Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானே நானா ? --சுப.சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                   நானே நானா ?
                                                                   --சுப.சோமசுந்தரம்   
        

இயன்றவரை மற்றவர்களைச் சாராமல் வாழ வேண்டும்; சொந்தக் காலில் நின்று பழக வேண்டும் என்று இளம் வயதிலிருந்து சொல்லி வளர்க்கப்பட்டது உண்மைதான். அந்த "இயன்றவரை" சொல்லப்பட்டதன் காரணம் நாம் அப்பருவத்தில் பெற்றோரையும் உற்றோரையும் சார்ந்து இருத்தல் இன்றியமையாததால் என்றும் சொல்லி இருப்பார்கள். வேறு சிலர் ஒரு படி மேற்சென்று "இயன்ற வரை"க்கு இன்னும் சிறந்த காரணங்களைச் சொல்லி இருக்கலாம் - உழவரைச் சாராது உணவில்லை, நெசவாளரைச் சாராது உடுக்கையில்லை என்று பல. கொடியானது கொழுகொம்பைச் சார்ந்து நிற்பது இயற்கை நீதியானது போல் ஒரு காலகட்டம் வரையிலாவது பெற்றோரைச் சார்ந்திருத்தல் இயற்கை முறையாதலால், அஃது இங்கு பேசுபொருளாக வேண்டியதில்லை. அந்த சொந்தக் காலைத் தந்தவர் அவர்தாமே ! மற்றபடி உழவர் போன்று சமூகத்திற்கான தொழில் முனைவோர் "வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே" என்று நம்மிடம் பாடல் பெற்றாலும், அன்னாரும் நம்மை உள்ளடக்கிய சமூகத்தால் கொள்கையளவில் பேணப்படுவதால் அவர்தம் கால்களிலோ தோளிலோ நாம் நிற்பதாய்க் கொள்ள வேண்டியதில்லை - "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்ற அளவிலேயே உழவரையும் இன்ன பிறரையும் சமூகம் வஞ்சித்தபோதும் கூட.                   மேற்கூறியவற்றையெல்லாம் தாண்டி, பின்வரும் எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் எனக்காக யாரும் நிற்கவில்லையா ? எனக்கு நெருங்கிய தொடர்பு இல்லாதோர் கூட தம் தோளில் எப்போதாவது என்னை ஏற்றி நிறுத்தவில்லையா ? உண்மையில் என் சொந்தக்காலில் நின்றுதான் என்னால் வாழ முடிந்ததா ? இக்கேள்விகளுக்கு பதிலாக "இல்லை, இல்லை, இல்லவே இல்லை" என்ற உரத்த குரல் எட்டுத் திக்குகளிலிருந்தும் என் செவிப்பறையைத் தாக்குகிறதே ! இந்த அறுபத்துமூன்றாம் அகவையில் எனது மனக்கண்ணில் காட்சிகள் வேகமாக விரிகின்றனவே ! அக்காட்சிகளில் தோன்றும் பாத்திரங்களின் நிஜப்பெயர்கள் வாசிக்கப்படுவது ஒரு கட்டுரைக்கான மரபு இல்லை என்பதால், வாசிப்போர் அவற்றைக் கற்பனைப் பெயர்களாய்க் கொள்ளலாம். பாத்திரங்கள் நிழல்கள் அல்ல; நிஜங்களே ! இவர்களைப் போன்ற பாத்திரங்கள் உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அவ்வப்போது வந்து போயிருப்பார்கள். உங்களுக்கான உலகம் உங்களை நாயகராய்க் கொண்ட ஒரு நாடக மேடைதானே !
            சமூகத்திற்கு எதையோ கூற நினைத்தவன், தன் கதையை எழுதுவது சரியாக இருக்குமா என்றெல்லாம் யோசிக்காமல் இல்லை. ஒரு மனிதன் தன்னைச் சுற்றிய சமூகத்தையும் தான் பார்த்து உணர்ந்தவற்றையும் எழுதுவதே இயல்பாய் அமையும் என்பது ஒன்று. சான்றோர் பெருமக்கள் தம் சுயசரிதையை எழுதுவது மற்றவர்க்குப் பாடமாய் அமைவது. என்னைப் போன்ற சாமானியன் ஒரு புத்தகமாக அல்லாமல் ஒரு கட்டுரையாகத் தன் அனுபவப் பகிர்வை அளிப்பது, எங்காவது ஒரு மூலையில் தன்னைப் போன்ற சாமானியருக்குப் பயன்படலாம் என்னும் சின்னச்சின்ன ஆசைகளில் ஒன்றாய் அமைவது. மேலும் இக்கட்டுரை எனக்குத் தோள் கொடுத்தோரை மனதிற் கொண்டு செய்ந்நன்றி அறிதலுமாம்.
