Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாகீரதி... பாகீரதி...

Featured Replies

பாகீரதி... பாகீரதி... - சிறுகதை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: அரஸ்

 

'சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா.

'அடுத்த இஷ்யூ... முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று 'மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது.

சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று உதவியாளர் சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தி, அங்கு வாழ்வின் எஞ்சிய பாகத்தைக் கழிக்க முடியாமல் கழித்தபடி இருக்கும் முதியோர்களிடம் அழைத்துச் செல்லும்படி கூறினார்.

வித்யாவும் ரெக்கார்டரைக் கையில் எடுத்துக்கொண்டாள். ஆரம்பமாயிற்று சந்திப்பு!

முதல் சந்திப்பு, பஞ்சாட்சரம்-பத்மாவதி  தம்பதிகளிடம்...

''நமஸ்காரம்... என் பேர் வித்யா. முதியோர் சிறப்பிதழுக்காக உங்களைப் பேட்டி காண வந்திருக்கேன். உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா?''

''ஏன் இல்லாம... மூணு பசங்க.''

''மூணு பசங்க இருந்துமா நீங்க முதியோர் இல்லத்துல இருக்கீங்க?''

''அது, எங்க தலையெழுத்து. மத்தபடி எங்க பிள்ளைகள் மேல தப்பு ஒண்ணுமில்லை.''

''ஆச்சரியமான பதிலா இருக்கே!''

p80b.jpg

''ஆமாம்மா... வீடு வாசலை வித்து நல்லாத்தான் படிக்கவெச்சோம். பசங்களும் படிச்சாங்க. அமெரிக்கா, ஆஸ்திரேலியானு வேலை கிடைச்சது, அனுப்பிவெச்சோம். மாசம் அஞ்சாறு லட்சம் சம்பளம். ஆனா, எங்களால அங்க போய் அவங்களோட இருக்க முடியல.''

''எதனால?''

''எங்க வரைல இங்க ஊருக்குள்ள ஒரு பக்கமா ஜெயில் இருக்கு. அங்க ஊரே ஜெயிலாதாம்மா இருக்கு. காலாற நாலு தெருப்பக்கம் நடந்தோம்னு நடக்க முடியாது. காபி பொடி வாங்கக்கூட 30, 40 மைல் கார்ல போகணும். அக்கம்பக்கத்து வெள்ளக்காரர், 'ஹவ் ஆர் யூ?’ம்பா... 'ஹேவ் எ நைஸ் டே!’ம்பா அதுக்கு மேல அவா பேசறது எங்களுக்குப் புரியாது.

பசங்க வேலைக்குப் போய்ட்டா, வீட்டுல கிடக்குற ஃபர்னிச்சரோட ஃபர்னிச்சராத்தான் நாங்களும் உட்காந்திருக்கணும். ஒரு கொரியர் வந்தாகூட எழுந்துபோய் வாங்க, காலுக்குத் திராணி கிடையாது. மூட்டு வலி. மொத்தத்துல நாங்க, அவங்க வரையில பாசமான பாரம்தானே ஒழிய, துளி ஒத்தாசை கிடையாது. அதான் 'சரணாகதி’க்கு வந்துட்டோம்'' - பத்மாவதி பாட்டி, பத்திரிகையாளர் போல எடிட் செய்து பேசி முடித்தாள்.

''நல்லபடியா படிக்கவெச்சதுதான் நாங்க செய்த தப்போனு தோண்றது'' என்றார் பஞ்சாட்சரம்.

நிஜமாகவே நெஞ்சில் கூர்மையான வேலால் குத்தியது போல்தான் இருந்தது வித்யாவுக்கு.

டுத்த செட் அகல்யா - ராமநாதன் தம்பதி!

அழகாக உட்கார்ந்து செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர்.

