Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் காலமானார்

Featured Replies

சென்னை: மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன், சென்னை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 7 நாட்கள் திமுக துக்கம் அனுசரிக்கும் எனத் தெரிவித்தார்

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி அன்பழகன் 97. இயற்பெயர் ராமையா. 1922 டிச.19ல் திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் பிறந்தார். அண்ணாமலை பல்கலை.,யில் தமிழ் படித்த இவர், திராவிட சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவர். இதனால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார். கல்லுாரியில் பணிபுரிந்தபோதும், இயக்கப்பணிகளை தொடர்ந்தார். இவரை அண்ணா 'பேராசிரியர் தம்பி' என அழைத்தார்.

திருவாரூரில் இளைஞர்கள் நடத்திய மாநாட்டில், கருணாநிதியை முதல் முறையாக சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு துவங்கியது. 1977ல் தி.மு.க., பொதுச்செயலரானார். கருணாநிதியின் திட்டத்தை செயல்படுத்துவதில் கைதேர்ந்தவர். சுமார் 75 ஆண்டு காலம் கருணாநிதியுடன் நட்புடன் இருந்தார். தொண்டர், கட்சி நிர்வாகி என அனைவரையும் அன்புடன் நடத்துவார்.

gallerye_012048698_2495986.jpg

 

நிதித்துறை அமைச்சர்:

கடந்த 1962ல் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். லோக்சபா எம்.பி.,யாக (1967-71) பதவி வகித்தார். மீண்டும், தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்த அன்பழகன், சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். 1984ல் ஈழத்தமிழர் கோரிக்கையை வலியுறுத்தி, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். கல்வித்துறை, நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

தமிழ் மீது காதல்:


தமிழ் இலக்கியங்கள் மீது விருப்பம் கொண்டவர். எழுத்தாளராகவும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார். இன-மொழி வாழ்வுரிமைப்போர், வகுப்புரிமை போராட்டம், தமிழர் திருமணமும் இனமானமும், தமிழ் கடல் உள்ளிட்ட பல நுால்களை எழுதி உள்ளார். அதிகாலையில் கண்விழிப்பு, நடைபயிற்சி, தொண்டர்களுடன் கலந்துரையாடல் என அன்றாட வாழ்க்கையை சுறுசுறுப்பாக மாற்றிக்கொண்டவர்.

2018ல் தனது நண்பரும், அப்போதைய தி.மு.க., தலைவருமான கருணாநிதி மறைந்த சோகத்தில் மூழ்கினார். மனம் இறுகியதால், உடல்நிலையும் அன்பழகனுக்கு கைகொடுக்கவில்லை. வயோதிகம் காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை காணாமல் தி.மு.க., தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர்.

gallerye_012336516_2495986.jpg

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக, சில நாட்களாக, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

gallerye_013957910_2495986.jpg

https://www.dinamalar.com/news_detail.asp?id=2495986

  • தொடங்கியவர்

க. அன்பழகன் யார்?

1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி திருவாரூருக்கு அருகில் உள்ள காட்டூரில் கல்யாணசுந்தரம் - சொர்ணம் தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்த இவருக்கு முதலில் ராமையா என்ற பெயரே சூட்டப்பட்டது.

தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் காலமானார்

அன்பழகனின் தந்தை காங்கிரஸ் இயக்க அபிமானம் உடையவர் என்றாலும், 1925ல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறியபோது அவருடன் சேர்ந்து வெளியேறியவர். இதற்குப் பிறகு தந்தையாருடன் சேர்ந்து பெரியாரின் பொதுக்கூட்டப் பேச்சுகளை கேட்பது அவரது வழக்கமாக இருந்தது. சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்தார் அன்பழகன்.

தனித் தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு ராமையா என்ற தனது இயற்பெயரை, அன்பழகன் என பிற்காலத்தில் மாற்றிக்கொண்டார் அவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணியாற்றியதால் அவருடைய பெயருக்கு முன்பாக 'பேராசிரியர்' என்ற பட்டம் ஒட்டிக்கொண்டது.

1942ஆம் ஆண்டில் திருவாரூர் விஜயபுரத்தில் சி.என். அண்ணாதுரை ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, அவரைப் பார்க்க வந்த மு. கருணாநிதியும் அன்பழகனும் முதல் முறையாகச் சந்தித்தனர். உடனடியாக ஒரு கூட்டத்தில் பேச அழைத்தார் கருணாநிதி. அப்போது ஏற்பட்ட நட்பு, மு. கருணாநிதி மறையும் வரை 76 ஆண்டுகள் நீடித்தது.

