Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாவலி – சாரங்கன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாவலி – சாரங்கன்

2016-04-07 20.16.27 (1)

நித்திரையில் மனைவி கேவி கேவி அழும் சத்தம் கேட்டு

“இஞ்சேரும் இஞ்சேரும்”  என்று மனைவி திலகவதியின்  தோளை தட்டி  எழுப்பினார் ராஜதுரை

“இவன் தம்பி சுபன் கூப்பிட்டமாதிரி கிடந்தது ”

“அது கனவு சும்மா படும் ”

மனைவியை படுக்கவைத்தாலும் ராசதுரையருக்கு நித்திரை வரவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு  வந்தவர்களுக்கு  புது இடமும் அதன் சூழலும் மகள் மருமகன்  பேரப்பிள்ளைகள் என்ற உறவுகளாலும்  மனதில் இருந்து ஓரளவு மறந்திருந்த அந்த மகாவலி போனவாரம் அவர்கள்  சென்றிருந்த ஒரு உறவினரின்  கலியாண வீட்டு நிகழ்வு ஒன்றில்  மீண்டும் கிளறப்பட்டுவிட்டது .

“நீங்கள் சுபனின் பெற்றோர் தானே”  உங்களை எனக்கு தெரியும் நான் சுபனின் நண்பன் என்று தன்னை அறிமுகம் செய்துவிட்டு இன்னுமொரு விடயத்தையும் அவன் சொல்லி விட்டு சென்றுவிட்டான்.

அன்றில் இருந்தது  மனைவி  திலகவதி பகலில் சந்தோசம் இழந்து அடிக்கடி ஏக்கபெருமூச்சுடன் அலைவதும் இரவில் கனவில் நித்திரை கலைந்து  அழுவதும் வாடிக்கையாகிவிட்டது .

பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவது ,அவர்களுக்கு தமிழ் சொல்லிகொடுப்பது, டிவியில் சீரியல் பார்ப்பது என்று எல்லாம் வழக்கம்போல  தொடர்ந்தாலும் முன்னர் மாதிரி  சந்தோசம் இல்லாமல் மனைவி அவஸ்தைப்படுவதை  ராசதுரையால் உணர முடிந்தது .

மகளும் மருமகனும் கூட மனைவியில் ஏற்பட்டிருக்கும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கவேண்டும் இல்லாவிடில் நேற்று அவர்களுடன் காரில் செல்லும்போது”உங்களுக்குள் ஏதும் பிரச்சனையோ ,அம்மா முகத்தில்  வாட்டம் தெரியுது  ” என்று மகள் கேட்டிருக்கமாட்டாள் .ராசதுரை கலியாண வீட்டில் சுபனின் நண்பனை சந்தித்ததை அவர்களுக்கு சொல்லவிரும்பவில்லை .

“அவா இப்படித்தான் சுபனின் நினைவு வரும்போது கொஞ்சம் நிலை தடுமாறுவதும் பின்னர் பேரப்பிள்ளைகளுடன் விளையாட அதை மறப்பதுமாக இருக்கின்றா, .பாழாய் போன  விதி யாரை விட்டது .நீங்கள் ஒன்றும் யோசிக்காதையுங்கோ பிள்ளையள் “என்று சொல்லி சமாளித்துவிட்டார் .

ராசதுரையருக்கு நித்திரை வரவில்லை .”பரத் கனடாவில் தான் இருக்கின்றான் என்று சுபனின் நண்பன் சொன்னது உண்மையா ?  இந்தியன் ஆமியுடனான யுத்தத்தில் இறந்துவிட்டான் என்று தான் கேள்விப்பட்டது பொய்யா ? கல்யாணம் செய்து குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கின்றான்  , இங்கும் அவர்கள் அமைப்பில் ஒரு நல்ல பொறுப்பில் அவனை வைத்திருக்கின்றார்கள்.

இவ்வளவு வருடங்களுக்கு பிறகு தாங்கள் ஏன் சுபனின் நண்பனை சந்தித்திருக்க வேண்டும்.  அவன் ஏன் இப்படி ஒரு செய்தியை சொல்லியிருக்கவேண்டும்.  ராசதுரை மண்டையை போட்டு குழப்புகின்றார். அருகில் மனைவி திடுக்கிட்டு திடுக்கிட்டு உடலை அசைத்து புரண்டு புரண்டு படுப்பது தெரியுது . தானும் ஒரு தேனீர் குடித்து மனைவிக்கும் கொடுப்பம் என்று கட்டிலை விட்டு இறங்கி குசினிக்கு செல்கின்றார் .

