Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

நரம்புகளின் நடனம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நரம்புகளின் நடனம்-1   

மனித மூளை, மற்றும் நியூரோலொஜி எனப்படும் நரம்பியல் எனும் துறை விஞ்ஞானிகளை மட்டுமன்றி விஞ்ஞானிகளல்லாதவர்களையும் வியக்க வைக்கும் ஒரு அறிவுத் துறை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மூளையை ஆன்மாவின் இருப்பிடமாகவும், உயிரின் மூலமாகவும், எங்கள் இருப்பின் மூலமாகவும் கண்டு கொண்டு ஆராய ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இந்த ஆய்வுகள், மனித நரம்பியலின், மூளையில் ஒரு வீதத்தினைக் கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே பரவலாக நம்பப் படும் ஒரு கருத்தாகும். எனினும், இது வரை புரிந்து கொள்ளப் பட்டிருக்கும் சிறிய அளவிலேயே வியத்தகு தகவல்களும் சில நரம்பியல் நோய்களைக் குணமாக்க ஏதுவான தகவல்களும் வெளி வந்திருக்கின்றன. அவ்வாறான தகவல்கள் சிலவற்றை என் ஆர்வ மிகுதியால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மனித மூளையின் முக்கியத்துவம் எல்லாருக்கும் புரியும், விளக்கம் அவசியமில்லை. ஆனால், அந்த மூளையை உருவாக்கும் நியூரோன்கள் எனும் நரம்புக் கலங்களைப் பற்றிய தகவல்கள் பலருக்குப் புதியதாக இருக்கும். மனித மூளையில் சுமார் நூறு பில்லியன் நியூரோன்கள் இருக்கின்றன. உலகின் சனத்தொகை 7 பில்லியனாக இருக்கையில் எமது உடல் சுமார் நூறு பில்லியன் நியூரோன்களை குழூக்கோஸ் அடங்கலான போசணை கொடுத்து வளர்த்து வருகிறது என்பது அதிசயமான தகவல். எமது உடலின் சக்தித் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, வெறும் மூன்று றாத்தல் எடை கொண்ட மூளையைச் செயல் படுத்தவே செலவாகிறது. உடலில் சக்திப் பற்றாக்குறை ஏற்படும் போது, உடல் அவசியமற்ற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைத்து விட்டு மூளையின் தேவைகளைக் கவனிக்க ஏற்பாடு செய்கிறது. அனேகமான உடலின் உறுப்புகள் தமக்கு குழூக்கோஸ் தான் தேவை என்று அடம் பிடிக்கும் போது, மூளையின் நியூரோன்கள் குழூக்கோஸ் தட்டுப் பாட்டின் போது வேறு எரி பொருட்களையும் பயன்படுத்துமாறு வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. ஏதாவது காரணத்தினால்  உடலில் குழூக்கோசின் அளவு குறைந்தால், எங்கள் உடலில் கீற்றோன்கள் (ketones) எனும் சிறிது நச்சுத் தன்மையான பதார்த்தங்கள் உருவாகின்றன (நீரிழிவு நோயுள்ளோரில் இது அதிகம் நடைபெறும்). நமது நியூரோன்கள் இந்த கீற்றோன்களை எரி பொருளாகப் பாவித்து உயிர் வாழும் வகையில் சிறப்படைந்திருக்கின்றன (ஹைப்ரிட் மோட்டார் வாகனம் போல!:grin:).

உடல் நியூரோன்களை இவ்வளவு பிரயத்தனப் பட்டுப் பாதுகாக்க ஒரு காரணம் உண்டு: இறக்கும் நியூரோன்கள் மீண்டும் மூளையால் உருவாக்கப் பட முடியாது என்பதே அந்தக் காரணம். நாம் பிறக்கும் போதே வாழ்வில் எமக்குத் தேவையான அளவு நியூரோன்களுடன் பிறக்கிறோம். அதன் பிறகு, இயற்கையாலும், எங்கள் பழக்க வழக்கங்களாலும், நோயினாலும் நியூரோன்கள் இறப்பது மட்டும் தொடரும். மீள உருவாக்கப் பட முடியாதவை என்ற காரணத்தினாலோ என்னவோ, நூறு பில்லியன் நியூரோன்களை அப்படியே பொதி செய்து தந்து விடுகிறது இயற்கை.

அப்படியானால் கற்றலில் என்ன நடக்கிறது? குழந்தையின் வளர்ச்சியில் என்ன நடக்கிறது?. நாம் ஒரு விடயத்தைக் கற்றுக் கொள்ளும் போது மூளையில் இருக்கின்ற நியூரோன்கள் தமக்கிடையே இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. எவ்வளவு கற்றல் நிகழ்கிறதோ அவ்வளவுக்கு இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குழந்தை வளர்ந்து வரும் போது முதல் மூன்று வயது வரை இந்த இணைப்புகள் அசுர வேகத்தில் அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். மூளையில் குருதிப் பெருக்கு அல்லது குருதி அடைப்பு என்பது நாம் பொதுவாக "பாரிச வாதம்" (stroke) என்று அழைக்கும் நிலைமைக்கு அடிப்படைக் காரணம். பாரிச வாதத்தில் கை, கால் செயல்பாடு உடனடியாக இழக்கபடுவதற்கு இச்செயல் பாடுகளுக்குப் பொறுப்பான நியூரோன்கள் இறந்து விடுவதே காரணம். ஆனால், அனேகமானோரில் சில மாதங்களில், இச்செயற்பாடுகள் பகுதியளவில் மீளவருவதைக் காண்பீர்கள். பாரிச வாதம் இப்படிப் பகுதியளவில் குணமாவதற்கும் நமது மூளையில் இருக்கும் அள்ளு கொள்ளையான நியூரோன்களே காரணம்: இறந்த நியூரோன்களின் தொழிலை பகுதியளவில் சுற்றியிருக்கும் நியூரோன்கள் எடுத்துக் கொண்டு புதிய வலையமைப்பை உருவாக்குவதே பாரிச வாதிகளின் பகுதியளவிலான குணமாதலுக்குக் காரணம்.

