Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதாப முதலியார்

Featured Replies

பிரதாப முதலியார்.ச - அ.முத்துலிங்கம்

ஓவியங்கள் : ரமணன்

 

ன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையைத் தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று, அதை ஆங்கிலத்தில் ஒருவிதப் பிரச்னையும் இல்லாமல் நிரப்பினான். பலநாள் இதைச் செய்தவன்போல காணப்பட்டான். இரண்டு தரம் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்தேன். ‘இவன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்? என்னிலும் இரண்டு வகுப்பு கூடப் படிக்கலாம். நான் சந்தித்ததே இல்லை.’

50 வருடத்துக்கு முந்திய கதை இது.  ‘கொக்குவில்’ ஒரு சின்னக் கிராமம். ஆனாலும், அதிர்ஷ்டவசமாக அந்தக் கிராமத்தில் ரயில் ஸ்டேஷன் இருந்தது. கொழும்பிலிருந்து வரும் ரயில் அங்கு நிற்கும். சனங்கள் இறங்குவார்கள். திரும்பிக் கொழும்புக்குப் போகும்போது ஏறுவார்கள். சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் சனங்கள் வருவார்கள். கொழும்புக்குப் போவதென்றால், எங்கள் ஊருக்கு வந்துதான் ஆகவேண்டும். எத்தனை பெருமை எங்களுக்கு.

எங்கள் வீடு, பக்கத்தில்தான் இருந்தது. ரயில் கூவும் சத்தம் கேட்டால், நான் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடுவேன். ரயில், ஸ்டேஷனுக்கு வருவதற்கிடையில் நான் அங்கே போய்ச் சேர்ந்துவிடுவேன். ரயிலைப் பார்ப்பதும், கைகாட்டி மரம் விழுவதும், ரயில் கேட் மூடுவதும், ஸ்டேஷன் மாஸ்டர் பச்சைக் கொடியைக் காட்டியதும் ரயில் கொஞ்சம் பின்னால் நகர்ந்து புறப்பட்டு வேகமெடுப்பதும் பார்க்க எனக்கு அலுக்கவே மாட்டாது. ஒரு மலைப்பாம்பைப் பார்ப்பதுபோல, ஒரு யானையைப் பார்ப்பதுபோல, ரயிலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அது இல்லாவிட்டால்கூட முடிவைக் கண்டுபிடிக்க முடியாத தண்டவாளம் இருக்கிறது.

p92a_1514538606.jpg

அவனுடைய பெயர் தவராசன் என்று சொன்னான்.  பக்கத்தில் உள்ள தாவடிதான் அவன் ஊர். என்ன வகுப்பு, எந்தப் பள்ளிக்கூடம் என ஒன்றுமே அவன் சொல்லவில்லை. காதுக்குள்ளே சதுரமான ஐந்து சதக் குற்றியைச் செருகியிருந்தான், பெரிய ஆளைப்போல. ரயில் பற்றி சகல விசயமும் அவனுக்குத் p92b_1514538621.jpgதெரிந்திருந்தது.  நிறுத்தாமல் பேசினான். நான் ஏதோ சொல்லத் தொடங்கியபோது, இரண்டு கைகளையும் தோள் அளவுக்குத் தூக்கினான், யாரோ எனக்குப் பின்னால் நின்று துப்பாக்கியை நீட்டியதுபோல.

“என்னுடைய தாத்தா, வெள்ளைக்கார இன்ஜினீயர் தண்டவாளம் போட்டதைப் பார்த்திருக்கிறார். இந்த ரயிலை இங்கிலாந்தில் செய்கிறார்கள். நிலக்கரியும் அங்கேயிருந்துதான் வருகிறது. தண்ணீர் மாத்திரம் எங்களுடையது. எனக்கு அது புகை விடுவதும், கூவுவதும், சத்தமிடுவதும் பிடிக்கும். டீசல் ரயில் வரப்போகிறது என்று சொல்கிறார்கள். அதிலே புகையும் வராது. சத்தமும் கேட்காது. ரயில்போலவே இருக்காது” - அவன் பேசிக்கொண்டே போனான். என்னுடைய பெயரை மட்டுமே கேட்டான். நான் என்ன வகுப்பு, எங்கே படிக்கிறேன் என்ற தகவல் அவனுக்கு முக்கியமே இல்லை.

