Jump to content

பொண்ணுங்களுக்கு படிப்புதான் முக்கியம்”


Recommended Posts

பதியப்பட்டது

ஆம்பளைங்களை நம்பாத..!
------------------------------------------------
தீபாவிற்கு ஒரு நொடியில் உடல் நடுங்கி விட்டது. சித்தியினை அவள் இங்கு எதிர்பார்க்கவில்லை. என்ன பேசுவது எனத் தெரியாமல் உறைந்து நின்றிருந்தாள். சித்தியேதான் “என் தங்கம்” என்று அழுதபடி வந்துக் கட்டிக் கொண்டாள். உணர்வு திரும்பவும் தானும் அழத் தொடங்கிய தீபா சித்தியைக் கட்டிக் கொள்ள, சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வந்த ராஜேஸ்வரி நிலைமையைப் புரிந்துக் கொண்டு இருவரையும் வீட்டினுள் அழைத்து சென்றாள். சித்திக்கு குரல் அடங்கவில்லை.

“இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி ஓட வச்சுட்டானுகளே பாவிங்க”

அந்த வார்த்தை தீபாவிடம் அடங்கி இருந்த அழுகையை மேலும் தூண்டியது. அதைப் புரிந்துக் கொண்ட ராஜேஸ்வரி அதை திசை திருப்ப தீபாவிடம் சாந்தனுக்கு போன் செய்து உடனே வரச்சொல்லும்படி சொன்னாள். பின் உள்ளே சென்று ஒரு சொம்பில் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து சித்திக்கு கொடுத்தாள். குடித்து விட்டு சாதாரணக் குரலில்

“நல்லாருக்கியா சாமி?” என்றாள்.

“ம், நல்லாருக்கேன் சித்தி”

“அந்த தம்பி?”

“அவரும் நல்லாருக்கார் சித்தி”

உண்மையில் வீட்டை விட்டு ஓடி வந்த இந்த 3 மாதத்தில் இருவரும் படாத துன்பமில்லை. ஒரு பிரச்சனை என்று வரும்பொழுதுதான் எத்தனை மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறோம் என்பது தெரியவரும். சாந்தனுக்கு தீபாவுடன் ஊரை விட்டு கிளம்பும் சூழல் வந்த பொழுது அத்தனை நாள் உயிராக பழகிய நண்பர்களின் கண்களுக்கு புதிதாய் அவன் சாதி தெரிந்தது. தீபாவின் உறவினர்களுடன் சேர்ந்துக் கொள்ளவில்லை என்றாலும் அவன் பக்கம் யாரும் சேரவில்லை.

முன்கூட்டி திட்டமிட்டெல்லாம் எதுவும் செய்யவில்லை. இம்மாதிரி காதலர்களுக்கு எப்போதும் இப்படித்தான் நடக்கும். எதிர்பாராத சூழலில் உறவினருக்குத் தெரிய வரும். பெண்ணை வீட்டுச்சிறையில் வைப்பார்கள். முடிந்த வரையில் சீக்கிரமாக சொந்த சாதியில் மணம் முடிப்பார்கள்.  ஆனால் தீபா படித்தவள் மட்டுமன்றி சிந்திக்கத் தெரிந்தவளும் கூட. இந்த தாலி, திருமணம் போன்ற எந்த சம்பிரதாயமும் என்னை  தடை செய்ய இயலாது என்பதைத் தெளிவாக அவள் குடும்பத்தினருக்கு புரிய வைத்திருந்தாள்.

அதற்காக தம் சாதிப்பெண் வயிற்றில் வேறு சாதிக்கரு வளர அனுமதிக்க முடியுமா என்ன? மொத்தக் குடும்பமும் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதைப் போல் இரவோடு இரவாக சென்று கோவில் கிணற்றில் தள்ளி இவளைக் கொல்ல முடிவு செய்திருந்தது. அதை தெரிந்துக் கொண்டிருந்த தீபாவின் சித்திதான் முன் கூட்டியே எச்சரிக்க, இத்திட்டம் எதுவும் தெரியாதது போல் கிளம்புவதாகக் காட்டிக் கொண்டு சாந்தனுடன் ஊரை விட்டு ஓடி வந்திருந்தாள்.