இந்த வலையமைப்பு (network) என்ற சொல் இங்கே முக்கியமானது. சுருக்கமாகச் சொன்னால், தனிப் பட்ட நியூரோன்களை விட நியூரோன்கள் இணைந்துருவாக்கும் வலையமைப்புத் தான் எங்கள் மூளையின் தொழிற்பாட்டலகு என்று சொல்வதில் தவறில்லை!. இதைப் புரிந்து கொண்டதால், கடந்த ஒரு தசாப்த காலத்தில், இந்த வலையமைப்பை ஆய்வு செய்து மூளையைப் புரிந்து கொள்ளும் முயற்சிகள் சில ஆரம்பிக்கப் பட்டுள்ளன. பௌதீகவியலும், கணணி விஞ்ஞானமும், நரம்பியலும் இணைந்து  பயணிக்கும் இந்த ஆய்வுப் பயணம் வியத்தகு தகவல்களை வெளிக்கொண்டு வருகிறது!

-தொடரும், இணைந்திருங்கள்..    

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி ஜஸ்ரின்...!   மனிதமூளை மூன்று றாத்தல் எடையா , தலைக்குமேலே பாறாங்கல் வைத்த மாதிரி இருக்குமே...!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாசிக்க..... சுவராசியமாக உள்ளது ஜஸ்ரின்.
உங்கள் பதிவில், பல விடயங்களை புதிதாக அறிந்து கொண்டேன்.:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கற்றது கை மண்ணளவு... கல்லாதது உலகளவு  என்பது எவ்வளவு உண்மை, ஜஸ்ரின்!

எமது மூளையைப் பற்றிய நிறைய விடயங்கள் என்னை ஆச்சரியப் பட  வைத்தன !

நிறுத்தாமல் தொடருங்கள்!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நரம்புகளின் நடனம்-2

இந்தக் கட்டுரையை எப்படி தொழில் நுட்பம் சாராமல் கொண்டு போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது சுவாரசியமான ஒரு செய்தி இன்று  காணக் கிடைத்தது: அல்பேர்ட் ஐன்ஸ்ரினின் போமலினில் பாதுகாக்க பட்ட மூளையை இப்போது ஆராய்ந்து சில தனித்துவங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள் என்பதே அந்தச் செய்தி! ஐன்ஸ்ரின் பற்றித் தெரியாதவர்கள் மிகக் குறைவு! ஐன்ஸ்ரினுக்கு முன்னரும் அவருக்குப் பின்னரும் விஞ்ஞான அறிவை முன்னகர்த்திய பல ஜாம்பவான்கள் வாழ்ந்திருந்தாலும், ஒரு விடயத்தில் ஐன்ஸ்ரின் தனித்துவமாக மிளிர்கிறார்: "சிந்தனைச் சோதனைகள் (thought experiments)" எனும் சிக்கலான பரிசோதனை நிலைகளை தனது கற்பனையிலேயே நிகழ்த்தி பௌதீக அறிவியல் கோட்பாடுகளை உருவாக்கியமையே அந்தத் தனித்துவம். ஐன்ஸ்ரினின் சிந்தனைச் சோதனைகள் பல, அவர் தனது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டு பல ஆண்டுகளுக்குப் பின்பே வேறு விஞ்ஞானிகளால் நிஜமான ஆய்வு கூட அல்லது களப் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப் பட்டன என்பது அவர் எவ்வளவு தூரம் தனது காலத்தில் வாழ்ந்த சிந்தனையாளர்களிடம் இருந்து வேறு பட்டிருக்கிறார் என்று நிரூபிக்கின்றன. இத்தகைய சிந்தனைச் சோதனைகளுக்கு அடிப்படையாக இருப்பது "அரூப சிந்தனை (abstract thinking)" எனப்படும் மனிதனுக்கு வாய்த்த சிந்தனாசக்தியாகும்! எமது புலன்களால்  உணரமுடியாத ஒன்றை மூளையின் நியூரோன்கள் virtual reality  போல உருவாக்கி அதை அனுபவிப்பதே இந்த அரூப சிந்தனையின் நரம்பியல் அடிப்படை! இந்த இடத்தில் நாம் மனித மூளையின் இந்த சக்திக்குக் காரணமான மூளையின் பகுதியைச் சந்திப்போம்!

மூளையின் பல பாகங்கள், சோணைகள் வெவ்வேறு தொழிற்பாடுகளுக்காக சிறப்படைந்திருக்கின்றன. இவற்றில் prefrontal cortex (PFC) எனப்படும் முன்மூளைப் பகுதி மனிதனில் மிகவும் விருத்தியடைந்து எமது அறிவு, உணர்வுமயம் போன்றவற்றிற்கு முக்கியமான பகுதியாக இருக்கிறது! மூளையின் அடிப்பாகத்தில் இருக்கும் அமிக்டலா, ஹிப்பொகம்பஸ் போன்ற பகுதிகளும் மனிதனின் உணர்ச்சிவயப்படல் போன்ற இயல்புகளுக்கு அவசியமானவை. ஆனால், cognitive behavior எனப்படும் அறிவு சார் நடத்தைகளை எமது முன்மூளைப் பகுதியின் PFC இல் உள்ள நியூரோன்கள் தான் அதிகமாக ஆழுகின்றன. இதனால், PFC இல் ஏற்படும் மாற்றங்கள் அறிவு சார் நடத்தையைப் பாதிக்கும் என்பது சொல்லாமலே உங்களுக்குப் புரியும்!  இதனால், மூளையில் வலைப்பின்னல்கள் பற்றிய ஆய்வுகள் PFC பகுதியிலேயே அதிகம் செய்யப்படுகின்றன.

