Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து காதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோ துறூ ஒழுங்கை- No Through Road"

2000 ஆண்டு
நாங்கள் அப்ப A/L படிச்ச காலம்.
பள்ளிக்கூட காதலுக்காக பெட்டையளுக்கு பின்னால திரிஞ்ச காலம்.

O/L ஓட எங்கட வயது பெட்டைகளுக்கு பின்னால திரியுற வேலையை நிறுத்தி எங்கள விட வயது குறைஞ்ச பெட்டையளுக்கு பின்னால திரியும் "ஒப்பிறேசனை-operation love" ஆரம்பிச்ச காலம்.

பருத்துறையில இருந்து நெல்லியடி, யாழ்ப்பாணம், அச்சுவேலி எண்டு கொஞ்சம் எங்கட நடவடிக்கைகளை விரிவு படுத்திய காலம்.

இயக்கம் காம்(camp) அடிக்க போறதுக்கு ஆயத்தப்படுத்துறதை விட அதிகமாக பிளான்(plan) போட்ட காலம்.

வேவு நடவடிக்கையில மூன்று படிநிலை இருக்கு,

1.முதல்ல லவ் பண்ணுற பெட்டை எந்த ரியூசனில படிக்கிறாள் எண்டு ரெக்கி எடுப்பம்
2.அவளின்ர பிரண்ட்ஸ் யார் எண்டு விசாரிச்சு கண்டுபிடிக்கிறது.
3.ரியூசன் ரைம்ரேபிள்(time table) எடுக்கிறது

இது ஆரம்ப கட்ட வேலை. இதுக்கு எங்கட பொடியள் உதவி செய்வாங்கள்.

அதுக்குப்பிறகு ஒரு ஆறு ஏழு தரம் ரியூசன் முடிய அவளுக்கு பின்னால போய் .....
லவ் பண்ணுற பெட்டையின்ர ரியக்சன் எப்பிடி இருக்கு எண்டு பாப்பம்.
ரியக்சனிலையும் (Reaction) மூண்டு வகை இருக்கு.

1.கொடுப்புக்குள்ள சிரிக்கிறது
2.வீட்டுக்குள்ள படலையை திறந்து போகமுதல் ஒருக்கா திரும்பி பாக்கிறது
3.பிரண்ட்ஸ் பெட்டையள் எங்களை பாத்து அவளை நக்கல் அடிக்கும் போது பொய்யுக்கு அந்த பெட்டையளை முறைச்சு பாக்குறது

இவ்வளவும் நடந்திட்டா பிள்ளைக்கு லவ் முட்(love mood) ஆரம்பிச்சிட்டு எண்டு அர்த்தம்.

அப்பதான் எங்கட அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பிப்பம்.

பொடியளை செற்பண்ணி அவள் ரியூசன் முடிச்சு வாற நேரம் எங்கட பெயரை சொல்லி கூப்பிட்டு பழிக்கிறது.அந்த நேரம் அவள் படும் வெக்கைத்தை பார்த்து ரசிக்கிறது.

ஒழுங்கை வாசலில காத்திருந்து எங்களை கடக்கும் போது ரைமிங்கில(timing) பெயரை சொல்லி பழிக்கவேணும். எங்கட பொடியள் அதை சிறப்பா செய்வாங்கள்.
அதிலையும் எங்கட பொடியள் "இஸ்ரேல் ரெயினிங்க்" எடுத்த மாதிரி அச்சொட்டா கிளைமோர் அடிப்பாங்கள்.

ஆரம்ப கட்ட வேலைகள் எல்லாம் முடிச்சுவிட்டு என்னிடம் வந்தான் என் ஆருயிர் நண்பன்.
(ஆண்டு 6 இல இருந்து நண்பன் அவன்)

"மச்சான் இண்டைக்கு எப்பிடியும் அகல்யாவுக்கு கடிதம் குடுக்கிறம்"

"என்ன மச்சான் அவளெண்டு முடிவு எடுத்திட்டியோ?"
ஏனென்டால் ஆண்டு 6 இருந்து அவன் பாக்கும் 4வது பெட்டை இது.

"மச்சான் கட்டினா அவளைத்தான் கட்டுவன்"
சைக்கிளை ஸ்ராண்டில் விடாமல் ஒற்றைக்காலில நிண்டு சொன்னான்.

