Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thillai01.jpg

 தாயை எண்ணிஎண்ணி நந்தாவுக்குத் தலைவலி வந்தது தான் மிச்சம். எதுவித முடிவையும் எடுக்க முடியவில்லை. இத்தனை நாள் எத்தனை துன்பத்தை அனுபவித்தாகிவிட்டது. இருந்தும் மனதில் முடிவெடுக்க முடியாத பயம் சூழ்ந்து தூக்கம் இழக்க வைத்ததுதான் மிச்சம்.
நான் ஏன் மற்றவர்களுக்குப் பயப்படுகிறேன்? அவர்கள் என்ன கூறினால் என்ன. எனக்கு ஒன்று என்றால் அவர்களா ஓடி வரப் போகிறார்கள். எனக்கோ என் குடும்பத்துக்கோ அதனால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று தெரிந்த பின்னாலும் என்ன தயக்கம் என தன்னைத்தானே கேட்டும் பயனில்லை. இத்தனை நாள் மற்றவர்கள் மனதில் என்னைப் பற்றி இருந்த பிம்பம் அழிந்துவிடுமே என்னும் எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது மனதை அங்குமிங்கும் அலைக்கழித்தும் விடை தான் கிடைக்கவில்லை.
 
ஏற்கனவே அண்ணனும் அக்காவும் தீர்மானமாகச் சொல்லிவிட்டனர் தான். "நாங்கள் அம்மாவுடன் இருப்பதில்லை. வெளிநாட்டில் இருந்துகொண்டு அடிக்கடி வந்து போய்க்கொண்டும் இருக்கேலாது. உன் மனதுக்குப் பட்டதைச் செய்" என்று கூறியும் மனம் ஒரு நிலைக்கு வர முடியாமல் அல்லாடிக்கொண்டுதான் இருக்கிறது. சரி இப்பிடியே யோசிச்சுக்கொண்டு இருந்தால் ஒரு வேலையும் நடக்காது என எண்ணியவளாய் சமைப்பதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தாள் நந்தா.
 
நான்கு அறைகளைக் கொண்ட பெரிய வீடு. ஒரு அறையைத் தாய்க்கு ஒதுக்கி காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறுமணிவரை தாயைப் பராமரிப்பதற்கும் ஒரு ஆளை ஏற்பாடு செய்து வசதியாகத்தான் தாயை வைத்திருக்கிறாள் நந்தா. பார்ப்பவர்கள் "பிறந்தால் இவளுக்கு எல்லோ தாயாகப் பிறக்க வேண்டும்" என மனதுள் நினைக்குமளவு தாயை வைத்திருக்கிறாள் தான். இப்ப இரண்டு மாதங்களாகத்தான் எல்லாம் தலை கீழாய் போய்..... பெருமூச்சு ஒன்று தான் அவளிடம் இருந்து கிளம்பியது.
 
********************************
 
அவளின் ஆறு வயதில் தந்தை இறந்துவிட, தாய் பிள்ளைகளைப் பற்றியே கவலை கொள்ளாது கணவனின் பிரிவை எண்ணியே அழுதபடி இருக்க, பதினாறு வயதான மகள் வேறு வழியின்றிக் குடும்பப் பொறுப்பைச் சுமக்கவேண்டி ஏலெவலுடன் படிப்பை நிறுத்திவிட்டு சமையல் வேலை தொடக்கம் தம்பி தங்கையின் படிப்புத் தொடக்கம் வீட்டு வேலையும்  பாத்திராவிட்டால் அன்று என்ன நடந்திருக்கும் என்று எண்ணியும் பார்க்க தமக்கையை நினைத்து மனம் சிலிர்த்தது. கமலத்தின் சகோதரர்கள் பெண் ஆண் எனப் பலர் இருந்தாலும் எத்தனை நாளுக்கு என்று அவர்களும் அக்கா குடும்பத்தைப் பார்ப்பார்கள்.
 
அவர்கள் இரக்கப்பட்டுக் கொடுப்பதை வாங்கவே தமக்கை வேணிக்கு மனம் இருக்காது. ஆனாலும் வேறு வழியின்றி வாங்கியவள், பதினெட்டு வயதில் நெசவடிக்கப் போய்விட்டாள். அதில் வரும் வருமானம் குடும்பத்தைக் காக்கப் போதுமானதாக இருந்தது. வீட்டில் ஒரு ஆண் இருந்தால் அந்தக் குடும்பத்துக்குக் கிடைக்கும் மரியாதையே தனிதான். தலைவன் இல்லை என்றால் எதோ தமது சொத்தைக் கேட்டதுபோல உறவுகள் நடந்து கொண்டதை இப்ப நினைத்தாலும் எதோ செய்தது நந்தாவுக்கு.

