Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தி வீட்டு தேநீர்!

Featured Replies

ஆனந்தி வீட்டு தேநீர்! - சிறுகதை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம்

 

 

 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் சாய்வு இருக்கையில் 10 நிமிடங்களாக அமர்ந்து, எதிரில் தெரிந்த பெரிய மானிட்டரையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் முருகேசன்.

எந்தெந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள், எந்தெந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்கள், அங்கு இருந்த தகவல் பலகையில் நிதானமாக ஓடிக்கொண்டிருந்தன. பலத்த இரைச்சலுக்கு இடையிலும் இவன் காதினுள் தேனை ஊற்றுவது போல் ஒரு பெண்ணின் குரல், 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு’ என்று ஆரம்பித்து ஊற்றியது.

எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம் என்பதுபோல, பயணிகள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். யாரும் ஒரு கிடையில் அமர நேரம் இல்லாதவர்கள் போலவே தென்பட்டார்கள்.

பயணக் களைப்பில் தன் தோளில் சுமக்க முடியாமல் புளி மூட்டை போன்ற பேக் ஒன்றைச் சுமந்து தள்ளாடி வந்த ஜீன்ஸ் அணிந்த யுவதி, தன் அம்மாவைத் திரும்பிப் பார்த்து, ''மம்மி ப்ளீஸ்..!'' என்றாள். யுவதியின் அம்மாவோ இரண்டு தோளிலும் பேக்கைச் சுமந்தபடி மூச்சு வாங்க வந்துகொண்டிருந்தாள். முருகேசன், தன் கால் சந்தில் வைத்த இரண்டு புளிமூட்டைகளும் களவு போய்விட்டதோ என்று குனிந்து பார்த்து நிம்மதியானான்.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்புவது என்பது, அங்கு பணி நிமித்தமாகப் பல மாதங்கள் தங்கி இருந்தோருக்கு எவ்வளவு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை எழுத்தில் காட்டிவிடுவது முடியாத சமாசாரம். இமயம் அளவு, வானம் அளவு என்று 99 வாட்டி சொல்லிவிட்டார்கள். புதிதாக என்றால், முருகேசனின் பல மாத ஆபீஸ் டென்ஷன்களையும், பெற்றோரை நேரில் காணாத வருத்தத்தையும் நேற்று மாலை கழுகு ஒன்று கொத்திப்போய்விட்டது என்று சொல்லலாம்.

p68c.jpg

முருகேசனின் சொந்த ஊர் ஈரோட்டுக்குப் பக்கத்தில் சென்னிமலை. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரனும் இருப்பான் என்பதுபோல சென்னிமலையிலும் குமரன் வீற்றிருந்தான். சென்னிமலையில் தயிர் புளிக்காது என்பது ஐதீகம். ஊர் முழுதும் ஜன நடமாட்டத்துக்கு இணையாக குரங்குகள் நடமாட்டமும் இருக்கும். தவிர, மூன்று திரை அரங்குகள். தினமும் நான்கு காட்சிகள் ஓடிய காலம் போய், இப்போது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஊர் முழுக்க போஸ்டர் மட்டுமே தின்று வளர்ந்த ஆடுகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன.

கொமரப்பா செங்குந்தர் பள்ளியில் உயர் கல்வி கற்று, ஈரோடு வாசவி கல்லூரியில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவன். ஊருக்குள் இவன் நண்பர்களைப் போலவே பைசா பிரச்னையால் தறி குடோனுக்குச் செல்ல முயற்சித்தான். இவன் அப்பா வாசற்படியில் வெள்ளைத் துண்டு போட்டு, தாண்டிப் போனால் சுத்தப்படாது என்று தடை போட்டார். அதற்கு, சின்ன வயதில் இருந்தே அப்பாவின் சொல்பேச்சு என்ற வெள்ளைத் துண்டுக்கு மதிப்பு கொடுத்து வந்த முருகேசன், நேஷனல் ஜியோகிராபியில் புலி, சிங்கம், யானைகளின் குடும்ப வாழ்க்கையைப் பார்த்தபடி டி.வி-யின் முன் கிடந்தான்.

