்றன.

முதலாவது கதையான ‘கடவுளின் மரணம்’, இரண்டாவதான ‘பிரிகை’, மூன்றாவதான ‘கப்பல் எப்ப வரும்?’, நான்காவதான ‘முள்ளிவாய்க்காலும் முறைப்பாட்டுக் கடிதமும்’, ஐந்தாவதான ‘புஸ்பனுக்கு இரண்டு பொடிக்காட்’, ஏழாவதான ‘நாய்வெளி’, எட்டாம் கதையான ‘சிங்களத்தி’, ஒன்பதாவதான ‘காணாமல் போனவர்கள்’, பன்னிரண்டாம் கதையான ‘பழி’ ஆகிய கதைகள் இத் தொகுப்பில் முக்கியமானவை.

இவற்றினுள்ளும் ‘கடவுளின் மரணம்’, ‘நாய்; வெளி’, ‘கப்பல் எப்ப வரும்?’, ‘முள்ளிவாய்க்காலும் முறைப்பாட்டுக் கடிதமும்’, ‘பழி’ ஆகியவை மிக முக்கியமானவை. இந்த ஐந்து கதைகளினதும் மீதான என் அபிப்பிராயங்களைப் பகிர்வதே இப்பகுதியில் எனது நோக்கம்.

ஆசிரியனின் மரணம் ரோலண்ட் பார்த்தினால்போல கடவுளின் மரணமும் இற்றைக்கு அறுபத்தைந்து எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் அமைப்பியலின் தொடக்க காலத்திலேயே நீட்சியினால் அறிவிக்கப்பட்டாயிற்று. ஆயினும் படைப்பாளி ‘கடவுளின் மரண’த்தில் இதை அறிவிக்கும் விதம் எதனையும்விட வித்தியாசமும், சிறப்புமானதுதான்.

இது எதிர்மறையாகவும் நேர்மறையாகவுமான இரண்டு உச்சங்களிலிருந்தும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் கதை. இக்கதை வெளிவந்த ஆண்டு, பத்திரிகையோ அல்லது சஞ்சிகையோவினது பெயர் ஆகிய விவரணங்கள் அற்றிருக்கிறது. இதையே படைப்பாளியின் ஆரம்பகாலக் கதையாகக் கொள்ளக்கூடிய அபாயம், அதன் நேர்த்தியற்ற நடையினாலும், நிறைந்த எழுத்துப் பிழைகளினாலும் சம்பவிக்கும் வாய்ப்புண்டு.

பெரும்பாலும் மனவோட்டங்களைவிட நிகழ்வுகளினால் கட்டப்படும் கதை இது. ஏனைய இத்தொகுப்பின் கதைகளினைவிட இக்கதை ஏராளமான நிகழ்வுகளையும் கொண்டிருக்கிறது. தன்மை நிலையில் கதைகூறல் தொடங்கும் இதிலுள்ள மொழியாளுமை எனக்கு மிகுந்த அலுப்பூட்டியது. ஒருபோது பேச்சுமொழியாகவும், இன்னொருபோது எழுத்து நடையாகவும் தொடரும் இக்கதைகூறலில் கதையை வாசித்து முடித்துவிடவேண்டுமென்ற அவசரத்தைத் தவிர வேறெதையும் அடைந்துவிட முடியவில்லை.

பின்நவீனத்துவ அலையொன்று தமிழ் இலக்கியப் பரப்பில் வீசிய காலத்தில் புரிந்தும் புரியாமலும் மொழிநடையிலேயே நம் படைப்பாளிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். அது ஒருவகையில் அதுவரை காலத்திய மரபார்ந்ததும், அலுப்பை ஏற்படுத்துவதுமான நடையிலிருந்து வாசகனுக்கு ஒரு விடுதலையை அளித்தது மெய்யே. ஆனாலும் மொழியை எவ்வாறேனும் பினைந்துபோட்டு கதையை உருவாக்கும் விடயத்தில் பிரேம் மற்றும் ரமேஸ்போல வெற்றிகண்டவர்கள் மிகக் குறைவு. அவ்வகை மொழிநடையைக் கையாளுவதில் மிகுந்த அவதானம் தேவை. கருணை ரவியின் ஏனைய இத்தொகுப்பின் கதைகள் பலவும் நடைரீதியாக தேறியுள்ள வேளையில், ‘கடவுளின் மரணம்’ மட்டும் அவதான இழப்பின் அடையாளங்களை நிறையவே தன்னகத்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் அக்கதையே மண்ணுள்ளிருந்து வெளியே வந்து நுணுந்திக்கொண்டு கிடக்கும் ஒரு மண்ணுண்ணிப் பாம்புபோல சிந்தனையை அலைக்கழிப்பதாயும் இருக்கிறது.

