Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காற்றாடி - அத்தியாயம் ஒன்று

----------------------------------------------
மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான்.
 
இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும்.
 
அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான்.
 
அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். 
 
அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான்.
 
உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர்.
 
இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. 
 
(தொடரும்....................)   

Edited by ரசோதரன்

  • Replies 50
  • Views 2.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    காற்றாடி - அத்தியாயம் மூன்று -----------------------------------------------     இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வே

  • ரசோதரன்
    ரசோதரன்

    காற்றாடி - அத்தியாயம் இரண்டு ------------------------------------------------       சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தத

  • ரசோதரன்
    ரசோதரன்

    காற்றாடி - அத்தியாயம் நான்கு -----------------------------------------------   தனம் மாமி வீட்டுக்கு வந்திருந்தார். ஊரில் முறை தெரிந்த சொந்தக்காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் மாமா

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரசோதரன் said:

அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை.

நம்ம காலத்தில் அரைக் காற்சட்டையில் இருந்து 

முழு காற்சட்டைக்கு மாறினால் ஓஎல் பாஸாகி விட்டான்.

மணிக்கூடும் கட்டினால் எஎல் பாசாகி விட்டான்.

தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நம்ம காலத்தில் அரைக் காற்சட்டையில் இருந்து 

முழு காற்சட்டைக்கு மாறினால் ஓஎல் பாஸாகி விட்டான்.

மணிக்கூடும் கட்டினால் எஎல் பாசாகி விட்டான்.

தொடருங்கள்.

ஒரு நாள் பாடசாலையில் பிரயோக கணித வகுப்பில் நண்பன் ஒருவன் மணிக்கூடு கட்டியிருந்தான். ஆசிரியர் வழமை போல கணக்கை எழுதி விட்டு வகுப்பைச் சுற்றிக் கொண்டிருந்தார். மணிக்கூட்டைப் பார்த்துவிட்டார். எங்களின் வகுப்பறை மேல் மாடியில் இருந்தது. முதலில் நண்பனின் கொப்பி மேல் மாடியில் இருந்து கீழே பறந்தது. சடார் படார் என்று சில அடிகள் விழுந்தது. நல்ல காலம், நண்பனின் மணிக்கூட்டை ஆசிரியர் பறக்க விடவில்லை.

அதுவோ எதுவோ, நான் மணிக்கூடு கட்டுவதேயில்லை......🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2025 at 04:15, ரசோதரன் said:

கணேசலிங்கம் மாஸ்ரரிடம் ஏ லெவல் படித்தவர்களுக்கும் இப்படியான அனுபவம்தான்..

கணிதம் நன்றாக ஓடவில்லை என்றால் தொடையில் மயிர் முளைத்திருந்தாலும் அவருக்குப் பயந்து அரைக்காற்சட்டையுடன் வகுப்புக்குப் போனதாக எனது அண்ணாவின் வகுப்புத்தோழன் (நமக்கு நண்பன்!) சொல்லியிருந்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

நம்மளுடன் ஒருவன் படித்தான் கணிதம் என்றாலே அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது வாய்ப்பாட்டை வாத்தியார் பாடமாக்கி நாளைக்கு சொல்ல சொன்னால் ஆள் லீவு  எடுத்து விடுவான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

🤣....................

இந்தப் பூமிக்கு ஒரே ஒரு சூரியன் தான்........... நான் எழுதியிருப்பதும் அவரே தான்........

எனக்கு பாடசாலையில் அவர் தான் பிரயோக கணித ஆசிரியர். ஆனால் அத்துடன் இல்லாமல், ஊரில் இருந்த வல்வைக் கல்வி மன்றம் என்னும் தனியார் கல்வி நிலையத்திலும் தூய கணிதம், பிரயோக கணிதம் இரண்டும் படிப்பித்தார். நான் அங்கே தான் ஏலெவல் ரியூசனுக்கு போனேன்.

ரியூசனில் இன்னும் உக்கிரமாக இருந்தார். 

அந்த நாட்களில் நல்லையா மாஸ்டர் எதிர் வெக்டர் வேலாயுதம் மாஸ்டர் எதிர் இன்னும் சில ஆசிரியர்கள் என்று ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. 

ஒரு நாள் ரியூசன் வகுப்பில் வேறு எந்த ஆசிரியர்களிடமாவது ரியூசன் படிப்பவர்கள் எழும்பி நில்லுங்கள் என்றார். வகுப்பில், என்னைத் தவிர, எல்லோரும் எழும்பி நின்றார்கள். அவ்வளவு பேரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் அன்று வகுப்பு நடந்தது............... கிறுங்கவே கிறங்காத, பயமறியா மனிதன் அவர்..................

சில வருடங்களின் முன், கனடாவில் பழைய வகுப்புத் தோழி ஒருவரைச் சந்தித்தேன். நீங்கள் வார்த்தகப் பிரிவில் தானே படித்தீர்கள்............ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்: ஆரம்பத்தில் நான் உங்களுடன் கணிதப் பிரிவில் தான் இருந்தேன். ஒரு நாள் கணேசலிங்கம் மாஸ்டர் எனக்கு கணக்கு சரிவராது என்று என்னை வர்த்தகப் பிரிவிற்கு கலைத்துவிட்டார்....................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நம்மளுடன் ஒருவன் படித்தான் கணிதம் என்றாலே அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது வாய்ப்பாட்டை வாத்தியார் பாடமாக்கி நாளைக்கு சொல்ல சொன்னால் ஆள் லீவு  எடுத்து விடுவான் 

