Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)

விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)

— வேதநாயகம் தபேந்திரன் — 

1999 ஆம் ஆண்டு; 

மூதூர் கட்டைபறிச்சானில் உள்ள எனது நண்பரின் திருமணத்திற்குச் செல்கிறேன். மணமகள் வீட்டில் திருமணம். தாலி கட்டுதல் உட்பட சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவெய்துகின்றன. 

மதிய உணவு சில்வர் பிளேட்டில் வருகிறது. வெள்ளைக்குத்தரிசிச் சோறு, ஆட்டிறைச்சிக் கறி, பருப்புக்கறி, கரட்சம்பல், கத்தரிக்காய் கறியுடன்கூடிய சுவையான உணவு. ஒரு பிடி பிடித்தேன். செக்கன்ட் சோறு அதாவது இரண்டாம் முறை சோறு தருவார்கள் வாங்கிச் சாப்பிடலாமென நினைக்கிறேன்.  

ஆனால் ஒருவர் வந்து சாப்பிட்ட பிளேட்டைத் தாருங்கள் எனக் கேட்டார். எனக்குச் சோறு போடுங்கள் சாப்பிடப்போகிறேன் என்றேன்.  

இல்லையில்லை, நீங்கள் பிளேட்டைத் தாருங்கள். வேறொரு பிளேட் தருகிறோம். அதில் சாப்பிடலாமென்றார். இதென்னடா புதினமாக உள்ளது என நினைத்துப் பிளேட்டைக் கொடுத்தேன். 

உடனேயே சாப்பிட்ட கை கழுவ ஒருவர் செம்பும் பிளாஸ்ரிக் பாத்திரமும் கொண்டுவந்தார். கைகளைக்கழுவினேன். 

இன்னொருவர் சில்வர் பிளேட்டுகள் கொண்டு வந்து ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டு போனார். இன்னொருவர் சுடச் சுட சம்பா அரிசிச்சோற்றைப் போட்டுக்கொண்டு வர இன்னொருவர் கட்டித் தயிரை கரண்டியால் வெட்டிச் சுடுசோற்றினுள் போட்டுக்கொண்டு போனார். இன்னொருவர் சீனியைப் போட இன்னொருவர் கனிந்த இதரை வாழைப்பழத்தை உரித்துப் போட்டுக் கொண்டுபோனார். 

சுடு சோற்றில் தயிரையும் வாழைப்பழத்தையும் சீனியையும் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டோம். உண்மையில் அது தேவார்மிதமாகத்தான் இருந்தது. 

விருந்தினர்களுக்குத்தான் மச்சச்சாப்பாடு. ஆனால் மாப்பிளை பொம்பிளைக்கு ஏழுவகை மரக்கறிகள் உள்ள பூதாக்கலம் தான் உணவு. பூதாக்கலம் என்பது மணமக்கள் ஒரே வாழையிலையில் ஒன்றாக உணவருந்துவதாகும். 

1998 ஆம் ஆண்டு; 

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயிலில் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்கிறேன். 

திருமணம் முடிய மணமகளின் வீட்டில் மதிய உணவுக்காகச் செல்கின்றோம். 

Self Serve எனும் சுயமாகப் பரிமாறும் முறை. சில்வர் பிளேட்டில் வெள்ளைக்குத்தரிசிச் சோறு, கோழிக் கறி, மரக்கறிகளை எனது விருப்பத்திற்கு விரும்பிய அளவில் சாப்பிடுகிறேன். 

மாப்பிளை பொம்பிளைக்குரிய பூதாக்கலச் சாப்பாடு இங்கும் மரக்கறிதான். 

யாழ்ப்பாணத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் மரக்கறி உணவுகளைத்தான் திருமண நிகழ்வில் யாவருக்கும் வழங்குவார்கள். 

ஆனால் மட்டக்களப்புத் திருகோணமலையைப் பரம்பரையிடமாகக் கொண்டோர் மச்ச உணவுகளை வழங்குவது எனக்குப் புதினமாக இருந்தது. 

ஆனால் அது அவர்களது பாரம்பரியம். அதற்கும் தனியானதொரு வரலாற்றுப் பின்னணி இருக்கலாம். மச்சச் சாப்பாடு இல்லாமல் கொண்டாட இது என்ன விரதச் சாப்பாடா என்று அங்குள்ளவர்கள் கேட்பார்கள். 