கோவிலுக்குக் கிளம்புவதற்காக கட்டியிருந்த புடவை மட்டும்தான். செல்போனை கூட எடுக்க முடியவில்லை. சாந்தனின் நண்பர்கள் பலரைக் கேட்டு, உதவி கிட்டாமல், இறுதியாக ஒரு நண்பன் உதவ முன்வந்தான். கோவிலில் தாலிக் கட்டிக் கொண்டார்கள். நண்பனின் அண்ணன் வீட்டிலேயே குடித்தனம் நடத்த துவங்கினார்கள். சாந்தனுக்கு வேலை கிடைத்து சென்று வந்துக் கொண்டிருக்கிறான். மூன்று மாதங்கள் கடந்தாலும் எப்போது வீட்டினர் கண்டறிந்து வருவார்களோ, வந்தால் என்ன செய்வார்களோ என்று அஞ்சி நடுங்காத நாள் இல்லை. ஆனால் சித்தியை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

“நீ எப்படி சித்தி இங்கே வந்த?”

“பஸ்லதான் கண்ணு வந்தேன்”

“அதில்லை, நாங்க இங்கே இருக்கோம்னு எப்படி தெரிஞ்சது?”

“அதை ஏன் கேக்கற? நீ போன நாள்ல இருந்து மொத்த பயலுகளும் உன்னை தேடாத ஊர் இல்லை, ஒருத்தனுக்கும் மூஞ்சி இல்லை, உங்கப்பன்லாம் தலைமுழுகிட்டேன், யார் என்ன பண்ணாலும் கேக்கமாட்டேன்னுட்டார். உங்க பெரியப்பன் தான் எப்படியாவது உன்னைய பிடிச்சுப்பிடனும்னு ஏத்தி விட்டுட்டு இருக்கறது, அவங்க ஒருபக்கம் தேடுனா, நான் ஒரு பக்கம் தேடுனேன்”

“எதுக்கு சித்தி?”

“இதோ இதுக்குத்தான்” என்று தான் கொண்டு வந்திருந்த கட்டைப்பையில் இருந்து ஒரு ஃபைலை எடுத்துக் கொடுத்தாள். தீபாவின் சான்றிதழ்கள் அத்தனையும் அதில் அடங்கி இருந்தன.

“நீ போன அன்னைக்கே யாருக்கும் தெரியாம உம்பீரோல இருந்து எடுத்து வச்சுக்கிட்டேன். கொளுத்தறதுக்கு தேடுனானுங்க, அவ கையோடு எடுத்துட்டு போயிருப்பா, இல்லை முன்னாடியே கொடுத்து விட்டுருப்பான்னு சொல்லி சமாளிச்சுட்டேன்”

சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக பதினாறு வயதிலேயே பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்தப்பட்டு, கல்யாணம் பண்ணி வச்சா சரியாப் போயிருவான் என்று குடிகார தாய்மாமனுக்கு சித்தியைக் கட்டி வைக்க, இரண்டு ஆண் பிள்ளைகளை வயற்றில் கொடுத்து விட்டு, திருமணமான ஆறாவது வருடம் குடித்து குடித்து குடல் வெந்து செத்துப் போனார் சித்தப்பா. 

அப்போது தீபாவிற்கு பனிரெண்டு வயது. இதுதான் நடக்கப் போகிறது என சித்திக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தது. ஒரு நாட்டு மாடும் ஒரு எருமை மாடும் கூட்டுறவு வங்கி உதவியுடன் வாங்கி பால் கறந்து விற்க தொடங்கி இருந்ததால் சித்தப்பா இல்லாமலும் குடும்பம் ஓடியது.

ஆனால் தன்னை தொடர்ந்து படிக்க விட்டுருந்தால் ஒரு நல்ல வேலைக்கு சென்று கௌரவமாக வாழ்ந்திருப்போம் என்று நினைக்காத நாளில்லை. தன் பிள்ளைகளையாவது  ஒழுங்காக படிக்க வைக்க வேண்டும் என்று முயற்சிக்கையில் அதற்கு பெரிதும் உதவியாய் இருந்தவள் தீபாதான். அவளிடம் தன் எந்த கஷ்டத்தையும் பெரிதாக சொல்லாத சித்தி, பொண்ணுங்களுக்கு படிப்புதான் முக்கியம் என்பதை மட்டும் அடிக்கடி சொல்லி வருவாள். 

