Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்

christopherJan 05, 2025 14:28PM
guDyZi5A-image-1-1.jpg

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (ஜனவரி 5) நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். 

கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு!

அவர், “2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இன வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் முதிர்ச்சியின் அறிவுச்செயல்பாடாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடி இருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இப்படி ஒரு விழாவை அரசே முன்னின்று நடத்தாது என்று சொல்லத்தக்க வகையில், மாபெரும் பண்பாட்டுப் பெருவிழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நமக்கான இடத்தை நிலைநிறுத்துவதுதான் நம்முடைய நோக்கம்!

அமைச்சருக்கு பாராட்டு!

வரலாறும், பண்பாடும், தொல்லியலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கும் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரனுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

இரண்டு பேரும் தொல்லியல் ஆர்வலர்கள். இப்போது கேட்டாலும், இந்த மேடையில் மணிக்கணக்கில் சிந்துவெளியைப் பற்றி பேசக் கூடியவர்கள். இவர்கள் இந்தத் துறைக்கு கிடைத்திருப்பது இந்தத் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை கிடைத்திருக்கிறது.

ஆரியமும் சமஸ்கிருதமும்தான் மூலம் என்பது கற்பனை!

சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாளன்று உலகுக்கு அறிவிக்கப்பட்டது. 

‘தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ்’ என்ற இதழில் இந்தியத் தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் அதை அறிவித்தார். இது இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கி நம்முடைய கடந்த காலத்தை பற்றிய புரிதலையே மாற்றி அமைத்தது. 

ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்று கற்பனையை வரலாறு என்று அதற்கு முன்னர் பலரும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். அதை மாற்றியது ஜான் மார்ஷல் அவர்களின் ஆய்வுகள்தான். 

சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது. அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என்று அவர் நூறாண்டுகளுக்கு முன்பு சொன்ன குரல் இன்றைக்கு வலுப்பெற்றிருக்கிறது. 

“என்னதான் அங்கு இல்லை!” என்று கேட்கும் அளவுக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட வளர்ச்சி பெற்ற ஒரு நாகரிகம் சிந்துவெளியில் இருந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு அடையாளங்கள் காட்டுகிறது. 

கீழடி – சிந்துவெளி ஒற்றுமைகள்!

சிந்து வெளியில் ‘காளைகள்’தான் இருந்தது. இது திராவிடச் சின்னம்! சிந்துவெளியில் இருந்து, இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில், ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்று வருகிறது. 

சிந்துவெளி நாகரிகம் சார்ந்த ஒரு முத்திரையில் காளை உருவமும், அதை அடக்க முயலும் வீரரை அந்த காளை தூக்கி வீசுவதும் இருக்கிறது. 

அப்படியே மற்றொரு பக்கம் பார்த்தோம் என்றால், குதிரை முத்திரை சிந்துவெளியில் இல்லை. வேத இலக்கியங்களில் பெருநகரங்களும் இல்லை, தாய்த்தெய்வ வழிபாடும் இல்லை.

ஆனால், இந்த இரண்டும் சிந்துவெளியிலும் இருக்கிறது. கீழடியிலும் இருக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் சங்ககாலத் தமிழர்களின் மூதாதையர் இருந்த இடம்தான் சிந்துவெளி என்று நிறுவப்பட்டிருக்கிறது. 

ஜான் மார்ஷலை பாராட்டிய பெரியார், அண்ணா

சிந்துவெளி பற்றி ஜான் மார்ஷல் தன்னுடைய கண்டுபிடிப்பை வெளியிட்டதும், தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய விடுதலை நாளிதழில் அதைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார். பேசியும் இருக்கிறார். 

தந்தை பெரியாரை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவும் 1948-ஆம் ஆண்டிலேயே சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை வெளிக்கொணர்ந்த சர் ஜான் மார்ஷலின் சாதனைகளை பாராட்டி எழுதியிருக்கிறார். 

