Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டாஸ்மாக்கை மூடு' பாடலைப் பாடியவர் தே.பா.சட்டத்தில் கைது!

Featured Replies

'டாஸ்மாக்கை மூடு' பாடலைப் பாடியவர் தே.பா.சட்டத்தில் கைது!

 

திருச்சி: மது ஒழிப்பிற்காக "டாஸ்மாக்கை மூடு' என்று பாடல் இயற்றி பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது.

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் கடையை உடைத்தது, அதன்பிறகு மதுவிலக்கை வலியுறுத்தி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் மரணம், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடை உடைப்பு என்று கடந்த சில மாதங்களுக்கு முன்  தமிழகத்தில் மது ஒழிப்பு போராட்டங்கள் தீவிரமாக நடந்தன.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் மதுவிலக்கு கோரி போராட்டங்களை நடத்தின. இவை மட்டுமல்லாமல்,  "மூடு டாஸ்மாக்கை..!" என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்துவரும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அமைப்பான 'மக்கள் அதிகாரம்'  அமைப்பினர் பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தினர்.

tasmc%20kovan.jpg

மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பினர்,  " மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு, இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சி சாகணும், எத்தனை தாலிகள் அறுக்கணும், மூடு டாஸ்மாக்கை மூடு"  எனும் பாடலை வெளியிட்டு,  அதை கலை வடிவத்தில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதிநாடகமாக  நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில், இந்தப்  பாடலை இயற்றி பாடிய  திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் திடீரென கைது செய்து செய்தனர்.

கைது செய்யப்பட்ட கோவனை  மிக மோசமாக நடத்தியதாகவும், அவரை போலீசார் எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை தெரிவிக்காமல் சென்றதாகவும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து இன்று (வெள்ளி) காலை மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள்,  திருச்சி உறையூர் காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது,  "கோவனை அழைத்து வந்தது நாங்கள் இல்லை" என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உறையூர் காவல் நிலையத்தை மக்கள் கலை இயக்கத்தினர் முற்றுகையிடப்போவதாக செய்திகள் பரவியதால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் கோவனின் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் பேசிய சென்னை குற்றப் பிரிவு போலீசார், " "கோவனை, "மூடு டாஸ்மாக்கை மூடு" பாடலை வாட்ஸ் ஆப், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பியதற்காக கைது செய்துள்ளோம், அவரை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும்" கூறியுள்ளார்கள்.

மேலும்  அவர் மீது  இந்திய  தண்டனை சட்டப்படி தேசத்துரோகம், சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், அவதூறு செய்தல் உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்கள். இந்நிலையில், கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது.

ஆனால் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல மறுப்பதாகவும், அவரை மக்கள் முன் காண்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள மக்கள் அதிகாரம் அமைப்பினர், "இதுபோன்ற நடவடிக்கைகளால் மது ஒழிப்புகளுக்கு எதிரான போராட்டங்களை முடக்கிவிடலாம் என நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. இனிதான் டாஸ்மாக்கை  மூடும் எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்" என்கிறார்கள்.

http://www.vikatan.com/news/article.php?aid=54410

  • தொடங்கியவர்

"ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம் - ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசில உல்லாசம்"

பாடலைப் பாடிய தமிழகத்தின் கர்தார் கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது - கண்டனங்கள் குவிகின்றன...

 

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தேசபக்தி பாடல்களைப் பாடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி பாடல் இயற்றி பாடிய கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து தமிழகத்தில் கண்டனங்கள் குவிகின்றன.

ஒரே நாள் இரவில் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவனின் கைது. யார் இந்த கோவன்? என்று கேட்டால் இவரை தமிழ்நாட்டின் ‘கத்தார்' என்று செல்லமாக அழைக்கின்றனர்.

"இட்லி ஒத்த ரூபா... கக்கூஸூ 5 ரூ.... சாப்பாடு 5 ரூபா.... பருப்பு 100 ரூபா" என்று இன்றைய நிலையை இயல்பாக பாடும் கோவன், கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர்.

விவசாயக் கூலி தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த கோவனுக்கு அம்மா பாடும் பாடல்கள்தான் இன்ஸ்பிரேசன். ஐ.டி.ஐ. படிப்பை முடித்துள்ள கோவன், 1996ம் ஆண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு நாட்டுப்புற பாடல்கள் பாடுவதிலேயே ஆர்வம் அதிகரித்துள்ளது.

 ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்' அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அனல் தெறிக்கும்.

‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு... நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு' என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் கொப்பளிக்கிறது.

ஊர் ஊராக போய் ஆளும் அரசுக்கு எதிராகவும், அநியாயத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் கோவன், 'ஊருக்கு ஊர் சாராயம்.... தள்ளாடுது தமிழகம்' என்ற பாடல் கோவனை உலக அளவில் பிரபலப்படுத்தியிருக்கிறது அந்தப் பாடலை நீங்களும் கேளட்டு பாருங்களேன்… மேல் உள்ள காணொளி இணைப்பில்…

நான் கோவன் ஆனது எப்படி? -  -பாரதி தம்பி:-

 

 

 

"மூடு டாஸ்மாக்கை மூடு "  பாடல் இயற்றி கைதாகியுள்ள கோவன், சமூக மாற்றம் குறித்தும் அதன் அத்தியாவசியம் குறித்தும் பல ஆண்டுகளாகப் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருபவர். கோவன் ஏற்கெனவே ஆனந்த விகடனுக்கு கடந்த 2010-ம் ஆண்டு பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டி இங்கே...

கோவன்... தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாகkovan_vc1_100.jpgஇவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும்.

 

 

'மக்கள் கலை இலக்கியக் கழகம்' அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்!

"கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப் பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். 'நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா... நித்தம் ஒரு சண்டையாகும்'னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது.

அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசை யையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன்.

ஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, 'நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே... காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க' என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க. முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம்.

இயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. 'நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்'னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள... மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், 'போராளிகளின் முதல் தேவை துணிவு'ன்னு புரிஞ்சது.

கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவப் பூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம். 'சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாம பாடுபட்டோம்'கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம்.

நாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குப் போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் 'நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்'னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் 'இன்னிக்கு சாப்பாடும், தங்குற இடமும் நீங்கதான் தரணும்'னு அறிவிப்போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம்.

எங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு. நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடல. அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு... புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல; இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, 'புரட்சி... புரட்சி' என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை.

p54b.JPGஇந்து மத வெறி, தாமிரபரணி நதி... கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளை வைத்தே மக்களிடம் பேசுகிறோம்.கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிரசாரம் செய்கிறோம். உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக்கும் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத்துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம்.

cleardot.gif
 
 

உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி

உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி

திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்

இடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள்

இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பாரி!"

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125448/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த கோவன் கைது :புலம்பெயர் அமைப்புக்கள் மௌனம்

kovan

 

 

 

 

 

 

 

 

 

தமிழ் நாடு முழுவதிலும் ஆபாசமும் வன்முறையும் நிறைந்த சினிமாக் கலாச்சாரம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் போது மதுபானக் கடைகளை மூடக் கோரிப் பாடல் பாடிய தோழர் கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருக்கின்ற குறைந்தபட்ச ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் கோவனைக் கைது செய்து தமிழ் நாடு அரசு வன்முறையைத் தூண்டுகிறது.

ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991 ஆம் ஆண்டின் பின்னர் தமிழகத்தில் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்ட ஜெயலலிதா அரசு ஈழ ஆதரவாளர்களைத் தேடித்தேடிக் கைது செய்து சிறையிலடைத்தது. அவ்வேளைகளில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாடு முழுவதும் ஜெயலலிதாவின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தியது. அமைப்பின் தோழர்கள் மீது போலீஸ் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அவ்வேளையில் ஜெயலலிதா அரசின் ஈழ ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கோவனின் பாடல்கள் மக்கள் மத்தியில் புதிய அரசியல் எழுச்சியை ஏற்படுத்தின.

