Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்தியம்தானா தமிழீழம்??!!

Featured Replies

சாத்தியம்தானா தமிழீழம்??!!

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரினை ஒட்டி விடுதலைப் புலிகள் ஐக்கியநாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே விடுதலைப் புலிகளால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் "இறைமை" பற்றி சற்று ஆராய்தல் பொருத்தமாக இருக்கும். தமிழீழம் என்கின்ற தனியரசு எவ்வாறு உருவாகும், எந்த நாடுகளும் அங்கீகரிக்காத போது அது எப்படிச் சாத்தியமாகும் போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதற்கும் "இறைமை" பற்றி புரிந்து கொள்வது அவசியம்.

Sovereignty என்று அழைக்கப்படும் இறைமைக்கு அறிஞர்கள் பலவாறு விளக்கம் கொடுப்பார்கள். பொதுவாக ஒரு அரசு அல்லது மக்கள் தன்னடைய நாட்டின் மீது கொண்டிருக்கும் உச்ச அதிகாரத்தையும், அந்த அதிகாரம் மற்றைய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டடு இருப்பதையும் "இறைமை" என்பதற்குள் அடக்குவார்கள்.

இந்த "இறைமை" என்பது பலவிதமாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவைகளில் அனைத்து வகைகளையும் நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழீழம் இன்றைக்கு கொண்டிருக்கும் இறைமையின் வகைகள் குறித்தும், அங்கீகாரம் பெற வேண்டிய இறைமையின் வகைகள் குறித்தும் எமது பார்வையை செலுத்துவோம்.

மக்களிடம் இறைமை இருக்கிறது என்று அரசியல் அறிஞர்கள் சொல்வார்கள். தமிழீழ மக்கள் பல முறை ஒருமித்து வழங்கிய தீர்ப்பின் மூலமும், தமிழீழத் தனியரசை உருவாக்குவதற்காய் போராடுவதற்கு ஒரு பலம் வாய்ந்த அமைப்பினை உருவாக்கியதன் மூலமும் தம்மிடம் உள்ள இறைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதை விட முக்கியமாக தமிழீழத்தின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஒரு நிழல் அரசை நடத்தி, அங்கு சட்டதிட்டங்களை உருவாக்கியிருப்பதன் மூலம் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையை" (Defacto and De Jure Sovereignty) வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தேர்தல் மூலமோ, சட்டப்படியோ ஒரு அரசு ஆட்சிக்கு வரத் தேவையில்லை. புரட்சி, பலப் பிரயோகம் போன்ற வழிகளிலும் ஆட்சிக்கு வர முடியும். அப்படி ஒரு அரசு ஆட்சிக்கு வந்தாலும் கூட, அந்த அரசு உடனடியாகவே தனது மக்கள் மீது நிச்சயத் தன்மையுள்ள இறைமையை பெற்றுவிடுகின்றது.

இது போன்ற அரசுகளை சர்வதேசம் காலப் போக்கில் அங்கீகரித்தும் விடுகின்றன. சில அரசுகளை அனைத்து நாடுகளும் அங்கீகரிக்காது விட்டாலும், குறிப்பிட்ட காலம் வரை சகித்துக் கொண்டும் இருக்கின்றன.

பாகிஸ்தனின் அதிபர் முஸராப் சட்டரீதியாகவோ, தேர்தல் மூலமோ அதிகாரத்திற்கு வந்தவர் அல்ல. ஆனால் அவருடைய அரசை சர்வதேசம் அங்கீகரித்தது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியையும் சில வருடங்கள் சர்வதேசம் சகித்துக் கொண்டு, ஒரு அரசுக்குரிய தொடர்புகளை பேணித்தான் வந்தன. இதற்கு காரணம் இவர்கள் தமது நாட்டின் மீது "நிச்சயத் தன்மையுள்ள இறைமையை" பெற்றுக் கொண்டதுதான்.

இதே போன்று மக்கள் புரட்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்த ஈரானின் கொமெய்னி, கியுபாவின் பிடல்காஸ்ரோ போன்றோர் அமைத்த அரசுகளும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டன. இங்கே "மக்கள் இறைமை" என்பதும், "நிச்சயத் தன்மையுள்ள இறைமை" என்பதும் கருத்தில் எடுக்கப்பட்டு சர்வதேசத்தால் அங்கீகாரத்தை பெறுகின்றன.

