Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி காலமானார்

Featured Replies

குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி காலமானார்
 
 

article_1465016424-t9cccf2r.jpgகுத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி, தனது 74ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னாள் அதிபாரக் குத்துச்சண்டை சம்பியனும், உலகின் நன்கு அறியப்பட்டுள்ள விளையாட்டு வீரரான அலி, ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள ஃபோனிக்ஸ் நகரத்திலுள்ள வைத்தியசாலையில், இவ்வார ஆரம்பத்தில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

சுவாசம் தொடர்பான நோய்களோடு போராடிக் கொண்டிருந்த அலியின் நிலைமை, பார்க்கின்ஸன் நோயால் மேலும் மோசமாகியிருந்தது.

இந்நிலையில், அலியின் இறுதிக் கிரியைகள், அவரது சொந்த நகரமான, கென்டக்கி மாநிலத்திலுள்ள லூய்வேயிலில் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.

1960ஆம் ஆண்டு ரோமில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், மென்-அதிபாரப் பிரிவில் தங்கப்பதக்கத்தை அலி வென்றதையடுத்து, அவரின் புகழ் பரவியிருந்தது.

1981ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அலி, தனது 61 மோதல்களில் 56இல் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/173828/க-த-த-ச-சண-ட-ஜ-ம-பவ-ன-ன-ம-ஹம-மட-அல-க-லம-ன-ர-#sthash.bXkvKb8F.dpuf
  • தொடங்கியவர்

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி காலமானார்

jun1.jpg

 

உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 74. அமெரிக்காவின் அரிஜோனா பீனிக்ஸில் உள்ள மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.


காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்'க்ளேவாக குத்துச்சண்டை  களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான்.

தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு.  "பட்டாம்பூச்சியை போல மிதந்திடுங்கள் ; தேனீயைப்போல கொட்டிவிடுங்கள் !" என்கிற அவரின் வாசகம் அமெரிக்கா முழுக்க எதிரொலித்தது.  "I'M THE GREATEST !" என்று அவர் சொன்ன பொழுது ரசிகர்களும் "ஆமாம் ! ஆமாம் "என்று கொண்டாடினார்கள்.

m1.jpg



இரண்டுமுறை ஹெவி வெய்ட் சாம்பியனாக இருந்தவருக்கு ஒரு சோதனை வந்தது -சரியாக சொல்வதென்றால் பற்பல சோதனைகளின் உச்சகட்டம் எனலாம். இவர் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் பெற்று வந்தவுடன் இனவெறி காரணமாக வரவேற்க கூட ஆளில்லை; நிறவெறி-வெய்ட்டர் கூட மதிக்கவில்லை. கடுப்போடு அந்த பதக்கத்தை நதியில் வீசிவிட்டு நடந்தார்.

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின் கலந்துகொண்ட போட்டியில் அவரைமுகமது அலி என அழைக்க எதிர் போட்டியாளர் மறுத்து விட்டார் ; கூட்டமும் ஏளனம் செய்தது. ஆனாலும்,உலக சாம்பியன் ஆனார். வியட்நாம் போரில் இளைஞர்களை ஈடுபட வைக்க   அமெரிக்கா கட்டாய ராணுவ சேவையை கொண்டு வந்து அதில் இவரையும் சேர சொன்னது,"அப்பாவி மக்களை கொல்லும் போரில் கலந்துகொள்ள மாட்டேன் !"என இவர் சொன்னது பெரிய அலையை உண்டு பண்ணியது.

காத்திருந்த அமெரிக்க அரசு அவரை குத்துசண்டையில் கலந்து கொள்வதற்கான லைசன்சை நீக்கியது; மூன்று வருடம் வனவாசம்.பின் பல்வேறு போராட்டத்துக்கு பின் மீண்டு வந்தால் தோல்வியே சந்திக்காத அவர் தோற்றுப்போனார். அவ்வளவு தான் என நாடே நகைத்தது.

அப்பொழுது தான் உலக சாம்பியன்ஷிப் வந்தது ,ஒரே ஒருவரை தவிர பதக்கம் இழந்து பலகாலம் கழித்து சாம்பியன்ஷிப்பை யாரும் வென்றது இல்லை ;மூன்று வருட வனவாசம் வேறு. ஆனாலும் வென்று காண்பித்தார் முகமது அலி ! அவர் தலையில் வாங்கிய அடிகள் அவரை முடக்கிபோட்டது -பர்கின்சன் சிண்ட்ரோம் அவரை பாதித்து முடக்கிபோட்டது.ஆனாலும்,அவர் பல்வேறு நிதிதிரட்டல்கள் மூலம்  எளியவர்களுக்கு உதவிவந்தார்.

m2.jpg



அவருக்கு பண்ணிய அவமானங்களுக்கு பிரயசித்தமாக அவரை அட்லாண்டா ஒலிம்பிக் ஜோதியை ஏற்ற அனுமதித்தார்கள் ,"என் இடக்கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது. வலது கை பயத்தால் நடுங்குகிறது இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன் !"என்ற வரிகளுக்கு பின் தான் எவ்வளவு நம்பிக்கை.

http://www.vikatan.com/news/sports/64859-boxing-legend-muhammadali-passes-away-at-74.art

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர்கள் மத்தியில் ஒரு முரட்டுத்தன வன்முறைக் கலாசாரம் பெருக இவர்களும் ஒரு காரணம். 

இப்படியான விளையாட்டுக்கு எதிராக இவர் குரல்கொடுக்க மறுத்துவிட்டார் கடைசி வரை.

ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • தொடங்கியவர்

உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.

"என் இடக்கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது. வலது கை பயத்தால் நடுங்குகிறது இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன் !"என்ற வரிகளுக்கு பின் தான் எவ்வளவு நம்பிக்கை....அவரை பற்றிய சில குறிப்புகள் இங்கே

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அபாரமான வீரன்..., ஆழ்ந்த அனுதாபங்கள்....!!

  • தொடங்கியவர்

ஆழ்ந்த அனுதாபங்கள்....!!

  • தொடங்கியவர்

முகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்? சிறப்பு பகிர்வு!

களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகமது அலி இன்று மறைந்தார்.

தன்னிகரற்ற வெற்றியாளனாக குத்துச்சண்டை உலகில் கோலோச்சிய முகமது அலி, தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் அசாத்திய திறமைக்கு சொந்தக்காரராக விளங்கியவர். அவரது தொழிற்குணத்திற்கு நேர் எதிராக அமைதியை நாடியவர், சமாதானத்தை விரும்பிய அற்புத மனிதர்.

வியட்நாம் போரை எதிர்த்ததற்காக அவருக்கு தடை விதிக்கப்பட்டபோதும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் உடலைப்போன்றே உள்ளத்திலும் உறுதிமிக்கவராக வாழ்ந்தவர். மருத்துவர்களே கைவிட்டபோதும் தனது மனோபலத்தால் தன் ஆயுட்காலத்தை அதிகரித்துக்கொண்ட முகமது அலி இன்று நம்மிடையே இல்லை.

