Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செழியனின் மாமா

Featured Replies

செழியனிற்கு ஒரு மாமா இருந்தார். அந்த மாமா தலைநகரில் வாழ்ந்தார். அப்பாவைப் பிடிக்காத செழியனின் முதலாவது ஹீரோ அவர் தான். அவர் அப்பப்போ தான் செழியன் வாழும் ஊரிற்கு வந்துபோவதனால் செழியனின் நண்பர்கள் அவரைப் பார்த்ததில்லை. தனது ஹீரோவைத் தனது நண்பர்களிற்கு விபரிப்பதில் செழியன் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருந்தான். காரணம், செழியனின் மாமா அவனது நண்பர்கள் எவரும் கண்டிராத, அதனால் கற்பனையில் அவர்களால் காணமுடியாத, ஒரு பாத்திரமாக இருந்தார். ஒப்பிடுவதற்கு ஒருவரும் இல்லாத மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

தமிழ் பட வராலாற்றில் சிவாஜியோடு ஒப்பிடுவதற்கு நடிகர்கள் இருக்கிறார்கள். சிவாஜியின் ஒரு படம் தன்னும் பார்த்திராத ஒருவரிற்கு சிவாஜி எப்பிடி இருப்பார் என்று ஓரளவிற்கு விளக்கிவிடலாம். ஆனால் எம்.ஜி.ஆர் என்ற நடிகரின் ஒரு படம் தன்னும் பார்திருக்காத ஒருவரிற்கு எம்.ஜி.ஆரை விளங்கப்படுத்த முடியாது. றகுவரன் முதலான வேறும் சில நடிகர்கள் இந்த வகையறாக்குள் உள்டக்கப்படக்கூடியவர்கள். இத்தகைய மனிதர்களை நாம் அருமையாய்த் தான் சந்திக்க நேர்கிறது என்றபோதும், கூர்ந்து பார்த்தால் இத்தகையவர்களில் ஒரு பொதுமைப்பாடு இருக்கும்--அவர்கள் தங்களைத் தாங்களாகவே சிருஸ்ட்டித்த ஒரு பாத்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதாவது, பெற்றோர் கொடுத்த பிறப்பிற்கப்பால் அவர்கள் தங்களை மீளப் பிறப்பித்தவர்களாக, தங்கள் விருப்பப்படி கட்டமைத்துப் பிறப்பித்தவர்களாக இருப்பார்கள். செழியனின் மாமாவும் இதே ரகம் தான்.

செழியனின் மாமா ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். இவ்வாறு சொன்னதும் தமிழ்த்திரையில் எம்.ஜி.ஆர் வேடம் போட்டுச் சுத்தும் காமடி பீசுகளாகவோ இல்லையேல் பாக்கியறாச், சத்தியறாச் போன்ற 'அம்மா நானும் எம்.ஜி.ஆர் ஆகப்போறேன்' பேர்வழிகளாகவோ நினைத்துவிடக்கூடாது. ஆங்கிலத்தில் அடாப்ரேசன் என்று சொல்வதுபோன்று, செழியனின் மாமா எம்.ஜி.ஆரைத் தழுவிய ஒரு தனிப்பாத்திரத்தைத் தனக்காக உருவாக்கியிருந்தார். தழுவல் என்பதனால் எம்.ஜி.ஆரின் குணவியல்புகளின் சாயல்களைப் பார்வையாளன் உணரமுடியும் என்றபோதும் பாத்திரம் உவமானம் அற்றது. இன்னுமொருவகையில் சொன்னால், செழியனின் மாமா பார்த்த எம்.ஜீ.ஆரைக் கூட மற்றவர்கள் பாத்திருப்பதற்கான சாத்தியம் வெகு குறைவு. 

தெருவில் இருந்த ஒரு சிறு குழிக்குள் மழை நீர் தேங்கி நிற்க, அதற்குள் ஒரு துளி மண் விழுந்து வட்ட வட்டமாய் சிறு அலை எழும்ப, அதனோடு சேர்ந்து நாங்களும் ஒரு சின்ன பிளாஸ்பாக்கிற்குள் போனால்...