அவன்தான் சூரியன் ஒரு நட்சத்திரம் என்ற தகவலை எனக்குச் சொன்னான். அது பூமிக்குச் சமீபமாக இருக்கிறது. அதனால்தான் பெரிதாகத் தெரிகிறது. நாம் பார்க்கும் நட்சத்திரங்கள், சூரியனிலும் பார்க்க பல மடங்கு பெரியவை. அவை இருக்கும் தூரமும் அப்படித்தான். சில நட்சத்திரங்களின் ஒளி பூமிக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றான்.

“இதை எப்படி நம்புவது?”

“நாகப்பாம்பு இரவிலே ரத்தினக்கல்லைக் கக்கிவிட்டு அந்த ஒளியிலே இரை தேடும் என்று யாராவது சொன்னால், நீ உடனே நம்புவாய். ஏனென்றால், பொய் பல்லக்கில் வரும்; உண்மை தெருக்கூட்டும்.”
“தெருக்கூட்டுமா?”

``60 வருடச் சுழற்சியில் வருடங்கள் வரும். ஏன் தெரியுமா? பூமி, வியாழன், சனி கிரகங்களைத் தொடுத்தால் கிடைக்கும் முக்கோணம், அறுபது வருடங்களுக்கு ஒருமுறை அதே வடிவத்தில் வருகிறது.’’
``உனக்கு எல்லாமே தெரிகிறது. நிறையப் புத்தகம் படிப்பாயா?’’ என்று கேட்டேன்.

``ஓ, அவ்வப்போது படிப்பதுண்டு. வீடு முழுக்கப் புத்தகங்கள்தான்’’ என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட அதிர்ச்சி, வீடு வந்த பிறகும் என்னைவிட்டுப் போகவில்லை. என்னுடைய வீட்டில் பாடப் புத்தகங்கள் மட்டும்தான் இருக்கும். வேறு நாவல்களோ, கதைப் புத்தகங்களோ, வாரப் பத்திரிகைகளோ கிடையாது. அவற்றை இரவல் வாங்கிப் படிக்கவும் முடியாது. ஐயா, `நாவல் உன்னைக் கெடுத்துவிடும். பாடப் புத்தகத்தைப் படி’ என்பார். அம்மா அப்படியல்ல. அவர் என் பக்கம் என்று எனக்குத் தெரியும். இரவல் வாரப் பத்திரிகைகள் கிடைத்தால் ஒளித்துவைத்து, ஐயா இல்லாத நேரங்களில் வாசிப்பேன். ஆனால், ஒரு நாவல்கூட படித்தது கிடையாது.

மூன்று நாள்களுக்கு முன்னர், ஒரு புதன்கிழமை அன்று தவராசனை மறுபடியும் ஸ்டேஷனில் சந்தித்தேன். நிறையப் புத்தகங்கள் தன் வீட்டில் இருக்கின்றன என்று அவன் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. எங்கள் ஊரில் மட்டை கிழிந்த நாவல் ஒன்று யாரிடமாவது கிடைத்தால், அது ஊர் முழுக்கச் சுற்றிய படியே இருக்கும். அம்மாவிடம் அவனைப் பற்றிச் சொன்னபோது, ``அவன் புளுகுறான்’’ என்று அம்மா தீர்மானமாகச் சொன்னார்.

``உன் வீட்டில் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன?’’ என்று அவனைச் சோதிப்பதற்காகக் கேட்டேன். அவனுக்கு அது பிடிக்கவில்லை.

``அதான் சொன்னேனே, எல்லாமே இருக்கிறது. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதைநாயகின்னு சகலதும் வீட்டிலே கிடக்கு. ஆசிரியர்கள்தான் வித்தியாசமேயொழிய, எல்லாமே ஒரே மாதிரி கதைகள்தான். `திகம்பர சாமியார்’, `ராதாரமணி’, `இரத்தினபுரி ரகஸ்யம்’. ஒன்று படித்தால் போதும். இவற்றையெல்லாம் வாசித்தால் மூளை வளராமல் நின்றுவிடும்.’’