ஐன்ஸ்ரின் 1955 இல் காலமான போது சில மணி நேரங்களிலேயே அவரது மூளை பத்திரமாக எடுக்கப் பட்டு பாதுகாக்கப் பட்டது. அந்த நாட்களில் இப்போது இருப்பது போன்று நவீன ஆய்வு வசதிகள் இல்லாமையால், சிம்பிளாக சில புகைப்படங்கள் எடுத்த பின்னர் சுமார் 240 துண்டங்களாக மூளையை வெட்டி போமலின் திரவத்தில் பாதுகாத்து வந்தார்கள். இடையிடையே ஆய்வாளர்களுக்குத் தேவைப்படும் போது ஐன்ஸ்ரினின் மூளைத் துண்டங்கள் ஆய்வுக்கு வழங்கப் படும்!.

ஐன்ஸ்ரினின் மூளையின் PFC பகுதியில் வழமையை விட வித்தியாசமான மடிப்புகள் காணப்பட்டன என்பது ஒரு அவதானிப்பு. மூளையின் இப்பகுதியில் அதிகமான நரம்பு இணைப்புகள் காணப்படுவதால் இந்த வித்தியாசமான மடிப்புகள் உருவாகியிருக்கலாம் என்பது ஒரு விளக்கம்.   ஐன்ஸ்ரினின் மூளையில் வலது பக்கத்தில் பார்வை/தொடுகைப் புலன்களோடு தொடர்பான  பிரதேசம் வழமையான அளவை விட அதிகரித்துக் காணப்பட்டது என்பது இன்னொரு அவதானிப்பு! இதன் அர்த்தம் என்ன என்பதை விளங்கிக் கொள்ள நாம் வலது பக்க இடது பக்க மூளைப்பிரதேசங்களிடயேயான முக்கிய வேறு பாடுகளைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்!

எமது உடலின் வலது பக்க புலனுணர்வு மற்றும் இயக்கம் என்பவற்றை மூளையின் இடது பாதியும், இடது பக்க புலனுணர்வு/இயக்கம் என்பவற்றை மூளையின் வலது பாதியும் கட்டுப் படுத்துகின்றன. பொதுவாக மூளையின் இடது பக்கத்தில் மொழித்தேர்ச்சி, கேள்விப் புலன் சம்பந்தமான கட்டுப் பாட்டுப் பிரதேசங்கள் சற்று அதிகமாகக் காணப்படுகின்றன. வலது பக்கப் பாதியில், பார்வைப் புலனால் (visual) ஆளப்படும் செயல்பாடுகள், சிறிதளவு கணிதம் தொடர்பான செயல் பாடுகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசங்கள் இருக்கின்றன. ஒருவர் இடது கைப்பழக்கம் உடையவராக இருந்தால் அவரது கணிதத் திறன் நன்றாக இருக்கும் என்று நம்பப் படுவதற்கு இது காரணம். அதே போல, பெண்களில் இடது மூளையின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அவர்கள் மொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆண்களை விட அதிக திறனுடன் இருப்பார்கள் என்று நம்பப் படுவதும் இந்த இடது-வலது மூளை வேறுபாட்டினால் தான். ஆனால், ஒருவரது மூளையில் இடது பக்கமா வலது பக்கமா அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று சிம்பிளாகச் சொல்லி விட முடியாததால், வலது கைப் பழக்கம் உடையோர் எல்லோரும் கணக்கில் மட்டமாக இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது!. அதே போல இடது கைப்பழக்கம் உடையோர் யாவரும் மொழிகளைக் கற்றுக் கொள்வதில் சிரமப் படுவார்கள் என்று கூறி விடவும் முடியாது!

மீண்டும் ஐன்ஸ்ரினின் மூளைக்கு வருவோம்: பெரிதான ஐன்ஸ்ரினின் வலது மூளையின் புலனுணர்வுப் பிரதேசம்  அவர் கற்பனையுணர்வு, இசையுணர்வு என்பன அதிகம் வாய்க்கப் பட்டவராக வர ஒரு காரணமாக இருக்கலாம்! ஐன்ஸ்ரின் ஒரு சிறந்த வயலினிஸ்ட் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்! ஐன்ஸ்ரின் இடது கைப்பழக்கக் காரர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்!

-தொடரும்..இணைந்திருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ஜஸ்டின்..! 

எங்க மறந்து போட்டீங்களோ எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன்..!

தொடர்ந்து எழுதுங்கள்...நிறைய புதிய விடயங்களை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, புங்கையூரன் said:

வணக்கம் ஜஸ்டின்..! 

எங்க மறந்து போட்டீங்களோ எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன்..!

தொடர்ந்து எழுதுங்கள்...நிறைய புதிய விடயங்களை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது!

புங்கைக்காக மட்டுமாவது இதைத் தொடர்ந்து எழுதுவோம்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/11/2015 03:27:35, Justin said:

புங்கைக்காக மட்டுமாவது இதைத் தொடர்ந்து எழுதுவோம்! 

நானும் வாசிக்கிறேன்.பதில் எழுததான் பஞ்சி

Posted

ஜஸ்ரின் நானும்தான் தொடர்ந்து வாசிக்கின்றேன். முடிந்தால் பரீட்சை வைத்து பார்த்து உறுதிப்படுத்துங்கள். உங்கள் பதிவை வாசித்த 170 பேரில் நானும் உள்ளேன். நல்ல பதிவு - நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து இணையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆர்வம் காட்டும் எல்லோருக்கும் நன்றி, எனது தனிப்பட்ட ஆர்வத்தை மிகவும் தூண்டும் இந்த நரம்பியல் தொடரைத் தொடர்வேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் வாசிக்கிறனான். தொடர்ந்தும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19.11.2015, 17:00:46, Justin said:

நரம்புகளின் நடனம்-2

இந்தக் கட்டுரையை எப்படி தொழில் நுட்பம் சாராமல் கொண்டு போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது சுவாரசியமான ஒரு செய்தி இன்று  காணக் கிடைத்தது: அல்பேர்ட் ஐன்ஸ்ரினின் போமலினில் பாதுகாக்க பட்ட மூளையை இப்போது ஆராய்ந்து சில தனித்துவங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள் என்பதே அந்தச் செய்தி! ஐன்ஸ்ரின் பற்றித் தெரியாதவர்கள் மிகக் குறைவு! ஐன்ஸ்ரினுக்கு முன்னரும் அவருக்குப் பின்னரும் விஞ்ஞான அறிவை முன்னகர்த்திய பல ஜாம்பவான்கள் வாழ்ந்திருந்தாலும், ஒரு விடயத்தில் ஐன்ஸ்ரின் தனித்துவமாக மிளிர்கிறார்: "சிந்தனைச் சோதனைகள் (thought experiments)" எனும் சிக்கலான பரிசோதனை நிலைகளை தனது கற்பனையிலேயே நிகழ்த்தி பௌதீக அறிவியல் கோட்பாடுகளை உருவாக்கியமையே அந்தத் தனித்துவம். ஐன்ஸ்ரினின் சிந்தனைச் சோதனைகள் பல, அவர் தனது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டு பல ஆண்டுகளுக்குப் பின்பே வேறு விஞ்ஞானிகளால் நிஜமான ஆய்வு கூட அல்லது களப் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப் பட்டன என்பது அவர் எவ்வளவு தூரம் தனது காலத்தில் வாழ்ந்த சிந்தனையாளர்களிடம் இருந்து வேறு பட்டிருக்கிறார் என்று நிரூபிக்கின்றன. இத்தகைய சிந்தனைச் சோதனைகளுக்கு அடிப்படையாக இருப்பது "அரூப சிந்தனை (abstract thinking)" எனப்படும் மனிதனுக்கு வாய்த்த சிந்தனாசக்தியாகும்! எமது புலன்களால்  உணரமுடியாத ஒன்றை மூளையின் நியூரோன்கள் virtual reality  போல உருவாக்கி அதை அனுபவிப்பதே இந்த அரூப சிந்தனையின் நரம்பியல் அடிப்படை! இந்த இடத்தில் நாம் மனித மூளையின் இந்த சக்திக்குக் காரணமான மூளையின் பகுதியைச் சந்திப்போம்!

மூளையின் பல பாகங்கள், சோணைகள் வெவ்வேறு தொழிற்பாடுகளுக்காக சிறப்படைந்திருக்கின்றன. இவற்றில் prefrontal cortex (PFC) எனப்படும் முன்மூளைப் பகுதி மனிதனில் மிகவும் விருத்தியடைந்து எமது அறிவு, உணர்வுமயம் போன்றவற்றிற்கு முக்கியமான பகுதியாக இருக்கிறது! மூளையின் அடிப்பாகத்தில் இருக்கும் அமிக்டலா, ஹிப்பொகம்பஸ் போன்ற பகுதிகளும் மனிதனின் உணர்ச்சிவயப்படல் போன்ற இயல்புகளுக்கு அவசியமானவை. ஆனால், cognitive behavior எனப்படும் அறிவு சார் நடத்தைகளை எமது முன்மூளைப் பகுதியின் PFC இல் உள்ள நியூரோன்கள் தான் அதிகமாக ஆழுகின்றன. இதனால், PFC இல் ஏற்படும் மாற்றங்கள் அறிவு சார் நடத்தையைப் பாதிக்கும் என்பது சொல்லாமலே உங்களுக்குப் புரியும்!  இதனால், மூளையில் வலைப்பின்னல்கள் பற்றிய ஆய்வுகள் PFC பகுதியிலேயே அதிகம் செய்யப்படுகின்றன.

ஐன்ஸ்ரின் 1955 இல் காலமான போது சில மணி நேரங்களிலேயே அவரது மூளை பத்திரமாக எடுக்கப் பட்டு பாதுகாக்கப் பட்டது. அந்த நாட்களில் இப்போது இருப்பது போன்று நவீன ஆய்வு வசதிகள் இல்லாமையால், சிம்பிளாக சில புகைப்படங்கள் எடுத்த பின்னர் சுமார் 240 துண்டங்களாக மூளையை வெட்டி போமலின் திரவத்தில் பாதுகாத்து வந்தார்கள். இடையிடையே ஆய்வாளர்களுக்குத் தேவைப்படும் போது ஐன்ஸ்ரினின் மூளைத் துண்டங்கள் ஆய்வுக்கு வழங்கப் படும்!.

ஐன்ஸ்ரினின் மூளையின் PFC பகுதியில் வழமையை விட வித்தியாசமான மடிப்புகள் காணப்பட்டன என்பது ஒரு அவதானிப்பு. மூளையின் இப்பகுதியில் அதிகமான நரம்பு இணைப்புகள் காணப்படுவதால் இந்த வித்தியாசமான மடிப்புகள் உருவாகியிருக்கலாம் என்பது ஒரு விளக்கம்.   ஐன்ஸ்ரினின் மூளையில் வலது பக்கத்தில் பார்வை/தொடுகைப் புலன்களோடு தொடர்பான  பிரதேசம் வழமையான அளவை விட அதிகரித்துக் காணப்பட்டது என்பது இன்னொரு அவதானிப்பு! இதன் அர்த்தம் என்ன என்பதை விளங்கிக் கொள்ள நாம் வலது பக்க இடது பக்க மூளைப்பிரதேசங்களிடயேயான முக்கிய வேறு பாடுகளைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்!