உங்கள் நட்பு  பறவா இல்லை..போன வருசம் ஒரு மருத்துவனைக்கு தன்னார்வத் தொண்டுப் பணிக்கு போயிருந்தேன்.கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் ஒரு டச்சு பெண்மணியின் மேற் பார்வையில் பணியாற்ற வேணும்.மருத்துவமனையின் அத்தியாவசிய தொலைபேசிகளை இணைக்கும் இலக்கங்களை பாடாமக்கிக் கொண்டு போய் செய்ய வேணும்.பாடமாக்கிக் கொண்டு போவேன் அவாவைக் கண்டதும் எல்லாம் மறந்துடும்.சின்னப் பிழை என்றாலும் இது சரிப்பட்டு வராது..மண்டைக்குள் உனக்கு ஏதாவது இருக்குதா என்று எல்லாம் கேட்பா..காலப் போக்கில் அங்கு போகும் நாள் இரவு வந்தாலே நித்திரை வராது.இப்போ தனியாக செய்ய தொடங்கி விட்டேன் கடந்த வருடம் கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் மொழி பெயர்ப்பு வேலை ஒன்றும் வராமலிருந்த காரணத்தினால் தன்னார்வத் தொண்டுப் பணியாவது செய்வோம் என்று இணைந்து தேடிக் கொண்டது.இப்போ நான் இரண்டு வேலை செய்கிறேன்.அது வேறு விடையம்.தற்சமயம் இரத்த அழுத்த மாத்திரை எடுக்க வேணும் என்று வைத்தியரால் பரிந்துரைகப்பட்டுள்ளேன்.அந்த பெண்  ஆரம்ப காலத்தில் எங்கள் நாட்டில் தேயிலை உற்பத்தியை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய பரம்பரைச் சேர்ந்தவர்.எங்கள் நாட்டு நடப்புக்கள் எல்லாம் தெரியும் விளங்கும்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நம்மளுடன் ஒருவன் படித்தான் கணிதம் என்றாலே அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது வாய்ப்பாட்டை வாத்தியார் பாடமாக்கி நாளைக்கு சொல்ல சொன்னால் ஆள் லீவு  எடுத்து விடுவான் 

🤣..................

ஜெயமோகன் தனக்கும் கணிதபாடம் வரவே வராது என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், எல்லாக் கணக்குகளையும் பாடமாக்கி, கணிதப் பரீட்சைகளில் நல்ல புள்ளிகள் எடுத்தேன் என்றும் சொல்லுகின்றார்.  அவருக்கு ஞாபகசக்தி அதிகம் தான், அதற்காக கணக்குகளையே பாடமாக்குவதா............🤣.

அத்துடன் இலங்கையில் படிப்பிக்காத கணக்கு மட்டும் தானே பரீட்சையில் வரும்............ நாங்கள் எதையென்று பாடமாக்குவது....................

  • கருத்துக்கள உறவுகள்

" மீண்டும் பள்ளிக்கு செல்லலாம் " என்பது போல  பழைய பள்ளிக் கால நினைவுகளை ஞாபக படுத்துகிறீர்கள் நன்றி தொடருங்கோ   .

  • கருத்துக்கள உறவுகள்

நான் ssc படித்தபின் விடுமுறையில் கொழும்பில் அத்தானின் கடைக்குப் போயிருந்தேன் . அப்போது அரைக் காற்சட்டைதான் அணிவது வழக்கம் . அன்று கொல்பிட்டியில் பிரபலமான சாப்பாட்டுக்கடை ......... அதற்கு பெற்றா சந்தையில் தேவையான மரக்கறி சாமான்கள் எல்லாம் வாங்கி வானில் ஏற்றிவிட்டு வரும்பொழுது அத்தான் நேராக ஒரு அவரது வாடிக்கையான தையல்கடைக்குப் போய் அங்கு எனக்கு அளவுகள் எடுத்து மூன்று நீளகாற்சட்டைகளும் (ஜபார்ஜி பிரதர்ஸ் துணியில் ) தைக்க சொல்லிவிட்டு ரெடிமேட்டாக  மூன்று ஹென்லி சேர்ட்டுகளும் எடுத்துக் கொண்டு வந்தோம் . ....... அடுத்தநாள் கடைக்கு சென்று அவற்றைப் போட எனக்கு ஒரே கூச்சமாய் இருந்தது ......பின் அதைப் போட்டுகொண்டு யாழ்ப்பாணம் வர வீட்டிலும் சரி நண்பர்களும் சரி என்னை பகிடிபண்ணி ஒரு வழி பண்ணிவிட்டார்கள் ....... பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் பழகிவிட்டது. அந்த நாட்கள் இன்றும் மறக்க முடியாதவை ............!  😇

  • கருத்துக்கள உறவுகள்

   பழைய பள்ளிக் கால நினைவுகளை ஞாபக படுத்துகிறீர்கள் நன்றி தொடருங்கோ   .

  • கருத்துக்கள உறவுகள்

ஓஎல் காலம்தான்...பிரக்ரிக்கலுக்கு லாப் போகவேணும்..இரசாயன வாத்தியார்..படிச்சு படிச்சு பொசுபரசு பற்றி விளங்கப் படுத்திவிட்டுத்தான் ..லாப் போக விட்டவர்..அங்கு பொசுபரசு தண்ணீரில் இருந்தால் எரியாது...வெளியில் இருந்தால் தீப்பற்றும் ..என்று உதாரணங்களுடன் விளங்கப் படுத்தியும் ...பிரக்டிக்கல் முடிய இரண்டுபாவிகள்...முடிந்தபொசுபரசை அமத்திப் போட்டங்கள்... அடுத்தபாடம் வகுப்பில்...உயிரியல்பாடம் வாத்தியார் படங்கீறி விளக்க..ஒருதனின் புத்தகத்துகீழை புசு புசு என்று நெருப்பு...பக்கத்து மேசை நான்.. நெருப்பை கண்ட மற்றவன் ..தீயணைப்பு படைவீரன் மாதிரி..பாய்ந்து  சீ.ஆர் கொப்பியால் அடிக்க ..பறந்த பொசுபரசு..வலது புறங்கையில்  ஆழமாக எரித்துவிட்டது...அதிபரின் காரில் காரில் ஆசுப்பத்திரிபோய் ..இரண்டுநாள்  வாசம்...ஒழித்தவனும் இப்ப கனடாவில்...சூடு பட்டவனும் இப்ப கனடாவில்தான் இருக்கிறம்..இப்படி கனக்க..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றாடி - அத்தியாயம் இரண்டு