``அவ்வளவு மோசமா?’’

``உன் உடம்பில் ஓடும் ரத்தம் வெளியே வரத் துடிக்கிறது தெரியுமா உனக்கு? கையை வெட்டினால் ரத்தம் பாய்ந்து வெளியேறும். செய்து பார்த்தால்தான் சில உண்மைகள் தெரியவரும். புத்தகத்தைப் படித்துப் பார். உனக்குப் புரியும்.’’

``உன் வீட்டில் இரவல் தருவார்களா?’’ என்றேன். எப்படியாவது ஒரு நாவலைப் படித்துவிட வேண்டும் என, என் இதயம் பெரிய சத்தத்துடன் அடிக்கத் தொடங்கியது. அவனிடமிருந்து வரும் பதில், என் வாழ்க்கையையே மாற்றிவிடும். கையால் நெஞ்சை அழுத்திப் பிடித்தேன். அவன் சொன்ன புத்தகங்களை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப் போன்றோருக்கு, தவம் செய்தால் மட்டுமே அவை கிடைக்கும். அம்மா வேறு சொல்லிவிட்டார், “இவன் புளுகுறான்” என்று. ஆனாலும், அவனை நம்பவேண்டும் எனப் பட்டது.

``வேறு யாரிடம் கேட்க வேண்டும், எப்போது வேண்டுமானாலும் வா. புத்தகம் என்ன வேலையா செய்கிறது? நீ பாக்குவெட்டி இரவல் கேட்டால், நான் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. நீ அரிவாள் இரவல் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. நீ என் வீட்டுக் குடத்தைக் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. புத்தகம் என்ன வேலை செய்கிறது? சும்மாதானே இடத்தை அடைத்துக்கொண்டு கிடக்கிறது. நீ வந்து எடுத்துப் போ’’ - அப்போது அவன் தவராசன் போலவே இல்லை. தேவதூதன் போலவே தெரிந்தான்.

தாவடி, பக்கத்து ஊர்தான். ஆனால், நான் தனியாகப் போனதில்லை. ஐயா என்னைக் கூட்டிக்கொண்டு போக மாட்டார். அம்மாவிடம் சொன்னபோது அவரும் நம்பவில்லை. ``அதிகமாகப் பேசுபவன், உண்மை சொல்ல மாட்டான். இவனை நம்பி நீ எப்படித் தனியாகப் போகலாம்’’ என்று என் பயத்தைக் கூட்டினார். எனக்கு, அவன் அப்படி ஒன்றும் பொய் சொல்கிறான் எனப் படவில்லை.

அடுத்த முறை சந்தித்தபோது அவன் கேட்டான். ``நீ வரவே இல்லை?’’

``நீதான் சொன்னாயே, புத்தகம் படித்தால் மூளை வளராது என்று. பள்ளிக்கூடத்தில் நீ புத்தகம் படிப்பதில்லையா?’’

p92c_1514538643.jpg

p92c_1514538643.jpg

 

``பள்ளிக்கூடமா... நான் அங்கே ஏன் போறேன்? என்னுடைய பெயரில் ஐந்து எழுத்துகள். அதை எழுத எவ்வளவு நேரம் பிடிக்கும்? பேனாவில் மை முடிந்துவிடுமா? தலைமையாசிரியர் என் பெயரை எழுதவில்லை. நானும் பள்ளிக்கூடத்துக்குப் போவதை நிறுத்திவிட்டேன்.’’

 ``நான் தாவடிக்கு ஒரு முறையும் வந்தது கிடையாது. தனியா வரப் பயமாயிருக்கு’’ என்றேன்.

அவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு குனிந்து சிரித்தான். ``தாவடி என்ன பக்கத்து நாடா? நீ படகில் கடலைக் கடக்கப்போறியா அல்லது காட்டில் வழி கண்டுபிடிக்கச் சொல்கிறேனா? ஒருவேளை பாலைவனத்தில் வழி தவறிவிடுவோம் என யோசிக்கிறாயா? நீ எப்படித் தொலைந்துபோவாய்? வழி தவறினாலும்கூட பரவாயில்லை. `தவராசன் வீடு’ எனச் சொல். காட்டுவார்கள்’’ என்றான்.