            பால்வாடியிலிருந்து (Nursery) முதுகலை வரை என் வீட்டிற்கு அருகில் உள்ள கல்வி நிலையங்களிலேயே பயிலும் பேறு பெற்றவன் நான். கணிதத்தில் ஆய்வுப் பட்டமும் அதன் பின்னர் சில ஆய்வுத்துறைப் பணியுமாக சுமார் பத்து வருடங்கள் தமிழ் மண்ணிற்கு வெளியே வாழ்ந்து விட்டு மீண்டும் சொந்த ஊரான நெல்லையிலேயே பல்கலைக்கழகப் பேராசிரியனாய் வாழும் பெரும்பேறு பெற்றவன். வனத்தில் மேய்ந்து இனத்தில் அடைந்தவன். கல்லூரிக் காலம் வரை நான் நானாய் ஆளாகத் தம் பங்களிப்பைப் பெரிதும் நல்கிய பேரா. சோதிமணி போன்றோரை இதற்கு முன் ஏதோ தலைப்புப் பற்றி எழுதும்போது நினைவு கூர்ந்து இருக்கிறேன். எனவே என் ஊரை விட்டுச் சென்று வனத்தில் மேய்ந்த போதும், பின்னர் ஊர் திரும்பி இனத்தில் அடைந்த போதும் எனக்கு செயற்கைக் கால் தந்தோ தோளில் தூக்கிச் சுமந்தோ தெய்வம் என்பதோர் சொல்லுக்குப் பொருளாய் நின்றார்களே, அவர்களை இதனை வாசிக்கும் உங்கள் கண்ணில் காட்டுவது இப்போது நான் சிரம் மேற்கொண்ட பணி. அப்போது வாழ்வில் நீங்கள் பார்த்த தெய்வங்கள் உங்கள் கண்முன் தோன்றினால் அது இயற்கை நிகழ்வு.
           முதுகலைப் படிப்பிற்குப் பின் முதன்முதலாக வெளியூருக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு அமைந்தது. எடுத்த எடுப்பில் பல மாநிலங்களைத் தாண்டி கான்பூரில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் (..டி) கணிதத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பு. எனக்கு அமைந்த ஆய்வு வழிகாட்டி பேரா.உதயபானு திவாரி அவர்களிடம் கணிதம் மட்டுமல்லாமல் வாழ்வியலும் நிரம்பவே கற்றேன். வாழ்வியலை வாய்மொழியாக அல்லாமல் வாழ்ந்து காட்டியே கற்பித்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர் சான்றோர். வேறு சில பேராசிரியர்களும் வாழ்வியலைக் கற்பித்த சான்றோராய் அமைந்தமை அந்நிறுவனத்தின் சூழற் சிறப்பு. அங்கு ஒன்றிரண்டு நிகழ்வுகளை நினைவுகூர்வது இக்கட்டுரைத் தலைப்பிற்கு பொருந்தி வரும்.
              இப்போதெல்லாம் ஆய்வுப்பட்டப் (பி.எச்.டி) படிப்பிற்கான உதவித்தொகை ஐந்து வருடங்களுக்கே என்பது எங்கும் வரையறுக்கப்பட்டது. ஆனால் அப்போது நான் படித்த அந்நிறுவனத்தில் கால வரையறை இல்லை. ஆய்வு வழிகாட்டியின் பரிந்துரையின் பேரில் ஐந்து வருடங்களுக்கு மேலாகவும் உதவித்தொகை வழங்கப்பட்டது. பெரும்பாலானோர் இயன்றவரை விரைவாக முடித்துவிட்டுக் கிளம்பி விடுவர். அரிதாக சிலருக்கு அதிக கால அவகாசம் எடுக்கலாம். அச்சூழ்நிலையில் திடீரென்று ஐந்து வருட வரையறையைக் கொண்டு வந்தது நிர்வாகம். அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தினோம். அப்போது எங்கள் துறைத் தலைவராய் இருந்த பேரா.