Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும்

Featured Replies

பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும் - சிறுகதை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... தமயந்தி, ஓவியங்கள்: ம.செ.,

 

 

ஹேமாக்கா அதைச் சொல்றப்ப, நியாயமா மெல்லிய விளக்கு ஒளி சிந்துற ஓர் இடமா இருந்திருக்கணும். இளையராஜா, அவரோட ட்ரூப்போட ஓர் அடி தள்ளி நின்னு, 'என் இனிய பொன் நிலாவே...’ பாட்டை வாசிச்சிருக்கணும். ஆனா, இவை ஏதும் இல்லாமத் திண்ணையில உக்காந்து, கடலையை நங்குநங்குனு அடிச்சு உடைக்கிற மாதிரி சொன்னா... 'நான் நாதனைக் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன்!'

பச்சக் கடலை வாசம் எப்பவும் அலாதியானது. லேசா மண்வாசனையும் எப்பவோ பெய்த மழையோட வாசனையும் நிறைஞ்சுகிடக்கும் அதுல. அதெல்லாம் சும்மா தின்னக் கூடாது. வெல்லக்கட்டியைக் கடிச்சுக் கடிச்சுத் தின்னணும். ஒரு வாய் கடலையும் ஒரு வாய் வெல்லமுமா ஹேமாக்கா சாப்பிடுற அழகே அலாதிதான். ஆனா, அவ சொன்னது எனக்குப் பிடிக்கலை.

'போக்கா... வெளையாடாத''னு சொன்னேன். அக்கா, அப்ப டிசம்பர் பூவை இறுக்கக் கட்டிவெச்சிருந்தா. அதை ஒரு கையால பிடிச்சுக்கிட்டே, 'நான், நாதனைக் காதலிக்கிறேன்''னு சினிமா பாணியில சொன்னா.

'ஏம்க்கா உன் ரசனை இப்படிப் போகுது? அந்தாளை எனக்குப் புடிக்காது''ன்னேன். அவ மூஞ்சை வலிச்சுக் காமிச்சா. நான் பேசாம உக்காந்து இருந்தேன். அவ என் தொடையைப் பிடிச்சுக் கிள்ளி, 'உனக்கு எதுக்குப் புடிக்கணும். எனக்குப் பிடிச்சாப் போறாதா?'ன்னா.

நான் இப்பவும் ஒண்ணும் சொல்லலை. நாதனை, நான் 'பிரட்சி நாதன்’னுதான் சொல்லுவேன். நாதனுக்கு, தான் ஒரு ஹீரோங்கிற நெனைப்பு எப்பவும் உண்டு. நாதனோட அப்பா, ஒரு கவர்மென்ட் அதிகாரி. ஆனா, அவன் போராட்டம், அது, இதுனு சின்னதுலேயே போனதுனால திட்டிப் பாத்துட்டு, ஒரு காலகட்டத்துல தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க... அவங்க வீட்ல. எங்க காம்பவுண்ட்ல எதிர் வரிசைல அவன் வீடு.

p76c.jpg

ஒருவாட்டி அவனைக் கைதுகூட பண்ணிருக்காங்க. அந்த நிமிஷம்தான் நாதன் எனக்கு ஹீரோவானான். ஏதோ ஒரு சாராயக் கடையை மூடச்சொல்லி, அவன் நடத்தின போராட்டத்துக்கு எங்க ஏரியா தாய்மார்ட்ட நல்ல வரவேற்பு. அப்பல்லாம் ஹேமாக்கா, அவனை இளப்பமாத்தான் பார்ப்பா.

'அவனோட குழுவில் நான் இணையப் போறேன்’னு சொன்ன அன்னைக்கு, என்னை ஒரு விரோதி மாதிரி பாத்தா.

''உனக்கு அரசியல்னா என்னன்னு தெரியுமாடி? எல்லாரையும் குழப்பி வுட்டுட்டு தான் மட்டும் நிம்மதியா இருக்கிறதுக்குப் பேருதான் 'அரசியல்’. எதுக்குத் தேவை இல்லாம நீ அதுல சிக்கிக்குற?''னு கேட்டா.