சொந்தக் குடும்பத்தின் சாதி வெறியில் இருந்துத் தன்னைக் காப்பாற்றிய சித்தி, தன் படிப்பையும் காபந்து செய்து கொண்டு வந்திருப்பதை பார்க்கையில் ஒவ்வொரு முறையும் படிப்பு முக்கியம் என்று சித்தி சொன்னது வெறும் வார்த்தை அல்ல, தான் இழந்த வாழ்க்கையின் மீதான ஏக்கம் என்பது புரிந்தது. தீபா பேச்சற்று இருக்க, ராஜேஸ்வரி பேச்சைத் தொடர்ந்தாள்.

“எப்படி கண்டு பிடிச்சிங்கன்னு இன்னும் சொல்லலையே?”

“இவ படிச்ச காலேஜ்ல விசாரிச்சங்கண்ணு”

“என் காலேஜ்க்கா? தனியாவா போனிங்க? நீங்க எங்கே போறிங்க வரிங்கன்னு வீட்ல யாரும் கேக்கலை?”

“கண்ணுல பூ விழுந்தாப்ல இருக்கு, சாயந்திரத்துக்கு மேல பார்வை மங்கலா இருக்கு, அதுக்கு தர்மாஸ்பத்திரில போய் பாக்கறன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடறது, அங்கேயும் போவேன், ஆனா உங்காலேஜ்க்கும் போய் விசாரிச்சேன். எடுத்ததும் யாரும் சொல்லலை கண்ணு, இது மாதிரி உன் சட்டிபிகெட்லாம் கொடுக்கனும்னு சொல்லி, கெஞ்சித்தான் உன் சினேகிதக்காரங்க விவரம்லாம் வாங்குனேன்”

“வாங்கி? என்ன சித்தி சொல்ற? எல்லார் வீட்டுக்குமா போன?”

“வேற என்ன பன்றது? அதுலயும் உங்கூட படிச்சதுல எல்லாரும் பட்டிணத்துப் பசங்களேதான் போல, நம்ம ஊர் பக்கம் அதிகம் இல்லை”

“எப்படி சித்தி, அது பெரிய ஊர் ஆச்சே, எப்படி வழி கண்டு பிடிச்சு ஒவ்வொரு வீடா போனிங்க?”

“அதை ஏன் கேக்கற, ஆட்டோ சத்தம் கொடுக்க எங்கிட்ட ஏது காசு, டவுன் பஸ்தான், அப்புறம் நடைதான், நடந்து நடந்து கால்லாம் ஓஞ்சு போச்சு, வெய்ய காலம் வேறயா, கண்ணுல்லாம் மயமயன்னு ஆகிரும். முக்காடு போட்டுக்கிட்டு திரிவேன். சாயந்திரத்துக்குள்ள ஊருக்கு போகனுமே, பையன் பால் கறந்துருவான், இருந்தாலும் பக்கு பக்குன்னு இருக்கும். ஆனா ஒன்னு, உங்க ரெண்டு பேரை தவிர பட்டிணத்துல எல்லாரையும் பார்த்துட்டன்னு சொல்லலாம். எண்ண முடியாத நச்சத்திரங்க கணக்கா எத்தனை சனங்க அந்தூர்ல?”

“அப்புறம்?”

“அப்புறம் ஒருவழியா ஒரு தம்பி, உங்கூட்டுக்காரனை இந்த ஊர்ல சமீபத்துல பார்த்தாதா சொன்னுச்சு, எங்கேன்னு விசாரிச்சேன், இந்த தெருவ சொன்னுச்சு, நான் பையத் தூக்கிட்டு வீடு வீடா எட்டிப் பார்த்துக்கிட்டே வந்தேன். நல்லவேளை நீ வெளிய இருந்த, இல்லைன்னா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்”

சித்தி தன் பொருட்டு பட்ட சிரமங்களை எண்ணிப் பார்க்கையில் தீபாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நன்றி சொல்லி இது தீருமா? சித்தியில் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்கள் மீண்டும் கலங்கின. 