‘வேவு பார்ப்பது என்பது எவ்வளவு கடினமான விடயம். வேவுகள்பற்றிக் கதைப்பவர்களோடு நான் அந்நியமாகியிருந்ததை இப்பதான் பெருந்தவறென நினைக்கிறேன். வேவுகளின் சூட்சுமங்கள் தெரிந்தவர்களெல்;லாம் தனியாகவும் குழுக்களாகவும் துப்பாக்கி ரவைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துத் தப்பிவிட, நான்மட்டும் என்னை நம்பிவந்த வத்சலாவோடு தனித்திருக்கிறேன்’ என்று ஆரம்பிக்கிறது கதை.

ஆரம்பத்திலேயே விரிக்கப்பட்ட இந்த வேவுக்களம், கதையின் நடுவில் விரிவாக்கம் பெறுகிறது. நூல்களிலிருந்து அந்த நானும் வத்சலாவும் தப்பியோடுகையில், எதிர்ப்படும் ஒரு பதுங்கு குழிக்குள்ளிருந்து யாரோ வத்சலாவை அக்காவென அழைக்கிறார்கள். அவ்வாறு போகுமிடத்திலேதான் ஒரு கிழவியும், அவளுடனுள்ள ஒரு பெண்ணும் கதையில் அறிமுகமாகின்றனர்.

அவள் கிழவிக்குச் சொந்தமில்லை, இயக்கத்திலிருந்து ஓடிவந்த பெண் என்றும், அவளொரு புலனாய்வுக்காரியென்றும் படைப்பாளியால் அறிமுகமாக்கப்படுகிறாள். இந்த வேவு பார்க்கவந்த பெண், ஒருபோது களம் திரும்பாத போராளிகளைப் பிடிக்க வந்த இயக்கம் கிழவியின் தறப்பாளைச் சோதனை செய்யாமலே திரும்புவதிலிருந்தும், அது புதிராகவே சனங்களுக்கிருப்பதிலிருந்தும், இன்னும் இயக்கத் தொடர்பை அறுக்காதிருக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கவே செய்கிறாள்.

அந்தப்; பெண்தான், அந்த ‘நா’னின் ஒழித்துவைத்த நகைப் பையோடு காணாமல்போன விசுவரும் மனைவியும் இறந்த பின்னால் ஆபரண பூசிதையாக நிற்கிறாள். ‘பெரிய தாலி. பத்துப் பவுண் வரும். அம்மன் தாலி. அம்மன் தாலி குற்றத்தைப் பொறுக்குமாம். காப்புகளும் அடுக்கியிருந்தாள். மூன்று சோடி நெளிநெளிக் காப்பு. வெள்ளை முத்து வைத்த குண்டுச் சங்கிலி’யென அவள் நிற்பது, அவளை இன்னும் ஒரு வேவுகாரியாக இருப்பதன் சாத்தியத்தை வாசகனையும் கொள்ளவே வைக்கிறது. அவ்வளவு ஆபரணங்களை அணிந்திருக்கும் அவள் இராணுவத்திடம் போனதும் வெடிப்பதற்காக வேசம் புனைந்தவளாகக்கூட இருக்கலாம்தான் என வத்சலாபோலவே வாசகனும் நினைக்கிறான்.

முடிவுவரை இந்த வேவு என்பதை ஒரு பூடகத்துள் வைத்து நடத்த முடிந்த இந்தக் கதை, ‘அந்தப் பெண் நடந்து பத்து கவடு ஆகவில்லை. ரவையொன்று அவளின் கன்னத்தைத் துளைத்துச் சென்றது. அப்படியே முட்டுக்கால் குற்றி விழுந்தாள்’ என அவளது கதையையும் முடிக்கிறது.