மாகாவலி  .அந்த நாளை எப்படி மறப்பது ?

000

தாவடிச்சந்தியில் இருந்து மானிப்பாயை நோக்கிச்செல்லும் வீதியில் அமைந்துள்ள  பிள்ளையார் கோவிலுக்கு முன்புறம் தான்   இராசதுரையின் வீடு  .யாழ் கச்சேரியில் அரசாங்கவேலை. காலை எழுந்து ஸ்கூட்டரில் வேலைக்கு போய் மாலை வீடு திரும்பினால் அருகில் இருக்கும் சனசமூகநிலையத்தில் போய் பத்திரிகைகள் வாசிப்பது அல்லது வீட்டு தோட்டம் தான் அவர் பொழுது போக்கு  . மனைவி திலகவதி வீடும் கோயிலும்  கணவனும் பிள்ளைகளும் என்று உயிர் வாழ்பவள் . மகன் சுபன் யாழ் இந்து கல்லூரியில் ஏ எல் படிக்கின்றான் ,வீட்டிற்கு அடங்கிய பெடியன் . எப்போதும் அவனது கையில் ஒரு புத்தகம் இருக்கும் இல்லாவிடில் பாட் இருக்கும். படிப்பு கிரிக்கெட் இரண்டுமே  அவனது உலகம்.   .இரண்டிலும் அவன் மிக பிரகாசமாகவும்  இருந்தான் .தங்கை வேணுகா  கொக்குவில் இந்து கல்லூரியில்  ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள் .ராஜதுரையர் கச்சேரிக்கு போகும்போது மகளை பாடாசாலையில் இறக்கிவிடுவார் .பாடசாலை முடிய பஸ் எடுத்தால் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவாள் . மிக சந்தோசமாக ராசதுரையரின் குடும்பம் வாழ்ந்து  கொண்டிருந்த காலங்கள் அவை

83 கலவரத்தின் பின் வந்த அரசியல் மாற்றத்தால் நாட்டில் மக்களின் சகஜ வாழ்வு சற்று மாறியிருப்பதும் விடுதலை இயக்கங்களுக்கு மாணவர்கள் இணைவதும் ராஜதுரைக்கு  மனதில் சற்று  பயத்தை உண்டு பண்ணியிருந்தாலும்  மகன் சுபன் படிப்பில் முழு கவனத்துடன்  இருப்பது அவன் வேறு திசையில் பயணிக்கமாட்டான் என்ற நம்பிக்கையை அவருக்கு  கொடுத்திருந்தது. சில மாதங்களில் நடந்த  ஏ எல் பரீட்சையை எழுதிவிட்டு தனக்கு எப்படியும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று சொல்லியிருந்தான் .

பரீட்சை முடிவுகள் வரும்வரை நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது ,வீடியோவில் சினிமா பார்ப்பது என்று பொழுதை போக்கிக்கொண்டிருந்த சுபன் ஒருநாள் கோவிலடியில்  படம் போடுகின்றார்கள் என்று நண்பர்களுடன் சேர்ந்து சென்றவன்  நள்ளிரவாகியும் வீடு திரும்பாதது போலிஸ் அவனை  பிடித்திருக்குமோ என்ற ஒரு பயத்தை ராஜதுரைக்கு  ஏற்படுத்த தனது ஸ்க்கூடரை எடுத்துக்கொண்டு மகனை தேடி கோயிலடிக்கு செல்கின்றார் .  கோவிலடியில் எவரும் இல்லாது மேலும் பயத்தை கொடுக்க கொக்குவிலில்  இருக்கும் சுபனின் நெருங்கிய நண்பன் வீட்டிற்கு செல்கின்றார் .

சுபன் சில மாதங்களாக ஒரு விடுதலை அமைப்புடன் சேர்ந்த பெடியன்களுடன் தொடர்பு  கொண்டிருந்ததாகவும்   நேற்று எங்கே போனான் என்று தனக்கு தெரியாது என்று நண்பன்  சொல்லிவிட்டான் . வீடு திரும்பிய ராஜதுரை  மனைவியிடம் நாளை காலை எப்படியும் சுபன் எங்கே என்று அறிந்துவிடுகின்றேன், இந்த நள்ளிரவில்  அவனது நண்பர்கள் வீடுகளுக்கு அலைந்துகொண்டிருக்கமுடியாது என்று மனைவிக்கு சொன்னாலும் மனம் ஏதோ நடக்க கூடாதது நடந்துவிட்டது போலே உணர்ந்தார் .