``நீ உன் வீட்டில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்திருக்கிறாயா?’’ என்று கேட்டேன்.

``நான்தான் சொன்னேனே. ஒன்று படித்தால் மற்றவை எல்லாம் படித்ததுபோலத்தான். உண்மையைச் சொன்னால், எனக்கு புத்தகங்கள்மீது வெறுப்பு உண்டு. அவை மனிதனுக்கு உதவி செய்வதில்லை; கேடு செய்கின்றன. ஏன் தெரியுமா? புத்தகம் படிக்கும் ஒருவன், தான் சிந்திப்பதை நிறுத்திவிடுகிறான். சொந்தமாகச் சிந்திப்பதைப் புத்தகங்கள் ஊக்குவிப்பது இல்லை. `திகம்பர சாமியாரை’ப் படிப்பதால், நீ உன் வாழ்க்கைக்கு வேண்டிய ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்கிறாயா, `இரத்தினபுரி ரகஸ்ய’த்தைக் கண்டுபிடிப்பதால் உனக்கு என்ன பயன், அதைவைத்து என்ன செய்வாய்?’’

``என்னுடைய ஐயா, ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்தார். விளக்கை ஏற்றிவைத்து இரவு 1 மணி, 2 மணி வரை படிப்பார். அடுத்த நாள் டவுனுக்கு மறுபடியும் போய், புத்தகங்கள் வாங்கி வருவார். அம்மாவுக்குப் பிடிக்காது. வீட்டில் சமையலுக்கான பொருள்கள் இல்லை. ஐயா, புத்தக மூட்டையோடு வந்து இறங்குவார். சண்டை தொடங்கும். அப்படியும் அவர் நிறுத்தவில்லை. புத்தகப் பைத்தியமாகவே இருந்தார். சில வேளைகளில் புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு இருக்கும். அப்போது இந்தியாவுக்குப் போய் புத்தகங்கள் வாங்கி வருவார்.’’

``இந்தியாவுக்கா... எப்படிப் போவார்? காசுக்கு என்ன செய்வார்?’’

``கள்ளத்தோணிதான். பெரிய கடையில் கொண்டுபோய் காசைத் தந்தால், தினகரன் பேப்பரில் மூன்றாவது பக்கம் ஏதோ கிறுக்கித் தருவார்கள். அதை இந்தியாவுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தால், அங்கே இந்தியக் காசு கிடைக்கும். எல்லாம் மட்டை கிழிந்த பழைய புத்தகங்களாக வாங்கி வருவார். `எதற்காகப் பழைய புத்தகங்கள்?’ என்று அம்மா கேட்டால், `அதே காசுக்கு இரண்டு மடங்கு வாங்கலாம்’ என்பார். அம்மாவுக்கோ, எனக்கோ ஒன்றுமே வாங்கி வந்ததில்லை. அவ்வளவு பெரிய புத்தகப் பைத்தியம்.’’

``இரவு பகலாகப் புத்தகம் படிப்பவர், பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமே?’’

``புத்தகத்துக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்? ஒருநாள் எங்கள் வீட்டுக் கதவின் கைப்பிடி கழன்று விழுந்துவிட்டது. நாங்கள் வீட்டுக்குள்ளே இருந்ததால் வெளியே போக முடியவில்லை. கைப்பிடியை எடுத்து மறுபடியும் பூட்டினால்தான் கதவைத் திறக்க முடியும். ஐயா வெளியேதான் இருந்தார். அவருக்கு ஒரு ஸ்குரூவைப் பூட்டத் தெரியவில்லை. இரண்டு நிமிட வேலை. இவ்வளவு புத்தகங்கள் படித்ததுதான் மிச்சம். கடைசியில் பக்கத்து வீட்டுக்காரர் வந்து கதவைத் திறந்து எங்களை விடுவித்தார்.’’