மகள் வேலைக்குச் செல்லத் தொடங்க தாய் வேறு வழியின்றி சமைத்தார் தான் ஆயினும் காலையில் வீடு கூட்டி வெளி முற்றம் கூட்டி சமையல் சாமான்கள் எல்லாம் வாங்கி .... ஒரு ஆணோ அல்லது பெற்றோரோ செய்யவேண்டிய  வேலைகள் எல்லாவரையுமே எந்த வித முகச் சுளிப்பும் இல்லாமல் செய்த தமக்கையை நினைக்க இப்பவும் நந்தாவுக்கு கண்ணீர் வந்தது. இப்படியும் ஒரு தாய் பொறுப்பு இல்லாமல் இருக்க முடியுமா என்று அவள் எத்தனையோ தடவை எண்ணிப்பார்த்தும் விடை கிடைக்கவில்லை.

தமையன் வளர்ந்து இருபது வயதானதும் காணியை ஈடு வைத்து வெளிநாடு அனுப்பியிராவிட்டால் இன்றும் அப்படியே தான் இருந்திருப்போம் என்று அவள் எண்ணினாள். தமையன் வந்து சிறு வயதிலேயே ஒரு பாக்டரியில் வேலை செய்து காசு அனுப்பத்தான் இவர்கள் கொஞ்சம் நிமிர்ந்தது. பாவம் அண்ணன் அவனுக்கும் படிப்புப் பெரிதாக ஏறவில்லை என எண்ணிய நந்தாவுக்கு தானும் கூடப் படிக்காமல் விளையாட்டுப் பிள்ளையாகத் திரிந்தது நினைவில் வரச் சிரிப்பு வந்தது.
 
ஓலெவல் படித்துக்கொண்டிருக்கும் போதே தமையன் தமக்கையையும் இவளையும் யேர்மனிக்குக் கூப்பிட இருவரும் எவ்வளவு ஆவலுடன் வந்தார்கள். தமக்கைக்கும் திருமணம் நடந்து இவளும் திருமணம் செய்தபின்பே தமையன் திருமணம் செய்து, இன்று எதோ அண்ணா வசதியாக வாழுகிறான் என எண்ணியவள் மீண்டும் தாயை நினைத்துப் பார்த்தாள்.
 
தாயைத் தனியே விட்டுவிட்டு வந்தது மூவருக்கும் கவலை தான் எனினும் சுற்றிவரத் தாயின் சகோதரர்கள் இருப்பது ஆறுதல் தந்தது. ஆனாலும் தாய் தானே சமைத்து உண்ணாது தங்கையின்  வீட்டிலிருந்து வரும் உணவை உண்டு காலம் கழிக்க, கேட்ட இவளுக்குக் கோபம் தான் வந்தது. "என்னம்மா நீங்கள். சித்தி நான்கு பிள்ளைகளுடன் உங்களுக்கும் சேர்த்துச் சமைக்கிறதோ? ஒரு கறி என்றாலும் நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கோ" என்று சொல்லி சித்தியாரிடமும் "இனிமேல் அவவுக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டாம். அவவே செய்யட்டும்" என்று கடுமையாகச் சொன்ன பிறகு சித்தி சமைத்துக் கொடுப்பதை நிறுத்திவிட்டார் தான் ஆயினும் கமலம் பெரிதாக மாறவில்லை. பலநாள் சமைத்தாலும் சிலநாள் சமைக்கும் பஞ்சியில் பட்டினி கிடந்தது நந்தாவின் காதுகளுக்கு வர கோபம் தான் வந்தது. அதன் பின் தாயை நினைத்து இரக்கமும் வர ஒருவாறு தாயை தன்னுடனேயே கூப்பிட்டு வைத்து, இப்ப இருபத்தி ஐந்து ஆண்டுகளும் முடிந்துவிட்டன.
 
இந்த இருபத்தைந்து ஆண்டுகளிலும் தாய் சொகுசாக இருந்து உண்டகாலம் தான் அதிகமே தவிர இவளுக்குச் சமைத்துக் கொடுத்ததை விரல் விட்டு எண்ணி விடலாம்.
 
நான் தான் அம்மாவைப் பழுதாக்கிப் போட்டானோ என்று அடிக்கடி இவளுள்ளே கேள்வி எழுவதுதான். தாய் எல்லோ தானாக உதவ முன் வரவேண்டும். இவளாக எப்படிச் சமையுங்கோ என்று கூறுவது. தாய் இவள் வேலைக்குப் போகும்போதுதான் நித்திரையால் எழும்பிவந்து வரவேற்பறையில் தொலைக்காட்சியைப் போடுவார். இவள் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சென்று பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் பிள்ளைகளுடன் வரும்போது தான்  தாய் மதிய உணவைச் சாப்பிட ஆரம்பிப்பார்.
 