''எங்களுக்குக் குழந்தைங்க இல்லை; காதல் திருமணம் வேற. அதனால உறவுகளோட பெரிய இணக்கமும் இல்லை. நல்லவேளை... எனக்கு அரசாங்க உத்தியோகம்; பென்ஷன் வருது. சொந்தமா வீடு இருந்தது. அதை வித்துட்டு பணத்தை பேங்க்ல போட்டுட்டு இங்க வந்துட்டோம். எங்களுக்கு எது நடந்தாலும் பயம் இல்லை. இங்கேயே எல்லா ஈமக்கிரியையும் செய்துடுவாங்க. நாங்க எங்க சாம்பலை காசியில கரைக்கணும்னு விரும்பினோம். அக்ரிமென்ட்லயே அதை எழுதி ஓ.கே-னுட்டாங்க'' -ராமநாதன் செஸ் விளையாடியபடியே மிகச் சகஜமாகப் பேசினார்.

அவர் தோரணையே... 'வாழ்க்கை என்ன பெரிய வாழ்க்கை. அது ஒரு விளையாட்டுதானே! பதிலுக்கு அதோடு நாமும் விளையாடினால் தீர்ந்தது’ என்பதுபோல் இருந்தது.

இந்த இரண்டு ஜோடிகளே, வித்யா மனத்தைக் கனப்படுத்திவிட்டார்கள். முதல் தடவையாக, 'தனக்கு வயதானால்..?’ என்ற கேள்வி அவளுக்குள் எழும்பியது.

மூன்றாவது ஜோடியில் ஒருவர் படுத்தபடுக்கையாக. அதாவது, சுப்புலட்சுமி பாட்டி படுத்தபடுக்கையாக. கணவர் ராமபத்ரனுக்கு 96 வயது. டி.வி. ரிமோட்டைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு அழுத்தி அழுத்திப் பார்த்தபடி இருக்க, டி.வி. ஒளிரவே இல்லை.

''அத இப்படித் தாங்க. ரிமோட்டை அழுத்தத் துப்பில்லை. இதுல சீரியல் பார்க்கலேனா தலை வெடிச்சிடும்'' என்று சுப்புலட்சுமி பாட்டி அங்கலாய்க்க,

''இந்தாடி... நீதான் போடு பார்ப்போம். இந்த ரிமோட்டுக்கும் என்னை மாதிரியே எல்லாம் போச்சு போல'' என்றார்.

பாட்டி, ரிமோட்டை நேராகப் பிடித்து நொடியில் டி.வி-யை ஒளிரவைத்தார்.

''சுப்பி... உனக்கு மந்திர விரல்டி!''

''மண்ணாங்கட்டி... ரிமோட்டை நேரா பிடிக்கத் தெரியலையே உங்களுக்கு. நான் போய்ட்டா அவ்ளோதான் உங்க கதி. கோமணத்தைக்கூட கோணலாக் கட்டிண்டு... கர்மம்... கர்மம்'' - சுப்புலட்சுமி பாட்டி தலையில் அடித்துக்கொள்ள, கச்சிதமாக உள்ளே நுழைந்தாள் வித்யா.

ராமபத்ரன் அவளைப் பார்த்து, ''அடடே... பாகீரதியா... வா... வா'' என்றார்.

வித்யாவுக்கு ஆச்சரியம்.

''சார்... நான் பாகீரதி இல்லை, வித்யா.''

''வித்யாவா... நீ பாகீரதி இல்லே?''

''அதான் 'வித்யா’ங்கிறாளே... அப்புறம் 'பாகீரதி’னா. பார்க்கிறவால்லாம் உங்க பேத்தி 'பாகீரதி’தானா?'' - சுப்புலட்சுமியின் இடையீடு, வித்யாவுக்கு எல்லாவற்றையும் புரியவைத்தது.

''அதனாலென்ன... நீங்க என்னை 'பாகீரதி’யாக்கூட நினைச்சுக்கலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை'' என்றாள்.

''எதுக்கும்மா வந்துருக்கே..?'' - படுத்த நிலையில் இருந்தே சுப்புவிடம் இருந்து கேள்வி.