ஆனா எனக்கு, நாதனோட பேசுறதே பெரிய புரட்சியா இருந்துச்சு. சே குவேரா பத்தி ரெண்டு புஸ்தகம் கொடுத்து வாசிக்கக் சொன்னான் நாதன். அப்படியே தூங்காமக் கிடந்து அதை வாசிச்சு அவர்கிட்ட சிலாகிச்சுப் பேசினேன். அப்ப தண்ணிக்குடம் எடுத்துட்டுக் கடந்துபோன ஹேமாக்கா, 'பிரட்சி பேசுதீகளா!'னு சிரிச்சா. நாதனுக்கு அதைக் கேட்டு கோவம் வரும்னு நெனைச்சேன். ஆனா, அவன் வெறுமனச் சிரிச்சிக்கிட்டான். அதுமட்டும் இல்ல, எதுக்குமே அவனுக்குக் கோவம் வரலை. அது, அவனோட வாசிப்பு தந்த முதிர்ச்சினு நெனைச்சேன். அவங்க குழுல நானும் கடுமையா வேலை பார்த்தேன்.

ஒருவாட்டி அம்மாவே ஹேமாக்காகிட்ட, ''நீ கொஞ்சம் சொல்லு ஹேமா... ஏதோ புஸ்தகம் அது இதுனு செலவழிக்கானு பாக்கேன்... இப்ப அந்தப் பயலோட சேர்ந்துக்கிட்டு என்னலாமோ சமூகம் அது இதுனு பேசுது''னு சொன்னா. நானும் அங்கதான் இருந்தேன். ஹேமாக்கா, அம்மாகிட்ட என்னை விட்டுக்கொடுக்காமப் பேசினது, எனக்குப் பெரிய ஆறுதலா இருந்துச்சு.

'ஐயோ அத்தை... என்ன இது அவளைப் பத்தித் தெரியாதா? நீங்க வேற சும்மா கவலைப்பட்டுக்கிட்டு'னு சொன்னா.

ல்லா ஞாபகம் இருக்கு. நாதனோட அக்கா பூரணி, அதுக்கு அடுத்த நாள்தான் புருஷன் வீட்டுலேருந்து துரத்தப்பட்டு பிறந்த வீட்டுக்கு வந்தா. முகமெல்லாம் வீங்கி உதடு கிழிஞ்சிருந்துச்சு. அம்மா, ஸ்டாஃப் நர்ஸ்னால காயத்தையெல்லாம் தினமும் கிளீன் செஞ்சி மருந்து போட்டா. உள்ளேருந்து பயங்கரக் கதறல் கேக்கும். ஹேமாக்கா, சுவர் ஓரமா நின்னு கண்களை மூடிப்பா. அன்னைக்கு நாதன் ஊர்ல இல்ல. அவன் வந்த உடனே, ''போலீஸ்ல கேஸ் கொடுக்கலாம்''னு சொன்னான். அவன் அப்பா சம்மதிக்கலே.

'குடும்பம்னா இதெல்லாம் சகஜம் தம்பி''னு சொன்னார். அவ்ளோதான். நாதன், பயங்கரச் சத்தமா, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பத்திப் பேசினான். அவங்கப்பா ஒரே வார்த்தையில... ''எல்லாம் சரிதான். பேசாம சினிமா எடு. இது எம் பொண்ணோட வாழ்க்கை. அவகிட்ட கேளு. சரினா புகார் கொடு''னு சொன்னார்.

p76b.jpgநாதன், அக்காகிட்ட கேட்டான். அக்கா, தலையை நிமிர்ந்துகூட இவனைப் பாக்கலை. அந்த அக்கா பார்க்க ஸ்ரீவித்யா மாதிரியே இருக்கும். பெரிய கண்ணு. கல்யாணமாகிப் போற வரைக்கும் முதல் வீட்டு சேகர் அண்ணன், 'அதிசய ராகம்’ பாடலை, இந்தக்கா தண்ணி எடுக்கப் போறப்பலாம் போடுவார். சேகர் அண்ணனை அந்த அக்காக்கும் பிடிக்கும்னு காம்பவுண்டே யூகிச்சிச்சுனாக்கூட அவங்க அப்பா, அக்காவுக்கு விருதுநகர்ல மாப்பிள்ளை பார்த்தப்ப யாருமே ஒண்ணும் சொல்லலை. நான்தான் ஹேமாக்காகிட்ட கேட்டேன்.

