Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதின் - கிம் சந்திப்பு பற்றி அமெரிக்காவுக்கு என்ன கவலை? தென் கொரியா ஏன் அஞ்சுகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வட கொரியா, ரஷ்யா, கிம் ஜாங் உன், விளாதிமிர் புதின், யுக்ரேன்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜார்ஜ் ரைட் மற்றும் ஜான் மெக்கென்ஸி
  • பதவி, பிபிசி செய்தியாளர்கள்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யா சென்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சிபிஎஸ் இடம் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனில் நடக்கும் போரில் வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.

திட்டமிடப்பட்டிருக்கும் இந்தக் கூட்டம் எங்கு நடக்கவிருக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மற்ற அமெரிக்க ஊடகங்களிலும் வெளிவந்திருக்கும் இந்தச் செய்தி அறிக்கைக்கு வட கொரியாவோ, ரஷ்யாவோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

கிம் ஜாங் உன், பெரும்பாலும் பாதுகாப்பான ஒரு ரயிலில் பயணம் செய்யக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் சில வட்டாரங்கள் தெரிவித்திருக்குன்றன.

 

சமீபத்தில், வட கொரியா-ரஷ்யாவுக்கு இடையிலான ஆயுதப் பேச்சுவார்த்தைகள் ‘சுறுசுறுப்பாக முன்னேறி வருகின்றன’ என்ற புதிய தகவல் கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியிருந்தது. அந்த அறிவிப்புக்குப் பின்னரே இந்தச் சந்திப்பு சாத்தியமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷோய்கு, சமீபத்தில் வட கொரியாவுக்குச் சென்றிருந்தபோது, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்க பியோங்யாங்கை சம்மதிக்க வைக்க முயற்சித்ததாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியின் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களில் Hwasong கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் அடங்கும். இது திட எரிபொருளைப் பயன்படுத்தும் வட கொரியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) என்று நம்பப்படுகிறது.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு கிம் ஜாங் உன் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நாட்டின் கதவுகளைத் திறந்தது அதுவே முதல் முறை.

அமெரிக்காவின் எச்சரிக்கை

அந்தச் சந்திப்பில் புதின் மற்றும் கிம் ஜாங் உன் இருவரும் ‘இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க உறுதியளிக்கும்’ கடிதங்களைப் பரிமாறிக் கொண்டனர், என்று கிர்பி தெரிவித்தார்.

ரஷ்யாவுடனான ஆயுதப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தவும், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று பியோங்யாங் செய்த பொது உறுதிமொழியைப் பின்பற்றுமாறும் நாங்கள் DPRK-யை வலியுறுத்துகிறோம்," என்றும் கிர்பி கூறியிருந்தார். கிர்பி வட கொரியாவைப் பற்றிப் பேசும் போது DPRK என்ற பெயர்ச் சுருக்கத்தைப் பயன்படுத்தினார். இதன் பொருள் Democratic People's Republic of Korea – ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு.

வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், பொருளாதாரத் தடைகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்குப் பதிலாக ரஷ்யா வட கொரியாவுக்கு என்ன வழங்கும் என்ற கவலை அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் உள்ளது. இது ஆசியாவில், ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

வட கொரியா, ரஷ்யா, கிம் ஜாங் உன், விளாதிமிர் புதின், யுக்ரேன்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷோய்கு, சமீபத்தில் வட கொரியாவுக்குச் சென்றிருந்தபோது காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களில் Hwasong கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் அடங்கும்

உணவு, பண தேவையில் இருக்கும் வட கொரியா

திங்களன்று, தென் கொரியாவின் புலனாய்வுச் சேவை, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நடத்தியதைப் போன்றே, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்துமாறு ஷொய்கு பரிந்துரைத்ததாகத் தெரிவித்தது.

பியோங்யாங்கிற்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் ரஷ்யா வட கொரியாவுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று தென் கொரியா அஞ்சுகிறது.

இதைவிடப் பெரிய கவலையாக இருப்பது, கிம் ஜாங் உன், தனது அணு ஆயுதத் திட்டத்தில் முன்னேற்றம் காண, தனக்கு மேம்பட்ட ஆயுதத் தொழில்நுட்பத்தை வழங்குமாறு புதினிடம் கேட்கலாம் என்பது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் மூலோபாய வழிமுறையாக இருப்பதைவிட ஒரு பரிவர்த்தனையாகவே அமையும் வாய்ப்புகள் உள்ளன. இப்போதைக்கு, ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் தேவை. பொருளாதாரத் தடைகளால் சிக்கலுக்குள்ளாகியிருக்கும் வடகொரியாவிற்குப் பணமும் உணவும் தேவை.