அப்போது, சுப்புவிடம் இருந்த ரிமோட்டை வாங்கி, டி.வி-யில் தனக்குப் பிடித்த சீரியலை வைக்கத் தொடங்கினார் ராமபத்ரன்.

''நான் ஒரு ஜர்னலிஸ்ட். முதியோர் சிறப்பிதழுக்காக ஒரு கட்டுரை எழுதணும். அதான் உங்க எல்லோரையும் பார்க்க வந்தேன்.''

''எங்களுக்குனு சிறப்பிதழா... விளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சமா?'' - பாட்டி படுத்துக்கொண்டே ஆகாசத்துக்கு நிமிர்ந்த மாதிரி கேட்டது, வித்யாவை ஓர் உலுக்கு உலுக்கியது.

''உங்களை நீங்க அப்படிச் சொல்லிக்கக் கூடாது. உங்க அனுபவங்கள் எல்லாம் லேசுப்பட்டதா என்ன?''

''உண்மைதான்... அது லேசுப்பட்டது இல்லை. அதே சமயம், ஆனந்தமாப் பகிர்ந்துக்கக்கூடியதும் இல்லை. பாரு... கால் போய் படுத்துண்டு கிடக்கேன். சாப்பிடவே பிடிக்கலைம்மா. நாக்கு ஒண்ணும் செத்துப்போயிடலை. இப்பவும் உப்பு, ஒரப்பு தேவைப்படறது. ஆனா, சாப்பிட்டா வெளியேத்தணுமே..? என் கழிவை இங்க ஒரு பொண்ணு வந்துதான் சுத்தம் பண்ணுவா. அவளைப் போல பாவி இருக்க முடியுமா..? சொல்லு பார்ப்போம்'' என்றாள் சுப்புலட்சுமி பாட்டி.

p80a.jpgஇதென்ன... எல்லா வயதானவர்களுமே இப்படிக் கேட்கிறார்கள்? வித்யாவுக்கு விதிர்விதிர்ப்புத் தட்டியது. சுப்புலட்சுமி பாட்டியை மலங்க மலங்கப் பார்த்தாள். பாட்டியும் தொடர்ந்தாள்.

''எங்க கல்யாணத்துக்குச் சரியான கூட்டம். 2,000 பேர் வந்ததா சொன்னாங்க. எல்லாருமே எங்களை 100 வருஷம் உசுரோட இருக்கணும்னே வாழ்த்தினாங்க. அது இப்படியா பலிக்கணும்?

பாரு... இந்த டி.வி. ரிமோட்டைக்கூட இவருக்கு ஒழுங்காப் போடத் தெரியலை. இவரோட 75 வருஷம் வாழ்ந்துட்டேன். ஒரு பொண்ணு இருந்தா. ஆனா, அவ கொடுத்து வெச்சவ. அவளுக்கு 60 வயசு நடக்கிறப்பவே ஹார்ட் அட்டாக்ல போய்ச் சேர்ந்துட்டா. பேரன் - பேத்திகள் வெளிநாட்டுல இருக்காங்க. 'கிராண்ட் ஃபாதர்ஸ் டே’க்கு போன் பண்ணி விஷ் பண்ணுவாங்க. மாசமானா எங்க செலவுக்கு அவங்கதான் பணம் கட்டுறாங்க. என்ன பண்ணி என்ன புண்ணியம்... எங்க உசுர் போவேனாங்குது'' - சுப்புலட்சுமி பாட்டியின் அடுத்த கட்ட விளக்கத்தில், அவர்களின் நிலை வித்யாவுக்கு விளங்கிவிட்டது. பிள்ளைகள் இல்லாததால் முதுமை அல்லாடுகிறது; அப்படியே இருந்தாலும் வெளிநாட்டு மோகத்தால் அல்லாடுகிறது.

'சரணாகதி’ மாதிரி அமைப்புகள் மட்டும் இல்லாவிட்டால், இவர்கள் நிலையைக் கற்பனை செய்வதுகூட சிரமம்தான்.

''இப்ப உங்களோட ஆசை..?'' - வித்யா கேட்டாள்.

