Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா 2020: எதிர்பார்ப்புகளும் அதிர்ச்சிகளும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா 2020: எதிர்பார்ப்புகளும் அதிர்ச்சிகளும்!

2008, 2012 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் எனக்கு நன்கு நினைவிருக்கின்றன. மாலை நான்கு மணிக்கு வாக்களிப்பு சூரியன் முதலில் மறையும் கிழக்குக் கரையில் (நியூயோர்க்) முடிவுக்கு வர ஆரம்பிக்கும் போது, தொலைக்காட்சி உயிர்பெறும். நவம்பர் குளிருக்கு ஒரு இதமான பானமும், சமையலை ஒதுக்கி வைத்து விட்டு பிசாவும் எடுத்துக் கொண்டு குந்தினால் நள்ளிரவு நெருங்கும் போது வெற்றியாளர் யாரென்று தெரியவரும். அந்த இரு ஆண்டுகளும் அமெரிக்காவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகள்: அமெரிக்காவின் முதலாவது ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா வந்த ஆண்டு 2008, அவர் இரண்டாவது தடவையும் பலமான போட்டியாளரான ஜோன் மக்கெய்னை வென்ற ஆண்டு 2012. 

2016...

2016 தேர்தல் வித்தியாசமானது! முடிவுகள் வந்த போது நான் இலங்கையில் அப்பாவின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு, முற்றத்தில் போட்டிருந்த தகரக் கொட்டிலில் ஒரு பெரிய உறவுகள் கூட்டத்தோடு  உரையாடிக் கொண்டிருந்தேன். அமெரிக்காவில் இருந்து  வந்த குறுஞ்செய்தி வடிவில் தான் ட்ரம்ப் வென்று விட்டதாக எனக்குத் தெரிய வந்தது. ஹிலறி தான் வெல்லுவார், ட்ரம்பின் லூசுத் தனமான பேச்சுக்களை பல மாதங்கள் கேட்ட பின்னர் யார் தான் அவருக்கு வாக்களிப்பர் என்ற அசட்டையில், நான் தேர்தல் நாள் செய்திகளைக் கூட இணையத்தில் பார்க்க முயலவில்லை.

2016 இல் நடந்தது என்ன? 

இதற்கு பல விதமான பெயர்கள் அரசியல் பாசையில் சூட்டப் பட்டன: அமெரிக்க பரிசோதனை (American experiment), குலைத்துப் போடுதல் (shake up), சாக்கடையை சுத்தம் செய்தல் (draining the swamp)என்பன சில பெயர்கள். ஆனால், சில மாதங்கள், வருடங்கள் கடந்து போகையில் ட்ரம்பின் 2016 தேர்தல் வெற்றியின் பின்னால் ஒரு பாரிய இருண்ட செய்தி இருந்தது தெளிவாகியது: உரிய மக்கள் கூட்டத்தினரிடம் கேட்க வேண்டிய முறையில் கேட்டால், எந்த லூசுத்தனமான செய்திக்கும் வாக்கு விழும் என்பதே அந்த இருண்ட செய்தி!

எப்படி இது சாத்தியம்?

அமெரிக்காவின்  ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு இலக்க விளையாட்டு! வாக்காளர்கள் தங்கள் மாநிலங்களில் வேட்பாளருக்கு தேர்தலில் வாக்களிப்பர் (popular voting). ஆனால், அந்த வாக்குகள் நேராக அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதில்லை. தேர்தல் கல்லூரி (electoral college) என்ற 48 மாநிலங்களில் இருந்தும் தெரிவான 538 பிரதினிதிகளால் உருவாக்கப் பட்ட அமைப்பே அதிபரைத் தெரிவு செய்யும். ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து அனுப்பப் படும் பிரதிநிதிகளின் (electors) எண்ணிக்கை வேறு படும். உதாரணமாக கலிபோர்ணியா மாநிலம் 55 தேர்வாளர்களை வழங்கும், புளோரிடா 29 தேர்வாளர்களை வழங்கும். ஏனைய பெரும்பாலான சிறிய மானிலங்கள் 3 தேர்வாளர்களை வழங்கும். குவாம், மார்ஷல் தீவுகள் என்பன பிரதினிதிகள் எவரையும் வழங்குவதில்லை. 