"சரி மச்சி ஆனால் நெல்லியடிக்கு உவ்வளவு தூரம் நான் சைக்கிள் ஓடி வரமாட்டன். நீதான் ஏத்திகொண்டு போகவேணும்."

"நான் ஓடுறன் நீ ஏறு"

"வரயுக்கையும் நீதான் ஓடுவாய் மவனே"
"ஓகே வா"

போகும் போது அவளை பாக்கும் ஆர்வத்தில சைக்கிள் ஓடும் என் நண்பன்..
வரும் போது நான் தான் ஏதோ தேய தேய ஓடவேணும்.
இது கனதரம் நடந்திருக்கு எனக்கு.
"மச்சி எங்கயடா லவ் லெட்டர். காட்டு பாப்பம்?"
"மச்சி வெறுக்கிறாய் பாத்தியா ? பாலனுக்கு நீதானே எழுதிக்குடுத்தனி. எனக்கு எழுதிதரமாட்டியா?"

கெமிஸ்ற்றி கொப்பியின்ர பின் ஒற்றையை கிழிச்சு சைக்கிள் கரியரில கொப்பியை வைச்சு "லவ் லெட்டர்" எழுதினம்.

"மச்சன் இந்தா சிவப்பு , நீலப்பேனை.. கலரா வடிவா எழுது மச்சி.. "
ஈஸ்வரநாதன் சேரின் விஞ்ஞான பாடத்துக்கு கலர் கலரா நொட்ச்(notes) எழுதிற மாதிரி.

ஏற்கனவே என்ர நண்பன் ஒருத்தனுக்கு எழுதின காதல் கடிதத்தின் வரிகள் நினைவில் வைத்து சில மாற்றங்கள் செய்து புது காதல் கடிதம் எழுதியாச்சு.
"மச்சி சரி கடைசியில கையெழுத்தை எண்டாலும் வையண்டா "

" மச்சான் கையெழுத்து வேணாம் கீழ ஒரு இதயமும் ரோசாப்பூவும் கீறிவிடு "

அவன் ஏன் கையெழுத்து வைக்கவில்லை என்பதற்கான காரணத்தை கதையினின் கடைசியில சொல்லுறன்.

ஒப்பிரேசன் அகல்யா(operation akalya) ஆரம்பம்...!!!
பருத்துறையில் இருந்து நெல்லியடிக்கு போகும் வழியில்..

மந்திகை ஆசுப்பத்திரியை கடக்கும் போது நான் என் நண்பனிட்ட கேட்டன்.

"மாச்சான் ஏண்டா அவளை பாக்குறாய்..? உனக்கு செட்(set) ஆகுமா?"

" மச்சி நானும் பயோ(biology) படிக்கிறன் அவளும் பயோதான், இரண்டுபேரும் டொக்கர் ஆனா அந்த மாதிரி மச்சான்"

" டொக்டர்(doctor) டொக்டர கட்டினா life ஈசி மச்சான்"

அவன் சொன்ன விஞ்ஞான விளக்கம் எனக்கு விளங்கவேயில்லை அந்த நேரம்.

போகும் வழியில் மாலுசந்திக்கு கிட்ட உள்ள சலூன் கடையில் திடீர் எண்டு சைக்கிளை நிப்பாட்ட சொன்னான்.

" மச்சி ரியூசன் விடப்போகுது .. நேரமாச்சடா ......வந்து தலைமயிர் வெட்டலாம்."

" மச்சி உள்ள வா ஒரு அலுவல் இருக்கு"

சலூனுக்குள் போனவன் சலூன் கடைக்கர பொடியனோட கன நாளா பழகினமாதிரி ...கதைச்சுப்போட்டு...

முகத்துக்கு பவுடர் போட்டு தலை இழுத்துக்கொண்டு வந்தான்.

"மச்சி முகம் ஒகே யாடா. வேர்வை இல்லைத்தானெ?...தலை இழுப்பு ஒகேயா"

"மச்சி நானும் இழுத்திட்டு வரவா?"நான் கேட்டேன்.

" டேய் உன்ர ஆளையா பாக்கப்போறம் என்ர ஆளைத்தானெ நான் பாக்கபோறன். அதெல்லாம் வேணாம் வா."

பொறாமை அந்த சனியனுக்கு.

" மச்சி சலூன் பொடியனிட்ட என்ன கேட்டனி?'