தமிழ் நாடு முழுவதும் இன்று தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் கோவனின் கைது தொடர்பான தொடர்ச்சியான தகவல்களை வெளியிடுகின்றன. அனைத்துக் கட்சிகளும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்துவரும், தொடர்ச்சியான போராடங்களை நடத்திவரும் கோவனை விடுதலை செய்யக் கோரியோ அன்றி, மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கு ஆதரவாகவோ இதுவரை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மூச்சுக்கூட விடவில்லை.

கலை என்ற பெயரில் வன்முறையையும் ஆபசத்தையும் எதிகால சந்ததிகள் மத்தியில் விதைக்கும் சினிமாக்காரர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்து அரசியல் நாடகமாடும் தமிழ் அமைப்புக்களுக்குக் கோவனைத் தெரிந்திருக்க நியாயமில்லை.

கோவனைக் கைது செய்வதற்கு காரணமான பாடல்:


 

 

http://inioru.com/kovan-arrested/

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவிடம் கேள்வி கேட்டா சும்மா விடுவமா நாங்கள்! அவ மக்களின் முதல்வர் எல்லோ! <_<

வன்முறை இல்லாமல் வன்முறையை ஊக்குவிக்கும் டாஸ்மாக்கை மூடச்சொன்ன சமூகப்போராளிக்கு கொடுத்த சன்மானம் இது! 

  • தொடங்கியவர்

'தேசத் துரோகம்... பிரிவினை வாதம்... தப்பே இல்ல!'

 

'டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாட்டுப்பாடின கோவனை கைது செய்துட்டாங்க. அவர் மேல தேசத் துரோகம்... பிரிவினைவாத குற்றச்சாட்டுக்களை சொல்லி உள்ளே தூக்கிப் போட்டிருக்காங்க.

‘அடப்பாவிங்களா... குடிகெடுக்கிற டாஸ்மாக்கை மூடுனு பாடினது தேசத்துரோகமா... பிரிவினை வாதமா?' னு  பலரும் பதைபதைக்கிறாங்க. தமிழ்நாட்டுல ஏகப்பட்ட பேருக்கு இதே உணர்வுதான். இதுல வேடிக்கை என்னன்னா... ஏற்கெனவே இந்த கண்றாவியை தமிழ்நாட்டுல திறந்துவிட்டு, ஆறா ஓடவிட்ட கருணாநிதிகூட, கோவனுக்கு ஆதரவா குரல் கொடுத்திருக்கிறதுதான். இதேமாதிரி நிறைய அரசியல்வாதிங்களும் கடுமையா கண்டனம் தெரிவிச்சிருக்கிறாங்க.

govan01.jpg

என்ன சொன்னாலும் சரி, 'டாஸ்மாக்கை மூடுனு சொன்னது... கண்டிப்பா தேசத்துரோகம், பிரிவினைவாதத்தை தூண்டுற செயல்ங்கிறதுல சந்தேகமே இல்ல'.

'அடப்பாவி... அம்மாவுக்கு இந்த ஜால்ரா அடிக்கிறானே!' னு கொந்தளிக்கிறீங்களா?

வாயை மூடுங்க... அம்மா எது செஞ்சாலும் அதுல குத்தம் கண்டுபிடிக்கிறதே  இங்க பலபேருக்கும் வாடிக்கையா போச்சு. இது ஒரு ஃபேஷனாவும் ஆகிட்டிருக்கு. ஆன்னா... ஊன்னா... டிவி பொட்டிக்குள்ள பூந்துகிட்டு, விவாதம்கிற பேர்ல அரசாங்கத்தை பொளந்துகட்டுறதே பொழப்பா வெச்சுக்கிட்டிருக்காங்க பலரும்.

மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த ஒரு அரசு, அந்த மக்களை 24 மணி நேரமும் குஜாலா வெச்சுக்கிறதுக்காக டாஸ்மாக்கை தொறந்து வெச்சுருக்கு... இது ஒரு குத்தமா. இதுக்காக முதலமைச்சரை விமர்சிச்சி தெருவுல பாட்டுப்பாடி ஆட்டம் போடுவீங்க... இதை கெவருமெண்ட் வேடிக்கை பார்த்திட்டிருக்கணும்னு நினைக்கறீங்க.

govan02.jpg

'சரி, டாஸ்மாக்கை மூடச் சொல்றதுல என்ன தேசத்துரோகம் இருக்கு?'னு கேக்கறீங்களா... இப்பத்தான் நீங்க சரியான ஆள். அப்படி வாங்க வழிக்கு. விஷயத்தை விவாதிச்சி ஒரு முடிவுக்கு வருவோம். அதைவிட்டுட்டு, 'கோவனை கைது பண்ணிட்டாங்க... பண்ணிட்டாங்க!'னு ஊரு முழுக்க கூப்பாடு போடாதீங்க.

டாஸ்மாக் மூலமா தேசிய நீரோட்டம் தமிழ்நாட்டுல வெள்ளமா பாய்ஞ்சிக்கிட்டுருக்கு. நம்ம ஊரு சாராய முதலாளிங்களோட சரக்கு மட்டுமில்லாம, பக்கத்துல இருக்கிற ஆந்திரா, கர்நாடகா தாண்டி இந்திய மாநிலங்கள் பலதையும் சேர்ந்த சாராய முதலாளிங்களோட சரக்கும் இங்க ஓடிட்டிருக்கு. அதாவது தேசிய அளவுல இருக்கிற சாராய முதலாளிங்களோட பொக்கிஷ பூமியா இருக்கு தமிழ்நாடு. இப்படியிருக்கிறப்ப, டாஸ்மாக்கை மூடுனு இவர் பாட்டுப்பாடினா, அது தேசவிரோதமா இல்லையா? நீங்களே சொல்லுங்க.

இப்படி பண்ணி, தேசிய நீரோட்டத்துல மூழ்கி முத்தெடுத்துக்கிட்டிருக்கிற தங்கத் தமிழ்நாட்டையும், இங்க வந்து தொழில்பண்ணி தமிழ்குடி மக்களை வாழ வெச்சுக்கிட்டிருக்கிற பிற மாநில முதலாளிங்களையும் மனசு சங்கடப்பட வெச்சு, இது நாளைக்கு, 'தேசியமே வாழ்க்கை, வாழ்க்கையே தேசியம்' னு வாழ்ந்துகிட்டிருக்கிற வடமாநில அரசியல்வாதிங்க காதுக்குப் போய், குறிப்பா நரேந்திர மோடி காதுக்கு போச்சுனா... தமிழ்நாட்டு மேலதானே கோவப்படுவாரு. பிறகு, அவரு பாட்டுக்கு எசகு பிசகா முதலமைச்சர் மேல கோவமாயிட்டாருனா? ஆகக்கூடி எவ்வளவு பெரிய தேசத்துரோகத்தை செய்திருக்காரு கோவன்?

govan03.jpgஅடுத்தாப்புல பிரிவினை வாதத்துக்கு வர்றேன்.

பொதுவா ஒரு நாடுனு இருந்தா, எப்பவுமே குடிமக்களும், குடிமக்களை வாழ வைக்கிற அரசாங்கமும் ஒண்ணா இருக்கிறதே இல்லை. எதிரும்புதிருமாத்தான் கிடப்பாங்க. ஆனா, இந்த தமிழ்நாட்டுல மட்டும்தான், டாஸ்மாக் மூலமா குடிமக்களும் அரசாங்கமும் பின்னிப் பிணைஞ்சு கிடக்குது. நீ பாட்டுக்கு "டாஸ்மாக்கை மூடு" னு பாடினா... குடி மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் நடுவுல பிரிவினையை உண்டு பண்றதாதானே அர்த்தம். இதுகூட பரவாயில்லை. இப்படி ஒரு பாட்டைப் பாடி, அரசாங்கத்துக்கு கொட்டிக்கொடுக்கிற அந்தக் குடிமகனோட குடும்பத்துலயும் குழப்பத்தை உண்டாக்கி, குடும்பத்தைவிட்டே அவனை பிரிக்கிறது பிரிவினை வாதத்துல வராதா?

அப்புறம் பிரிவினை வாத சட்டத்துல பிடிச்சு போடாம முடக்குவாத சட்டத்துலயா உள்ள போட முடியும்?!