''ஒரே ஆசைதான். உயிர் போனா போதும்.''

''ஐயோ... அப்படில்லாம் சொல்லாதீங்கம்மா.''

''வேண்டாம் குழந்தை. எங்களுக்கான சாவை நீ துக்கமாவே நினைக்காதே. அதிகபட்சம் 70, 75 வயசுக்கு மேலே யாருமே வாழக் கூடாது. வாழ்ந்தா அது நரகம். நீ உன் காலை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ. அதுக்கு ஒரே வழி... பகவான் கால், பெரியவா கால்னு எல்லார் காலையும் பிடி. ஆரோக்கியமா இருக்க ஆசீர்வாதம் வாங்கிக்கோ. கண் இல்லாமக்கூட கௌரவமா வாழ்ந்துடலாம்; கால் போனா அவ்வளவுதான்.

நீ எழுதப்போற கட்டுரையில இதையும் எழுது.

கால்களால நடந்து கோயில், குளத்துக்குப் போங்கோ... பாதயாத்திரை பண்ணுங்கோ. அதைச் சொகுசா வெச்சுண்டு அடுத்த தெருவுக்குப் போகக்கூட ஆட்டோவைக் கூப்பிட்டா என் நிலைமைதான். நடக்கலாம்... அதனால ஒரு கௌரவக் குறைச்சலும் வந்துடாது. நாம வறட்டுக் கௌரவம் பார்க்கப் போய் ஆரோக்கியமும் போயிடறது; ஆட்டோக்காரனும் அதுக்குத் தண்டனையா 50, 100-னு புடுங்கிப்பிடுறான்'' - சுப்புலட்சுமி பாட்டி எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து முடித்தாலும் அவ்வளவும் அசைக்க முடியாத கருத்துகள்.

வித்யாவுக்கு தான் ஒரு ஞான பூமிக்குள் பிரவேசித்துவிட்டது போலத்தான் தோன்றியது.

''கட்டாயம் எழுதறேம்மா... உங்களுக்கு எதாவது உதவி வேணுமா?'' - வித்யா கேட்கவும், சுப்புலட்சுமி பாட்டி கப்பென்று பிடித்துக்கொண்டாள்.

''நீ கோயிலுக்குப் போவியா?''

''ஓ... போவேனே...''

''எனக்காக ஒரு பிரார்த்தனை பண்ணிப்பியா?''

''தாராளமா...''

''எந்தக் காரணத்தைக்கொண்டும் என் உயிர் முதல்ல போயிடக் கூடாது. இவரை அனுப்பிட்டுத்தான் நான் போகணும். ஒருவேளை நான் முந்திண்டா, இவர் அவ்வளவுதான். தவிச்சுப்போய்டுவார். இன்னைக்குக்கூட ஜட்டியைத் திருப்பித்தான் போட்டுண்டிருக்கார். நான் இருந்தாத்தான் எல்லாத்தையும் சொல்லி சரிசெய்ய முடியும்'' என்றதும், வித்யாவுக்குக் கண்களில் இருந்து நீர் புற்றுப் பாம்பாக எட்டிப் பார்த்தது.

அதோடு சுப்புலட்சுமி பாட்டியின் கைகளைக் கண்களில் ஒற்றியபடி அவள் புறப்பட்டபோது ''நிஜமா சொல்லு... நீ பாகீரதி இல்லை?'' என ராம்பத்ரன் கேட்டவிதம் அவளை வெடிக்க வைத்துவிட்டது.

வித்யாவின் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு.

தமிழக முதலமைச்சர்கூட படித்துவிட்டு தலைமைச் செயலர் மூலம் பாராட்டு வந்து சேர்ந்தது.

வித்யாவுக்கு அதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. சுப்புலட்சுமி பாட்டியைப் பார்த்து, கட்டுரையைப் படித்துக்காட்டி அவளின் முகப் பிரகாசத்தைப் பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது.

புறப்பட்டுவிட்டாள்.

'சரணாகதி’க்குள் நுழைந்து மேனேஜர் ராகவன் முன் புன்னகையோடு நின்றாள்.