------------------------------------------------
 
large.kaaththaadi-1.jpg.5616e15da584b1cd5785e47a899555bb.jpg
 
சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தது.  உரசி சூடாக்கிக் கொண்டே, தான் இன்று பரீட்சைக்கு போகப் போவதில்லை என்பதை எப்படி பக்குவமாகச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அம்மா அழக்கூடும், ஊரையும் கூட்டக் கூடும், ஆனால் இந்த மழையில் ஊர் இங்கே வராது. அப்பா குதிக்கத்தான் போகின்றார். வளர்ந்த பிள்ளை என்று இப்பொழுது ஒரு வருடமாக அடிகள் எதுவும் விழவில்லை. இன்று அது மாறக்கூடும். சித்தப்பா அவர் வாங்கித் தந்த முழுக்காற்சட்டை பற்றி கவலைப்படக்கூடும்.
 
அம்மா ஏற்கனவே எழும்பி விட்டிருந்தார். அடுப்படியில் அரவம் கேட்டது. இப்ப, இந்த மழையில் எந்த விறகு ஈரமில்லாமல் இருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் எங்கள் எல்லோருக்குமாக அவர் அந்த இரண்டு அடுப்புகளையும் தினமும் விடாமல் ஊதிக் கொண்டேயிருக்கின்றார். தேத்தண்ணியை போட்டு விட்டு, எல்லோருக்கும் காலையில் ஏதாவது உணவு செய்யும் நாட்களில், நாங்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு கிளம்பிப் போகும் வரை அவர் அடுப்புக்குள் முன்னால் ஒரு காலை முழுவதும் மடக்கி, மறு காலை முழங்கால் வரை மடித்தும் இருப்பார். 'ஏன் இப்படி இருக்கிறீங்கள், அம்மா...............' என்று கேட்டால் சிரிப்பொன்றே பதிலாக வந்து கொண்டிருந்தது. பெண்கள் எதையுமே வெளியில் சொல்லமாட்டார்களாமே.
 
இன்று பரீட்சைக்கு போகாவிட்டால், இன்றுடன் படிப்பு நின்றுவிடும். அடுத்ததாக என்ன செய்வது............... ஆரம்ப ஆரவாரங்களின் பின், என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கவும் போகின்றார்கள். என்ன செய்வது என்று பல திட்டங்கள் இருக்கின்றன. அதில் எதையாவது ஏற்றுக் கொள்வார்களா என்று தான் தெரியவில்லை. தங்கைகளும், தம்பிகளும் என்ன நினைப்பார்களோ. ஒரு தம்பியை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. எங்கு படித்தாலும், அவன் தான் வகுப்பில் முதலாவதாக வந்து கொண்டிருக்கின்றான். அவன் மட்டும் இப்படி எப்படி பிறந்தானோ தெரியவில்லை. வயிற்றில் பிள்ளைகள் இருக்கும் போது, தாய்மார்களின் உணவுப் பழக்கம் கூட பிள்ளைகளின் மூளைத் திறனை வளர்க்கும் என்று சொல்லுகின்றார்கள். இந்த முற்றத்தில் நிற்கும் புளி வைரக்கண்டி மாங்காயைத் தான் அம்மா எப்போதும் கடித்துக் கொண்டிருந்திருப்பார். தம்பி வயிற்றில் இருக்கும் போது, அந்த வருடம் அந்த மரம் காய்க்கவில்லையோ என்னவோ.
 
மழை தற்காலிகமாக விட்டிருந்தது. மீண்டும் அது ஆரம்பிக்க முன், முகத்தை கழுவி விட என்று கிணற்றடிக்கு போனான். பெரிய வட்டக் கிணறு. ஆனால் மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. மூன்று வீடுகளுக்கு அது தான் கிணறு. கிணற்றின் மேலேயே தகர வேலிகளால் அது பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டுக்காரருக்கு இன்னொரு வீட்டுக்காரை பார்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலிகள். அவை தார் தகரங்கள். எம் எஸ் விஸ்வநாதன், கே வி மாகாதேவன் போன்ற பழையவர்களின் ரசிகரான அப்பா, இந்த தார் தகர வேலியை தினமும் பார்ப்பதால் தான், புதிதாக வந்த இளையராஜாவின் பாடல்கள் தார் தகரத்தில் கம்பால் அடிப்பது போல கொடூரமாக இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவார். அவர் சிவாஜியின் ரசிகரும் கூட. பொதுவாகவே அப்பாமார்களும், மூத்த மகன்களும் எதிரும் புதிருமாகவே வளர்வார்கள் போல.
 
அள்ளிய வாளித் தண்ணீருக்குள் ஒரு சின்ன ஜப்பான் மீன் குஞ்சும் வந்திருந்தது. மழை பார்க்க மேலே வந்து ஆவென்று நின்றிருக்கின்றார் போல. அப்படியே வாளிக்குள் வந்தும் விட்டார். இரண்டு கைகளாலும் அதை தண்ணீருடன் அள்ளி எடுத்து கிணற்றுக்குள் கொட்டிவிட்டான். கிணற்று நீர் சூடாக இருந்தது. வெளியே குளிராக இருக்கும் போது இப்படித்தான், கிணற்று நீர், கடல் நீர் கூட, சூடாக இருப்பது போல தெரியும். இன்னும் சில நாட்கள் மழை பெய்தால், கிணற்றில் தண்ணீர் எட்டித் தொடும் அளவிற்கு வந்துவிடும். எங்களின் பக்க கிணற்றில் உயரமான தடுப்புக் கட்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் இதுவரை எவரும் இந்தக் கிணற்றுக்குள் தெரிந்தோ அல்லது விபத்தாகவோ விழுந்திருக்கவில்லை.
 