யாழ்ப்பாணத்தில் கிறீஸ்தவ நண்பர்களது மங்கல நிகழ்வுகள் என்றால் நான் தவறவிட மாட்டேன். மச்சச் சாப்பாடுகளை ஒரு பிடி பிடிக்கலாம் அல்லவா. 

1998 ஆம் ஆண்டு; 

திருகோணமலையில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியாப் பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். 

திருமண நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறேன். மணவறையில் கோட் சூட் அணிந்து மாப்பிளை மட்டும் தனியாக இருக்கின்றார். 

பள்ளிவாயலில் சமயப் பணியாற்றும் ஹத்தீப் அல்லது உலமா என்பவர் இஸ்லாமிய சமயாசாரப்படி திருமணப்பதிவை நடத்துகின்றார்.  

மணமகளின் தந்தையார் மணமகனுக்கு அடுத்ததாக திருமணப் பதிவுப்பத்திரத்தில் கையெழுத்து இடுகின்றார். 

திருமண ஒப்பந்தம் நிறைவேறியதும் மதிய உணவு.  

சஹன் எனப்படும் வட்ட வடிவமான சில்வர் தட்டு முன்பாக நான்கு பேராக அமர்ந்திருந்தார்கள். நடுவே சோறுபோட்டார்கள். அதனை ஒவ்வொருவரும் தமது வலது கையால் தமது பக்கத்திற்கென அள்ளி எடுத்தார்கள். 

தொடர்ந்து கறிகள் போடப்பட அப்படியே எடுத்துச் சாப்பிட்டார்கள். சகோதரத்துவத்தைக் குறித்த உணவு உண்ணும் முறையே அது. 

எமக்குத் தனித் தனிப் பிளேட்டுகளில் சோறு கறிகளைப் பரிமாறப்போவதாகக் கூறினார்கள். வேண்டாம் வேண்டாம். எமக்கும் அவ்வாறு உணவு தாருங்கள் என்றோம். தந்தார்கள். நாமும் சகோதரத்துவமாக உண்டோம். புதியதொரு மகிழ்வான அனுபவம். 

2002 ஆம் ஆண்டு; 

தம்பலகமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகிறேன். பிரதேச செயலர் விஜேசூரிய சேரின் மகனது திருமண நிகழ்வுக்காக கலேவெல எனும் ஊருக்குச் செல்கின்றோம். மாப்பிளை, பொம்பிளை கண்டிய ராஜ பரம்பரை முறையில் திருமண உடையணிந்து இருந்தனர். 

திருமண நிகழ்வு முடிந்ததும் விருந்து. அங்கு இரு பிரிவாக உபசரணை நடக்கின்றது. சிறியதொரு ஹோலில் உற்சாக போத்தல்கள், அதற்குரிய பைற்சுகள் வெள்ளமாகக் கரை புரண்டு ஓடுகிறது. சில இலட்சம் ரூபா செலவு தாண்டும் போல இருந்தது.   

தகப்பன், மகன் வித்தியாசமில்லாமல் சந்தோசத்தில் மிதக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது பொறாமையாக இருந்தது. 

பலவகை இறைச்சிகள், மீன்வகைகளுடன் அற்புதமான ஒரு மதியஉணவு.  

2012 ஆம் ஆண்டு;  

கிளிநொச்சிக் கடமைக்குச் செல்கிறேன். பூநகரி ஞானிமடப் பிரதேசத்தில் ஒரு வெளிக்கள நிகழ்வு. இரவு தங்கவேண்டிய நிலை. அப் பிரிவின் கிராம அலுவலர் இரவு உணவை ஏற்பாடு செய்தார். 

பனையோலையால் செய்யப்பட்ட தட்டுவத்தில் உணவு பரிமாறினார்கள். தட்டுவம் என்பது கள்ளுக் குடிக்கும் பிளாவை ஒத்த வடிவம். 

பிளா ஒரு பக்கம் முடிந்து கட்டப்பட்டிருக்கும். ஆனால் தட்டுவம் ஒரு பக்கம் சமனாக இரு இடங்களில் கட்டப்பட்டிருக்கும். 