எடுத்த கருவை போர் நடைபெறும் களத்தில் வைத்து அற்புதமாக நடத்த இந்தப் படைப்பாளியால் முடிந்திருப்பதைப் பாராட்ட வேண்டும்.

அப்படியான இந்தக் கதையில் கடவுளின் மரணம் எங்கே, எவ்வண்ணம் நிகழ்கிறது என்பதுதான் மர்மம். கடவுள் மரணித்த உலகில் யுத்தமொன்று நடைபெறுகிறது, அந்த யுத்தத்தில் மக்களதும், போராளிகள் இராணுவம் எதனதும் அறவிழுமியங்கள் தொலைந்திருக்கின்றன, அதனால்தான் கூடவிருந்த விசுவரே மறைத்துவைத்த நகைகளை எடுத்துக்கொண்டு காணாமல் போகிறார், அவரது இறப்பும் நகைகளின் மறைவும் இன்னொரு கடவுளற்ற உலகத்தில் நடைபெறும் நிகழ்வாகவே கொள்ளப்படவேண்டி உள்ளது.

ஜனங்கள் பசியில். எதையாவது விற்றால் தவிர சாப்பாட்டுப் பிரச்சினையைச் சமாளித்துவிட முடியாத நிலை. ‘நகைக் கடைகளில் வேலைசெய்த சின்னப் பொடியள், கிழடுகள் எல்லாம் சின்னத் தராசை சந்திக்குச் சந்தி வைத்திருந்து ஒரு பவுண் நகை பன்னிரண்டாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்தார்கள். ஒண்டரைப் பவுணை ஒரு பவுண் என்றும் ஏமாற்றினார்கள்.’ இவையெல்லாம்கூட கடவுள் அற்ற ஓர் உலகத்திலேயே சம்பவிக்க முடியும்.

இவ்வாறு கடவுளின் மரணம் உள்ளடங்க விரிந்த கதை இது. அற்புதமான வார்ப்பு. இதன் மொழிநடை மற்றும் வசனம் மற்றும் எழுத்துப் பிழைகள் கவனிக்கப்பட்டிருந்தால் இன்னும் கூடுதலான வாசகப் பாதிப்பினைச் செய்திருக்கும் என்பதை நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்.

மனிதரைக் கொல்லும் போரினிடையே, அறங்களைக் கொல்லும் மனிதர்கள்போல அறங்களைக் கைவிடும் மனித மனநிலையும் கட்டமைக்கப்படுகிறது. ‘பிரிகை’ சொல்வது அவ்வாறான கதையைத்தான். ‘கப்பல் எப்ப வரும்’ என்ற கதையிலும் எப்படியாவது தப்பிவிடுதல் என்ற மனநிலையில் பணம் கொடுத்து முன்னுரிமை பெறப்படுதலில்கூட இந்தக் கருத்து ஆதாரம் கொண்டிருக்கிறது.

மிக முக்கியமான கதைகளென நான் குறிப்பிட்டனவற்றுள் ‘நாய் வெளி’ மிக நேர்த்தியாக வார்க்கப்பட்டுள்ள கதை. உருவ நேர்த்தியில் இத்தொகுப்பிலுள்ள சிறந்த சிறுகதையென இதைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. தமிழ்ப் புலத்தில் வார்க்கப்பட்ட கதைகளுள் மிக வித்தியாசமான களத்தைக்கொண்ட கதை இது. ஒரு கிராமத்து நாய்கள் முழுவதுமே விசர் பிடித்து அடைந்திருக்கும் இந்த வெளியில்தான், ஒருபோது வலிய வந்த குட்டி நாயாய் அக்காளியிடம் தஞ்சம்பெறும் சுருட்டைகூட நிற்கிறது. அக்காளி சுருட்டையைத் தேடிப் போகிறாள், ஏற்கனவே அந்தப் பகுதிக்குச் சென்றவர்கள் மறுபடி உயிரோடு திரும்பியிராத நிலையில். அக்காளிக்கு என்ன ஆகும்? மனத்தைப் பதைக்க வைக்கிற கதை.

