Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருப்பையா: பெரம்பலூர் அருகே பொட்டல் காட்டை பறவைகள் வந்து செல்லும் நந்தவனமாக மாற்றிய தனி ஒருவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கருப்பையா
 
படக்குறிப்பு,

கருப்பையா

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன்.க
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தனி மரம் தோப்பாகாது, ஆனால் தனி மனிதனால் தோப்புகளை உருவாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் 76 வயது கருப்பையா.

தன்னுடைய தொடர் உழைப்பால் பல்வகை பறவைகள் வந்து செல்லும் சரணாலயம் போன்ற சூழலை தன்னுடைய பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் இவர் உருவாக்கியிருக்கிறார்.

தனி மனிதன் பணம் இருந்தால் வீட்டை கட்டுவார்கள், வாகனம் வாங்குவார்கள். ஆனால் பணமில்லாத தனி மனிதன் 40 வருடங்களுக்கும் மேலாக பாடுபட்டு பல்வேறு பறவைகளுக்கான வீடுகளை உருவாக்கிய நிகழ்வைத்தான் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

நிழல் தரும் போர்வைகளாக மரங்கள்

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் இருந்து கீழப்புலியூர் நோக்கி சென்றோம். ஊரின் முன்பாகவே மிக பெரிய வனப்பகுதி போன்ற மரங்கள் நிறைந்த சூழல் நம்மை வரவேற்றது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக குளிர்ந்த போர்வையை அளித்தது அந்த இடம்.

அங்கிருந்த ஆலமரத்தின் நிழலில் வாகனத்தை நிறுத்தி இறங்கினோம். அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பாட்டியிடம் கருப்பையா பற்றி கேட்டபோது நீங்கள் அவர் வைத்து வளர்ந்த ஆலமரத்தின் நிழலில் தான் நிற்கிறீர்கள். நானும் எனது, ஆடுகளும், மாடுகளும் அந்த மரத்தின் கீழேதான் இருக்கின்றோம் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அவரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது அதோ சற்று தூரம் நடந்து சென்றால் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருப்பார் என்று கூறினார்.

ஒரு மரம் பல உயிரினங்களின் வீடு

கீழப்புலியூர்
 
படக்குறிப்பு,

சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளிர்ந்த போர்வை அளித்தது போன்ற உணர்வைத் தருகிறது கீழப்புலியூர் கிராமம்.

அங்கிருந்த ஒவ்வொரு மரத்திலும் பல உயிரிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பறவைகள், விலங்குகள் மட்டுமல்லாது பல்வேறு வகை பூச்சி இனங்களும் உள்ளன. தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த கருப்பையா நம்மை பார்த்தவுடன் சற்று இருங்கள் வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறினார்.

கருப்பையா பணியினை முடித்துவிட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

''நான் ஒரு சாதாரணமான மனிதன் என்னால் ஆயிரம் பேருக்கு தினமும் சோறு போட முடியாது, ஆனால் என் வாழ்நாள் முடிவதற்குள் ஆயிர கணக்கில் மரக்கன்றுகளை நட்டு அதை மரமாக்கி பறவைகள் வந்து தங்கும் வீடுகளாக அழகு பார்க்க முடியும். இந்த நம்பிக்கை 25 வயதில் ஏற்பட்டது. அக்கால அரசர்களான சேர, சோழ, பாண்டியர்கள் வழி நெடுகிலும் மரங்களை நட்டு அழகு பார்த்தார்கள். அவர்கள் குதிரைகளிலும் ரதங்களிலும் வரும்பொழுது மர நிழலில் தங்கி இளைப்பாறியே சென்றனர். மேலும் அவர்கள் இயற்கையோடு இணைந்தே வாழ்ந்து வந்தனர். ஆனால் காலமாற்றத்தில் இயற்கையை மனிதன் அபகரிக்க தொடங்கியதன் விளைவாக பல்வேறு இன்னல்களை தொடர்ந்து நாம் சந்தித்து வருகின்றோம்.

இந் நிலையிலிருந்து மாறி நாம் வாழும் இந்த பூமியை மாசற்ற பகுதியாக மாற்றி, வருங்கால தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது எனது சிறிய லட்சியம். அதன் ஒரு பகுதியாக என்னால் இயன்றவரை பல்வகை மரங்களை குறிப்பாக ஆலமரம், அரசமரம், அத்தி மரம் என்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பலன் தரும் மரங்களை அதிகமாக நட்டு பாதுகாத்து வருகின்றேன். 25 வயதில் தொடங்கிய இந்த பணி 76 வயதிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.