" அதோ ... அகல்யாவின்ர ரியூசன் முடியுற நேரத்தை confirm பண்ணினனான்.

சலூன் கடைதான் "Information centre"
சலூன் பொடியன் தான் "Data base"

ஒரு மாதிரி ரியூசன் ஒழுங்கை முடிவில மாலை 5.30 இக்கு காத்திருந்தம்.

குமரன் சேரின் physics பாடம் முடியும் நேரம்.

முதல்ல பொடியள்தான் வெளியில வந்தாங்கள்..

அதில ஒருத்தன் எங்களுக்கு கிட்டவந்து நண்பனிடம் சொன்னான்.

"அண்ணை ..... அண்ணி இண்டைக்கு சிவப்பு புள்ளி புள்ளிச்சட்டை.... "

அவன் தான் எங்கட வேவுப்பிரிவு. அகல்யாவின் வகுப்பில படிக்கும் பொடியனை ஸ்பை (spy)ஆக வைச்சிருந்தான் என் நண்பன்.

கண்ணைக்கவரும் பட்டாம் பூச்சிகளாக சிவப்பு, மஞ்சள், பச்சையென பிள்ளைகள் வெளியில் வரத்தொடங்கினார்கள்.
எனக்குப்பரவாயில்லை... பருத்துறையில இருந்து நெல்லியடி வந்ததுக்கு பிரயோசனம்.

"மச்சி சைக்கிளை எடு என்ர ஆள் வருகுது... "

நான் ஆயத்தமானேன். நண்பன் முன்னுக்கு ஏற சைக்கிளை மெதுவாக எடுக்க ஆயத்தமானேன்.

அகல்யா தன் தோழிகளோடு எங்களை கடக்கும் போது அவளை நான் பார்த்தேன்.

நண்பன் குனிந்த தலை நிமிராமல் " எடடா.... எடடா சைக்கிளை.." என முனகினான்.

சும்மா சொல்லக்கூடாது நண்பனின் தெரிவு எனக்கு கொஞ்சம் பொறாமையாக தான் இருந்திச்சு.

" மச்சி ஆள் சூப்பர்.... இண்டைக்கு எப்பிடியும் முடிவை கேக்குறம்"

மெதுவாக பின் தொடர்ந்தோம்.

அகல்யாவின் நண்பி எங்களை திரும்பி பார்த்துவிட்டு அகல்யாவின் காதில் ஏதோ குசுகுசுத்தாள்.

நாங்கள் பின் தொடர்வது அகல்யாவுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது.

"மச்சி வீடு தெரியுமாடா?"

" வாற ஒழுங்கைக்குள்ள தான் வீடு... பின்னால விட்டு மெதுவா மறி. நான் லவ் லெட்டரை அவளிட்ட குடுக்கிறன்"

ஒழுங்கைக்குள் அகல்யா மட்டும் திரும்பினாள்.

சைக்கிளை வேகமாக மிதித்து முன்னுக்கு முந்தி (over take) வழி மறித்து சைக்கிளை நிறுத்தினேன்.

அகல்யா இதை எதிர்பார்க்கவில்லை. லேடீஸ் சைக்கிள் எண்டதால சடாரென காலை ஊண்டி நிப்பாட்டினாள்.

நண்பன் இறங்கி நேரே போய் என்ன சொன்னானோ தெரியவில்லை... கடிதத்தை நீட்டினான்.

அகல்யா குனிந்த தலை நிமிராமல் ...கடிதத்தை வாங்கவேயில்லை...

இவன் கெஞ்சிக்கொண்டே நிண்டான்.

எனக்கு கடுப்பாகி " டேய் மச்சி...." என மெதுவாக கூப்பிட்டென்.

நான் கடுப்பாகவும் பயப்பிடவும் முக்கிய காரணம்.... அது நோ துறு ஒழுங்கை....!!!!

இதுகள் இரண்டும் இழுபறிப்படவும் அகல்யாவின் வீட்டு படலை திறந்து "மாமி" (அகல்யாவின் அம்மா) வெளிய வரவும் .....கணக்கா கையும் களவுமா மாட்டுப்பட்டம்.

சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடவும் வழியில்லை....
ஏனெண்டா அது நோ துறு ஒழுங்கை...!!!
(அந்த நேரம் ஒழுங்கை வாசலில "No through Road" எண்டு போட்டிருந்தா நான் சைக்கிளை ஒழுங்கைக்குள்ள விட்டிருக்கவே மாட்டன்)

அகல்யாவின் தாயை கண்டதும் நண்பன் ஓடி வந்து சைக்கிளில் ஏறினான்.