போர்வங்கர் என்னை அழைத்து, "உனக்குத் தேவை ஏற்பட்டால் ஏதாவது ஆய்வுத் திட்டத்தில் (project) உன்னை அமர்த்திக் கவனித்துக் கொள்ள நாங்கள் இருக்கிறோமே ! நீ ஏன் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் ?" என்று என் மீது உள்ள பரிவினால் கேட்டார். அப்போது எனது செயல் திறனைக் கண்டு என்மீது அவருக்கு நம்பிக்கையும் அபிமானமும் ஏற்பட்டிருக்கலாம். நான் அவர் சொன்னதை ஏற்கவில்லை. "போராட்டம் என்பது ஒருவன் தனக்காக மட்டும் நிகழ்த்துவது அல்ல" என்று அவருக்கு நான் பாடமும் எடுக்கவில்லை. "உனக்கு நாங்கள் இருக்கிறோம்" என்கிற குரல் வானுறையும் தெய்வத்தின் குரல் என்பது மட்டுமே இங்கு நான் பதிவு செய்ய எண்ணுவது.
             ஆய்வுப் பட்டத்திற்கான எனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த பின் நான் வேண்டிக் கேட்காமலேயே எனது ஆய்வு வழிகாட்டியான பேரா.திவாரி அவர்கள் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு என்னைப் பரிந்துரை செய்திருந்தார். அதையொட்டி எனக்குத் திருமணமும் ஆனது. நான் ஒரு வேலையில் சேரும் முன்பே என் தம்பிமார் பணியில் அமர்ந்து விட்டதால் எனக்கு உடனே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை அன்று இருந்தது. அல்லது சமூக விதிகளைத் தூக்கியெறியும் அளவு அன்று நான் வளரவில்லை என்றே சொல்லலாம். திருமணத்திற்காக சொந்த ஊரான நெல்லைக்கு வந்தவன் சுமார் நான்கு மாதங்கள் ஊரிலேயே தங்கி விட்டேன். நீண்ட நாட்கள் தேனிலவைக் கொண்டாடிவிட்டேன் என்று கூடச் சொல்லலாம். அந்த நேரத்தில், எனது பேராசிரியர் எனக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்த பஞ்சாப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி எனக்கு கிடைக்கப்பெற்றது. அந்த நேரத்தில் பஞ்சாபில் அமைதியின்மை நிலவியதாலும், எனக்கு அப்போது திருமணம் ஆகிவிட்டபடியாலும் அங்கு செல்ல வேண்டாம் என்று பெற்றோரும் உற்றோரும் வலியுறுத்தவே, அப்பணியை ஏற்க இயலவில்லை என்று பல்கலைக்கழகத்திற்கு எழுதிப் போட்டு விட்டேன். அப்போது எங்கள் வீட்டில் தொலைபேசி வசதியெல்லாம் இல்லாததாலும், கடிதப் போக்குவரத்து சில சமயங்களில் இரண்டு வாரங்கள் ஆகும் என்பதாலும் அப்பணிக்குப் பரிந்துரை செய்த என் பேராசிரியரிடம் எந்த யோசனையும் நான் கேட்கவில்லை. திருமணமாகி நான்கு மாதங்கள் கழித்து நான் பேரா.திவாரி அவர்கள் முன் நின்ற போது, இத்தனைக் காலம் கடந்து போய் நின்றதற்காக அவருக்குக் கோபம் வரவில்லை. ஆனால் ஒரு சிறந்த பல்கலைக்கழகப் பணியை உதறித் தள்ளியதற்காகப் பொரிந்து தள்ளிவிட்டார். நியாயமான கோபம். பின்னே, பொறுப்பில்லாமல் நான் செயல்பட்டமைக்கு ஆரத்தி எடுத்தா வரவேற்பார் ? மேலும் தாம் பரிந்துரை செய்த வேலையை உதறிவிட்டேன் என்பதை விட இவனுக்கு விரைவில் வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கமே அவரிடம் தொனித்தது. இரண்டு நாட்கள் கழித்து என்னை அழைத்து, "பெங்களூருவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சிறப்பு ஆய்வுப் பணிக்கான மனுவை அனுப்பு. நான் பரிந்துரை செய்கிறேன். குறுகிய காலப் பணி என்றாலும் உன் ஊருக்கு ஓரளவு அருகில் இருக்கும் வாய்ப்பு அமையும்" என்றாரே பார்க்கலாம். நான் பிரமித்து நின்றதைப் பார்த்து, "நீ இங்கே இருந்த ஆறு வருடங்களில் கடைசியாக உன் தரப்பில் ஏதோ குறை ஏற்பட்டதற்காக அப்படியே விட்டு விட முடியுமா ? போனது போயிற்று, விடு !" என்ற தொனியில் பேசினார். உங்கள் மதங்களில் உள்ள புனித நூல்களில் சொல்லப்பட்ட நல்லவை அனைத்தும் அவை பற்றிய எந்த வாசிப்புமின்றி எனக்கு விளங்கலாயின.