அன்று பொட்டல் காடு; இன்று பறவைகள் வந்து செல்லும் வனம்

வாலி கண்டபுரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டரில் உள்ளது கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில். இதைச் சுற்றி 30 ஏக்கர் பரப்பளவு பொட்டல்காடாக பல ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டது. ஆனால் தற்பொழுது எங்கு பார்த்தாலும் மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இந்த மரங்களை வைத்து பாதுகாத்து வளர்த்து மரமாக்கிய பெருமை கருப்பையாவை சாரும் என்கின்றனர் இந்த ஊர் மக்கள்.

ஆலமரம், அரசமரம், நாவல் மரம், வில்வமரம், பூவரசு புளியமரம் என பல்வகை மரங்களை நட்டு அதை பாதுகாத்து தினமும் தண்ணீர் ஊற்றி வருவதே எனது முதல் பணி என்ற அளவில் இன்றளவிலும் தொடர்ந்து செய்து வருகின்றார்.

கோவில் பகுதி மட்டுமல்லாமல் ஊரின் ஏரிக்கரை பகுதி முழுவதும் இவர் நட்ட பல்வகை மரச் செடிகள், ஊர் மக்களை மட்டுமல்ல கோவிலுக்கு வருபவர்களையும் ஆடு மாடு மேய்ப்பவர்களையும் நிழலும் பழமும் தந்து வரவேற்கிறது.

கீழப்புலியூர்

அக்காலத்தில் வாலிகண்டபுரத்தில் இருந்து கீழப்புலியூர் வரும்பொழுது அடர்ந்த வனக்காடுகளை கடந்து தான் வர வேண்டும் என்று எனது முன்னோர்கள் கூறியதை கேட்டு இருக்கின்றேன். இடைப்பட்ட காலத்தில் இப்பகுதியில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டன. அந்த இடத்தில் மீண்டும் மரங்களை உருவாக்கும் முயற்சியின் முதல் படியாக ஆரம்பித்த இந்த இவரின் செயல் தற்பொழுது ஆயிரக்கணக்கான மரங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் ஊரையே பசுமையாக்கி உள்ளது.

பறவை ஆர்வலரும், ஆசிரியருமான கலைச்செல்வன் பிபிசியிடம் பேசிய போது, ’’கீழப்புலியூரில் ஆல மரம், அத்தி, இலுப்பை, வன்னி, பூவரசு, வேம்பு என பல்வகை மரங்கள் காணப்படுகிறது. இதை காண்பதற்கு ரம்யமாக உள்ளது. ஏனென்றால் கால்நடைகள் மேய்ப்பவர்களுக்கு நிழல் மட்டும் தரவில்லை. இங்கு காணப்படும் மரங்களில் மிக அதிக அளவில் பறவைகள் வசிக்கின்றன. சில வந்து செல்கின்றன. கீச்சீட்டு...கத்தும் அந்த குரல்கள் கேட்பதற்கே இனிமையாக இருக்கின்றது. இப்பகுதி மரங்களில் காகம், மைனா, செம்மார்பு குக்குறுவான், மஞ்சள் நிறத்தில் காணப்படும் மாங்குயில், வால் காக்கை, கரிச்சான் குருவிகள், பனங்காடை, கீச்சான், வெண் மார்பு மீன் கொத்தி, புள்ளி ஆந்தை, வல்லூறு, மரங்கொத்தி என பல்வகை பறவைகள் நிறைந்து காணப்படும் பகுதியாக இது உள்ளது. என்னை போன்ற பறவை ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல் மாணவ மாணவியர்கள் வந்து பார்த்து செல்லும் இடமாகவும் இது மாறி வருகிறது’’ என்றார்.

கீழப்புலியூர்
 
படக்குறிப்பு,

ஒவ்வொரு மரத்திலும் பல உயிரிகள் வசிக்கின்றன.

அதிகரித்த விவசாயப் பரப்பு

கீழப்புலியூரை சேர்ந்த சமூக ஆர்வலரும், மருந்தாளருமான அருள்குமார் நம்மிடம் பேசினார்.

‘’எங்கள் ஊர் நான் சிறுவயதாக இருந்த காலத்தில் பொட்டல் வெளி காடாக தான் இருந்தது. நாங்கள் விளையாட நிழல் இருக்காது. ஆனால் தற்பொழுது அப்படியல்ல ஏறக்குறைய 300 முதல் 400 மரங்கள் வரை வளர்ந்து நிற்கின்றது. இதற்கு காரணம் எங்கள் ஊர் கருப்பையா தான். மிக சிறந்த மனிதரான இவர் எங்களை போன்ற இளைஞர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கின்றார். இவர் மரங்கள் நட்டு பாதுகாப்பதை ஒரு காலத்தில் கேலி செய்த இளைஞர்களும் தற்போது ஆர்வமுடன் இணைந்து மரங்களை நடுவதற்கு உதவி செய்து வருகின்றார்கள். இவர் தனி மனிதர் தான்.