இவளுக்குப் பார்க்க எரிச்சல் வரும். என்னம்மா நேரத்துக்குச் சாப்பிடுவதற்கு என்ன? நீங்கள் என்ன குழந்தையோ என்று ஏசிய பின் இரண்டு நாட்கள் நேரத்துக்குச் சாப்பாடு நடக்கும். பிறகும் வழமையான கதைதான். கொஞ்சநேரம் வெளியே நடந்துவிட்டு வாங்கோ அம்மா என்றாலும் பஞ்சி. எனக்கு விருப்பம் இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு இருப்பவரை என்ன செய்ய முடியும்.
 
என்றாலும் அம்மாவைத் திட்ட அவளுக்கு மனம் வருவதே இல்லை. எதோ என் பிள்ளைகளுடன் கதைத்துப் பேச வீட்டுக்கு ஒரு துணையாக அம்மா இருக்கிறார் தானே என்று மனதைச் சமாதானம் செய்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த இடத்துக்குமே விடுமுறைக்குச் சென்று வரமுடியாமல் தானும் பிள்ளைகளும் படும்பாடு கொஞ்ச நஞ்சமா என எண்ணியவள், அதற்கு முதலும் போகுமிடங்கள் எல்லாவற்றுக்கும் தாயும் அடம்பிடித்து வந்ததும், வந்த இடங்களில் எல்லாம் சமாளித்துப் போகாது தாய்க்கு என்றே தான் பலவற்றைத் தியாகம் செய்ததும், தாய்க்கு விசா கிடைக்காததால் போகாமல் நின்றதுமாக நினைக்கும் போது மனம் சூடாவதை தடுக்க முடியவில்லை நந்தாவால்.
 
இப்ப இரண்டு ஆண்டுகளாக வடிவாக நடக்க முடியாமல் பெரும்பாலும் படுத்துக் கிடக்கவே ஆசைப்பட்ட தாயைப் பலவந்தமாக நடத்தி எழுப்பி நடக்க வைத்தது எல்லாம் தாய் படுத்த படுக்கையாகிவிடக் கூடாது என்பதனால் தான். ஆனாலும் வயோதிகத்தையும் அதன் பால் ஏற்படும் மாற்றங்களையும் எவராலுமே தள்ளிப் போட முடியாதே.
 
சமையல் முடித்து தாய்க்கு உறைப்புப் போடாமல் கஞ்சி செய்து குசினியை ஒதுக்கியவள், ரொயிலட் பாத்ரூமை கழுவ ஆரம்பித்தாள். தாயின் குவிந்து கிடந்த ஆடைகளை தோய்ப்பதர்க்குப் போட்டு, நப்பிகள் சேர்ந்த பையையும்கொண்டுபோய் வெளியே உள்ள குப்பை வாளியுள் போட்ட பின்பே அவளால் நின்மதியாகக் குளிக்க முடிந்தது.
 
இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு ஆறு நப்பீஸ் கட்ட வேண்டும் தாய்க்கு. அப்படிக் கட்டினாலும் எப்படித்தான் படுக்கையும் நனைந்து போகிறதோ தெரியவில்லை. பகலில் மட்டும் தான் அம்மாவைப் பார்க்கும் பெண் நிற்பது. இரவில் அந்தப் பெண்ணை நிறுத்திவைக்க முடியாது. அதனால் தானே தான் இரவில் அலாம் வைத்து எழுந்து மாற்றுவது. அதைக்கூட மனம் கோணாமல் நந்தா செய்ததுக்கு ஒரு சுயநலமான காரணமும் இருந்ததுதான். நான் செய்வதைப் பார்த்தாவது பிள்ளைகள் எனக்குச் செய்வார்களே என்பது தான். ஆனால் இப்ப அவளுக்கே முடியவில்லை. காலையிலும் நப்பி மாற்றிவிட்டுத்தான் அவள் செல்வது.அதை மாற்றிய கையுடன் தேநீர் அருந்தவே ஒரு மாதிரி இருக்கும். இதில் எங்கே சாப்பிட மனம் வரும். டயட் செய்தால் கூட இத்தனை நிறை குறைக்க முடியாது. அவள் நிறை இழந்து பொலிவிழந்து நோயாளியைப்போல் அவளுக்கே தன்னைப் பார்க்க முடியாமல் இருந்தது.
 