இப்படியெல்லாம் நான் கேட்டா, உங்களுக்கு பொங்க ஆரம்பிச்சுடும்.

'அடப்பாவிங்களா, குடிகெடுக்கிற டாஸ்மாக்குக்கு எதிரா குரல் கொடுக்கிறதை தேசத் துரோகம்'னு சொல்றீங்களே... அப்படினா, கோடி கோடியா கொள்ளையடிச்சு, வெளிநாட்டுல குவிச்சு வெச்சிருக்கிறவனெல்லாம் தேசச்சேவை செய்றவனா?

ஆத்துமணல், தாது மணல், கிரானைட்னு அத்தனையையும் சுரண்டி சுரண்டி கோடி கோடியா சம்பாதிக்கிறவன் செய்றதெல்லாம் தேசச் சேவையா?

govan04.jpgநாட்டை ஊழல்ல இருந்து காப்பாத்த அதைச் செய்வோம்... இதைச் செய்வோம். நாட்டை முன்னேற்ற பாதையில கொண்டு செலுத்த ஒற்றுமையுடன் பாடுபடுவோம்... கருப்புப் பணத்தை கறந்து மக்களுக்கு பிரித்துக் கொடுப்போம்னு சொல்லி ஆட்சிக்கு வந்துட்டு... 'மாட்டுக்கறி திங்கறவனை அடிச்சிக் கொல்லு... எதுத்துக் கேக்கறவன் மூஞ்சியில கரிபூசு'னு சொல்றதெல்லாம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துற செயலா?'னு ஆளாளுக்கு கேக்க ஆரம்பிச்சுடுவீங்க.

ஆனா, இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்னை மடக்கிட்டதா நினைச்சுக்கிட்டா, நீங்கதான் முட்டாள்.

கோடிகோடியா கொள்ளையடிச்சதாலதான், இன்னிக்கு இந்தியாவே ஒரு வல்லரசு ரேஞ்சுக்கு இருக்கு. வெளிநாட்டுல நம்மளோட கருப்புப் பணம் நிறைய குவிஞ்சுருக்கிறதாலதான், நம்ம நாட்டுக்கே பெருமை. அதனாலதான், மோடி சார்கூட 'கருப்புப் பணத்தைக் கைப்பத்துவோம்'னு இப்பவெல்லாம் சொல்றதே இல்லை.

govan05.jpgஆத்துமணல், தாதுமணல், கிரானைட் இதையெல்லாம் சுரண்டுறதுலதான் நம்ம பெருமையே அடங்கி இருக்கு. இந்த வேலைகளையெல்லாம் செய்யாட்டி, நம்ம அரசியல்வாதிங்களுக்கு பணம் எங்க இருந்துவரும். பிறகு, தேர்தல் நேரத்துல ஓட்டுக்கு ஆயிரம், ஐநூறுனு எப்படி அள்ளிக் கொடுப்பாங்க?

இருக்கிற மாட்டையெல்லாம் கறி சாப்பிடறவங்க காலி பண்ணிட்டா, நாளைக்கு மாட்டுப்பொங்கல் எப்படி கொண்டாட முடியும்?

என்ன... என்னோட எசக்கேள்வியெல்லாம் வகையா இருக்கா... பதில் சொல்ல முடியலைதானே? இதுக்குப் பிறகும் கோவனை கைது பண்ணினது தப்புனு யாராச்சும் பேசினீங்க... செவ்வாய்க் கிரக துரோக வழக்குல சிக்கி சின்னாபின்னமாயிடுவீங்க ஜாக்கிரதை!

http://www.vikatan.com/news/article.php?aid=54495

  • தொடங்கியவர்

கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!

 

kovan%20new%20pic.jpgசென்னை: மூடு டாஸ்மாக்கை மூடு பாடலைப் பாடிய பாடகர் கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மது ஒழிப்பை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு  சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பாடல்கள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு செய்வதாகக் கூறி பாடகர் கோவனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே,கோவனின் நண்பர் வெங்கடேசன், சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘கோவன் கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. அவரை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். கோவனை விடுதலை செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுதாகர், பி.என்.பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கோவன் கைது சம்பவத்தில் போலீசார் சட்டப்படி நடந்துள்ளனர். சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, முறையாக கைது செய்துள்ளனர். இதில் விதிமீறல் எதுவும் இல்லை’ என்ற வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கைது நடவடிக்கையில் விதிமீறல் எதுவும் இல்லை என்பதால், மனுவை தள்ளுபடி செய்கிறோம். கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தை மனுதாரர் அணுகலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=54545

  • தொடங்கியவர்

கோவன் கைது: உயர் நீதிமன்றத்தில் தமிழ அரசு விளக்கம்!

 

kovan%20250%201%281%29.jpgசென்னை: மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவனை, கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக அரசு. தொழிலாளர் வர்க்க பிரச்னைகள் மற்றும் பல்வேறு மக்கள் பிரச்னைகளை முன்வைத்து ம.க.இ.க. மேடைகளில் பாடல்களைப் பாடி வருபவர் திருச்சியைச் சேர்ந்த கோவன்.

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி இவர் இயற்றி பாடிய ‘மூடு டாஸ்மாக்கை மூடு' பாடல், சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவனை கைது செய்தது காவல்துறை.

கைது செய்யப்பட்ட கோவனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கைது செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் கோவனின் மகன் சாருவாஹன், சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவனின் கைதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், கோவனின் கைது தொடர்பாக நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர்,  கோவன் கைது தொடர்பாக இதுவரை அரசிடமிருந்து தனக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

court%20hammer%20350.jpgமனுதாரர் கூறியுள்ளபடி  கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைதாகியுள்ளாரா என நீதிபதி கேட்க, "அவ்வாறு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கோவன் கைது செய்யப்படவில்லை. அதற்கான யோசனையும் இல்லை"  என தெரிவித்த அரசு வழக்கறிஞர், அரசிடமிருந்து உரிய அறிவுறுத்தல் பெற்று இதற்கு பதிலளிக்க தனக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.

வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி,  வரும் நவம்பர் 17 -ம் தேதி இதுகுறித்து பதிலளிக்கும்படி உத்தரவிட்டார்.



உத்தரவினிடையே அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி, " நீதிமன்றம் கொடுத்துள்ள கால அவகாசத்திற்குள் மனுதாரரின் கோரிக்கையின் படி அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் முயற்சிகளில் இறங்கக்கூடாது" என கூறினார்.

http://www.vikatan.com/news/article.php?aid=54601

  • தொடங்கியவர்

'எங்களுக்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது!' - பாடகர் கோவனின் மனைவி ஆக்ரோஷம்

 

kovan%20250%20leftttttt.jpg‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவனை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருக்கிறது தமிழக அரசு.

தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கான பாடல்கள் மூலமாக ஆந்திராவை கலக்கியவர், நக்சலைட் பாடகர் கத்தார். அவரைப்போலவே, மக்கள் பிரச்னைகளை முன்வைத்து ம.க.இ.க. மேடைகளில் பாடல்களைப் பாடி வருபவர் திருச்சியைச் சேர்ந்த கோவன். சாதியக் கொடுமைகள், போலீஸ் அடக்குமுறைகள், தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளை, மணல்கொள்ளை, கனிமவளக்கொள்ளை உட்பட பல சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்பு உணர்வுப் பாடல்களை உணர்ச்சிகரமாகப் பாடிவருபவர் இவர்.

‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற கோவனின் பாடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்கும் வரிகள் அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், திருச்சி மருதாண்டாக்குறிச்சியை அடுத்த அரவனூரில், கடந்த 29-ம் தேதி இரவு 2.30 மணி அளவில் கோவனை போலீஸார் கைதுசெய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மெல்வின் தலைமையிலான குழு கோவனை கைதுசெய்தது. கைதுசெய்யப்பட்டு பல மணி நேரமாகியும் அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலை போலீஸார் தெரிவிக்காததால், மருதாண்டாக்குறிச்சி பகுதியில் பதற்றம் நிலவியது.

