Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

screenshot2362-down-1753335056.jpg

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.. மோதலுக்கு காரணமான கோவில் - பின்னணி.
பாங்காக்: தாய்லாந்து - கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் வெடிக்கிறதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில் ஒன்று தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் தாய்லநாந்தின் வடகிழக்குபகுதியில் உள்ள சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா மவுன் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த கோவில் விஷயத்தில் தாய்லாந்து - கம்போடியா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் இருநாடுகள் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற நிலை உருவானது. இதையடுத்து தாய்லாந்து சார்பில் எல்லையில் எஃப் 16 ரக போர் விமானங்கள் குவித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் திடீரென்று இருநாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோவில் விவகாரத்தில் இருநாடுகள் இடையே கடும் மோதல் நடந்தது. இருநாட்டை சேர்ந்தவர்களும் மாறிமாறி தாக்கி கொண்டனர். இருநாட்டு வீரர்களும் பீரங்கி குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி உள்ளனர். மேலும் தூதரக அதிகாரிகளை வெளியேற தாய்லாந்து, கம்போடியா அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

Read more at: https://tamil.oneindia.com/news/international/clash-erupts-between-thailand-and-cambodia-722881.html

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் இராணுவ மோதல்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இன்று 24 அதிகாலையில் ஆயுதமேந்திய மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. 

பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்திற்குப் பிறகு, முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இரு நாட்டு இராணுவங்களும் ஒன்றின் மீது மற்றொன்று பழி சுமத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும், இரு தாய்லாந்து படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சர்ச்சைக்குரிய டா மோன் தாம் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் கம்போடியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது. கம்போடியா ஒரு கண்காணிப்பு வானூர்தியைப் பயன்படுத்திய பின்னர் கனரக ஆயுதங்களுடன் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியதாகவும் தாய்லாந்து இராணுவம் தெரிவித்தது. 

கம்போடியத் தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், தாய்லாந்துப் படைகளின் தூண்டுதலற்ற அத்துமீறல் இருந்ததாகவும் கம்போடியப் படைகள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தார். 

கம்போடியாவுக்கான தனது தூதரை ஜூலை 23ஆம் திகதி தாய்லாந்து திரும்ப அழைத்த பின்னரும், ஒரு வாரத்திற்குள் சர்ச்சைக்குரிய பகுதியில் இரண்டாவது தாய்லாந்து இராணுவ வீரர் கண்ணிவெடியால் ஒரு காலை இழந்ததைத் தொடர்ந்து, பேங்காக்கில் உள்ள கம்போடியத் தூதரை வெளியேற்றுவதாக அது கூறிய பின்னரும் இந்த மோதல் ஏற்பட்டது. https://adaderanatamil.lk/news/cmdgx074l01knqp4k5oziu37l

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

522823948_1194405039369019_5503704273702

521920789_1194402549369268_1465527974099

522709259_1194405049369018_8338776398261

524164083_1194402672702589_1299839649204

522687548_1194405176035672_3140443857105

தாய்லாந்துக்கும் – கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இன்று (24) அதிகாலையில் மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்திற்குப் பிறகு, முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இரு நாட்டு இராணுவங்களும் ஒன்றின் மீது மற்றொன்று பழி சுமத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும், இரு தாய்லாந்து படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டா மொயின் தாம் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் கம்போடியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்போடியா ஒரு கண்காணிப்பு வானூர்தியைப் பயன்படுத்திய பின்னர் கனரக ஆயுதங்களுடன் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியதாகவும் தாய்லாந்து இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

கம்போடிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், தாய்லாந்துப் படைகளின் தூண்டுதலற்ற அத்துமீறல் இருந்ததாகவும் கம்போடியப் படைகள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

தாய்லாந்துக்கும் – கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இன்று (24) அதிகாலையில் மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

எல்லாரும் சண்டை பிடிக்கிறாங்கள். நாங்களும் சண்டை பிடிப்பம் எண்டு வெளிக்கிட்டினம் போல....😂

இதுவரை சிம்மாசனத்திலிருந்து சுகபோகங்களை அனுபவித்து வந்த தாய்லாந்து அரசர் இனிமேல் களத்தில் இறங்கிப் போர் செய்ய வேண்டிய வேளை வந்துவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

520902233_1194559489353574_9040162817633

சர்ச்சைக்குரிய இந்துக் கோவிலை, முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கம்போடியா அறிவிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து கம்போடிய படையினர் எல்லையில் மோதல் - விமான தாக்குதல்கள்

24 JUL, 2025 | 12:03 PM

image

தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பில் மோதல் வெடித்துள்ளது.