கடந்த கிழமை தமக்கை வந்து நின்று தாய்க்கு உள்ள வேலை எல்லாம் செய்ததில் இவளுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதுதான். அதுக்காக வேலை குடும்பம் எல்லாம் விட்டுவிட்டு தமக்கை இங்கு வரவாமுடியும் ? இரண்டு மாதங்காளாகவே நினைவுகள் தப்பி யாரையும் அடையாளம் தெரியாததாக தாய் ஆனபின், அடி மனதில் தாய்க்கு எதுவும் ஆனாலும் என்று ஒரு பயம் ஓடிக்கொண்டே இருந்தது.போன வாரம் தான் தாய் இரவில் கத்த ஆரம்பித்ததும்.  அய்யோ விழுந்து போனன், ஓடிவா நந்தா என்று கத்திய கத்தில் இவள் துடிக்கப் பதைக்க எழுந்து ஓட, மற்றவர்களும் எழுந்து  ஓடி வந்து பார்த்தபோது தாய் தொடர்ந்தும் கட்டிலில் இருந்து கத்திக்கொண்டே இருந்தார். எழும்பி நடக்க முடியாதவருக்குக் கத்த மட்டும் எங்கிருந்து பலம் வருகிறது என்று நந்தாவுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

தொடர்ந்து இப்போதெல்லாம் இரவுகளில் தாயின் அலறலால் நான்குபேரின் தூக்கம் கெடுவதுடன் அயலட்டையிலும் என்ன நினைக்கிறார்களோ என்று யோசனையாக இருந்தது. இரக்கமும் ஒரு அளவுக்குத்தான் இருக்க வேணும். அம்மா வாழ்ந்து முடிச்சிட்டா. இனி அவவுக்காவோ அல்லது மற்றவர்களுக்காகவோ பார்க்க முடியாது. நாளைக்கே அந்த முதியோர் இல்லம் சென்று விசாரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவளாய் நின்மதியாகத் தூங்கிப்போனாள் நந்தா.

********************************************

காலையில் எல்லோருமே ஒருவரை ஒருவர் பார்ப்பதைத் தவிர்த்து எதோ குற்றம் செய்தவர்கள் போல் திரிய, நந்தா தாயின் உடைகளையும் அவர்கள் மேல்மிச்சமாகச் சொல்லியிருந்தவற்றையும் சூட்கேசில் அடுக்கிக் கொண்டு இருந்தாள். அவளுக்கே கூட வாய்விட்டு அழவேண்டும் போல் இருந்தது. ஆனாலும் தான் உடைந்தால் மற்றவர்களும் மனம் மாறிவிடக்கூடும் என எண்ணி அழுகையை அடக்கியபடி ஒன்றும் நடக்காதவள் போல் அடுக்கிய சூட்கேசைப் பூட்டினாள்.

தாயைத் தூக்கிச் சென்று குளிப்பாட்டி ஆடை அணிவித்துக் கீழே கணவனும் மனைவியுமாகத் தூக்கி வந்து காரில் இருத்தியபின்னும் தாய் எந்தவித உணர்வும் அற்று விழித்துக்கொண்டு இருக்க இவளுக்குள் கேவல் எழுந்தது. நானும் இப்பிடித்தான் ஒருநாள் என்னும் நினைவே கசப்பாக மனதில் எழுந்தது.

அது ஒரு தமிழர்கள் நடத்தும் இல்லம் என்பதனால் கொஞ்சம் நின்மதியாகவும் இருந்தது. வீட்டிலிருந்து ஐந்து மைல்கள் தானே. ஒரு நாளைக்கு இரண்டுதடவைகள் வந்து தாயைப் பார்த்துவிடுப் போகலாம் என்று தன் மனதுக்குச் சமாதானம் சொன்னவள், கணவனுடன் சேர்ந்து தாயைத் தூக்கி தள்ளும் நாற்காலியில் இருத்தி கொண்டுபோய் அவர்களிடம் கொடுக்க, அவர்கள் தாயின் அறைக்கு அவரைக் கொண்டு செல்ல, சோர்ந்த மனதுடன் நந்தாவும் அவர்கள் பின்னே சென்றாள். விட்டால் மனைவி எங்கே அழுது விடுவாளோ என்ற எண்ணத்தில் கணவனும் மனைவியுடன் சேர்ந்து, தாய்க்காக ஒதுக்கப்பட்ட அறையில் அவரை விடும்வரை நின்று, தாயின் உடைகளையும் அவருக்குரிய கபேட்டில் அடுக்கி முடிய "நந்தா எங்க" என்று மீண்டும் மீண்டும் அவளிடமே கேட்கும் தாயின் கைகளைத் தடவி "நான் இங்கதான் நிக்கிறன் அம்மா" என்று இவள் சொல்லியும் மீண்டும் மீண்டும் கேட்கும் தாயை அணைத்தபடி விக்கிவிக்கி அழத் தொடங்கினாள் நந்தா. 

ஒருவாறு கணவன் அவளைத் தேற்றி அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வந்த பின்னும் நந்தாவின் அழுகை நிற்கவில்லை. தாயின்றி வீடே வெறுமையானது போல் இருக்க, அவசரப்பட்டுவிட்டேனோ என்ற எண்ணம் தோன்ற, அதைக் கணவனிடம் வாய்விட்டே கூறினாள்.