வன், வீட்டாரிடம் சொல்லிக்கொள்ளாமல் சென்னைக்குப் பறந்துவிடவும், வாழ்க்கையில் முன்னேற ஊர்விட்டு ஊர் பறந்துவிட வேண்டும் என்ற பழைய தத்துவத்தை மறுபடியும் இவன் காதினுள் புகுத்திய ஆனந்தி, அந்தச் சமயத்தில்தான் முருகேசனுக்கு தோழியானாள். ஆனந்தி, இவனுக்குப் பக்கத்து வீடுதான். ஆறு மாதங்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் குடும்பம், மூன்று மாதங்கள் காலியாகக்கிடந்த வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தது. நான்கு மாதங்கள் கழித்துத்தான் அந்த வீட்டில் தாவணி அணிந்த, பார்க்க அழகான பெண் ஒருத்தி இருப்பது இவனுக்குத் தெரியவந்தது. ஆனந்தி, இவனைவிட இரண்டு வயது மூத்தவள்.

கரூரில் எப்போதோ அரசினர் பள்ளியில் 10-வது முடித்தவள், இவனைவிட தெளிவாகவும் அறிவாகவும் பேசினாள். அதனால், எல்லாப் பெண்களும் அறிவாளிகள்தான் என்ற முடிவுக்கும் வந்திருந்தான். இவனுக்கு ஏற்கெனவே தெரிந்த இரண்டு அறிவாளிகள் இவன் அம்மாவும் அக்காவும்.

பல இளைஞர்களின் கனவாக இருக்கும் சினிமா ஆசை, இவன் மனதிலும் அப்போது இருந்தது. கையில் இரண்டு ஸ்கிரிப்ட்களை வைத்திருந்தான். அதுபோகவும் மனதில் முடிக்கப்படாத சில ஸ்கிரிப்ட்களும் கிடந்தன. முருகேசனின் முதலாவது ஸ்கிரிப்ட் சென்னிமலையிலேயே ஆரம்பித்து ஊருக்குள்ளேயே முடிந்துவிடும் காதல் கதை.

இரண்டாவது ஸ்கிரிப்ட், செக்கோஸ்லோவியாவில் ஆரம்பித்து திருப்புக்காட்சியில் சென்னிமலைக்குள் நடப்பது போல அமைத்திருந்தான். தயாரிப்பாளர் பெரிய கையாக இருக்க வேண்டும். தவிர, நாயகிக்கு இரட்டை ரோல் வேறு. மனிதனாகப் பிறப்பெடுத்த யாரும் அளவுக்கு அதிகமாக ஆசைப்படவேண்டும் என்ற கொள்கை உடைய முருகேசன், சீக்கிரமே சோத்துக்கு சிங்கியடிக்கும் நிலைக்கு சென்னை வீதியில் தள்ளப்பட்டான். தன் ஆசைகளை சில காலம் மனதில் பூட்டிவைத்து விட்டு, பத்திரிகை ஒன்றில் தன்னை நிருபராக ஒப்படைத்தான்.

p68b.jpg

போஸ்ட்மார்டனிசம், வாதை, கலாசாரம் என்று பேசிக்கொண்டிருந்த பத்திரிகை, இவனுக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கும், அறை வாடகைக்கு மான ஊதியத்தை மகிழ்வுடன் அளித்தது. நல்ல கால நேரத்தில் வேறு வாரப் பத்திரிகைக்குத் தாவிவிட்டான். ஊதியம் அதிகம் என்பதால், ஊருக்கு மாதம் தவறாமல் அம்மா லட்சுமி பெயருக்கு ரூபாய் 4,000 செக் அனுப்பத் தொடங்கினான் முருகேசன்.