வட கொரியா, ரஷ்யா, கிம் ஜாங் உன், விளாதிமிர் புதின், யுக்ரேன்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

இந்தப் பயணம் இப்போது நடைபெறாமல் போவதற்கான வலுவான காரணம், ஏனெனில் கிம் ஜாங் உன், தனது தனிப்பட்டப் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலைப்படுபவர், என்கின்றனர் நிபுணர்கள்

‘பயணம் நடைபெறாமல் போகவும் வாய்ப்புண்டு’

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் கிம் ஜாங் உன் மற்றும் புதினுக்கு இடையிலான சந்திப்பு நடைபெறலாம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் இராஜதந்திர நிருபர் எட்வர்ட் வோங், பிபிசி நியூஸ் சேனலிடம், வட கொரிய அதிகாரிகளின் முன்கூட்டிய குழு கடந்த மாத இறுதியில் விளாடிவோஸ்டாக் மற்றும் மாஸ்கோவிற்குச் சென்றதாக தெரிவித்தார்.

வட கொரியத் தலைவரின் பயணங்களில் நெறிமுறைகளைக் கையாளும் பாதுகாப்பு அதிகாரிகளை இந்தப் பயணத்தில் இருந்தனர், எனவே இதைப் பார்க்கும் அதிகாரிகளுக்கு இது ஒரு வலுவான சமிக்ஞை," என்று திரு வோங் கூறினார்.

யுக்ரேன் போரில் பயன்படுத்துவதற்கு வட கொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை ரஷ்யா மற்றும் வட கொரியா மறுத்துள்ளன.

2006 மற்றும் 2008 க்கு இடையில் வட கொரியாவுக்கான இங்கிலாந்து தூதராக பணியாற்றிய ஜான் எவரார்ட் பிபிசியிடம் பேசியபொது, இந்தப் பயணம் தொடர்பாக எழுந்திருக்கும் பேச்சுகள் “இந்தப் பயணம் இப்போது நடைபெறாமல் போவதற்கான வலுவான காரணம் உள்ளது, ஏனெனில் கிம் ஜாங் உன், தனது தனிப்பட்டப் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலைப்படுபவர்,” என்றார்.

மேலும், ரஷ்யாவிற்குத் தேவையான ஆயுதங்கள் வடகொரியாவில் இருந்தாலும், ‘அவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன’ என்று அவர் கூறினார்.

 

புதினுடன் இதற்கு முந்தைய சந்திப்பு

புதினும் மற்றும் கிம் ஜாங் உன் கடைசியாக 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்தனர். ரஷ்யாவிற்குக் கிம் ஜாங் உன் ரயிலில் சென்றிருந்தார். அவரை அதிகாரிகள், பாரம்பரிய முறைப்படி ரொட்டி மற்றும் உப்பு வழங்கி வரவேற்றனர். கிம் ஜாங் உன்னின் கடைசி வெளிநாட்டுப் பயணமும் இதுவே.

சந்திப்புக்குப் பிறகு, புதின், தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிடுவதற்கு, கிம்மிற்கு ‘பாதுகாப்பு உத்தரவாதங்கள்’ தேவைப்படுவதாகக் கூறினார்.

கிம் ஜாங் உன் மற்றும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இடையே வியட்நாமில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களைக் களைவது பற்றி நடந்த ஒரு நடந்த ஒரு சந்திப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அந்தச் சந்திப்பிற்குச் சில மாதங்களுக்குப் பிறகு கிம் ஜாங் உன் புதினைச் சந்தித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cl7z4nexgryo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவுடன் ஆயுத ஓப்பந்தத்தில் ஈடுபட்டால் வடகொரியா அதற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

Published By: RAJEEBAN

06 SEP, 2023 | 03:18 PM
image
 

ரஸ்யாவுடன் ஆயுத ஒப்பந்தங்களை செய்துகெண்டால் அதற்கான விலையை வடகொரியா செலுத்தவேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆயுதவிற்பனை தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைந்துள்ளன என தெரிவித்துள்ள  அமெரிக்கா இந்த எச்சரிக்கையையும்  விடுத்துள்ளது.

உக்ரைனிற்கு எதிராக பயன்படுத்துவதற்கு ரஸ்யாவிற்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கினால் அது வடகொரியாவிற்கு உகந்த விடயமாக அமையப்போவதில்லை அதற்கு வடகொரியா ஒரு விலையை செலுத்தவேண்டியிருக்கும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவன் தெரிவித்துள்ளார்.

