Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பகல் நேரத்து - மயக்கம் ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்பகல் நேரத்து - மயக்கம் ஏன்?

nanpagal-nerathu-mayakkam.png
சினிமா என்பது 24 கலைகளின் தொகுப்பு. அதில் ஒன்று தான், கதை சொல்லுதல். வணிக சினிமா என்பது முழுக்கவும் கதை சொல்வதையே மையமாக வைத்துச் சுழல்வது. 
 
’முழுப்படமும் கதை சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியும் அந்தக் கதையை நகர்த்த வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்’ என்பது பாலபாடம்.
 
மக்கள் கதை கேட்கவே படம் பார்க்க வருகிறார்கள். விசு, ராம.நாராயணன் போன்றோரின் படங்கள் டெக்னிகலாக சுமாராக இருந்தாலும் பெரும் வெற்றியடையக் காரணம், கதை சொன்ன விதம்.
 
எப்படி பிண்ணனி இசையோ, வசனமோ இல்லாமல் படம் எடுக்க முடியுமோ, அதே போன்றே கதையை பெரிதாக கணக்கில் கொள்ளாமலும் படம் செய்ய இயலும். ஒரு வாழ்க்கையையோ, ஒரு உணர்வையோ, ஒரேயொரு நிகழ்வையோ மட்டும் பதிவு செய்யும் சுதந்திரம் படைப்பாளிகளுக்கு உண்டு.
கலைப்படங்கள், Experimental, Avant-garde என்று பல பெயர்கள் இவ்வகைப்படங்களுக்கு உண்டு. Bergman, David Lynch, Tarkovski, Antonioni, Fellini என்று இவ்வகைப் படைப்பாளிகளை பட்டியல் இட முடியும். 
 
கதை சொல்வதோ, ஆடியன்ஸை திருப்திப்படுத்துவதோ அவர்களின் நோக்கம் அல்ல. சினிமா எனும் கலையை வெறும் சினிமாவாகவே எடுத்துப் பார்க்கும் முயற்சி அது. 
 
தமிழ் சினிமாவில் கதை கேட்டே வளர்ந்த நம் மக்களுக்கு, கதை சொல்லாத படங்களைப் பார்க்கும்போது கோபம் வருகிறது. ‘நான் இரண்டு மணி நேரம் செலவழிக்கிறேன். ஒன்னுமே சொல்லல?’ என்று கோபமாகக் கேட்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ அப்படி ஒரு அதிர்வலையை சோசியல் மூடியாவில் கிளப்பிவிட்டிருக்கிறது. 
 
கதை சொல்ல ‘ஸ்ரீதர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்தினம், மிஷ்கின்’ என்று பெரும் பாராம்பரியமே இருக்கும்போது, மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸின் சட்டையைப் பிடித்து ’கதையை எங்க மோனே?’ என்று சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 
 
‘அவன் நடப்பான்..நடப்பான்...மெதுவாய்த்தான் வருவான்..பெருசா கதையும் சொல்ல மாட்டான்’ என்ற பொறுமையுடன் தான் இவ்வகைப் படங்களை அணுக வேண்டும்.
 
இந்த படத்தின் பிண்ணனியில் தமிழ்ப்பட வசனங்களை ஓடவிட்டது பெரும் குறையாகவே எனக்குப் பட்டது. இரண்டாம் முறை ம்யூட் செய்து பார்த்தபோது, பேரனுபமாக இருந்தது.
 
பொதுவாக ஒரு ஆவி ஒருவரின் உடம்பில் நுழையும்போது, ஆவிக்கு அது தெரியும்; பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாது. இங்கே அது தலைகீழாக திருப்பிப் போடப்பட்டிருக்கிறது.
 
உடலையும் வாழ்க்கையையும் இழந்துவிட்ட ஒரு தமிழ் ஆன்மா, விளக்கப்படாத ஒரு அதிசயத்தால் ஒரு மலையாள உடம்பில் வந்து அமர்ந்துவிடுகிறது. பழைய வாழ்க்கையைத் தொடர நினைக்கிறது. அது நடைமுறையில் இயலாத காரியம் என்று உணர்ந்து, பெருவலியுடன் திரும்பிச் செல்கிறது. 
 
மொழி, மதம் என்று நாம் பிடித்து வைத்திருக்கும் அடையாளங்கள் ஒரு பொருட்டே அல்ல என்றும் குறியீடாகப் பேசுகிறது இப்படம்.
’ஒரு ஆவி இன்னொரு கேரக்டரில் புகுந்தால், அந்த ஆவியைக் கொன்ற நாலுபேரை போட்டுத் தள்ளவே வரும்’ என்று கதை கேட்ட நமக்கு, ‘வந்துச்சு..அப்புறம் போய்டுச்சு’ என்று கதை சொல்வது போதாது தான். 
 