அம்மா தேத்தண்ணி போட்டு வைத்திருந்தார். அது எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய சட்டியில் இருக்கும். 'எத்தனை மணிக்கு சோதனை...............' என்று கேட்டார் அம்மா.  பதில் எதுவும் சொல்லாமல் குடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் அதையே கேட்டார்.
 
'நான் போகவில்லை, அம்மா......................' என்றான் அவன். அப்படியே சில கணங்கள் இருந்த அம்மா, மீண்டும் நினைவு வந்தவராக, 'போகாமல் என்ன செய்யப் போகின்றாய்................' என்றார். ஒரு வேலைக்குப் போகலாம் என்றிருக்கின்றேன் என்றான் அவன். 
 
'அப்பாவிடம் இதை யார், எப்படிச் சொல்வது..................' என்று அம்மா அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக போய்க் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படியும் படிக்கப் போவதில்லை என்று அம்மாவிற்கு முன்னமே தெரிந்திருந்தது போல. தாய்க்கு தெரியாத பிள்ளைகளா........... 'டில்லிக்கு ராஜாவானாலும்........................' என்று ஒரு பழமொழியை அம்மா அடிக்கடி சொல்லுவார். எந்தப் பிள்ளை டில்லிக்கு ராஜாவாக வரும் என்றும், எது டில்லியையே வாழ்நாளில் பார்க்காது என்றும் அவர்களுக்கு தெரியும் போல.
 
அப்பா எப்போதும் அப்படியே படுக்கையில் இருந்தபடியே அன்றைய நாளின் முதலாவது தேத்தண்ணியைக் குடிப்பார். பின்னர் ஒரு பத்து அல்லது பதினைந்து குடிப்பார். ஆனால், வீட்டில் எல்லோரும் பல் துலக்கி, முகம் கழுவி விட்ட பின்னேயே, எதை என்றாலும் குடிப்போம் அல்லது சாப்பிடுவோம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பதில்களை பாடசாலையில் சொல்லியிருக்கின்றேன். முதலாவது தேத்தண்ணியின் பின் கொஞ்ச நேரம் கண்மூடிப் படுத்திருப்பார். அது அவரின் சிந்திக்கும் நேரம் போல.
 
அம்மா அப்பாவின் சிந்தனையைக் கலைக்காமல், பொறுமையாகவே விசயத்தை உடைத்தார். எதிர்பார்த்த எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 'சரி, இனி என்ன செய்யப் போகின்றாராம்............' என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே, அப்பா எழுந்து இருந்தார். அம்மா அடுத்த தேத்தண்ணியை சுடவைக்கப் போனார்.
 
பெரும் எடுப்போடும், பரபரப்போடும் வாழ்க்கையின் ஒரு தருணத்திற்கு காத்திருக்கும் போது, சில வேளைகளில் அந்த தருணம் ஒரு பூனையின் நடை போல எந்த சத்தமும் எழுப்பாமல் எங்களைக் கடந்து போய்விடுகின்றது.
 
(தொடரும்........................) 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்திரத்திற்கும், எனக்கும் இடையே இருக்கும் தூரம், இரண்டு நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே இருக்கும் தூர அளவை விட கொஞ்சம் அதிகம்.

 AI இடம் கேட்டு வாங்கியே இங்கே போடுகின்றேன்.................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

அந்த நாட்களில் நல்லையா மாஸ்டர் எதிர் வெக்டர் வேலாயுதம் மாஸ்டர் எதிர் இன்னும் சில ஆசிரியர்கள் என்று ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. 

நான் ஊரில் இரண்டு தவணை ஏ எல் படித்தேன். ஹாட்லியில் கணேசலிங்கம் மாஸ்ரரிடம்  தூய கணிதம், உடுப்பிட்டி பீக்கோன் ரியூசனில் நல்லையா மாஸ்ரரிடம் தூயகணிதம், பிரயோக கணிதம், தில்லையம்பலம் மாஸ்ரரிடம் தூயகணிதம் என்று எல்லோரையும் போல ஓடுப்பட்டுப் படித்தேன். ஓ எல் ரிசல்ட்ஸ் தந்த செருக்கும், கூவிற வயசில் இருந்ததாலும் ஏ எல் படிப்பில் அக்கறை காட்டவில்லை. கெமிஸ்ற்றி, பிஸிக்ஸ் படிக்க வந்த பெண்பிள்ளைகள் மேல்தான் முழு நாட்டமும் போனது!🥰

பாடசாலையில் முதல் வரிசையில்தான் இருப்பேன். கணேசலிங்கம் மாஸ்டர் வந்து முதல்நாளே மற்றைய இடங்களில் படிப்பிக்காத தூயகணிதத்தில் கடினமான graph sketching (தமிழ் இப்ப தெரியாது) கேள்விகளைத் தந்தார். சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரித்தான் இருந்தது. பின்னால் திரும்பி அவரிடம் ரியூசனில் படிக்கும் நண்பனை எப்படிச் செய்வது என்று கேட்டேன். அவன் மெதுவாக சொல்ல ஆரம்பிக்க, கணேசலிங்கம் மாஸ்ரர் எனது மேசையை நோக்கி வந்தார். கன்னம் பழுக்கப்போகின்றது என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வந்து எனது  மேசையில் சோக்கால் இரண்டு கோடுபோட்டுவிட்டு கரும்பலகைக்குப் போய் ஒரு கேள்வியை விளங்கப்படுத்தினார். அதை அவர் எனக்காகத்தான் செய்தார் என்று புரிந்துகொண்டேன். மிச்சக் கேள்வி எல்லாவற்றையும் நான் கிறுகிறுவென்று செய்து முடித்தேன்😎

அவர் சொல்லித்தந்த method ஐ நான்  இன்னமும் மறக்கவில்லை. பலருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கின்றேன், எனது வாரிசுகள் உட்பட!