''சேகர் அண்ணனை அவுகளுக்குப் புடிக்கும்தான?'

நானும் ஹேமாக்காவும் அப்ப மொட்டை மாடில ரேடியோ கேட்டுட்டு இருந்தோம். சாயங்காலமா மழை பெஞ்சப் பிறகு உக்காந்து இருந்ததுனால, அங்கங்க ஈரம் தேங்கி இருந்ததுல தெருவிளக்கு வெளிச்சம் பட்டு வேப்பமரக் கிளைநிழல் ஈரத்துல அசைஞ்சுது. அதைப் பாத்துக்கிட்டே ஹேமாக்கா சிரிச்சா. பாக்கெட் ரேடியோல இளையராஜா, 'மணியே மணிக்குயிலே’னு பாடிக்கிட்டு இருந்தார்.

'புடிக்கிற எல்லாரையும் கட்டிக்க முடியுமா என்ன... அதான் பொம்பளைங்க விதி''னு ஹேமாக்கா சிரிச்சா. நான் சும்மா இருக்கவும், 'எனக்குக்கூட அஞ்சாப்பூ படிக்கிறப்ப எங்கூட படிக்கிற பையன் மேல லவ் வந்துச்சு. அப்புறமா ஆறாப்பூ அவன் வேற செக்‌ஷன் போன உடனே லவ் போயிடுச்சு. அப்புறமா, நேரா டென்த்ல ஒரு கலர் கடைக்காரனோட ஒரு சின்ன ச்சொயிங். நான் போற பஸ் பின்னாலயே அவனும் சைக்கிள் அழுத்தி வருவான். இப்ப அவன் எங்கே இருக்கானோ? இதெல்லாம் வரும் போவும். அவ்ளோதான். எப்பமாச்சும் 'அதிசய ராகம்’ பாட்டுக் கேக்கிறப்ப, பூரணிக்காவுக்கு ஒரு ச்சொயிங் ஓடும். அவ்ளோதான். அவளும் வீட்டுக்குள்ள இட்லி ஊத்திவெச்சிருந்தா... அந்த நெனைப்பும் வராது. ச்சொயிங்லாம்... டொயிங்  ஆகிடும்!''

'போக்கா... உன் ச்சொயிங்கும் ட்டொயிங்கும்!'

''உங்களை மாதிரி பிரட்சி பேசுறவங்களுக்குப் புத்தியில மட்டும்தான் வாழ்க்கைடி. பார்... இங்கேருந்து வாழுங்க''னு நெஞ்சைத் தொட்டுக் காட்டினா. நான், ஈரத்தரைல ஓடுற கட்டெறும்பைப் பிடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்.

''உங்க பிரட்சி நாதனைப் பாரு... எல்லார் வாழ்க்கைலையும் பிரட்சி பண்ணுவார். தன் அக்காக்காரி உதடு கிழிஞ்சிக்கிடக்கிறப்ப அப்பா பேச்சைக் கேட்டுட்டுத்தான இருக்கார்? உனக்கெல்லாம் போகப் போகத்தான் தெரியும்... போ!'

'அப்படிலாம் இல்லக்கா... பூரணிக்கா, 'வேணாம்’னு சொல்லிருக்கும். அதான்...'

'சொன்னா... வுட்டுருவாகளோ!?'

ராத்திரி பூராத் தூங்கவிடாம ஹேமாக்காவோட வார்த்தைகள் சுவர்ல அலைஞ்சபடி இருந்தன.

காலைல வேணும்னே நாதன்கிட்ட, ''என் ஃப்ரெண்ட் ஒருத்தியை அவ புருஷன் ரொம்ப அடிக்கான்''னு சொன்னேன். ''அச்சச்சோ'' என்றவன் பெரியாரைப் பற்றி 42 நிமிஷம் 34 விநாடிகள் பேசினான். அப்புறமா, அவ அட்ரஸைக் கேட்டான். நான் அவ போன் பண்ணினதாவும் பிறகு தர்றேன்னும் சொன்னேன். அன்னைக்கு மட்டும் நாலு தடவை ''போன் வந்துச்சா?''னு கேட்டான். ஹேமாக்கா சொன்ன மாதிரி என்னோட சந்தேகம் வலுப்பெற்றுவிடுமோனு எனக்குள்ள ஒரு பயம் குட்டிப் போட்ட மிருகம் மாதிரி வளர ஆரம்பிச்சது. ''ஏன்... நீங்க பூரணிக்காவுக்கு இதெல்லாம் செய்யலை?''னு கேக்க, வார்த்தைகள் நுனி நாக்கு வரைக்கும் வந்துருச்சு. ஏதோ தைரியம் இல்லாம தொண்டைக்குள்ளயே அதை முழுங்கிட்டேன்.