வரண்ட ஒரு பிரதேசம். வரட்சி என்று சொன்ன மாத்திரத்தில் ஆடுகள் வராத ஒரு வரட்சி உண்மையான வரட்சியாகாது. ஆடுகள் மண்ணோடு ஒட்டி நின்ற புல்லு மாதிரித்தெரியும் பச்சைத் தாவரத்தைப் படாதபாடுபட்டு மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஊரியும் மக்கியும் சேர்ந்த வெள்ளை ஒழுங்கை. அதில் குறுணிக் கற்கள் நகங்களைக் கிழிப்பதே கண்ணாகத் தொழிற்பட்டுக் கிடக்கின்றன. அலம்பல் மற்றும் பனை ஓலை கொண்டு உருவாக்கப்பட்ட வேலிகள். எருக்கலைச் செடி அங்கங்கு சிரமமின்றித் தெரிகிறது. வாகை மரம் நிற்கிறது. நெல்லி மரம் நின்றும் வரட்சியினைப் போக்கும் பலம் நெல்லிக்கில்லை. ஓலைக் குடிசை ஒன்று. களிமண் சுவர், தாழ்ந்த வாசல், உள்ளிற்குள் வாங்கில். குடிசையின் இரண்டு மணி திசையில் சின்னதாய் ஒரு வைரவர் சூலம். சூலத்திற்குக் குடையாய் பெரிய வேப்பம் மரம். வரட்சியினை ஏறெடுத்துப் பார்த்தும் 'கெத்'திருந்த ஒரே தாவரம் வேம்புதான். எப்பிடியோ ஒரு முல்லை மரப் பந்தலை உருவாக்கியிருந்தார்கள். அதில் இருந்து வைரவரிற்கு முல்லைப் பூ கிடைக்கிறது. குடிசையின் பத்துமணித் திசையில் தூரமாய் தள்ளி எருக்கலைச் செடிப்பூங்காவிற்குள் கல்லினால் கட்டப்பட்ட சுகாதார முறைப்படியமைந்த மலசலகூடம். ஓலைக்குடிசையானாலும் கல்லுக் கழிப்பிடம். தள்ளி உப்புத் தண்ணிக் கிணறு. கழுவுவதற்கு மட்டுமே தண்ணி பயன் படும். இங்கு தான் செழியனின் அம்மாவும் அவனது மாமாவும் கூடவே இன்னும் நான்கு குழந்தைகளும் பிறந்தார்கள்.

எம்.ஜி.ஆர் படம் பார்க்கத் தொடங்கு முன்னரே செழினின் மாமாவிற்குள் எம்.ஜி.ஆர் இருந்தார். ஐந்தாம் வகுப்பில் புலமைப்பரிசில் தேர்வில் அதிசிறப்பாய்த் தேர்ச்சி அடைந்தபோதும், தன்னிலும் வயது மூத்த செழியனின் தாயாருட்பட்ட தனது சகோதரங்களைப் படிப்பிக்க நினைத்து, படிப்பை விட்டுத் தலைநகரின் கடை ஒன்றிற்கு எடுபிடி வேலைக்குச் சென்றார் செழியனின் மாமா. தலைநகரில் தான் எம்.ஜி.ஆர் அறிமுகமானார். 

ஒரு பாட்டைப் போட்டுக் கதையைக் கலைச்சுவிட்டால், தொழிலதிபர் ஒருவர் ஜப்பானிய குளிரூட்டப்பட்ட காரில் அந்தக் காரிற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தெருவில் வந்திறங்குகிறார். பதினொரு வயதில் வந்த எடுபிடி இருபதில் தொழில் அதிபராவதற்குள், இடையில் எத்தனையோ மயிர்க்கூச்செறியும் சாகசங்கள் நடந்து முடிந்திருந்தின. கதைக்குக் ஹீரோயின் அவசியம் என்பதனால், அந்த சாகசத்துக்குள் நமது நொன்-லீனியர் கதைதையைத் திருப்பினால்....