            களம் மாறியது. காட்சி மாறியது. சான்றோர் பெருமக்கள் யாராவது வந்து எனக்குத் தோள் கொடுத்த கதை மட்டும் மாறவில்லை. தனிப்பட்ட முறையில் தெரிந்தோ தெரியாமலோ எந்தக் காரணமுமின்றி நமக்குத் தீங்கிழைப்போர் என்று சிலர் இருக்கலாம்; நம் வாழ்வில் அவ்வப்போது வந்து போகலாம். ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி நன்றாற்றல் உடையோர் நம்முடன் இருப்பதாலும் அவ்வப்போது வந்து போவதாலுமே நம் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது என்று நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, நான் அடுத்து சென்ற பெங்களூரு புள்ளியியல் நிறுவனத்தின் விருந்தினர் இல்லங்களில், ஓரளவு நீண்ட காலத்திற்குப் பணிபுரிய வருகிறவர்களுக்கு வீடு ஒதுக்குவதில்லை என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருந்தது. நான் வெளியில் வீடு பார்க்க ஆரம்பித்தபோது பேரா.அல்லாடி சீதாராம், பேரா.சுந்தர் இருவரும், "அப்படிச் செய்தால் வீட்டு வாடகை முன் பணத்திற்கு இதுவரை உன்னிடம் உள்ள சேமிப்பு முழுவதும் கரைந்து போகும். நீ இங்கே வாங்கப் போகும் உதவித்தொகை முழுவதும் வாடகைக்கும் இதர மாதாந்திர செலவினங்களுக்கும் சரியாய்ப் போகும்" என்று எனக்காக யோசித்ததும், அந்நிறுவனத்தின் உரிய களத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியதும் பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றிய மாண்பு. அங்கு பணிபுரிந்த பேரா.சுபாஷிஸ் நாக் அவர்கள் ஒரு நாள் என்னை அழைத்து, "இந்நிறுவனத்தில் உனக்குத் தரப்பட்ட காலம் நான்கு மாதங்களில் முடிவுக்கு வருகிறது. மேற்கொண்டு உனது திட்டம் என்ன ?" என்று கேட்டதும், "இத்தாலியில் முன்பு நான் பணிபுரிந்த நிறுவனத்தில் ஆய்வுப் பணிக்கு மனுச் செய்வாயானால் நான் உனக்காகப் பரிந்துரைக் கடிதம் அனுப்புகிறேன்" என்று அவர் மேலும் கூறியதும் கனவில் நடந்தவை போல் தோன்றுகின்றன. தமக்கு வேண்டியவற்றைத் தத்தம் இறைவனிடம் வேண்டிப் பெறும் மனிதர்களிடம் நான் கேட்க விரும்புவது, "அவன் பெயர் இறைவன் என்றால், வேண்டிக் கேட்காமலே எனக்கும் உங்களுக்கும் நல்லவை ஆற்றுவோருக்கு இவ்வுலகில் என்ன பெயர் ?". அம்மனிதர்கள் மூலமாக இறைவனே ஆற்றினான் நற்செயலை என்று அவர்கள் சொல்வதெல்லாம் எனக்குப் புரிவதில்லை.