ஒட்டுமொத்தமாக எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மு. கருணாநிதி முதலமைச்சரான பிறகு, 1971ல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக முதன்முறையாக அமைச்சரானார் அன்பழகன். சுகாதாரத் துறை அமைச்சகம் என்ற பெயரை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் என்று மாற்றியவர் அன்பழகன்தான்.

https://www.bbc.com/tamil/india-51765905

தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இரண்டு தடவையும் நிதியமைச்சராக ஒரு முறையும் செயல்பட்டிருக்கிறார் க. அன்பழகன். 1977ஆம் ஆண்டு முதல் தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார் க. அன்பழகன்.

அன்பழகனின் மனைவி வெற்றிச் செல்வி ஏற்கனவே காலமாகிவிட்டார். இந்த தம்பதிக்கு செந்தாமரை, மணவல்லி என இரண்டு மகள்களும் அன்புச் செல்வன் என்ற மகனும் இருக்கின்றனர்.

பிராமணன் பிறக்கவில்லை, இன முழக்கம், வாழ்க திராவிடம், மாமனிதர் அண்ணா, The Dravidian Movement, வகுப்புரிமை போராட்டம், திராவிட இயக்கத்தின் தோற்றமும் தேவையும் ஆகிய புத்தகங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் க. அன்பழகன்.

க. அன்பழகனின் மரணத்துடன், பெரியார், சி.என். அண்ணாதுரை உள்ளிட்ட மூத்த திராவிட இயக்கத் தலைவர்களுடன் பணியாற்றிய அரசியல் தலைவர்களின் காலம் முடிவுக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்


அந்தப் பதவிக்கு....  உதயநிதி, வருவார்.
இதுதான்.... கழகத்தின் கொள்கை. 

தமிழகத்தின் மிக சிறந்த பண்பான அரசியல்வாதிகளில் ஒருவர்.  சிறந்த கல்விமான்.  Rest in peace. 🌺🌺🌺

  • கருத்துக்கள உறவுகள்

முப்பாலூட்டிய பேராசிரியப் பெரியப்பா..மு.க.ஸ்டாலின் இரங்கல்

202003070443471689_Tamil_News_Life-histo

தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார்.அதில், “ திராவிடச் சிங்கம் சாய்ந்து விட்டது. சங்கப்பலகை சரிந்து விட்டது. இனமான சமயம் உடைந்துவிட்டது. எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்.என்ன சொல்லி தேற்றுவது? எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரைபேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்! முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்! எனது சிறகை நான் விரிக்க வனமாய் இருந்தவர்! என்ன சொல்லி என்னை நானே தேற்றிக்கொள்வது?

தலைவர் கலைஞர் அவர்களா என்னை வளர்த்தார்! பேராசிரியர் பெருந்தகையோ என்னை வளர்பித்தார்! எனக்கு உயிரும், உணர்வும் தந்தவர் கலைஞர். எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர். இந்த நான்கும்தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது.எனக்கு அக்காள் உண்டு. அண்ணன் இல்லை. பேராசிரியர்தான் என் அண்ணன்” என்றார் தலைவர் கலைஞர்! எனக்கும் அத்தை உண்டு. பெரியப்பா இல்லை. பேராசிரியப் பெருந்தகயையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன். அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதுதான் சிரமம். ஆனால் நானோ பேராசிரியப் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டேன். அவரே என்னை முதலில், “ கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர்” என்று அறிவித்தார். எனக்கு வாழ்வின் பெருமையே எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை பிசைந்தது.

அப்பா மறைந்தபோது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன். இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் சொல்வேன்?! பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்? இனி யாரிடம் பாராட்டு பெறுவேன்? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?பேராசிரியப் பெருந்தகையே! நீங்கள் ஊட்டிய இனப்பால்-மொழிப்பால்-கழகப்பால் இம் முப்பால் இருக்கிறது. அப்பால் வேறு என்ன வேண்டும்?! உங்களது அறிவொளியில் எங்கள் பயணம் தொடரும் பேராசிரியப் பெருந்தகையே! கண்ணீருடன் மு.க.ஸ்டாலின்” என்று பதிவிட்டுள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/முப்பாலூட்டிய-பேராசிரிய/

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் கருணாநிதியின் வலது கரம்.

ஈழத் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யச் சொல்லாமல் விட்ட..தவறுகளையும் செய்தவர் தான்.

இரங்கல்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

தமிழகத்தின் மிக சிறந்த பண்பான அரசியல்வாதிகளில் ஒருவர்.  சிறந்த கல்விமான்.  Rest in peace. 🌺🌺🌺

சேற்றுக்குள் ஒரு தாமரையா?
அனுதாபங்கள்.