மங்களுரில் ஒரு இஸ்லாமிய யுனானி வைத்தியர். அவரிற்கு வசதி அதிகம். ஏதோ காரணத்தால் அவர் இலங்கைக்குக் குடிபெயர்கிறார். செல்வம் திழைக்கும் குடும்பப் பின்னணியில் இருந்த அவரது ஒரு பெண் குழந்தை அதுவும் தந்தை வழியில் படிக்க விரும்புகிறது. தலைநகரில் கல்லூரியில் சேர்கிறது. செழியனின் தாயார் ஆயுர்வேத வைத்தியம் கற்பதற்காய் அதே கல்லூரியில் சேர்கிறார். விடுதியில் மங்களுர் மங்கைக்கும் செழியனின் மம்மிக்கும் நட்பு ஏற்படுகிறது. செழியனின் மாமா இருபதுகளின் தொடக்கத்தில் புத்தம் புது சின்னஞ்சிறு தொழிலதிபராய் அக்காவைப் பார்க்க அப்பப்போ கல்லூரி விடுதிக்குச் சண்டேய்சில் போனாரா...மங்களுர் மண்வாசம் அவரைக் கவர்ந்து கொண்டது. உணர்வுகள் பரஸ்பரம் ஒத்திருக்க, 'இன்று சுவர்க்கத்தின் திறப்புவிழா' பாட்டைப் போட்டு முடிக்க மாமா மங்களுர் மாமியைக் கூட்டிக் கொண்டு போயிட்டார். செல்வந்த யுனானி பிள்ளையைத் தலைமுழுக, 'இதுவரை நீ வாழ்ந்தது செல்வச் செழிப்பு என்டா, இத...இத...இத... என்னெண்டு சொல்லுவ' என்ற பஞ்ச் டயலாக்கோட மாமா வழர ஆரம்பித்தார். மாமிக்குத் தமிழ் வந்ததோ இல்லையோ மாமா உறுது மொழியினை எம்.ஜி.ஆர் பாணியில் பேசத் தொடங்கியிருந்தார்.

பள்ளிக்கூடத்தால் பாதிப்புக்கள் தான் அதிகமோ என்று பார்ப்பவர் நினைக்கத் தோன்றும் வகையில் படிக்காத மாமா பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். நான்கு மொழிகள் பாண்டித்தியத்தியத்தோடு பேசினார். வெற்றிடயங்களிற்குள் வெற்றியினைக் கண்டு கைப்பற்றினார். அனைத்தையும் பிறவிப் பணக்காரன், பிறைவேற் ஸ்க்கூல்லயே மொத்தமா றிச் போய்சோடை படிச்சவன் கணக்கில் ஸ்ரைலாச் செய்துகொண்டிருந்தார்.

எம்.ஜீ.ஆர் மாமாவைப் பாதித்ததற்கும் மேலால் மாமா செழியனைப் பாதித்திருந்தார். படம் மட்டுமே பார்த்த மாமா, தேக்கம் என்பதே சாத்தியமில்லை என்பதாய் வாழ்வை ரொப் கியரிலேயே களர்புல்லாய் முற்றாய் வாழ்ந்தார். ஆனால் பாடங்கள் படித்த செழியனால் மாமாவை ஒரு புத்தகம் படிப்பது போன்று மட்டுமே பார்க்க முடிகிறது. பார்த்ததைப், படித்ததைப் பிரயோகிக்கும் சுதந்திரத்தை, மனித இயல்பை ஒருவேளை பள்ளிக்கூடம் தன்னிடம் இருந்து திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் செழியனிற்குள் இருக்கவே செய்கிறது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

வழமையான இன்னுமொருவனைக் காணவில்லை. அல்லது உங்கள் எழுத்தை என்னாலத்தான் புரிந்துகொள்ள முடியவில்லையோ ??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Innumoruvan said:

வரண்ட ஒரு பிரதேசம். வரட்சி என்று சொன்ன மாத்திரத்தில் ஆடுகள் வராத ஒரு வரட்சி உண்மையான வரட்சியாகாது. ஆடுகள் மண்ணோடு ஒட்டி நின்ற புல்லு மாதிரித்தெரியும் பச்சைத் தாவரத்தைப் படாதபாடுபட்டு மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஊரியும் மக்கியும் சேர்ந்த வெள்ளை ஒழுங்கை. அதில் குறுணிக் கற்கள் நகங்களைக் கிழிப்பதே கண்ணாகத் தொழிற்பட்டுக் கிடக்கின்றன. அலம்பல் மற்றும் பனை ஓலை கொண்டு உருவாக்கப்பட்ட வேலிகள். எருக்கலைச் செடி அங்கங்கு சிரமமின்றித் தெரிகிறது. வாகை மரம் நிற்கிறது. நெல்லி மரம் நின்றும் வரட்சியினைப் போக்கும் பலம் நெல்லிக்கில்லை. ஓலைக் குடிசை ஒன்று. களிமண் சுவர், தாழ்ந்த வாசல், உள்ளிற்குள் வாங்கில். குடிசையின் இரண்டு மணி திசையில் சின்னதாய் ஒரு வைரவர் சூலம். சூலத்திற்குக் குடையாய் பெரிய வேப்பம் மரம். வரட்சியினை ஏறெடுத்துப் பார்த்தும் 'கெத்'திருந்த ஒரே தாவரம் வேம்புதான். எப்பிடியோ ஒரு முல்லை மரப் பந்தலை உருவாக்கியிருந்தார்கள். அதில் இருந்து வைரவரிற்கு முல்லைப் பூ கிடைக்கிறது. குடிசையின் பத்துமணித் திசையில் தூரமாய் தள்ளி எருக்கலைச் செடிப்பூங்காவிற்குள் கல்லினால் கட்டப்பட்ட சுகாதார முறைப்படியமைந்த மலசலகூடம். ஓலைக்குடிசையானாலும் கல்லுக் கழிப்பிடம். தள்ளி உப்புத் தண்ணிக் கிணறு. கழுவுவதற்கு மட்டுமே தண்ணி பயன் படும்.