ஆபீஸில் இவன் துணைக்கு வரும் போட்டோகிராபர் ஸ்வீட்டி, மாநகர மங்கை. மாநகரங்கள் இப்படி ஸ்வீட்டிகளுக்காகவே உருவாகி நிற்கின்றன போலும். ''ஏனுங்கோ சித்தெ நில்லுங்கோ, வெசயா போவாதீங்கோ'' என்று கோவை சரளா மாதிரி கொங்கு பாஷையில் கூப்பிட்டு இவனைத் தடுமாறச் செய்வாள். மற்றபடி தடை செய்யப்பட்டதைத் தடையின்றி மென்றுகொண்டிருப்பாள். ''இதெல்லாம் தப்புங்க'' என்று சொல்வான் முருகேசன்.

''ஐ டோண்ட் லைக் அட்வைஸ் குட்டிப் பையா!'' என்பாள். ''சண்டே என் ரூமுக்கு வாடா குட்டிப் பையா. நம்ம கார்ட்ஸ் போடலாம், போரடிக்காது'' என்றவளுக்குச் சலிப்பையே பதிலாகத் தந்துகொண்டிருந்தான். முன்பு கையில் வைத்திருந்த ஸ்கிரிப்ட்டில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என இவன் கை அரித்துக் கொண்டே இருந்தது!

கோவை எக்ஸ்பிரஸில் பக்கத்தில் அமர்ந்திருந்த பாப்பாவிடம் 10 வார்த்தைகள் மட்டும் பேசித் தூங்கிப் போனவன், ஈரோடு வந்துதான் விழித்தான். ஈரோடு அவனை 'வாடா டுபுக்கு...’ என்று வரவேற்பதாக நினைத்து இவனாகச் சிரித்துக்கொண்டான். ரயில்வே ஸ்டேஷனில் எந்த மாற்றங்களும் இல்லை. அதே சிவப்பு உடை அணிந்த போர்ட்டர்கள் டிராலிகளைத் தள்ளிக்கொண்டு போனார்கள்.

ஈரோடு பேருந்து நிலையம் போய், அதன் சமீபத்திய அழகைக் கண்டு சென்னிமலை பேருந்து ஏறலாம் என்ற திட்டத்தை ஒதுக்கிவிட்டு, வழியே வந்த பேருந்திலேயே நெரிசலில் ஏறிக்கொண்டான். நண்பர்களில் யார் யாரைச் சந்திப்பது என்று திட்டம் போட்டபடி நின்றுகொண்டே பயணித்தான்.

முருகேசனின் முதல் ஸ்கிரிப்ட்டின் நாயகியை, அவள் தந்தை அரச்சலூர் மாப்பிள்ளைக்குக் கட்டிக்கொடுத்து வருடங்கள் ஆகிவிட்டன. அவளை, குழந்தை குட்டியுடன் தேர்த் திருவிழாவில் பார்த்ததாக நண்பன் யாராவது சொன்னால், இவனால் பெருமூச்சு ஒன்றை விட முடியும். இவனின் இரண்டாவது ஸ்கிரிப்ட்டின் டபுள்ரோல் நாயகி, பங்கஜம் காலனியில் கணவனுக்காக கேஸ் அடுப்பு பற்ற வைத்து வடைச்சட்டி எடுத்துவைத்துக்கொண்டிருந்தாள்.

முருகேசன் மேலபாளையத்தில் தன் வீட்டினுள் நுழைந்தபோது, அக்கா தன் கணவரோடு வந்திருந்தாள். அம்மா இவனைப் பார்த்ததும் கூவென அழுகையை ஆரம்பித்துவிட்டாள். ''கடைச்சோறு தின்னு எப்புடி எளச்சிப்போயிட்டான் பாருங்க'' என்று அழுத அம்மாவை, அப்பாதான் அடக்கினார்.