             மும்பை டாடா நிறுவனம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம் என்று சிறந்த கல்வி நிலையங்களில் பணியாற்றிய பேரா.சோ.குமரேசன் அவர்கள் ..டி கான்பூர் கணிதத் துறைக்கு ஆறுமாத காலத்திற்கு வருகைதரு சிறப்புப் பேராசிரியராக வந்த போது, அங்கு கணித மாணவனாக இருந்த எனக்கு அவருடன் ஆசிரியர்-மாணவன் என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டது. கணிதத்திலும், பொதுவாக அறிவுலகிலும், கசடறக் கற்றுணர்ந்த சான்றோராய்த் திகழும் அவரிடம் ஒன்று இரண்டு முறை பாராட்டு பெற்றிருக்கிறேன் என்பதை அடக்கமின்றி இங்கு நான் பதிவு செய்துதான் ஆக வேண்டும். பின்னாளில் தேசிய அளவில் கணிதத்தில் உயர்கல்வி மாணவருக்கான பயிற்சி தரும் ஒரு அரசுசார் இயக்கத்தின் இயக்குனர் ஆனார் அவர். அம்மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்தவரும் அவரே. வெற்றிகரமாக  முப்பத்தியோராவது ஆண்டாக அதனை இயக்கி வருகிறார் என்பது இத்தருணத்தில் தேவையான கூடுதல் தகவல். அவ்வியக்கம் ஆரம்பித்து ஆறாவது ஆண்டு தற்செயலாக அவரை நான் சந்தித்தபோது, "அட, உங்களை மறந்து விட்டேனே ! அடுத்த ஆண்டு நீங்கள் இந்தத் திட்டத்தில் பயிற்றுநராக வரவேண்டும்" என்று உரிமையோடு பணித்தார். எனக்கு ஓரளவு இருந்த கணித அறிவுக்கும், கற்பிக்கும் ஆற்றலுக்கும் அவர் தந்த பெரிய அங்கீகாரம் அது. அதன் வாயிலாக நாட்டின் எந்த மூலையிலிருந்தும் வரும் மாணாக்கர்க்கும் பயிற்றுவிக்கும் வாய்ப்பு. அன்றிலிருந்து இன்று வரை அவ்வியக்கத்தில் அவரும் அவரைச் சார்ந்தோரும் என்னை இணைத்து இருப்பது எனக்கான பேறுஉயர் ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் இருந்து வரும் பேராசிரியர் பெருமக்களும் அங்கு எனக்கு அன்பும் மரியாதையும் தருவது பேரா. குமரேசன் எனக்குப் பெற்றுத் தந்த கௌரவம். அவர் என்னை ஒரு ஆசிரியனாய்க் கண்டுபிடித்த பிறகுதான் நான் என்னையே கண்டுபிடித்தேன்.   அங்கீகாரம், கௌரவம் இவற்றையெல்லாம் எதிர்பாராமல் வாழ்வதே சிறந்த சமூக வாழ்வு என்பது எனது இடதுசாரித் தோழர்களிடமும், பேரா.குமரேசனிடமும் எனக்குக் கிடைத்த பாலபாடம். இருப்பினும் ஒருவர் நமக்குப் பெற்றுத் தந்த அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் ஒரு கணம் மனத்திரையில் ஓட்டிப் பார்க்காமல் எப்படிக் கடந்து செல்வது ? இதற்கு முன் நான் குறிப்பிட்ட மானிட தெய்வங்கள் எனது அடிப்படைத் தேவையான பணி முதலானவற்றைப் பெற்றுத் தந்தார்கள் என்றால், பேரா. குமரேசன் அறிவுலகில் எனக்கும் ஒரு இடத்தைப் பெற்றுத் தந்த சாமி.
            பல்கலைக்கழகத்தில் பணியமர்ந்த பின் அறிஞர் பேரா. தொ. பரமசிவன் எனக்குள் இருந்த இலக்கிய ரசனைக்குத் தீனி போட்டு வளர்த்தார். சமூகம் சார்ந்த விஷயமானாலும் இலக்கியமானாலும் என்னை எழுதச் சொன்னதும், அதற்குச் சரியான பின்னூட்டம் அளித்து ஊக்குவித்ததும் அவரை எனக்கு நாட்டார் தெய்வமாக்கின. என்னை அவர் சீடனாக ஏற்றது எந்த ஒரு பல்கலைப் பட்டத்தினும் பெரிது. அவர் தந்த ஏணியில் கடைசிப் படியில் நிற்கும் சீடன் நான்.
          ஆங்கிலப் பேராசிரியர் தில்லைநாயகம் அவர்கள் என்றும் மாறாத நட்புடன் இன்றும் என்னை வழிநடத்துவது என் உயிர் உள்ளவரை நான் வேண்டும் வரம்.