அவரது வாழ்வில் நடந்த சில சுவாரஷ்ய சம்பவங்கள் இங்கே...

ali.jpg

முதல் குத்து சைக்கிள் திருடனுக்கு!

1942 ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக்காவின் கென்டகி நகரில் பிறந்தார் காசியஸ் மார்செலஸ் கிளே. ஆம்... முகமது அலியின் இயற்பெயர் இதுதான். முகமது அலி குத்துச்சண்டையை தேடிப் போகவில்லை. அது அவரது ரத்தத்திலேயே ஊறியிருந்தது. 12 வது வயதில், அவரது மோட்டார் சைக்கிளை திருட ஒருவன் முயற்சிக்க, அவனைப் பிடித்து சரமாரியாகக் குத்தினார்.

நொடி நேரத்தில் பல குத்துகள் விட்டதைப் பார்த்த ஜோ மார்டின் என்ற போலீஸ்காரர், தாக்குதலுக்கு காரணத்தை கேட்க, “அந்தத் திருடனை துவம்சம் செய்ய வேண்டும்” என்றான் சிறுவன் முகமது அலி.
அவனது திறமையைப் பார்த்து வியந்த மார்டின்தான், அலியை  குத்துச்சண்டையின் பக்கம் திசை திருப்பியவர். அவரே பயிற்சியாளராகவும் ஆனார் சிறுவன் முகமது அலிக்கு.

பள்ளிக்கு செல்ல மற்ற குழந்தைகள் பேருந்தில் ஏறிச்செல்ல பேருந்துடன் ஓடியே பள்ளிக்கு செல்வாராம் முகமது அலி.

ஆட்டோகிராப் போட மறுக்காதவர்

1940களில் குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் சுகர் ரே ராபின்சன். இவர்தான் முகம்மது அலியின் ஆதர்சன நாயகனும் கூட. ஒருமுறை அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றார் அலி.

ஆனால் சுகர் ரே, 'இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை...போ ' என்று எரிச்சல்பட நொந்துவிட்டார் அலி. தன்னைப் போல இனி எந்த சிறுவனும் மனம் நோகக்கூடாது என்று அன்று முடிவெடுத்தார் அலி.  எத்தனை பிஸியாக இருந்தாலும், யார் எந்த சூழ்நிலையில் ஆட்டோகிராப் கேட்டாலும் மறுக்காமல் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார் அன்றுமுதல்.


allll.jpg

ஒலிம்பிக் பதக்கத்தை ஆற்றில் வீசினார்

1960 ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ‘லைட் ஹெவி வெயிட்’ பிரிவில் முகமது அலி தங்கப் பதக்கம் வென்றார்.  அப்போது அமெரிக்காவில் கறுப்பர் இனத்தவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. ஹோட்டல்களில் சாப்பிடக் கூட கறுப்பின மக்களுக்கு அனுமதி கிடையாது அப்போது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி முடிந்து நாடு திரும்பிய அலி, ஒரு ஹோட்டலுக்கு காபி சாப்பிட  சென்றார். “ நாங்கள் கறுப்பின மக்களுக்கு எதுவும் தருவதில்லை” என அங்கு பணியில் இருந்த பெண் சொன்னார். கடும் கோபமடைந்தார் முகமது அலி. விறுவிறுவென அங்கிருந்து வெளியேறிய முகம்மது அலி, தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஓகியோ நதியில் வீசியெறிந்தார். இந்த சம்பவத்தை பின்னாளில் தனது சுயசரிதையில் குறிப்பிட்ட அவர், “பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த  பதக்கத்தை அணிய விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார்.

போரை எதிர்த்த அஹிம்சைவாதி

1967ஆம் ஆண்டு நடந்த வியட்நாம் போரில் அமெரிக்க படையினருக்கு எதிரான நிலை எடுத்தார். பலமுறை எச்சரிக்கப்பட்டும், “போர் என்பது தனது மத கோட்பாடுகளுக்கு எதிரானது” என்றார் அலி. இதனால் அவர் பெற்ற 'ஹெவி வெயிட் சாம்பியன்' பட்டம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதற்காக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களும் அவருக்குத் தடை விதித்தன.

அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத வகையில் அவரது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டது. ஆனாலும் மனம் தளரவில்லை முகமது அலி. தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றார்.

 சுமார் மூன்றரை ஆண்டு காலம் குத்துச்சண்டடை பக்கமே தலை வைத்து படுக்காமல் வைராக்கியமாக இருந்துக் காட்டினார் அலி. பின்னர் களம் கண்ட பிறகும் முன்பிருந்த வேகமும் சுறுசுறுப்பும் சற்றும் குறையாமல் போட்டிகளில் பங்கேற்றார்.


muh.jpg

சொல்லி அடிக்கும் கில்லி

போட்டிக்கு முன்னரே, எதிராளிகளை தனது சொற்களால் தாக்கத் தொடங்குவது முகமது அலியின் சிறப்பு. ஒருமுறை சோனி லிஸ்டனுடன் போட்டியிட்டபோது, போட்டிக்கு முன்பாகவே 'லிஸ்டன் ஒரு கரடி. அவரை வென்ற பிறகு ஒரு மிருகக் காட்சி சாலையை அவருக்குப் பரிசளிப்பேன்' என்று
கூறினார் அலி. சொன்னதைப் போலவே லிஸ்டனை அந்த போட்டியில் திணறடித்து வெற்றிபெற்றார் அலி.

இந்த போட்டியில் லிஸ்டனுக்கு மருத்துவ உதவி செய்த அவரது மருத்துவர்கள், சூட்சுமமாக அவரது கிளவுசில் மருந்தைத் தடவிவிட, அது அலியின் கண்ணில் பட்டு அலியின் பார்வை மங்கியது. லிஸ்டன் இதற்கு முன்பும் பலமுறை இப்படி பல வீரர்களை வீழ்த்தியுள்ளார். எரியும் கண்களில் கண்ணீரோடு விளையாடிய அலி, கோபத்தை தனது பன்ச்களில் காட்டி லிஸ்டனை நிலைகுலையவைத்து நாக்-அவுட் முறையில் வென்றார்.

தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே அலி, நாக்-அவுட் முறையில் தோற்றிருக்கிறார்.

மரணத்தை தழுவிய முகமது அலி
 
குத்துச்சண்டை  போட்டிகளில் விளையாடி பலமுறை தலையில் அடிபட்டதால், முகமது அலிக்கு பின்னாளில் தலையில் ரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியது. கடந்த  2013 ல் கடும் உடல்நலைக் குறைவால் பாதிக்கப்பட்டார் அலி. ஓரிரு மாதங்கள் கூட தாங்கமாட்டார் என மருத்துவர்கள் கைவிரித்தனர். ஆனால் அதையும் தாண்டி வாழ்ந்தார் அலி. அடுத்தடுத்த ஆண்டுகளில் நிமோனியா பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, என பல நோய்கள் அலியை வதைக்க ஆரம்பித்தன. தீவிர சிகிச்சைகளும் பலனளிக்காமல் உலகின் குத்துச்சண்டை கதாநாயகன் முகமது அலி இன்று நம்மை அழவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலிகள்!

http://www.vikatan.com/news/sports/64865-why-muhammad-ali-through-gold-medal-in-river.art

  • கருத்துக்கள உறவுகள்

mgrmohamedali600121.jpg

விளையாட்டுப் போட்டியில் " த கிரேட்டஸ்ட்" என்ற தகுதியைப் பெற்ற ஒரே வீரராக போற்றப்பட்டவர்,  குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி.  சில வருடங்களாக சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த முகமது அலி, அரிசோனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து இன்று காலை மரணமடைந்தார். 