ஆனாலும், இவ்வகைப் படங்கள் ஒரு அனுபவம். உங்களின் கதை அறிவையெல்லாம் தூக்கி ஓரமாய் வைத்துவிட்டு, எளிய பிள்ளையாய் அமர்ந்தால் சில திறப்புகள் நிகழும்.
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஏராளன்.


இந்த விமர்சனம் எழுதியவர் தவறாக எழுதியுள்ளார். அல்லது தவறாக புரிந்து உள்ளார். அல்லது தெளிவாக தனக்கான கதையை படத்தில் உருவாக்கியுள்ளார்.

இது ஆவி தொர்பான கதை அல்ல.

நேற்று இப்படத்தை Netflix இல் பார்த்து முடித்தேன். நேற்று முந்தினம் பார்க்க தொடங்கி, அரைப்பகுதியில் நிறுத்தி விட்டு மீண்டும் மிச்சத்தை பார்த்து முடித்தேன். இதன் காரணம், படத்தின் நீளம் மற்றும் பொறுமையின்மை.

ஆனாலும் இப் படம் ஒரு சிறு கதை. பார்க்கத் தொடங்கி அரை மணித்தியாலம் கடந்த பின் முடிவு என்ன ஆனது என்பதை கண்டிப்பாக பார்க்க ஆவல் தோன்றும். ஆனால், அந்த முடிவை காண்பதற்கு ஒரு சிறுகதையை ஒவ்வொரு சொல்லாக வாசிக்க கூடிய பொறுமை தேவை.

தமிழ் கதைக்க தெரியாத, தமிழ் பாடலை பேரூந்தில் போட்டாலே அதை மாற்றச் சொல்கின்ற மம்முட்டி பேரூந்தில் நண்பகல் நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் போடுகின்றார். தூக்கத்தில் எழும்பி பார்க்கும் போது பேரூந்து ஒரு தமிழ் குக்கிராமம் ஒன்றில் நிற்கின்றது. இறங்கி அந்த ஊருக்குள் இருக்கும் ஒரு வீட்டுக்கு போகின்றார்.

அந்த வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் காணாமல் போயிருகின்றார் (இறந்து போனதாக காட்டவில்லை). அந்த காணாமல் போனவராகவே மம்முட்டி ஆகி விடுகின்றார். மலையாளம் கதைப்பது மட்டுமன்றி தன் மனைவி பிள்ளைகள் அனைத்தையும் மறந்து விடுகின்றார். தமிழ் கதைக்கின்றார். காணாமல் போனவரின் மனைவி, மகள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் என்று அனைவரையும் பெயர் சொல்லி உறவு கொண்டாடுகின்றார். வங்கிக்கு சென்று காணாமல் போனவரின் கையொப்பம் இடுகின்றார். அவராக இவர் மாறி 'இவரை' மறந்து விடுகின்றார்.

அந்த ஊர்க்காரர்கள், மம்முட்டியை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தடுமாற, காணாமல் போனவரின் மனைவி தன் கணவரை இவரில் காண்கின்றார். உணர்ச்சி மேலீட்டில் அவரை போகச் சொல்ல முடியாமல் தவிக்கின்றார். ஆரம்பத்தில் எதிர்த்த மகளும் ஈற்றில் கண் கலங்குகின்றார்.

பின் மத்தியானம் ஒன்றில் மம்முட்டி மீண்டும் நண்பகம் நேரத்து மயக்கம் (நித்திரை) கொள்கின்றார். பின் எழுகின்றார்... அதன் பின் படம் சில நிமிடங்களில் முடிந்து போகின்றது.

கதை இல்லாத கதை இது. இரண்டு நண்பகல்களுக்கிடையே நடக்கும் ஒரு சம்பவம். ஏதோ ஒரு நாட்டில் இரு சிறுவனுக்கு இப்படி நடந்ததாக அறிந்து அதையொட்டி இப் படத்தை எடுத்து இருக்கின்றார்கள்.

படம் முழுக்க பயணம் செய்யும் தமிழ் பாடல்களும் எம் ஆர் ராதாவின் குரலும் ஒரு கட்டத்திற்கு மேல் பெரும் இம்சை செய்கின்றது. இவற்றை ஒலிக்க விடாமல், அலற விட்டு இருக்கின்றார்கள். இதை சத்தமாக வைக்காமல் பின்னனியில் சன்னமாக ஒலிக்க விட்டு இருந்தால் படத்தின் Tone னே மாறியிருக்கும். இன்னும் ரசிக்க கூடியதாக இருந்து இருக்கும்.