12 minutes ago, nedukkalapoovan said:

இவர் தான் கருணாநிதியின் வலது கரம்.

ஈழத் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யச் சொல்லாமல் விட்ட..தவறுகளையும் செய்தவர் தான்.

இரங்கல்கள். 

கருணாநிதி பொதுவான அரசியல் வாதியாக சுயநல அரசியல்வாதியாக செயற்பட்டது ஒன்றும் புதிய விடயம் இல்லை. அதை புலிகள் 1985 இலேயே புரிந்து அவரை புறக்கணித்து விட்டார்கள்.  ஆனால் முள்ளிவாய்கால்  அவலத்தை கருணாநிதியால் நிச்சயம்  தடுதிருக்க முடியாது அது அவரது அதிகார வரம்பில் இருந்து நெடுந்தொலைவில் இருந்தது  என்ற யதார்ததத்தை புரிந்தும் புரியாதது போல் நடித்து  கருணாநிதி மீது முழுப்பழியை போடுவதும் தமது தவறுகளை  மறைக்க செய்யு சிலர் செய்யும்  தந்திரம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

முகவின் சிதறிய சில்லறையாகவே செயற்பட்டவர். என்ன நிர்ப்பந்தமோ!! 🤔

https://tamil.oneindia.com/news/2009/01/30/tn-dmk-flays-ltte-for-not-responding-to-48-hr-ceas.html

  • கருத்துக்கள உறவுகள்


 

பேராசிரியரின் பெருமை மிகு பயணம்!

 

மூத்த பத்திரிகையாளர் மணா

“அதோ இருக்காரு பாரு… அவர்தான் பெரியார்…”

கருப்புச் சட்டையுடன் குட்டை உருவமாக மேடையில் மைக் இல்லாமலேயே கனத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து அப்பா சொல்ல, ஏழு வயதுப் பையனான ராமய்யாவுக்கு வியப்பு.

சின்ன சின்ன வாக்கியங்களில் அவர் பேசிய விஷயங்கள் முழுக்கப் புரியாவிட்டாலும் அவர் மீது ஒரு மரியாதை.

சிறுவயதில் பையன்களைக் கோவில்களுக்கு அழைத்துச் செல்வது மாதிரி மாயூரத்தில் நடந்த சுயமரியாதைக் கூட்டங்களுக்கு, மகன் ராமய்யாவை அழைத்துச் சென்றார் கதர்க் கடை கல்யாணசுந்தரம்.

 

மாயூரம் அருகே கொண்டத்தூர் கிராமத்தில் வசித்தபடி, காங்கிரஸ் ஈடுபாட்டுடன் மாயூரத்தில் கதர்க்கடை நடத்திக் கொண்டிருந்தாலும், பெரியார் மீது கல்யாண சுந்தரத்திற்கு ஒருவித ஈடுபாடு.

காங்கிரசிலிருந்து பெரியார் விலகினதும் இவரும் விலகினார். கதர்க் கடை நடத்தினபடியே பெரியார் நடத்திய குடியரசு, நவசக்தி, இந்தியா பத்திரிகைகளுக்கு ஏஜெண்ட் ஆகவும் இருந்தார் கல்யாணசுந்தரம்.

அவர் பேப்பர்களைப் பிரித்து வீடுவீடாகக் கொண்டுபோய் போடும்போது, மகன் ராமய்யாவும் அதற்கு உதவி செய்ததுண்டு.

 

“மற்றவர்கள் மாதிரி இல்லாமல் அப்பா மட்டும் ஏன் இப்படி ஏதோ ஒரு வேகத்துடன் அலைகிறார்? ஏனிந்தக் கூட்டங்கள்? புத்தகங்கள்?”

சிறுவனான ராமய்யாவுக்கு இந்தக் கேள்வி தோன்றிப் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்து, அப்பாவுடன் கூட்டங்களுக்கும் போய் வந்ததில் மனதுக்குள் ‘அக்கினிக்குஞ்சு’ புகுந்துவிட்டது.

பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் கதர்க்கடையை நடத்த முடியாமல், சிதம்பரத்திற்குக் குடும்பத்தோடு கிளம்பினார் கல்யாணசுந்தரம்.

 

மயிலாடுதுறையில் படித்துக் கொண்டிருந்தபோதே தமிழில் ஒரு பிடிப்புடன் இருந்த ராமய்யாவும் கிளம்பிப்போய், சிதம்பரத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு ஓட்டு வீட்டில் குடியேறினார்கள்.