அமெரிக்காவில் 1942-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி பிறந்த அலியின்  இயற்பெயர் காசியஸ் மார்செல்லஸ் கிளே ஜூனியர். அவருக்கு "தி கிரேட்டஸ்ட்', "தி சாம்ப்', "தி லூயிஸ் வில்லி லிப்' என்ற  'நிக்' நேம்களும் உண்டு.  1964-ல் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட போது அதில் தன்னை இணைத்துக்கொண்டு தனது பெயரை முகமது அலி என மாற்றிக்கொண்டார். பின்னர் 1975-ல் சன்னி முஸ்லிம் பிரிவுக்கு முழுமையாக மதம் மாறினார். அலியின் மகள் லைலா அலி, தந்தையைப் போன்றே குத்துச் சண்டையை  தீவிரமாக நேசித்ததால், அவரும் பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

முகமதுஅலி யார் ?

mohammedali250.jpgதன்னுடைய பதினெட்டாவது வயதிலேயே உலகளாவிய குத்துச் சண்டை விருதை வென்றவர், அலி. 1960-ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை எளிதாகத் தட்டிச் சென்றார். ஆனால், குத்துச் சண்டை உலகம் முகமது அலியை அப்போது,  சாதாரணமான ஒரு டெக்னிகல் பாக்ஸராகத்தான்  பார்த்தது. 
 
சாம்பியன் ஆனார்


1965 பிப்ரவரி 25 ந்தேதி முகமது அலியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை நாளாக அமைந்தது. ஆம், அன்றுதான்  'சோனி லிஸ்டன்' என்ற ( 'ஆபத்தான வீரர்' என்றறியப்பட்டவர் )  முதல் நிலை குத்துச் சண்டை வீரரை  தன்னுடைய 7-வது சுற்றில் டெக்னிக்கல் குத்துக்களால் வீழ்த்தினார். இதையடுத்து,  உலக ஹெவி வெய்ட் குத்துச் சண்டை  சாம்பியன் விருது முதன் முதலாக அலி, கைக்கு வந்து சேர்ந்தது. 
 
மீண்டும், மீண்டும் வெற்றி !

அலியை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு தீவிர பயிற்சியை மேற்கொண்ட  சோனி லிஸ்டன் மீண்டும் ஒருமுறை அலியை களத்தில் சந்தித்தார். ஆனால், அதிக வேலை வைக்காமல் முதல் ரவுண்டிலேயே  சோனி லிஸ்டனை நாக்-அவுட் முறையில் மண் கவ்வ வைத்தார் முகமது அலி.

பறிபோன பதக்கம்

அமெரிக்க ராணுவத்தில் கட்டாயமாக  சேரும் ஆணையை ஏற்க மறுத்ததால்  குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கு  சுமார் 4 ஆண்டுகளுக்கு தடையும், முகமது அலியின் சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது. அந்த பட்டத்தை  மீண்டும் தக்க வைத்துக் கொள்ள, வலிமை மிக்க 'ஜோ- பி-ரேசியர்'  என்ற வீரருடன் மோதி முதல்முறை அலி தோல்வியுற்றார். ஆனால், அவரது விடா முயற்சி, 1974-ல்  மீண்டும் , ஜோ பிரேசியருடன் மோதி உலக சாம்பியன் விருதை  கைப்பற்ற காரணமானது. 

வெற்றியும், தோல்வியும்

 அதேபோல் முதலில் மோதி, தோல்வியைக் கொடுத்த 'லியோன் ஸ்பிங்ஸ்' என்ற வீரரை சில ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும்  களத்தில் சந்தித்து மூன்றாவது முறையாக  உலக சாம்பியன் விருதைக் கைப்பற்றினார் அலி. நான்காவது முறையும் அதே பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள 'லாறி-ஹோம்ஸ்' என்ற மனித மலையுடன் மோதி தோல்வியைத் தழுவினார்.

தன்னை தோற்கடித்தவர்களையே மீண்டும் தோற்கடித்து "ஒவ்வொரு வெற்றியும், முயற்சியாலும், பயிற்சியாலும் மட்டுமே சாத்தியப்படும், வெற்றி என்பது, எவர் ஒருவருக்கும் தனிப்பட்ட சொத்தல்ல" என்று வெற்றி மேடையிலேயே வெளிப்படையாக அறிவித்து பதக்கத்தை முத்தமிட்டவர் அலி. 

இதன் பின்னரே அலிக்கு 'தி கிரேட்டஸ்ட்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அலியின் வாழ்க்கையை மையமாக வைத்து 'தி கிரேட்டஸ்ட்' என்ற சினிமாப்படமும் இதன் பின்னர் வெளியாகி அவர் புகழை பரப்பியது.

mgrmohamedali60021.jpg

5 முறை தோல்வி , 56 முறை வெற்றி

தன்னுடைய வாழ்நாளில்  61 முறை மேடையேறி குத்துச் சண்டை  போட்ட அலி, அதில் 56 முறை வெற்றியை ருசித்தவர். அவருடைய தோல்வியானது, மொத்தமே ஐந்துமுறைதான் இருந்தது. அதில் 37 முறை எதிராளியை மண் கவ்வ வைத்து எழுந்திருக்க முடியாத அளவு 'நாக்-அவுட்' முறையில் 'பஞ்ச்' களை விட்டவர் அலி. 

வெற்றிக்கு காரணம்

ஒருமுறை முக்மது அலியிடம்,  ' புதிதாய் களம் காணும் வீரர்களுக்கு ஏதாவது சொல்லுங்களேன் ?' என கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அலி, "வீரர்கள்  உடற்பயிற்சி கூடங்களில் மட்டுமே உருவாக முடியாது. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அதேபோல், அவர்களுக்கு  திறமையும் முக்கியம்,  மனோதிடமும் முக்கியம். அதில், மனோதிடம் தான் மிகவும் முக்கியம்" என்றார்.

முகமது அலியை ஏன் விரும்புகின்றனர் ?