பிரயோசனமற்ற ஒரு மாலைப் பொழுதோ, நண்பகலோ உங்களுக்கு வாய்க்குமெனில் அந்த நேரத்தில் இந்தப் படத்தை பார்க்கலாம்.
 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

நேற்று இப்படத்தை Netflix இல் பார்த்து முடித்தேன். நேற்று முந்தினம் பார்க்க தொடங்கி, அரைப்பகுதியில் நிறுத்தி விட்டு மீண்டும் மிச்சத்தை பார்த்து முடித்தேன். இதன் காரணம், படத்தின் நீளம் மற்றும் பொறுமையின்மை.

நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்மூட்டியின் நடிப்பு நன்றாக இருந்தது. ஒரு கிராமத்தை அழகாகப் படம் பிடித்து இருக்கிறார்கள். ஒப்பனை சிறிதும் இல்லாமல் நடிகர்கள் படத்தில் வந்து போவது சிறப்பு.

வேளாங்கண்ணி யாத்திரை முடிந்து விடுதிக்கு பணம் கட்ட வரும் போது திருக்குறளுக்கு விளக்கம் கேட்கும் மம்மூட்டி, பஸ்ஸை விட்டு இறங்கி கிராமத்துக்குள் ஒரு வீட்டுக்குள் சென்று தமிழ் கதைக்கும் போது ஒரு குழப்பம் வந்து போகிறது. அங்கேதான் கதையிலேயே ஒரு ஈடுபாடு வருகிறது.

மம்மூட்டி மட்டுமல்லாமல் மற்றவர்களும் கிராமத்துக்குள் படம் முழுவதும் சுற்றிச் சுற்றி வருவது, நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல படம் பார்ககும் போது ஒரு அலர்ச்சியைத் தருவதை மறுப்பதற்கில்லை. ஒருவேளை இந்தப் படத்தை நண்பகலில் பார்ப்பதற்காகவே மம்மூட்டி தயாரித்து நடித்திருக்கிறாரோ தெரியவில்லை.

பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு குறும்படமாக எடுக்க வேண்டிய ஒரு கதையை ஒன்ரரை மணித்தியாளத்துக்கு இழுத்து வைத்து நித்திரையை வரவழைத்திருக்கிறார்கள்.

தலைக்கூத்தல்பார்த்தீர்களா? Netflix இல் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

பின்பு அவர் இந்தப் புதுக் குடும்பத்தை மறப்பதற்காக மதியம் அவர் சாப்பிடும்பொழுது அவருக்கு கேரளத்து மாந்திரிக மருந்து ஏதோ குடுக்கிறார்கள் அதன்பின் அவர் சிறிது நேரத்தில் இவையெல்லாவற்றையும் மறந்து சாதாரணமாக பஸ்சில் வந்த மனைவியுடன் போகிறார்........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

கதை என்னவென்றே தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன். கலைப்படம் என்றால் கொஞ்சம் மெதுவாகப் போகும். ஆனாலும் ஆர்வத்துடன் பார்க்க வைத்த கதையும் நடிப்பும். @நிழலி சொல்வது போல சிறுகதை படித்தது போல இருந்தது. 

———

தமிழர் வாழ்வை படம் பிடிக்கும் மலையாள சினிமா!

- தயாளன்

 

maxresdefault-3.jpg

தலைப்பைப் பார்த்தால், இது தமிழ்ப் படம் என்று தோன்றலாம். ஆனால், இது மலையாளத்தில் வெளி வந்திருக்கும் தமிழ்க் கதை. லிஜோ ஜோஸ் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி தமிழிலும், மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. புதிய அனுபவங்களைத் தருகிறது. மம்முட்டி வெளுத்து வாங்கி இருக்கிறார்!

ஒரு மலையாள சினிமா தமிழ் வாழ்வை புறநிலையிலிருந்து பார்க்கும் ஒரு வினோத அனுபவத்தை படம் தருகிறது. கதை வழக்கம் போல எளிமையானது.  வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வரும் ஜேம்ஸ் கேரளா திரும்பும் வழியில் தூங்கி விடுகிறார். ஒரு கிராமத்தின் அருகே விழித்துப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொல்லி அந்த கிராமத்தில் காணாமல் போன சுந்தரம் என்பவரின் வீட்டுக்குச் சென்று அவரைப் போலவே நடந்து கொள்கிறார். ஜேம்ஸுடன் வந்தவர்களும், அந்த ஊரில் இருப்பவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மறுநாள் நண்பகல் மீண்டும் தூங்கி எழும் போது ஜேம்ஸாக மாறி விழிக்கிறார். உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்ற திருக்குறளின் கருத்துக்களை அடித்தளமாக வைத்து ஒரு மாய எதார்த்த (Magical Realism) சினிமாவை  இயக்கி இருக்கிறார் லிஜோ.