2010-ஆம் ஆண்டு கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழி மாநாட்டு இலச்சினையில், குமரி வள்ளுவர் சிலை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் வரியுடன் சேர்த்து சிந்துவெளி முத்திரையையும் பதிவிட்டார்.

அந்த மாநாட்டில் புகழ்பெற்ற அறிஞர்களான அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிந்துவெளி பண்பாட்டையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஒருங்கிணைத்து முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்தார்கள். 

அந்த மரபின் வழி வந்த நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில், இப்போது சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நினைவு பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்துகிறோம். 

சிந்துவெளி வரி வடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும், வடிவவியல் ஆய்வு என்ற நூலையும் இங்கு ஒரு வெளியிட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ஜான் மார்ஷலின் சிலைக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். சிந்துவெளிப் பண்பாட்டை கண்டுபிடித்தது மூலமாக, நம்முடைய வரலாற்றையும், பெருமையையும் மீட்டவர் ஜான் மார்ஷல், அவரைச் சிறப்பிப்பது தமிழ்நாடு அரசுக்குப் பெருமை.

சிந்துவெளிப் பண்பாடு பேசப்படும் வரைக்கும், ஜான் மார்ஷலுக்கு சிலை வைத்தது திராவிட மாடல் அரசு என்ற பெருமையும் நிலைக்கும்.

தாமிரபரணி நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அளவில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

தமிழ்நாடு தொல்லியல் துறையால், இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளை ஆய்வு மூலம் ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவியல் வழிப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் உறுதி செய்திருக்கிறோம். 

கீழடி அருங்காட்சியகம் போலவே பொருநையிலும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருகிறது. எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. 

ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு!

அறிஞர் பெருமக்கள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன். 

செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். 

அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்பது முத்தான முதல் அறிவிப்பு.

சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஓர் ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு.

தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி. ஆய்வாளர்கள், நாணயவியல் ஊக்கப்படுத்தும் விதமாக, கல்வெட்டியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்பது மூன்றாவது அறிவிப்பு. 

இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன். 

சிந்துவெளி முதல் கீழடி வரை தமிழினத்தின் பெருமை நிரம்பி இருக்கிறது. அறிவியல் முறைப்படி சான்றுகள் அடிப்படையில், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை அறிவுலகம் இப்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. 

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தமிழைத் தவிர்த்துவிட்டு இனி எழுதமுடியாது என்று நாம் உரக்கச் சொல்வோம்! ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பின் நூற்றாண்டில் அவருக்கு நாம் நன்றியை உரித்தாக்கி, அவர் விட்டப் பணியை நாம் தொடர்வோம்” என்று ஸ்டாலின் பேசினார்.

 

https://minnambalam.com/political-news/the-mystery-hidden-in-the-indus-valley-stalin-announces-three-mega-prizes/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2025 at 11:40, கிருபன் said:

சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது. அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என்று அவர் நூறாண்டுகளுக்கு முன்பு சொன்ன குரல் இன்றைக்கு வலுப்பெற்றிருக்கிறது. 

 

On 5/1/2025 at 11:40, கிருபன் said:

சிந்து வெளியில் ‘காளைகள்’தான் இருந்தது. இது திராவிடச் சின்னம்! சிந்துவெளியில் இருந்து, இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில், ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்று வருகிறது. 

 

On 5/1/2025 at 11:40, கிருபன் said:

அவர், “2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

திராவிட இனம் என்று ஒன்று இருக்கிறதா?தமிழ்நாட்டை அளுகின்ற வந்தேறிகளைத்தவிர வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவகள் தங்களைர் திராவிடர்கள் என்று ஒத்துக் டகொள்கிறார்களா? திராவிட மொழி என்ற ஒன்று இருந்திருக்கிறதா?அதற்கு ஏதாவது சான்றுகள் இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழர்களின் அருமை பெருமையான ஓலைசுவடிகளை சென்னை நூலகத்தில் கரையான் அரிக்க வைத்து கொண்டு இந்த சவுடால் கதை .