            எனக்கான பணியும் அங்கீகாரமும் நான் மேலே குறிப்பிட்ட சான்றோரால் எனக்குக் கிடைத்தபின் பரந்து பட்ட அளவில் சமூகத்திற்கானவனாக என்னை நிலைநாட்டும் வேட்கை என்னுள் தோன்றியது. எந்தப் பலனும் எதிர்பாராமல் என்னை உருவாக்கிய அச்சான்றோர் பெருமக்களே இவ்வேட்கையை நேராகவோ மறைமுகமாகவோ என்னிடம் உருவாக்கினரோ என்னவோ ! மாணவர் சமூகத்திற்கான பணியும் வருங்கால சமூகத்தை உருவாக்கும் சீரிய பணி என்ற போதும், மேலும் விரிவான சமூகப் பணிகளில் ஓரளவு பங்களிக்க என்னை ஈடுபடுத்தியவர்கள் எனது மூட்டா பேரியக்கத் தோழர்களே ! எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்க வேண்டுமென்றால் தோழமைப் பேராசிரியர்கள் ஜேம்ஸ் வில்லியம்ஸ், சுப்பாராஜு, ராதாகிருஷ்ணன், மனோகரா ஜஸ்டஸ் என்று பட்டியல் நீளமானது. எனவே தோழர்களின் தலையாய பிரதிநிதிகளாய் நான் முன்னிறுத்த விழைவது பேரா. பொன்னுராஜ் மற்றும் பேரா. நாகராஜன் இருவரையும். தோழர் பொன்னுராஜ் எனக்கு வயதில் மூத்த குருநாதர் என்றால், தோழர் நாகராஜன் எனக்கு இளைய குருநாதர். அவர்களிடம் நான் படித்த பாடமே எனது துறை தாண்டிய சமூகத்தில் என்னை நான் ஆக்கியது. மனிதர்களில் பெரும்பாலும் இரண்டு வகைதான் உண்டு போலும். ஒன்று, அதிகார வர்க்கத்திடம் எப்போதும் சரணாகதி நிலையிலேயே வாழும் ரகம்; இன்னொன்று வகையில்லாமல் அவர்களிடம் மோதி வம்பில் மாட்டிக் கொள்ளும் ரகம். தனிப்பட்ட முறையில் அதிகார வர்க்கத்தைத் தாக்காமல் கொள்கை உறுதிப்பாட்டுடன் அவர்களை எதிர்க்க வேண்டிய சூழல் வந்தால், ஒரு தரமான எதிரியாய் நிற்கும் பக்குவத்தை எனக்கு வாழ்ந்து காட்டி சொல்லித் தந்தவர்கள் தோழர்கள் பொன்னுராஜும் நாகராஜனும். நான் பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்றபின் எப்போதாவது அவ்வளாகத்திற்குள் செல்லும்போது, "சார், நீங்கள் எங்கள் எல்லோருக்குமாக நின்றீர்கள்" என்று யாராவது சொல்லக்கேட்டு நான் இறும்பூதெய்தும் தருணம் என் கண்ணில் நிழலாடுவது மூட்டா இயக்கத் தோழர்களின் உருவங்களே ! கல்லூரி ஆசிரியர்களின் மனங்களில் கூட எனக்கு ஒரு சிறந்த இடத்தை பெற்றுத் தந்தவர்களும் அவர்களே ! இவ்வுலகம் இதுவரை நிலை பெற்றுள்ளது என்றால், தமக்கென மட்டும் வாழாமல் பிறருக்குமாக வாழ்வோரால்தான் என்னும்
"உண்டாலம்ம இவ்வுலகம் .............
................................................................
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே"
                     (புறநானூறு பாடல் 1)
என்ற புறநானூற்று முதல் பாடலின் பொருளையே எனக்கு உணர்த்தியோர் அத்தோழர் பெருமக்களே !
            எனவே கணித உலகானாலும், இலக்கிய உலகானாலும், சமூக வாழ்வானாலும் சான்றோர் பெருமக்களின் தோள்களிலோ அவர்கள் தந்த கால்களிலோ நின்று பழகிய நான், 'நான்' என்று சொல்லிக் கொள்வது யாரை ? இவ்வுலக வாழ்வில் நான் எங்கே நிற்கிறேன் ? நான் தூக்கி நிறுத்தப்பட்டதைப் போல என்னால் இயன்றவரை ஏனையோரைத் தூக்கி நிறுத்தினால்தானே நான் நானாக நிற்க முடியும் ? அப்படி நான் நிறுத்தினால் அவர்களில் யாராவது வந்து சாட்சி சொல்வார்கள். அதுவே இவ்வுலகில் நான் வந்து சென்றதற்கான சுவடு.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

