Jump to content

Recommended Posts

mom-teaching-tamil-to-child.jpg
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.


“நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.

“உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,

“சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...

ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட! 


ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.

அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?... 

 

**********


இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.

“லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.

“சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,

“நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”

வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,

“ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,

“ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.

“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.

“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன். 

“தெரியலடா! ஹாஸ்பிட்டலுக்குப் போய்க்கிட்டிருக்கும்போது அம்மா சொன்னாங்க. ‘புக் ஷெல்ப்ல ஒரு லெட்டர் வெச்சிருக்கேன். படிச்சிப் பாரு’ன்னு”. 

சொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து ஒரு தாளைத் கொண்டு வந்தான். நான்காக மடிக்கப்பட்டிருந்த அந்தத் தாள் பார்க்கவே கொஞ்சம் பழையதாக இருந்தது. பிரித்தேன். அம்மாவின் கையெழுத்துதான். இடது மேல் மூலையில் ‘நாள்: 12.8.2010’ என்று இருந்தது. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதா?! அதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவ்வளவு உயிர் போகிற வலியிலும் படிக்கச் சொல்லி நினைவுபடுத்தியிருக்கிறார் என்றால்... வியப்போடும் புதிரோடும் நான் படிக்க ராகேஷும் அவன் மனைவியும் கேட்கத் தொடங்கினர். 

“உயிரினும் இனிய மகன் ராகேஷுக்கு, அம்மா எழுதும் முதலும் கடைசியுமான கடிதம். 

மகனே! நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் இறந்த பிறகுதான் இது உன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நீ நெருங்காத இடமான புத்தக அடுக்கினுள் ஒளித்து வைக்கிறேன். 

கடைசிக் கடிதம் என்றவுடன் அம்மா ஏதோ சொத்து பத்து எழுதி வைக்கப் போகிறாளோ என்று ஆவலை வளர்த்துக் கொள்ளாதே! இது வெறுமே என்னுடைய கடைசி விருப்பம் ஒன்றை உன்னிடம் தெரிவிக்கும் நோக்கம்தான், வேறொன்றுமில்லை. அது என்ன என்பதைத் தெரிவிக்கும் முன், ஏன் இப்படி ஒன்றைக் கேட்கிறேன் என்கிற காரணத்தைச் சொல்லி விடுகிறேன். 

சிறு வயதிலிருந்தே மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவள் நான். பள்ளியில் படிக்கும்பொழுதே கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என வளர்ந்தவள். கல்லூரியில் இன்னும் ஒரு படி மேலே போய்த் தமிழ் இனத்துக்கான போராட்டங்களில் கூடக் கலந்து கொண்டேன். 

ஆனால், திருமணம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது. உன் அப்பா எனக்கு நேர் எதிர். திருமணச் சடங்கிலேயே எங்களுக்குள் முரண்பாடுகள் வேர்விடத் தொடங்கி விட்டன. நான் தமிழ் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். உன் அப்பாவும், அவர் வீட்டினரும் வழக்கமான முறைப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். மணமான பிறகு இருவரும் சேர்ந்து எங்காவது வெளியில் போவது என்றால், என் தேர்வு கவியரங்கம், மேடை நாடகம் என்று இருக்கும். உன் அப்பாவோ திரைப்படம், கடற்கரை போன்ற இடங்களுக்குத்தான் அழைத்துப் போவார். இவையெல்லாமாவது சிறு சிறு விஷயங்கள். ஆனால், பெற்ற பிள்ளையை வளர்ப்பதில் கூட உன் அப்பா ஒன்றைக் கூட என் விருப்பப்படி விடவில்லை. 

நான் உனக்காக மிகவும் சிந்தித்து அழகழகாகப் பதினைந்து தமிழ்ப் பெயர்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஆனால், அவரோ ‘ஷ்’ என்கிற எழுத்தில் முடியும்படி பெயர் வைப்பதுதான் நாகரிகம் என்று சொல்லி உனக்கு ‘ராகேஷ்’ என்கிற பெயரைச் சூட்டினார். அது மட்டுமா? நீ எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற வரைக்கும் எல்லாமே அவர் விருப்பப்படியும், உன் விருப்பப்படியும்தான் இந்த வீட்டில் இதுவரை நடந்திருக்கின்றனவே தவிர, என் விருப்பப்படி ஓர் அணுவும் இங்கு அசைந்ததில்லை. 