களத்தில் ...(ஒழுங்கைக்குள்)
அகல்யா
அகல்யாவின் அம்மா...( ஆட்டுக்கு குழை பிடுங்கப்போகும் கொக்கத்தடியோடு)
நான்
நண்பன்

கொக்கத்தடியால் சைக்கிளை மறித்த அகல்யாவின் அம்மா...

மாமிக்கு நடந்த விசயங்கள் எல்லாம் விளங்கிட்டுது.

"அக்கா தங்கச்சியோட பிறக்கயில்லையோ நீங்கள்....."
எண்டு ஆரம்பித்து...
"கொக்கத்தடியால அறுத்துப்போடுவன்" வரை அகல்யாவின் அம்மாவின் ஏச்சு கொத்துக்குண்டுகளாய் எங்களை தாக்கியது.

நாங்கள் இரண்டு பேரும் ஆயுதங்கள் இல்லாத நிராயுத பாணிகளாக மெளனமாக நிண்டம்.

இதில என்ன பம்பல் எண்டா மாமிக்கு இதில ஆர் மருமோன் எண்ட குழப்பம் வேற...!!!
ஏனெண்டா என்ர முகத்தை பாத்தும் ஏச்சு விழுந்திச்சு.

"இந்தப்பக்கம் இனிமேல் உங்களை கண்டால்... பெரிய பிரச்சினை வரும்" எண்ட முடிவுரையோடு மாமி எங்களை போகவிட்டா.

இதுவரைக்கும் எந்த ரியாக்சனும் காட்டாமல் பேசாமல் நிண்டாள் அகல்யா.

நண்பன் குனிந்த தலை நிமிராமல் "மச்சி சைக்கிளை எடுடா" என ஈனக்குரலில் சொன்னான்.

தப்பினால்க்காணும் என ஒழுங்கையை விட்டு ரண்டுபேரும் ஓடித்தப்பினம்.

மாலுசந்தி தாண்டும் வரை இரண்டு பேரும் கதைக்கவேயில்லை.
அவனுக்கு ஒண்டு எண்டால் எனக்கும் தானே அவமானம்...துன்பம்...கவலை.
நண்பேண்டா.....

" மச்சி டேய் விடு விடு ஜோசிக்காத... அரம்பத்தில உப்பிடித்தான்.. போக போக எல்லாம் சரிவரும்"
நண்பனின் மனதை தேற்றினேன்.

" மச்சி ... அருந்தப்பு ... லவ்லெட்டர் மட்டும் மனிசியின்ர கையில கிடைச்சிருந்தால்...
கிழிஞ்சிருக்கும் எங்கட நிலை" எண்டன் நான்.

" மச்சான்......நான் கடிதத்தை அவளின்ர கூடையில போட்டிட்டு வந்திட்டன்ரா..."

இங்கதான் கிளைமாக்ஸ் இருக்கு.

"அடப்பாவி... வசமா மாட்டினம் மச்சான்..."

அடுத்த கிழமை..!!!!
நான் நண்பனுக்காய் எழுதிய "காதல் கடிதம்" கிடைக்கக்கூடாத ஒரு ஆளின் கையில் கிடைத்துவிட்டது.

யார் அது?
எப்பிடிச்சமாளித்தம்?
அகல்யா நண்பனுக்கு கிடைத்தாளா?

கடிதம் அகல்யாவின் சைக்கிள் கூடைக்குள் போட்டாச்சு.

நாங்கள் நினைச்சம்...

1. அவள் அதை வாசிச்சு விட்டு முடிவு சொல்லுவாள்

2.வாசிச்சுவிட்டு கிழிச்சு எறிஞ்சிருப்பாள்

3.மாமியின்ர கையில அம்பிட்டிருக்கும்

இந்த மூண்டில ஒண்டுதான் நடந்திருக்கும் எண்டு நினைச்சம். ஆனால் நாங்கள் நினைக்காத நாலாவது தெரிவு தான் நடந்திச்சுது tongue emoticon

பொம்பிளைப்பிள்ளைகளின் மனசை புரிஞ்சுகொள்ளவே முடியாதுடா கதிர்காம கந்தா!!!