மகாவலி

காலை ராஜதுரை வீடு வந்த ஒரு இளைஞன் தமது அமைப்பில் பயிற்சி பெற சுபன் நேற்றிரவு இந்தியா சென்றுவிட்டதாக சொல்லிவிட்டு ஒரு கடித்தையும் கொடுத்துவிட்டு செல்கின்றான் . ராஜதுரையருக்கு உலகமே பிரண்டுவிட்டது போலிருந்தது . மனைவி திலகவதி தலையில் அடித்து கத்தி குளறி ஒப்பாரி வைக்க  தொடங்கிவிட்டார்  .ஒரே பெடியன் எவ்வளவு செல்லமாக சுதந்திரம் கொடுத்து வளர்த்தோம் இப்படி  செய்துவிட்டானே என்ற ஆதங்கம் தான் அவர்களுக்கு  .

சில வாரங்களுக்கு  முன்புதான் மானிப்பாய் வீதியில் பஸ்ஸில் செல்லும்போது பல பாடசாலை மாணவர்களை இலங்கை இராணுவம் சுட்டுகொன்றிருந்தது  .அதில் ஒருவனாக சுபன் இல்லாமல் கடைசி உயிருடன் இந்தியாவில்  இருப்பதே பெரியவிடயம் என்று மனைவியை ஆறுதல் படுத்துகின்றார் .

பழையபடி ராஜதுரை குடும்பம் பழைய சீரான வாழ்விற்கு திரும்பினாலும்  மகன் சுபன் இல்லாத குறை அவர்களை  வாட்டிக்கொண்டே  இருந்தது .

சுபன்   முகாமில் பயிற்சி முடித்து இப்போ  சென்னையில் தொலைத்தொடர்புகள்  வகுப்புகள்  எடுப்பதாக தமிழ் நாட்டில் பயிற்சி முடிந்து நாடு திரும்பிய சுபனின் நண்பன்   வந்து சொன்னது சிறு ஆறுதலை அவர்களுக்கு கொடுத்தது .

அன்று பாடசாலையால் திரும்பிய மகள் வேணுகா   தன்னுடன் படிக்கும் மாணவர்கள் சுபன் இணைந்த புளொட் அமைப்பின்உள்ளே கருத்து முரண்பாடுகளால் பிரச்சனை  தோன்றி  அமைப்பின் உள்ளே பலர் கொலை செய்யப்படிருப்பதாகவும்   இங்கும் அவர்கள் பலரை தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னது அவர்களுக்கு மீண்டும் மிகுந்த கலக்கத்தை கொடுத்தது. பத்திரிகை வாசிக்க சனசமூக நிலையத்திற்கு ராசதுரையர் செல்லும் போதெல்லாம் கேள்விப்படும் செய்திகள் அவர்களை மேலும் மேலும்  மகனை நினைத்து ஏங்கி தவிக்க வைத்தது

சில வாரங்கள் சென்றிருக்கும்  கொக்குவிலில் இருந்த புளொட் அமைப்பின்  பொறுப்பாளர் சுபன் அனுப்பியதாக ஒரு கடிதம் கொண்டுவந்தார்  அதில் தான் நலமே இருப்பதாகவும் சில மாதங்களில்  நாடு திரும்ப இருப்பதகாவும் இருந்தது .கடிதம் கிடைத்த அன்று ராசதுரை நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று பூசை செய்துவிட்டு வந்தார் .

நாட்டில் தினமும் அரசியல் நிலைமைகள் மாறுவதும் இலங்கை அரசிற்கு எதிராக போராட புறப்பட்ட தமிழ் அமைப்புகள் தமக்குள்ளேயே முரண்பட்டு  கைகளில் ஆயுதங்களுடன் அடுத்து என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மக்களை கிலியூட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்த நிலைமைகளை பார்த்து இராசதுரை குடும்பமும் அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்று வேண்டாத தெய்வம் இல்லை