இப்படியாக ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்தும் செல்லும் தேர்வாளர் வாக்குகள், எந்த வேட்பாளருக்கு வழங்கப் பட வேண்டும் என்பதை அந்த மாநிலத்தில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தீர்மானிப்பர். மெயின் (Maine), நெப்றாஸ்கா (Nebraska) ஆகிய இரு மாநிலங்கள் தவிர, ஏனைய எல்லா மாநிலங்களுமே பெரும்பான்மை (அது 1 வாக்கினால் பெரும்பான்மையாக இருந்தால் கூட) பெற்ற வாக்காளருக்கு தங்கள் தேர்வாளர்கள் வாக்களிக்க ஆணை கொடுக்கின்றன. இந்த 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் 270 வாக்குகளைப் பெறுபவர் அதிபராகத் தெரிவாவார்.

இந்த முறைமையால், பல சிறிய மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற ஒரு வேட்பாளர், சில பெரிய மாநிலங்களில் வெல்லாவிட்டால் , அதிபர் தேர்தலில் வெல்ல முடியாது. இது தான் 2016 இல் மொத்தமாக ட்ரம்பை விட அதிக வாக்குகள் பெற்ற ஹிலறி, தேர்தல் கல்லூரியில் தோல்வியைத் தழுவ வேண்டி வந்தது. 

2016..ட்ரம்ப் வெற்றியின் பின்னணி.

"உரிய மக்கள் கூட்டத்தினரிடம், கேட்க வேண்டிய வழிகளில் கேட்டால்..வெற்றி வாக்குக் கிடைக்கும்" என்ற செய்தி ஒரு இருண்ட செய்தியாக மாறியது 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் தான். ஏனெனில் ட்ரம்ப் தட்டியெழுப்பி வாக்குக் கேட்டது "முஸ்லிம்களை வெறுக்கும், குடியேறிகளை வெறுக்கும், பெண்களை இழக்காரமாகப் பார்க்கும், கல்லூரிக் கல்வி பெறாத, நீலக் கொலர் வேலை பார்க்கும் வெள்ளையின ஆண்களை!" நியூயோர்க்கில், 5th avenue என்ற  கோடீஸ்வரர்கள் வாழும் வீதியில் வசித்த ட்ரம்ப், பிற்ஸ்பர்க்கின் துருப்பிடித்த உருக்குத் தொழிற்சாலைகளிடையே வசிக்கும் மக்களுக்கு தன்னை மீட்பராகக் காட்டிக் கொண்ட அதிசயத்திற்குப் பின்னால், ஒரு பெரிய வெறுப்புணர்வு இருந்தது..

அந்த வெறுப்புணர்வோடு, smart campaigning என்ற கோட்பாட்டை முகநூல் போன்ற ஊடகங்கள், Cambridge Analytica போன்ற தகவல் விஞ்ஞான கம்பனி என்பவற்றுடன் இணைத்து ட்ரம்ப் குழு முன்வைத்த பிரச்சார நுட்பம் இப்போது உலகின் ஏனைய நாடுகளிலும் பின்பற்றப் படுகிறது..

-தொடரும்.

தொகுப்பு: ஜஸ்ரின்

மேலதிக மூலம், தேர்தல் கல்லூரி முறைமை: https://projects.fivethirtyeight.com/2020-election-forecast/ 

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை தோற்றால் அவரது குடும்ப வாழ்வும் அஸ்தமிக்கலாம்.
துணைவியாரின் அண்மைக்கால செய்கைகள் சொல்லாமல் சொல்கின்றன.


ஜஸ்ரின் அமெரிக்க சுப்றீம் கோட்டைப் பற்றியும் ஒரு விரிவான கட்டுரை எழுதலாமே?

அந்தக் கோட்டில் நீதிக்கா கட்சிக்கா முன்னுரிமை என்பதை உலகத்துக்கு விளக்க எழுதணும்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Justin said:

அமெரிக்காவின்  ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு இலக்க விளையாட்டு! வாக்காளர்கள் தங்கள் மாநிலங்களில் வேட்பாளருக்கு தேர்தலில் வாக்களிப்பர் (popular voting). ஆனால், அந்த வாக்குகள் நேராக அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதில்லை.