கோவன் குடும்பத்தினரைச் சந்தித்தோம். அவரது அம்மா பார்வதி, “திருவாரூர் குடவாசல் பக்கத்தில் இருக்கும் பெருமங்களம்தான் எங்களுக்குச் சொந்த ஊர். அவங்க அப்பா சுப்பையா ஒரு விவசாயி. கோலாட்டக் கலைஞர். நான் கிராமத்துல விவசாய வேலைகளுக்குப் போவேன். நானும் நல்லாப் பாடுவேன். பொதுவாகவே, விவசாயிகள் மண்ணையும் மக்களையும் நேசிக்கிறவங்க. நடவுப்பாட்டு, கும்மி, அம்மானை, ஒப்பாரி என எல்லாத்துக்கும் பாட்டுதான். எல்லா பாடல்களையும் நான் பாடுவேன்.

எங்களுக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன். பையன் பேரு சிவதாஸ். நான் வயல்ல நாத்து நட்டுக்கிட்டே பாட்டு பாடுனா, அதை வரப்புல உட்காந்துக்கிட்டு சிவதாஸ் கேட்பான். ஐ.டி.ஐ. முடிச்சவுடனேயே அவனுக்கு திருச்சி பெல் கம்பெனியில வேலை கிடைச்சது. எங்க குடும்ப கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சந்தோஷப்பட்டோம். அப்பத்தான், அவனுக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களோட பழக்கம் ஏற்பட்டுச்சு.

kovan%20family.jpg

சின்ன வயசுல, வயல்காட்டுல நான் பாடுற பாட்டுக்களைக் கேட்டு வளர்ந்த சிவதாஸ், அவன் வேலை செஞ்ச கம்பெனியில சாப்பாட்டு வேளையில பாடுவானாம். அது, கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களுக்குப் பிடிச்சுப்போச்சு. அவனுக்கு அரசியல் கத்துக்கொடுத்திருக்காங்க. ‘நீங்க நல்லா பாடுறீங்க. உங்களோட குரல்வளம், மக்களோட விடுதலைக்குப் பயன்படணும்’னு சொல்லியிருக்காங்க.

அவங்க பேசுன விஷயங்கள் மேல சிவதாஸுக்கு ஈர்ப்பு வந்து, ஊர் ஊராகப் பொதுக்கூட்டங்களில் பாடுறதுக்குப் போக ஆரம்பிச்சான். அந்தச் சமயத்துலதான், ‘சிவதாஸ்’ என்ற பெயரை, ‘கோவன்’ என மாத்திக்கிட்டான். ‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயமுமா பாடுபட்டோம்’ என்ற பாடல்தான், அவனோட முதல் பாடல். அவன் பாட ஆரம்பிச்சான்னா, மக்கள் கூட்டம் தானாகக் கூடும். அந்த அளவுக்கு அவனோட பாட்டு இனிமையா இருக்கும்.

பையன் இப்படி போறானேன்னு முதல்ல நாங்க பயந்தோம். அப்புறம், அவன் போற வழி நல்லவழின்னு தெரிஞ்சது. அவனைச் சுதந்திரமாக விட்டுட்டோம். அமைப்புல இருந்த ஒரு தோழரோட தங்கச்சி ஜெயலட்சுமியை அவனுக்குக் கல்யணம் பண்ணி வெச்சோம். இப்போ, அவனுக்கு ரெண்டு பிள்ளைங்க. பையன் சாருவாகன் வக்கீலா இருக்கான். பொண்ணு ஹோமியோபதி டாக்டருக்கு படிக்கிறாங்க.

kovan%20600%201.jpg

கோவனுக்குத் துணையாக கலைக்குழுவில் என் மகளும், மருமகனும் இருக்காங்க. குடும்பமாக அமைப்பு வேலைகளைக் கவனிக்கிறாங்க. பாழாய் போன டாஸ்மாக்கை மூடச்சொல்லி போராடினதுக்காக, அவனை நாயைப்போல நடத்தி அழைச்சிக்கிட்டுப் போனாங்க” என்றார் ஆத்திரத்துடன்.

கோவனின் மனைவி ஜெயலட்சுமி, “என்னோட கணவர், தான் ஏத்துக்கிட்ட கொள்கைக்காக வேலையை விட்டுவிட்டு முழுநேர இயக்க வேலைக்கு வந்துட்டாரு. சில வருஷங்களுக்குப் பிறகு, டிப்ளமோ ஹோமியோபதி படிச்சி முடிச்சாங்க. போராட்டம், மக்கள் பணி எனப் போகும் வழியில், உடம்பு சரியில்லைனு யாராவது வந்தால் அவங்களுக்கு மருந்துகொடுப்பாரு. அப்படித்தான் முந்தினநாள் அம்மா ஒருத்தர் நெஞ்சு வலின்னு நடுராத்தி வந்து கதவை தட்டினாங்க. அவங்களுக்கு முதலுதவி செஞ்சு, மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சாரு.

kovan%20250%201.jpgஅதுக்கப்புறம் நடுராத்திரி கதவு தட்டுற சத்தம் கேட்டு, அந்த அம்மாவா இருக்கும்னு நெனச்சு கதவைத் திறந்தாரு. அப்போ, வீட்டை சுத்தி போலீஸ் நின்னாங்க. அதுல ஒருத்தர் மட்டும் சீருடையில் இருந்தார். ‘உங்களை விசாரிக்கணும். உறையூர் ஸ்டேஷனுக்கு வாங்கன்னு கூப்பிட்டாங்க. சட்டை போட்டுக்கிட்டு வர்றேன்னு திரும்பினாரு. ‘அதெல்லாம் முடியாது’னு சொல்லி பின்னங்கழுத்துல இறுக்கிப் பிடிச்சி தள்ளிக்கிட்டுப் போய், வண்டியில ஏத்தினாங்க. கட்டியிருந்த கைலியோடு கூட்டிக்கிட்டுப் போனாங்க. உறையூர் கொண்டு போறோம், அங்க வாங்கன்னு எங்ககிட்ட சொல்லிட்டுப் போனாங்க. உடனே ஸ்டேஷன்ல போய்ப் பார்த்தோம். அப்படி யாரும் கைதுசெய்யப்படலைன்னு அங்க சொல்லிட்டாங்க.

காலை 10 மணி வரைக்கும் ஸ்டேஷன் வாசல்லயே கிடந்தோம். என் கணவரை எங்கே வெச்சிருக்காங்கனே தெரியல. அப்புறம், உறையூர் எஸ்.ஐ முத்துசாமி அந்தக் கூட்டத்துல இருந்தார்னு தெரியவந்துச்சு. அவருக்கு போன் பண்ணி கேட்டோம். ‘மேலதிகாரிங்க போகச் சொன்னாங்க. அதனால வந்தேன். அதுக்குமேல எதுவும் சொல்ல முடியாது’னு அவர் சொல்லிட்டார்.

அவரைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில்தான், ஸ்டேஷனை முற்றுகையிடப் போனோம். அப்பத்தான், சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் மெல்வின் என்பவர் போன் பண்ணி, ‘நாங்கதான் அவரை கைது பண்ணியிருக்கிறோம். அவரை சென்னைக்கு அழைச்சிட்டுப் போறோம். சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தால் அவரை பார்க்கலாம்’னு சொன்னார். ஆனாலும், அவரை எங்கள் அமைப்பு தோழர்களால்கூட சந்திக்க முடியலை. எதுக்கு இவ்வளவு நெருக்கடி?

அவரை கைதுசெய்கிறோம்னு சொன்னால், நானே அனுப்பி வெச்சிருப்பேன். நடுராத்திரியில ஒரு தீவிரவாதியைப்போல அவரை கைதுசெஞ்சுருக்காங்க. டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடினால் இதுதான் நிலைமைனு அச்சுறுத்துறதுக்காக இப்படி செஞ்சிருக்காங்க.

kovan%20600%202.jpg

என் கணவர் என்ன தப்பு செஞ்சுட்டார்? ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லை புள்ளைக்குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கிலாமா?’ என்ற பாடலை விடவா கலாசாரத்தைச் சீரழிக்கிற பாடலை அவர் எழுதிட்டார்? மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க மக்கள் படும் சிரமங்களை பாடல்களாக எழுதிப் பாடுனதுக்கு, டாஸ்மாக்கை மூடச் சொன்னதுக்கு தேசத் துரோக வழக்கா?