அங்கும் பல பத்திரிகைகளுக்கு ஏஜெண்ட் ஆகி, நீதிக்கட்சிக் கிளையையும் சிதம்பரத்தில் கல்யாணசுந்தரம் துவங்கினபோது, ராமய்யாவும் அதில் உறுப்பினராகச் சேர்ந்தார் .

அவருக்கு அப்போது வயது 17.

“சிதம்பரம் அவருடைய சுயமரியாதை இயக்க உயர்வு வளர நல்ல தளமானது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட் சேர்ந்து பி.ஏ. ஹானர்ஸ் படித்தபோது தமிழில், தமிழுணர்வில் பற்று அதிகமானபோது ராமய்யா ‘அன்பழகன்’ ஆனார்.

அவருடன் படித்த நாராயணசாமி ‘நெடுஞ்செழியன்’ ஆனார். தனித்தமிழ் ஆர்வத்தினால் இப்படிப் பெயரை மாற்றிக் கொண்டார்கள்.

மாயூரத்தில் இருந்தபோதே அண்ணாவின் பேச்சைக்கேட்டு அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டிருந்த அன்பழகனுக்கு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தில் பேச வாய்ப்பு வந்தபோது, மேடைக் கூச்சமில்லை.

 

தயக்கமில்லாமல் வேகத்துடன் பேசினார். மாணவர்களிடம் அந்தப் பேச்சுக்குத் தனி மரியாதை.

படித்திருந்த புத்தகங்கள், மனசில் கனல் மாதிரி இருந்த சுயமரியாதை உணர்வு, தங்கு தடையில்லாத சொல்வளம், நேரடியான பளிச்சென்ற பேச்சு – இதன்மூலம் பலரும் கவனிக்கத்தக்க பேச்சாளர் ஆகிவிட்டார்.

அன்றிலிருந்து மனதில் பட்டதைத் துணிந்து சொல்லிவிடுகிற இயல்பு மாறவில்லை அவருக்கு…” என்கிறார் இளம் வயது முதல் பேராசிரியர் அன்பழகனுக்கு நெருக்கமானவரான புலவர் மா.செங்குட்டுவன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மேடையில் அன்பழகன் பேச ஆரம்பித்தபோது, எதிர் வரிசையில் உட்கார்ந்து கைதட்டினார் அதே பல்கலைக்கழக மாணவரான நெடுஞ்செழியன்.

பேச்சில் இருந்த விஷயம் பிடித்து விடுதலை, குடியரசு பத்திரிகைகளை வாங்குவதற்காக அன்பழகன் வீட்டுக்குப் போனார்கள் நெடுஞ்செழியனும் அவரது தம்பி செழியனும்.

நட்பு நெருக்கமாகி மேடைகளில் பேச, இரட்டையராகப் பல கூட்டங்களுக்குப் போனார்கள் அன்பழகனும் நெடுஞ்செழியனும்.

 

“பேராசிரியர் அவர்களின் சொற்பொழிவுகளைக் கூட்டத்தில் உட்கார்ந்து கைதட்டி வரவேற்றேனேயல்லாமல், மேடையேறி அவர் முன்மொழிந்ததை வழிமொழியும் ஆற்றலைப் பெறவில்லை.

அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மூன்றாவது ஆனர்ஸ் வகுப்பில் படிக்கும்போது துணிந்து மேடையேறிப் பேசத் தொடங்கினேன்” என்கிறார் நெடுஞ்செழியன் தனது இளமைப்பருவம் குறித்து.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த அந்தச் சம்பவம் பல மாணவர்களுக்குத் தமிழுணர்வு விசிறிவிடக் காரணமாகிவிட்டது.

தமிழிசை இயக்க உணர்வு எழுந்த காலத்தில், பல்கலைக்கழகத்தில் பாட வந்தவர் தண்டபாணி தேசிகர். தமிழ்ப்பாடலைப் பாட முடியாமல் ஒரு பிரிவினரால் அவர் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

அப்போது அப்பிரிவினரை ஒருங்கிணைத்து தண்டபாணி தேசிகருக்கு ஆதரவானதாக மாற்றினார் அன்பழகன். அந்த உணர்வு பல மாணவர்களை ஒருங்கிணைத்தது.

அதே பல்கலைக்கழகத்தில் நடந்த தியாகய்யர் விழாவில் தெலுங்கில் பாடவந்த மதுரை மணி அய்யரைப் பாட விடாமல் செய்து திருப்பி அனுப்பினார்கள்.

எந்த விஷயமானாலும் படபடவென்று பேசி விடுகிற இயல்பு இருந்ததால், அன்பழகனுக்கு மாணவர்கள் மத்தியில் அப்போது இருந்த பெயர் ‘ஊசிப் பட்டாசு’.