``நாவல்  படிக்கக் கூடாது என்கிறாயா... அதில் சுவாரஸ்யம் இல்லையா?’’
 
``நீ ஏன் அவசரப்படுகிறாய்? சாப்பிடும் முன் விரல் சூப்பக் கூடாது. முதலில் படி. பிறகு, நீயே உணர்ந்துகொள்வாய். புத்தகப் படிப்பு முக்கியமல்ல. வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதுதான் முக்கியம். சிந்திக்கப் பழகுவதை வகுப்பில் பாடமாக வைக்க வேண்டும்.

இங்கிலாந்தில் மிகப்பெரிய கப்பல் ஒன்றைக் கட்டினார்கள். செல்வந்தர்கள், போட்டிபோட்டுக்கொண்டு பணம் போட்டார்கள். பிரமாண்டமான கப்பல் என்பதால் அவ்வளவு லாபம் கிடைக்கும். ஆயிரம் பேர் பல மாதங்களாக உழைத்தனர். 4,000 பேர் அதில் பயணம் செய்யலாம். கட்டி முடித்த பிறகு, கப்பலை எப்படிக் கடலுக்குள் கொண்டுபோவதென்று தெரியவில்லை. ஒரு வருடமாக முயன்றும் முடியவில்லை. அவ்வளவு புத்தகங்களைக் கரைத்துக் குடித்துக் கப்பலைக் கட்டிய இன்ஜினீயர், அதை எப்படி கடலுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதைச் சிந்திக்க மறந்துவிட்டார். கப்பல் சொந்தக்காரர்கள், அதை உடைத்து இரும்பாக விற்றுவிடுவது என முடிவுசெய்தார்கள். அந்த இரவு, இன்ஜினீயர்  தூங்கவில்லை. இதே யோசனையாக இருந்தார். அதிகாலையில் ஆள்களின் ஆரவாரம் கேட்டு, கதவைத் திறந்தபோது கப்பல் கடலில் மிதந்தது. இரவு கடல் பொங்கியதில், தண்ணீர் பெருகிக் கப்பலைக் கொண்டுபோய்விட்டது. புத்தகப் படிப்பு மட்டும் போதாது என்பதைத்தான் சொல்கிறேன்.’’

``சரி. சரி... நீ இப்போது சொன்னதுகூட  எங்கேயோ படித்ததுதானே. அது  எப்படிக் குற்றமாக முடியும்?’’p92b_1514538657.jpg

`` `ராதாரமணி’ நாவலைப் படிக்க 20 மணி நேரம் எடுக்கும். அதே கதையை நான் உனக்கு ஒரு மணி நேரத்தில் சொல்ல முடியும். அப்படியானால், 19 மணி நேரம் லாபம்தானே! படித்துத் தெரிந்து கொள்வதைவிட, பார்த்து, கேட்டுத் தெரிந்துகொள்வது உத்தமம். நான், ‘கப்பல் கதை’யைக் கேட்டுத்தான் தெரிந்துகொண்டேன்.’’

தவராசனைப் பார்த்தேன். 12 வயதுப் பையன்போலவே அவன் இல்லை. பெரிய மனிதர் தோரணையில் பேசினான். அவன் இவ்வளவு சொன்னாலும் அவனிடம் புத்தகம் இரவல் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அம்மாவிடம் சொன்னேன். அவர்,  ``சரி, நாளைக்குப் போய்ப் பார். நீ ஏன் அதற்காகக் குழம்ப வேண்டும்? பயப்படாமல் போ’’ என்றார்.

அதிகாலை எழுந்து புறப்பட்டேன். அவ்வளவு தூரத்தை நான் தனியாளாகக் கடந்ததில்லை.  பாதி தூரம் நடந்து வந்தும் ஒருவரையும் காணவில்லை. ஒரு மனிதர், பெரிய பனைமரக் குத்தி ஒன்றைத் தலையில் சுமந்துகொண்டு நடந்தார். அவரிடம் வழி கேட்டால், அவர் முழுத் தலையையும் என் பக்கம் திருப்ப வேண்டும். இரட்டைக் குதிரை பூட்டிய சாரட் வண்டி ஒன்று, `சலுங் சலுங்..’ என என்னை நோக்கி ஓடிவந்தது. வேலி ஓரத்தில் நிற்க, அது என்னைத் தாண்டிப் போனது. முதலியார் வீட்டுக்குப் போகிறது போலும்.