0000

முதலில் கல்வியங்காட்டில் புலிகளுக்கும் டெலோவிற்கும் சண்டையாம் என்று ஒரு செய்தி வந்தது ,பின்னர் இரண்டு நாட்களில் டெலோ தலைவர் சிறி கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியும் வந்து சேர   மக்கள் என்ன நடக்குது ஏது நடக்குது என்று புரியாமல் பயத்தில் மௌனமாக  இருக்க, அடுத்து சில மாதங்களில்  விடுதலைப்புலிகள்  அனைத்து இயக்கங்களையும் தடை செய்து விட்ட செய்தியும்  வந்து சேர்ந்தது .கொலை செய்யபட்டவர்கள் ,சரணடைந்தவர்கள் போக எஞ்சிய  மாற்று இயக்கத்தவர்கள் வடக்கு கிழக்கை விட்டு பிற மாகாணங்களுக்கும் ஓடி பின்னர்  இந்தியா ,வெளிநாடு என்றும் செல்ல தொடங்கிவிட்டார்கள்.இப்போதைக்கு சுபன் நாடு திரும்பாமல் நிலைமை சீராக மட்டும் இந்தியாவில் இருப்பதே அவனுக்கு பாதுகாப்பு என்று மீண்டும் ராஜதுரையர் குடும்பம்  நினைக்க தொடங்கிவிட்டார்கள் .

ஒரு நாள் அதிகாலை யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு ராஜதுரையர் போய் கதவை  திறந்தால் நீண்டு வளர்ந்த முடி, சவரம் செய்யாது முகத்தில் தாடியுடன்  காய்ந்து கறுத்து மெலிந்து  கையில் ஒரு சீப்பு வாழைப்பழம் , மிக்சர் பாக்குடனும் சுபன் .   மகனை கண்ட சந்தோசத்தில் அவனை  கட்டிபிடித்து கொஞ்சி திலகவதி அழத்தொடங்கிவிட்டார். வேணுகாவிற்கும்  அண்ணாவை கண்டது சந்தோசத்திலும் சந்தோசம் .

தனது அமைப்பின் உள்ளே பெரிய பிரச்சனை நடந்தது, பலர் அமைப்பை விட்டு ஓடிவிட்டார்கள் , தானும் சந்தர்ப்பம் பார்த்து வெளியேறி வேதாரணியம் கரைக்கு வந்தால் புலிகள் மற்ற அமைப்புகளை தடை செய்த செய்தி வருகின்றது .கரையில் சிலமாதங்கள் தங்கிவிட்டு கடத்தல்காரர்களின் உதவியுடன் அவர்களின்  படகில் இலங்கை திரும்பியதாக சொன்னான் .இப்போது இங்கு தனது அமைப்பு இல்லை எனவே எவருக்கும் பயப்படதேவையில்லை தான் மீண்டும் படிக்க போவதாத சுபன் சொன்னது அவர்கள் மனதில் பாலை வார்த்தது .

சுபன் அடுத்தநாள் தான் கல்வி கற்ற யாழ் இந்து கல்லூரிக்கு சென்று இரண்டு வருடங்களுக்கு முதல் எடுத்த ஏ எல் பரிட்சை முடிவுகளை பார்த்தால் நாலு பாடங்களும் முறையே A,B,B, C என்று வந்திருக்கின்றது . அதிபரிடம்  உண்மையை சொல்லி தனக்கு உதவும்படி கேட்டான் .சில வாரங்களில் யாழ் மருத்துவபீடத்தில் இருந்து அடுத்த தவணைக்கான அனுமதிக்கடிதம் வந்து சேர்ந்தது .கடிதத்தை வாசித்ததும் ராசதுரையர் குடும்பத்திற்கு அவர்கள் கண்களையே  நம்பமுடியாமல் இருந்தது .பேரதேனியா சென்றால் இயக்கங்களால் எதுவித பிரச்சனையும் இல்லாமல் மகன் படிக்கலாம் ,ஆனால் அங்கும் சிங்களவர்களால் பிரச்சனைகள் வரலாம், அனுமதி யாழ் மருத்துவபீடத்தில் இருந்து வந்திருக்கு இனி மாற்றம் எதுவும் கேட்டு பிரச்சனை பட விரும்பாமல் அந்த அனுமதிப்பத்திரத்தை நிரப்பி அனுப்பிவிட்டான் .திலகவதிக்கு மகன் தங்களுடன் இருந்து பல்கலைகழகம் செல்வதுதான் பிடித்திருந்தது .