தமிழ் இலக்கிய மன்றம் வைத்திருந்த அன்பழகன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு அண்ணாவை அழைத்தபோதும் எதிர்ப்பு. அதையெல்லாம் மீறி வந்து பிரவாகம் மாதிரி அண்ணா உரையாற்றின தலைப்பு ‘ஆற்றோரம்’.

 

ஒருமுறை அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களான அன்பழகனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் திருவாரூரிலிருந்து பேச அழைப்பு.

ரயிலில் கிளம்பினார்கள். கூட்டத்தில் பேசிவிட்டுக் கிளம்புகிற நேரத்தில் கூட்டம் ஏற்பாடு செய்த சுறுசுறுப்பான அந்தத் திருவாரூர் இளைஞரைக் காணவில்லை.

வந்தவர்களின் பயணச் செலவுக்காக ஆறு ரூபாய் கூட கொடுக்க வழி இல்லாமல் தனது வீட்டில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்து ஐந்து ரூபாயுடன் வியர்க்க விறுவிறுக்க வந்த அந்த இளைஞர்- கலைஞர் கருணாநிதி.

நடந்த விழா-முரசொலியின் முதலாம் ஆண்டு விழா. நடந்த ஆண்டு 1943.

“அப்போ ரொம்ப ஒல்லியா இருப்பார் பேராசிரியர். சத்தம்தான் பலமா இருக்கும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் புலவர் படிப்பு படித்துக்கொண்டிருந்த நேரம்.

அப்போது நான் தீவிர ஆஸ்திகன். சுயமரியாதைக் கருத்துக்களை, எந்த விளைவுகளைப் பற்றியும் யோசிக்காமல் பேசுவார் அன்பழகன்.

பல பேரிடம் தொடர்ந்து பேசித் தனது வழிக்குக் கொண்டுவர முயற்சிப்பார். நாங்கள் தங்கியிருந்த மாணவர் விடுதியில் வந்து ஒரு நாள் இரவு பேசிவிட்டு அறையில் கிடந்த டீப்பாய்களை இணைத்து சாப்பிடாமலேயே அதில் படுத்துத் தூங்கினார்.

பொறி பறக்கிற மாதிரி இருக்கும் அவரது பேச்சு. அவரைவிட, அவருக்கு அவரது கொள்கைகள் முக்கியம். அவருடைய தகப்பனாருக்கு சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் பலரை நன்றாகத் தெரியும்.

 

இருந்தும் அவர்கள் மூலம் தனது வசதியைப் பெருக்கிக் கொள்ள நினைக்காதவர் அன்பழகனின் தந்தை. அதே வழியில் இருப்பவர் அன்பழகன்… இவர் அமைச்சரான பிறகும்கூட சிதம்பரத்தில் பேப்பர் ஏஜெண்டாகத்தான் இருந்தார் இவருடைய தகப்பனார்” என்று பல சம்பவங்களைச் சொல்லிக்கொண்டு போனார் பேராசிரியர் நன்னன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முடிந்ததும் பெரியார் கூப்பிட்டுக் கேட்டார்.

“என்னப்பா… என்ன செய்யப் போறே?”

“ஏதாவது ஆசிரியர் வேலையில் சேரணும்” என வீட்டு நிலைமையைச் சொன்னார் அன்பழகன். முத்தையா செட்டியாருக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் எழுதி அன்பழகனைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார் பெரியார்.

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறையில் வேலை கிடைத்தது. அதற்குள் திருமணம். பெண் பார்த்ததும் பெண்ணின் தகப்பனாரிடம் ”பெண்ணின் பெயரைத் தமிழில் மாற்றிக் கொள்ளலாமா?” என்று கேட்டார் அன்பழகன்.

சம்மதம் கிடைத்ததும் ஜெயலட்சுமி ‘வெற்றிச்செல்வி’ ஆனார். சென்னைக்கு வந்து வெகுகாலம் வரை அன்பழகன் இருந்தது புரசைவாக்கம் வேளாளர் தெருவில் இருந்த மாமனாரின் வீட்டில்தான்.

பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராக இருந்தபோது மு.வரதராசனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன் என்று பல தமிழறிஞர்கள் உடன் பணியாற்றினார்கள்.

அன்பழகனின் பேச்சில் இருந்த வசீகரம் மாணவர்களுக்குப் பிடிக்க, இடையிடையே பாடத்தோடு திராவிடப் பிரச்சாரம் நடந்தது. “சேரன் சிற்றரசர்களை ஆண்டான், டில்லி நம்மை ஆள்வது போல” என்கிற மாதிரியான பாடங்கள்.