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான அறிவுப்புகள்.

தானும் தின்னான் நாய்க்கும் கொடான் என்பது ஈழத்தமிழரோடு பிறந்த குணம்.

தாமும் உருப்படியாக எதுவும் செய்யமாட்டார்கள். செய்பவர் மீதும் வசை பாடுவார்கள்.

இந்த அறிவிப்புகள் மூலம் சிந்துவெளியில் இருந்தது தொல் தமிழர் நாகரிகமே என்பதை குறிப்பாக அந்த எழுத்தை படிக்க முடிந்தால், தென்னிந்திய மொழிகளுக்கு தாய் மட்டும் அல்ல, இந்திய மொழிகளிலும் முந்தையது தொல்தமிழே என்பதை நிறுவ முடியும்.

ஒரு ஈழத்தமிழனான நன்றியும் வாழ்த்துக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் திமுக மீது எவ்வளவு விமர்சனம் இருப்பினும் இது போன்ற விஷயங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

மேலே இந்த அறிவுப்புக்கு குதர்க்கமாக பதிலளித்து இருந்தவர்கள் தங்கள் தகமையை தாமகவே பறை சாற்றிக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளலாம் 

குடும்ப உறவுகள், திருமணம் செய்யும் முறை, உண்ணும் உணவு, தாய்வழி சமூக ஒற்றுமை, உருவ ஒற்றுமை, DNA, ஆகியவற்றை ஒப்பிட்டால்  தமிழர் தெலுங்கர் கன்னடர் என நாம் எல்லோரும் ஒரே இனத்தவரே. 

அவர்கள் தாம் வேறு என்று சொன்னாலும் நாம் அந்த உண்மையை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனென்றால் தாய் நாம் தான். பிள்ளைகள் தாயை மறுத்தலித்தாலும் தாய் அதை ஏற்று சும்மா வாய் பொத்தி இருக்க முடியாது 

 

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி! 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

முதலில் தமிழர்களின் அருமை பெருமையான ஓலைசுவடிகளை சென்னை நூலகத்தில் கரையான் அரிக்க வைத்து கொண்டு இந்த சவுடால் கதை .

 

நீங்கள் கண்டீர்களா அல்லது அறிந்தீர்களா?

இல்லை, நீங்கள் சொல்வதில்  இருந்தே தெரிகிறது எழுந்தமான கருத்து என்று.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

 

நீங்கள் கண்டீர்களா அல்லது அறிந்தீர்களா?

இல்லை, நீங்கள் சொல்வதில்  இருந்தே தெரிகிறது எழுந்தமான கருத்து என்று.

 

இருக்கு தேடி எடுத்து போட கோஞ்சம் நேரம் தாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kadancha said:

நீங்கள் கண்டீர்களா அல்லது அறிந்தீர்களா?

ஏன் தமிழகத்தில்  கடந்த வருடங்களில் பல்லாயிரம் ஓலைசுவடிகள் காணாமல் போய் உள்ளன அழிக்பட்ட சம்பவங்கள் அடி முக்கியமானவை விற்கப்பட்ட செய்திகள் கேள்விப்படவில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு?

சிந்துவெளி, கொடுமணல்

பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 8 ஜனவரி 2025, 04:25 GMT

தென்னிந்தியாவில் கிடைக்கும் குறியீடுகளுடன், சிந்து சமவெளியில் கிடைக்கும் குறியீடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், சுமார் 90 சதவீதம் அளவுக்கு ஒற்றுமை இருப்பதாகச் சொல்கிறது புதிய ஆய்வு ஒன்று.

சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவு சென்னையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சிந்துவெளிப் பண்பாட்டைக் கண்டுபிடித்து அறிவித்த பிரிட்டிஷ் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷலின் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட ஓர் ஆய்வின் முடிவு பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது.

'Indus Signs and Graffiti Marks of Tamilnadu: A morphological Study' என்ற இந்த ஆய்வை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கே. ராஜனும் ஆர். சிவானந்தமும் இணைந்து மேற்கொண்டனர்.