இதுதான் அவர் செஞ்ச குற்றம்னு சொன்னா, அவர் இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வார். அவரோட சேர்ந்து நாங்களும் பாடுவோம். நாங்கள் பாடுறதை யாராலும் தடுக்க முடியாது. எங்களுக்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது. பூட்டுப்போடணும்னு ஆசைப்பட்டா, தமிழக அரசு முதல்ல டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடட்டும்” என்றார் ஆக்ரோஷமாக.

kovan%20600%2011.jpg

ம.க.இ.க. வட்டாரங்களில் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த கோவனின் பாடல்களை, இந்தக் கைது நடவடிக்கை மூலமாக நாடு முழுக்கப் பிரபலமாக்கி இருக்கிறது. தமிழக அரசு. மக்கள் பாடகர் ஒருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற கண்டனக் குரல்கள் நாலாபுறமும் ஒலிக்கின்றன.

  (  கோவன் கைதுக்கு நமது எதிர்ப்பை  #ReleaseKovan #BanTasmac   என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்வோம்!) 

http://www.vikatan.com/news/article.php?aid=54588

  • தொடங்கியவர்

உண்மையின் குரல் கேளுங்கள்!

 

 

டாஸ்மாக்குக்கு எதிராகப் பாடல் எழுதிய 'குற்றத்துக்காக’ கைதுசெய்யப்பட்டிருக்கிறார் பாடகர் கோவன். தேசத் துரோகம் மற்றும் சமூகத்தின் இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குதல் ஆகிய இரு பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. சாராயத்தின் கேடுகளை, அது மக்களின் வாழ்க்கையை எப்படிச் சூறையாடுகிறது என்பதை எடுத்துச் சொன்ன குற்றத்துக்காக, ஒரு நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார் கோவன். 

இந்தியா எங்கும் இணையம் எங்கும் இதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தவண்ணம் இருந்தாலும், வழக்கம்போல இதற்கு ஒரு பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கிறது தமிழ்நாட்டு அரசும், கொடநாட்டு அரசும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஒருமையில் பாடுவதும், கொச்சைச் சொற்களில் அவமதிப்பதும் கடும் கண்டனத்துக்கு உரியது; கண்டிக்கத்தக்கது. அந்த அவதூறுதான் பிரச்னை என்றால், அதற்கு உரிய பிரிவில் வழக்குப் பதியட்டும்!

kovain_new_vc1.jpg

 

'அரசு, மதுவிலக்கை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும்’ என அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. 'மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை’ என சட்டமன்றத்தில் அமைச்சர் சொல்கிறார். மதுவிலக்குக்கு எனத் தனியே ஒரு துறை இருக்கிறது. அதற்கு ஓர் அமைச்சரும் இருக்கிறார். இதையே கோவன் சொன்னால், அது எப்படிக் குற்றமாகும்? அரசு, தானே அறிவித்துக்கொண்ட ஒரு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனச் சொல்வதே குற்றம் என்றால், உண்மையில் அரசின் கொள்கை என்ன? மது விற்பனையா... மதுவிலக்கா? அரசின் நிலைப்பாட்டை விமர்சிப்பதே தேசத் துரோகமாகக் கருதப்படுமானால், ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் எல்லோர் மீதும் இந்தச் சட்டம் பாயுமா?

இதற்கு மேலும் சீரழிக்க முடியாது என்கிற அளவுக்கு சாராயத்தை வாரிவழங்கி மக்களின் வாழ்க்கையைச் சூறையாடிக்கொண்டிருக்கிறது அரசு. குடித்துக் குடித்தே குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி, பல்லாயிரம் பெண்கள் விதவைகளாக நட்டாற்றில் விடப்பட்டு, விபத்துக்களில் உறுப்புகளை இழந்து... தமிழ்நாடே சிதைந்து சின்னாபின்னமாகிக்கிடக்கிறது. பள்ளிச் சிறுவர்கள் குடித்துவிட்டு சீருடையுடன் தெருவில் வீழ்ந்துகிடக்கிறார்கள். இந்த அவலத்தைத் தடுத்து நிறுத்துங்கள் எனச் சொன்னால், அது தேசத் துரோகமா?  

கோவன் தன் சொந்த நலன்களுக்காக பாடல் எழுதவில்லை; தான் புகழ் அடைய வேண்டும், பொருள் சேர்க்க வேண்டும் எனப் பாடவில்லை. மதுவின் கொடுமையால் மக்கள் அடையும் வேதனை தாளாது அவர் பாடியிருக்கிறார். ஆட்சியாளர்கள் இந்த உண்மையின் குரலை முதலில் செவிகொடுத்துக் கேட்க வேண்டும். அதற்கு முன்பு கோவன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவரை விடுதலை செய்ய வேண்டும்.  

'சாராயம் விற்பது ஜனநாயகம். அதை எதிர்ப்பது ஜனநாயக விரோதம்’ என்பதுதான் இந்த அரசு நமக்கு உணர்த்துகிற செய்தி. இங்கு சாராயம் குடிக்க மட்டும்தான் மக்களுக்கு உரிமை. சாராயம் குடிக்க மறுப்பது மக்களின் உரிமை அல்ல; அது தேசத் துரோகமா?  

மதுவினால் பெரும் தீங்கை நிகழ்த்திக்கொண்டே, அதை எதிர்ப்போரை சிறையில் தள்ளும் கொடும் தீங்கையும் சேர்த்து இழைத்தால், மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!

(  கோவன் கைதுக்கு நமது எதிர்ப்பை  #ReleaseKovan #BanTasmac   என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்வோம்!)  

http://www.vikatan.com/news/article.php?aid=54592

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவில் சன நாய் அகம் இந்தளவு தான். பெயருக்கு சனநாயக நாடு. மிகக் கொடுமையான ஊழல்கள்.. சர்வாதிகாரம் நிறைந்த..நாடு.. அது. வாக்குப் போட மக்களை மந்தைகளாகப் பாவிக்கும் நாடு. சனநாயகத்தின் அவமானச் சின்னம் ஹிந்தியா. :rolleyes:

அம்மாவிற்கு தேவாரம் பாடாமல் துணிந்து குரல் கொடுக்கும் கோவன் போன்றவர்களே இன்று தமிழ் நாட்டிற்கு தேவை .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடே ஒரு போதை ....

எதை சுரண்டலாம் என்று யார் சிந்திக்கிறானோ அவனுக்கு வாழ்வு.
எங்கும் சுத்தம் என்று யார் சிந்திக்கிறானோ அவனுக்கு எப்போதும் தாழ்வுதான். 

காமராஜரையே தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியவர்கள் எம் தமிழ்நாட்டு உறவுகள். 

கீதை சொல்கிறது .....

அர்ஜூனா கொல்லுட கொல்லு .... அகங்காரத்தை கொல்லு என்று. 

கீதையின் பாதையில் போனால் ... அதே கீதையை தூக்கி வாழ்வு நாடகம் ஆடுறவன் எல்லாம் 
அதை  ஒரு மூலயில் எறிந்துவிட்டு ..... சன-நாய்- யகம் பேச வந்துடுவான். 

பாவம் என்ற கல்லறைக்கு பல வழி 
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழிதான் .

போட்டு தள்ளிவிட்டு (பாவங்களை) போய்கொண்டே இருக்க வேண்டும். 

  • தொடங்கியவர்

கோவன் கைது - தமிழக அரசுக்கு 5 கேள்விகள்!

 

கில இந்திய அளவில் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற அவரது முழக்கம் இன்று இந்திய அளவில் எங்கும் ஒலிக்கிறது. இந்த நிலையில் கோவனை கைது செய்திருக்கும் தமிழக அரசிடம் கேட்க நமக்கு 5 கேள்விகள் இருக்கின்றன.

1. கருத்துரிமை குற்றமா?