ஆகவே அமெரிக்க ஜனாதிபதிகள் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யபடுபவர்கள் இல்லை 😟

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

 

அந்த வெறுப்புணர்வோடு, smart campaigning என்ற கோட்பாட்டை முகநூல் போன்ற ஊடகங்கள், Cambridge Analytica போன்ற தகவல் விஞ்ஞான கம்பனி என்பவற்றுடன் இணைத்து ட்ரம்ப் குழு முன்வைத்த பிரச்சார நுட்பம் இப்போது உலகின் ஏனைய நாடுகளிலும் பின்பற்றப் படுகிறது..

-

திமுக 300 கோடி கொடுத்து இதைதான் செய்து கொண்டிருக்கும் பார்ப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

திமுக 300 கோடி கொடுத்து இதைதான் செய்து கொண்டிருக்கும் பார்ப்போம்

நான் வேறொரு கட்சியை உதாரணமாகக் காட்ட நினைக்கிறேன் பாகம் இரண்டில், நீங்க முந்திக் கொண்டீங்கள்! ஆனால் , பணத்தை நேரடியாகக் கொடுத்து ஓட்டு வாங்கும் வேலை இப்போது நடப்பதில்லை! எல்லாம் மார்க் சக்கர்பேர்க்கும், டோர்சியும் வேட்பாளருக்கு இலவசமாகவே செய்து கொடுப்பர்!

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஆகவே அமெரிக்க ஜனாதிபதிகள் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யபடுபவர்கள் இல்லை 😟

ஓரளவு உண்மை. ஆனால், மாநிலங்கள் தான் தேர்தலை நடத்தி மத்திய அரசின் ஆட்சியைத் தீர்மானிக்க வேண்டுமென்று அரசியல் யாப்பில் எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார்கள்! இதை மாற்ற ஒரு யாப்புத் திருத்தம் (amendment) வேண்டும். யாப்புத் திருத்தம் காங்கிரசிலும் வென்று, பின்னர் மூன்றில் இரண்டு பங்கான மாநிலங்களாலும் அங்கீகரிக்கப்  பட வேண்டும் (ratification)!

காங்கிரஸ் அனுமதித்தாலும், மாநிலங்கள் பல இதை அனுமதிக்காது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இம்முறை தோற்றால் அவரது குடும்ப வாழ்வும் அஸ்தமிக்கலாம்.
துணைவியாரின் அண்மைக்கால செய்கைகள் சொல்லாமல் சொல்கின்றன.


ஜஸ்ரின் அமெரிக்க சுப்றீம் கோட்டைப் பற்றியும் ஒரு விரிவான கட்டுரை எழுதலாமே?

அந்தக் கோட்டில் நீதிக்கா கட்சிக்கா முன்னுரிமை என்பதை உலகத்துக்கு விளக்க எழுதணும்.

அமெரிக்க உயர் நீதிமன்றம் எனக்கும் சுவாரசியமான ஒரு அமைப்பு! தேர்தல் முடியட்டும், உயிர் தப்பியிருந்தால் எழுதுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஆகவே அமெரிக்க ஜனாதிபதிகள் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யபடுபவர்கள் இல்லை 😟

2016 தேர்தலில்
கில்லாரி கிளின்டன்.     65844954 மொத்த வாக்குகள்
டொனால்ட் ரம்.            62979879 மொத்த வாக்குகள்.

கில்லாரி ஏறத்தாள 3 மில்லியன் வாக்குகள் அதிகப்படியாக பெற்றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 08:57, Justin said:

அமெரிக்க உயர் நீதிமன்றம் எனக்கும் சுவாரசியமான ஒரு அமைப்பு! தேர்தல் முடியட்டும், உயிர் தப்பியிருந்தால் எழுதுவோம்!

ஏன் அண்ணா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஏன் அண்ணா?

பகிடி தான், ஆனாலும் சில காரணங்கள்; 

கொரனா வருட முடிவு வரையில் இன்னொரு 100,000 பேரைக் கொல்லும் வாய்ப்பிருக்கிறாது. நான் பாதுகாப்பான வேலை தான் என்றாலும் வெளியே நடமாடுகிறேன். 