 

இந்த ஆய்வு முடிவுகளின்படி, சிந்துவெளி நாகரீகத்தில் கிடைக்கும் எழுத்துகள் மற்றும் குறியீடுகளுக்கும் தமிழ்நாடு, தென்னிந்தியாவில் கிடைத்த பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் பெருமளவு ஒற்றுமை இருப்பது தெரிய வந்துள்ளது.

சிந்து சமவெளியில் வளர்ச்சியடைந்த ஒரு எழுத்து முறை இருந்தது பல ஆதாரங்களின் மூலம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எழுத்துகள், முத்திரைகள், மட்பாண்ட ஓடுகள், உலோகப் பொருட்கள் ஆகிவற்றில் இருந்து கிடைத்தன. இம்மாதிரி கிடைத்த 4,000 பொருட்களில் இருந்து சுமார் 450 தரப்படுத்தப்பட்ட குறியீடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

 

மிக நீளமான வாக்கியம்

பொதுவாக எழுத்து வடிவத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் சித்திர எழுத்துகள், பிறகு ஒரு கருத்தை வெளிப்படுத்துவதைப் போன்ற சித்திரங்கள், அதன் பின் ஒரு வார்த்தையை குறிக்கும் வகையிலான முத்திரைகள் இறுதியாக ஒரு ஒலியைக் குறிப்பிடும் எழுத்துகள் என வளர்ச்சியடைகின்றன.

சிந்துவெளியில் கிடைத்த தரப்படுத்தப்பட்ட குறியீடுகளைப் பொறுத்தவரை, அவை சித்திரங்களை எழுத்தாகப் (Logo-syllabic) பயன்படுத்தும் எழுத்து முறையை சார்ந்தவை என்றே பலரும் கருதுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

சிந்து சமவெளியில் கிடைத்த வாக்கியங்கள் 4-5 குறியீடுகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. 50க்கும் மேற்பட்ட வாக்கியங்களில் பத்து குறியீடுகள் இருந்தன. தோலாவிராவில் கிடைத்த ஒரு பலகையில் 10 எழுத்துகள் இருந்தன. இதுவரை கிடைத்தவற்றிலேயே மிக நீளமான வாக்கியத்தில் 26 எழுத்துகள் இருந்தன.

சிந்து சமவெளி, தமிழ்நாடு தொல்லியல் துறை

பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN

சிந்துவெளி எழுத்துகள் பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகவில்லை என்பது சிந்துவெளி குறியீடுகளில் இருக்கும் மற்றொரு முக்கியமான அம்சம் என்கிறது இந்த ஆய்வு.

அந்த பரிணாம வளர்ச்சிக் கட்டத்தை அடைவதற்கு முன்பாகவே அவை தரப்படுத்தப்பட்டுவிட்டன. மேலும், பிராந்திய ரீதியான வேறுபாடுகளும் அக்குறியீடுகளில் இல்லை.

கமில் ஸ்வலபில், அஸ்கோ பர்போலா, சுனிதி குமார் சாட்டர்ஜி ஆகியோர் சிந்துவெளி குறியீடுகள் தொல் திராவிட மொழிக்கானவை எனக் கருதுகிறார்கள். ஆனால், வேறு சில ஆய்வாளர்கள் அவை இந்தோ - ஐரோப்பிய மொழிக்கானவை எனக் கருதுகிறார்கள்.

மைக்கல் மிட்சல், ஸ்டீவ் ஃபார்மர் போன்றவர்கள் அவை எந்த மொழியையும் சார்ந்தவை அல்ல, வெறும் குறியீடுகள் மட்டுமே என்கிறார்கள். பகதா அன்சுமாலி முகோபத்யாய், இந்தக் குறியீடுகள் பொருளியல் சார்ந்த வடிவவியலைக் கொண்டவை என்றும் அவற்றுக்கு ஒலி கிடையாது என்றும் சொல்கிறார்கள்.