கொஞ்சநாளைக்கு அப்பிடித்தான் இருக்கும். போகப் போகப் பழகிவிடும். கவலைப்படாதையும் என்ற கணவனை ஆறுதலுடன் பார்த்தாள். அன்று இரவு தாயின் சத்தம் இல்லைத்தான் ஆனாலும் நந்தாவுக்குத் தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்ததில் காலை விடிந்ததுகூடத் தெரியவில்லை.

தொலைபேசிச் சத்தம் வந்ததுபோல் இருக்கப் புரண்டு படுத்தவளைக் கணவன்தான் விடிஞ்சிட்டுது நந்தா எழும்புங்கோ என எழுப்பினார். இவள் பல் தீட்டி முகம் கழுவிவிட்டு வந்தபின் தான் கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், இருண்டுபோய் இருந்த முகத்தைப் பார்த்து என்னப்பா என்றாள். "மாமி காலையில இறந்திட்டாவாம். இப்பதான் போன்செய்தவை" என்று கணவன் கூறி முடிக்கும் முன் "அய்யோ அம்மா நான் உங்களைச் சாக்காடிப் போட்டனே" என்று கூறியபடி தலையிலடித்து அழும் நந்தாவை, எது சொல்லியும் தேற்ற முடியாமல் தானும் குற்றவாளியானதான உணர்வுடன் பார்த்துக்கொண்டு நிற்கத்தான் கணவரால் முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வயதுக்கு மேல்

பெற்றமனம் கல்லாக மாறுவதும் வருகிறது...

இதுவும் கடந்து போகும்..

எனது மாமியாரின் கதை இது தான்....

நேரம் கிடைத்தால் எழுதலாம் என்றிருந்தேன்

நீங்களே பதிந்துவிட்டீர்கள்..

எந்தப் பெரிய கதையப்பா.... இரண்டாய் பிரித்துப் போட்டிருக்கலாம் ... பறுவாயில்லை :) ம்ம்......... சுமோ கதையை நகர்த்திய விதம் அருமை.... உண்மைக் கதை போலை இருக்கு.... தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி..... வாழ்த்துகள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விசுகு அண்ணா, மீனா

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா,அப்பா,உறவுகள்,பாசம் எல்லாம் வேசம்...இந்த உலகமே சுயநலத்தினால் இயங்குகின்றது...மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்றும்,நாங்கள் செய்தால்,எங்களுக்கு யாராவது திருப்பி செய்வார்கள் என்ட எதிர்பார்ப்போடு தான் எல்லோரும் இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசித்துக்கொண்டு போகும் போது கொஞ்சம் கண்கலங்கிவிட்டேன்...வீட்டுக்கு வீடு வாசற்படிதானே......நல்லதொரு சமூக கதை....நன்றி சுமேரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

அம்மா,அப்பா,உறவுகள்,பாசம் எல்லாம் வேசம்...இந்த உலகமே சுயநலத்தினால் இயங்குகின்றது...மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்றும்,நாங்கள் செய்தால்,எங்களுக்கு யாராவது திருப்பி செய்வார்கள் என்ட எதிர்பார்ப்போடு தான் எல்லோரும் இருக்கிறார்கள்

அதுதான் உலக இயல்பு ரதி.

11 hours ago, குமாரசாமி said:

வாசித்துக்கொண்டு போகும் போது கொஞ்சம் கண்கலங்கிவிட்டேன்...வீட்டுக்கு வீடு வாசற்படிதானே......நல்லதொரு சமூக கதை....நன்றி சுமேரி.

நன்றி குமாரசாமி வருகைக்கு

நன்றி வருகைக்குப் புங்கை ஜீவன் சிவா

எப்பம்மா அடுத்த கதை எழுதிறீங்க??:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றி குமாரசாமி வருகைக்கு

ஒருக்கால் குசா எண்டுவியள்...இன்னொரு நாளைக்கு குமாரசாமி அண்ணை எண்டுவியள்.....அடுத்தநாளைக்கு குசா அண்ணை எண்டுவியள்....என்ன இதெண்டு கேக்கிறன்?:cool:
ஏதோ கடவுள் புண்ணியத்திலை டேய் குமாரசாமி எண்டாத வரைக்கும்  சந்தோசம்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய உலகம் இப்படித்தான் இருக்கின்றது. ஆனாலும் பெற்றவர்கள் மீது பிள்ளைகள் காட்டும் அன்பையும் பாரிசவாதம், மறதிக் குணங்கள் (dementia) சிலவேளை சோதனைக்குட்படுத்தும்.