p76a.jpgஅப்பதான் எங்க குழுவுல பக்கத்துத் தெருலேருந்து காமாட்சி, தேவராஜ்னு ரெண்டு பேரு சேர்ந்தாங்க. 'காமா தோழர்’, 'தேவா தோழர்’னு நாதன் கூப்பிடுவாரு. தேவாவைக் கூப்பிடுறப்ப மட்டும் 'தளபதி’ ரஜினி ஸ்டைலு தெரியும். காமாவுக்கு டியூஷன் கட் அடிக்கவே எங்க குழு உபயோகப்பட்டது.

ஒருதடவை, ரேஷன் கடையில பதுக்குறான்னு தெரிஞ்சு, அங்க ஆர்ப்பாட்டம் பண்றதுனு ஒரு ப்ளான் போட்டோம். எல்லாரையும் வரவெக்கறது காமாவோட பொறுப்புனு முடிவாச்சு. அவளுக்கு நான் உதவி செய்யணும்னு முடிவு. ஆனா, அவ எங்கிட்ட எந்த யோசனையும் கேக்கலை. அவளே சகலத்தையும் செஞ்சி, நாதன்கிட்ட நல்ல பேர் வாங்கணும்னு ஆசை. அவளோட ஒரே வீக்னஸ் டி.ராஜேந்தர் படங்கள்தான். அவ எப்பப் பேசினாலும் 'ஒருதலை ராகம்’ சந்திரசேகர் கடைசி நாள் ரோஜா கதை சொல்ற மாதிரி ஒரு பேச்சை இடையில விடுவா.

ஆர்ப்பாட்டத்துக்கு முந்தின நாள் டி.ஆர். நடிச்ச படம் ரிலீஸ் ஆச்சு. ராத்திரி செகண்ட் ஷோக்கு அந்தப் படத்துக்குப் போயிருக்கா. காலைல அசந்து தூங்கிட்டா. ஆர்ப்பாட்டம் 10 மணிக்கு. அவ வரலை. நாதன், அவ வீட்டுக்குப் போனான். அவங்கம்மா நாதன்கிட்ட, ''உன்னாலதான் அவ கெட்டுப்போய் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போறா...''னு திட்ட, நாதன் பதில் ஏதும் பேசாம வந்துட்டான். ரேஷன் கடைக்கு முன்னால ஆறு பேர் இருந்தோம்.  'ஆர்ப்பாட்டம் இன்னைக்கு இல்லை’னுட்டு நாதன் போயிட்டான்.

'ஏன் நாதன்... காமா வரலைன்னா என்ன? நாம ஆர்ப்பாட்டம் பண்ணுவோம்...'

''வேணாம்னா வேணாம்...'னு சொல்லிட்டு நாதன், சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஏறி உக்காந்துக்கிட்டான்.

எனக்கு எரிச்சல் வந்து அவனைப் பாத்து, ''காமா இல்லைன்னா அப்ப நம்ம டீமே இல்லியா?''னு கேட்டேன்.

அவன் சிரிச்சிக்கிட்டே, 'காமா... சோமானு ஆயிடுச்சு இல்ல...''னான்.

அடுத்த நாளே காமா எங்க வீட்டுக்கு வந்து, 'என்ன சொன்ன... என்னைப் பத்தி நாதன்கிட்ட?''னு பயங்கரமாச் சண்டை போட்டா. சமீபத்துல டி.ஆர். படம் பார்த்தது வேற அவளுக்கு நல்லா உதவி செஞ்சது.

வாசல்ல பூஜைக்காக நந்தியாவட்டைப் பூவைப் பறிச்சிட்டு இருந்த ஹேமாக்காதான் சத்தம் கேட்டு, வீட்டுக்குள்ள வந்து காமாவைப் பார்த்து, ''என்ன இது?''னு கேட்டா.