சுபனுக்கு பல்கலைகழகம் தொடங்க  இரண்டு நாட்களே இருக்கும் போது ஒரு  நாள் மாலை  கார் ஒன்று  ராசதுரை வீட்டிற்கு முன் வந்து நிற்கின்றது .துவக்குகள் சகிதம் நாலு இளைஞர்கள் உள்ளே வருகின்றார்கள் .ராஜதுரை என்ன விடயம்  என்று அந்த இளைஞர்களை  கேட்க தன்னை  விடுதலை புலிகளின் ஆனைக்கோட்டை பொறுப்பாளர் பரத் என்று அறிமுகம் செய்துவிட்டு

“ சுபன் என்பவர் உங்கள் மகனா? அவரை நாங்கள் பார்க்கவேண்டும்”

உள்ளேயிருந்து வந்த சுபன் என்ன விடயம் என்று கேட்க

“உம்மிடம் சில விடையங்கள் கதைக்கவேண்டியிருக்கு  எமது ஆனைக்கோட்டை  அலுவலகத்திற்கு  மாலை ஆறு மணிக்கு வரவும் .வராவிட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும்”

இதற்குள் ராஜதுரையர் குறுக்கிட்டு”தம்பிமாரே மகனுக்கு மருத்துவகல்லூரி அனுமதி கிடைத்து படிக்க போகின்றார். இனிமேல் அவர் எதுவித அரசியலும் செய்யாது பார்த்துகொள்வது எனது பொறுப்பு ”

“உங்கட மகன் புளொட் அமைப்பில் இருந்திருக்கிறார்.அவர்கள் இப்பவும் இந்தியாவில் இயங்குகின்றார்கள் எனவே அவரை நாங்கள் ஒருக்கா விசாரணை செய்யவேண்டும் ”

“அண்ணை நான் புளொட் அமைப்பில் பயிற்சி எடுக்க போனது உண்மை ,பின்னர் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்து பல தோழார்கள் அமைப்பை விட்டு வெளியேறிவிட்டார்கள் .அப்படி   வெளியேறியவர்களில் நானும் ஒருவன். அவர்களுக்கு பயந்து ஓடிவந்து வேதாரணியத்தில் மூன்று மாதங்கள் ஒழித்திருந்து இப்போ கடத்தல்காரர்களின் படகில் நாடு திரும்பினேன் .இனி அவர்களுக்கும் எனக்கும் எதுவித தொடர்புமில்லை .நான் இனி படிக்க போகின்றேன் ”

“  நீ தோழர் என்று கதைக்கும் போதே நீ யாரென்று தெரியுது மாலை ஆறு மணிக்கு வா அல்லது வந்து கொண்டுபோவோம் ”

எச்சரித்தபடியே நால்வரும் காரில் ஏறி சென்றுவிட்டார்கள் .

ராசதுரை குடும்பம் முற்றத்தில் விக்கித்து நிற்கின்றது,  அயலவர்கள் வந்து அவர்களுடன் பிரச்சனை படாமல் தம்பி அவர்களின் அலுவலகத்திற்கு செல்வதுதான் நல்லது இல்லாவிட்டால் தொடர்ந்தும் பிரச்சனை தருவார்கள் என்று  தாங்களும் ஏதோ அனுபவபட்டவர்கள் போலே சொல்லுகின்றார்கள் .

மாலை ஆறுமணிக்கு மாட்டேன் என்று ஒரேயடியாக மறுத்த மகன் சுபனையும் தனது ஸ்க்கூட்டரில் ஏற்றிக்கொண்டு ரசதுரையர் புலிகள் அலுவலத்திற்கு ஆனைகோட்டைக்கு செல்கின்றார் .

ராஜதுரையரை வெளியில் ஒரு வாங்கில் இருந்திவிட்டு சுபனை உள்ளே அழைத்துசெல்கின்றார்கள் .

“வாரும் தோழர் ” என்றபடியே நக்கலாக சிரித்தபடி வந்த  பரத்  நாம் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல்  உண்மைகளை சொன்னால் உமக்கும் நல்லது எமக்கும் நல்லது இல்லாவிட்டால் எமது விசாரணை பற்றி கேள்வி பட்டிருப்பீர் என்று நம்புகின்றேன் .நீர் சொல்லும் விடயங்கள் உண்மை என்று உறுதியாகமட்டும், உம்மை பற்றிய விடயங்களை நாங்கள் அறியமட்டும்   கிழமைக்கு ஒருக்கா இந்தஅலுவலகத்திற்கு வந்து கையெழுத்து வைக்கவேண்டும் .இது அனைத்து மாற்று இயக்கத்தவர்களுக்கும் நாம் வைத்திருக்கும் விதி ”