வயதாகி நோயில் வீழ்பவர்களை பராமரிக்கும் தொழில் இன்னும் பெருகத்தான் போகின்றது. ஆனால் பிள்ளைகள் பார்ப்பார்கள் என்று இருப்பதை விடுத்து, இப்படியான பராமரிப்பு இல்லங்களில் இறக்கும்வரை இருப்பதற்கு பணத்தைச் சேர்த்து வைப்பதுதான் நல்லது.

12 minutes ago, கிருபன் said:

பிள்ளைகளுக்கும் ஏன் கஸ்டத்தைக் கொடுப்பான் அவர்களுக்கும் தாங்கள், தங்கள் குடும்பம் என்றிருக்கும் தானே..... இப்ப தமிழ் பராமரிப்பு இல்லங்கள் இருப்பதால் சாப்பாடுகள் பிரச்சனை இருக்காது..... கடவுளே எண்டு அங்கு போய் இருந்து கண்ணை மூட வேண்டியது தானே..... 

என் விருப்பம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று, பிள்ளைக்கும் கஸ்டம் கொடுக்கக் கூடாது.... 

:cool:

Edited by மீனா

  • கருத்துக்கள உறவுகள்

நான் இக் கதையை அன்றே வாசித்து விட்டேன் சகோதரி. ஆயினும் மனதின் கனம் கருதி என்னால் கருத்திட முடியவில்லை. நாங்கள்  எனது மாமியையும், அம்மாவையும் கடைசிவரை வைத்துப் பார்த்தனாங்கள். நீங்கள் எழுதியதில் அதிகமானவை நேரே பார்த்து எழுதியதுபோல் இருந்தது.

நான் அம்மாவைப் பார்ப்பதற்காக கடைசி வருடம் (அவ மோசம்போய் இப்ப ஒன்றரை வருடமாகின்றது) விருப்பு விடுப்பு எடுத்திருந்தேன். அம்மாவை மிகவும் நன்றாகப் பராமரித்தது நாங்கள் செய்த புண்ணியம்.

எனது வீடு நிலத்துடன் இருப்பதும் பின்னுக்கு வெளியாக இருப்பதும் வசதியாக அமைந்துவிட்டது. அதனால் பிரச்சனையில்லை. அப்பாட்மென்ட் காரர்களுக்கு இது மீகவும் சிரமமானதே. துப்பரவு செய்யும்போது வீட்டுக்குள்ளும் பக்கத்து வீடுகளுக்கும் அசுவாத்தியமாய் இருக்கும். அதனால் அவர்களிலும் குறை சொல்ல முடியாது. அதுவும் வயதானவர்கள் மெலிந்து இருந்தாலும் கூட ஒரு ஆளால் அவர்களைத் தூக்கி எல்லாம் சுத்தம் செய்ய முடியாது.

நல்ல விடயம் எழுதியுள்ளீர்கள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

இப்போதைய உலகம் இப்படித்தான் இருக்கின்றது. ஆனாலும் பெற்றவர்கள் மீது பிள்ளைகள் காட்டும் அன்பையும் பாரிசவாதம், மறதிக் குணங்கள் (dementia) சிலவேளை சோதனைக்குட்படுத்தும்.

வயதாகி நோயில் வீழ்பவர்களை பராமரிக்கும் தொழில் இன்னும் பெருகத்தான் போகின்றது. ஆனால் பிள்ளைகள் பார்ப்பார்கள் என்று இருப்பதை விடுத்து, இப்படியான பராமரிப்பு இல்லங்களில் இறக்கும்வரை இருப்பதற்கு பணத்தைச் சேர்த்து வைப்பதுதான் நல்லது.

பணம் சேர்ப்பது சரி. அங்கும் பல கொடுமைகள் நடக்கின்றன தானே. அவை எமக்கும் நடந்தால் என்ன செய்வது என்னும் பயம் தான்

15 hours ago, குமாரசாமி said:

ஒருக்கால் குசா எண்டுவியள்...இன்னொரு நாளைக்கு குமாரசாமி அண்ணை எண்டுவியள்.....அடுத்தநாளைக்கு குசா அண்ணை எண்டுவியள்....என்ன இதெண்டு கேக்கிறன்?:cool:
ஏதோ கடவுள் புண்ணியத்திலை டேய் குமாரசாமி எண்டாத வரைக்கும்  சந்தோசம்tw_blush:

சரி எப்பிடிக் கூப்பிடுவது என்று சொல்லுங்கள் அப்படியே கூப்பிடுறன். (டேய் குமாரசாமிதான் நல்லா இருக்கு. ஆனால் .... )tw_blush:

15 hours ago, மீனா said:

பிள்ளைகளுக்கும் ஏன் கஸ்டத்தைக் கொடுப்பான் அவர்களுக்கும் தாங்கள், தங்கள் குடும்பம் என்றிருக்கும் தானே..... இப்ப தமிழ் பராமரிப்பு இல்லங்கள் இருப்பதால் சாப்பாடுகள் பிரச்சனை இருக்காது..... கடவுளே எண்டு அங்கு போய் இருந்து கண்ணை மூட வேண்டியது தானே..... 