மகனே! வாழ்க்கை முழுக்க இப்படி அடுத்தவர் விருப்பப்படியே வாழ்ந்து முடித்து விட்ட எனக்கு, இறந்த பிறகாவது ஒன்றே ஒன்றை என் விருப்பப்படி நடத்தி வைப்பாயா?... 

ராகேஷ்! தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளில் இன்றும் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது, இறந்தவர்களைப் புதைப்பதுதான் பழந்தமிழர் மரபு என்பதைக் காட்டுகிறது. எரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்கமாக இருக்கலாம் என்பது என் கருத்து. கிறித்தவர், இஸ்லாமியர், எகிப்தியர் போன்ற உலகின் மற்ற இனங்களில் கூட இறந்த பின் புதைக்கும் வழக்கம்தான் இருக்கிறது. எனவே, பழந்தமிழ் நாட்டின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். 

எனவே, மகனே! நான் இறந்த பின் என்னை நெருப்பிலோ, மின்சாரத்திலோ போட்டு எரித்து விடாதே! தமிழ் வழக்கப்படி புதைத்து விடு! நான் பிறந்த இந்த மண்ணுக்கே என் உடல் அர்ப்பணமாக வேண்டும்! என் உடம்பு என் தமிழ் மண்ணுக்கே உரமாக வேண்டும்! 

என்னுடைய இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்…”
 - படித்து முடிப்பதற்குள், 

“அம்மா!...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான் ராகேஷ். 

“என்னடா? டேய்! என்னாச்சுடா?” என நான் அவனை உலுக்க, 

“இப்பதாண்டா அம்மாவை கிரெமெடோரியத்துல வெச்சு எரிச்சுட்டு வந்துருக்கேன்” என்றான் அவன். 

“அடப்பாவி! என்னடா இப்பிடி பண்ணிட்டே! நான் வர்ற வரைக்கும் ஏண்டா வெயிட் பண்ணிட்டிருந்தே? முன்னாடியே இந்த லெட்டரை படிச்சுப் பார்த்துருக்கலாம்ல?” 

“என்னடா பேசறே? எனக்குத்தான் தமிழ் படிக்க வராதுன்னு தெரியும்ல! சின்ன வயசுலேர்ந்து சி.பி.எஸ்.சி-ல படிச்சு வளர்ந்தவன்; செகண்ட் லேங்க்வேஜ் இந்தி; தமிழ் 
தேர்டு லேங்க்வேஜ்தான்வர்ஷாவுக்கும் தமிழ் தெரியாது. வேற யார் படிக்கறது? அப்பிடியும் ஸ்டார்ட்டிங்கை கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். ஏதோ பர்சனலா எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதைப் போய் வேற யார்கிட்டயாவது படிக்க சொல்ல முடியுமா? எனக்கு அப்புறம் நீதானே அவங்களுக்கு பையன் மாதிரி? அதனாலதான் வெயிட் பண்ணோம். ஆனா, இப்பிடி ஒரு விஷயத்தை சொல்லி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடா” என்றவன், 

“அம்மா! தமிழ் படிக்க தெரியாததனானால உன் கடைசி ஆசைய கூட ஃபுல்ஃபில் பண்ண முடியாமப் போயிட்டேனேம்மா!...” என்று கதறி அழ, கண்ணீர் கொட்டும் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த அழுகை இந்த ஒரு ராகேஷோடு ஓயாது என்று தோன்றியது.

❀ ❀ ❀ ❀ ❀

(நான் திண்ணை இதழில் ௨௪-௧௦-௨௦௧௬ அன்று எழுதியது. #StopHindiImpositionமுதலான சிட்டைகள் மூலம் உலகை அதிர வைத்த தமிழ்ச் சூறாவளிகள் அனைவர்க்கும் இப்படைப்பு காணிக்கையாகுக). 

படம்: நன்றி ஓவியர் இளையராஜா

 - https://agasivapputhamizh.blogspot.com/2019/06/thaaimoli.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முழுக்க இங்க பதிய இடமில்லையோ?????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.