ஃபவுல் -பன்ச் எனப்படும் விதிமுறைகளை மீறிய குத்துக்களை எதிராளி மீது விடுவதும், எதிராளியை ஏமாற்றி குத்துவதும், களைப்பாகி விட்டது போல் நடித்து 'மவுத்- கார்ட்'  டை (பற்கள், தாடைகளின் பாதுகாப்புக்காக வாய்க்குள் பொருத்தப் படும் ரப்பர் தட்டை) கீழே துப்புவதும் போன்ற விரும்பத்தகாத செயல்களை தன்னுடைய வாழ்நாளில்  எப்போதும் செய்யாத 'டீஸன்ட்சி - பாக்ஸர்' என்ற நற்பெயர் அலிக்கு இருந்ததால்தான் அவரை உலகம் முழுவதும் குத்துச் சண்டை ரசிகர்கள் மட்டுமல்ல,  குத்துச் சண்டை வீரர்களும் கொண்டாடுகின்றனர்

சென்னையும், முகமது அலியும்

அது, 1980-ம் வருடம்...சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை பிரியர்கள் 20 ஆயிரம் பேர்களுக்கு மேல் திரண்டிருக்க,  அரங்கமோ விசில் சத்தங்களாலும், கைதட்டல் களாலும் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது. "என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்" என்று சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரிலேயே சென்னைக்கு வந்திருந்தார் அலி.   விழாவுக்கான ஏற்பாடுகளை அன்றைய ஒய்.எம்.சி.ஏ. பாக்ஸிங் கிளப் (நந்தனம்)  செயலர், ஹெச்.மோகனகிருஷ்ணன் ( எம்.ஜி.ஆர். முகமது அலிக்கு மாலையிடும் படத்தில் உடன்  இருப்பவர்) செய்திருந்தார்.
 
அலியுடன் மோதிய சென்னை வீரர்கள்


காட்சி குத்துச் சண்டைப் (ஷோ- பைட்) போட்டியில் அலி பங்கேற்று மோதுகிறார் என்பதே மக்கள் அங்கு திரளக் காரணம். முதல்,  'ஷோ- பைட்' டில்  வீரர், 'ஜிம்மி எல்லிஸ்' முகமது  அலியுடன் மோத, இரண்டாவது ஷோ- பைட்டில் தமிழ்நாடு சாம்பியனான ராக்கி-ப்ராஸ், அலியுடன் மோதினார் .
 
'முகமது அலியுடன் மோதிய ஷோ- பைட்தான், எட்டாவது வகுப்பு கூட  படித்து முடிக்காத என்னை  தென்னக ரெயில்வேயில் விளையாட்டு வீரருக்கான தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள காரணமாக இருந்தது' என்று பின்னாளில் சொல்லி பெருமையுடன் நினைவு கூர்ந்தார், ராக்கி-ப்ராஸ்.
 
எம்.ஜி.ஆரிடம் அலி கேட்ட மீன் குழம்பு

ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்...என அலியிடம் கேட்டார். அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம் இப்படி ஒருவர் கேட்டால் அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.

ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம்,  மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/64880-do-you-know-what-did-muhammad-ali-ask-mgr.art

  • தொடங்கியவர்

மூன்று முறை சாம்பியன் விருதை வென்ற முகமது அலி! - சில நினைவுக் குறிப்புகள்!

ObitMuhammadAli.jpg

குத்துச் சண்டையில்  'தி கிரேட்' என்ற பெயரை பெற்றவர் முகமது அலி. அளப்பரிய பல சாதனைகளை செய்து குத்துச் சண்டையின் பக்கம் உலக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலியின் குத்துச் சண்டை வாழ்க்கையில் நிகழ்ந்த சில பதிவுகள் இங்கே...

*  பதினெட்டு வயதில் அனைத்துலக குத்துச்சண்டை விருதை முதலில் பெற்றார்.

* 1960 ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்  போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.


 

*  1965 ம் வருடம் சோனி லிஸ்டன் என்ற உலக வீரரை வீழத்தி, முதல் முறையாக 'உலக ஹெவி வெயிட்' (world heavyweight champion) விருதை பெற்றபோதுதான் குத்துச் சண்டையில் ஒரு புதிய சகாப்தம் துவங்கியது.

*  1964 முதல் 1967 வரை உலக குத்துச் சண்டை நாயகன் இவர்தான்.

*  அமெரிக்க ராணுவத்தில் சேவை செய்ய மறுத்ததால்,  அமெரிக்க அரசால் அவருக்கு கொடுக்கப்பட்ட விருது திரும்ப பெறப்பட்டது. மீண்டும் அந்த விருதைப் பெற, ஜோ பிரேசியருடன் மோதினார். ஆனால் தோல்வியை தழுவினார்.



*  கடின பயிற்சியில் இறங்கியவர்,1974 ம் ஆண்டு, அதே ஜோ பிரேசியருடன் மோதினார். உலக முழுவதும் இந்தப் போட்டியை ஆவலோடு எதிர்ப்பார்த்து. அந்தப் போட்டியில் ஆக்ரோஷம் காட்டிய முகமது அலி, தன்னை வீழ்த்தியவரை வீழ்த்தி உலக விருதை மீண்டும் கைப்பற்றினார்.

* லியோன் ஸ்பின்க்ஸ் (Leon Spinks) என்ற வீரருடன் மோதி தோல்வியைத் தழுவிய முகமது அலி , 1978-ம் ஆண்டு, அதே ஸ்பின்க்ஸை-ஐ வீழ்த்தி, உலக விருதை மூன்றாவது முறையாக மீண்டும் கைப்பற்றினார்.



* குத்துச் சண்டை விளையாட்டில்  தன்னை வீழ்த்தியவர்களையே மீண்டும் வீழ்த்தி, உலக குத்துச் சண்டை சாம்பியன் விருதை மூன்று முறை கைப்பற்றியவர் முகமது அலி. அதனால்தான் உலக குத்துச் சண்டையில் முடிசூடா மன்னனாக பார்க்கப்பட்டார்.

*   61 முறை ரிங்கில் இறங்கியவர், 56 முறை வெற்றி பெற்றுள்ளார். அதில் 37 முறை நாக் அவுட் வெற்றி என்றால், இவருடைய குத்து எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

* The greatest என்ற திரைப்படம், இவரது கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான்.

http://www.vikatan.com/news/sports/64873-boxer-muhammad-ali-the-greatest-of-all-time.art

  • தொடங்கியவர்

அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்தவர் முகமது அலி

 

160604092028_muhammed_ali_640x360_getty.

 ஒரு போட்டியின் போது, ரிங்கிக்குள் நான் மாபெரும் மனிதன் என சீறிய முகமது அலி

முகமது அலி தன்னைத்தானே, 'மாபெரும் மனிதன்’ என அறிவித்துக் கொண்டார்.

''பாக்ஸிங் ரிங்குக்குள் பட்டாம் பூச்சியை போல பறப்பேன், தேனியை போல கொட்டுவேன்'' என்பது முகமது அலியின் மிக பிரபலமான வரி.

 

160604092516_muhammad_ali_640x360_getty.

 ரிங்கிக்குள் தேனியைப் போல கொட்டும் முகமது அலி

1964ல் குத்துச்சண்டையில் ஜாம்பவானாக இருந்த சோனி லிஸ்டனை முகமது அலி வீழ்த்தினார்.

ஜோ ப்ரேஸியருடன் பரப்பரபான சண்டைகளை போட்ட முகமது அலி, ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தி 'ரம்பிள் இன் த ஜங்கிள்' பட்டத்தை கைப்பற்றினார் .