 

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுத திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே அமெரிக்கா -ஐக்கிய நாடுகளின் தடைகளை எதிர்கொண்டுள்ள வடகொரியாவிற்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.

ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை என்ற உறுதிமொழியை கடைப்பிடிக்கவேண்டும் என தனிப்பட்ட ரீதியிலும் பகிரங்கமாகவும் நாங்கள் வடகொரியாவை கேட்டுக்கொண்டுள்ளோம் எங்கள் சகாக்களும் இதனை தெரிவிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் ரஸ்ய ஜனாதிபதியை சந்திப்பதற்காக மொஸ்கோ செல்லவுள்ளார் என தகவல்கள்வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது

 

உக்ரைனிற்கு எதிரான யுத்தத்தில் ரஸ்யா பயன்படுத்துவதற்கான ஆயுதங்களை  வடகொரியா வழங்குவது குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்படலாம் என இந்த தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு எங்கு இடம்பெறவுள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள  இந்த தகவல் குறித்து  ரஸ்யா வடகொரியா எந்த தகவலையும் வெளியிடவில்லை.

விசேட புகையிரத்தில் கிம் மொஸ்கோ செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/163958

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்கில் வடகொரியாவை பங்கு பற்றாமல் செய்யலாம். ஏற்கனவே பொருளாதார தடையில்  தான் வடகொரியா உள்ளது.
பொருளாதார தடை விதித்த ஈரான் பிறிக்சிற்றில் இணைந்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டினை சந்திப்பதற்காக ரஸ்யா புறப்பட்டார் வடகொரிய ஜனாதிபதி – குண்டுதுளைக்காத விசேட புகையிரதத்தில் பயணம்

Published By: RAJEEBAN

12 SEP, 2023 | 06:25 AM
image
 

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்காக வடகொரிய தலைவர் கிம்ஜொங் உன் ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களில் வடகொரிய தலைவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரிய தலைவர் தனது விசேட புகையிரதத்தில் ரஸ்யா நோக்கி பயணமாவதை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 

Kim_Jong_Un_ke_Rusia_naik_kereta___re.jp

வடகொரியாவின் மத்திய செய்தி முகவர் அமைப்பு இந்த படத்தினை வெளியிட்டுள்ளது.

 இன்று இந்த சந்திப்பு இடம்பெறலாம் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரிய தலைவரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விபரங்கள் மர்மமானவை என்ற போதிலும் அவர் தனது விசேட புகையிரதத்திலேயே விஜயங்களை மேற்கொள்வது வழமை.

குறிப்பிட்ட புகையிரதம் பச்சை நிறத்திலானது அதற்குள் 20 விசேட வாகனங்கள் காணப்படும் புகையிரத்திற்குள் கிம் ஜொங் உன் கூட்டங்களை நடத்துவதற்கான வசதியும் உள்ளது.

https://www.virakesari.lk/article/164371

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படகுகள், விமானங்கள், ஆயுதம் தாங்கிய ரயில் வண்டி: புதினை சந்திக்கும் கிம் - பயணத்தின் நோக்கம் என்ன?

அதிபர் கிம் ஜாங் உன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டுக்கு ஆயுத விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 மணி நேரங்களுக்கு முன்னர்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதற்காக குண்டு துளைக்காத ரயில் மூலம் ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக் நோக்கிச் சென்றார். ஆனால் அவரது பயண வழித்தடம் மாற்றப்பட்டதாக பின்னர் தெரியவந்தது.

பொதுவாக உலகத் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணத்தின் போது ரயிலைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், விமானத்தில் பறந்தால் எளிதில் சுட்டு வீழ்த்தப்படும் ஆபத்து இருப்பதால் கிம் ஜாங் உன் எப்போதும் ரயில் பயணத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறப்படுகிறது.

குண்டு துளைக்காத ரயில் மூலம் பயணம் செய்யும் போது, அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்பதால் அது பாதுகாப்பான பயணமாக இருக்கும் என கிம் நினைக்கிறார். இருப்பினும் சாட்டிலைட் படங்கள் மூலம் அவரது ரயில் பயணித்த பாதையை அறிய பிபிசி முயன்றது. ஆனால், அந்தப் படங்களும் கிடைக்கவில்லை.