தமிழீழ மக்களிடம் "மக்கள் இறைமை" இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் "நிச்சயத் தன்மையுள்ள இறைமை" இருக்கிறது.

இவைகளை விட இறைமையை "உள்ளக இறைமை" (Internal Sovereignty) என்றும் "வெளியக இறைமை" (External Sovereignty) என்றும் இரண்டாகப் பிரிப்பார்கள். "உள்ளக இறைமை" என்பது ஒரு அரசு தன்னுடைய நிலப் பரப்பில் அனைத்துவிதமான அதிகாரங்களையும் செலுத்துகின்ற தன்மை ஆகும். ஒரு அரசினால் தன்னுடைய நிலப் பரப்பில் வாழுகின்ற மக்களை கட்டுப்படுத்த முடிகின்ற போது, அந்த அரசு "உள்ளக இறைமை" கொண்ட அரசாகக் கருதப்படுகிறது.

"புற இறைமை" என்பது ஒரு அரசு பிற நாடுகளுடன் அரசுரீதியான தொடர்புகளை பேணுவது, தூதரக உறவுகளைக் கொண்டிருப்பது, பிற நாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வது போன்ற விடயங்களைக் குறிக்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிர்வாகப் பகுதிகளில் "உள்ளக இறைமையை" கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றைய நாடுகளுடன் அரசுரீதியான உறவுகளைப் பேணவோ, உடன்படிக்கை செய்யவோ அனுமதி அளிக்கின்ற "வெளியக இறைமை" அற்றவர்களாக இருக்கிறார்கள். "மக்கள் இறைமை" பெற்றுள்ள தமிழீழ மக்கள் "வெளியக இறைமை" பெறுவதற்கும் உரிமை உள்ளவர்களாக இருந்தும், இன்றுவரை சர்வதேசம் தமிழீழ மக்களின் முற்றுமுழுதான இறைமையை அங்கீகரிக்கவில்லை.

இங்கே ஒரு கேள்வி வருகிறது. சர்வதேசம் விடுதலைப் புலிகள் நடத்துகின்ற அரசின் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையையும்" "உள்ளக இறைமையையும்" அங்கீகரித்துள்ளதா என்பதே அந்தக் கேள்வி. இதற்கு பதில் "ஆம்" என்பதுதான். இந்த இறைமை வகைகளை விடுதலைப் புலிகளின் நிர்வாகம் கொண்டுள்ளதை அங்கீகரித்ததனாலேயே "புரிந்துணர்வு ஒப்பந்தம்" உருவானது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் அவர்களின் ஆளுமையை அங்கீகரித்தது. விடுதலைப் புலிகளின் படையணிகள், காவல்துறை, நீதிநிர்வாகம் போன்றவை செயற்படுவதை ஏற்றுக்கொண்டது. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியல் சிறிலங்காவின் சட்டவடிவச் செயற்பாடுகளை நடைபெறாது என்பதை ஏற்றுக் கொண்டது. உதாரணமாக சிறிலங்கா அரசின் காவல்துறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வது ஒப்பந்த மீறலாக சொல்லப்பட்டது.

இவ்வாறு சர்வதேசம் விடுதலைப் புலிகளின் நிர்வாக அரசை "நிச்சயத்தன்மையுள்ள சட்ட வடிவ இறைமை" உள்ளதாகவும், "உள்ளக இறைமை" உள்ளதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அங்கீகரித்தது.

போர் நடைபெற்று வருகின்ற இன்றைய மோசமான நிலையிலும் விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்காது இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். தமிழீழ மக்களின் இறைமையை சர்வதேசம் அங்கீகரிப்பதில் ஏற்பட்ட ஒரு சாதகமான திருப்பமாக விடுதலைப் புலிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பார்க்கிறார்கள்.

இந்த இடத்தில் ஆழிப் பேரலை பொதுக்கட்டமைப்பு பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். தமிழீழ அரசு தன்னுடைய "வெளியக இறைமையை" வெளிப்படுத்துவதன் ஒரு படியாக இந்த பொதுக்கட்டமைப்பு அமைந்திருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு நீதிமன்றம் மூலம் அதை தடுத்து விட்டது. தமிழீழம் "வெளியக இறைமை" நோக்கி பயணிப்பதன் ஆரம்பமாக பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் அமைந்து விடும் என்று சிறிலங்கா அரசு கருதியதானேலேயே, சர்வதேச அழுத்தங்களையும் மீறி நீதிமன்றம் மூலம் பொதுக்கட்டமைப்பு உருவாகாமல் தடுத்தது.