160604063523_ali_foreman_victory_1974_64

 

 8வது சுற்றில் ஜார்ஜ் ஃபோர்மேனை நாக் அவுட் செய்து 'ரம்பிள் இன் த ஜங்கிள்' பட்டத்தை வென்றார் அலி

இனவெறிக்கு எதிராக கடுமையாக செயல்பட்டவர் முகமது அலி. வியட்நாமுக்கு எதிரான போரின்போது அமெரிக்க ராணுவத்தில் இணைந்து பணியாற்ற மறுத்தது மற்றும் 'நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்ற கருப்பின இஸ்லாம் குழுவில் இணைந்தது ஆகிய நடவடிக்கைகளால் அமெரிக்கர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

160604063941_muhammad_ali_muslims_640x36  சிகாகோ நகரில் நடைபெற்ற இஸ்லாம் கூட்டத்தில் பங்கேற்ற முகமது அலி

அவரது மத நம்பிக்கைகள் காரணமாக, வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்த்தால், அவரது உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் அவரது குத்துச்சண்டை போட்டிகள் முடங்கிப் போயின.

http://www.bbc.com/tamil/global/2016/06/160604_muhammadali_story

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் ஒருவகையில் கருப்பு நிறத்தவர்களின் கைகளை ஒங்க வைத்தவர்.
கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்றும் அகங்காரம் ஆணவத்துடன் குத்துச்சண்டையில் ஈடுபட்ட ஒரு வீரன்.
இருந்தும்  ஒரு எறும்பைக்கூட அடிக்கமுடியாத நிலையிலேயே இவரது கடைசிக்காலம் இருந்தது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முகமது அலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். குத்துச்சண்டை என்றால் அலி எனும் அளவுக்கு கொடி கட்டிப்பறந்தவர். ஒலிம்பிக்கொடியை கை நடுங்கியபடி கொண்டு சென்றது கண்கலங்க வைத்தது.

  • தொடங்கியவர்

காணாமல் போன சைக்கிளும் முகமது அலி எடுத்த முடிவும்

 
 
1965-ம் ஆண்டு நடந்த குத்துச்சண்டை போட்டியில் சோனி லிஸ்டன் என்ற சக போட்டியாளரை வீழ்த்தும் முகமது அலி.
1965-ம் ஆண்டு நடந்த குத்துச்சண்டை போட்டியில் சோனி லிஸ்டன் என்ற சக போட்டியாளரை வீழ்த்தும் முகமது அலி.

முகமது அலி ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக உருவெடுப் பதற்கு உந்துசக்தியாக இருந்ததே அவர் பிரியமாக வைத்திருந்த சைக்கிள்தான். 12-வது வயதில் அவர் ஆசையாக வைத்திருந்த சைக்கிள் திருடு போனது. இதனால் கோபமடைந்த முகமது அலி, அந்த சைக்கிள் திருடன் தன் கையில் கிடைத்தால் அவன் முகத் தில் ஓங்கிக் குத்துவேன் என்று போலீஸ்காரரிடம் கூறினார். தான் உறுதியான உடல்கட்டையும், குத்துச் சண்டையையும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அப்போது அவர் முடிவெடுத்தார்.

அந்த வழக்கை விசாரித்த ஜோ மார்ட்டின் என்ற போலீஸ்காரரிடம் தன் எண்ணத்தைக் கூற, அவர் முகமது அலிக்கு பயிற்சி கொடுத் தார். அப்போது அவரது உடல் எடை 89 பவுண்டுகள் மட்டுமே. ஆனால் சில காலம் கழித்து குத்துச்சண்டை களத்தில் பீமனாய் நின்றபோது அவரது எடை 210 பவுண்டுகள் உயரம் 6.3 அடிகள்.

முகமது அலி புகழ்பெறுவதற்கு முன்பு கருப்பர் என்பதால் சில ஓட்டல்களுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் பல சமயங்களில் முகமது அலி காரில் காத்திருக்க, அவரது பயிற்சியாளர் மார்ட்டின், ஓட்டலில் இருந்து உணவை வாங்கிவந்து கொடுப்பார். ஆனால் அவர் தங்கப் பதக்கம் வாங்கிய பிறகு நிலைமை மாறியது. முன்னர் அவரை அனுமதிக்காத ஓட்டல்களே பின்னர் அவருக்கு பாராட்டு விழாக்களை நடத்தின.

1967-ம் ஆண்டு வியட்நாமுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரின்போது ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற முகமது அலிக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் முகமது அலி இதை ஏற்க மறுத்தார். இதனால் 1964-ல் இவர் பெற்ற ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. 1970-ம் ஆண்டுவரை குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் கலங்காத முகமது அலி, இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஆர்வம் காட்டினார். 1971-ம் ஆண்டு முகமது அலி மீண்டும் குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் குத்துச்சண்டை களத்தில் குதித்தார்.

சென்னை வருகை

1980-ம் ஆண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் சென்னை வந்த முகமது அலி, ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த காட்சி போட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இதை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து எம்.ஜி.ஆர் மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது விருப்பத்துக்கு இணங்க எம்.ஜி.ஆரின் வீட்டில் இருந்து முகமது அலிக்கு உணவு சமைத்து அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பயணத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் அவர் சந்தித்தார்.

http://tamil.thehindu.com/sports/காணாமல்-போன-சைக்கிளும்-முகமது-அலி-எடுத்த-முடிவும்/article8693012.ece?homepage=true

  • தொடங்கியவர்

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலிக்கு உலகளவில் அஞ்சலி

 

தன்னுடைய 74-வது வயதில் காலமான குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலிக்கு உலகளவில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

160604151419_muhammad_ali_640x360_gettyi
 

உண்மைக்காக போராடியவர் என்று முகமது அலியை அழைத்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கடினமான நேரத்தில் உறுதியாக நின்றவர். அவருடைய வெற்றி இன்றைய அமெரிக்க மக்களுக்கு உதவியுள்ளது என்று புகழ்ந்துள்ளார்.

160604153214_muhammad_ali_640x360_gettyi

 

குத்துசண்டையில் உலக சாம்பியனாக வருவேன். உனக்கு உலகை சுற்றி காட்டுவேன். அம்மாவுக்கு புதிய வீடு வாங்கி கொடுப்பேன் என்று சிறுவனாக இருந்தபோதே தன்னிடம் கூறிய அனைத்தையும் முகமது அலி நிறைவேற்றியுள்ளதாக சகோதரர் ரஹ்மான் அலி நினைவுகூர்ந்துள்ளார்.

160604152853_muhammad_ali__640x360_getty

 

குத்துச்சண்டை போட்டியில் மூன்று முறை உலக ஹெவி வெய்ட் சாம்பியனாக ஜொலித்த இவர் சிவில் உரிமையை பரப்புரை செய்தவர்.

 

  160604124816_muhammad_ali_in_kabul_nomem

 

தன்னைத்தானே, 'மாபெரும் மனிதன்’ என அறிவித்துக் கொண்ட முகமது அலி, பரபரப்பான போட்டிகளில் திரில் வெற்றிகளை குவித்தவர்.