படத்தில் ஜேம்ஸாகவும் சுந்தரமாகவும் வாழ்ந்திருக்கிறார் மம்மூட்டி.  ஆரம்ப காட்சிகளில் சிடுசிடுவென்று ஜேம்ஸ் கதாபாத்திரத்தில் இறுக்கமான உடல் மொழியை வெளிப்படுத்தும் மம்மூட்டி, சுந்தரம் பாத்திரத்தில் இன்னொரு உடல் மொழியையும் காட்டுகிறார். உடலால் ஜேம்ஸாகவும், மனதால் சுந்தரமாகவும் அவர் வெளிப்படுத்தும் அனாயசமான நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது.  மது குடித்துக் கொண்டே சிவாஜியின் இருவேறு பாத்திரங்களை காட்சி சட்டகத்தின் இரு பிரிவுகளுக்குள்ளும் மாறி மாறி நுழைந்து நடிக்கும் காட்சியில் அட்டகாசம்.

npnm-04.jpg

படத்தில் ரம்யா பாண்டியனின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் அருமை. அவரது மகளாக வரும் பெண்ணின் நடிப்பும்  பூ ராமு கச்சிதமான நடிப்பும் அத்தனை நேர்த்தி. படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்தில் சிறு சிறு பங்களிப்புகளை தந்து கொண்டிருக்கின்றன. சுந்தரத்தின் தாயாக வரும் அந்த பாட்டி படம் முழுக்க ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனால், அவர் குரல் காட்டும் வித்தியாசம் கதையை நகர்த்திச் செல்ல வைக்கிறது.

படத்தின் திரைக்கதையும், ஆக்கமும் உலகத் தரத்திற்கு இணையாக இருக்கிறது. சிறு சிறு விபரங்களை (Details) தருவதன் மூலம் திரைக் கதையில் சீர்மை நிறுவப்படுகிறது. கறாரான ஜேம்ஸ் பாத்திரம் நெகிழ்வான சுந்தரமாக மாறும் போது நிகழும் உருமாற்றம் நுட்பமானது. அந்த கதாபாத்திரங்களுக்கிடையேயான காண்ட்ராஸ்ட் துல்லியமாக வரையறுக்கப்பட்டுளது. தமிழ் உரையாடல்களை மண் குதிரை எழுதியிருக்கிறார். சினிமாவிற்கு தேவையான குறைவான, செறிவான மொழி அவருக்கு வாய்த்திருக்கிறது.

படத்தின் இன்னொரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.  கிட்டத்தட்ட ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர, அனைத்து காட்சிகளுமே நிலைத்த (Static) ஷாட்களாக உருவாக்கி இருக்கிறார். நிலப்பகுதியை காட்டும் போதும் சரி, கிராமத்தின் தெருக்களிலும் சரி, கேமராவில் எந்த அசைவும் இல்லாமல் நம் கண் முன் நிகழ்வது போல உணர்கிறோம்.  இதை விட்னெஸிங் கோணம் என்று வகைப்படுத்தலாம். ஏற்கனவே, மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் இதே போன்ற (Blocked Shots) பயன்படுத்தப்பட்டிருந்தது. அதிலும், தேனி ஈஸ்வர் தான் ஒளிப்பதிவாளர்.

npnm-01.jpg

கதை நிகழும் வெளியை (Space) தனது அற்புதமான கம்போசிஷன் மூலம் நிறுவுகிறார்.  படத்தில் இரண்டே இரண்டு, மூன்று ஷாட்களில் மட்டுமே கேமரா அசைகிறது. மம்மூட்டி கண்ணாடியில் முகம் பார்க்கும் போது மட்டுமே குளாசப் ஷாட் வருகிறது. அந்த குளோசப்தான் கதையின் முக்கிய தருணமாகிறது. ஜேம்ஸின் மனைவி மற்றும் பையன், சுந்தரத்தின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை ஒரே சட்டகத்தில் இரண்டு பிரிவுகளாக கம்போஸ் செய்யும் காட்சி அழகியலின் உச்சம்.

சுந்தரத்தின் கதை நிகழும் காட்சிகளில் ஒரே ஒரு குளோசப் காட்சி வருகிறது. அதுவரை யாருடைய முகங்களையும் தெளிவாக காட்டாமல், மிட் லாங் ஷாட்களாகவே வருகின்றன. ஒளியமைப்புகளும், ஒளிக்கு நேர் எதிராக வைக்கப்பட்டிருக்கும் கோணங்களும் ஈஸ்வரின் மேதைமைக்கு சான்று.  ஜேம்ஸின் மனைவி, சுந்தரத்தின் மனைவி, அவர்களது குழந்தைகள் யாருக்கும் குளோசப் காட்சிகளே வைக்காமல் தவிர்க்கிறார். இதன் மூலம் ஒரு ஊசலாட்டமான, நிச்சயமற்ற கனவுத் தன்மையை உருவாக்குகிறார் ஈஸ்வர். படம் முழுக்க கேமரா கதைக்களத்தில் பங்கேற்பாளனாக செயல்படுவதன் மூலம் பார்வையாளர்களும் கதையின் ஒரு கேரக்டர் என்பதை உணரத்தொடங்கி விடுகிறார்கள்.

npnm-02.jpg

சினிமாவின் மொழி என்பது அந்த சினிமா நிகழும் வெளி, காலம் இரண்டையும் எப்படி கையாள்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தப்படத்தின் சாட்சிய வகைமையான ஒளிப்பதிவு படத்தை உயர் தரத்திற்கு கொண்டு செல்கிறது.