நடக்கும் தேர்தல் இலங்கையில் 90 களில் சந்திரிக்கா ரணில் தேர்தல் மாதிரி ஆகி விட்டது இங்கே. வன்முறை வரலாம் என்ற சாதுவான பயமும் இருக்கிறது. இன்று தெருவில் அதிகம் வாகனங்களைக் காணோம்!

  • கருத்துக்கள உறவுகள்

Slovenia என்ற ஐரோப்பிய நாட்டு பிரதமர் ரம்முக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
https://www.ndtv.com/world-news/pm-of-slovenia-melanias-homeland-congratulates-trump-on-triumph-2320557

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பகிடி தான், ஆனாலும் சில காரணங்கள்; 

கொரனா வருட முடிவு வரையில் இன்னொரு 100,000 பேரைக் கொல்லும் வாய்ப்பிருக்கிறாது. நான் பாதுகாப்பான வேலை தான் என்றாலும் வெளியே நடமாடுகிறேன். 

நடக்கும் தேர்தல் இலங்கையில் 90 களில் சந்திரிக்கா ரணில் தேர்தல் மாதிரி ஆகி விட்டது இங்கே. வன்முறை வரலாம் என்ற சாதுவான பயமும் இருக்கிறது. இன்று தெருவில் அதிகம் வாகனங்களைக் காணோம்!

ஜஸ்டின் அதுக்காக இப்படியெல்லாம் பயப்பிடுத்தக்கூடாது! 

இந்த அறுந்த கொரோனா நாங்கள் கவனமாய் இருந்தாலும் சுத்தியிருக்கிறவன் கவனமில்லாட்டி அது எங்களையுமெல்லோ வந்து பிடிக்கிது? எதுக்கும் கவனமா இருங்கோ!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறிப்பிட்ட குழுவினரை இனங்கண்டு இலக்கு வைத்து தகவல்களை அனுப்புவதால், அவர்களது அபிப்பிராயங்களை மாற்றுவது smart campaigning என்று வைத்துக் கொள்ளலாம். அரசியல் முடிவுகள்/ஆதரவு நிலை என்பவை அபிப்பிராயங்களே. இதை மனோதத்துவ ரீதியிலும், நரம்பியல் ரீதியிலும் கூட நிறுவியிருக்கிறார்கள். 

கெலியான் கொன்வே (Kellyanne Conway)

இந்த ட்ரம்பின் நவீன பிரச்சாரத்திற்கு முதலில் தேவையாக இருந்தது தகவல்கள் (data). கெல்யான் கொன்வே சிவப்புக் கட்சியின் நீண்ட கால அபிப்பிராய வாக்கெடுப்பாளராக (pollster) இருந்தவர். அமெரிக்காவின் எந்த மக்கள் பிரிவினர், எந்தக் கட்சியை சார்கின்றனர், அவர்கள் எந்த வயதுப் பிரிவினர், என்ன கல்வி நிலையினர், தொழில் ரீதியில் எப்படியானவர்கள், குடிவரவு நிலை/தேசிய நிலையில் எந்த வகையினர்..இப்படி மில்லியன், சில சமயங்களில் பில்லியன் கணக்கான தரவுப் புள்ளிகளை (data points) பல்லாண்டுகளாக அபிப்பிராய வாக்கெடுப்பாளராக இருந்தவராதலால் தன் வசம் வைத்திருந்தவர் தான் கெல்யான் கொன்வே. இதில் நகைச்சுவை என்னவென்றால், ட்ரம்ப் இந்த தரவுகளை, இலக்கங்களை நம்பாத ஒருவர்! அவரது ஆலோசகர்களின் வற்புறுத்தலினால் தனக்கு வெற்றி வர வேண்டுமென்று ஏற்றுக் கொண்டார். இந்த தரவுப் புள்ளிகளைப் பிரித்து மேய்ந்து பகுத்த போது முடிவில் ட்ரம்பின் இலக்காகத் தேர்வான குழுக்கள் பின்வருமாறு இருந்தன: ஆண்கள், வெள்ளையினத்தவர், 50 வயது தாண்டியோர், கல்லூரிக் கல்வி பெறாதோர், நீலக் கொலர் வேலை பார்ப்போர்! 