160604113431_muhammad_ali_in_kabul_nomem 

இனவெறிக்கு எதிராக கடுமையாக செயல்பட்டவர்.

160604113321_muhammad_ali_in_kabul_nomem 

வியட்நாமுக்கு எதிரான போரின்போது அமெரிக்க ராணுவத்தில் இணைந்து பணியாற்ற மறுத்தது மற்றும் 'நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்ற கருப்பின இஸ்லாம் குழுவில் இணைந்தது ஆகிய நடவடிக்கைகளால் அமெரிக்கர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

160604113023_muhammad_ali_in_kabul_nomem 

அவரது மத நம்பிக்கைகள் காரணமாக, வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்ததால், அவரது உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் அவரது குத்துச்சண்டை போட்டிகள் முடங்கின.

 

http://www.bbc.com/tamil/global/2016/06/160604_muhamadali?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்

தயார் நிலையில் முகமது அலியின் இறுதி சடங்கு ஏற்பாடுகள்

 

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்திலுள்ள, மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் சொந்த ஊரான லூயிஸ்வில்லில் அவரது இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

160604092700_mohamed_ali_trend_640x360_g

 

 வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள முகமது அலியின் இறுதி சடங்கு

இந்த உலகின் ஒரு குடிமகனான வாழ்ந்த முகமது அலி, வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தனது இறுதி சடங்கில் சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருந்து பலதரபட்ட மக்களும் கலந்து கொள்ள விரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறிப்பிடப்படாத இயற்கை காரணங்களால் குருதியில் நச்சுத் தன்மை உண்டானதால் முகமது அலி இறந்து விட்டதாக முகமது அலியின் குடும்ப செய்தி தொடர்பாளர் பாப் கன்னல் தெரிவித்துள்ளார்.

முகமது அலியின் இறுதி சடங்கு, அவரே திட்டமிட்டிருந்தபடி பல்மத தன்மையில் இருக்கும் என்றும், ஆனால் அவரது நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு இஸ்லாமிய முறைப்படி அமையும் என்று கூறப்படுகிறது.

74 வயதில் மரணமடைந்த குத்துச்சண்டை அதிக எடை பிரிவின் மூன்று முறை சாம்பியனான முகமது அலியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கலந்து கொண்டு, மறைந்த முகமது அலிக்கு புகழாரம் சூட்டவுள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160605_mohammedali?ocid=socialflow_facebook

 

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்



முஹம்மட் அலி: 1942 - 2016: ஓய்ந்தார் 'அதிசிறந்தவர்'
 
 

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

உலகில் தோன்றிய விளையாட்டு வீரர்களில் பலர், தங்களுடைய விளையாட்டுகளில் மிகப்பெரும் நட்சத்திரங்களாக இருந்திருக்கின்றனர். ஆனால், விளையாட்டையும் தாண்டி, மக்களின் வாழ்வில் இரண்டறக் கலக்கும் வாய்ப்பு, வெகுசிலருக்கே வாய்த்திருக்கிறது. அவ்வாறானவர்களில், முஹம்மட் அலி முக்கியமானவர்.

article_1465151433-AlaiLEAD-Photo.jpg

உலகில் தோன்றிய மிகச்சிறந்த மிகுஎடைக் குத்துச்சண்டை வீரராகக் கருதப்படும் முஹம்மது அலி, மிகுஎடைப் பிரிவில் மூன்றுமுறை சம்பியன் பட்டம் வென்ற முதலாமவராகக் காணப்படுகிறார். ஆனால், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை), தனது 74ஆவது வயதில் அவர் உயிரிழந்த செய்தி வெளிவந்தபோது, அவர் மீதான நினைவுகள், வெறுமனே விளையாட்டு வீரராகக் காணப்பட்டிருக்கவில்லை. மாறாக, பலருடைய வாழ்வின் தூண்டுகோலாக இருந்த மனிதனொருவரின் இறப்பாகவே கருதப்பட்டது.

article_1465151540-AlaiPhoto-4.jpg

ஜனவரி 17, 1942இல் கஸ்சியுஸ் மார்செலஸ் கிளே (இளையவர்) என்ற பெயரில், அமெரிக்காவின் கென்டக்கியில் பிறந்தவரே, பின்னாளில் முஹம்மது அலியாகவும் உலகில் 'அதிசிறந்தவராகவும்" மாறினார். பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா சுதந்திரமடைந்தது 1776ஆம் ஆண்டு என்பதோடு, அதற்கு முன்னரிருந்தே, அமெரிக்காவில் அடிமைகளின் வருகை காணப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஏபிரஹாம் லிங்கன், 1863ஆம் ஆண்டு விடுத்த ஜனாதிபதி ஆணையைத் தொடர்ந்தும் 1865ஆம் ஆண்டு, அமெரிக்க அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலமாகவும், அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. ஆனால், 1942ஆம் ஆண்டு கஸ்சியுஸ் மார்செலஸ் கிளே பிறந்தபோதும் கூட, கறுப்பின அமெரிக்கர்கள், இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்பட்டனர். அவ்வாறான சூழலிலிருந்து உருவானமை தான், அவரை மாபெரும் நட்சத்திரமாக, உலகம் முழுவதும் அறியப்படும் ஒருவராக மாற்றியது.

தனது 12 வயதில் குத்துச்சண்டைப் போட்டிகளுக்காகப் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்த கஸ்சியுஸ் மார்செலஸ் கிளே, படிப்பில் அவ்வளவு ஆர்வம் காட்டியிருக்கவில்லை. 1960ஆம் ஆண்டு தனது பாடசாலையிலிருந்து அவர் வெளியேறும் போது, 391 பேரைக் கொண்ட பாடசாலையில், 376ஆவது நபராக அவர் தரப்படுத்தப்பட்டிருந்தார்.

குத்துச் சண்டைப் போட்டிகளில் அவர் எவ்வாறு பங்குபற்ற ஆரம்பித்தார் என்பதும் சுவாரசியமான ஒரு கதை. 1954ஆம் ஆண்டில், அவருக்கு மிகவும் பிடித்தமான அவரது சைக்கிள், காணாமல் போனது. அதுகுறித்து அவர், வெள்ளையின பொலிஸ் அதிகாரியான ஜோ மார்ட்டினிடம் முறையிட்டார். அந்த சைக்கிள் கிடைத்திருக்கவில்லை, ஆனால், குத்துச்சண்டைக் கழகம் ஒன்றின் ஏற்பாட்டாளரான மார்ட்டினால், குத்துச்சண்டைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் மார்செலஸ் கிளே.