இதை வாசிக்கும் போது...விழியோரங்களில் கொஞ்சம் ஈரம் கசிந்தது!

ஏனென்று காரணம் புரியவில்லை!

ஒரு எழுத்தாளன் வாசகனைத் தன்னுடனேயே பயணிக்கச் செய்ய முடியும் என்பற்கு உங்கள் எழுத்து நடை ஒரு உதாரணம்!

எனக்கு எம்.ஜி.ஆரை ஒரு நடிகனாக அதிகம் பிடித்ததில்லை!

ஆனால் ஒரு மனிதனாக மிகவும் பிடிக்கும்!

  • தொடங்கியவர்

நன்றி மேசொப்பெத்தேமியசுமேரியர் மற்றும் புங்கை ஊரான்.

சுமேரியர், உங்களிற்குப் பிடிக்கவில்லை என்பதனை வெளிப்படையாகப் பேசியமைக்கு மிக்க நன்றி. இத்தகைய உண்மையான விமர்சனங்கள் மிகவும் பெறுமதி மிக்கன. இந்தப் பதிவின் எழுத்துநடை கொஞ்சம் ஒரு சினிமாக்காரனின் தொலைக்காட்ச்சி பேட்சி போன்று அமைந்திருப்பது வழமைக்கு மாறானது தான். ஆனால் கருவே திரைப்படங்களிற்குள்ளும் அடாப்ற்றேசன்களிற்குள்ளும், ரசிகர்களிற்குள்ளுமாய்க் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அதை அப்படிச் சொல்லத்தோன்றியது.

புங்கையூரான், எனக்கு எம்.ஜீ.ஆர் படங்கள் மீதோ அவர் ஒரு நடிகராகவோ பிரமிப்பு இருந்தது மிகக்குறைவு. ஆனால், எம்.ஜீ.ஆரைப் பிடித்த சில மனிதர்களை வாழ்நாளில் சந்தித்து, அவர்கள் அவரை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டதற்குப் பிறகு எம்.ஜீ.ஆரை ஒரு பாத்திரமாக, அதாவது சினிமாவிற்குள் ஒரு சினிமா என்பது போல, பார்க்கத் தொடங்கியபின்னர் ஒரு மலைப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் இந்தக் கதை எம்.ஜீ.ஆரைப் பிடித்த ஒருவரைப் பற்றியது மட்டுமே--இந்த மனிதரின் கதை ஏறத்தாள ஒரு எம்.ஜீ.ஆர் படத்தின் கதையினை ஒத்திருப்பதை அவதானிப்பது மிக இலகு.

நீங்கள் கோடிட்டுக்காட்டிய பந்திக்குள் தாய்மடி இருக்கிறது. உங்கள் நெகிழ்ச்சி உங்களால் அந்த மடிக்கு மீழ முடிந்ததையும் அது தத்ரூபமாக உங்களுள் பதியப்பட்டிருப்பதையும் இயல்பாக வெளிப்படுத்தியது. இதனால் எனக்கு ஏகப்பட்ட உற்சாகம் கிடைத்தது. மிக்க நன்றி.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் அனைத்து ஆக்கங்களையும் வாசிப்பவன் நான்.பின்பு கருத்திடுவம் என்று மறந்து விடுவேன்.மற்றது இப்படி உரு மாமா எங்கள் ஊரிலும் இந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும்,இன்னுமொருவன் இணைத்தவுடனேயே இந்தக் கதையை வாசித்து விட்டு சுமோ எழுதின மாதிரித் தான் நினைத்தேன். ஒரு எழுத்தாளாருக்கு பல வித எழுத்து நடை இருக்க வேண்டும் தான் ஆனால் இந்த விதமான எழுத்து நடை இன்னுமொருவனுக்கு கொஞ்சம் கூடப் பொருத்தமில்லை.எனக்கும் கதை பிடிக்கவில்லை.