கடிதம் குடுத்து இரண்டாம் நாள்...

"மச்சான் ஒருக்கா வாறியா ... அவளின்ர ரியாக்சன் (reaction)என்னண்டு பாப்பம்" என கேட்டான் நண்பன்.

" மச்சான் மாமி சொன்னது உனக்கு நினைவு இல்லையோ... கொக்கத்தடி.... அறுத்துப்போடுவன்"

எனக்கு மாமியின் கோபமான ஏச்சும் முகமும் மறக்கவேமுடியவில்லை.

"எல்லா அம்மாவும் உப்பிடித்தான் சொல்லுவினம்... மச்சி நான் அவளை ஒருக்கா திரும்ப பாக்கவேணும்டா"

நண்பன் விடாப்பிடியாக கெஞ்சினான்.
(திருவிழாவில் மணிக்கடையில் அம்மம்மா குழல் வாங்கித்தா என கெஞ்சும் சின்னப்பிள்ளைபோல... wink emoticon )

காதல் பித்தினதும்( love crazy) வயசுக்கோளாறினதும்(teenage) உச்சத்தில் இருந்தான் நண்பன்.

என்ன செய்ய ? கூடப்படிச்ச, பழகின குற்றத்துக்காய் மீண்டும் அவனை சைக்கிளில் ஏற்றி பருத்துறையில் இருந்து நெல்லியடிக்கு சைக்கிளை மிதித்தேன்.
எள்ளோட சேர்ந்த எலிப்புழுக்கை நான்.... wink emoticon

"மச்சி .. எனக்கு லவ்லி கூல் பாறில ஸ்பெசல் ஐஸ்கிறீமும் ரோல்சும் வாங்கித்தருவியா?'"

சைக்கிள் ஓடிப்போறதுக்கு கூலி எனக்கு.

"மச்சி எல்லாம் முடியட்டும் வாங்கித்தாறன்"

" அடே நாதாரி உன்ர குணம் எனக்குத்தெரியும் .... எல்லாம் முடிய நாளைக்கு வாங்கித்தாறன் எண்டுவாய்... எனக்கு இப்ப வாங்கித்தா"

ஏற்கனவே உப்பிடி என்னை கனதரம் ஏமாத்தியிருக்கிறான் என் ஆருயிர் நண்பன்.

விடாப்பிடியாக லவ்லி கூல் பாருக்குள் சைக்கிளை விட்டு "ஸ்பெசல் ஐஸ்கிறீமும் ரோல்சும்" வயித்துக்குள்ள இறக்கி ஒரு பெரிய ஏவறையோடு சைக்கிளை ரியூசனுக்கு விட்டேன்.

இந்த முறை எங்கட செக்பொயின்ரை (check point)வேற இடத்தில அடிச்சம்.

எப்பிடியும் அகல்யா எங்கட செக் பொயின்ரை தாண்டித்தான் போகவேணும்.

எங்களை தாண்டி போகும் போது..

1.அகல்யா என் நண்பனை பார்த்து சிரிக்கலாம்

(சிரிச்சா எங்கட நடவடிக்கை வெற்றி)

2.அகல்யா என் நண்பனை பார்த்து முறைக்கலாம்

(முறைச்சா எங்கட நடவைக்கை தோல்வி)

3.எங்களை பாத்தும் பாக்காத மாதிரி போகலாம்

(எங்கட நடவைக்கையை மேலும் தொடராலாம்)

ரியூசன் முடிய அகல்யாவும் வந்தாள். அவள் சிநேகிதப்பெட்டைகளும் வந்தார்கள்.
அகல்யா நடுவில்...
இரு பக்கதிலும் சமாந்தரமாக (parallel) அவள் சிநேகிதிகள்....

நண்பன் குனிந்த தலை நிமிராமல்...
" டேய் மச்சி நிமிந்து அவளை பாரடா..."

" மச்சி நீ பாத்து சொல்லு என்ன செய்யுறாள் எண்டு?"

இந்த முறை நான் வடிவாக பார்த்தேன் அகல்யாவை.....

நான் மேலே சொன்ன மூண்டு விசயமும் நடக்கவில்லை.
மாறாக நாலாவது ஒரு விசயம் நடந்தது.