கணிதத்தில் இன்றுவரை குன்றாத காதலுக்கு ஓ எல் வரை படிப்பித்த சர்வானந்தா மாஸ்ரர், நம்ம ஊர் அரசன் வாத்தி,  ஏ எல்லில்  குறுகிய காலம் என்றாலும் கணேசலிங்கம் மாஸ்டர், நல்லையா மாஸ்டர், தில்லையம்பலம் மாஸ்டர் ஆகியோர் எனது ஆசான்கள். அதே போல இலண்டனிலும் இரண்டு ரீச்சர்கள் எனது மதிப்புக்குரிய ஆசான்களாக இருந்ததால் 100க்கு கீழே இலண்டன் ஏ லெவலில் எடுத்ததில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கணிதத்தில் இன்றுவரை குன்றாத காதலுக்கு ஓ எல் வரை படிப்பித்த சர்வானந்தா மாஸ்ரர், நம்ம ஊர் அரசன் வாத்தி,  ஏ எல்லில்  குறுகிய காலம் என்றாலும் கணேசலிங்கம் மாஸ்டர், நல்லையா மாஸ்டர், தில்லையம்பலம் மாஸ்டர் ஆகியோர் எனது ஆசான்கள். 

இவர்கள் எல்லோரும் எனக்கும் தெரிந்தவர்களே.............!

ஆனால், கணேசலிங்கம் மாஸ்டரிடம் மட்டுமே படித்தேன். மற்றவர்களிடம் ஏன் போகவில்லை என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு என்று நினைக்கின்றேன் - ஒரு நோக்கமோ அல்லது வழிகாட்டலோ இருக்கவில்லை. அதைவிட முக்கியமாக பந்தடி மேல் இருந்த விருப்பம். அதிகாலையில் தீருவில் மைதானத்தில் பந்தடிப்பார்கள். அந்த நேரத்தில் தான் இந்த ஆசிரியர்களின் வகுப்புகளுக்கு நண்பர்கள் போய் வந்தார்கள். பூவா தலையா போட்டுப் பார்க்காமலேயே, நான் பந்தடி என்று முடிவு செய்துகொண்டேன்.

என் அதிர்ஷ்டம் எனக்குத் தெரிந்த கேள்விகளே பரீட்சைகளில் வந்தன..................

'Slumdog Millionaire' படத்தை பார்த்த போது இது நல்லாவே விளங்கியது................🤣.

'நூறு டாலர் நோட்டில் யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வியைக் கேட்காமல், வேறு ஏதாவது ஒரு நோட்டில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டிருந்தீர்கள் என்றால், எனக்கு அதற்கு பதிலே தெரியாது...............' என்பது போல ஒரு காட்சி அந்தப் படத்தில் வரும். நம்ம வாழ்க்கை இது என்று தோன்றியது...............🤣

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

காற்றாடி - அத்தியாயம் இரண்டு

------------------------------------------------
 
large.kaaththaadi-1.jpg.5616e15da584b1cd5785e47a899555bb.jpg
 
சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தது.  உரசி சூடாக்கிக் கொண்டே, தான் இன்று பரீட்சைக்கு போகப் போவதில்லை என்பதை எப்படி பக்குவமாகச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அம்மா அழக்கூடும், ஊரையும் கூட்டக் கூடும், ஆனால் இந்த மழையில் ஊர் இங்கே வராது. அப்பா குதிக்கத்தான் போகின்றார். வளர்ந்த பிள்ளை என்று இப்பொழுது ஒரு வருடமாக அடிகள் எதுவும் விழவில்லை. இன்று அது மாறக்கூடும். சித்தப்பா அவர் வாங்கித் தந்த முழுக்காற்சட்டை பற்றி கவலைப்படக்கூடும்.
 
அம்மா ஏற்கனவே எழும்பி விட்டிருந்தார். அடுப்படியில் அரவம் கேட்டது. இப்ப, இந்த மழையில் எந்த விறகு ஈரமில்லாமல் இருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் எங்கள் எல்லோருக்குமாக அவர் அந்த இரண்டு அடுப்புகளையும் தினமும் விடாமல் ஊதிக் கொண்டேயிருக்கின்றார். தேத்தண்ணியை போட்டு விட்டு, எல்லோருக்கும் காலையில் ஏதாவது உணவு செய்யும் நாட்களில், நாங்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு கிளம்பிப் போகும் வரை அவர் அடுப்புக்குள் முன்னால் ஒரு காலை முழுவதும் மடக்கி, மறு காலை முழங்கால் வரை மடித்தும் இருப்பார். 'ஏன் இப்படி இருக்கிறீங்கள், அம்மா...............' என்று கேட்டால் சிரிப்பொன்றே பதிலாக வந்து கொண்டிருந்தது. பெண்கள் எதையுமே வெளியில் சொல்லமாட்டார்களாமே.
 