என் விருப்பம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று, பிள்ளைக்கும் கஸ்டம் கொடுக்கக் கூடாது.... 

:cool:

நான் பிள்ளைகளுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். என்னால் எப்ப நடந்து திரிய முடியாது போகிறதோ அப்ப கருணைக்கொலை  செய்துவிடுங்கள் என்று.

14 hours ago, suvy said:

நான் இக் கதையை அன்றே வாசித்து விட்டேன் சகோதரி. ஆயினும் மனதின் கனம் கருதி என்னால் கருத்திட முடியவில்லை. நாங்கள்  எனது மாமியையும், அம்மாவையும் கடைசிவரை வைத்துப் பார்த்தனாங்கள். நீங்கள் எழுதியதில் அதிகமானவை நேரே பார்த்து எழுதியதுபோல் இருந்தது.

நான் அம்மாவைப் பார்ப்பதற்காக கடைசி வருடம் (அவ மோசம்போய் இப்ப ஒன்றரை வருடமாகின்றது) விருப்பு விடுப்பு எடுத்திருந்தேன். அம்மாவை மிகவும் நன்றாகப் பராமரித்தது நாங்கள் செய்த புண்ணியம்.

எனது வீடு நிலத்துடன் இருப்பதும் பின்னுக்கு வெளியாக இருப்பதும் வசதியாக அமைந்துவிட்டது. அதனால் பிரச்சனையில்லை. அப்பாட்மென்ட் காரர்களுக்கு இது மீகவும் சிரமமானதே. துப்பரவு செய்யும்போது வீட்டுக்குள்ளும் பக்கத்து வீடுகளுக்கும் அசுவாத்தியமாய் இருக்கும். அதனால் அவர்களிலும் குறை சொல்ல முடியாது. அதுவும் வயதானவர்கள் மெலிந்து இருந்தாலும் கூட ஒரு ஆளால் அவர்களைத் தூக்கி எல்லாம் சுத்தம் செய்ய முடியாது.

நல்ல விடயம் எழுதியுள்ளீர்கள்...!

உண்மைதான் அண்ணா. என் பெற்றோரும் நானும் கொடுத்துவைத்தவர்கள் என்று நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் இப்போதெல்லாம். என் ஒன்றுவிட பெரியமாவை எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் மகள் வைத்துப் பார்க்கிறாள். அந்தக் கஷ்டங்களைப் பார்த்து வந்ததுதான் இக்கதை

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல அருமையான ஒரு கதை சுமே!

இது ஒரு தலைமுறையின் சிக்கல் என்றே நினைக்கிறேன்!

மேற்கத்தைய தேசங்களில் முளை விட்டு வளருகின்ற ஒரு தலைமுறை...கீழைத் தேசப் பழக்க வழக்கங்களுடன் வாழ முனைகையில் இவ்வாறான முரண்பாடுகள் ஏற்படுகின்றன என நினைக்கிறேன்!

எமது கலாச்சாரத்தில் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களும் அதிகம்! அதனால் தான் அவர்களுக்கு ஏமாற்றங்களும் அதிகம்!

கதையின் நாயகி நந்தா கூட..நான் இவ்வளவு செய்தேன்..நான் செய்திருக்கா விட்டால் , எமது குடும்பம் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? என்றே ஆதங்கப் படுகிறாள்! அதனால் தான் அவளுக்கும் ஏமாற்றங்கள் அதிகம் ஏற்படுகின்றது!

தான் செய்த செயல்களை, ஒரு சேவையாகச் செய்திருந்தால் இப்படியான ஏமாற்றங்கள் அவளுக்கு ஏற்பட்டிருக்க மாட்டாது என்றே நினைக்கிறேன்!

நந்தாவுக்கும். எனக்கும் மட்டும் இப்படியான அனுபவங்கள் ஏற்படவில்லை!

ஏறத்தாழ புலம் பெயர்ந்த முதலாவது, இரண்டாவது தலைமுறையில் பெரும்பாலானோருக்கு இப்படியான அனுபவங்கள் நிச்சயம் இருக்கும்!

குறிப்பாக ரதியின் கருத்து..இப்படித் தன்னைச் சுட்டுக்கொண்டவர்களில் ஒருவராக அவரும் இருக்கக் கூடும் என்று சொல்லி நிற்கின்றது!

இது தான் வாழ்க்கை என்பது... இதனை ஏற்றுக்கொண்டு நகர்ந்து செல்ல வேண்டியது தான்!

அதனால் தான் நமது பெரியவர்கள்,

பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்,

மறவாமை வேண்டும்!..என்று சொல்லிச் சென்றனர்!