எங்களை கடக்கும் போது அகல்யாவின் சிநேகிதப்பெட்டைகள் "கிளுக்..." என வாய்பொத்தி ஏளனமாக எங்களைப்பாத்து சிரித்தார்கள்.

அகல்யாவும் சேர்ந்து சிரித்தாள். ஆனால் நண்பனை திரும்பி பாக்கவேயில்லை.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கைவேந்தன் எண்ட மாதிரி அவமானத்தால் அசிங்கப்பட்டோம்.

எனக்கு "வாயில.." நல்லா வந்துது. என்ன இருந்தாலும் நண்பனின் ஆள் எண்டதாலையும் மாமியின் ஏச்சு ஞாபகத்துக்கு வந்ததாலையும் நாவை அடக்கிக்கொண்டேன்.

ஒப்பிரேசன் அகல்யா தோல்வியில முடிஞ்சுது எண்டு மட்டும் எனக்கு தெளிவா விளங்கிட்டுது cry emoticon

சைக்கிள் மீண்டும் நண்பனை ஏத்தியவாறு பருத்துறை நோக்கி பயணமானது.

அட முக்கியமான விசயம் ஒண்டை மறந்திட்டன்.
முதல் தரம் கடிதம் குடுக்க வரும் போது சலூனுக்கு போய் பவுடர் பூசி தலை இழுத்து ரிப் ரொப்பா (tip top) வந்த நண்பன் இந்த முறை வரும் போது அதை செய்யவேயில்லை.

எனக்கு வந்ததுக்கு "ஸ்பெசல் ஐஸ்கிறீமும் ரோல்சும் தான் " மிச்சம்.

என்னடா ......இவன் கதையை இழுக்கிறான் எண்டு கனபேர் புறுபுறுக்கிறது எனக்கு கேக்குது. விசயத்துக்கு வரன்.

இது நடந்து ஒரு கிழமையால நண்பனின் அம்மா என்னை பாக்கவேணும் என இன்னொரு பொடியன் ஊடாக ”அழைப்பாணை” வந்தது.

எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு நண்பனிடம் கேட்டன்.
" மச்சி ஏன் கொம்மா என்னை வரச்சொன்னவா?"

"தெரிய இல்லை மச்சி என்னிட்ட ஒண்டும் சொல்லயில்லை... நீ ஒருக்கா வா"
சிரிக்காமல் சீரியஸ்சா(serious) பொய் சொன்னான் நண்பன்.

நானும் நம்பிப் போனன்.
நண்பனின் அம்மாவின் கையில் நான் நண்பனுக்காக எழுதிய காதல் கடிதம்!!!
மாட்டுறதெண்டால் இப்பிடித்தானா மாடுப்படவேணும்.
எப்பிடி இந்த கடிதம் இவாட கையில????
பிறகு விசாரிச்சுப்பாத்ததில தான் தெரிஞ்சுது அகல்யாவின் வீட்டுக்கு பக்கத்தில் எங்கட பொடியன் ஒருத்தன்ர வீடு. அவனூடாக கடிதம் என் நண்பனின் அம்மாவின் கையில் கிடைத்திருக்கிறது.
(அவனுக்கும் அகல்யாவில ஒரு கண் (crush)
இருந்தது பிறகுதான் தெரியும் எங்களுக்கு...)

எல்லாக்கதையிலும் ஒரு எட்டப்பன்.
எங்கட கதையிலும் ஒரு எட்டப்பன்!!!

"விமலேஸ்வரா உன்னை நல்லா படிக்கிற பொடியன் எண்டுதான் நினைச்சன். அதனாலதான் என்ர பிள்ளையை உன்னோட சேர விட்டன், நீயும் கெட்டுப்போறது காணாமல் என்ர பிள்ளையையும் கெடுக்கிறியோ??" நண்பனின் அம்மா கோபத்தோட ஏசினா.

"நீ கடிதம் குடுக்கிறது எண்டா தனியா போயிருக்கலாம் தானே.. எதுக்கு என்ர பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போனனீர்??"

எனக்கு விளங்கிட்டுது ....
கதை தலை கீழாக போகுது எண்டு.
நான் முழி பிதுங்க அருகில் நிண்ட என் "ஆருயிர்" நண்பனை திரும்பி பார்த்தேன்.