“ஸ்ஸ்சூ, நீ இப்படி அழறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைத் தேடிப் பிடிச்சேன்?”

“......”

“இங்கே பாரு கண்ணு, பொம்பளைப் புள்ளை காலாகாலத்துக்கும் யாராவது ஒருத்தனுக்கு சேவகம் செஞ்சு, அவங்கிட்ட வாங்கித் தின்னுத்தான் பொழைக்கனும்னு இருக்கறதுலாம் எங்க காலத்தோட போகட்டும். அப்பனோ, புருசனோ, புள்ளையோ, யாரா இருந்தாலும் அவங்க இஷ்டப்படி நடக்கலைன்னதும் ஆம்பளைப் புத்திய காட்ட ஆரம்பிச்சுருவாங்க. அவங்களை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. சொந்தக் கால்ல நிக்கனும், அதுக்கு படிப்பு முக்கியம், நீ இத்தனை வருசம் கஷ்டப்பட்டு படிச்சது இப்படி விட்டுட்டு போறதுக்கு இல்லை. இது கடைசி வரைக்கும் உங்கூட இருக்கும். நீ அதை மட்டும் மறந்துறாத. உனக்கும் பொம்பளைப்புள்ள பொறந்ததுன்னா அதுக்கும் தெளிவா சொல்லி வளர்க்கனும், என்ன சொல்லி வளர்க்கனும்?”

இத்தனை ஆண்டுகளாக சித்தி தம்மிடம் திரும்ப திரும்ப சொன்னதை, இம்முறை உறுதியாக தீபா சொன்னாள்.

“பொண்ணுங்களுக்கு படிப்புதான் முக்கியம்”

FB 

Posted

அவசியமான ஒரு தகவல்.என் அம்மாவும் இதைத்தான் எங்களிற்கு சொல்லுவா.பெண்பிள்ளைகளிற்கு கொடுக்கக்கூடிய ஒரு சொத்து கல்விதான்.நல்ல கதை வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட.... படிப்புதான் முக்கியம் என்று சொன்ன சித்தி காதல் முக்கியமல்ல என்றும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.இப்ப பாருங்கோ படிப்பை விட காதல்தான் முக்கியம் என்று பிள்ளை சேர்டிபிகேட்டுகள் எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்திருக்கு......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்வியும் விளையாட்டும் மாணவர்களிற்கு மிக அவசியம்.
உடலுழைப்பிற்கு தயாரில்லாதவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை விரைவாக இழப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை பகிர்விற்கு நன்றி தோழர் ..👍

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடிய ஒரே அழியாச் சொத்து கல்வி மட்டுமே. அதிலும் பெண்கல்வி மிகவும் முக்கியம். இக்கதையில் தம் மகளையே கிணற்றில் தள்ளி கொல்லத் துணிந்த பெற்றவர்களின் சாதிய வெறி மிகவும் கேவலமானது. நல்லதொரு  பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் அபராஜிதன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்பிற்கு நன்றி ...பெண்களுக்கு கல்வி முக்கியமோ இல்லையோ கட்டாயம் சொந்தக் காலில் நிற்க தெரிய வேண்டும் .

  • 2 weeks later...
Posted
On 29/11/2020 at 22:48, Kavallur Kanmani said:

நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடிய ஒரே அழியாச் சொத்து கல்வி மட்டுமே. அதிலும் பெண்கல்வி மிகவும் முக்கியம். இக்கதையில் தம் மகளையே கிணற்றில் தள்ளி கொல்லத் துணிந்த பெற்றவர்களின் சாதிய வெறி மிகவும் கேவலமானது. நல்லதொரு  பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் அபராஜிதன்.

 

On 1/12/2020 at 03:07, ரதி said:

இணைப்பிற்கு நன்றி ...பெண்களுக்கு கல்வி முக்கியமோ இல்லையோ கட்டாயம் சொந்தக் காலில் நிற்க தெரிய வேண்டும் .

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் 
கண்மணி அக்கா  மற்றும் ரதி அக்கா  

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.