"இவ்வுலகம் இதுவரை நிலை பெற்றுள்ளது என்றால், தமக்கென மட்டும் வாழாமல் பிறருக்குமாக வாழ்வோரால்தான்" "இவ்வுலக வாழ்வில் நான் எங்கே நிற்கிறேன் ? நான் தூக்கி நிறுத்தப்பட்டதைப் போல என்னால் இயன்றவரை ஏனையோரைத் தூக்கி நிறுத்தினால்தானே நான் நானாக நிற்க முடியும் ? அப்படி நான் நிறுத்தினால் அவர்களில் யாராவது வந்து சாட்சி சொல்வார்கள். அதுவே இவ்வுலகில் நான் வந்து சென்றதற்கான சுவடு"  

எனக்கான சுவடுகளை நான் ஏற்படுத்திவிட்டேன், அவர்கள் இன்னும் பல சுவடுகளை உருவாக்குவார்கள்👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இவ்வுலகம் இதுவரை நிலை பெற்றுள்ளது என்றால், தமக்கென மட்டும் வாழாமல் பிறருக்குமாக வாழ்வோரால்தான் என்னும்

"உண்டாலம்ம இவ்வுலகம் .............
................................................................
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே"
                     (புறநானூறு பாடல் 1)
என்ற புறநானூற்று முதல் பாடலின் பொருளையே எனக்கு உணர்த்தியோர் அத்தோழர் பெருமக்களே !          