நாதாரி...
சனியன் பிடிப்பான்...
தனக்கு ஒன்டும் தெரியாத மாதிரி கல்லுளி மங்கன் மாதிரி நிண்டான் unsure emoticon

" டேய் மச்சி..." ஈனக்குரலில் அவனை சுரண்டினேன்.
அவன் என் முகத்தை அழுவாரப்போல பார்த்தான்.
நண்பேண்டா....
நான் ஒண்டும் சொல்லாமல் நிண்டன்.

"விமலேஸ்வரா இந்த கடிதத்தை உங்கட அப்பா அம்மாட்ட குடுக்கவோ?"
"ஐயோ வேண்டாம் ... அம்மா.." இது நான் cry emoticon

"சரி என்னிட்ட இருக்கட்டும் இந்த கடிதம்... இனிமேலும் இப்பிடி ஏதும் பிரச்சினை எண்டா கட்டாயம் இந்த கடிதம் உங்கட வீட்ட வரும்" நண்பனின் அம்மா கோபத்தோடு சொன்னா.

நிற்க...
அது எப்பிடி நான் தான் கடிதம் எழுதினன் எழுதினன் எண்டு நண்பனின் அம்மாவுக்கு தெரியும் எண்டு நினைக்கிறியளோ???
நல்ல சந்தேகம்.....!!
முப்பது பேரின்ர கையெழுத்திலையும் என்ர கையெழுத்தை அவா சரியா கண்டுபிடிப்பா..!!!
ரியூசனுக்கு கட் அடிச்சுப்போட்டு ஒற்றைகளை எண்ணி இடம் விட்டு என்ர கொப்பியை வாங்கிக்கொண்டு போய் எழுதும் போது நண்பனின் அம்மா வடிவா கவனிச்சு இருக்கிறா.
அதைவிட என்ர கையெழுத்து அவாவுக்கு என்ர சின்ன வயசில இருந்தே தெரியும்.(எப்பிடி எண்டு கேக்கப்படாது...wink emoticon!!!)

நான் ஒரு விசரன்... கொஞ்சம் கையெழுத்தை மாத்தி எழுதியிக்கலாம்.
அல்லது கடிதத்தின்ர கடைசியில அவன்ர பெயரை எழுதியிருக்கவேணும்.

கள்ளப்பயல் .....!!!
பெயரை எழுதாமல் கீழ இதயமும் ரோசாப்பூவும் கீறி விடு எண்டு சொல்லும்போதே என்ர மரமண்டைக்கு உறைச்சு இருக்கவேணும்.
(O/L இல விஞ்ஞான பாடத்துக்கு D எடுத்து என்ன பிரயோசனம்???”) unsure emoticon

இந்த துன்பியல் நிகழ்வு நடந்து 15 வருசத்துக்கு மேல...
இண்டுவரை நண்பனின் அம்மா நினைச்சுக்கொண்டு இருக்கிறா தன்ர பிள்ளை “பால்குடி” எண்டு...
அதுதான் என்ர பெருங்கவலை...

முக்கிய குறிப்பு:

1.போனகிழமை கதையை வாசிச்சுபோட்டு லண்டன்,கனடா,நியுசிலாந்து , சிறிலங்காவில இருந்து எங்களோட படிச்ச பிள்ளைகள் என்னில ஒரே அன்புமழை.
“தம்பு...(இது என்னோட இன்னொரு பெயர்) நீ பழைய நினைவுகளை எல்லாம் கிழறுறாய்... எழுதடா இன்னும்”
கனபெட்டைகள் என்ர முகப்புத்தகத்தில நீண்ட காலமா இருக்கிறாகள். பிரச்சினை என்னண்டா இப்பதான் ஆக்கள் யாரெண்டு கண்டுபிடிச்சம். profile படத்தில தங்கட புருசன் மாரின் படத்தையும் பிள்ளைகளின்ர படத்தையும் திரிசா, நயந்தாரான்ர படத்தையும் போட்டா நாங்கள் எப்பிடி கண்டு பிடிக்கிறது wink emoticon

2.எங்களை விட வயது கூடின அண்ணை ஒருத்தர் போன் அடிச்சு சொன்னார்.
“ தம்பி நீ எங்கட பழைய காதல் கதைகளையெல்லாம் கிண்டுறாய்.
வீணா நான் அவுஸ்திரேலியாவில இருந்து கனடாவுக்கு ரிக்கற் போட வேண்டி வரப்போகுது”
பாவம் அந்த ஆளின்ர குடும்பத்தில கல்லெறிஞ்சு போட்டனோ எண்ட குற்ற உணர்வில (guilty) அண்னைக்கு அறிவுரை சொல்லி ஒரு மாதிரி ரிக்கற்றை ரத்துச்செய்ய(cancel) வைச்சுப்போட்டன்.