இன்று பரீட்சைக்கு போகாவிட்டால், இன்றுடன் படிப்பு நின்றுவிடும். அடுத்ததாக என்ன செய்வது............... ஆரம்ப ஆரவாரங்களின் பின், என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கவும் போகின்றார்கள். என்ன செய்வது என்று பல திட்டங்கள் இருக்கின்றன. அதில் எதையாவது ஏற்றுக் கொள்வார்களா என்று தான் தெரியவில்லை. தங்கைகளும், தம்பிகளும் என்ன நினைப்பார்களோ. ஒரு தம்பியை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. எங்கு படித்தாலும், அவன் தான் வகுப்பில் முதலாவதாக வந்து கொண்டிருக்கின்றான். அவன் மட்டும் இப்படி எப்படி பிறந்தானோ தெரியவில்லை. வயிற்றில் பிள்ளைகள் இருக்கும் போது, தாய்மார்களின் உணவுப் பழக்கம் கூட பிள்ளைகளின் மூளைத் திறனை வளர்க்கும் என்று சொல்லுகின்றார்கள். இந்த முற்றத்தில் நிற்கும் புளி வைரக்கண்டி மாங்காயைத் தான் அம்மா எப்போதும் கடித்துக் கொண்டிருந்திருப்பார். தம்பி வயிற்றில் இருக்கும் போது, அந்த வருடம் அந்த மரம் காய்க்கவில்லையோ என்னவோ.
 
மழை தற்காலிகமாக விட்டிருந்தது. மீண்டும் அது ஆரம்பிக்க முன், முகத்தை கழுவி விட என்று கிணற்றடிக்கு போனான். பெரிய வட்டக் கிணறு. ஆனால் மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. மூன்று வீடுகளுக்கு அது தான் கிணறு. கிணற்றின் மேலேயே தகர வேலிகளால் அது பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டுக்காரருக்கு இன்னொரு வீட்டுக்காரை பார்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலிகள். அவை தார் தகரங்கள். எம் எஸ் விஸ்வநாதன், கே வி மாகாதேவன் போன்ற பழையவர்களின் ரசிகரான அப்பா, இந்த தார் தகர வேலியை தினமும் பார்ப்பதால் தான், புதிதாக வந்த இளையராஜாவின் பாடல்கள் தார் தகரத்தில் கம்பால் அடிப்பது போல கொடூரமாக இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவார். அவர் சிவாஜியின் ரசிகரும் கூட. பொதுவாகவே அப்பாமார்களும், மூத்த மகன்களும் எதிரும் புதிருமாகவே வளர்வார்கள் போல.
 
அள்ளிய வாளித் தண்ணீருக்குள் ஒரு சின்ன ஜப்பான் மீன் குஞ்சும் வந்திருந்தது. மழை பார்க்க மேலே வந்து ஆவென்று நின்றிருக்கின்றார் போல. அப்படியே வாளிக்குள் வந்தும் விட்டார். இரண்டு கைகளாலும் அதை தண்ணீருடன் அள்ளி எடுத்து கிணற்றுக்குள் கொட்டிவிட்டான். கிணற்று நீர் சூடாக இருந்தது. வெளியே குளிராக இருக்கும் போது இப்படித்தான், கிணற்று நீர், கடல் நீர் கூட, சூடாக இருப்பது போல தெரியும். இன்னும் சில நாட்கள் மழை பெய்தால், கிணற்றில் தண்ணீர் எட்டித் தொடும் அளவிற்கு வந்துவிடும். எங்களின் பக்க கிணற்றில் உயரமான தடுப்புக் கட்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் இதுவரை எவரும் இந்தக் கிணற்றுக்குள் தெரிந்தோ அல்லது விபத்தாகவோ விழுந்திருக்கவில்லை.
 
அம்மா தேத்தண்ணி போட்டு வைத்திருந்தார். அது எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய சட்டியில் இருக்கும். 'எத்தனை மணிக்கு சோதனை...............' என்று கேட்டார் அம்மா.  பதில் எதுவும் சொல்லாமல் குடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் அதையே கேட்டார்.
 
'நான் போகவில்லை, அம்மா......................' என்றான் அவன். அப்படியே சில கணங்கள் இருந்த அம்மா, மீண்டும் நினைவு வந்தவராக, 'போகாமல் என்ன செய்யப் போகின்றாய்................' என்றார். ஒரு வேலைக்குப் போகலாம் என்றிருக்கின்றேன் என்றான் அவன். 
 
'அப்பாவிடம் இதை யார், எப்படிச் சொல்வது..................' என்று அம்மா அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக போய்க் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படியும் படிக்கப் போவதில்லை என்று அம்மாவிற்கு முன்னமே தெரிந்திருந்தது போல. தாய்க்கு தெரியாத பிள்ளைகளா........... 'டில்லிக்கு ராஜாவானாலும்........................' என்று ஒரு பழமொழியை அம்மா அடிக்கடி சொல்லுவார். எந்தப் பிள்ளை டில்லிக்கு ராஜாவாக வரும் என்றும், எது டில்லியையே வாழ்நாளில் பார்க்காது என்றும் அவர்களுக்கு தெரியும் போல.
 
அப்பா எப்போதும் அப்படியே படுக்கையில் இருந்தபடியே அன்றைய நாளின் முதலாவது தேத்தண்ணியைக் குடிப்பார். பின்னர் ஒரு பத்து அல்லது பதினைந்து குடிப்பார். ஆனால், வீட்டில் எல்லோரும் பல் துலக்கி, முகம் கழுவி விட்ட பின்னேயே, எதை என்றாலும் குடிப்போம் அல்லது சாப்பிடுவோம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பதில்களை பாடசாலையில் சொல்லியிருக்கின்றேன். முதலாவது தேத்தண்ணியின் பின் கொஞ்ச நேரம் கண்மூடிப் படுத்திருப்பார். அது அவரின் சிந்திக்கும் நேரம் போல.
 
அம்மா அப்பாவின் சிந்தனையைக் கலைக்காமல், பொறுமையாகவே விசயத்தை உடைத்தார். எதிர்பார்த்த எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 'சரி, இனி என்ன செய்யப் போகின்றாராம்............' என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே, அப்பா எழுந்து இருந்தார். அம்மா அடுத்த தேத்தண்ணியை சுடவைக்கப் போனார்.
 