இவர் மனைவி இறந்து விட்டார். குழந்தைகளும் இல்லை என்ற போதிலும் இவர் இந்த பணியை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் மிகச்சிறந்த வனப்பகுதியை உருவாக்குவதே எனது பணி என்று எங்களிடம் கூறுவார்’’ என்கிறார் அருள்குமார்.

தொடர்ந்து பேசிய அருள் குமார், ‘’நமக்கு ஆறறிவு உள்ளது நாம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பறவைகள், விலங்குகள் அப்படியல்ல. அவைகளுக்கு யார் தினமும் உணவளிப்பது என்று சிந்திக்கும் வகையில் எங்களிடம் பேசுவார். அத்தோடு நில்லாது அவர் அந்த பணியை சிறப்பாக செய்தும் காட்டினார். எங்கள் ஊர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பகுதிக்கு சரியான விலை இல்லை; யாரும் விலைக்கு கேட்க மாட்டார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது; போட்டி போட்டுக் கொண்டு நிலங்கள் வேண்டும் என்று கேட்கின்றார்கள். இதற்கு காரணம் எங்கள் ஊர் பகுதியில் மரங்கள் அதிகமாக உள்ளதால் மழை வளமும் பெருகி விவசாய நிலப்பரப்பும் கூடியதுதான்.’’ என்றார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக பேசிய கீழப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் தனிஷ்க் குமார், ‘’கீழப்புலியூர் கிராமம் பசுமை நிறைந்த கிராமம் என்பதில் மிகை இல்லை. இங்கு 1800 ஏக்கர் நிலப்பரப்பு விவசாய நிலப்பரப்பாகவே உள்ளது. மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான மரங்கள் இருப்பதால் இங்கு இரண்டு போக விவசாயம் பெரும்பான்மையான நிலங்களில் நடைபெறுகிறது என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cjezdxq7n5go

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் எவ்வித முன்யோசனையுமின்றி காடுகளும் மரங்களும் அழிக்கப் படுகின்றன......இவர் போன்ற சிலர் மட்டும் மிகவும் பிரயாசைப்பட்டு காடுகளை உருவாக்குகின்றனர்.......வணங்குகிறேன் ஐயா .......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஒருபக்கம் எவ்வித முன்யோசனையுமின்றி காடுகளும் மரங்களும் அழிக்கப் படுகின்றன......இவர் போன்ற சிலர் மட்டும் மிகவும் பிரயாசைப்பட்டு காடுகளை உருவாக்குகின்றனர்.......வணங்குகிறேன் ஐயா .......!  🙏

எத்தனையோ நாள் கஸ்டப்பட்டு உழைக்க அரச இயந்திரம் ஒரே நாளில்

வெட்டித்தள்ளி விற்று பணம் பண்ணிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அன்குள்ளவர்களே வெக்கை கூடி விட்டது என்கிறார்கள் இடைப்பட்ட காலத்தில் மரங்களை வெட்டி தள்ளி விட்டார்கள் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு,  வனப்புமிகு காடுவளர்ப்பு சுயநலமற்ற பணியால் நிறைந்தவரே வணங்குகின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

யாழில் அன்குள்ளவர்களே வெக்கை கூடி விட்டது என்கிறார்கள் இடைப்பட்ட காலத்தில் மரங்களை வெட்டி தள்ளி விட்டார்கள் போல் உள்ளது .

வேலிகள் இல்லை, சுற்று மதில் வீடு, அண்ட சீற் அடிச்சா காற்றோட்டமும் குறையுது. ஏழை வீடுகளும் சீற்றும் தகரமும். வெக்கையாகத் தானே இருக்கும் அண்ணை.
மரம் வளர்க்க கிராமந்தோறும் மக்களை ஊக்கப்படுத்தணும், எங்கட கள உறவு  @putthan அண்ணாவும் இலவச மரக்கன்றுகள் வழங்கி ஊக்குவித்தவர்.

Edited by ஏராளன்
ஓரெழுத்துத் திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அந்தியேட்டிகள், திருமண வைபவங்கள்  போன்றவற்றில் தென்னங்கன்றுகள் கொடுப்பதை கண்டுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.