மேலே பார்த்தவை முதன் நிலைக் குழுக்கள். ஆழமாகச் சென்றால் இன்னும் உப குழுக்கள் ட்ரம்பின் குரலுக்கு அதிகம் செவி சாய்க்கும் வகையில் கிடைத்தனர்: உதாரணமாக, சட்டவிரோதக் குடியேறிகள் அதிகம் வாழும் நகரங்களில் வாழ்வோர், சட்டபூர்வக் குடியேறிகள் நல்ல நிலையில் இருக்கும் நகரங்களில் பாதகமான சமூக பொருளாதார நிலையில் வாழ்வோர், பெண்களால் தாம் அடக்கப் படுவதாக நினைக்கும் ஆண்கள்..இப்படி மிக நுணுக்கமான வகைப் படுத்தல்களெல்லாம் கண்டறியப் பட்டு பிரச்சார யுக்தி ஒரு நாடகம் போல அரங்கேற்றப் பட்டது தான் புதுமையான விடயம்!

இது புதுமையான முறை இல்லையென வாதிடுவோரும் இருக்கின்றனர். வழமையாக தேர்தல்களில் தங்கள் செய்திக்கு செவி சாய்க்கக் கூடியோர் யார் என்று கண்டறிந்து பிரச்சாரம் செய்வது எங்கேயும் நடப்பது தான். ஆனால், சாதாரணமாக இவ்வளவு ஆழமான வகைப் படுத்தலும், செய்தி சொல்லலும் ட்ரம்பின் தேர்தல் பிரவேசத்தில் தான் வெள்ளோட்டம் பார்க்கப் பட்டன என்பது பெரும்பாலானோரின் கருத்தாகும். 

இந்த ட்ரம்ப் பிரச்சார யுத்தியின் இன்னொரு சிறப்பம்சம்: மனிதர்கள் சமூக அழுத்தங்கள் (social conformity) காரணமாக வெளிப்படுத்தத் தயங்கும் உணர்வுகளை ஒரு மர்ம நரம்பை சீண்டுவது போல சீண்டி வெளிப்படுத்த வைத்தமை. நடந்து முடிந்த தேர்தலிலும் சரி, 2016 இலும் சரி, ட்ரம்பிற்கு இரகசியமாக வாக்களித்து விட்டு அதை பகிரங்கமாகச் சொல்ல முடியாத ஏராளமானோர் (பெரும்பாலானோர் ஆண்கள்) இருந்திருக்கின்றனர். 

பைபிளில் பேசப்படும் சாத்தான்களுள் லுசிபர் (Lucifer) என்ற சாத்தான் தான் அழகானது என்பர். இந்த லுசிபர் ஏன் ஏனைய சாத்தான்களை விட ஆபத்தெனில், இது பேய் தான் என்று மனிதனுக்குத் தெரியாதாம்! எங்களுள் இருக்கும் இருண்ட முகத்தை வெளிக்காட்ட வைக்கும் வேலையை எங்களுக்குத் தெரியாமலே செய்வோரையும் லுசிபர் என்றழைப்பர். ட்ரம்பும், இன்று ட்ரம்ப் வழியில் தொடரும் ஐரோப்பிய, ஆசிய அரசியல் வாதிகளும் லுசிபர்களே. இந்த லுசிபர்களுக்குக் கிடைத்த செப்படி வித்தை ஆயுதம்: சமூக வலை ஊடகங்கள்!

- தொடரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/11/2020 at 15:16, விளங்க நினைப்பவன் said:

Slovenia என்ற ஐரோப்பிய நாட்டு பிரதமர் ரம்முக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
https://www.ndtv.com/world-news/pm-of-slovenia-melanias-homeland-congratulates-trump-on-triumph-2320557

அவர் தன்ரை நாட்டு மருமோனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவ்வளவுதான் வேறொன்றுமில்லை. அதை ரம்பும் கணக்கிலை எடுக்க மாட்டார். காசுக்காக குடும்பம் நடத்தும் சனங்களை தூக்கி பிடிப்பது கேவலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.