“அண்ணை நான் இயக்கத்திற்கு போனது உண்மை, பின்னர் அதிலிருந்து விலகி வந்துவிட்டேன் இனியும் நான்  வந்து கையெழுத்து இடுவதாயின் நான் இப்பவும் அந்த அமைப்பில் இருப்பதுபோலாகிவிடும். அவர்களுக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று எழுதித்தருகின்றேன். ஒவ்வொரு கிழமையும் வந்து கையெழுத்து இட என்னால் முடியாது ”

“டேய் எங்கட அலுவலத்திற்குள் வந்து எங்களுக்கே கதை சொல்லுகின்றாயா , நீ கடைசியில் படிப்பையும் தொலைத்து கூண்டிக்குள்ள போக போறாய் ”

“அண்ணை உங்களோட இனி எனக்கு கதையில்லை ,யாரும் பெரிய பொறுப்பாளர்களுடன் எனது படிப்பு பற்றி  கதைக்க விரும்புகின்றன் ”

“ என்னடா கதைகின்றாய் தலைவரை அல்லது பாலசிங்கத்தை கூட்டி வரோட்டோ உன்னோட கதைக்க ,நீ அவ்வளவு பெரிய ஆளோ .உன்ரை படிப்பு பற்றி எனக்கு தெரியாது என்ற நக்கல் வேறாடா நாயே .கொப்பரோடை வந்திருகின்றாய் இப்ப போட்டு வா ஆனால் அடுத்த முறை இப்படி இருக்காது ”

பரத்தின் கண்களில் தெரியும் கொடூரம்  சுபனுக்கு தெரிந்தாலும் எமது அமைப்பில் இப்படி எத்தனை பேரை பார்த்தேன் என்ற எண்ணமும் வந்துபோனது .இவர்களுக்கு பயப்படகூடாது என்ற  வன்மமும் எழுந்தது .

அப்பா வாங்கோ போவோம் என்று சுபன் ஸ்கூட்டரில் இருவரும் புறப்படுகினார்கள்

“என்ன ராசா கேட்டார்கள் ” என்று ராஜதுரை மகனை பார்த்து கேட்டார் .

“ இனி ஒரு தொடர்பும் புளோட்டுடன் வைக்ககூடாது என்று எச்சரித்துவிட்டு அனுப்பிவிட்டார்கள்” என்று ஒரு  பொய்யை   சொல்லுகின்றான், நடந்த  உண்மையை சொன்னால் வீட்டில்  ஒருத்தரும் நித்திரையே கொள்ளமாட்டர்கள் என்று சுபனுக்கு தெரியும் .

“நடந்தது எல்லாவாற்றையும் ஒரு கெட்ட கனவாக மறந்துவிட்டு இனி கவனமாக படி ராசா ,அப்படி ஏதும் பிரச்சனை என்றால் சொல்லு வெளிநாடு அனுப்பிவிடுகின்றன்” .

“இனி எதுவும் அப்படி  நடக்காது நீங்கள் ஒண்டும் யோசிக்கவேண்டாம் .அப்பா ”

இருவரும் வெவ்வேறு மனவோட்டங்களுடன்  வீடு வந்து சேர்ந்துவிட்டார்கள்

சுபனுக்கு மருத்துவக்கல்லூரி படிப்பு தொடங்கிவிட்டது. இலங்கை -இந்திய ஒப்பந்தம் கை சாத்திடப்பட்டு  புலிகள் இந்திய அரசின் மேல் கோபத்தில் இருந்த காலம் .இந்தியாவில் இருந்த மாற்று இயக்கங்களும் இந்திய அரசின் அனுசரணையுடன் கொழும்பின் ஊடாக இலங்கைக்குள் கால் பதிகின்றார்கள் .

தின்னவேலி சந்தியில் இருக்கும் தேநீர் கடையொன்றில் சுபன் நண்பர்களுடன் தேனீர் அருந்திகொண்டிருக்கும் போது   பிக்கப் வானில் வந்த புலிகள் சுபனை கைது செய்து ஆனைக்கோட்டை அலுவலகத்திற்கு கொண்டுபோகின்றார்கள்.

ஏற்கனவே ஆறு பேர்கள் இருக்கும் ஒரு அறையில் அவனையும் தள்ளுகின்றார்கள். அதில் இருவரை சுபனுக்கு ஏற்கனவே தெரியும் .ஒருவன் அவனது அமைப்பின் தமிழ்நாட்டு பயிற்சி முகாம் பொறுப்பாளர  சுந்தர் . ஜெர்மனில் இருந்து பலஸ்தினத்திற்கு  பயிற்சிக்கு சென்று பின்னர் இந்தியா வந்தவன் .மற்றவனையும் அவர்களின் அமைப்பின்வேறு முகாமில் சந்தித்ததாக  நினைவு .