ஆகவே புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருக்கட்டும், பொதுக்கட்டமைப்பாக இருக்கட்டும், விடுதலைப் புலிகள் பல விட்டுக் கொடுப்புக்களோடு இவைகளுக்கு சம்மதிப்பதை, தமிழீழத்தின் முற்றுமுழதான இறைமையை சர்வதேசம் அங்கீகரிக்கச் செய்வதற்கான போராட்டத்தின் பகுதிகளாகவே பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் கொண்டுள்ள இறையை பார்க்கின்ற அதே நேரம், மறுபக்கமாக சிறிலங்கா அரசின் இறைமையைப் பார்ப்போமாக இருந்தால், சிறிலங்கா அரசு தன்னுடைய பகுதி என்று சொல்கின்ற நிலப் பரப்புகளில் "இறைமை" இழந்த நிலையில் இருப்பதைப் காணலாம்.

தமிழீழத்தில் சிறிலங்கா அரசு "மக்கள் இறைமையை" கொண்டிருக்கவில்லை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையை" கொண்டிருக்கவில்லை, "உள்ளக இறைமையை" கொண்டிருக்கவில்லை. இவைகளை எல்லாம் சிறிலங்கா அரசு இழந்து விட்டது.

தமிழீழம் தன்னுடைய இறைமையை காப்பதற்கும், சர்வதேச நாடுகள் அங்கீகரிப்பதற்கும் போராடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழீழத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் நிலைநாட்டப்பட்டுள்ள "நிச்சயத்தன்மையுள்ள சட்ட வடிவ இறைமை" மற்றும் "உள்ளக இறைமை" ஆகியன தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலைநாட்டப்படுகின்ற போது, தமிழீழத்தின் முற்றுமுழுதான இறைமையை சர்வதேசம் அங்கீகரிக்கும். "மக்கள் இறைமை" மூலம் இது நிலைநாட்டப்படுவதால், சர்வதேசம் தமிழீழத்தை அங்கீகரிப்பதற்கு சட்டரீதியான காரணங்கள் முற்றுமுழுதாக இருக்கின்றன.

ஆகவே புலம்பெயர்ந்துள்ள தமிழர்களாகிய நாம் தமிழீழம் உருவாவது குறித்த தேவையற்ற சந்தேகங்களை விட்டுவிட்டு, தமிழீழ மக்கள் தமிழீழப் பிரதேசம் முழுவதையும் நிர்வாகிப்பதற்கு எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

http://www.webeelam.com

Edited by சபேசன்

தலைப்பு சந்தேகத்தையும் அடக்கம் விடையையும் கொடுத்துள்ளது. நாட்டின் இறைமையென்பது அதனது எல்லைக்குட்பட்ட உயர் சட்ட அதிகாரங்களைக் குறிப்பது. தமிழீழம் பற்றிய அமைவு போராட்ட காலங்களுக்கு முன்பே தோன்றிவிட்ட ஒரு கருத்தியல். தற்போது அதன் நடைமுறைத் தன்மை வெளிப்பட்டு நிற்கின்றது. அதன் சாத்தியம் என்பது பலவிடயங்களாக வகுக்கப்கட்டு முடிவு காணப்பட்ட ஒன்று. இது தமிழர்களால் மட்டுமல்ல பல சிங்களத் தலைவர்களும் இதை ஏற்றிருக்கின்றார்கள்.

இறைமை எனும் கொஞ்சம் சிக்கலான கருப்பொருளை எடுத்து ஆராய்ந்து இருக்கிறீர்கள்.... இன்னும் விவரமாக வேண்டுமால் தொடராக வர வேண்டிய விடயங்கள்.... முடிந்த அளவு குழப்பம் வராமல் சொல்லப்பட்டு இருக்கிறது...

இந்த அங்கீகரிக்க பட்ட இறைமையை உடைக்க எண்று சிங்கள அரசு செய்யும் பிரச்சாரங்களையும், நடவடிக்கைகளையும் சொல்லி இந்த கட்டுரையை முழுமை படுத்தினால் நல்லது...