முருகேசன், அப்பாவுக்குத் தன் பேக்கில் இருந்து வேட்டி-சட்டை எடுத்து நீட்டினான். அம்மாவுக்கும் அக்காவுக்கும் சேலைகள் கொடுத்தான். அக்காவின் பிள்ளைகளுக்கு வாங்கி வந்திருந்த உடைகளை அவர்களிடமே கூப்பிட்டுக் கொடுத்தான். அப்பா இவன் பிறந்த நாளுக்காக வாங்கிவைத்திருந்த, 'என் பெயர் பட்டேல்’ நாவலை கவரில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

''ஈரோடு புத்தகக் காட்சிப் பக்கம் போயிருந்தேண்டா. இவதான் ஒரு நாள்கூட உருப்படியா ரசம் வெச்சதே இல்லையே. அதான் இவளுக்கு ரசம் வைப்பது எப்படி? புத்தகத்தைத் தேடிப்புடிச்சு வாங்கிட்டு வந்து குடுத்தேன். இப்ப என்னடான்னா வாயில வைக்க முடியாத அளவுக்கு ரசம் வைக்கிறா'' என்றார் அப்பா.

''இப்ப அவன் கேட்டானா ரசத்தைப்பத்தி உங்க கிட்ட? உங்க வாய் இருக்கே சாமீ! நீ போய்க் குளிச்சுட்டு வாடா. இவரு இனி ஒண்ணொண்ணா ஏதாச்சும் சொல்லிட்டேதான் இருப்பாரு'' என்று அம்மா சொல்லவும், துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு நகர்ந்தான்.

அப்பாவும் அம்மாவும் இன்னமும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள். ஒரு நாள்கூட அப்பா, அம்மாவை கைநீட்டி அடித்தது இல்லை. அம்மாவைப் போல தனக்கும் ஒரு துணை அமைந்துவிட்டால் வாழ்வில் டைவர்ஸ் பிரச்னையே இருக்காது என்று யோசித்தபடி முதல் சொம்பு தண்ணீரைத் தலைக்கு ஊற்றினான்.

குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு சோபாவில் அமர்ந்தவன் முன்னால், குட்டிப் பையன் புது டிரெஸ் அணிந்து ஓடிவந்து அழகு காட்டினான். ''மாமா பேன்ட் பெருசாப் போச்சுனு உங்கக்கா கீழ ரெண்டு மடிப்பு மடிச்சு உட்டிருக்கா! சட்டை பெருசா போச்சுனு வவுத்துக்குள்ள உட்டு இன் பண்ணி பெல்ட் போட்டு உட்டுட்டா'' என்று அழகு காட்டினான்.

''இதான் சாமி இப்பத்த பேசனு! ஜம்முனு இருக்கு மாப்பிள்ளை மாதிரி'' என்றதும் ஓடிப்போய் உள் அறையில் அக்காவிடம், ''உன் தம்பி சொல்லுது ஜம்முனு இருக்கேனாம்'' என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

''ஆனந்தி கல்யாணப் பத்திரிகை உனக்கு வந்துச்சாடா முருகேசா? உன்னோட அட்ரஸை என்கிட்டத்தான் வந்து கேட்டு வாங்கிட்டுப் போனா.

நீ எப்படியும் அவ கல்யாணத்துக்கு வருவேனு நாங்க பார்த்துட்டு இருந்தோம்'' - அம்மா இவனிடம் சொல்லிக்கொண்டே வெங்காயம் உறித்துக்கொண்டிருந்தாள். அப்பா, கறி எடுத்துவர பையை தூக்கிக்கொண்டுப் போய்விட்டார்.

p68a.jpg

முருகேசனுக்கு, ஆனந்தியின் கல்யாணத்துக்கு வர முடியாமல் போன துக்கம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது. இவனின் இரண்டு ஸ்கிரிப்ட்களையும் படித்த ஒரே தோழி அவள்தான். படித்ததும் ஒன்று சொன்னாள். ''உனக்கே ரெண்டு வருஷம் போனாப் புரிஞ்சிடும் முருகேசு. அப்படி இல்லீனா இதே புரிய வெச்சிடும்!''