எமது உடலின் வலது பக்க புலனுணர்வு மற்றும் இயக்கம் என்பவற்றை மூளையின் இடது பாதியும், இடது பக்க புலனுணர்வு/இயக்கம் என்பவற்றை மூளையின் வலது பாதியும் கட்டுப் படுத்துகின்றன. பொதுவாக மூளையின் இடது பக்கத்தில் மொழித்தேர்ச்சி, கேள்விப் புலன் சம்பந்தமான கட்டுப் பாட்டுப் பிரதேசங்கள் சற்று அதிகமாகக் காணப்படுகின்றன. வலது பக்கப் பாதியில், பார்வைப் புலனால் (visual) ஆளப்படும் செயல்பாடுகள், சிறிதளவு கணிதம் தொடர்பான செயல் பாடுகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசங்கள் இருக்கின்றன. ஒருவர் இடது கைப்பழக்கம் உடையவராக இருந்தால் அவரது கணிதத் திறன் நன்றாக இருக்கும் என்று நம்பப் படுவதற்கு இது காரணம். அதே போல, பெண்களில் இடது மூளையின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அவர்கள் மொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆண்களை விட அதிக திறனுடன் இருப்பார்கள் என்று நம்பப் படுவதும் இந்த இடது-வலது மூளை வேறுபாட்டினால் தான். ஆனால், ஒருவரது மூளையில் இடது பக்கமா வலது பக்கமா அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று சிம்பிளாகச் சொல்லி விட முடியாததால், வலது கைப் பழக்கம் உடையோர் எல்லோரும் கணக்கில் மட்டமாக இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது!. அதே போல இடது கைப்பழக்கம் உடையோர் யாவரும் மொழிகளைக் கற்றுக் கொள்வதில் சிரமப் படுவார்கள் என்று கூறி விடவும் முடியாது!

மீண்டும் ஐன்ஸ்ரினின் மூளைக்கு வருவோம்: பெரிதான ஐன்ஸ்ரினின் வலது மூளையின் புலனுணர்வுப் பிரதேசம்  அவர் கற்பனையுணர்வு, இசையுணர்வு என்பன அதிகம் வாய்க்கப் பட்டவராக வர ஒரு காரணமாக இருக்கலாம்! ஐன்ஸ்ரின் ஒரு சிறந்த வயலினிஸ்ட் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்! ஐன்ஸ்ரின் இடது கைப்பழக்கக் காரர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்!

-தொடரும்..இணைந்திருங்கள்!

இந்த கட்டுரையை வாசித்தவர்கள் இனிமேல் மற்றவர்களைப்பார்த்து.....
பள்ளிக்கூடம் போகாதவன்...
படிப்பறிவில்லாதவன்....
நாகரீகம் தெரியாதவன்....
வடலிக்கு பின்னாலை ஒதுங்கியவன்.....
நாலு இடங்களுக்கு போகாதவன்....
உலக அறிவில்லாதவன்.....
கிணற்று தவளைகள்..... என திட்டக்கூடாது.
எல்லாம் அவரவர் பிறப்பிலேயே தங்கியுள்ளது என்பதை கவனிக்கவும்.
ஜஸ்டினுக்கும் சேர்த்துத்தான் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னையும் உங்களின் கருத்தால் காப்பாத்திட்டீங்கள்  கு. சா....!  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கு.சா, சுவி, ஸ்பைடர்,
தவறான புரிதலைத் திருத்த மட்டும் இதை எழுதுகிறேன்: ஐன்ஸ்ரின் மூளை மடிப்புகளோடு பிறந்து அதனால் ஜீனியஸ் ஆனார் என்று இந்தத் தொடர் சொல்லவில்லை! அவரது கற்றலும் அனுபவங்களும் மூளையின் வலைப்பின்னலை மாற்றின என்பதே ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்து. ஐன்ஸ்ரின் மட்டுமல்ல, யாரும் தாம் பிறப்பில் கொண்டு வந்த மூளையால் தங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் படி கட்டுப்படுத்தப் பட்டவர்கள் அல்ல! கற்றலும் அனுபவித்தலும் மூளையை மாற்றுவதாக தொடரின் முதல் பகுதியிலேயே குறிப்பிடப் பட்டிருக்கிறது!

உங்கள் ஏனைய கருத்துகளுக்கு, உரிய திரியில் பதில் சொல்வேன்.

Posted

ஜஸ்டின் நேரம் கிடைக்கும்போது வேறு ஒரு திரியில் என்னால் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதில் சொல்வீர்களா?

"டிஸ்லெக்ஸியா என்பது பற்றிய கேள்வி இது. டிஸ்லெக்ஸியா உள்ளவர்களுக்கு எழுத்துக்கள் இடங்கள் மாறித் தோன்றுவதால் அவர்களால் சொற்களைப் படிக்க முடியாது. ஆனால் அவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்களில்லை, சமுதாயத்தில் உள்ள மற்றவர்களைப் போன்றே இவர்கள் எல்லா விடயங்களிலும் இருப்பார்கள். இப்பதிவை எழுத முன்னர் உறுதிப்படுத்தலிற்காக நெற்றில் தேடியபோது பல ஆச்சரியங்கள். உதாரணத்திற்கு dyslexia உள்ள சில பிரபலங்கள் John Lennon, Pablo Picasso, Bill Gates, Steve Jobs, Agatha Christie, Albert Einstein, Steven Spielberg, Leonardo da Vinci, Erna Solberg (தற்போதைய நோர்வே பிரதமர்) . 

இத்தனை புத்தகங்களை எழுதித்தள்ளிய Agatha Christieக்குமா?
அருமையான பாடல்களை எழுதி உலகையே ஆக்கிரமித்த John Lennonக்குமா?

புரியவே இல்லை.

எப்படி இப்படி என்பதை ஜஸ்டின் போன்ற மருத்துவ அறிவுள்ளவர்கள் வந்து விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.என்ரை மண்டை வெடிக்கும் பதில் தெரியாதவரை"

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நரம்புகளின் நடனம்- 3

மூளையை ஆக்கும் நியூரோன்களை விடவும் அந்த நியூரோன்கள் தங்களிடையே ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்புகள் தான் மூளையை வழி நடத்தும் வலைப் பின்னல்கள் என்பதைப் பார்த்தோம். மூளையின் எல்லாப் பகுதிகளுக்கும் இந்த வலையமைப்பு முக்கியமானது என்றாலும், PFC எனப்படும் முன்மூளைப் பகுதியின் வலையமைப்பு சிக்கலான எமது உணர்வுகள் நடத்தைகளை ஆள்வதால் PFC பகுதியின் வலயமைப்பே அதிகம் ஆய்வுக்குட்படுத்தப் படுகிறது என்றும் பார்த்தோம்.