நண்றி...

*******

Edited by harikalan

  • கருத்துக்கள உறவுகள்

இறைமைக்கு இவ்வளவு வியாக்கியானமா?நன்றி சபேசன்.

இறைமை என்றால் என்னவென்று விளக்கிய சபேசனுக்கு நன்றிகள்

தமிழீழத்தின் மீது சந்தேகம் கொண்ட அனைவரும் இக் கட்டுரையை ஒரு முறை படித்தல் நலம்(தெளிவுபெற)

  • கருத்துக்கள உறவுகள்

இறைமையைப் பற்றி நல்ல விளக்கங்கள் தந்துள்ளீர்கள் சபேசன். மிக்க நன்றி.

காலத்துக்கு தேவையான கட்டுரை சபேசன். நன்றி!

இன்னொரு வழியில் சொல்வதானால் இறைமை என்பது சுயநிர்ணய உரிமை நிலை நிறுத்தப்படும் பொழுது பிறக்கிறது.

ஈராக்கின் இன்றய நிலையை வெளியக இறைமை உள்ள ஆனால் நடைமுறையில் உள்ளக இறைமை அற்ற நாட்டிற்கான உதாரணமாகப் பார்க்கலாம். ஈராக்கியர்களின் அரசு என்பது பெயரளவில் இருந்தாலும் அது தனது எல்லைகளிற்குள் நடக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அற்று இருக்கிறது. அதற்கு அங்கு இருக்கும் ஆக்கிரமிப்புப் படைகள், தனியார் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடு இல்லை. அவர்கள் ஈராக்கிய சட்டங்களிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று சட்ட மூலத்தில் (constitution) மாற்றம் கொண்டுவரப்பட்டது. இன்னொரு உதாரணமாக ஈராக்கின் எண்ணை வளங்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து தெரிந்தெடுத்த அமொரிக்க நிறுவனங்களிற்கு அபிவிருத்தி செய்தல் என்ற எண்ணை சட்டம் (Oil Law) மூலம் தாரை வார்க்கப்பட்டது.

பெருத்த ஆரவாரத்துடன் ஈராக்கி மக்களிடம் அவர்களை அவர்களே ஆளுவதற்கு கைய்யளிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதற்கா தேர்தல் கூட நடத்தப்பட்டு அரசு அமைக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் ஈராக்கிற்கு என்று புதிய சட்டமூலம் வரையப்பட்டது. அதில் மேல் கூறிய 2 உம் புகுத்தப்பட்டது.

ஈராக் என்ற நாடு இருப்பதாக ஏனைய நாடுகள் ஏற்றுக் கொண்டிருப்பதால் அதன் வெளியக இறைமை பேணப்படுகிறது. மற்றும்படி நடைமுறையில் அது உள்ளக இறைமை அற்ற நாடாக இருக்கிறது.

கொசவே உள்ளக இறைமை கொண்ட பகுதியாக இன்று இருக்கிறது. அப்காசியா உள்ளக இறைமை உள்ள நாடாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் இறையாண்மை பற்றிய விளக்கத்துக்கு நன்றி. ஆனால் எமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற ஒரு நிலையில் நின்று உதாரணங்களை காட்டுவது மட்டும் போதாது.

இறையாண்மை மிக்க ஈராக் மீது அமெரிக்கப் போர். இறையாண்மை மிக்க.. சூடான்.. ஏமன் போன்ற நாடுகள் மீதான அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல். இறையாண்மை மிக்க ஈரான் மீது அமெரிக்க அச்சுறுத்தல்..! இறையாண்மை மிக்க சேர்பியா மீதான தாக்குதல்... இப்படிப் பல..! இப்படி அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மைகள் கூட திட்டமிட்டு மீறப்படும் செயற்பாடுகளும் நிகழ்ந்திருக்கின்றன.

ஏன் இந்தியா கூட இலங்கையின் இறையாண்மையை மீறித்தான் தமிழீழத்துக்குப் பொட்டனி போட்டது. அதை நாம் இந்தியா தமிழீழ இறையாண்மையை ஏற்றுக் கொண்டதாகக் கூற முடியுமா...??!

நாம் எழுத்தில் எழுதுவது போல.. எல்லாம் அமையும் என்றால் இன்று தமிழீழக் கொடி.. பறந்திருக்க வேண்டும் ஐநாவில்.