கோவன் கைது, கருத்துரிமை மீதான தாக்குதல். தங்கள் கருத்தை வெளியிடவும், அதை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யவுமான உரிமை இந்தியக் குடிமகன்கள் அனைவருக்கும் உண்டு. இந்திய அரசியல் சாசனம் இந்த உரிமையை உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. கோவன் இதைத்தான் செய்தார். இது எப்படி குற்றமாக முடியும்? ஒரு கருத்தை வெளியிடக்கூட உரிமை இல்லாமல் போவது மாபெரும் ஜனநாயக விரோதம். சர்வாதிகாரிகள்தான் இப்படி  செய்வார்கள். தன் கருத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகாரத்தை ஜனநாயகத்தின் மீது திணிக்க முடியாது. இன்று கோவனுக்கு மறுக்கப்படும் கருத்துரிமை நாளை நம் ஒவ்வொருவருக்கும் மறுக்கப்படும். இப்போதே இணைந்து எதிர்க்கவில்லை என்றால், நாளை நம் ஒவ்வொருவருக்கும் இந்த ஆபத்து நீட்டிக்கப்படும்.

2. எது அரசின் கொள்கை?

‘குடி குடியைக் கெடுக்கும் என்று பாட்டிலில் எழுதினால் தவறில்லை... பாட்டில் எழுதினால் தப்பா?’ என்று tasamak%20kovan.jpgகேட்கிறார் கோவன் மனைவி ஜெயலட்சுமி. அந்த வார்த்தைகளில் சத்தியம் உள்ளது. மது விலக்குதான் அரசின் கொள்கை என்று அரசு சொல்கிறது. ‘மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை அமைச்சர்’ என்று ஓர் அமைச்சரே இருக்கிறார். அப்புறம் என்ன? அரசு என்ன சொல்கிறதோ அதைத்தானே கோவன் பாடினார்? அதில் என்ன பிழை இருக்கிறது? ஆனால், இதில் கவனிக்க வேண்டியது மதுவிலக்கு என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் அது ஏட்டளவில்தான் இருக்கிறது. உண்மையில் மது விற்பனைதான் அரசின் கொள்கை என்பதை, ஒவ்வோர் ஆண்டும் இலக்கு நிர்ணயித்து சாராயம் விற்பதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். ஏட்டில் மதுவிலக்கு; நாட்டில் மதுவிற்பனை... இதுதான் அரசின் கொள்கை. இந்த இரட்டை வேடத்தை நாம் எதிர்க்க வேண்டாமா?

3. எது தேசத் துரோகம்?

கோவன் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், பின்னர் நீதிமன்றத்தில் அரசு அதை மழுப்புவது போல பதிலளித்திருக்கிறது. அதை சப்பைக்கட்டு போல வேறு சில வழக்குகள் அவர் மீது பாய்ச்சப்படலாம் என  தெரிகிறது. ஆக, ஆதார முகாந்திரம் இல்லாமல் உள்நோக்கத்துடன் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது அப்பட்டமாகத்  தெரிகிறது. ’சாராயம் விற்காதே’ என்பது தேசத் துரோகமா? சொத்துக்குவிப்பு தேசபக்தி; நேர்மையான அதிகாரிகளை தற்கொலைக்கு தள்ளுவது தேசபக்தி, மணல் கொள்ளை; தாதுமணல் கொள்ளை; கிரானைட் கொள்ளை தேசபக்தி... டாஸ்மாக்கை மூடு என்பது தேசத் துரோகமா? அதிகாரம் மூலம் சாமானியனை அடக்கும் இந்த வழக்கை துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டாமா?  

4. நள்ளிரவு கைது ஏன்?

நள்ளிரவு 2.30 மணிக்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோவனை வீடு புகுந்து கைது செய்துள்ளனர். கதவுத் தட்டப்பட்டதும், மேலாடை இல்லாமல் கட்டிய கைலியுடன் வெளியில் வந்த கோவனை அப்படியே பின்னங்கழுத்தில் கை வைத்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளது போலீஸ். இப்படித்தான் யுவராஜை கைது செய்தீர்களா? சிவகங்கையில் சிறுமிகளை சீரழித்து போலீஸ் அதிகாரிகளை இப்படித்தான் கைது செய்தீர்களா? ஒரு  கோவில் ஊழியரின் அரசு ஊழியரின் மரணத்துக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஓ.பி.எஸ்.ஸின் தம்பி, ஓ.பி.ராஜாவை இப்படித்தான் கைது செய்தீர்களா? முத்துக்குமாரசாமியின் கொலைக்கு காரணமானவர் என்று சொல்லப்படும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை இப்படித்தான் கைது செய்தீர்களா? அங்கெல்லாம் ’சட்ட விதி’களை மதித்த தமிழக போலீஸ், கோவன் விவகாரத்தில் மட்டும் வீறாப்பு காட்டுவது ஏன்?

5. மக்களில் ஒருவரை இப்படித்தான் நடத்துமா மக்கள் நல அரசு?

கோவன் என்பவர் யாரோ ஒரு அரசியல் ஆர்வலர் அல்ல. அவர் டாஸ்மாக்கின் கொடுமையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் பிரதிநிதி. மதுவுக்கு கணவனை; தந்தையை; தம்பியை பறிகொடுத்த பெண்களின் மனசாட்சி. வீதிக்கு வீதி முளைத்துக் கிடக்கும் டாஸ்மாக், நம் மாநிலத்தை கொள்ளைநோயாக பீடித்துக் கிடப்பதை அறிவிக்க வந்த உரிமைக்குரல். பெரும்பான்மை மக்களின் பிரச்னையை, எந்த தயக்கமும், பூச்சும் இல்லாமல் அப்பட்டமான வார்த்தைகளில் அவர் வெளிப்படுத்துகிறார். அதனால்தான் அவரது பாட்டு இத்தனை வீரியத்துடன் எல்லோரிடமும் சென்று சேருகிறது. எனவே கோவன் இனியும் யாரோ ஒருவர் அல்ல. அவர் நம்மில் ஒருவர். நம் சார்பாகவே அவர் பாடுகிறார்!

http://www.vikatan.com/news/article.php?aid=54615

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுமக்களிடம் புகை மற்றும் மது சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதை / பாடப்படுவதை விடுத்து அரசியல் தலைவர்களை வம்புக்கிழுத்தால் விடுவார்களா?

மானியங்களுக்காக வாக்களிக்கும் நாட்டில்  மான / ரோசங்கள் வரப்படாது. :cool:

  • தொடங்கியவர்

'இது எல்லோருக்குமான கோபம்!'- பாடகர் கோவன் ஆவேச பேட்டி!

 

சென்னை: "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற மது ஒழிப்பு பாடலைப்போல இன்னும் நிறைய பாட வேண்டியுள்ளது என்றும், மக்களின் விடியலுக்காகத் தொடர்ந்து பாடுவேன் என்றும் பாடகர் கோவன் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசை விமர்சித்து பாடல்கள் பாடியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவன் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை செய்த போலீசார் ,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

singer%20kovan%20.jpg

இந்நிலையில் பாடகர் கோவனை போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (புதன்) மீண்டும் ஆஜர்படுத்தினர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு கோவன் அளித்த பேட்டியில், " ஒரு ரூபாய்க்கு இட்லி. ஐந்து ரூபாய்க்கு கழிப்பறை கட்டணம். நூறு ரூபாய்க்கு பருப்பு. லட்ச ரூபாய் தாண்டுகிற கல்விக் கட்டணம் என்று மக்களின் உணர்வுகளைத்தான் பாடலாக்கினேன். இன்னும் பாடவேண்டியவை  நிறைய உள்ளன. என் பாட்டில் குற்றமில்லை. மக்கள் விடியலுக்காகப் பாடிக் கொண்டே இருப்பேன்" என்று கூறினார்.

மேலும் அவர், " டாஸ்மாக் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை, பெண்களை கேட்டால் அவர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடு அதீதமான மொழியாகவே கேட்கிறது. இந்த அரசு மக்களுக்கான அரசாகவே இருக்கிறது என்று சொல்கிறவர்களை,  'டாஸ்மாக் என்று ஒன்று தேவையா?' என பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களைப் போய் கேட்டுப் பார்க்க சொல்லுங்கள். அப்போதுதான் உண்மை தெரியும். இது ஒரு பொதுவான எல்லோருக்குமான கோபம். மக்களின் உணர்வுகளைத்தான் நான் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறினார் கொந்தளிப்பாக.