படம் முழுக்க தனியாக இசைத் தடம் இல்லை. தமிழ் நிலத்தில் கேட்கும் ஒலிகளையே, அதாவது, பெரும்பாலும் சினிமா, டிவி ஒலிகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள். பழைய சினிமா பாட்டுக்கள், வசனங்கள் என தமிழ் நிலத்தில் கேட்கும் ஒலிகளின் மூலம் தமிழ் பண்பாட்டில் சினிமாவின் தாக்கத்தை பூடகமாக உணர்த்துகிறார் இயக்குனர்.  மயக்கமா கலக்கமா? பாடல், இரத்தக் கண்ணீர் வசனங்கள் மூலம் தமிழ் வாழ்வின் ஒலிப் பிம்பங்களை தொகுத்திருக்கிறார் இயக்குனர். ஒலி வடிவமைப்புக்காக இந்தப் படம் விருதுகளை பெறக்கூடும்.

தமிழர்களைப் பற்றியும், அவர்களின் பண்பாடு குறித்தும் கேரளாவின் பார்வையையும் படம் பேசுகிறது. அந்த அளவில் இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட மலையாள சினிமா.  படம் நெட்பிளிக்சில் வெளியாகி இருக்கிறது.

விமர்சனம்; தயாளன்

 

https://aramonline.in/12580/nanpakal-nerathu-mayakkam/

  • கருத்துக்கள உறவுகள்

அட இவ்வளவு இருக்கா?👇🏾

 

ஒரு மலையாளத் திரைப்படத்தின் தமிழ் வணக்கம்

மு.இராமநாதன்

spacer.png

நான் அங்கம் வகிக்கும் வாட்ஸப் குழுமம் ஒன்றில் ஒரு நண்பர் இப்படி எழுதியிருந்தார்: “மலையாளிகள் தமிழர்களைப் ‘பட்டி’ என்று அழைப்பார்கள். பட்டி என்றால் ‘நாய்’ என்று பொருள்.” அவர் எழுதியதில் செம்பாகம் சரியானது. அதாவது, இரண்டாவது வாக்கியம். 

நான் 1980களின் பிற்பகுதியில் கொச்சியில் பணியாற்றினேன். அப்போது கட்டுமானப் பணிகளில் திறன் குறைந்த வேலைகள் தமிழர்களுக்குத் தரப்பட்டன. மலையாளிகளில் சிலர் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது தமிழர்களைப் ‘பாண்டி’ என்று அழைப்பார்கள். அது மரியாதைக்குரிய விளியல்ல. அது ஒரு குழூஉக் குறி. அதாவது அந்த விளியைச் சபையில் சொல்ல மாட்டார்கள்.

இந்தப் ‘பாண்டி’யைத்தான் நமது வாட்ஸப் புலவர்கள் ‘பட்டி’யாகத் திரித்துவிட்டார்கள். இதைக் குழுமத்தில் தெரிவித்தேன். ஆனால், நண்பர் சமாதானம் ஆகவில்லை. மலையாளிகளுக்குத் தமிழர்கள் மீது மதிப்பு இல்லை என்பது அவரது கருத்து. அதேவேளையில் அவருக்கும் மலையாளிகள் மீது மதிப்பு இல்லை. 

வாட்ஸப் உரையாடல் நடந்தது போன வாரம். இந்த வாரம் நான் பார்த்த படம் நண்பருக்கு பதில் சொல்லும் விதத்தில் அமைந்திருந்தது. அந்தப் படத்தின் பெயர் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. கவித்துமான தமிழ்ப் பெயரில் ஒரு மலையாளப் படம். பெயரில் மட்டுமல்ல படத்திலும் கவித்துவமும் தமிழும் ததும்பி நிற்கிறது.

கலைஞன் மம்மூக்கா

கொச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு யாத்திரை வந்த குழுவினர் தாங்கள் அமர்த்திக்கொண்ட பேருந்தில் ஊர் திரும்புகிறார்கள். இப்படிப் படம் தொடங்குகிறது. இவர்கள் எப்படிக் குழு சேர்ந்தார்கள்? அது படத்தின் கடைசிச் சட்டகத்தில்தான் சொல்லப்படும். ஜேம்ஸ் (மம்மூட்டி) குழுவின் ஒருங்கிணைப்பாளன்.