ஆனால் எமது தாயகத்தின் இறையாண்மை அங்கீகாரத்துக்கு சாத்தியம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. அதை உலகம் உணரும் வேளை வரணும். அக இறையாண்மை என்பதை நிலைநாட்டுவது கடினம் அல்ல. ஆனால் புற இறையாண்மைக் காண அங்கீகாரம் என்பதுதான் ஒரு நாட்டின் இயக்கத்துக்கு உலக அரங்கில் அவசியம். இன்றேல் கியூபா போன்று தனித்து விடப்படுவோம் உலக அரங்கில். தொடர்ந்து நம்மவர்கள்.. சொந்த இறையாண்மை மறந்து அகதியாகி.. ஜேர்மனி.. லண்டனில் இருந்து இறையாண்மை பற்றி பேசிக் கொண்டிருப்பர்...! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

அனைத்து உலகத்தமிழர்களும் தங்களுக்குள் இருக்கும் சிறு பிரச்சனைகளை பின் தள்ளிவிட்டு இன்றைய காலகட்டத்தில் முதல் தெரிவு எது என்பதை முடிவு செய்ய வேண்டும். அதுதான் தமிழர்களுக்கான ஒரு நாடு தமிழீழமே . அதை அடைவதற்கான சகல வழிகளையும் உலகத்தமிழர் செய்ய வேண்டும்....

உதாரணமாக அயர்லாந்து மக்கள் தங்களது போராட்டத்தின் போது தாங்கள் இரு மதப்பிரிவினரும் ஒற்றுமையாக இருக்க முடியாது என்று தெரிந்தும் அவர்கள் முதல் எடுத்த முடிவு பிரித்தானிய படையை வெளியே அனுப்புவது. அதன்படியே போராடி வெற்றி கண்டார்கள். நாங்களும் அதே கட்டத்தில் தான் நிற்கிறோம் முதலில் ஆக்கிரமிப்பு படையை வெளியேற்ற அனவரும் ஒன்று சேர்ந்து கரம் கொடுப்போம்.

தமிழர்கள் இறைமையுள்ள ஒரு நாட்டை அமைக்கக் கூடிய வாய்புள்ளவர்கள் என்பது தெளிவானது. தொடர் நிலப்பரப்பு, மொழி, கலாச்சாரம் என்பன இலங்கையில் அதைத் தீர்மானிக்கக் கூடியதாயுள்ளது. அங்கீகரிப்பென்பது பின்பு பெறப்பட வேண்டியது. காரணிகள் சாதகமாயுள்ளன. ஆனால் அங்கீகரித்தல் வலிந்து பெறப்படவேண்டிய ஒன்று. செயற்பாடுகள், பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் தடைகள் என்றெல்லாம் அவை விரிந்து செல்வதை இன்று காண்கின்றோம். நெடுக்ஸ் சொல்வது போல் மீறப்படுகின்ற இறையாண்மையைக் காப்பது, அந்தந்த நாட்டினது கடமை. வலிமையுடையவர்கள் இச் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். இந்தியாவும் தமிழரின் சுயநிர்ணயத்தில் வெளிப்படையாக மாறுபட்டு நிற்கவில்லை. இறையாண்மை என்பது வெறும் காரணிகளில் மட்டும் தங்கிநிற்காது அதைக் காக்கும் பலத்திலும் தங்கி நிற்கிறது. அந் நிலை தமிழீழத்திற்கு இருக்கும் என்பது எனது எண்ணம். இறைமை போரிடும் வலிமையினால் மட்டுமன்றி ஒப்பந்தங்களாலும் பாதுகாக்கப்படலாம்.

போர் நடைபெற்று வருகின்ற இன்றைய மோசமான நிலையிலும் விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்காது இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். தமிழீழ மக்களின் இறைமையை சர்வதேசம் அங்கீகரிப்பதில் ஏற்பட்ட ஒரு சாதகமான திருப்பமாக விடுதலைப் புலிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பார்க்கிறார்கள்.

பொருத்தமான நேரத்தில் இணைக்கப்பட்ட சிறந்த கட்டுரை.

Edited by இணையவன்

நல்லதொரு கட்டுரை. வாழ்த்துக்கள். தலைப்பை மட்டும் முடிந்தால் "தமிழீழம் நிச்சயமே" என்று மாற்றி விடுங்கள். தலைப்புகளில் கூட சந்தேகத்தின் சாயல் படராமல் தன்னம்பிக்கை மிளிரட்டும். ஏனென்றால்

வெற்றி நிச்சயமே!!!