பின்னர் பாடகர் கோவனை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் கோவன் , "என்னை முழுமையாக போலீசார் விசாரித்து விட்டனர். பாடல், குறுந்தகடு குறித்தெல்லாம் தகவலை கேட்டு வாங்கி விட்டனர். புதிதாக விசாரிக்க தேவை ஒன்றும் இல்லை ஐயா " என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

போலீஸ் காவலில் மீண்டும் விசாரிக்க  மாஜிஸ்திரேட் அனுமதி தரவில்லை என்பதால் அவர்  மீண்டும்  புழல் சிறைக்குக்  கொண்டு செல்லப்பட்டார். கோவனின் ஜாமீனுக்கான மனுவை அவரின் வழக்கறிஞர் நாளை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

செய்தியாளர்களை தடுத்து நிறுத்திய  போலீசார் 

இதனிடையே  எழும்பூர் நீதிமன்றத்தில் மக்கள் பாடகர் கோவன் ஆஜர்படுத்தப்படுகிறார் என்ற செய்தியறிந்த பத்திரிக்கையாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிக்க காத்திருந்தனர்.

அப்போது, சென்னை ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு போலீசார்,  செய்தியாளர்களை கோவனிடம் பேட்டி எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க அனுமதிக்க கோரி மாஜிஸ்திரேட் கணேசனிடம் முறையிட்டனர். அதன்பின்னரே போலீசார்  அங்கிருந்து நகர்ந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

http://www.vikatan.com/news/article.php?aid=54674

  • தொடங்கியவர்

கோவனை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 
 
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பாடகர் கோவன் | படம்: கே. அருண் சங்கர்
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பாடகர் கோவன் | படம்: கே. அருண் சங்கர்

பாடகர் கோவனை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.

உடனே அவரை சிறையில் அடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவிட்டார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் பாடகர் கோவன் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸாரால் அக்டோபர் 30-ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மதுவிற்கு எதிராக பாட்டுப் பாடி வந்த இவர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை பெருநகர தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீஸார் மனுதாக்கல் செய்தனர். கோவனை இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி எஸ்.கணேசன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கோவன் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மில்டன் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் அனுமதி பெற்று, நீதிபதி சி.டி.செல்வத்திடம் முறையிட்டார்.

அதையடுத்து சென்னை கொரட்டூரில் உள்ள நீதிபதி சி.டி.செல்வம் வீட்டில் இவ்வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது கோவன் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜரானார்.

அதைத்தொடர்ந்து, பாடகர் கோவனை இரண்டு நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சென்னைப் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி சி.டி.செல்வம், கோவனை உடனே சிறையில் அடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

http://tamil.thehindu.com/tamilnadu/கோவனை-2-நாட்கள்-போலீஸ்-காவலில்-விசாரிக்க-இடைக்கால-தடை-சென்னை-உயர்-நீதிமன்றம்-உத்தரவு/article7855759.ece

  • தொடங்கியவர்

’நான் சினிமா பார்த்தாலே ஆச்சரியப்படுகிறார்கள்!’ - கோவன் விகடனுக்கு அளித்த சிறப்பு பேட்டி

 

சென்னை: டாஸ்மாக் என்ற விஷயத்தை அரசு கைவிடும் வரை கோவன்கள் வீதிக்கு வீதி பாடிக்கொண்டுதான் இருப்பார்கள் என விகடனுக்கு கோவன் சிறப்பு பேட்டி அளித்தார்.

டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் பாடியதாக கைது செய்யப்பட்ட கோவனுக்கு 2 நாள் போலீஸ் காவல் விதித்து நேற்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று கோவன் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக கோவன் எழும்பூர் நீதிமன்றத்திற்கு, குற்றப்பிரிவு போலீசார் அழைத்து வந்தர். அவர் நீதிமன்றத்திற்குள் செல்வதற்கு முன்பாக விகடனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

எந்த வயதில் இருந்து பாட ஆரம்பித்தீர்கள்?

நினைவு தெரிந்த நாளில் இருந்தே பாடிக்கொண்டுதான் இருக்கிறேன். சமூகத்தில் எங்கெங்கு என் கண் எதிரே அநியாயங்கள் நடக்கிறதோ, எந்தெந்த விஷயங்கள் தவறு என்று என் காது வழியாக மனசாட்சியை தொடுகிறதோ அப்போதெல்லாம் என் கோபங்கள் பாடலாக வெளிப்படும்.

kovan_1.jpg



முதல்வர் ஜெயலலிதா மீது என்ன கோபம்?

தனிப்பட்ட முறையில் நான் யாரிடமும் கோபம் கொள்வதில்லை. இது சமூகம் சார்ந்த கோபம். ஒரு நாட்டின் குடிமக்கள் நன்றாக, பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு உறுதுணையாக அவர்களை வழிநடத்தும் அரசாங்கம், அதிகாரம் கொண்டோர் இருக்க வேண்டும். ஆனால், அவர்களே தவறு செய்கிறார்கள் எனும்போது மக்களால் கேள்வி கேட்க முடியாது. யாருமே கேள்வி கேட்காது போனால், எதிர்த்து நிற்பது யார். அதைத்தான் என் பாடல் மூலம் எதிர்த்து கேட்டேன். அதனால்தான் சிறைக்கும் வந்திருக்கிறேன். அரசு தன்னை மாற்றிக் கொள்ளும் வரை நான் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன். என் கேள்வி என்றென்றும் தொடரும்.

இந்த கைது நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் எப்படியும் பார்க்கவில்லை. இந்த அரசாங்கம் தான் நான் எப்படி மாறுவேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் எப்படியும் மாற மாட்டேன்! நானாக நினைத்தாலும் அப்படி என்னை மாற்றிக்கொள்ள முடியாது.

’மூடு டாஸ்மாக்கை மூடு’ பாடலில் தனிநபர் விமர்சனம் கடுமையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? 

மக்களுக்காக போராடும்போது, அவர்கள் ஒரு அஸ்திரத்தை பயன்படுத்தி என்னை ஒடுக்க நினைக்கிறார்கள். ஆனால், இனி வரும் காலங்களில் அதற்கு இடம் கொடுக்காமல், இன்னும் வீரியமாக, அதே வேளையில் அவர்களின் வலையில் சிக்காமல் என் பயணம் தொடரும்.

வீதி நாடகம், பாடல்கள் தவிர உங்கள் பொழுதுபோக்கு என்ன?

(சிரித்துக்கொண்டே) ஒருமுறை விருமாண்டி படத்திற்கு திடீரென்று போய் விட்டேன். ஜாதி குறித்தும், ஜாதிய மோதல்கள் குறித்தும், நீதிமன்றங்களில் நடக்கும் தர்க்கங்கள் குறித்தும் அந்த படத்தில் சொல்லியிருப்பதாக கேள்விப்பட்டுதான் போனேன். அங்கே என்னை பார்த்து விட்ட சிலர், 'கோவன் நீங்கள் படத்திற்கும் வருவீர்களா' என்று கேட்டு விட்டனர். ஏனென்றால் எனக்கு சினிமா போன்ற பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக நாட்டம் கிடையாது. நான் ஏதோ டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து விட்டதுபோல், சினிமா பார்க்க வந்து விட்டீர்களே என்று கேட்கிறார்கள். ஆகவே, இந்த மக்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது வேறு. அதை நான் நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதற்காக முழு நேர மக்கள் எழுச்சி பாடகனாக மாறி விட்டேன். மேலும், நான் வேலை பார்த்து வந்த 'பெல்' நிறுவன பணியையும் உதறிவிட்டேன். முழு நேரமும் என் வாழ்வின் மூச்சாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பிரசார தொண்டர்களில் ஒருவனாக மாறிவிட்டேன்.

 

குடும்ப பின்னணி? 