பேருந்து ஒட்டன்சத்திரம் அருகே வயல்களை ஊடறுத்துப் போகிறது. பயணிகள் நண்பகல் நேரத்து உறக்கத்தில் அமிழ்ந்திருக்கிறார்கள். ஜேம்ஸ் பேருந்தை நிறுத்தச் சொல்கிறான். அருகாமைக் கிராமத்துக்கு நடந்துபோகிறான். அங்கு சுந்தரம் என்பவனின் வீட்டிற்குள் நுழைகிறான். சுந்தரத்தின் கூட்டிற்குள் பாய்கிறான். சுந்தரமும் ஜேம்ஸும் நேர்மாறானவர்கள். ஜேம்ஸ் கொஞ்சம் சிடு மூஞ்சிக்காரன், கருமி, தெய்வ நம்பிக்கை குறைவானவன், குடிப்பழக்கம் இல்லாதவன், கிறிஸ்தவன், மலையாளி. சுந்தரம் தமிழன், இந்து, பக்திமான், ரசிகன், கலகலப்பானவன், கொஞ்சம் குடிக்கவும் செய்வான். மாறுபட்ட பாத்திரங்களில் ஒரே நாயகன் நடித்த எண்ணற்ற இரட்டை வேடப் படங்களைப் பார்த்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் மம்மூட்டியே அப்பாவும் மகனுமாய் நடித்த ‘பரம்பரை’ எனும் மலையாளப் படம் சில நிமிடங்களுக்குப் பேருந்தில் காட்டப்படுகிறது. சிவாஜியின் ‘கௌரவம்’ படத்தில் அப்பாவும் மகனும் சண்டை போடுகிற காட்சி ஒன்றை மதுக்கடையில் அநாயாசமாக நடித்துக் காட்டுகிறான் சுந்தரம். ஆனால், இந்தப் படங்கள் எல்லாம் மிகை நடிப்பால் ஆனவை.

மாறாக ’நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் மம்மூட்டி அடக்கி வாசிக்கிறார். இரண்டு பாத்திரங்களுக்கும் மாறுபட்ட வாய்மொழியையும் உடல்மொழியையும் அவரால் தளும்பாமல் தர முடிகிறது. மம்மூக்கா நம் காலத்தின் ஆகப் பெரிய கலைஞர்களுள் ஒருவர் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபிக்கிறது. என்றாலும் படத்தின் சிறப்பு அங்கே முடிவதில்லை. அது படத்தின் கதையிலும் கட்டமைப்பிலும் விரிகிறது.

கதையை விரிக்கலாம்

ஜேம்ஸுக்குள் சுந்தரத்தின் ஆன்மா புகுந்துகொள்கிறதா? இறந்தவரின் ஆன்மா உயிரோடிருக்கும் ஒருவரின் உடலுக்குள் புகுந்துகொள்ளும் படங்களும் நமக்குப் புதியதல்ல (எ.க: சந்திரமுகி, சீதக்காதி). ஆனால், இதுபோன்ற படங்களில் கதையும் அதன் காரிய காரணங்களும் முழுமையாகச் சொல்லப்பட்டுவிடும். மாறாக நண்பகல் பல சாத்தியங்களை உள்ளடக்கி இருக்கிறது. அவரவர் விருப்பத்துக்கும் ரசனைக்கும் இணங்க விரித்துப் பொருள் கொள்ளலாம்.

சுந்தரம் காணாமல் போய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது ஜேம்ஸின் வழியிலான மறுபிரவேசம். இந்தக் காலகட்டத்தில் கிராமம் நிறைய மாறியிருக்கிறது. சுந்தரத்தின் வாடிக்கையாளர்கள் வேறு நபரிடம் பால் வாங்கத் தொடங்கிவிட்டார்கள். அவனது நாவிதர் இறந்துவிட்டார். வெட்ட வெளியாகக் கிடந்த இடத்தில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. கூட்டுறவு வங்கியில் கடன் கேட்கப்போன சுந்தரம் ஆள்மாறாட்டத்துக்காகக் குற்றஞ்சாட்டப்படுகிறான். இவை சுந்தரத்தை நிலைகுலையச் செய்கின்றன.

தனது ஆன்மா இனி ஜேம்ஸின் உடலில் தங்க முடியாது என்று சுந்தரம் கருதியிருக்கலாம். கடைசியாக மகள் பரிமாறும் மதிய உணவை உண்கிறான். அது பலிச் சோறாக இருக்கலாம். கூரையின் மீதிருக்கும் ஒற்றைக் காகம் பறந்துபோகிறது. வீட்டிலிருந்து திண்ணைக்கு வருகிறான். அப்போது சுவரில் விழும் நிழல் அவன்கூட வருவதில்லை, வீட்டிற்குள்ளேயே நின்றுவிடுகிறது. இதைச் சுந்தரத்தின் ஆன்மா வீட்டில் தங்குவதாகவும், வெளியேறுவது ஜேம்ஸ் என்பதாகவும் வாசிக்கலாம். இது ஒரு சாத்தியம்.