1960ஆம் ஆண்டு, றோமில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலகு மிகுஎடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் கிளே. இதன்மூலம், உலகுக்கு அறிமுகமானார். ஆனால், அவரது வாழ்வை மாற்றிய முக்கிய போட்டி, 1964ஆம் ஆண்டு நடந்தது. மார்செலஸ் கிளே தனது 22ஆவது வயதில் அமெரிக்காவைச் சேர்ந்த சொனி லிஸ்டனை, உலக மிகுஎடை குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சந்தித்தார்.

article_1465151723-AlaiPhoto-3.jpg
இந்த சொனி லிஸ்டன், சாதாரணமானவர் கிடையாது. தனது பயமுறுத்தக்கூடிய உடலமைப்புக்காகவும் குத்தும் திறனுக்காகவும் வலிமைக்காகவும் அறியப்பட்டவர். இதற்கு முன்னர் இடம்பெற்ற உலக மிகுஎடை குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் சம்பியனாகி, நடப்புச் சம்பியனாகவே, கஸ்சியுஸ் மார்செலஸ் கிளேயை எதிர்கொண்டார். எனவே, சொனி லிஸ்டனுக்கு இலகுவான வெற்றி கிடைக்குமென்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது.

ஆனால், நடந்ததோ அனைவரும் எதிர்பார்த்தமைக்கு மாறாக. 32 வயதான நடப்புச் சம்பியனான சொனி லிஸ்டன், 22 வயதான ஆபிரிக்க அமெரிக்கரான கஸ்சியுஸ் மார்செலஸ் கிளேயால் தோற்கடிக்கப்பட்டார். அந்த வெற்றி, வெறுமனே விளையாட்டில் கிடைத்த வெற்றி கிடையாது. மாறாக, தொடர்ந்தும் அடக்குமுறைக்கு முகங்கொடுத்துவந்த ஆபிரிக்க அமெரிக்க மக்கள், தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதினர். அதுவும், வெற்றிக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த கஸ்சியுஸ் மார்செலஸ் கிளே, 'நான் தான் அதிசிறந்தவன்" என்று தெரிவித்தமை, கறுப்பின மக்கள், கட்டமைப்புரீதியான ஒடுக்குமுறைகளைத் தாண்டி, வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியது. அமெரிக்கா முழுவதுமே அறியப்பட்ட பெயராக கஸ்சியுஸ் மார்செலஸ் கிளேயின் பெயர் மாறியது. வெறுமனே விளையாட்டு வீரனாக இல்லாமல், கறுப்பின மக்களின் உரிமைக்கான குரலை வழங்கும் ஆளுமையாக கஸ்சியுஸ் மார்செலஸ் கிளே நோக்கப்பட்டார்.

அதேபோல், சர்ச்சைகளை ஏற்படுத்துவதிலும் அவர் குறைந்தவரல்லர் என்பதையும் அது வெளிப்படுத்தியது.
சர்ச்சைகளின் ஓர் அங்கமாக, உலக மிகுஎடை சம்பியனாகத் தெரிவாகி இரண்டே இரண்டு நாட்களில், சர்ச்சைக்குரிய இஸ்லாமியப் பிரிவான இஸ்லாமிய தேசத்தில் (Nation of Islam) இணைந்து கொண்ட மார்செலஸ் கிளே, தனது பெயரை முஹம்மட் அலி என மாற்றிக் கொண்டார். இந்தப் பெயரே, இன்றுவரை அவர் அறியப்படும் பெயராக மாறியது. குறித்த சமயப் பிரிவு, மிகவும் சர்ச்சைக்குpயதாகக் காணப்பட்டது. அதன் தலைவர்களாக எலிஜா முஹம்மட், மல்கொம் எக்ஸ் ஆகியோர் காணப்பட்டதோடு, அப்பிரிவு, வெள்ளையின ஆண்களை, தீமையான அரக்கர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்தது. அதன்காரணமாக, இனவாதக் குற்றச்சாட்டுகள், அவ்வமைப்பு மீது காணப்பட்டன.

இவற்றுக்கு மத்தியிலும், விளையாட்டின் பக்கம் அவரது கவனம் விட்டுப் போயிருக்கவில்லை. 1967ஆம் ஆண்டில் அவர், மீண்டும் உலக மிகுஎடை சம்பியனாக மாறினார். ஆனால், வியட்னாம் போர் ஆரம்பித்திருந்த நிலையில், அமெரிக்க இராணுவத்தில் சேர்வதற்கு, முஹம்மட் அலி எதிர்ப்புத் தெரிவித்தார். 'வியட் கொங்குடன் (வியட்னாமின் தேசிய விடுதலை முன்னணிஃஅதன் உறுப்பினர்கள்) எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. எந்தவொரு வியட் கொங்கும் என்னை நிகர் (கறுப்பினத்தவர்களை இழிவுபடுத்தும் வார்த்தை) என அழைத்ததில்லை" என, பகிரங்கமாகவே தெரிவித்த அலி, வியட்னாம் போரில் இணையாமை மட்டுமல்லாது, அந்தப் போருக்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். தவிர, இஸ்லாமியத் தேசத்தின் கடுமையான போக்கும் அவரது, கருத்தில் வெளிப்பட்டது. 'எனது எதிரி, வெள்ளையின மக்களே, வியட் கொங் கிடையாது" என்று அவர், சர்ச்சைக்குரிய விதத்தில் தெரிவித்திருந்தார். வியட்னாம் போருக்கு, அமெரிக்காவில் பெரும்பான்மை ஆதரவு காணப்பட்டிருந்த நிலையில், அதை நிராகரித்து, அதற்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டமை, அவரது துணிச்சலையும் தன் கொள்கைகளில் அவருக்கிருந்த உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியது.

இராணுவத்தில் இணைய மறுத்தமை காரணமாக, அவருக்கு 5 ஆண்டுகள் சிறையும் 10,000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. அத்தோடு, குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அனுமதிப்பத்திரமும் பறிபோனது. தனக்கான அபராதத்தைச் செலுத்திய அவர், தனக்கெதிரான தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்தார். இவற்றுக்கு மத்தியில், மார்ச் 1967 முதல் 1970இன் பெரும்பகுதி வரை, அவரால் போட்டிகளில் பங்குபற்றியிருக்கவில்லை.

அவருக்கான அனுமதி, 1970இன் இறுதிப் பகுதியில் அவருக்கான அனுமதி மீண்டும் வழங்கப்பட, 1971ஆம் ஆண்டில், அவருக்கெதிரான தீர்ப்பும், அமெரிக்க உச்சநீதிமன்றத்தால் மாற்றப்பட்டிருந்தது. தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றிய அவர், 1974ஆம் ஆண்டு, மீண்டும் சம்பியன் பட்டம் வென்றார்.

ஆனால், அதைத் தொடர்ந்து, தனது உறுதித்தன்மையை அவர் இழக்கத் தொடங்கினார். அத்தோடு, அவருக்கு உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படத் தொடங்கின. 1979ஆம் ஆண்டு அவர் ஓய்வுபெற்றார். எனினும், லாரி ஹோம்ஸூக்கு எதிராக அதிபாரக் குத்துச்சண்டைப் போட்டி சம்பியன்ஷிப்பில் கலந்துகொள்வதற்காக, ஓய்விலிருந்து அலி வெளியே வந்தார். இந்தப் போட்டி, ஒக்டோபர் 2, 1980இல் நடந்தது. இதில், அலி தோல்வியடைந்ததோடு, அவரது எதிர்கால உடல்நலத்தை அதிகமாகப் பாதிக்குமாறும் அமைந்தது. 1981ஆம் ஆண்டு டிசெம்பரில் அவர், ஓய்வுபெற்றார்.