சுந்தரே முதலில் சுபனுடன் பேசுகின்றான்.

“என்ன நடந்தது என்று தெரியவில்லை இருந்தால் போல வந்து கைது  செய்திருகின்றார்கள்  .தான் பாலஸ்தின பயிற்சி என்று அறிந்து  மாத்தையாவே விசாரணை வைத்து பின்னர் விடுதலை செய்துவிட்டார் , இப்ப ஏன் மீண்டும்  பிடித்தார்கள் என்று தெரியவில்லை .அடுத்த அறையில் ஒரு பெண்ணும் இருப்பதாக சொன்னார் . மற்ற மூன்று பேர்கள் ஈ பி, ஒருவர்  என் எல் எஒப் டி .அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் நிசப்தமாக நேரம் ஓடிகொண்டிருந்தது .

இரவு பரத்  இன்னும் மூன்று பேர்களுடன் வந்தான். எல்லோரது கண்ணையும் கட்டிவிட்டு பிக்கப் வாகனத்தில் ஏற்றினார்கள்

பிக்அப் வேகம் எடுத்தது பறக்கின்றது.  எந்த இடம் என்று தெரியவில்லை ஆனால் வாகனத்தால் இறக்கும் போது கால் மணலில் புதைவதாக உணர்கின்றார்கள்.

அனைவரையும் மணலில் குப்புற பிரட்டிவிட்டு சுபனிடம்  பரத் சொன்னான் மூன்று பேர்கள் எமது அமைப்பிற்கு எதிராக கையேழுத்து பிரதி வெளிவிட்டது உறுதி செய்யபட்டு  சுட உத்தரவு  வந்திருக்கு,  மற்றவர்கள் நால்வரும் குற்றம் அற்றவர்கள் என்று  விடுதலை செய்ய சொல்லிவிட்டார்கள் ஆனால் நான் மூன்றை நாலு ஆக்கி உன்னை சுடப்போகின்றேன். கிட்டரிடம் கேட்டு அதற்கான உத்தரவையும் வாங்கிவிட்டேன், “அவனுக்கு புலி என்ன செய்யும் என்று ஒருக்கா காட்டு என்று சொன்னார்” என்றவன் சுபனின் முகத்தில் தனது நகங்களால் ஒரு கீறு கீறி சிரித்தான்

” நீ அலுவலத்தில் என்னுடன் கதைக்கும் போதே உன்னை எப்படியும் ஒரு நாள் கொல்லவேண்டும் என்ற  முடிவை எடுத்துவிட்டேன் . என்னை பார்த்து நக்கலாக படிப்பு என்று ஒரு சொல்லு இழுத்தாய் அதனால் தான் உனது சாவு .நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு நாட்டிற்காக போராட நீ மருத்துவராக போறாய் .இந்தா போய் துலை .

நான்கு வெடிசத்தங்கள் கேட்டது .

சுபன் கடத்தப்பட்ட செய்தி கேட்டு ராசதுரை அருகில் உள்ள அனைத்து புலிகள் அலுவலங்களிலும் சென்று விசாரித்துவிட்டார்.  எல்லோருமே தமக்கு தெரியாது என்று கையை விரித்துவிட்டார்கள் .ஆனைக்கோட்டை அலுவலகத்தில் சுபனை இனி விசாரிக்கவேண்டாம் என்று மேலிட்டத்தில் இருந்து ஏற்கனவே உத்தரவு வந்திருந்ததாக சொன்னார்கள் .

இரவு மணி பத்தை தாண்டுகின்றது. வாகனம் வந்து  நிற்கும் சத்தம் கேட்டு ராசதுரை குடும்பம் முற்றத்திற்கு ஓடிவந்தால் சுபனின் உயிரற்ற உடலை வாகனத்தில்  இருந்து இழுத்து வீசிவிட்டு வாகனம் பறக்கின்றது .மண்டை பிளந்து  உடலெங்கும் இரத்தம் தோய்ந்திருக்க  சுபனின் உடல் அவர்களின் நடுமுற்றத்தில் கிடக்கின்றது .ஓடிவந்த திலகவதி  உடலை மடியில் வைத்து மரண  ஓலம் எழுப்புகின்றார்  .   மதிலில் கைகளை ஊண்டி சாய்ந்த  ராசதுரையின்  காலுடன் பயத்தில் நடுங்கியபடி வேணுகா.

சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் பேச வார்த்தைகள் எதுவுமின்றிய  நிலையில்  மௌனமாக  கலைகின்றார்கள் .

அந்த மகாவலியை மறக்க முடியாமல் ராஜதுரை குடும்பம்  தினமும் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது  .

மகள் கல்யாணம் முடித்து கனடா சென்றதும் பின்னர் தங்களையும்  கனடா கூப்பிட்ட பின்னர்  சற்று மறந்திருந்த அந்த மகாவலி மீண்டும் இப்போ தினமும் தங்களை  வதைப்பதை அவரால் பொறுக்கமுடியவில்லை .

தேனீர் போட்டு கொண்டிருந்த ராஜதுரையின் மனதில் திரும்ப திரும்ப பிக்அப் வானில் இருந்து வீசப்பட்ட  மண்டை பிளந்த அந்த  சுபனின் உருவம்  வந்து  வந்து போகுது

தேனீரை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்கு சென்றவர் கட்டிலில் இருந்தபடியே கண்களில் நீர் வழிய திலகவதி

“இஞ்சருங்கோ அப்பா நான்  ஒரு கனவு கண்டனான் ,

மார்க்கத்தில் ஒரு பெரிய மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடக்குது .பரத் தனது குடும்பத்துடன்  முன்னின்று அங்கு நிகழ்வுகளை நடத்துகின்றான்  .சரியான சனம் வரிசையில் மாவீரர்களுக்கு பூ போட நிற்கின்றார்கள்  .அந்த வரிசையில் நீங்களும் வெள்ளை வேட்டி சேர்ட்டுடன் நெற்றியில் திருநீறு சந்தனபொட்டு,   கையில் ஒரு மஞ்சள் பை. அதற்குள் பூமாலைகள் தெரியுது .நீங்கள் ஏன் அங்கு நிற்கீன்றீர்கள் என்று நினைக்க எனக்கு வியர்த்து கொண்டு வருகின்றது .

திடீரென்று மாலையை எடுப்பது போல மஞ்சள்பையிற்குள் கையை விட்டு ஒரு கத்தியை எடுத்து  மகனே என்று கத்தியபடியே பரத்தின் நெஞ்சில் மாறி மாறி குத்துகின்றீர்கள் .பரத் இரத்த வெள்ளத்துடன் சாய்கின்றான் .

கனவிலும் எனக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம் வரக்கூடாது .அந்த நாட்களில்  நாடு இருந்த நிலையில் எல்லோரும் தான் பிழை விட்டார்கள் ஆனால் எனது மனதில் மகனை கொன்றவனை பழிக்குபழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் என்றுமே  இருந்ததில்லை .

சுபன் கொலை செய்யப்பட்ட அன்று சேகர்  தானும் அந்த கொலைகளத்திற்கு கூட்டிகொண்டு செல்லப்பட்டு பின்னர் விடுதலையானதும்,அன்று  அங்கு நடந்த விடயங்கள் அனைத்தையும் சேகர்  சொல்ல சொல்ல  என்ரை பிள்ளையை இவன் பரத் அநியாயமாக கொன்றுவிட்டானே என்ற கோபம் தான் இப்படி ஒரு கனவை   காண வைத்துவிட்டது” ..

கடவுளே யார் பெத்த பிள்ளையோ அவனுக்கு ஒண்டும் வரக்கூடாது

கண்களில் கண்ணீர் வழிந்தபடியே நடுங்கும் உடம்புடன் இன்னமும் அந்த மகாவலியில் இருந்து விடுபடமுடியாமல் திலகவதி கணவனிடம் இருந்து தேனீரை வாங்குகின்றார் .

 

http://eathuvarai.net/?p=5485

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை அதிகாரதுஷ்பிரயோகங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/14/2016 at 1:12 AM, MEERA said:

இப்படி எத்தனை அதிகாரதுஷ்பிரயோகங்கள்

.................................................................................................

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளில் அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகம் தான்.
இந்தல் கதையின் ஹலைட் என்னன்டால் புலி செய்ததை புளட்டின் பெற்றோர் மன்னித்து விட்டது

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவின் கதை இது

  • 2 weeks later...
On 25/12/2016 at 4:50 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அர்ஜுன் அண்ணாவின் கதை இது

அவராக தான் இருக்குமென்று நினைத்தேன் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.