நடந்தவை அனைத்துமே ஜேம்ஸின் கனவு என்பதாகவும் இந்தப் படத்தை வாசிக்கலாம். முதல் நாள் மொத்தக் குழுவினரும் நண்பகல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது பேருந்தின் ஜன்னல் சத்தத்துடன் கிறீச்சிடுவதை அடுத்துத்தான் சுந்தரம் இடைவழியில் இறங்குகிறான். அவனது ஆழ்ந்த உறக்கமும் கனவும் தொடங்குகிறது. அப்படிக் கருதலாம்.

அடுத்த நாள் முடித்திருத்தும் கடையில் தனது முகத்தைக் கண்ணாடியில் கண்டு சுந்தரம் அதிர்ச்சியடையும் இடத்தில் அதே கிறீச்சிடும் ஒலி வருகிறது. அதாவது, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஜேம்ஸ் எழுந்துகொள்கிறான். இப்படி வாசிக்கலாம்.

இன்னொரு சாத்தியமும் இருக்கிறது. அது ‘எல்லாமே நாடகம்’ என்பதாகும். இவர்கள் அனைவரும் சாரதா தியேட்டர்ஸ் எனும் நாடகக் குழுவினர். அது பேருந்தின் முகப்பில் எழுதியிருக்கிறது. அது படத்தின் இறுதிக் காட்சியில்தான் தெரியவரும். படத்தில் அந்தப் பேருந்தும் ஒரு பாத்திரம். ஆனால், அது படம் நெடுகிலும் பக்கவாட்டில் மட்டுமே காட்டப்படும். படத்தில் இன்னொரு சூட்சமமும் இருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளும் நாடக மேடையில் நிகழ்த்தப்படுவதைப் போல் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது காமிரா நிலையாக இருக்கும். கதை மாந்தர்கள் மேடை நடிகர்களைப் போல நகர்ந்துகொண்டிருப்பார்கள். ஒரு நாடகக் கலைஞனான ஜேம்ஸ் ஒரு நாடகமாகவே இந்தக் கதையை நிகழ்த்திப் பார்க்கிறான் என்பதாகவும் இந்தப் படத்தை வாசிக்கலாம். உலகம் ஒரு நாடக மேடை, அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்கிற ஷேக்ஸ்பியரின் வசனமும் படத்தில் இடம்பெறுகிறது.

இன்னும் பலவிதமாகவும் இந்தப் படம் வாசிக்கப்படக்கூடும். அதற்கான எல்லா அழகியல் சாத்தியங்களையும் இந்தப் படத்திற்குள் பொதிந்துவைத்திருக்கிறார் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரி. எனினும் என்னைக் கவர்ந்த அம்சம் இந்தப் படத்தின் கதை ஒரு தமிழ்க் கிராமப் பின்புலத்தில், தமிழர் வாழ்வின் ஊடாகவும் தமிழர்தம் கலைகளின் வாயிலாகவும் சொல்லப்படுகிறது என்பதாகும்.

தமிழ் வணக்கம்

படம் ஒரு திருக்குறளில் தொடங்குகிறது. அது, 

உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

ஒரு வகையில் இந்தக் குறளின் விளக்கவுரைதான் படம். சித்தர் மரபை அடியொற்றி கண்ணதாசன் எழுதிய ‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே’ என்கிற பாடல் பேருந்தில் ஒலிக்கிறது. அது அடுத்து விரியப்போகும் கதைக்களனுக்கு பார்வையாளனைத் தயாராக்குகிறது.

சுந்தரத்தின் வீட்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. அதுவும் படத்தில் ஒரு பாத்திரம். அதன் முன் எந்நேரமும் கால் நீட்டி அமர்ந்திருக்கிறார் சுந்தரத்தின் பார்வையற்ற அம்மா. சுந்தரம் வீட்டிற்குள் நுழைகிறபோது ‘ரத்தக் கண்ணீர்’ படம் ஓடுகிறது. தொடர்ந்து இடம்பெறும் விளம்பரங்களும், பாடல்களும் இன்னபிற படக்காட்சிகளுமே படத்தின் பின்னணி ஒலிக்கோர்வையாக அமைகின்றன.

‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’, ‘பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘இறைவன் இருக்கின்றானா’, ‘வீடுவரை உறவு’ முதலான பாடல்கள் பொருத்தமான இடங்களில் பொருள் சேர்க்கின்றன. இறுதிக் காட்சியில், இரண்டாம் நாள் நண்பகல் உறக்கத்திலிருந்து விழிக்கும் சுந்தரம், ஜேம்ஸாகிவிடுகிறான்.