தாய்லாந்து கம்போடிய படையினருக்கு இடையில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்,பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள தாய்லாந்து அதிகாரிகள் எல்லையில் உள்ள 86 கிராமங்களில் வசிக்கும் 40,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இரண்டு தென்கிழக்காசிய நாடுகளிற்கும் இடையில் முறுகல்நிலை  தீவிரமடைந்து வந்த நிலையிலேயே நேற்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. எல்லையின் ஆறு பகுதிகளில் தாய்லாந்து கம்போடிய படையினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன.

இருதரப்பும் பரஸ்பரம் மற்றைய தரப்பே மோதலை ஆரம்பித்தாக குற்றம்சாட்டியுள்ளன. தாய்லாந்தின் தலைநகரிலிருந்து 250 மைல் தொலைவில் உள்ள புராதான நகரமான பிரசாத் டா மோன் தொம் என்ற இடத்தில் மோதல்கள் முதலில் ஆரம்பித்துள்ளன.

இதேவேளை கம்போடிய இராணுவத்தின் மீது தாய்லாந்து எவ் 16 தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/220795

  • கருத்துக்கள உறவுகள்

இந்து கோவிலுக்கான போர் என்றபடியால் புலம்பெயர் ஈழதமிழ் பிரமுகர்களும் போர்களத்தில் இறங்கும் சாத்திய கூறுகள் உண்டு என்று பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு சிவபெருமான் கோவில் .

அந்தாளும் வந்து சண்டை போட போகுது 😀

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

எல்லாரும் சண்டை பிடிக்கிறாங்கள். நாங்களும் சண்டை பிடிப்பம் எண்டு வெளிக்கிட்டினம் போல....😂

கொரோனோவைத்தொடர்ந்து இதுவும் ஒரு தொற்று நோய் போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-315.jpg?resize=750%2C375&ssl

தாய்லாந்து – கம்போடியா இடையில் இரண்டாவது நாளாகவும் தொடரும் மோதல்!

குறைந்தது 16 பேரைக் கொன்ற அதிகரித்து வரும் எல்லை மோதலை உடனடியாக நிறுத்துமாறு பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் இருந்து அழைப்புகள் வந்த போதிலும், தாய்லாந்தும் கம்போடியாவும் வெள்ளிக்கிழமை (25) கனரக பீரங்கி தாக்குதலை பரிமாறிக்கொண்டன.

அதன்படி, ஒரு தசாப்தத்திற்கும் மேலான அவர்களின் மோசமான மோதல் இரண்டாவது நாளாக நீடித்தது.

தாய்லாந்தின் இராணுவம் உபோன் ரட்சதானி மற்றும் சுரின் மாகாணங்களில் அதிகாலையில் தாக்குதல்கள் நடந்ததாகவும், கம்போடியா பீரங்கி மற்றும் ரஷ்ய தயாரிப்பான BM-21 ராக்கெட் அமைப்புகளைப் பயன்படுத்தியதாகவும் கூறியது.

மோதல் பகுதிகளில் இருந்து குறைந்தது 100,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் BM-21 ராக்கெட் அமைப்புகளைப் பயன்படுத்தி கம்போடியாப் படைகள் தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன” என்று தாய் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தந்திரோபாய சூழ்நிலைக்கு ஏற்ப தாய்லாந்து படைகள் பதில் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

வியாழக்கிழமை (24) ஒரு சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் மோதலைத் தொடங்கியதற்காக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.

இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இறையாண்மை சர்ச்சைக்குரிய ஒரு எல்லை பகுதியாகும்.

தாய்லாந்து முந்தைய இரவு கம்போடிய தலைநகர் புனோம் பென்னுக்கான அதன் தூதரை திரும்ப அழைத்துக் கொண்டு சில மணிநேரங்களுக்குப் பின்னர் வியாழக்கிழமை மோதல் வெடித்தது.

வியாழக்கிழமை பிற்பகுதியில் தாய்லாந்து இறப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 14 பேர் பொதுமக்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

15 வீரர்கள் உட்பட 46 பேர் காயமடைந்ததாக அது கூறியது.

கம்போடியாவின் தேசிய அரசாங்கம் எந்தவொரு உயிரிழப்புகள் அல்லது பொதுமக்களின் வெளியேற்றங்கள் குறித்த விவரங்களை வழங்கவில்லை.

https://athavannews.com/2025/1440587

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, satan said:

கொரோனோவைத்தொடர்ந்து இதுவும் ஒரு தொற்று நோய் போலுள்ளது.

என்ன இருந்தாலும் ஆயுத வியாபாரிகளுக்கு இன்னொரு சந்தை உருவாகி விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பெருமாள் said:

அது ஒரு சிவபெருமான் கோவில் .

அந்தாளும் வந்து சண்டை போட போகுது 😀

தாய்லாந்து பௌத்த நாடு.

கம்போடியா பௌத்த நாடு.