உங்கள் கதைகள் வாழ்க்கையின் அனுபவங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிச் செல்கின்றன!

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2016 at 9:52 PM, ரதி said:

அம்மா,அப்பா,உறவுகள்,பாசம் எல்லாம் வேசம்...இந்த உலகமே சுயநலத்தினால் இயங்குகின்றது...மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்றும்,நாங்கள் செய்தால்,எங்களுக்கு யாராவது திருப்பி செய்வார்கள் என்ட எதிர்பார்ப்போடு தான் எல்லோரும் இருக்கிறார்கள்

உறவுகளும்

பந்தங்களும் இடியப்ப சிக்கல்கள் தான்...

ஆனாலும் வாழ்வு அதனூடுதானே பயணிக்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்து வாழும் எமக்கு இது தான் நாளைய நிலைமை.

பிள்ளைகள் விரும்பினால்க் கூட வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து எம்மை பார்க்க இயலுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 08/02/2016 at 8:45 AM, புங்கையூரன் said:

வழக்கம் போல அருமையான ஒரு கதை சுமே!

இது ஒரு தலைமுறையின் சிக்கல் என்றே நினைக்கிறேன்!

மேற்கத்தைய தேசங்களில் முளை விட்டு வளருகின்ற ஒரு தலைமுறை...கீழைத் தேசப் பழக்க வழக்கங்களுடன் வாழ முனைகையில் இவ்வாறான முரண்பாடுகள் ஏற்படுகின்றன என நினைக்கிறேன்!

எமது கலாச்சாரத்தில் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களும் அதிகம்! அதனால் தான் அவர்களுக்கு ஏமாற்றங்களும் அதிகம்!

கதையின் நாயகி நந்தா கூட..நான் இவ்வளவு செய்தேன்..நான் செய்திருக்கா விட்டால் , எமது குடும்பம் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? என்றே ஆதங்கப் படுகிறாள்! அதனால் தான் அவளுக்கும் ஏமாற்றங்கள் அதிகம் ஏற்படுகின்றது!

தான் செய்த செயல்களை, ஒரு சேவையாகச் செய்திருந்தால் இப்படியான ஏமாற்றங்கள் அவளுக்கு ஏற்பட்டிருக்க மாட்டாது என்றே நினைக்கிறேன்!

நந்தாவுக்கும். எனக்கும் மட்டும் இப்படியான அனுபவங்கள் ஏற்படவில்லை!

ஏறத்தாழ புலம் பெயர்ந்த முதலாவது, இரண்டாவது தலைமுறையில் பெரும்பாலானோருக்கு இப்படியான அனுபவங்கள் நிச்சயம் இருக்கும்!

குறிப்பாக ரதியின் கருத்து..இப்படித் தன்னைச் சுட்டுக்கொண்டவர்களில் ஒருவராக அவரும் இருக்கக் கூடும் என்று சொல்லி நிற்கின்றது!

இது தான் வாழ்க்கை என்பது... இதனை ஏற்றுக்கொண்டு நகர்ந்து செல்ல வேண்டியது தான்!

அதனால் தான் நமது பெரியவர்கள்,

பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்,

மறவாமை வேண்டும்!..என்று சொல்லிச் சென்றனர்!

உங்கள் கதைகள் வாழ்க்கையின் அனுபவங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிச் செல்கின்றன!

நன்றி புங்கை என்னை உற்சாகப்படுத்தியதற்கு.

On 08/02/2016 at 2:17 PM, விசுகு said:

உறவுகளும்

பந்தங்களும் இடியப்ப சிக்கல்கள் தான்...

ஆனாலும் வாழ்வு அதனூடுதானே பயணிக்கிறது....

எமக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாதே என்ற பயம் தான்.

13 hours ago, ஈழப்பிரியன் said:

புலம் பெயர்ந்து வாழும் எமக்கு இது தான் நாளைய நிலைமை.

பிள்ளைகள் விரும்பினால்க் கூட வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து எம்மை பார்க்க இயலுமா?

அதுதான் யதார்த்தம் எனினும் மனம் ஏற்றுக்கொள்ள மறக்கும் அந்த நேரத்தில்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எமக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாதே என்ற பயம் தான்.

தலைமுறை தலைமுறையாக வழி வழி வந்த பல சம்பிரதாயங்களை சுமந்தவர்களாகவும்

இறுதியானவர்களாகவும்

அவற்றை அனுபவிக்காதவர்களாகவும் இந்தத்தலைமுறையான நாமே இருப்போம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தலைமுறை தலைமுறையாக வழி வழி வந்த பல சம்பிரதாயங்களை சுமந்தவர்களாகவும்

இறுதியானவர்களாகவும்

அவற்றை அனுபவிக்காதவர்களாகவும் இந்தத்தலைமுறையான நாமே இருப்போம்...

உண்மைதான் அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.