அப்ப, அம்மா இல்ல. டியூட்டிக்குப் போயிருந்தா. காமா, ஹேமாக்கா அதட்டின உடனே 'டபால்’னு அழுதா.

'பாருங்கக்கா. இவ நாதன்கிட்ட 'என்னை விட்டா குழு இல்லியா?’னு கேட்டிருக்கா. எங்கம்மா திட்டத்திட்ட நான் குழுவுக்காக எவ்ளோ உழைச்சிருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்.'

'ஆமாமா...'னு ஹேமாக்கா சொன்னா. நான் குத்துக்காலிட்டு உக்காந்து முகத்தைத் தூக்கிவெச்சுக்கிட்டேன். அவ ஒரு பாட்டுக்கு அழுதுட்டுக் கிளம்பினா.

வாசல் கதவுக்குப் பக்கமா நின்னு, ''உன்கூட இனிமே நான் பேசவே மாட்டேன்''னா. நான் அதுக்கும் பதில் சொல்லாம இருந்ததை ஹேமாக்கா ரசிச்சுப் பாத்துட்டு, பறிச்சுவெச்சிருந்த நந்தியாவட்டைப் பூவெல்லாம் கீழே சிதறி விழுற மாதிரி சிரிச்சா.

'ஹே... டண்டனக்கா டனுக்குடக்கா'னா. எனக்குக் காரணம் தெரியாம கண்ணு கலங்குச்சு. ''கிண்டல் பண்ணாத''னு குரல் கம்மச் சொன்னேன்.

'அடி, அறிவுகெட்டவளே. இவ மேல கோச்சிக்கிட்டு என்ன புண்ணியம்? வத்திவெச்சிருக்கானே அந்தப் பிரட்சி மன்னன், தானைத் தலைவன்... அவன் புத்தியை யோசிச்சியா?''னு கேட்டா.

p76.jpg'எல்லாத்தையும் எல்லாரையும் அப்படியே நம்பாதடீ. நீ நெனைக்கமாரி உலகம் அப்படியே துவைச்சிக் காயப்போட்ட வானம்லாம் இல்லை'னு சொல்லி, என் முகத்தை நெஞ்சோட அணைச்சுக்கிட்டா.

ஹேமாக்காவை எனக்கு ரொம்பப் பிடிச்ச நேரம் அது. ஸ்பரிசம், எவ்ளோ அழகான விஷயம்னு தோணுச்சு. பிறகு ஒருநாள் ஹேமாக்காட்ட அதைச் சொன்னப்ப கன்னத்தைக் கிள்ளிட்டே, 'ஆமா ஆமா அழகுதான். தொட்டுக்கிறது, காதலிக்கிறது எல்லாமே அழகுதான். ஏன்? காமம்கூட அழகுதான். ஆனா விடுவாங்களா? திருக்குறள்ல மனப்பாடச் செய்யுளா காமத்துப்பால் இருக்கலாம். தமிழ்ப் பாட்டுல இருக்கலாம். சினிமால இருக்கலாம். ஆனா, நிசத்துல தப்புடீ. 'ஹேமாக்கா, என்னை நெஞ்சோட சேத்து அணைச்சிக்கிட்டது, எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு’னு யார்கிட்டயாச்சும் சொல்லிப் பாரு. 'இது ஃபயர் பார்ட்டியா?’னு யோசிப்பாங்க. நெனைக்கிறது எல்லாத்தையும் சொல்லாத. ஏன்... என்னைக்கூட நம்பாத...'

''நீ, பெரீய்ய்ய அட்வைஸ் கிழவியா ஆயிட்டு வர்றது உனக்கே தெரியுதா ஹேமாக்கா? தாங்க முடியலை. உனக்கு அந்த நாதனே பரவால்லை'னு சொன்னதும் ஹேமாக்காவுக்கு ரொம்பச் சந்தோஷமாயிடுச்சு!

'இப்ப நீ குழுல இல்ல போலிருக்கு...''னு கேட்டுக் கண்ணடிச்சா...

'ம்.'

'ஹேய்... என்னாச்சு?'