மனைவி என் அளவு போராட்ட குணம் கொண்டவர். மகனும் அப்படியே. வழக்கறிஞரும்கூட. என்னை சுற்றியுள்ள நண்பர்களும், என் இயக்க தோழர்களும் எனக்கு சளைத்தவர்கள் அல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் கோவன் தான். கோவனுக்கும் ஒரு படி மேலேதான். அதனால், டாஸ்மாக் என்ற விஷயத்தை அரசு கைவிடும் வரை கோவன்கள் வீதிக்கு வீதி பாடிக்கொண்டுதான் இருப்பார்கள். வாய்ப்பூட்டு சட்டம் போடமுடியாது.

போலீஸ் காவல் எப்படி இருந்தது?

அவர்களும் மனிதர்கள்தானே. என்னை மனிதனாக நடத்தினார்கள். அவர்கள் என்னிடம் நடத்திய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். என்னை அவர்கள் எந்தவிதமான துன்புறுத்தலும் செய்யவில்லை

என்று கூறிய கோவன் அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அதையடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியே கோவன், ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி 'மூடு, டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலை பாடிய படியே போலீஸ் வேனில் ஏறிச் சென்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=54832

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

'மூடு டாஸ்மாக்கை மூடு' பாடகர் கோவனுக்கு ஜாமீன்!

 

சென்னை: "மூடு டாஸ்மாக்கை மூடு' பாடலை இயற்றிய பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

singer%20kovan%20one.jpg


ஐந்தாயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதம் வழங்கவேண்டும், விசாரணைக்கு அழைக்கும் போது கோவன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=55131

  • தொடங்கியவர்

'பாடு அஞ்சாதே பாடு... நீ பாடு அஞ்சாதே பாடு...!' -சிறை வளாகத்தை மேடையாக்கிய கோவன்

 

'மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு' என பாடிய குற்றத்திற்காக கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பிரசார பாடகர் கோவன்.

'இது கருத்துரிமைக்கு எதிரான போர்' என எதிர்க்கட்சியினரும், மனித உரிமை ஆர்வலர்களும் கொந்தளித்தனர். கோவனுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நீண்டு கொண்டே போனது.

6.jpg

தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் விளைவாக, நேற்று முன்தினம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆதிநாதன் கோவனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அடைபட்டிருந்த கோவனை அழைத்து செல்ல, அவரது வழக்கறிஞர் மில்டன் உள்பட ம.க.இ.க. அமைப்பினர் புழல் சிறை வாசலில் திரண்டனர்.

5.jpg

சிறை நடவடிக்கைகள் முடிந்து வெளியே வந்த கோவனுக்கு தாரை, தப்பட்டை அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 'அடங்க மாட்டோம்... அடங்க மாட்டோம், பொய் வழக்குக்கு அஞ்ச மாட்டோம்';  'ஓய மாட்டோம்... ஓய மாட்டோம் டாஸ்மாக் கடையை மூடும் வரை ஓய மாட்டோம்' என மதுக்கடைகளுக்கு எதிரான கோஷம் வளாகம் எங்கும் எதிரொலித்தது. அதே நேரத்தில், ம.க.இ.க. பெண்மணி ஒருவர், 'பாடு அஞ்சாதே பாடு. நீ பாடு அஞ்சாதே பாடு' என பெருங்குரலெடுத்துப் பாட, கோவனும் சேர்ந்து கொண்டு பாடினார். பின்னர் சிறையில், தான் எழுதிய, 'ஊரெல்லாம் பெருவெள்ளம் தத்தளிக்குது தமிழகம்' என மழையை ஒட்டி அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பெருங்குரலெடுத்துப் பாட, புழல் சிறை வளாகமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்ந்தது.

4.jpg

இதன்பின்னர் நம்மிடம் பேசினார் கோவன்.

"என்னுடைய கைதைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பெரிய உணர்ச்சிக் கொந்தளிப்பை என்னுடைய கைது ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. தமிழக அரசு என்ன அடக்குமுறையைக் கையாண்டாலும் என் பாட்டு ஓயாது. கடைசி டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் வரை நான் பாடிக் கொண்டேயிருப்பேன்" என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

உங்களைக் கைது செய்தபோது என்ன நடந்தது?

"டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுபவர்களை இந்த அரசுக்குப் பிடிக்கலை. அன்னைக்கு நள்ளிரவில் என் வீட்டுக்குள்ள புகுந்து குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தாங்க. எதற்குக் கைது செய்யறாங்கன்னு எனக்குத் தெரியல. எங்க அமைப்பினர் மக்கள் பிரச்னைகளுக்காக போராடறதால கைது இருக்கும்னுதான் நினைச்சேன். போலீஸ்காரங்க எந்த பதிலும் சொல்லலை. 'என்னைக் கைது பண்ணக் கூடாதுன்னு' என் மகன் போலீஸ்காரங்ககிட்ட சண்டை போட்டான். அவன் வழக்கறிஞருக்குப் படிச்சவன்.

7.jpg

ஒருகட்டத்துல, அரசுக்கு எதிராக பாடல் பாடியதற்காக தேசத் துரோக வழக்கு பதிவு செஞ்சிருக்கறதா சொன்னாங்க. நானும், டாஸ்மாக் கடையை மூடுன்னு பாடறது குத்தமான்னு கேட்டேன். எந்தப் பதிலும் சொல்லாம வேனில் ஏத்தினாங்க. அங்கிருந்து என்னை எங்க கூட்டிட்டுப் போறாங்கன்னுகூட சொல்லலை. உளவியல் ரீதியா ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க. அமைப்பைப் பத்தி தாறுமாறா பேசினாங்க. நானும், 'நீங்க என்னை என்ன பண்ணாலும் நான் பாடிட்டுதான் இருப்பேன். என் பாட்டை நிறுத்த முடியாது' ன்னு பதில் கொடுத்தேன். ஒருவழியாக மாஜிஸ்திரேட் முன்னாடி ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைச்சாங்க".

உங்கள் பாட்டு இந்தளவுக்கு மக்கள் மத்தியில பிரபலமாகும் என்று எதிர்பார்த்தீர்களா?

"நிச்சயமாக எதிர்பார்க்கல. எவ்வளவோ மேடைகள்ல பாடிட்டு இருக்கோம். சிலர் நின்னு கேட்பாங்க. சிலர் கண்டுக்காம போவாங்க. நாங்க எதுக்காக பாடறோம்னு இப்ப மக்கள் புரிஞ்சிக்கிட்டாங்க. என்னோட கைது மூலம் போராட்டத்தோட வேகம்தான் அதிகரிச்சிருக்கு. முதலமைச்சர் பாஷையில சொல்லனும்னா, துரதிஷ்டவசமாக என் பாட்டை நாடு முழுக்க கொண்டு போயிட்டாங்க. எனக்கு ஆதரவு கொடுத்த ஊடகங்களுக்கு ரொம்ப நன்றி".

அடுத்து என்ன செய்யப் போறீங்க?

"இந்த டாஸ்மாக் கடைகளால பள்ளிக்குப் போற பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரையும் மூழ்கடிக்குது. பல்லாயிரம் குடும்பப் பெண்கள் தாலியை இழந்துவிட்டு தவிக்கறாங்க. பல வீடுகள்ல சரியான சாப்பாடே இல்லை. இவங்களை போதையிலேயே வச்சிருக்கணும்னு அரசாங்கம் நினைக்குது. அப்பத்தான் போராட்டம் நடக்காதுன்னு நினைக்கறாங்க.

அது ரொம்ப தப்பு. இப்ப மக்கள் வீதிக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க வீதியிலதான் பாடறோம். நாங்க சிலர்தான். ஆனா, இப்ப மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இவங்களுக்காக இன்னும் வேகமா பாட்டு பாடப் போறேன். டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமா அழிக்கற வரைக்கும் நான் பாடுவேன்" என்றபடியே, 'மூடு... டாஸ்மாக்கை மூடு' என புழல் சிறை வளாகத்தை மேடையாக்கி, தாரை தப்பட்டையை அடித்துக் கொண்டே கோபக் கண்களோடு பாட ஆரம்பித்தார் மக்கள் கலைஞன் கோவன்.

இனி அவர் பாட்டை எந்த அரசாலும் நிறுத்த முடியாது!

http://www.vikatan.com/news/article.php?aid=55193

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.