இரு நாடுகளும் உரிமை கோருவது இந்து கோவிலை!!! காமெடியாக இல்ல? 😎

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து, கம்போடியா மோதலின் பின்னணி என்ன? போர் மூளும் ஆபத்தா?

தாய்லாந்து - கம்போடியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கம்போடியாவின் ஒடார் மீஞ்சே மாகாணத்தின் ஒரு தெருவில் ரஷ்ய தயாரிப்பான பிஎம்-21 ராக்கெட் லாஞ்சரை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனம்

கட்டுரை தகவல்

  • ஃப்ளோரா ட்ரூரி & கேவின் பட்லர்

  • பிபிசி நியூஸ்

  • 38 நிமிடங்களுக்கு முன்னர்

தாய்லாந்து, கம்போடியா இடையே நிலவும் தொடர் பதற்றம் வியாழக்கிழமையன்று (ஜூலை 24) எல்லைப் பகுதியில் கடுமையான மோதலாக வெடித்தது.

அதன் விளைவாகக் குறைந்தபட்சம் 12 தாய்லாந்து நாட்டவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் எனவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்போடியா தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா, எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவில்லை.

இந்த மோதல் தொடங்கியதற்குக் காரணம் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு என்றும் இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றன.

கம்போடியா ஏவுகணைகளை ஏவியதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது. கம்போடியாவின் ராணுவ நிலைகள் மீது தாய்லாந்து விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த மோதல் எப்படி ஏற்பட்டது? அது போராக உருவெடுக்கும் ஆபத்து உள்ளதா?

தாய்ல்ந்து கம்போடியா இடையில் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் ஒரு கட்டடம் சேதமடைந்து புகை வெளிவரும் காட்சி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, எல்லையை ஒட்டிய பகுதியில் ஜூலையில் சண்டை தொடங்கியது

பதற்றத்திற்கு காரணம் என்ன?

இது சமீபத்தில் தொடங்கிய சச்சரவு இல்லை. தாய்லாந்து, கம்போடியா இடையிலான சர்ச்சை ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே தொடங்கியது. அதாவது, கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தபோது, இரு நாடுகள் இடையே எல்லை வகுக்கக்கப்பட்டபோது, இந்த சச்சரவு தொடங்கியது.

ஆனால், 2008ஆம் ஆண்டில்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பிரச்னை அதிகாரபூர்வமாக தீவிரமடைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் 11ஆம் நூற்றாண்டு கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதை, யுனெஸ்கோ பாரம்பரிய தலமாக பதிவு செய்வதற்கு கம்போடியா முயன்றதே அதற்குக் காரணம்.

அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் அவ்வப்போது நடந்த மோதல்களில் இருதரப்பிலும் ராணுவ வீரர்கள், பொது மக்கள் எனப் பலர் கொல்லப்பட்டனர்.

கடந்த மே மாதம், மோதலில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பதற்றம், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளுமே பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்து வந்தன. தாய்லாந்தில் இருந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது. அங்கிருந்து பெறப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் நிறுத்தியது.

அண்மை வாரங்களில் இரு தரப்பு எல்லைகளிலும் ராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ளன.

அண்மைத் தாக்குதல் பற்றி தாய்லாந்து கூறுவது என்ன?

தாய்லாந்து - கம்போடியா மோதல்

பட மூலாதாரம்,BBC/LULU LUO

படக்குறிப்பு, ஜோய் ஃபாசுவன் தனது இரு பேரக் குழந்தைகளுடன் தாய்லாந்தின் சுரின் மாகாண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்

ஜூலை 24ஆம் தேதி என்ன நடந்தது என்பது பற்றி தாய்லாந்தும் கம்போடியாவும் வேறு வேறு விளக்கங்களை அளித்துள்ளன.

வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை சுமார் 07:30 மணிக்கு எல்லையில் உள்ள தாய்லாந்து ராணுவ நிலைகளை உளவு பார்க்க கம்போடிய ராணுவம் டிரோன்களை அனுப்பியதாக தாய்லாந்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது.

அதன் பின்னர், "ஏவுகணைகளால் ஏவப்படும் எறிகுண்டுகளை ஏந்திய கம்போடிய வீரர்கள் எல்லையில் குவியத் தொடங்கினர். தாய்லாந்து தரப்பில் இருந்த வீரர்கள் கூக்குரலிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை" என தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதோடு, கம்போடிய வீரர்கள் காலை சுமார் 08:20 மணிக்கு தாக்குதலைத் தொடங்கியதால் தாய்லாந்து தரப்பினர் பதில் தாக்குதல் நடத்த வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.

பிஎம்-21 ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்திருந்த வீடுகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பொது இடங்களையும் சேதப்படுத்தியதாக கம்போடியா மீது தாய்லாந்து குற்றம் சுமத்தியுள்ளது.