று மாதத்திலேயே புரிந்துகொண்டான் முருகேசன். அன்றில் இருந்து ஆனந்தி வெறும் தோழி மட்டுமல்ல, தீர்க்கதரிசினி இவனுக்கு. அம்மாவிடம் நேம்பாக விசாரித்தான். ''ஆனந்தியை எந்த ஊருக்குக் கட்டிக் குடுத்திருக்கும்மா?''

''இங்கதாண்டா இருக்கா கொமராபுரியில. அவ அம்மாகிட்ட எவத்திக்கின்னு கேட்டு ஒரு எட்டு போயிட்டு வந்துடு. போறப்ப சும்மா வெறுங்கையை வீசிட்டுப் போயிடாதே. எனக்கு வாங்கிட்டு வந்தியே சேலை பச்சைக் கலர்ல... அதை எடுத்துட்டுப் போயி குடு. எனக்குப் புடிக்கலை. ஆறுமுகங் கடையில வேற பொடிக்கலர்ல எடுத்துக் குடு'' - அம்மா சொன்னதும் சிரித்துக்கொண்டான்.

''நான் பச்சைய எடுத்துக்குறேன். எம்பட ஊட்டுக்காரருக்கு நீலக் கலரு புடிக்காது'' உள் அறையில் இருந்து அக்காவின் குரல் கேட்டது!

கொமராபுரியில ஆனந்தியின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் இவனுக்கு சிரமம் எதுவும் இல்லை. என்ன... பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டிவிட்டான். கதவு நீக்கி வந்த அம்மாள், இவனுக்குப் பக்கத்து வீட்டைக் கை காட்டிவிட்டு மீண்டும் சாத்திக்கொண்டாள். உள்ளே டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டிருந்தது. கிரிக்கெட் ரசிகை போலும் என நினைத்தான்.

நல்லவேளை... 'நீ யாரு, எந்த ஊரு, உங்க அப்பா என்ன வேலை பண்றாரு, கைல என்ன பொட்டணம், உங்க அம்மா ஹவுஸ் வொய்ஃபா, என்ன பாட்டு வேணும்’ என்றெல்லாம் கேட்காமல் விட்டதே என்று ஆனந்தி வீட்டுக் கதவைத் தட்டினான். கதவு நீக்கிய ஆனந்தி, முகத்தில் ஆச்சரியம் கால் கிலோ அளவு காட்டி இவனை உள்ளே அழைத்தாள். பழைய, 'ஹாய்டா...’ சொல்லவே இல்லை. திருமணத்துக்கு வராத கோபமாக இருக்குமென நினைத்துக்கொண்டான். ஆனால், அதற்கெல்லாம் கோபித்துக்கொள்பவள் இவன் தீர்க்கதரிசினி அல்லவே!

''வாழ்த்துகள் ஆனந்தி. உன் கல்யாணத்துக்கு வர முடியலை. மன்னிச்சுடு!''

''பரவால்ல விடு முருகேசு. இப்படி சோபாவுல உட்கார்ந்து இந்த போட்டோ ஆல்பத்தைப் புரட்டி பார்த்துட்டு இரு. நான் டீ கொண்டு வர்றேன்'' என்று சமையலறைக்குள் போய்விட்டாள்.

p68.jpgஆனந்தி, இவன் மடியில் வைத்துவிட்டுப்போன கனத்த ஆல்பத்தை விரித்தான். மாலையும் கழுத்துமாக ஆனந்தியின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவரைப் பார்த்ததும் அதிர்ந்தான் முருகேசன். ஆனந்திக்கு சித்தப்பா மாதிரி இருந்தார் அவர். தலைமுடி சாயம் பூசப்பட்டு இருந்தது, அப்படியே அப்பட்டமாகத் தெரிந்தது. 'இந்த ஆல்பத்தை என்னவென்று இனி பார்க்க? சொக்க விக்கிரகத்தைக் கொண்டுபோய் இவனிடம் ஒப்படைத்து இருக்கிறார்களே! இதற்கு சொந்தபந்தங்கள் வேறு சாட்சி. இந்த உலகம் ஏன் இவ்வளவு கோரமாகிவிட்டது? ஏன் இங்கு வாழ்பவர்களும் இவ்வளவு கோரமாக மாறிவிட்டார்கள்?’ மனதில் ஏற்பட்ட கசப்புக்கு வார்த்¬தகளில் வடிவம் கொடுத்தான்.