சென்னை வந்ததுமே முட்டை ஓட்டை விட்டு கோழிக்குஞ்சு வெளிவருகிற சின்னத்துடன் ஒரு பத்திரிகை நடத்தினார் அன்பழகன்.

பெயர் ‘புதுவாழ்வு’

ஒன்றரை ஆண்டுகளில் அது நின்றுபோனது. அந்தப் பத்திரிகையில் நாவல் கூட எழுதி இருக்கிறார் அவர்.

“நான் எப்போதும் அன்பழகனை ராமய்யான்னுதான் தான் கூப்பிடுவேன். எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், நட்புக்குப் பிரச்சினை இல்லை.

ஆசிரியராக இருந்தபோது வகுப்பை அற்புதமாக நடத்துவார். அலட்சியமாக இல்லாமல் பொறுப்புணர்ச்சியுடன் பாடங்களை விளக்குவார். எவ்வளவோ கட்சி வேலைகள் இருந்தாலும், வகுப்புகளுக்குச் சரியாக ஆஜராகிவிடுவார்.

அண்ணா மாதிரி இவரிடமும் ஒரு எளிமை. தன்னை முன்னிறுத்திக் கொள்ள மாட்டார். பிறகு அரசியலுக்கு முழுநேரமாக வந்துவிட்டாலும் எந்தக் கூட்டத்திலும், எடுத்த கருத்திலிருந்து விலகாமல், அதன் உயிர்நாடியை உணர்த்துகிற மாதிரி பேசுவதுதான் அவரது தனித்தன்மை.”

சமீபத்தில் வயோதிகத்தின் காரணமாகப் பார்வை குறைந்துவிட்ட நிலையிலும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் அ.ச.ஞானசம்பந்தன்.

“ஏம்ப்பா… எழும்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக நிக்கணும்னு நினைக்கிறேன்… வேலைய விட்டுட்டு… முழுசா அரசியலுக்கே வந்துடுப்பா” அண்ணாவின் வேண்டுகோளிலிருந்த அன்பைத் தட்ட முடியவில்லை அன்பழகனால்.

12 ஆண்டுகாலப் பேராசிரியர் வேலையை விட்டுவிட்டு வந்தாலும் ‘பேராசிரியர்’ அடைமொழி அவரிடம் ஒட்டிக்கொண்டுவிட்டது. 57-ல் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது உடன் மனைவியும் பிரச்சாரத்திற்கு வந்தார்.

அலங்காரங்கள் இல்லாமல் எளிமையான பிரச்சாரம்.

“ஒழுங்காகவும் நேர்மையாகவும் சட்டமன்றத்தில் பணியாற்றுவேன் என்று பொதுமக்களாகிய நீங்கள் நம்பினால் எனக்கு வாக்களியுங்கள்”

மக்கள் நம்பினார்கள். வாக்களித்தார்கள்.

தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகிவிட்டார். தி.மு.க.வுக்காகத் தொழிற்சங்கம் இல்லாதிருந்த நேரம் அது.

“கம்யூனிஸ்டுகள் மாதிரியே நாமும் தொழிற்சங்கம் அமைக்கணும்” என்று அண்ணாவிடம் சொல்லித் தொழிற்சங்கங்கள் மாவட்ட வாரியாகத் தொடங்கப்படுவதற்குக் காரணமாக இருந்தார் அதன் செயலாளர் அன்பழகன்.

அதோடு சட்டமன்றத் துணைத் தலைவர். 62-ல் சட்டமன்ற மேலவை உறுப்பினர். 67-ல் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.

தி.மு.க.வுக்கு அமோக வெற்றி கிடைத்திருந்த நேரம். “யார் அமைச்சர்?” என்று பலருக்குக் கேள்விகள். அண்ணாவைப் பலரும் தேடிக்கொண்டிருந்தபோது, சென்னை ஆஸ்பிரன் தோட்டத்திலிருந்த அன்பழகன் வீட்டில் இருந்தபடி நிதானமாக அமைச்சர்கள் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தார் அண்ணா.

நாடாளுமன்ற தி.மு.க குழுத்தலைவரான அன்பழகன். 71-ல் புரசைவாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனாலும், கலைஞர் அன்பழகனைக் கூப்பிட்டு “என்ன இலாகா வேணும்” என்று கேட்டபோது” மற்றவர்களுக்கெல்லாம் இலாகாக்களை ஒதுக்கிட்டு மிச்சம் எந்த இலாகா இருக்கோ அதைக் கொடுங்க போதும்…” என்று பதில் சொல்ல அன்பழகனுக்குக் கிடைத்தது சுகாதார இலாகா!