இந்த வலைப்பின்னல்கள் நியூரோன்கள் ஒன்றோடொன்று நேரடியாகக் கைகோர்ப்பதால் ஏற்படுவதில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம். ஆனால், இயற்கையானது இந்த வலைப்பின்னல்களைக் கட்டுப் படுத்துவதற்காக ஒரு புதுவிதமான இணைப்பு சிஸ்டத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை இந்த பகுதி  முடிவடையும் போது விளங்கிக் கொள்வீர்கள். உருவத்தில் நியூரோன்கள் தனித்துவமானவை. ஒரு தனியான நியூரோன் கலம் நீட்சிகளை உருவாக்கி மற்றைய நியூரோன்களை நோக்கிக் கைகளை நீட்டுகிறது. இந்தக் கைகளை axons என்பார்கள். சில நியூரோன்களின் கைகள் சில நூறு சென்ரிமீற்றர்கள் வரை நீண்டு அடுத்த நியூரோனைத் தொடர்பு கொள்கின்றன. உண்மையில் நாம் நரம்பு (nerve) என்று அழைப்பது இந்த axons எனப்படும் நீட்சிகளே.

இரண்டு நியூரோன்களின் கைகள் குலுக்கிக் கொள்ள இணையும் இடங்களில், அவை நேரடியாகத் தொட்டுக் கொள்ளாமல் ஒரு அரை மைக்ரோமீற்றர் தூரத்தில் நின்று விடுகின்றன! இப்படி தொட்டுக்கொள்ளாமல் நின்று விடும் நியூரோன்களின் கரங்களில் இருந்து விசேடமான சுரப்புகள் சுரக்கப் பட்டு அவையே இந்தக் கரங்களிடையேயான தொடர்பைப் பூரணப் படுத்தி வைக்கின்றன. இந்தச் சுரப்புகளை நரம்புக் கடத்திகள் அல்லது நியூரோட்ரான்ஸ்மிற்றர்கள் என்போம். எங்கள் ஒவ்வொரு தொழிற்பாட்டிலும் சிந்தனையிலும் கணநேரத்தில் உருவாகி, தொழில்பட்டு உடனேயே அழிந்து போகும் நரம்புக் கடத்திகளே பின்னிருந்து இயக்கும் மூலக்கூறுகளாக இருக்கின்றன என்பது அதிசயமான தகவல். இந்த நரம்புக் கடத்திகளின் முக்கியத்துவத்தை  சில மூளை வியாதிகளில் இவற்றின் பங்களிப்பை விளங்கிக் கொள்வதால் நாம் காணலாம். முதுமையோடு தொடர்பான அல்சைமர் வியாதி ஞாபக மறதிக்கு பெருமளவில் காரணமான ஒரு மூளை நோய். அசரைல்கோலின் எனும் நரம்புக் கடத்தியின் அளவு மூளையில் குறைவது அல்சைமரின் ஒரு முக்கிய மாற்றம், இதனால் ஞாபக மறதி (dementia)  உருவாகிறது. இன்னொரு முதுமை சார்ந்த மூளை நோயான பார்க்கின்சன் மூளையின் சில பகுதிகளில் டோப்பமின் (Dopamine) எனும் நரம்புக் கடத்தியின் சுரப்புக் குறைவதால் ஏற்படுகிறது. சிசோப்றெனியா (Schizophrenia) எனப்படும் உளப்பிளவு நோயிலும், சிறுவர்களில் ஏற்படும் ADHD (Attention Deficit Hyperreactivity Disorder) எனும் கவனக் குறைபாட்டு நிலையிலும் கூட டோப்பமின் அளவு குறைவது அவதானிக்கப் பட்டுள்ளது. இந்த டோப்பமின் பற்றி இன்னொரு சுவாரசியமான தகவல்: எங்களை ஒரு இலக்கு நோக்கி ஊக்குவிக்கும் நரம்பியல் மூலக்கூறாகவும் டோப்பமின் அடையாளம் காணப்பட்டுள்ளது. எங்களுக்கு உணர்வு ரீதியாக மகிழ்ச்சி ஏற்படுத்தும் செயல்கள் (rewards) அனேகமாக மூளையின் டோப்பமின் சுரப்பை அதிகரிக்கின்றன. அண்மைய ஒரு ஆய்வில், ஒரு சிறிதளவு பியர், குடிப்பவரின் மூளையில் டோப்பமின் சுரப்பை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். டோப்பமின் சுரப்பு அதிகரிக்க அதிகரிக்க, நாம் பியர் குடிப்பதையும் தொடர்கிறோம். எனவே, அடிமையாதலுக்கு (addiction) டோப்பமின் ஒரு நரம்பியல் காரணம்! 

 மூளை எனும் வனத்தில் இது வரை உள்ளே உலவி மரங்களைப் பார்த்த நாம், இனி ஒரு முப்பதாயிரம் அடிகள் மேலெழுந்து அந்த வனத்தைக் கழுகுப் பார்வையில் பார்ப்போம்!

-தொடரும், இணைந்திருங்கள்.

பி.கு: ஜீவன் சிவா, உங்கள் கேள்விக்கு அடுத்த பகுதியில் பதில் தர முனைகிறேன். பொறுமைக்கு நன்றி! 