ஆனந்தி, இவனுக்கு  டீ கொண்டுவந்து கொடுத்தாள்.

''அப்புறம் முருகேசு... லீவுல வந்தியா? சென்னைல எப்படிப் போயிட்டு இருக்கு பொழப்பு? அவர் ஈரோடு மருத்துவமனையில மருந்து ஆளுநரா இருக்கார். இப்ப வர்ற நேரம்தான். வந்தா என்னை 730 கேள்விகேட்டு அடிச்சுடுவாரு'' என்று நிதானமாகச் சொன்னாள். 'கிளம்பீட்டின்னா நல்லது’ என்பதைச் சற்றே நீளமாகச் சொல்கிறாள் என்றே நினைத்தான்.

இருந்தும், ''மேரேஜ் ஆகி, மூணு மாசம் இருக்குமில்ல'' என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டான். ''94 நாள் ஆச்சு'' என்றாள். எல்லாமும் நினைப்பதுபோல் நடந்துவிடுகிறதா என்ன!

சட்டென்று ஆனந்தியின் கணவர், ''வாசக்கதவைத் தொறந்துபோட்டு வெச்சிருக்கியா நீயி?'' என்றபடி வந்தார். மரியாதைக்காக இவன் எழுந்து நின்றான். அவர் இவனைக் கண்டுகொள்ளாமல் தன் அறைக்குள் நுழைந்தார்.

''இங்க வா ஆனந்தி'' என்று உள் அறையில் இருந்து குரல் கொடுத்தார். ''டீ எடுத்துட்டு வர்றனுங்க மாமா'' என்றவள், டீ தம்ளரோடு அறைக்குள் சென்றாள். உள்ளே நிமிடத்தில் டீ தம்ளர் உருளும் சத்தமும், ''சர்க்கரை எதுக்குடி இத்தனை போட்டு எடுத்துட்டு வந்திருக்கே?'' என்ற அவரின் குரலும் கேட்டன.

''இதோ ஒரு நொடியில வேற போட்டு எடுத்துட்டு வந்துடறேனுங் மாமா'' - சொன்ன ஆனந்தி, தம்ளரோடு வெளிவந்தவள், கண்களில் ஈரம் மின்ன இவனைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டாள். இவன் எழுந்து வாசல் கதவு வருவதற்குள் வேகமாகப் பின்னால் வந்தவள், இவன் கையில் சேலை கவரைத் திணித்து, ''சாரிடா! உன் அக்காவுக்கு இதைக் குடுத்திடு ப்ளீஸ்!'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றாள். முருகேசன், முன் கதவைச் சாத்திவிட்டு பாதையில் இறங்கினான்.

வீடு வந்தபோது அம்மாதான், ''ஏன் இப்படி பேய் அடிச்சா மாதிரி இருக்கே? கொண்டுபோன சேலைக் கவரையும் திருப்பிக்கொண்டு வந்துட்டே! ஆனந்திய பார்த்தியா... பேசுனியா?'' என்று கேட்டாள். ''புதுசா கல்யாணம் ஆனவங்களை கைல புடிக்க முடியுமா? அண்ணமார் தியேட்டருக்கு ஒண்ணாப் படம் பார்க்கப் போயிட்டாங்களாம். பக்கத்து வீட்டுல சொன்னாங்க'' என்றான் முருகேசன்.

''போச்சாது... நாளைக்குப் போயி பார்த்துட்டாப் போவுது போ'' என்றாள் அம்மா.

******

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

கதை மிகவும் கனதியாய் இருக்கு, ஓவியங்கள் அழகாய் அமைஞ்சிருக்கு.....! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.