இதற்கு முன் இப்படி ஒரு பயணத்தை அவர் மேற்கொண்ட போது, ஒரு பாதுகாப்பு ரயில் முன்னரே அந்த ரயில் பாதையில் ஆபத்து ஏதேனும் இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்வதற்காகவே சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

 
அதிபர் கிம் ஜாங் உன்
 
படக்குறிப்பு,

வடகொரிய அதிபரின் பயண வழித்தடம் திடீரென மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட கொரிய தலைவர்கள் நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் பாரம்பரியத்திற்கு ஏற்ப, மெதுவாக நகரும் ரயில் வண்டியில் சுமார் 1,180 கிலோ மீட்டர் (733 மைல்கள்) பயணம் செய்ய கிம் ஜாங் உன் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக செலவிட வேண்டியிருந்தது. சிறந்த பிரெஞ்சு ஒயின்கள் மற்றும் புதிய இரால் உணவுகளை வழங்கும் வசதியும் இந்த ரயில் வண்டியில் இருக்கிறது.

ரயில் அதன் பலத்த கவச பாதுகாப்பு காரணமாக மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் (31 மைல்) வேகத்தில் சலசலத்துச் சென்றது.

லண்டனின் அதிவேகமாகப் பயணிக்கும் ரயிலுடன் ஒப்பிடுகையில், இந்த ரயில் நான்கு மடங்கு வேகம் குறைவானது. ஜப்பானில் ஓடும் புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

பூமியின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நீண்ட ரயில் பயணம், சில நேரங்களில் தொன்மையான ரயில் வலையமைப்பைக் கடந்து செல்லவேண்டியிருந்தது.

இந்த ரயிலுக்கு கொரிய மொழியில் டேயாங்கோ என்று பெயரிடப்பட்டுள்ளது, கொரிய மொழியில் அதற்கு சூரியன் என்று அர்த்தம். மேலும் வட கொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் அடையாளக் குறிப்பாகவும் இச்சொல் அறியப்படுகிறது.

இப் பயணத்தின் இறுதியாக கிம் ஜாங் உன் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரை அடையத் திட்டமிட்டிருந்தார். ஆனால், பின்னர் அவருடைய ரயில் அந்நகரை விட்டு விலகி வடக்கு நோக்கி நகர்ந்தது. அவருடன் ராணுவ உயரதிகாரிகளும் பயணம் மேற்கொண்டிருந்தது, ஆயுத விற்பனை குறித்த பேச்சுக்களுக்கான சாத்திய கூறுகளை பறைசாற்றியது.

 
அதிபர் கிம் ஜாங் உன்

பட மூலாதாரம்,KOREA SUMMIT PRESS POOL

 
படக்குறிப்பு,

பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையிலேயே வடகொரிய அதிபர் விமானப் பயணங்களை மேற்கொள்வதில்லை என கூறப்படுகிறது.

ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து மேற்குலக நாடுகள் கவலைகளை வெளிப்படுத்தும் நிலையில், என்ன மாதிரியான ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வடகொரியா விற்கும் என்பதும், அதனால் யுக்ரேன் மீதான போரில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதும் கேள்விக்குறியாகவே தொடர்கின்றன.

வடகொரியா தயாரிக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவின் வடிவமைப்பை ஒட்டி இருப்பதால், அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ரஷ்யாவுக்கு எந்த விதமான சிரமங்களும் இருக்காது என்று கருதப்படுகிறது. மேலும், ஆயுதங்களைத் தயாரிப்பதில் வடகொரியாவுக்கு பெரிய அளவில் வளங்கள் இல்லாததால், இருக்கும் வளங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முழுவதையும் ரஷ்யாவுக்கு விற்கும் நிலை இருக்காது என்றும் கருதப்படுகிறது.

இத்துடன், கிம் ஜாங் உன், தனது சொந்த நாடான வடகொரியாவின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படும் நிலை உள்ளது. சொந்த பாதுகாப்புக்காகவும் குறிப்பிட்ட அளவிலான ஆயுதங்களை வைத்திருக்கவேண்டிய கட்டாயமும் அவருக்கு உள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாலேயே இது போன்ற சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேற்குலக அரசியல் விமர்சகர்கள் கருதினாலும், யுக்ரேன் மீதான போரில் வடகொரியாவின் ஆயுதங்களால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே எண்ணுகின்றனர்.

இருப்பினும், வடகொரியாவின் ஆயுதங்களை ரஷ்யாவுக்கு விற்கவேண்டும் என அதிபர் புதின், கிம் ஜாங் உன்னை வலியுறுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது.

வடகொரியாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பதால் நாடு முழுவதும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்ற நிலையில், ஆயுத உதவிக்குப் பதிலாக உணவுப் பொருட்கள் மற்றும் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவியை வடகொரியாவுக்கு ரஷ்யா அளித்து உதவவேண்டும் என கிம் ஜாங் உன் எதிர்பார்க்கிறார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ரஷ்யாவின் தூரகிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் நகருக்கு அதிபர் புதின் தற்போது வந்துள்ளார். வடகொரிய எல்லையிலிருந்து இந்நகரம் சுமார் 200 கிலோ மீட்டர் (125 மைல்) தொலைவில் உள்ளது.

நான்காண்டுகளில் வடகொரிய அதிபர் கிம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு வியட்நாமில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புடன் கிம் அணு ஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையை கிம் ஜாங் உன் பாதியிலேயே கைவிட்டார்.

2017 ஆம் ஆண்டில் வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விதித்த பொருளாதாரத் தடைகளை ரஷ்யா ஆதரித்ததன் மூலம் சீனா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆகிய இரண்டிற்கும் இடையில் புதின் செயல்பட்டார்.

ஆனால், இப்போது உலகின் பார்வை மாறியுள்ளது. யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் வடகொரியாவுடனான உறவுகளை ரஷ்யா பலப்படுத்தியுள்ளது.

ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளுக்கு இடையே ஒரு நட்புறவை அமெரிக்கா உருவாக்கிய பின் வடகிழக்கு ஆசியாவின் அரசியல் நிலைப்பாட்டில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், வடகொரியாவின் நெருங்கிய கூட்டாளியான சீனா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

ரஷ்யாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த வடகொரியா விரும்பினால், அதை சீனா எப்படிப் பார்க்கும் என்பதும் புதிராகவே உள்ளது.

 
அதிபர் கிம் ஜாங் உன்

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

ரஷ்ய அதிபரைச் சந்திக்கும் போது வடகொரியாவுக்கு என்ன உதவிகளை கிம் ஜாங் உன் கேட்பார் என்பது பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

இதற்கிடையே, யுக்ரேன் போரில் பயன்படுத்த தரைப்படைத் தளவாடங்களும், ஆயுதங்களும் ரஷ்யாவிடம் போதுமான அளவுக்கு இல்லை என்பதால், அவற்றை வடகொரியாவிடமிருந்து ரஷ்யா கேட்டுப்பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆயுதங்களும், தளவாடங்களும் வடகொரியாவிடம் ஏராளமாக உள்ளன.

இந்நிலையில், இது போல் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்குமானால், அது கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்கா ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

அதே நேரம், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் வடகொரியாவுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்ற கேள்வி தென்கொரியாவின் முன் நிற்கும் கவலையாக உள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் தடுமாற்றத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் கிம், தனது தேவைகளை அதிகரித்துக் கேட்க்கும் நிலையும் ஏற்படவாய்ப்பிருக்கிறது.

ஒருவேளை ரஷ்யாவிடமிருந்து அதிக ராணுவ உதவிகளைக் கூட அவர் கேட்கலாம். அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் போர் ஒத்திகையைப் போன்ற நடவடிக்கைகளை ஏற்கெனவே சீனாவுடன் இணைந்து வடகொரியா மேற்கொண்டு வருகிறது.

எனவே எதிர்காலத் தேவைக்கு ரஷ்யாவிடம் இருந்து அவர் ராணுவ உதவிகளை எதிர்பார்க்கும் வாய்ப்பு உள்ளது.

தற்போதைய நிலையில், உளவு பார்க்கும் செயற்கைக் கோள்களோ, அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கிக் கப்பல்களோ வடகொரியாவிடம் இல்லாத நிலையில், அவற்றைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடம் வடகொரியா எதிர்பார்க்கும் நிலையையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், அந்த அளவுக்கு ரஷ்யாவிடம் இருந்து வடகொரியாவுக்கு உதவிகள் கிடைக்காது என தென்கொரியா நம்புகிறது.

https://www.bbc.com/tamil/articles/cyd911qjm86o

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

படகுகள், விமானங்கள், ஆயுதம் தாங்கிய ரயில் வண்டி: புதினை சந்திக்கும் கிம் -

கைப்புள்ள அருவாளோட கெளம்பிட்டானே.. 

spacer.png

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கைப்புள்ள அருவாளோட கெளம்பிட்டானே.. 

spacer.png

என்ன என்ர மச்சான நக்கலா அடிக்கிறீங்க?

பாட்ஷா ஜனகராஜ், தளபதி தினேஷ் கரெக்டர் எல்லாம் நம்ம மச்சான பார்த்து இன்ஸ்பிரேசன் ஆகித்தான் எடுத்தது - தெரியுமா?