Posted
29 minutes ago, Justin said:

சிசோப்றெனியா (Schizophrenia) எனப்படும் உளப்பிளவு நோயிலும், சிறுவர்களில் ஏற்படும் ADHD (Attention Deficit Hyperreactivity Disorder) எனும் கவனக் குறைபாட்டு நிலையிலும் கூட டோப்பமின் அளவு குறைவது அவதானிக்கப் பட்டுள்ளது. இந்த டோப்பமின் பற்றி இன்னொரு சுவாரசியமான தகவல்: எங்களை ஒரு இலக்கு நோக்கி ஊக்குவிக்கும் நரம்பியல் மூலக்கூறாகவும் டோப்பமின் அடையாளம் காணப்பட்டுள்ளது. எங்களுக்கு உணர்வு ரீதியாக மகிழ்ச்சி ஏற்படுத்தும் செயல்கள் (rewards) அனேகமாக மூளையின் டோப்பமின் சுரப்பை அதிகரிக்கின்றன. அண்மைய ஒரு ஆய்வில், ஒரு சிறிதளவு பியர், குடிப்பவரின் மூளையில் டோப்பமின் சுரப்பை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். டோப்பமின் சுரப்பு அதிகரிக்க அதிகரிக்க, நாம் பியர் குடிப்பதையும் தொடர்கிறோம். எனவே, அடிமையாதலுக்கு (addiction) டோப்பமின் ஒரு நரம்பியல் காரணம்! 

புதியதாக இருந்தது - Depression க்கும் டோப்பமின் குறைவாக இருத்தல் காரணமாகலாமா.

தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, ஜீவன் சிவா said:

புதியதாக இருந்தது - Depression க்கும் டோப்பமின் குறைவாக இருத்தல் காரணமாகலாமா.

தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி.

டோப்பமினை விட செரோரொனின்(serotonin) குறைவது தான் மன அழுத்தத்திற்க்கு நரம்பியல் காரணமாக அறியப் பட்டிருக்கிறது. டோப்பமின் எங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களால் தூண்டப் பட்டாலும், குறைவதால் அடிப்படையான மகிழ்ச்சி குறைவதில்லை. எனவே மகிழ்ச்சியை நோக்கிய செயல்களுக்கு ஊக்கியாக டோப்பமின்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நரம்புகளின் நடனம்- நிறைவுப் பகுதி

ஒவ்வொரு முறையும் விமானப் பயணம் செய்யும் போது , விமானம் தரையிறங்கும் தருணங்களை நாம் மிகவும் ஆவலுடன் ரசிப்பேன். வெண்மையான முகில்கள் மறைந்து கருமையான வண்ணங்கள் கொண்ட தரைப் பகுதி தெரிய ஆரம்பிக்கும். இரவாக இருந்தால் கீழே பெருந்தெருக்களில் விரையும் வாகனங்களின் விளக்கொலி கிட்டத் தட்ட ஒலிக்கற்றைகள் போல நகர்வது கண்ணுக்கு விருந்து. இப்படியான பருந்துப் பார்வையில் மூளையில் நரம்புகளின் இணைப்புகளைப் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?

இப்படிப் பருந்துப் பார்வையில் மூளையின் வலையமைப்பினைப் படம் பிடிக்கும் தொழில் நுட்பம் கடந்த ஒரு தசாப்தமாகப் பாவனையில் இருக்கிறது. எம். ஆர். (MRI) என்று எங்களுக்கு அறிமுகமான காந்தப்புல ஒத்திசைவுப் படம் (Magnetic Resonance Imaging) தான் அந்தத் தொழில் நுட்பம். எமது உடலில் எலும்பு போன்ற திண்மையான பகுதிகளில் பிரச்சினை இருந்தால் எக்ஸ்றே எனப்படும் கதிர்ப்படம் மூலம் கண்டு கொள்ள முடியும். ஆனால், மென்மையான உறுப்புகளும் கோறையான உறுப்புகளும் எக்ஸ்றேயை ஊடுருவிச் செல்ல அனுமதித்து விடுவதால் இவ்வுறுப்புகளில் ஏற்படும் அமைப்பு மாற்றங்களை கதிர்ப்படத்தினால் கண்டு கொள்வது கடினம். இதற்காக உருவான கதிரியக்கம் அற்ற முறைமை தான் MRI . எமது உடல் கிட்டத் தட்ட 60% நீரினால் ஆனது. அந்த நீர் மூலக்கூறுகளில் இருக்கும் ஐதரசன் அணுவை அருட்டி, அதனால் ஏற்படும் மின்சக்தியைப் படம் பிடிப்பது MRI, இது பௌதீகவியல் மருத்துவத்திற்குச் செய்த மாபெரும் பங்களிப்புகளில் ஒன்று!. இந்த அடிப்படையை மூளையின் குருதிக் கலன்களில் ஓடும் குருதியில் இருக்கும் நீர் மூலக்கூறுகள் மீது பிரயோகிப்பதன் மூலம், மூளையின் பகுதிகளில் ஏற்படும் ஒக்சிசன் கலந்த இரத்த ஓட்டத்தைப் படம் பிடிக்க முடியும். இதை ஆங்கிலத்தில் Blood Oxygenation Level-Dependent (BOLD) imaging  என்பார்கள். இப்படி சிறப்பாக அமைக்கப் பட்ட MRI செயல்பாட்டு ரீதியான MRI (functional MRI) என்பார்கள். fMRI வைத்துக் கொண்டு எமது பல்வேறு செயல்கள், சிந்தனை நிலைகள், உணர்வுகளின் போது மூளையின் எந்தப் பிரதேசம் அதிகம் தொழிற்படுகிறது என்றும் எந்தப் பிரதேசங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்றும் ஆராய முடியும். இவ்வாறு தான் மூளையின் வலையமைப்பினை முப்பதாயிரம் அடி உயரத்தில் இருந்து ஆய்வாளர்கள் கண்கொள்கிறார்கள்!.