ஓர் உண்மைக்கு எதிர்புறத்திலும் ஓர் உண்மைதான் இருக்கிறது. இவற்றுக்கெதிராக ஒரு பொய் இருக்கலாம். அதுபோல ஒரு நியாயத்தின் எதிரிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இவற்றினெதிரே ஓர் அநியாயம் இருக்கச் செய்யலாம். இதை ஓர் ஆபிரிக்கக் கதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது.

கிராமத்துள் புகுந்த ஒரு புலி, திண்ணையில் கிடத்தப்பெற்றிருந்த ஒரு குழந்தையைக் கடித்திழுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிடுகிறது. கிராமத்தவர் புலி கிராமத்துள் வந்து குழந்தையைக் கவ்விச் சென்றதையிட்டு கொதித்தெழுந்து புலியை வேட்டையாடப் புறப்படுகிறார்கள். கிராமத்தவரைப் பொறுத்தவரை புலி செய்தது பெருங்கொடுமை. ஆனால் இதிலே புலியின் நியாயமென்று ஒன்றிருக்கிறது. கிராமத்தவர்கள் வந்து காட்டினுள் வேட்டையாடி தமக்குப் பட்டினியை ஏற்படுத்துகிறார்கள், தாம் என்ன செய்யமுடியும்? எதையாவது அடித்துத் தின்றுதானே ஆகவேண்டும்? இது புலியின் வாதம். இரண்டு பக்கங்களிலும் இருக்கும் நியாயம் ஏறக்குறைய ஒன்றுதான்.

காலகாலமாக நடைபெற்று வரும் யுத்தங்களிலெல்லாம் ஆயுதங்கள்தான் மாறியிருக்கின்றன. நியாயங்களதும் அநியாயங்களதும் வரைவிலக்கணங்கள் மாறவில்லை.

மகனையிழந்த ஒரு தாய். தான் தனது மகனிறந்த முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல அனுமதி பெறும்பொருட்டு முறைப்பாடுசெய்யச் செல்கிறாள். படாதபாடெல்லாம் பட்டு விண்ணப்பம் தயாராகிவிடுகிறது. அதைக் கையளிப்பதற்காக பொலிஸ்நிலையம் செல்கிறாள். அங்கு மீசை வழித்த ஒரு சின்னப் பொலிஸ் அவளை பக்கத்திலிருக்கும் கதிரையில் அமர்த்துகிறான்.

‘முறைப்பாட்டை வாங்கும்போது மூன்று தடவைகள் இமைகள் மூடும்வரை அவளையே பார்த்தான். அவள் கீழே பார்த்தாள். அவனின் முகத்தை அதிகநேரம் பார்க்க அவளுக்கு அந்தரமாக இருந்தது. அவன் முறைப்பாட்டை பிரித்துப் படிக்கவில்லை. பேனையை கைகளில் வைத்து சுற்றிக்கொண்டிருந்தான். அறுபத்தினான்காவது தடவை சுற்றியதும் மீண்டும் அவளைப் பார்த்தான்.’ இதுமாதிரியான ஒரு பொலிஸின் நடவடிக்கையை விகற்பமாகத்தான் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அடுத்த கணமே அவன் சொல்கிறான், ‘எனக்கு உங்களைப்போல ஒரு அக்கா இருந்தவ…’ என. பிறகு தொடர்ந்து சொல்கிறான், ‘அக்கா கிளைமோரில செத்திட்டா’ என்று.

அவள் - அந்தச் சாதாரண சனம் - கேட்கிறது: ‘அக்கா வன்னிக்கு வந்தவாவோ?’

அந்தச் சாதாரண சனம் அறிந்திராத, அறிந்திருந்தாலும் உணர்ந்திராத மனநிலையிலிருந்து பிறந்ததுதான் அந்தக் கேள்வி. ஏனெனில் தனக்கெதிராகத் தவிர போர் எங்கும் நிகழ்த்தப் பெறவில்லையென்பதும், அது வன்னியில் தவிர வேறெங்கும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும்தான் சாதாரண சனத்தின் அறிதலாக இருக்கிறது. இது இன்னொரு பகுதியின் விரிவையும் கொண்டிருக்கிறது. போர் தனக்கெதிராக மட்டுமே செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது அது.