3.போன வெள்ளி வேலைக்கு போன என்ர மனிசி வேலை இடைவேளை (Break time) கோல் அடிச்சுது.
நானும் பின்ன என்னடா மத்தியானம் நான் சமைச்சு வைச்ச கறியில உப்பேதும் கூடிப்போச்சோ எண்டு பதறிப்போய் கேட்டன்.
“என்னப்பா என்ன பிரச்சினை..???”

“ இல்லை பேஸ்புக்கில தான் நிக்கிறன். ஏதோ கதை எழுதப்போறன் எண்டு பீற்றர் விட்டியள். எங்க இன்னும் காணயில்லை..??”இது என்ர மனிசி.

அப்பதான் தெரிஞ்சுது கனபேர் ஆர்வத்தில தான் இருக்கினம் எண்டு..!!!! wink emoticon

-‪#‎தமிழ்ப்பொடியன்‬-

 
நாங்கள் யாழ்ப்பாணம்.'s photo.

 

#‎தமிழ்ப்பொடியன்‬-

நன்றி முகனூல்;

நாங்கள் யாழ்ப்பாணம்.
  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்...,கண்ணில நீர் தளும்புது...., அங்கலாய்ப்பா , அடிபாடா , ஆணந்தமா புரியேல்ல...!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

ம்...ம்...,கண்ணில நீர் தளும்புது...., அங்கலாய்ப்பா , அடிபாடா , ஆணந்தமா புரியேல்ல...!

அது ஒரு கனாக்காலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயது வட்டுக்கை போனாலும் கனாக்காலம்தான்

40 minutes ago, Nathamuni said:

அது ஒரு கனாக்காலம்

வயது வட்டுக்கை போனாலும் கனாக்காலம்தான் :grin:

10 minutes ago, குமாரசாமி said:

வயது வட்டுக்கை போனாலும் கனாக்காலம்தான் :grin:

குமாரசாமி அண்ணை 
சும்மா வயதைப் பற்றி மட்டும் கதைக்காதேங்கோ. 
அப்புறம் நிர்வாகம் என்னைத் தடை செய்தாலும் பரவாயில்லையென்று (!@#$%^&*(+)_=) பேசிப்போடுவன். 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

வயது வட்டுக்கை போனாலும் கனாக்காலம்தான் :grin:

பகிடி விடாதீங்கோ, இண்டைக்கும் கடிதம் போகேட்டுகில கிடக்குது.

அடுத்த கிழமை யாழ்ப்பாணம் போறன். வாறியளே. ரோல்சும், ஐஸ் கிரீமும் கரண்டீ.....  (சைக்கிள் நீங்கள் உலக்க வேணும் கண்டியளோ) :love:

(ஆள் பழசு இல்லை. புதுசு தான் தேடிப் பிடிக்க வேணும்,)

Edited by Nathamuni

கதை நல்லாய் தான் இருக்கு.. இணைப்புக்கு நன்றி!!

1 hour ago, suvy said:

ம்...ம்...,கண்ணில நீர் தளும்புது...., அங்கலாய்ப்பா , அடிபாடா , ஆணந்தமா புரியேல்ல...!

பழைய ஞாபகம் வந்திட்டுதா???:cool:

7 minutes ago, மீனா said:

கதை நல்லாய் தான் இருக்கு.. இணைப்புக்கு நன்றி!!

பழைய ஞாபகம் வந்திட்டுதா???:cool:

சில பகிர்வுகளை வாசிக்கும் போது நம்மை அறியாமலே எம்மை அதில் பொருத்திப் பார்த்து விடுகின்றோம் - இளையராஜாவின் பாடல்கள் போன்று.

 

ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னிட்டையும் இப்படி ஒரு விதமான அனுபவம் இருக்குது, கொழும்பான்!

அதை எழுதினால் தமிழ்ப்பொடியனே அழுதிடுவான்!

எல்லாரும் சொல்லிறது போல அது ஒரு 'கனாக்காலம்' என்று மட்டுமே சொல்லக் கூடியதாக உள்ளது!

நன்றி.. !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.