அவரது குத்துச்சண்டை வரலாற்றில், 61 போட்டிகளில் பங்குபற்றிய முஹம்மட் அலி, 56 போட்டிகளில் வென்றிருந்தார். அவற்றில் 37 போட்டிகளில், நொக் அவுட் முறையில் வென்றிருந்தார்.

அலிக்கு, நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் காணப்படுவதாக, 1984ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னரே குறிப்பிட்ட லாரி ஹோம்ஸூக்கெதிரான போட்டி, அதற்குப் பங்களிப்புச் செய்ததாகக் கருதப்படுகிறது. இந்த நோய் காரணமாக, அவரது இயக்கத்திறன், பேச்சு உட்பட உடலின் செயற்பாடுகள், பாதிக்கப்பட்டன.

அவரது குத்துச்சண்டைப் போட்டிகளின் இறுதிக் காலம் நெருங்கிய போதே, அலியின் கொள்கைகளில் மென்மைத் தன்மை ஏற்பட்டது. முன்பைப் போன்று, அதிரடியான, சர்ச்சையான கருத்துகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்துவதை, அவர் குறைத்துக் கொண்டார்.

article_1465151923-AlaiPhoto-2.jpg

ஆனால், உலக விடயங்கள் தொடர்பான அவரது ஈடுபாட்டுக்குக் குறைவிருக்கவில்லை. குறிப்பாக, ஐ.நாவின் சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த அவர், 2002ஆம் ஆண்டு, மூன்று நாட்கள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கையில், நான்கு முறை திருமணம் முடித்த முஹம்மட் அலிக்கு, 7 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். அதில், அவரது மகள் லைலா அலி, தான் பங்குபற்றிய 24 போட்டிகளிலும் வெற்றிபெற்று, தோற்கடிக்கப்படாதவராக, குத்துச்ண்டையிலிருந்து ஓய்வுபெற்றார்.

article_1465152045-AlaiPhoto-1.jpg

முஹம்மட் அலி, தனது சமய வாழ்விலும், இஸ்லாமிய தேசத்திலிருந்து சுன்னி இஸ்லாம் பிரிவுக்கு 1975ஆம் ஆண்டில் மாறிய அவர், 2005ஆம் ஆண்டில் சூபித்துவத்துக்கு மாறினார். ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்ரேட்டட் சஞ்சிகையால் 'இந்த நூற்றாண்டில் சிறந்த விளையாட்டு வீரன்" எனவும் பி.பி.சி நிறுவனத்தால் 'இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு ஆளுமை" எனவும் கௌரவிக்கப்பட்ட முஹம்மட் அலியின் உடல்நிலை, மோசமடைந்து வந்தது. சுவாசப் பிரச்சினை காரணமாக ஜூன் 2ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஜூன் 3ஆம் திகதி, தனது உயிரைவிட்டுப் பிரிந்தார்.

article_1465151957-AlaiPhoto-5.jpg

எதிரிகளை குத்துச்சண்டை வளையத்துக்குள் வெற்றிகொண்ட அலி, வளையத்துக்கு வெளியே, அவர்களைத் துச்சமாக எண்ணினார். அதேபோல் தான், குத்துச்சண்டை வளையத்துக்கு வெளியே, தனது கொள்கைகள் பற்றி உரத்துச் சத்தமேற்படுத்துவதையும் அவர், வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு விளையாட்டின் சம்பியன், தனது விளையாட்டுக்கு வெளியே, உலகம் குறித்த பிரக்ஞையுடன் இயங்கும்போது, அவன் எவ்வாறு மதிக்கப்படுவான் என்பதற்கு, முஹம்மட் அலி ஒரு சாட்சி.

article_1465152005-AlaiPhoto-6.jpg

 'அதிசிறந்தவரின்' பொன்மொழிகள்

முஹம்மட் அலியின் குத்துகளைப் போல, அவரது கருத்துகளும், மிகவும் சுவாரசியமானவை. அவற்றை, பொன்மொழிகள் என்றுகூட அழைக்கலாம். அவ்வாறான சில கருத்துகள்:

'பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன். ஆனால், நான் (எனக்குச்) சொன்னேன், 'கைவிடாதே. இப்போது வருந்திய, பின்னர் உன் வாழ்வின் எஞ்சிய காலத்தைச் சம்பியனாக வாழ்".

'நான் தான் அதிசிறந்தவன். நான் அதிசிறந்தவன் என்பதை நான் அறியுமுன்பே, நான் அதைத் தெரிவித்தேன்"
'கற்பனையில்லாத மனிதனொருவனுக்கு, சிறகுகள் இல்லை'.

'வண்ணத்துப்பூச்சி போன்று மிதந்து செல், தேனீ போல கொட்டு'.

'நட்பைப் பாடசாலையில் நீங்கள் கற்பதில்லை. ஆனால், நட்பின் அர்த்தத்தை நீங்கள் கற்றுக் கொள்ளவில்லையெனில், நீங்கள் எதையும் கற்றிருக்கவில்லை'.

'ஆபத்தான விடயங்களைச் செய்வதற்குத் தைரியமில்லாதவன், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டான்'.

'என்னைத் தோற்கடிப்பதாக நீங்கள் கனவு கண்டாலும் கூட, நீங்கள் நித்திரையிலிருந்து எழுந்து, மன்னிப்புக் கேட்பது சிறந்தது' .

'நான் எப்படி இருக்க வேண்டுமென நீங்கள் நினைப்பது போல, நான் இருக்கத் தேவையில்லை'.

'பூஞ்சணம் பிடித்த பாணிலிருந்து அவர்களால் பென்சிலின் உருவாக்க முடியுமெனில், உங்களிடமிருந்தும் அவர்களால் எதையாவது எடுக்க முடியும்'.

'வாழ்ந்தவர்களிலேயே அதிசிறந்தவன் நான். இந்த உலகின் அரசன் நான். நான் மோசமான மனிதன். வாழ்ந்தவர்களிலேயே அழகான விடயமும் நான் தான்'.

'எனது மனது திட்டமிட முடியுமெனில், அதை எனது இதயம் நம்புமெனில், நான் அதை அடைய முடியும்'.

'மக்களை அவர்களது தோல் நிறத்துக்காக வெறுப்பது தவறானது. எந்த நிறம் வெறுத்தாலும், அது மிகவும் தவறானது'.

'உடற்பயிற்சிக் கூடங்களில் சம்பியன்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்களுக்குள்ளே ஆழமாகக் காணப்படும் ஒன்றால் அவர்கள் உருவாக்கப்படுகின்றனர் - ஒரு ஆசை, ஒரு கனவு, ஒரு தூரநோக்கு. அவர்களிடம் திறமை இருக்க வேண்டும், அதேபோல் விருப்பும். ஆனால், திறமையை விட விருப்புப் பலமாக இருக்க வேண்டும்'.

 

 

http://www.tamilmirror.lk/173976/ம-ஹம-மட-அல-ஓய-ந-த-ர-அத-ச-றந-தவர-

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.