பூநகரியின் வரலாற்றுப் பெருமை சொல்லும் மொட்டைக் கறுப்பன் அரிசிச்சோறு, மீன் கறி, கணவாய்க்கறி, நண்டுக்கறி, சுறா வறை, இறால் பொரியல், ஒடியல் பிட்டு, பருப்புக் கறி, கரட் சம்பல் என அமர்க்களமான சாப்பாடு. எமது ஸ்மார்ட் போனில் படங்களையும் எடுத்துக் கொண்டு மணக்க மணக்க உண்டோம்.  

2019 ஆம் ஆண்டு;  

திருகோணமலை நகரில் அரச பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எனது நண்பரின் மகளின் சாமத்திய வீடு எனப்படும் மங்கைப் பருவ மங்கல நீராட்டுவிழா. 

மண்டபமொன்றில் நடைபெற்றது. அறுசுவையுடன் கூடிய மாமிச உணவு. 

நிகழ்வு முடிந்து திரும்பும் போது எனது நண்பனை ரகசியமாகக் கேட்டேன் ”இது என்ன மச்சான் மச்சச் சாப்பாட்டுக்கு மாறிற்றியோ?” 

மச்சான் இஞ்சத்த ஆக்கள் மச்சத்தைத்தான் விரும்பிச் சாப்பிடுவினம். அதால நாங்கள் முந்தநாள் எமது வீட்டில் சடங்கு சம்பிரதாயக் கொண்டாட்டங்களைச் செய்தோம்.  

இன்று ஹோலில் யாவருக்கும் கொண்டாட்டச் சாப்பாடு மச்சம். நீ இஞ்ச இருந்த காலம் (1997 -2003) போல இல்ல இப்ப. எங்கட யாழ்ப்பாணத்தாக்களின்ர கலியாணமும் இப்படித்தான் நடக்குது” என்றான். 

இட மாற்றம் பண்பாட்டுப் பழக்கத்தை மாற்றுகிறது. 

இப்படியே ஊருக்கு ஊர் மாறுபட்ட திருமண முறைகள் இருக்கும். ஆனால், எங்கு போனாலும் ஒரு பிடி பிடிக்கலாம். 

 

https://arangamnews.com/?p=3786

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, கிருபன் said:

பூதாக்கலம் 

மறந்துபோய் நினைவுக்கு வர மறுத்த சொல்...
இணைப்பிற்கு நன்றி கிருபன் சார்.

  • கருத்துக்கள உறவுகள்

UK இல் பூப்புனித நீராட்டு என்று சொல்லி, பூசகரை அழைத்து, பூப்பெய்திய பெண்ணுக்கு (ஓமம் வளர்த்து தூய்மைப்படுத்தும், முட்டாள் தனமான சடங்கு ??). ஆயினும், அது அவரவர் விருப்பம்.

உணவு கலாசாரம் வேரூன்றிய மண்ணில் மண்ணில் மாறலாம்.

ஆனால், புலம் பெயர் நாடுகளில் மாறினால், புலம்பெயர் நாடுகளில் உள்ள எல்லா வசதிகளையும், சலுகைகளையும்,  சுதந்திரங்களையும், உரிமைகளையம்  வகை தொகை இன்றி அனுபவித்துக் கொண்டு   இருக்கும்  அநேகமான பழசுகளுக்கு, சில காலம் அறிந்த புதிதுகளுக்கும் ஒத்துவராது.
 
அவரவர் விருப்பப்படி நடக்கட்டும் என்றாலும், அதை நிலைநிறுத்துவதற்கு, பழசுக்கள் தாம் அறியாத, புரியாத சமய விழுமியத்தை  இழுப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான இணைப்புக்கு நன்றி கிருபன்.......! 

பொதுவாக முன்பெல்லாம் சாமத்திய வீடு ( அங்கிருக்கும் பெரிய பெண்களே தட்டிக் கழித்து ஆரத்தி முதலிய சடங்குகளை செய்வார்கள்). வீடுகுடி பூரல் போன்றவற்றிற்கு ஐயரைக் கூப்பிடும் வழக்கம் இல்லை.( வீட்டுக்கு கூரைவேலை, நிலை கதவு செய்யும் ஆசாரியாரே சகல சடங்குகளையும் செய்வார்). ஆனால் இப்போது எல்லாவற்றிற்கும் ஐயரைக் கூப்பிடுவதே வழக்கமாகி விட்டது......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் விருந்துகளில் பரிமாறும் போது சோறு அள்ளுவதற்கு ஒரு கையில் சிறிய தட்டு அப்படியே அள்ளும் போது சிந்தாமல் சிதறாமல் மற்ற கையையும் சேர்த்து அள்ளி வைப்பார்கள்.
இரண்டாவது தடவையும் வைப்பார்கள்.
ஒருசிலர் மூன்றாவது தடவையும்.
இத்தனைக்கும் சோறு மாதுழம்பழ முத்துகள் மாதிரி பெரிதாக இருக்கும்.
இதன் பின்பு வடை வாழைப்பழம் பாயாசம்.
இப்படி எல்லாம் சாப்பிட்டவர்களை ஒரு பிடி சாதம்.அது கூட குத்தரியாக இருக்காது.