👇

56 minutes ago, ஏராளன் said:

 

 

 
அதிபர் கிம் ஜாங் உன்

பட மூலாதாரம்,KOREA SUMMIT PRESS POOL

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2023 at 14:20, nunavilan said:

ஒலிம்பிக்கில் வடகொரியாவை பங்கு பற்றாமல் செய்யலாம். ஏற்கனவே பொருளாதார தடையில்  தான் வடகொரியா உள்ளது.
பொருளாதார தடை விதித்த ஈரான் பிறிக்சிற்றில் இணைந்து விட்டது.

இன்னும் ப‌ல‌ நாடுக‌ள் இதில் இணைய‌ இருக்கின‌ம்.................

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் நிர்வாகத்தினதும் சி ஐ ஏயினதும் கேலிக்கூத்தால் நிகழும் சந்திப்பு. ரஷ்சியா- வடகொரியா இரண்டுக்கும் நன்மை.

அண்மையில் புட்டின் ஒரு செவ்வியில் சொல்லி இருந்தார் ரஷ்சியா நேட்டோவில் இணைவது கூட ஒரு காலத்தில் பரிசீலிக்கப்பட்டது என்று. உள்ளதையும் கெடுத்துக் குட்டிச் சுவரானது தான் பைடனின் அனைத்து நகர்வுகளும். அது ஆப்கானிஸ்தானில் இருந்து உக்ரைன் வரை தொடர்கிறது.

டொனால்ட் ரம் பிடித்த அணிலை.. பைடன்.. அணில ஏறவிட்டு பார்க்கும் நிலையில்...

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இன்னும் ப‌ல‌ நாடுக‌ள் இதில் இணைய‌ இருக்கின‌ம்.................

இலக்கங்களில்:

13 - பிறிக்ஸ் 4 நாடுகளுடன் ஆரம்பிக்கப் பட்டுக் கடந்து விட்ட வருடங்கள்.

40% -  உலக சனத்தொகையில் பிறிக்ஸ் நாடுகளின் பங்கு.

25% - உலக மொத்த (GDP) உற்பத்தியில் பிறிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு.

இந்த இலக்கங்களோடு இணைந்த முன்னேற்றம் நிகழாமைக்குக் காரணம், ஒவ்வொரு பிறிக்ஸ் நாடும் ஒவ்வொரு திசையில் இழுக்கும் குதிரை போல நடந்து கொள்வது தான்! இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் தலைமைகளைப் பார்க்கையில் இது ஆச்சரியம் தரும் விடயமல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

பிறிக்சிஸ் படம் போன மாதம் காட்டி முடிந்துவிட்டது.  இப்போது இந்தியாவில் G20 தான். தீபிகா படுகோன் இந்திய நடிகர்கள் G20 நடத்தியதற்காக மோடியை பாராட்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
ஈழத் தமிழன் எங்கே வாழ்கிறானோ அந்த நாடுகளே உலக ஒழுங்கை உருவாக்கும் சக்தி கொண்டவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டினை சந்தித்தார் வடகொரிய தலைவர்

Published By: RAJEEBAN

13 SEP, 2023 | 10:22 AM
image
 

ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடகொரிய தலைவர் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார்.

வொஸ்டொச்சினி கொஸ்மொட்டிரோமில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை செலுத்துவதற்கு சற்று முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கிம்ஜொங் அன் வடகொரியாவிற்கு வெளியே உள்ள தருணத்தில் வடகொரியா ஏவுகணைகளை செலுத்தியது இதுவே முதல்தடவை.

உக்ரைனிற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக  வடகொரியாவிடமிருந்து ரஸ்யா ஆயுதங்களை பெறுவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது என ஊகங்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/164456

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈழத் தமிழன் எங்கே வாழ்கிறானோ அந்த நாடுகளே உலக ஒழுங்கை உருவாக்கும் சக்தி கொண்டவை

நிம்பள் கைலே வெண்ணே வச்சு கொண்டு….நெய்கி அலையுறான்…

நம்பள் அதே பார்க்கிறான்…சிரிக்கிறான்..

அச்சா ஹை…

- சவுத் புளொக்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதின்-கிம் ஜாங் உன் சந்திப்பு: யாருக்கும் லாபம்? யாருக்கு ஆபத்து?

புதின-கிம் ஜாங் உன் சந்திப்பு; யாருக்கும் லாபம்? யாருக்கு ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பின்போது, ஆயுத ஒப்பந்தம் முடிவாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

13 செப்டெம்பர் 2023

ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பல தடைகளை எதிர்கொண்டு வரும் வட கொரியாவுக்கு உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ரஷ்யாவின் உதவி தேவைப்படும்.