கன்றுக்குட்டி ஒன்றைக் கயிற்றில் கட்டி இழுத்துப்போன மனுஷியிடம், ``தவராசன் வீடு...’’ என்றேன். அவர் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் வீட்டைக் காட்டினார்.

வீட்டுக்கு முன்னால் நின்று ``வீட்டுக்காரர்... வீட்டுக்காரர்’’ என்று கத்தினேன். ஒரு சத்தமும் இல்லை. ``தவராசன்...’’ என்று கத்தினேன். கதவு படாரெனத் திறந்தது. துணிவைத்து முடியைக் கட்டியிருந்த மெலிந்துபோன ஒரு பெண் நின்றார். ஜன்னல்களுக்கு எதிரியான ஒருவர் கட்டிய வீடு. பாதி வெயிலிலும் பாதி இருட்டிலும் இருந்தது. ஆர்மோனியப் பெட்டிக்கு முன்னால் இரண்டு சிறுமிகள் உட்கார்ந்து இருந்தனர். `பாட்டு சொல்லிக்கொடுக்கிறார்’ என்று ஊகித்தேன்.

``தவராசன்...’’ என்றேன்.

``ஓ... நீதான் புத்தகம் இரவல் வாங்க வந்தனியா? அவன் இல்லை. வா வா உள்ளே’’ என்றார்.

அப்படியொரு காட்சிக்கு என்னை நான் தயார்படுத்தவில்லை. கூரையிலிருந்து தரை மட்டும் நீண்ட நீண்ட புத்தகத் தட்டுகள் இருந்தன. அவற்றில் நிரையாகப் புத்தகங்கள் அடுக்கியிருந்தன. சில புத்தகங்கள், தரையில் சிதறிக் கிடந்தன. முதுகு உயரமான நாற்காலி ஒன்றின் மேல் 20, 30 புத்தகங்கள் கிடந்தன. நான் எங்கே தொடங்குவது எனத் தெரியாமல் மிரள மிரளப் பார்த்தேன்.

p92d_1514538678.jpg

``தம்பி...’’ என ஆறுதலாகப் பார்த்து, ``புத்தகத்தை எடுத்துக் காட்டிவிட்டுப் போ’’ என்றார். நான் பல புத்தகங்களைத் தொட்டுத் தூக்கிப் பார்த்தேன். பலத்த யோசனைக்குப் பிறகு, `பிரதாப’ என்று தொடங்கும் ஒரு புத்தகத்தை அவரிடம் காட்டிவிட்டு எடுத்துச் சென்றேன்.

இரண்டு நாள்கள், ரகசியமாக அதைப் படித்து முடித்தேன். அம்மா பக்கத்தில் படுத்துக் கதை கேட்க, முழுக்கதையையும் சொன்னேன். இரண்டு நாள்கள் படித்ததை இரண்டு மணி நேரத்தில் சொல்லி முடித்தேன். எனக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு இப்ப அம்மாவுக்கும் தெரிந்தது. `அண்டகடாகமும் சிரித்தது’ என்றும், `தேகவியோகமானார்’ என்றும் நான் சொன்னபோது அம்மா மெல்லிய புன்னகை பூத்தார். ஞானாம்பாள் ஆண் வேடமிட்டு விக்கிரமபுரியை ஆண்டதை விவரித்தபோது, நானே ஒரு மன்னன் ஆகிவிட்டேன்.

``அம்மைபோட்ட ஞானாம்பாள், கடைசியில் தப்பினாளா?’’ என்று அம்மா கேட்டார்.

எனக்கும் தெரியவில்லை. அட்டையும், கடைசி சில பக்கங்களும் கிழிந்துவிட்டன. நானே இட்டுக்கட்டி ஒரு முடிவைச் சொன்னேன்.

ஒரு வாரம்  சென்ற பிறகு, தவராசனை ஸ்டேஷனில் சந்தித்தேன். பழுதான ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றான். புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன்.