திராவிட கலாசாரத்துடன் இணைத்து ஆராய்ச்சி

சிந்து சமவெளி, தமிழ்நாடு தொல்லியல் துறை

பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN

இந்த சிந்துவெளி எழுத்துகளைப் புரிந்துகொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஐராவதம் மகாதேவன், பகதா அன்சுமாலி முகோபத்யாய் ஆகியோர் இதில் சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம், சிந்து சமவெளி நாகரீகத்தை திராவிட கலாசாரத்துடன் இணைத்து ஆராய்வதிலும் பல ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாகவே சிந்துவெளி குறியீடுகளையும் தமிழ்நாட்டில் அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த குறியீடுகளையும் இந்த ஆய்வு ஆராய்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 140 தொல்லியல் தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 15,184 பானை ஓடுகளில் இருந்து, 14,165 பானை ஓடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2,107 குறியீடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, அதிலிருந்து 42 குறியீடுகள் அடிப்படைக் குறியீடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 544 குறியீடுகள் அவற்றின் வேறுபாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தொல்லியல் துறை, சிந்து சமவெளி

பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN

இப்படி தொகுத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் கிடைத்த பல குறியீடுகள் சிந்து வெளி எழுத்துகளுக்கு இணையாக விளங்குகின்றன என்கிறது இந்த ஆய்வு.

தமிழ்நாட்டில் வகைப்படுத்தப்பட்ட 42 குறியீடுகள் மற்றும் அவற்றை ஒத்த குறியீடுகளில் 60 சதவீத குறியீடுகளுக்கு இணை எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளில் கிடைத்துள்ளன. இவை தற்செயலாக நடந்திருக்க முடியாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேலும், சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் எவ்வித தடயங்களும் இல்லாமல் மறைந்திருக்காது என்ற அடிப்படையில் அவை வெவ்வேறு வடிவங்களாக மாறியிருக்கும் அல்லது பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கும் என நம்புகிறார்கள்.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி

சிந்து சமவெளி, தமிழ்நாடு தொல்லியல் துறை

பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN

தென்னிந்தியாவில் ஒரே வகையான குறியீடுகள் கிடைப்பது, தென்னிந்தியாவுக்கும் சிந்துவெளி நாகரீகத்துக்கும் இடையில் இருந்த ஒருவித பண்பாட்டுத் தொடர்பைக் குறிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஆனால், இதை உறுதிசெய்யக் கூடுதல் ஆய்வுகள் தேவை என்பதையும் இந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிந்துவெளி பண்பாடு செப்புக் காலத்தில் இருந்தபோது, தென்னிந்தியா இரும்புக் காலத்தில் இருந்தது.

ஆகவே, இரு பகுதிகளுக்கும் இடையில் நேரடியாகவோ இடைநிலை மண்டலங்கள் வழியாகவோ பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம்.

தென்னிந்தியாவில் உள்ள இரும்புக் கால கல்லறைகளில் கிடைக்கும் சூது பவளம், அகேட் மணிகள், செப்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் ஆகியவை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்திருக்கலாம் என்கிறது ஆய்வு.

சிந்து சமவெளி, தமிழ்நாடு தொல்லியல் துறை

பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN

சிந்து சமவெளி நாகரீகம் முடிவுக்கு வந்ததற்கு காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அங்கிருந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தபோது, அவர்கள் தங்களுடன் தங்கள் மொழி, கலாசாரம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர்.

இந்த ஆய்வை மொழியியல் ரீதியான ஒப்பீட்டு ஆய்வு என்பதைவிட வடிவரீதியிலான ஒப்பீட்டு ஆய்வு என்று சொல்வதே சரி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சிந்து சமவெளி, தமிழ்நாடு தொல்லியல் துறை

பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN

சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி, சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகள் அல்லது எழுத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வழியைக் கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் டாலர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையமும் இணைந்து சிந்துவெளிப் பண்பாடு குறித்தான ஆராய்ச்சிக்கு அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கும் பொருட்டு இரண்டு கோடி ரூபாய் நிதி நல்கை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.