அணு ஆயுதத்தில் தன்னை திறன் மிகுந்ததாக உயர்த்திக் கொள்ள, ரஷ்யாவின் தொழில்நுட்பம் வட கொரியாவுக்கு உதவியாக இருக்கும். யுக்ரேனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுக்கு வெடி மருந்துகள், குண்டுகள் அதிகம் தேவைப்படுகிறது.

கடந்த 1953ஆம் ஆண்டுக்குப் பிறகு போரில் ஈடுபடாத வட கொரியாவிடம் ரஷ்யாவுக்கு தேவைப்படும் வெடிமருந்துகள் அதிகம் இருப்பதாகவும் அதை வட கொரியா ரஷ்யாவுக்கு கொடுக்க முன்வரலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் ரஷ்யா, வட கொரியா இரு நாடுகளும் எதிர்க்கும் பொது சக்தியாக அமெரிக்கா உள்ளது. தென் கொரியாவில் அமெரிக்கா கால் பதித்துள்ள நிலையில், வட கொரியா ரஷ்யாவுடன் நெருங்குவதன் மூலம் இரு நாடுகளுக்குமே பலன் இருக்கும்.

 

ஆயுத ஒப்பந்தம் முடிவாகவுள்ளதா?

புதின்-கிம் ஜாங் உன் சந்திப்பு: யாருக்கும் லாபம்? யாருக்கு ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

"உங்களது நெருக்கடியான அலுவல்களுக்கு மத்தியில் எங்களை அழைத்ததற்கு நன்றி" என்று கிம் ஜாங் உன், புதினிடம் கூறினார்.

இந்த சந்திப்பின்போது ஆயுத ஒப்பந்தங்கள் முடிவாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று, இந்த சந்திப்பை உற்று நோக்கும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது.

ரஷ்யா, வட கொரியா இரு நாடுகளும் இதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும், “அனைத்து விவகாரங்களும்” இந்த சந்திப்பின்போது பேசப்படும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், மிகவும் பாதுகாக்கப்பட்ட ஆயுதங்கள் ஏந்திய பச்சை நிற ரயிலில் இந்த சந்திப்புக்காக ரஷ்யா சென்றடைந்துள்ளார். அந்த ரயில் குண்டுகள் துளைக்காத கனமான உலோகத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ரயிலில், ஆயுதங்களும் தேவைப்பட்டால் தப்பித்துச் செல்வதற்கான ஹெலிகாப்டரும் இருக்கின்றன.

இந்த சந்திப்பு, ரஷ்யாவின் மையப் பகுதிகள் எவற்றிலும் நடைபெறாமல், கிழக்கு எல்லையில் உள்ள, வஸ்டாச்னி விண்வெளி மையத்தில் நடைபெறுகிறது.

 
புதின-கிம் ஜாங் உன் சந்திப்பு; யாருக்கும் லாபம்? யாருக்கு ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாதுகாக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய ரயிலில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் உள்ள விண்வெளி ஏவுதளத்தைச் சென்றடைந்தார்.

ரஷ்யாவின் விண்வெளி ஏவுதளத்தில் நடைபெறும் சந்திப்பு

கிம் ஜாங் உன் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்தபோது, அவருக்கு ரஷ்யர்களால் கசான் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிம் ஜாங் உன் ரயிலிலிருந்து சிவப்பு கம்பளத்தில் இறங்கி வந்து அந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.

ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து பல மணிநேர பயணத்துக்குப் பிறகு, கிம் ஜாங் உன், ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வஸ்டாச்னி விண்வெளி ஏவுதளத்தை அடைந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புதினை அவர் நேரில் சந்தித்தபோது, “உங்களது பரபரப்பான வேலைகளுக்கு இடையில் எங்களை அழைத்தமைக்கு நன்றி” என்று கிம் ஜாங் புதினிடம் கூறினார்.

“நான் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்,” என்று புதின் கிம் ஜாங் உன்னிடம் கூறினார். மேலும், 2016ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வஸ்டாச்னி ஏவுதளத்தைக் காண்பித்து, “இது எங்களின் புதிய விண்வெளி ஏவுதளம்” என்று கிம் ஜாங்கிடம் புதின் தெரிவித்தார்.

மனிதநேய உதவிக்காக இருநாடுகளுக்கு இடையில் ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம் முடிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வட கொரியா செயற்கைக்கோள்கள் தயாரிக்க, ரஷ்யா உதவுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதற்காகத்தான் வஸ்டாச்னி வந்திருக்கிறோம்” என புதின் பதிலளித்தார். கிம் ஜாங், “ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்” என்றும் புதின் தெரிவித்தார்.