“பச்சையப்பன் கல்லூரியில் படிக்க நான் சென்னைக்கு வந்தபோது கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்று எனக்கு சீட் வாங்கிக் கொடுத்தவர் பேராசிரியர்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் தான்கொண்ட கொள்கையிலிருந்து வழுவாமல் தனக்குச் சரியென்றுபட்டதை எத்தகைய எதிர்ப்பு வந்தாலும், சொல்லக்கூடியவர் அவர். அண்ணாவிடம் உரிமையுடன் பேசக்கூடியவர்.

தி.மு.க.வுக்கு பாதிப்பு வருகிற மாதிரியான நேரத்தில் எல்லாம் பக்கபலமாக கலைஞருடன் நின்றவர். கலைஞருக்கும் பேராசிரியருக்கும் உள்ள ஆழமான நட்பை வெட்ட யாராலும் முடியாது” என்கிறார் வருவாய்த்துறை அமைச்சரான நாஞ்சில் மனோகரன்.

‘தி.மு.க. கொடியில் சிவப்பும் கருப்பும் இணைந்த மாதிரி’ என்று தன்னையும் அன்பழகனையும் பற்றிச் சொல்கிறார் கருணாநிதி.

44-ல் ஆரம்பித்து திராவிட இயக்க, தி.மு.க மாநாடுகளில் உரையாற்றி வருகிற அன்பழகனின் பேச்சில் இருக்கிற பொதுவான சரக்கு – தமிழ் உணர்வு, தமிழ்ச் சமூகம்.

“பேராசிரியர் அன்பழகனிடம் அரசியலை விட சமூகநீதிக் கண்ணோட்டம் அதிகம். அரசியல்வாதிக்கே உரிய சில இயல்புகள், கோஷ்டிகள் எதுவும் இல்லாதவர் அவர்.

சமூகச் சீர்திருத்த அடிப்படையில் அமைந்தது அவரது வாழ்க்கை. அவரிடம் இருப்பது தார்மீகமான, நியாயமான கோபம். சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை வேரான கொள்கைகளை எந்த இடத்தில், எந்தப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேசுகிறவர் அவர்தான்.

விளம்பரத்திற்காக எதையும் செய்யாத இயல்பு அவருக்கு. பழைய சுயமரியாதைக்காரர்களின் வரலாற்றை இன்றைக்கும் தெளிவாகச் சொல்கிற விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தலைவர்களின் வரிசையில் இருப்பவர் பேராசிரியர்” – நட்புடன் பேசினார் மூத்த பத்திரிக்கையாளரான சின்னக்குத்தூசி தியாகராஜன்.

முதல் மனைவி வெற்றிச்செல்வி இறந்தபிறகு, அன்பழகனின் இரண்டாவது மனைவி சாந்தகுமாரி. அன்பழகனின் இரு மகள்களும் மருத்துவர்கள். மகன் பொறியாளர்.

‘மற்றவர்களுடன் பேசுவதும் படிப்பதும்தான் பொழுதுபோக்கு’ என்று சொல்கிற அன்பழகன் தனது உடை, வெளித்தோற்றம் இவை குறித்து என்றும் கவலைப்படாதவர்.

வெற்றிலை பாக்கு சகிதமாகக் காட்சியளிக்க ஆரம்பித்ததைப் பற்றி- “யாராவது ஏதாவது கேட்கும்போது சட்டென்று கோபமாகப் பேசி விடுவேன். அதைத் தவிர்க்கத்தான் இந்த வெற்றிலை பாக்கு” என்கிறார்.

தெளிவான நீரோட்டம் மாதிரியான சொற்பெருக்குடன் தன்னைப் பற்றிச் சொல்வது நெகிழ்வூட்டுகிறது.

35a.jpg

 

“முதலில் நான் மனிதன். அதன் பிறகு அன்பழகன். மூன்றாவது பகுத்தறிவுவாதி. நான்காவது அண்ணாவின் தம்பி. ஐந்தாவது கலைஞரின் நண்பர். இந்த வரிசை எப்போதும் என்னிடம் இருக்கிறது. சாவினால் மட்டுமே இந்த வரிசையைக் கலைக்க முடியும்.”

பின்னிணைப்பு

“தனி நபர்களை விட இயக்கம் முக்கியம்”

சென்னை ஆஸ்பிரன் தோட்டத்தில் அன்பழகன் வீடு. நாங்கள் சென்ற நேரத்தில் மின்சாரம் கட் ஆகி இருந்தது. சிறு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சொற்பொழிவு மாதிரி பேசுகிறார்.

“என்னோட தகப்பனார் தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கத்தில் இருந்ததால், எனக்கும் சிறு வயதிலிருந்தே ஈடுபாடு. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அதே பேச்சு.