இந்தத் தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு அமெரிக்க அரச நிதியுதவியோடு ஆரம்பிக்கப் பட்ட ஆய்வுத் திட்டமான human connectome project (HCP) பல்வேறு திசைகளிலும் எமது மூளை பற்றிய அறிவை விரிவு படுத்தி வருகிறது. பிறந்த சிசு தொடக்கம் வளர்ந்த சாதாரண மனிதர்கள், மனநோயால் பாதிக்கப் பட்டோர், குற்ற வாளிகள் எனப் பல பிரிவினரினதும் மூளையின் வலையமைப்பை கடந்த பத்தாண்டுகளாக ஆராய்ந்து வருகிறார்கள். இந்த ஆய்வுகளின் முடிவுகள் எல்லாவற்றையும் இங்கே விளக்குவது அசாத்தியமானது என்றாலும், அண்மையில் வெளியாகி என்னைக் கவர்ந்த ஒரு ஆய்வு முடிவை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் ஓய்வு பற்றிப் பேசும் போது உண்மையில் எமது உடலின் எந்தப் பகுதியின் ஓய்வு பற்றிப் பேசுகிறோம்? அனேகமாக நாம் எமது மனத்தின் அல்லது மனத்தின் பௌதீக/உயிரியல் அடிப்படையான மூளையின் ஓய்வு பற்றியே  பேசுகிறோம். அண்மைய ஆய்வொன்றின் படி, எமது மூளை நாம் ஓய்வில் இருக்கும் போதும் வேலை செய்தவாறே இருக்கிறது. சுவாசம், இதய இயக்கம் என்பவற்றைக் கட்டுப் படுத்த வேண்டியிருப்பதால் இப்படி மூளை ஓய்விலும் வேலை செய்வது புதிது அல்லவே என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால், ஆய்வாளர்கள் குறிப்பிடும் இந்த "ஓய்வு நிலைத் தொழிற்பாடு" எமது நடத்தைகளைக் கட்டுப் படுத்தும் PFC எனும் முன்மூளையில் காணப்படுகிறது. மேலும் ஒரு சுவாரசியமான தகவல்: இந்த ஓய்வு நிலைத் தொழிற்பாடு ஆய்வுக்குட்படுத்தப் பட்ட ஒவ்வொரு நபருக்கும் (முன்னூறுக்கு மேற்பட்ட நபர்களை ஆய்வுக்குட்படுத்தியிருந்தார்கள்) தனித்துவமானதாகவும் இருந்தது! இதன் அர்த்தம் என்னவெனில்: முதல் நாள் இந்த முன்னூறு பேரின் மூளையை fMRI இல் ஓய்வு நிலையில் படம் பிடித்து விட்டு, அவர்களது அடையாளத்தையும் கணணியில் பதிந்து விட்டு, மறு நாள் மீண்டும் வந்து அதே போன்ற ஓய்வு நிலைப் படத்தை எடுக்கிறார்கள். இப்போது ஆளின் அடையாளத்தைக் கணணிக்குச் சொல்லாமல், முன்னைய நாள் படத்துடன் ஒப்பிட்டுக் கண்டு கொள்ளுமாறு சொன்னால், கணணி 90% இற்கும் மேலான நிச்சயத் தன்மையுடன் தனி நபர்களைச் சரியாக அடையாளம் கண்டு கொள்கிறது! வேறு வழியில் சொன்னால், எமது கைவிரல் ரேகை போல, கண்ணின் ஐரிஸ் அடையாளம் போல, மூளையின் பகுதியின் ஓய்வு  நிலை வலையமைப்பும் எமது தனித்துவத்தின் குறிகாட்டியாகக் கொள்ளப் பட முடியும்!

இந்தக் கண்டு பிடிப்பின் பிரயோகம் என்ன? அல்லது அடுத்த நிலை என்ன? இந்த அடிப்படையான மூளை வலையமைப்பு மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது எனில், சாதாரண மனிதர்கள் அல்லாத கொலைஞர்கள், பாலியல் குற்றவாளிகள், சில மனநோய்கள் உடையோரில் என்ன மாதிரியான வேறுபாடுகள் இருக்கலாம்? அந்த மூளை வலையமைப்பை fMRI மூலம் படம் பிடித்தால் அதை வைத்துக் கொண்டு ஒருவருக்கு வரவிருக்கும் மன நோயையோ அல்லது அவர் வாழ்வில் செய்யவிருக்கும் குற்றங்களையோ முன்கூட்டியே எதிர்வு கூறும் நிலை வரக்கூடும். இது ஒழுக்கவியல் ரீதியில் சர்ச்சைக்குரியது என்றாலும், தூர நோக்கில் சமூகத்திற்கு நன்மை தரும் கண்டு பிடிப்பாக மாறக் கூடிய சாத்தியங்கள் உண்டு. இந்த வேளையில் ரொம் குரூசின் மைனோரிடி ரிப்போர்ட் (Minority Report) எனும் விஞ்ஞானப் புனைவு சார்ந்த திரைப்படமும் நினைவில் வந்து பயமுறுத்துகிறது!. 

இத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது நண்பர்களே! இணைத்திருந்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றிகள்!.

மேலும், இதுவே யாழில் எனது இறுதிப் பதிவாகவும் இருக்கிறது உறவுகளே!

"மகிழ்ச்சியைத் தேடுவதை விட தேடுவதில் மகிழ்ச்சியைக் காணுங்கள்"

("Not the pursuit of happiness, but happiness of pursuit")

 என்று சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கேட்ட வசனத்தை உங்களுக்குச் சமர்ப்பித்து விடை பெறுகிறேன்!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19 December 2015 at 6:55 PM, Justin said:

இத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது நண்பர்களே! இணைத்திருந்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றிகள்!.

மேலும், இதுவே யாழில் எனது இறுதிப் பதிவாகவும் இருக்கிறது உறவுகளே!

"மகிழ்ச்சியைத் தேடுவதை விட தேடுவதில் மகிழ்ச்சியைக் காணுங்கள்"

("Not the pursuit of happiness, but happiness of pursuit")

 என்று சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கேட்ட வசனத்தை உங்களுக்குச் சமர்ப்பித்து விடை பெறுகிறேன்!  

விஞ்ஞான விடயங்களை தமிழில் தருவது இலகுவானது அல்ல.  மிகவும் பிரயோசனமான விடயங்களைத் தந்துவிட்டு இறுதிப் பதிவு என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளீர்கள். இந்த வருடத்திற்கான இறுதிப் பதிவாக இருக்கட்டும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.