 

"அனைத்து விவகாரங்களையும் பேசுவோம்" - புதின்

புதின-கிம் ஜாங் உன் சந்திப்பு; யாருக்கும் லாபம்? யாருக்கு ஆபத்து?

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ரஷ்யாவுக்கு தேவையான வெடி மருந்துகளை, குண்டுகளை வட கொரியா ரஷ்யாவுக்கு வழங்க முன் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அவர்கள் இருவரும் ஆயுத பரிமாற்றம் குறித்தும், ராணுவ-தொழிலநுட்ப ஒத்துழைப்பு குறித்தும் பேசுவார்களா என புதினிடம் கேட்டதற்கு, “நாங்கள் எல்லாவற்றையும் பேசுவோம்” என்று பதிலளித்தார்.

மேலும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும், மனிதநேய அடிப்படையிலான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என புதின் தெரிவித்தார்.

வட கொரியா செயற்கைக் கோள்களை ஏவ முயன்றும் தோல்வியே கண்டுள்ளது. இதுவரை இரண்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடியாமல் தோல்வி அடைந்துள்ளன. இந்த ஆண்டு மே மாதம் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள், ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்து மூழ்கியது.

அடுத்த செயற்கைக்கோள், ஏவப்படுவதற்கான மூன்றாவது கட்டத்தில் கடந்த மாதம் தோல்வியடைந்தது. மீண்டும் அக்டோபர் மாதம் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என வட கொரியா தெரிவித்திருந்தது.

இந்த சந்திப்பின் மூலம் உளவு செயற்கைக்கோள் வட கொரியாவுக்கு கிடைத்தால், அது வட கொரியாவுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் தாக்குதல்களை கண்காணிக்கவும் வட கொரியாவின் தாக்குதல்களைத் திட்டமிடவும் உதவிகரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

உலகில் தீவிரமாக ராணுவமயமாக்கப்பட்ட நாடு வட கொரியா. எனவே, யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு தேவையான வெடி மருந்துகளை அதிக அளவில் வட கொரியாவால் வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது.

தோட்டாக்கள், குண்டுகள், பழைய ஏவுகணைகளைக்கூட வட கொரியா வழங்கக்கூடும். 1953இல் நடந்த கொரிய போருக்குப் பிறகு, வட கொரியா எந்த போரிலும் பங்கேற்காததால், வட கொரியாவிடம் அதிகமான ஆயுதங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

யுக்ரேன் போரில் ரஷ்யாவை ஆதரிக்கும் வட கொரியா

புதின-கிம் ஜாங் உன் சந்திப்பு; யாருக்கும் லாபம்? யாருக்கு ஆபத்து?

பட மூலாதாரம்,KREMLIN

 
படக்குறிப்பு,

இந்த சந்திப்பின்போது ஆயுத பரிமாற்றம் குறித்துப் பேசப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு "எல்லாவற்றையும் பேசுவோம்" என ரஷ்ய அதிபர் புதின் பதிலளித்தார்.

“ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் கூட்டாக இருப்போம்” என கிம் ஜாங் இந்த சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் ரஷ்யாவின்யுக்ரேனுக்கு எதிரான போரை கிம் ஜாங் ஆதரித்துப் பேசியுள்ளார்.

“ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க ஆதிக்க சக்திகளுக்கு எதிரான புனிதப்போரை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. புதினின் அனைத்து முடிவுகளையும் வட கொரியா ஆதரிக்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் வட கொரியா மீதான தடைகள் இருந்தாலும் அது ரஷ்யா-வட கொரியா இடையிலான உறவை எந்த வகையிலும் தடுக்காது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் கிம் ஜாங்கின் சகோதரி கிம் யோ ஜாங் உடன் இருக்கிறார். அவர் கொரிய தொழிலாளர் கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு செயல்பாட்டுக்கு எதிராக பல எச்சரிக்கைகளை அவர் விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே, ஆயுத ஒப்பந்தம் முடிவாகும் எனப் பேசப்படும் நிலையில், இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பின்போது இருந்தனர்.

இதற்கு முன்பு இரு தலைவர்களும் 2019ஆம் ஆண்டு, ரஷ்யாவின் தென் பகுதியில் உள்ள வ்லாதிவோஸ்தொக் நகரில் சந்தித்தனர்.

மேலும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சரை அடுத்த வாரம் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cd1zpnk2z54o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.