அதுவே இவ்வுலகில் நான் வந்து சென்றதற்கான சுவடு.

நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை 10

நேரிசை வெண்பா

நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10 மூதுரை

பொருளுரை:

நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால் வழியாகச் சென்று அருகாமையிலுள்ள புற்களுக்கும் கசிந்து பசுமையைத் தரும்.

அதுபோல, நீடித்த இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய் யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.

கருத்து:

நூற்றுக்கு ஒருவன் நல்லவனாக இருந்தால் கூட அவனைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர்.

https://eluthu.com/kavithai/372081.html

எனக்கு யாழ் பல சான்றோர்களை அவர்களின் மாண்பை அறிய உதவியிருக்கிறது.

பேராசிரியர் சுப.சோமசுந்தரம் ஐயாவிற்கு நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

கடனில்லா கஞ்சி

கால் வயிறு போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கட்டுரை அய்யா.

9 hours ago, சுப.சோமசுந்தரம் said:

தமக்கு வேண்டியவற்றைத் தத்தம் இறைவனிடம் வேண்டிப் பெறும் மனிதர்களிடம் நான் கேட்க விரும்புவது, "அவன் பெயர் இறைவன் என்றால், வேண்டிக் கேட்காமலே எனக்கும் உங்களுக்கும் நல்லவை ஆற்றுவோருக்கு இவ்வுலகில் என்ன பெயர் ?". அம்மனிதர்கள் மூலமாக இறைவனே ஆற்றினான் நற்செயலை என்று அவர்கள் சொல்வதெல்லாம் எனக்குப் புரிவதில்லை.

👌

தமக்கு வேண்டியவற்றை  இறைவனிடம் தினம் தினம் உருகி வேண்டிக் கொள்வார்கள். நல்ல மனிதர்களால் அவர்கள் தேவை நிறைவேற்றி வைக்கபடும் போது இறைவன் ஓசி விளம்பரம் தேடிகொள்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இயன்றவரை மற்றவர்களைச் சாராமல் வாழ வேண்டும்; சொந்தக் காலில் நின்று பழக வேண்டும் என்று இளம் வயதிலிருந்து சொல்லி வளர்க்கப்பட்டது உண்மைதான். அந்த "இயன்றவரை" சொல்லப்பட்டதன் காரணம் நாம் அப்பருவத்தில் பெற்றோரையும் உற்றோரையும் சார்ந்து இருத்தல் இன்றியமையாததால் என்றும் சொல்லி இருப்பார்கள். வேறு சிலர் ஒரு படி மேற்சென்று "இயன்ற வரை"க்கு இன்னும் சிறந்த காரணங்களைச் சொல்லி இருக்கலாம் - உழவரைச் சாராது உணவில்லை, நெசவாளரைச் சாராது உடுக்கையில்லை என்று பல. கொடியானது கொழுகொம்பைச் சார்ந்து நிற்பது இயற்கை நீதியானது போல் ஒரு காலகட்டம் வரையிலாவது பெற்றோரைச் சார்ந்திருத்தல் இயற்கை முறையாதலால், அஃது இங்கு பேசுபொருளாக வேண்டியதில்லை.

மற்றவர்களை சாராமல் வாழ வேண்டும் என நாம் கங்கணம் கட்டினாலும் இயற்கை நம்மை மற்றவர்களை சார்ந்து வாழும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தும்.

பேராசியர்!  உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி  :folded_hands:

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய ஒரு ஆக்கம் சு.ப. சோமசுந்தரம் ஐயா…!

சுவடுகளை விட்டுச் செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை..!

ஆனால் மற்றவர் மனங்களில் எனது நினைவுகள் நிலைக்குமெனில் நான் ஒரு பாக்கியவான் என்றே என்னைக் கருதுகின்றேன்..!

எவ்வளவோ அக்கினிக் குஞ்சுகள் எனது வாழ்க்கையிலும் தங்களை ஆகுதியாக்கியுள்ளன…! அவர்களின் நினைவுகள் எனது கல்லறை வரை என்னுடன் பயணிக்கும்..! நன்றி…!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள ஒரு ஆக்கம்.........நன்றி ஐயா ......!  🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.