விருந்துக்கு போனால் நிலத்திலே இருக்க முடியாது என்று எவரையுமே பார்க்க முடியாது.

இப்போ சப்பாணி கொட்ட முடியாமல் பலரும் அவஸ்தைப்படுகிறார்கள்.
இணைப்புக்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் மரக்கறி உணவுகளைத்தான் திருமண நிகழ்வில் யாவருக்கும் வழங்குவார்கள். 

ஆனால் மட்டக்களப்புத் திருகோணமலையைப் பரம்பரையிடமாகக் கொண்டோர் மச்ச உணவுகளை வழங்குவது எனக்குப் புதினமாக இருந்தது. 

Saivam.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

Saivam.jpg

சைவத்தில் அசைவம் இல்லை ஆனால் அசைவத்தில் சைவம் இருக்கிறது அதனால் இது சைவம்தான் ......!    😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சைவத்தில் அசைவம் இல்லை ஆனால் அசைவத்தில் சைவம் இருக்கிறது அதனால் இது சைவம்தான் ......!    😂

உயிர் நீங்கியபின்னர் அதன் உடலை உண்பவர்கள் அசைவர்கள் என்று கொள்ளப்படுகிறார்கள். இந்தக் கோட்பாட்டிற்கு இணங்க தாவரங்களுக்கும் உயிர் உள்ளது. ஆகவே சைவர்கள் என்று தாவரங்களை உண்பவர்களும் அசைவர்களே.!!  

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2021 at 16:30, குமாரசாமி said:

மறந்துபோய் நினைவுக்கு வர மறுத்த சொல்...
இணைப்பிற்கு நன்றி கிருபன் சார்.

கிழக்கில் கலத்தில் போடுவது என்பார்கள் 3 நாள் மரக்கறி ஆனால் வருபவர்களுக்கு  ஆட்டிறைச்சி கறியும் சோறும் , எலும்பு சொதியும் , பப்படம், இன்னும் பலகறிகள் அதனும் இறுதியாக தயிரும் வாழைப்பழமும் சீனியும் சோறை குழைக்க பாலும் ஊற்றுவார்கள் ஆனால் 

வடக்கில் கல்யாணத்தில்  ஒரு இறைச்சித்துண்டைக்கூட  காட்ட மாட்டார்கள்  இதை நான் கண்டது நம்ம கலைஞன் கல்யாணத்தில்  வுவுனியாவில் நடந்த்து 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வடக்கில் கல்யாணத்தில்  ஒரு இறைச்சித்துண்டைக்கூட  காட்ட மாட்டார்கள்  இதை நான் கண்டது நம்ம கலைஞன் கல்யாணத்தில்  வுவுனியாவில் நடந்த்து 

நாலாம் சடங்கிலை வைச்சு செய்வினம்....😎
புலம்பெயர் நாடுகளிலையும் யாழ்ப்பாணாத்தார்ரை கலியாணவீடு சாமத்திய வீடுகளிலை மச்சம் மாமிசம் காட்ட மாட்டினம். 😁

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் கலத்தில் போடுவது என்பார்கள் 3 நாள் மரக்கறி ஆனால் வருபவர்களுக்கு  ஆட்டிறைச்சி கறியும் சோறும் , எலும்பு சொதியும் , பப்படம், இன்னும் பலகறிகள் அதனும் இறுதியாக தயிரும் வாழைப்பழமும் சீனியும் சோறை குழைக்க பாலும் ஊற்றுவார்கள் ஆனால் ??????

பஞ்சியை பாராமல் மிச்சத்தையும் எழுதவும். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.