சிதம்பரத்திற்கு போனதால் மேற்படிப்பு படிக்க முடிஞ்சது. அன்பழகன்னு பெயரை மாத்திக்கிட்டேன். எங்க அப்பாவும் மணவழகன்னு புனைப்பெயர் வச்சுக்கிட்டார்.

என்னைப் பொருத்தவரை கொள்கையில் மாறுபாடு வரும்போது துணிவாகப் பேசுவேன். வேறுபாடுதான் என்றால் முக்கியத்துவம் தர மாட்டேன்.

அண்ணாவை விட வயதில் குறைந்தவன் என்றாலும் தோன்றுகிற கருத்தைப் பளிச்சென்று அவரிடம் சொல்வேன். அதில் அவருக்கும் மகிழ்ச்சி. அதைப் போலத்தான் இன்றைக்கும் பேசுறேன்.

35b.jpg

இனியும் அப்படித்தான் பேசுவேன். எப்போதும் தனி நபர்களை விட இயக்கம் முக்கியம். இயக்கத்தை விட கொள்கை முக்கியம்” என்று சொன்னவரிடம் தி.மு.க.வில் இளைஞர்களிடம் இப்போது சுயமரியாதை உணர்வு மங்கி வருவது பற்றிக் கேட்டதும் சொல்கிறார்.

“பல பகுதிகளாகப் பணிகள் விரிவடைந்து இருப்பதால், மூலம் இல்லை என்று அர்த்தமல்ல. எந்த அடிப்படை உணர்வு மக்களிடம் இருக்க வேண்டுமோ அது இல்லாத காரணத்தால், அரசியலில் நிலையான கண்ணோட்டத்துடன் வாழப் பலரால் முடியவில்லை என்று நான் கருதுகிற காரணத்தால், மாநாடுகளில் அந்த உணர்வோடு பேசுகிறேன்.

முன்னணித் தலைவர்களில் யாராவது ஒருவர் அதை பேசித்தான் ஆகவேண்டுமே ஒழிய அன்றாட அரசியலையே பேசிக்கிட்டிருக்க முடியாது.

ஆட்சியும் பதவியும் இன்றைக்கு வரும், போகும். சமுதாயம் என்றைக்கும் இருக்கும். அந்தச் சமுதாயம் தனது உயிரோட்டமான இன உணர்வை இழந்து இருக்கிறது.

அதை வெளிப்படுத்துவதில் எனக்கு ஆர்வம். மகிழ்ச்சி” என்று வீச்சுடன் பேசிக் கொண்டிருந்தவரிடம் சமீபகால ஆன்மீக ஈடுபாடான பேச்சுப் பற்றிக் கேட்டோம்.

“திராவிட இயக்கத்தின் மூலக்கூறுகளான சாதி வேறுபாடுகளை, ஏற்றத் தாழ்வுகளைக் கண்டித்து மூடநம்பிக்கைகளையும் கண்டித்தவர்கள் வள்ளலாரும் திருமூலரும்.

எல்லா ஆன்மாக்களையும் நிறையவடையச் செய்வதுதான் ஆன்மீகம். எல்லா உயிர்களையும் ஒன்றாகக் கருதுவதுதான் ஆன்மீகம். ஆனால் அந்தக் கருத்தை எனக்குத் தோன்றுகிற வழிகளில் சொல்லிக் கிட்டிருக்கேன்.”

“திமுகவில் உள்ள முன்னணி தலைவர்களுக்கு சினிமா உலகுடன் இருந்த தொடர்பு உங்களுக்கு மட்டும் இல்லையே?” – கேட்டதும் சிரிக்கிறார்.

“அது ஒன்றும் தவறில்லையே எனக்குத் திரைப்படத்தில் ஆர்வம் இல்லை. இந்த இயக்கத்தில் நல்ல நடிகர்கள், நல்ல வசன கர்த்தாக்கள் என்று பலர் இருக்கிறார்கள். அவரவருக்கு எது இயல்பாக அமையணுமோ அதுதான் அமையும்”

தத்துவச் சாயலுடன் பேசுகிறார் பேராசிரியர்.

1997-ல் வெளியான மூத்த பத்திரிகையாளர் ‘மணா’வின் ‘நதிமூலம்’ என்ற நூலில் வெளியான கட்டுரை

https://minnambalam.com/public/2020/03/07/35/amk-anbazhagan-Biography-mana-nadhimulam-article

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

அம்பனை, கிருபன் கட்டுரைகள் மூலம் இவரை பற்றி தெரிந்திரா பலவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
எனது இரங்கல்கள்💐

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.