பெரும் எடுப்போடும், பரபரப்போடும் வாழ்க்கையின் ஒரு தருணத்திற்கு காத்திருக்கும் போது, சில வேளைகளில் அந்த தருணம் ஒரு பூனையின் நடை போல எந்த சத்தமும் எழுப்பாமல் எங்களைக் கடந்து போய்விடுகின்றது.
 
(தொடரும்........................) 
 
வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு வந்த ஆரம்பத்தில் ஒரு வழி பாதையில் தவறுதலாக காரினை திருப்பி விட்டேன் அந்த பாதையில் எவருமில்லாத நிலையில் வெறும் 50 மீட்டர் தூரத்தில் பிரதான வீதியிருந்தது, அதில் போய் திரும்பிவிடலம் என இருந்தேன் அது குறுகலான பாதை என்பதால் 3 முனை திருப்பமும் கடினமாக இருக்கும் என்பதால், பாதி தூரம் போகுமுன்னர் எனது எதிரில் கார் வந்துவிட்டது.

தெரியாமல் படித்தவர்களின் திரிக்குள் நுழைந்துவிட்டேன்.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, vasee said:

🤣..............

ஆனால் கதை 'படிக்காத' ஒரு மனிதனைப் பற்றிய சம்பவங்களே..............

கதையில் 10ம் வகுப்பின் பின் படிப்பை நிற்பாட்டிவிட்டேன். இனி என்ன செய்வது என்று இந்தக் கதை நாயகனுக்காக நான் யோசிக்கின்றேன். போராட்டத்தில் இணைவது, இறுதியில் பெரும் துன்பம் என்று நிச்சயமாக போகப் போவதில்லை...............     

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

 நன்றி, தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

வெளிநாடு வந்த ஆரம்பத்தில் ஒரு வழி பாதையில் தவறுதலாக காரினை திருப்பி விட்டேன் அந்த பாதையில் எவருமில்லாத நிலையில் வெறும் 50 மீட்டர் தூரத்தில் பிரதான வீதியிருந்தது, அதில் போய் திரும்பிவிடலம் என இருந்தேன் அது குறுகலான பாதை என்பதால் 3 முனை திருப்பமும் கடினமாக இருக்கும் என்பதால், பாதி தூரம் போகுமுன்னர் எனது எதிரில் கார் வந்துவிட்டது.

தெரியாமல் படித்தவர்களின் திரிக்குள் நுழைந்துவிட்டேன்.😁

வசீ  நானும் உங்கள் கூட்டாளிதான் ......... இவர்களின் படிப்பு அலப்பறை தாங்க முடியல்ல .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ரசோதரன்…!

இன்று தான் கதையைக் கண்டேன்!

எனது இளமையை மீண்டும் தரிசிக்க முடிந்த்து!

கனவு காணும் காலங்களில் நினைவுகள் தானே வாழ்வை வளமாகுகின்றன…!

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றாடி - அத்தியாயம் மூன்று

-----------------------------------------------
large.kaaththaadi-2.jpg.jpeg.8ad388f1b97d9a412ffc6285b307fe47.jpeg
 
இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வேலை என்று சொல்லப்படும் வீடுகளுக்குள் செய்யும் மின்சார அமைப்பு வேலையையும், பின்னேரம் மற்றும் இரவு நேரங்களில் ஊரில் இருக்கும் தியேட்டரில் ஒரு வேலையையும் செய்ய ஆரம்பித்திருந்தான். வயரிங் வேலை செய்வதற்கு அவன் வீட்டில் உடன்பட்டார்கள். ஆனால் தியேட்டரில் வேலை செய்வதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை காட்டியிருந்தனர். அவன் வயரிங் வேலைக்கு போவதற்கு காரணமே, அதன் காரணமாக தியேட்டரில் அவன் வேலைக்குப் போவதற்கு வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்ற ஒரே ஒன்றுக்காக மட்டுமே. மற்றபடி வயரிங் வேலையில் அவனுக்கு எந்த நாட்டமும் இல்லை. அதுவும் அந்தக் காங்கிரீட் சுவர்களுக்குள்ளால் வயர்களை கொண்டு செல்வதற்காக, அந்த சுவற்றை வெட்டுவது போன்ற ஒரு வேலையில் எவருக்குத் தான் நாட்டம் வரும். ஆனால், அவனை வேலையில் துணையாக கூட்டிப் போகும் அயலவர் சில வயதுகள் கூடியவர் என்றாலும், நல்ல ஒரு நண்பர் போன்றே பழகினார். வேலை முடிந்தவுடன் அன்றன்றே அவனுக்கான சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். அதில் ஒரு பகுதியை அவன் அம்மாவிடம் கொடுத்து விடுவான். பல நாட்களிலும் வேலையும் இருக்கும்.
 
சினிமாவும் தியேட்டரும் அவனுக்கு ஒரு கனவு போல. அவன் பிறந்ததே சினிமாவிற்கு என்று அவனுக்குள் ஒரு உறுதியான எண்ணம் இருந்தது. பொதுவாக சமூகத்தில் எல்லோருக்கும் இருக்கும் அளவில்லாத நாயக நாயகிகள் மீதான கவர்ச்சி அவனிடம் மிகக்குறைவாகவே இருந்தது. சினிமா என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, அதில் வரும் விடயங்களும், அங்கே வரும் கதாபாத்திரங்களும், அவற்றை திரையில் கொண்டு வரும் நடிகர்களும் உண்மை என்றே பலரும் எண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவர்களால் முடியாத, ஆனால் அவர்கள் செய்ய விரும்பும் சில நாயகத்தனங்களை திரையில் கண்டு, அதுவேதான் தாங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள் போல. இந்த சமூகத்தில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் தீராத கவர்ச்சிக்கு இந்த மனப்பன்மையும் ஒரு அடிப்படைக் காரணம்.
 