அந்தக் கேள்விக்கு எதிர்ப்புற உண்மையைக் கொண்டிருந்தவன் பதில் சொல்கிறான்: ‘அநுராதபுரம் பஸ்சில கிளைமோர் வெடிச்சது.’

இதுதான் இந்த யுத்தத்தில் வெளிப்பட்டிருப்பது. அநியாயங்கள் கூடவோ குறையவோ இரண்டு பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றன. உண்மை கூடவோ குறையவோ இரண்டு பகுதிகளிலும் இருக்கின்றன.

இந்த அற்புதமான உள்ளடக்கத்தினை படைப்பாளியே விரும்பி அமைக்காதிருந்தாலும், அதைக் கொண்டிருக்கும் இச்சிறுகதை போரின் மூலத்தையும், அதன் இயங்குவிதங்களையும் நுட்பமாகத் தெரிவித்திருக்கிறது.

தனது மகன் அடக்கம்செய்யப்பட்ட இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணெடுத்தும், இறுதிக் கடனாற்றுவதற்கும் செல்ல அனுமதி கேட்கும் ஒரு தாயின் வேண்டுகை நியாயமானது.

ஆனால், ‘போர் தின்ற என் கொள்ளிப் பிள்ளையின் குருதி சிந்திய முள்ளிவாய்க்காலில் சிலை வைக்கவேணும். ஒவரு ஆண்டு திதிக்கும் விரதம் இருந்து மாலையுடன் முள்ளிவாய்க்கால் செல்லவேணும்’ என்ற இரண்டாவது வேண்டுகை போர் நடந்த நிலத்தில் அதீதமானது. அநியாயம் இரண்டு பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றன. எதிரே நிற்பவன்கூட பாதிக்;கப்பட்டவனாய் இருக்கக்கூடும்.

இது நியாயம் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றன என்பதன் இன்னொரு வடிவம்தான்.

அந்த மண்ணிலிருந்துகொண்டே இந்த உண்மையைச் சொல்ல அசாதாரண துணிச்சல் வேண்டும். படைப்பாளியிடமிருந்து நினையாப்பிரகாரம் வெளிப்பட்டிருப்பினும், இந்த உள்ளுறை அடங்கும்படியாக எடுத்த சொல்லாக்க முயற்சிகள் முக்கியமானவை. ஒரு சிதைவாக்க முறையினாலன்றி இத்தகைய உள்ளுறைகளை சுலபமாக வெளிக்கொணர்ந்துவிட முடியாது.

‘சிங்களத்தி’ கதையில் ஒரு சிங்கள இளம் தாயின்மேல் இரக்கம்காட்டும் அங்கஹீனியான ஒரு முன்னாள் போராளியின் செயற்பாடு செயற்கையானது. ஆனால் முள்ளிவாய்க்கால் செல்ல அனுமதி கேட்டுவந்த தாயிடம் சிங்கள பொலிஸ் காட்டிய கோபம், அலட்சியம் இயல்பானது.

இந்த வகையில் அண்மையில் இலங்கைப் படைப்பாளியொருவரால் வெளிக்கொணரப்பட்ட இத் தொகுப்பு தமிழிலக்கிய உலகில் கூடிய கவனம் பெறவேண்டியதாகின்றது.

000

நூல்: கடவுளின் மரணம்

படைப்பாளி: கருணை ரவி

வெளியீடு: வடலி வெளியீடு

வெளிவந்த ஆண்டு: அக்.2012

(‘தாய்வீடு’ ஜனவரி 2014 இதழில் வெளிவந்தது)

http://devakanthan.blogspot.co.uk/2014/01/1.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை சுதந்திரம் பெற்றபின் 80கள் வரைக்கும் "கருணையில்லா கடவுள்" எங்கே இருந்தார்? வன்னிக்கண்ணீரும் ஒருசிலருக்கு சோறாகுமானால் அதுவும் சந்தோசம்.

இலங்கை சுதந்திரம் பெற்றபின் 80கள் வரைக்கும் "கருணையில்லா கடவுள்" எங்கே இருந்தார்? வன்னிக்கண்ணீரும் ஒருசிலருக்கு சோறாகுமானால் அதுவும் சந்தோசம்.

:icon_idea:  :icon_idea:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.