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரைக்கு நன்றி சபேசன்

http://en.wikipedia.org/wiki/Kent_and_Dollar_Farm_massacres

விக்கிபீடியாவில் பார்த்த ஒன்று. சிங்கள மக்கள் தம்மைப் புலிகள் பெகான்றதாகச் சொல்லி ஆவணப்படுத்தியிருக்கின்றார்

*********

Edited by harikalan

  • தொடங்கியவர்

கட்டுரையை வாசிக்கத் தூண்டுவதற்குத்தான் இப்படியான ஒரு தலைப்புக் கொடுக்கப்பட்டது.

முதலில் நான் "தமிழீழ மக்களின் இறைமை" என்றுதான் தலைப்பு கொடுத்தேன். ஆனால் சுயநிர்ணய உரிமை, இறைமை, தேசியம் என்று எழுதினாலே, அதை கடினமான விடயங்களாகக் கருதி ஆர்வமாக வாசிப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள்.

அதனால் பின்பு பலரை வாசிக்க வைக்கும் நோக்கில் இந்தத் தலைப்பு கொடுக்கப்பட்டது.

இங்கே பாவிக்கப்பட்டுள்ள சொற்கள் ஆங்கிலச் சொற்கள் அல்ல. அவைகள் லத்தீன் மொழியில் இருந்து உருவானவை. அரசியலை எந்த மொழியில் படித்தாலும், இந்தச் சொற்கள் இருக்கும்.

ஆகவே இந்தச் சொற்களை நான் பாவித்ததைக் கொண்டு என்று ஆங்கிலத்தில் புலமை உள்ளவனாக தூயவன், ஈழப்பிரியன் போன்றவர்கள் நினைத்து விட்டார்கள். என்னிடம் எமது நாட்டிற்கு தேவையான சில வேலைகளை செய்யமுடியுமா என்றும் கேட்டிருக்கிறார்கள்.

ஒன்றை படித்து புரிந்து கொள்கின்ற அளவில்தான் என்னுடைய ஆங்கில அறிவு இருக்கிறது. கட்டுரை எழுதுகின்ற அளவிற்கு அல்ல.

ஆனால் ஆங்கிலக் கட்டுரைகளின் தேவை என்னால் உணரக் கூடியதாக இருக்கிறது. கட்டுரை எழுதுவதற்காகவாவது ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன்.

**********

Edited by harikalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கருத்துக்கள்!!!! நன்றி சபேசன்.

இக்கட்டுரை எம்மவர்க்கு மேலும் நம்பிக்கைதரும்

இது அரசியல் ரீதியானதாக நான் உணர்கிறேன். தமிழீழத்தின் சாத்தியத்திறகும் உறுதிப்பாட்டிற்கும் பொருளாதாரத்தினை வைத்து ஆராயமுடியுமா?

தமிழீழம் சாத்தியமே அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்

கட்டுரை நல்லாத்தான் இருக்கு. ஆனால் இறைமை மட்டும் இருந்தால் எல்லாரும் அங்கீகரித்து விடுவார்களா.?

எப்போது எங்களின் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்வதோடு, மற்றவருக்கும் தீங்கு செய்ய மாட்டோம் எனும் கருத்தை எப்போது விதைக்கிறோமோ அப்போதான் உண்மையிலேயே நாங்கள் அங்கீகரிக்க படுவோம்.

எங்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்வதை தடுக்க பலவளிகளிலும் தடையாக இருப்பது இலங்கை அரசுதான். பயிர்செய்கைக்கும் சரி உற்பத்தி மூலபொருட்களும் சரி இலங்கை அரசை தாண்டாமல் வரும் வளிகள் கிடையாது. முன்னேறிவிட கூடாது என்பதுக்காகவே தடை செய்து இருக்கிறது அரசு.

***********

Edited by harikalan

யாருக்கு நாம் என்ன தீங்கு செய்தோம் ????

மன்னிக்கவும்

நீங்கள் செய்ய இல்லை எண்டாலும் பறவாய் இல்லை. ஆனா நீங்க தீங்கு செய்ய இல்லை எண்டு யாரும் ்சொல்லுறது இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.