''சார்... கட்டுரை படிச்சீங்களா?''

''ம்... பிரமாதம்!''

p80.jpg''சி.எம்-கிட்ட இருந்துகூட பாராட்டு சார். அனேகமா உங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கலாம்.''

''சந்தோஷம்மா...''

''சுப்புலட்சுமி பாட்டியைப் பார்க்கணும். அவங்க ஒரு பிரார்த்தனை செய்ய சொல்லியிருந்தாங்க. பண்ணியிருக்கேன். குங்குமப் பிரசாதமும் கொடுக்கணும்.''

வித்யாவின் அந்த விருப்பத்தின் முன்னால் சற்று மௌனம் சாதித்தார் ராகவன்.

''சார்ர்ர்...''

''சாரிம்மா... அவங்க பிராப்தி அடைஞ்சுட்டாங்க. ரெண்டு நாளாச்சு?''

''மை காட்..! அவங்க கணவர்?''

''அவர் இருக்கார். அவருக்கு பாட்டியம்மா போனதே தெரியாது. இங்க இருக்கிறவங்க துக்கத்தோட சாகறதை நாங்க விரும்பறது இல்லை. அதனால பாட்டியை ஆஸ்பத்திரில வெச்சு வைத்தியம் பார்க்கறதா சொல்லியிருக்கோம்...''

''அப்ப காரியங்களை..?''

''அவர் கையால பில்லும் எள்ளும் வாங்கித்தான் செஞ்சோம்.''

''அப்ப அவருக்குத் தெரிஞ்சிருக்குமே..?''

''சாதுர்யமா செஞ்சோம்மா. எப்படியும் அவரும் இன்னும் சில மாசங்கள்ல பிராப்தி அடைஞ்சுடுவார். இதை நான் சொல்லலை. டாக்டர் சொன்னதைச் சொல்றேன். அதுவரை அவர் துக்கவயப்படாம, தான் ஓர் அநாதைனு ஃபீல் பண்ணாம சந்தோஷமா இருக்கட்டுமே...'' - ராகவன் சொன்னதன் நியாயம் வித்யாவுக்கும் புரிந்தது.

வாழ்க்கையில்தான் இப்படி எத்தனை வண்ணங்கள்? - கனத்த மனத்தோடு புறப்பட்டாள்.

வாசல் தாண்டும்போது, ''பாகீரதி... பாகீரதி...'' என்று ஒரு குரல்.

திரும்பிப் பார்த்தாள்.

ராமபத்ரனேதான். தள்ளாடியபடி நெருங்கி வந்தார். ''என்னம்மா இவ்வளவு தூரம் வந்துட்டு தாத்தாவைப் பார்க்காமலே போறே..?'' - கேட்டார்.

வித்யாவின் கண்களில் மீண்டும் நீர் முயல்களின் குதிப்பு. துடைத்துக் கொண்டாள். ''உங்களைத்தான் தாத்தா தேடிண்டிருக்கேன். வாங்க போகலாம்'' என்றாள் அவர் அறை நோக்கி.

''அது சரி... நீ சுப்பியைப் பார்த்தியா? என்கிட்ட சொல்லாமக்கொள்ளாம அவ பாட்டுக்குப் போயிட்டா.''

அவர் தவறாகப் பேசுவது போல சரியாகப் பேசினார்.

''பார்த்தேன் தாத்தா. உங்களைப் 'பத்திரமாப் பார்த்துக்க’னு என்கிட்ட சொன்னா. அதான் வந்தேன். இனி நான்தான் உங்களைப் பார்த்துக்கப் போறேன்'' என்றாள்.

''எனக்குத் தெரியும். சுப்பி, அப்படியெல்லாம் என்னைத் தவிக்கவிட மாட்டானு...'' - அதைக் கேட்ட வித்யா ஒதுங்கிச் சென்று ஓவென அழ ஆரம்பித்தாள்.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

சே.... தள்ளாத வயசில் தடுமாறும் நினைவுகள்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.