அவனுக்கு ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகின்றது, பின்னர் அது எவ்வாறு திரையில் ஓடுகின்றது என்பதிலேயே ஆர்வம் இருந்தது. அம்புலிமாமா புத்தகத்தில் இருக்கும் படங்களை ஒரே அளவுகளில் வெட்டி, அவற்றை நீட்டாக ஒட்டி, ஒரு சுருளாகச் சுற்றி , நடுவே ஒரு ஈர்க்கை வைத்து, அதைச் சுற்றிப் பார்த்து, இப்படித்தான் சினிமா உருவாகின்றது என்று அவனாகவே பரீட்சித்துப் பார்த்திருக்கின்றான். பின்னர் சிந்தனையில் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு படம் அளவு இடைவெளியில் இரண்டு ஈர்க்குகளை வைத்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவனின் படச்சுருளை சுற்றிப் பார்த்தான். இது தான் சரியான தொழில்நுட்பம் என்று, அதையே இன்னும் முன்னேற்றி, பலருக்கும் அம்புலிமாமா படங்கள் காட்டியும் இருக்கின்றான். 
 
தியேட்டரில் வேலைக்கு போனவுடன், தினமும், தியேட்டரின் உள்பக்கத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு வரிசையாக கூட்ட வேண்டும் என்றில்லை. முன்பக்கம், முகாமையாளர் அறை மற்றும் தியேட்டரின் உள்ளே இருக்கும் நடைபாதைகளை கூட்டவேண்டும். அத்துடன் படம் பார்த்து விட்டுப் போனவர்கள் போட்டுவிட்டுப் போகும் கஞ்சல், குப்பை, கழிவுகளையும் அள்ளி எடுத்து, வெளியில் தியேட்டரின் பின்னால் இருக்கும் குப்பையில் கொண்டு போய் கொட்டவேண்டும். அதை விட்டுவிட்டுப் போனோம், இதை விட்டுவிட்டுப் போனோம் என்று பின்னர் ஓடி வருபவர்களும் உண்டு. அவன் நேராக பின்னால் இருக்கும் அந்த சின்ன குப்பை மலையைக் காட்டுவான். அநேகமானவர்கள் அங்கே தங்கள் பொருட்களை தேடி எடுக்காமலேயே போய்விடுவார்கள். சிலர் அவனையும் சேர்ந்து தேடச் சொல்லியிருக்கின்றனர்.சிலருக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் பொல்லாத கோபம் வந்து, சீறி விழுந்தும் இருக்கின்றனர். தங்களின் கதாநாயகர்களின் பின்னால், அவர்கள் உலவும் இடத்தின் பின்னால், இப்படி ஒரு குப்பை மலை இருப்பதை அவர்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை.
 
படம் ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடித்தவுடன், கலரிப் பகுதியில் உள்ள கதவில் அவன் போய் நிற்கவேண்டும். அங்கே வருபவர்களின் அனுமதிச்சீட்டுகளை கிழித்து, அவர்களை உள்ளே விடவேண்டும். கலரிப் பகுதியில் நீண்ட வாங்குகள் மட்டுமே போடப்படிருந்தது. தனிதனியான இருக்கைகள் கிடையாது. ஆண்கள், பெண்கள் என்ற இரு பக்கங்களும் கிடையாது. அதனால் தான் அது மிகக்குறைந்த விலையில் இருக்கும் பகுதியாக இருக்கின்றது. திரைக்கு அருகில் இந்தப் பகுதி இருக்கும். கழுத்தை நிமிர்த்தியே படம் பார்க்கவேண்டும்.  இந்தப் பகுதியின் பின்னால் இரண்டாம் வகுப்பு, முதலாம் வகுப்பு, ரிசர்வ் என்று மூன்று பகுதிகள் அந்த தியேட்டரில் இருந்தன. மேலே பால்கனி என்று இன்னொரு பிரிவும் இருந்தது. அதற்கான அனுமதி எல்லாவற்றையும் விட மிக அதிகம். பால்கனிக்கு அருகிலேயே, ஒரு தனி அறையில், படம் ஓடும் இயந்திரங்கள் இருந்தன. ஒரு நாள் கலரியிலிருந்து அந்த அறைக்கு முன்னேறுவதே அவனின் இலட்சியமாக இருந்தது.
 
(தொடரும்...................) 
  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2025 at 04:40, suvy said:

வசீ  நானும் உங்கள் கூட்டாளிதான் ......... இவர்களின் படிப்பு அலப்பறை தாங்க முடியல்ல .........!  😂

சொல்லாமல்..சொல்லுகினம் என்கிறியள்...உங்களிடம்  உள்ளதுகளுக்கு..காது ..மூக்கு..கண்வைத்து விடவேண்டியதுதானே....யாழில் என்ன..வட்டியா ..வரியா கேட்கினம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2025 at 04:00, ரசோதரன் said:

🤣..................

ஜெயமோகன் தனக்கும் கணிதபாடம் வரவே வராது என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், எல்லாக் கணக்குகளையும் பாடமாக்கி, கணிதப் பரீட்சைகளில் நல்ல புள்ளிகள் எடுத்தேன் என்றும் சொல்லுகின்றார்.  அவருக்கு ஞாபகசக்தி அதிகம் தான், அதற்காக கணக்குகளையே பாடமாக்குவதா............🤣.

அத்துடன் இலங்கையில் படிப்பிக்காத கணக்கு மட்டும் தானே பரீட்சையில் வரும்............ நாங்கள் எதையென்று பாடமாக்குவது....................

எனக்கு ஆபிரிக்காவில் இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. கேள்விக்கும் விடைக்கும் தொடர்பே இருக்காது.

தொடருங்கள் ரசோதரன்…!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.