தன் குழுவினரோடு பேருந்தை நோக்கிப் போகிறான். அந்தக் காட்சி ஓர் ஊர்வலத்தை ஒத்திருக்கிறது. பின்னணியில் ‘கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன’ ஒலிக்கிறது. காணமல்போன சுந்தரத்தின் இறுதி ஊர்வலமாக அந்தக் காட்சியை வாசிக்கலாம். 

ஒரு காட்சியில் இடைநின்றுபோன பேருந்தின் முன் விளையாடும் பிள்ளைகளை அம்மா அதட்டுவாள். இந்த ஊரில் உங்களைப் பிடித்துக்கொண்டுபோய் பிச்சை எடுக்க வைத்துவிடுவார்கள் என்பாள். என் வாட்ஸப் நண்பருக்கு மலையாளிகள் மீது இருக்கும் ஒவ்வாமை, அந்தப் பாத்திரத்துக்குத் தமிழர்களின் மீது இருக்கிறது. இதைத்தான் இயக்குநர் கலைத்துப்போடுகிறார். வேதனை எல்லோருக்கும் பொதுவானதுதானே! படத்தில் இப்படி ஒரு வசனம் வருகிறது. அந்தத் தமிழ்க் கிராமமே மலையாளப் பயணிகளுக்கு ஆதரவாக இருக்கிறது.

அப்போது தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையிலான நீண்ட எல்லைக்கோடு இல்லாதாகிறது. வள்ளுவரும் பட்டினத்தாரும், கண்ணதாசனும் சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் எம்.எஸ்.விஸ்வநாதனும் அந்தக் கலைந்த கோடுகளுக்குத் தத்துவார்த்தப் பொருள் தருகிறார்கள். இரண்டு சமூகத்தினரும் சுந்தரமும் ஜேம்ஸும் போல ஒரே உருவத்திற்குள் உறையும் இரண்டு பிரதிமைகள் ஆகிறார்கள்.

https://www.arunchol.com/mu-ramanathan-on-nanpakal-nerathu-mayakkam

On 4/3/2023 at 00:33, Kavi arunasalam said:

 

தலைக்கூத்தல்பார்த்தீர்களா? Netflix இல் இருக்கிறது

நான் கடந்த வாரம் பார்த்தேன். 

நான் அந்த குடும்பத்தின் / சமுத்திரக் கனியின் மனைவியின் பக்கம் தான்.

அந்த மனைவியின் அப்பா ஒரு கட்டத்தில் கூறுவார் "தனக்கு இப்படி நேருமாயின் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு மகனிடம் கூறியுள்ளேன் என்று". நானும் இதனை என் இரு பிள்ளைகளிடம் பல தடவைகள் கூறியுள்ளேன்.

நீங்கள் 'இரட்ட" படம் பார்த்தீர்களா? நெட்பிளிக்ஸ் இல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2023 at 03:33, நிழலி said:

அந்த மனைவியின் அப்பா ஒரு கட்டத்தில் கூறுவார் "தனக்கு இப்படி நேருமாயின் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு மகனிடம் கூறியுள்ளேன் என்று". நானும் இதனை என் இரு பிள்ளைகளிடம் பல தடவைகள் கூறியுள்ளேன்.

மற்றவர்களுக்கு பாரமாக இருக்கமாட்டேன், அதற்கு பல வழிகள் யோசித்து வைத்துள்ளேன்,😎

On 18/3/2023 at 03:33, நிழலி said:

நீங்கள் 'இரட்ட" படம் பார்த்தீர்களா? நெட்பிளிக்ஸ் இல் உள்ளது.

😂😂 - அந்தளவுக்கு கொண்டாடும் படமில்லை - ஒருக்க பார்க்கலாம் பொழுது போகாவிடின்🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 14:33, நிழலி said:

அந்த மனைவியின் அப்பா ஒரு கட்டத்தில் கூறுவார் "தனக்கு இப்படி நேருமாயின் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு மகனிடம் கூறியுள்ளேன் என்று". நானும் இதனை என் இரு பிள்ளைகளிடம் பல தடவைகள் கூறியுள்ளேன்.

இதை எனது மகள் எப்போதோ தானாகவே கூறிவிட்டாள்.

எனவே யோசிக்கத் தேவையில்லை என்றே எண்ணுகிறேன்.

2 hours ago, உடையார் said:

மற்றவர்களுக்கு பாரமாக இருக்கமாட்டேன், அதற்கு பல வழிகள் யோசித்து வைத்துள்ளேன்,😎

உடையார் எத்தனை வழிகளை யோசித்து வைத்திருந்தாலும்

ஒன்றைத் தன்னும் எம்மால் செயல்படுத்த முடியாமல் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 20:33, நிழலி said:

நீங்கள் 'இரட்ட" படம் பார்த்தீர்களா? நெட்பிளிக்ஸ் இல் உள்ளது.

பார்த்தேன். படம் பிடித்திருக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.