  • தொடங்கியவர்

நன்றி நந்தன், சுவைப்பிரியன் மற்றும் ரதி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

ரதி உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. 

அப்பப்போ தோன்றுவதை நான் யாழில் மட்டும் ஒரு முகமூடியாக எழுதிக்கொண்டிருப்பதால், யாழிற்கு வெளியே இரண்டே இரண்டுபேர் மட்டும் (யாழில் இல்லாத என்னைத் தெரிந்தவர்கள்) நான் எழுதுவதை அப்பப்போ வாசிப்பார்கள்—அதிலும் ஒருவர் மட்டுமே நான் எழுதும் அனைத்தையும் வாசிப்பவர். யாழிற்கு வெளியேயான அந்த இருவரில் ஒருவரிற்கு மிகப்பிடித்தது மற்றையவரிற்கு அறவே பிடிக்கவில்லை— அரைவாசிக்கு மேல் தான் வாசிக்கவே இல்லை அத்தனை மோசமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். யாழிற்குள் இருவரிற்குப் பிடித்திருக்கிறது, பெரும்பான்மையானோரிற்குப் பிடிக்கவில்லை. ஆனால் மிகவும் அதிஸ்ரவசமாக உண்மையான எதிர்வினையினை முன்வைக்கும் வாசகர்களைக் கொண்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகளைவிட வாழ்க்கை அனுபவம் பலவற்றைக் கற்றுக் கொடுக்கும் பாஷை உட்பட.முன்பு கொழும்பு ,கண்டி என வேலைக்கு வந்தவர்கள் மூன்று நான்காம் வகுப்போடு வேலைக்காக வந்தவர்கள் சிறப்பாகச் சிங்களம் பேசுவார்கள். அத்துடன் கடைகளிலேயே நின்று பின் ஒரு கடை நடத்தக் கூடிய ஆளுமையையும் பெற்றுக் கொள்வார்கள். கல்வியால் அறிவு கிடைக்கலாம், ஆனால் ஆளுமை என்பது அனுபவத்தால் மட்டுமே எட்டப் படும்.

அதனால்தான் பொயிலைக் காம்பால் அடித்தும் தராசும் படியால் எறிந்தும் வேலை வாங்கிய பொடியங்களுக்கே பின்நாளில் தங்கள் மகளையும் கட்டிவைத்து, வியாபாரத்தையும் ஒப்படைத்த பல முதலாளிமாரை சென்ற தலைமுறையில் அதிகம் காணமுடியும். செழியனின் மாமாவும் அப்படியான ஒருவராய்த்தான் இருந்திருக்கின்றார்.

பகிர்வுக்கு நன்றி இன்னுமொருவன்...!

  • கருத்துக்கள உறவுகள்

இக்கதை சோபாசக்தி எழுதிய எம்ஜிஆர் கதையை நினவூட்டுகிறது. மற்றும்படி நீங்கள் வர்ணித்த பிரதேசம் வலிகாமத்தின் வழுக்கியாறு வழுக்கியோடும் பகுதியின் கோடைகாலத்தை நினைவூட்டுகிறது தவிர தீவுப்பகுதிகளின் எண்பது சதவிகிதமான தன்மை இப்படித்தான் இருக்கும். ஆனால் அங்கு பூவரசுகளது ஆட்சியே கூடுதலாக இருக்கும், காலம் தற்போது பூவரச மரத்தினைக் குடாநாட்டு மக்களால்  கண்டுகொள்ளாதமரமாக தனிக்கவிட்டதனால் குடாநாட்டின் சூழலில் அதிக மாற்றங்களை உணரலாம்.

ஆக்கத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

(Fantasy) மனோரதியமான கதையாகத் தெரிந்தது. செழியனின் வறண்ட இடத்தில் இருந்து கொழும்பு வந்து வாழ்க்கையில் செழிப்படைந்து எல்லாவற்றிலும் வெற்றி காண்பது எம்ஜியார் மாதிரி இருந்தால்தானே முடியும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.