``இதுவா?’’ என்றான்.

``உன்னுடைய அம்மாவிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்தேன்.’’

``ஐயா படித்த கடைசி நாவல் இது. விளக்கு மட்டும் அணையாமல் எரிந்தது. பாதி படித்தபடி காலையில் இறந்துபோய் கிடந்தார்’’ என்றான்.

``இதுதான் நான் படித்த முதல் நாவல்’’ என்றேன். பிறகு ஏன் அப்படிச் சொன்னேன் எனத் திகைத்து, பேசாமல் அவன் காதில் செருகிய ஐந்து சதக் குற்றியை உற்றுப் பார்த்தவாறே நின்றேன். பெட்டிகளில் கொழும்புக்கு என்ன அனுப்புகிறான் எனக் கேட்டபோது, ``புத்தகங்கள்தான். ஐயா இறந்த பிறகு அதுதான் எங்களுடைய வருமானம்’’ என்றான்.

பல வருடங்களுக்குப் பிறகு அதே புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படித்தேன். அம்மாவுக்காக நான் இட்டுக்கட்டிய முடிவு மிகத் திறமாகத்தான் இருந்தது. 50 வருடங்களாகப் புத்தகத்தின் தலைப்பைத்தான் நான் வேறு என்னவோ என நினைத்திருந்தேன்.

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

``வேறு யாரிடம் கேட்க வேண்டும், எப்போது வேண்டுமானாலும் வா. புத்தகம் என்ன வேலையா செய்கிறது? நீ பாக்குவெட்டி இரவல் கேட்டால், நான் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. நீ அரிவாள் இரவல் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. நீ என் வீட்டுக் குடத்தைக் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. புத்தகம் என்ன வேலை செய்கிறது? சும்மாதானே இடத்தை அடைத்துக்கொண்டு கிடக்கிறது. நீ வந்து எடுத்துப் போ’’ - அப்போது அவன் தவராசன் போலவே இல்லை. தேவதூதன் போலவே தெரிந்தான்.

இங்கிலாந்தில் மிகப்பெரிய கப்பல் ஒன்றைக் கட்டினார்கள். செல்வந்தர்கள், போட்டிபோட்டுக்கொண்டு பணம் போட்டார்கள். பிரமாண்டமான கப்பல் என்பதால் அவ்வளவு லாபம் கிடைக்கும். ஆயிரம் பேர் பல மாதங்களாக உழைத்தனர். 4,000 பேர் அதில் பயணம் செய்யலாம். கட்டி முடித்த பிறகு, கப்பலை எப்படிக் கடலுக்குள் கொண்டுபோவதென்று தெரியவில்லை. ஒரு வருடமாக முயன்றும் முடியவில்லை. அவ்வளவு புத்தகங்களைக் கரைத்துக் குடித்துக் கப்பலைக் கட்டிய இன்ஜினீயர், அதை எப்படி கடலுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதைச் சிந்திக்க மறந்துவிட்டார். கப்பல் சொந்தக்காரர்கள், அதை உடைத்து இரும்பாக விற்றுவிடுவது என முடிவுசெய்தார்கள். அந்த இரவு, இன்ஜினீயர்  தூங்கவில்லை. இதே யோசனையாக இருந்தார். அதிகாலையில் ஆள்களின் ஆரவாரம் கேட்டு, கதவைத் திறந்தபோது கப்பல் கடலில் மிதந்தது. இரவு கடல் பொங்கியதில், தண்ணீர் பெருகிக் கப்பலைக் கொண்டுபோய்விட்டது. புத்தகப் படிப்பு மட்டும் போதாது என்பதைத்தான் சொல்கிறேன்.’’

 

மிக அருமையான கதை......! மேற்கோள் காடடவேண்டும் என்றால் கதை முழுவதையும் "கோட்" பண்ண வேண்டி வரும்.....!  tw_blush:

பி.கு: நிழலி சமீபத்தில் நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கின்றேன் படிக்க நேரமில்லை என்று சொல்லியிருந்திர்கள். இந்தக் கதையைப் படித்தபின் அவைக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.