நான் ஒண்ணும் சொல்லலைனாலும் அவளே பின்ன, 'கொஞ்சம் சொதப்புவான்டி பிரட்சி. ஆனாக்கூட நல்லவன்தான். பொம்பளங்களைக் கழுத்துக்குக் கீழே மட்டும் பாக்காத பத்து ஆம்பிளைல அவனும் ஒருத்தனாத்தான் இருப்பான்''னு சொன்னா.

'போக்கா... நீ அப்படின்னா இப்படிப் பேசுவ. இப்படின்னா அப்படிப் பேசுவ... வுடு. நான் இப்ப குழுல இல்லை. அவ்ளோதான்.'

து நடந்து சரியா மூணு மாசம்கூட ஆகலை. அதுக்குள்ளதான் கடலை உடைச்சுக்கிட்டே ஹேமாக்கா, குண்டைத் தூக்கிப் போட்டா. நாதன்கிட்ட நான் முகம் கொடுத்துப் பேசுறதுகூட நின்னுபோச்சு.

சைக்கிள ஓவர்ஆயில் பண்ண சண்முகம் அண்ணாச்சி கடைல நின்னப்பதான் நாதன் மறிச்சி, 'அப்படி என்ன தப்பு பண்ணிட்டேனாம்? சொல்லு... அந்த ஹேமாதான உனக்கு தூபம் போட்டுக்கிட்டு அலையுறா.. உன்னை என் தங்கச்சி மாரில்லாட்டீ நெனைச்சேன்''னு சொன்னான்.

'க்கும்... உன்னைச் சுத்தி நாலு பேரு... உன்னை 'அப்பா’, 'அண்ணே’னு கொண்டாடிட்டே இருக்கணும். நான் ஆளில்லை அதுக்கு''னு சொன்னேன்.

அவன் கோவமா ஹேண்டில் பாரைக் கையால அடிச்சான். எனக்கு கோவம் வந்து 'என்ன... மிரட்டுறியா?''னேன். அவனுக்கு முகம் மாறிடுச்சு. பின்ன எதுவுமே பேசாம நடந்துபோயிட்டேன். சைக்கிள்ல ஆயில் வெச்சுக்கிட்டே சண்முகம் அண்ணாச்சி, 'வுடு பாப்பா. நான் பாக்காத ஆளுங்களா... இது ஒரு வயசு பாப்பா. கல்யாணம் கட்டி, வெண்டைக்கா காக் கிலோ வாங்க அலைஞ்சா மாறிடுவாங்க'னு சொல்லிட்டு டயரைச் சுத்தவிட்டார்.

எல்லாம் மாறித்தான் போச்சு. ஹேமாக்காவைப் பாத்து நான் ''ச்சும்மா சொல்லாத ஹேமாக்கா... 'டொயிங்கு’னு ஆவுது எனக்கு''ன்னேன்.

'அடி ஆத்தி... சத்யமாட்டீ. அவனுக்கு நேத்து ஒரு பிராண்டட் சட்டை எடுத்தேன். உன்கிட்ட சொல்லாம இருக்க முடிலை. அதான் சொன்னேன்.''

அப்படி ஒரு சட்டை பேரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ''என்ன சட்டை?'ன்னேன்.

'பிராண்டட்னா... பெரிய கம்பெனினு அர்த்தம்.'

'செரி... திடீர்னு என்ன?'

' 'என்ன நம்பாத’னு சொன்னேன் இல்லே...' - அவ சின்னதாச் சிரிச்சா. நான் உடைச்சிப் போட்ட கடலைத் தொலியவே பாத்தேன். என்னமோ மாதிரி கனத்துக்கிடந்துச்சு மனசு. அவ எந்திரிச்சு உள்ள போய், அந்தச் சட்டையை எடுத்துட்டு வந்தா. ஊர்ல அப்படி ஒரு சட்டையை நான் பாத்ததே இல்ல. நாதன், அதைப் போட்டுக்கிட்டுத் தெருல நடந்துபோற மாதிரி இருந்துச்சு. பக்கத்துலேயே ஹேமாக்காவும் சிரிச்சிப் பேசிட்டுப் போறா. அந்தத் தெருவைக் கடக்கணும்னா, ரெண்டு பேரும், சண்முகம் அண்ணாச்சிக் கடையைத் தாண்டித்தான் போகணும்!

**********

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.