தாய்லாந்தை குற்றம் சாட்டும் கம்போடியா

ஆனால், தாய்லாந்து வீரர்கள்தான் காலை 06:30 மணிக்கு மோதலைத் தொடங்கியதாக கம்போடியா கூறுகிறது. அதாவது, முந்தைய ஒப்பந்தத்தை மீறிய தாய்லாந்து வீரர்கள், எல்லை அருகே இருக்கும் கெமர்-இந்து கோவில் வரை முன்னேறி வந்து முள்வேலி அமைத்ததாகவும் கம்போடியா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

அதன் பின்னர் "தாய்லாந்து வீரர்கள் காலை 7:00 மணிக்குப் பிறகு ஒரு டிரோனை செலுத்தியதாகவும், சுமார் 08:30 மணிக்கு வானத்தை நோக்கி சுட்டதாகவும்" கம்போடியா தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாலி சோசியாட்டா தெரிவித்தார்.

தாய்லாந்து - கம்போடியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலை 08:46 மணிக்கு, தாய்லாந்து படையினர் முன்னறிவிப்பின்றி கம்போடிய படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாலி சோசியாட்டாவை மேற்கோள் காட்டி ப்னோம் பென் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மேலும், "அதனால், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான உரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை" என அவர் கூறியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இவற்றோடு, தாய்லாந்து அதிகப்படியான படைகளைக் குவித்து, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, கம்போடிய பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சோசியாட்டா குற்றம் சாட்டினார்.

தாய்லாந்து, கம்போடியா இடையே போர் வெடிக்குமா?

கம்போடியாவுடனான பிரச்னை "நுட்பமானது" என்றும், அதைக் கவனமாக, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டுத் தீர்க்க வேண்டும் என்றும் தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாச்சை கூறினார்.

இந்தப் பிரச்னையை அமைதியாக தீர்க்கவே கம்போடியா விரும்புவதாகவும், "ஆயுதப் படை ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் படை மூலம் பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்றும் அந்நாட்டுப் பிரதமர் ஹுன் மனெட் கூறினார்.

கடந்த காலங்களில் தீவிரமான துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று இருந்தாலும் பதற்றம் விரைவிலேயே தணிக்கப்பட்டது. அதே பாதை மீண்டும் தேர்வு செய்யப்படும் என பிபிசி செய்தியாளர் ஜோனதன ஹெட் கருதுகிறார்.

அதேவேளையில், தற்போது இந்த சண்டையில் இருந்து நம்பிக்கையுடன் பின்வாங்கத் துணியும் தலைவர்கள் இருதரப்பிலும் இல்லை என்றும் அவர் எச்சரிக்கிறார்.

தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு செல்வது பாதுகாப்பானதா?

தற்போது வரை இந்த மோதல் குறிப்பிட்ட ஒரு பகுயில் மட்டுமே நடைபெறுகிறது.

இருப்பினும், சமீபத்திய வாரங்களில் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளை இந்தப் பகுதியில் "குறிப்பாக பிரேஹ் விஹேர் கோவில், தா இக்வை கோவில், தா முயென் தோம் கோவில் போன்ற சுற்றுலாத் தலங்களில் கூடுதல் கவனம்" செலுத்துமாறு ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தாய்லாந்து எல்லையைத் தவிர்க்கும்படி கம்போடியாவில் இருக்கும் தனது குடிமக்களை சீனா வலியுறுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj4e4z94129o

  • கருத்துக்கள உறவுகள்

எங்கெல்லாம் சண்டை உருவாகிறதோ அங்கு அதன் பின்னால் ஒரு கரம் இருக்கும் இதுதான் தற்போதய உலக நிலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

522604717_1196073255868864_4199937978546

524329257_1196072915868898_2994325823230

523399469_1196073345868855_4345647983600

523816683_1196073452535511_5812466015725

523148207_1196073492535507_8995477929990

523858027_1196076499201873_6351250818545

523113956_1196073299202193_6855212055401

தாய்லாந்து - கம்போடியா கலவரம், இதுவரை 40 பேர் வரை இருபுறமும் உயிரிழப்பு, 200க்கும் மேற்பட்டவர்கள் காயம், இலட்சக்கணக்கானவர்கள் இடப்பெயர்வு!

ஜூலை 24ம் திகதி அதிகாலை முதல் ஆரம்பித்த தாய்லாந்து, கம்போடியா எல்லைப்பதற்றம் தொடர்ந்து இராணுவ நடவடிக்கையாக மாறி தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்கள் இக்கணம் வரை இடம்பெற்று வருகின்றது.

தொடரும் தாக்குதல்கள் காரணமாக, எல்லைப்புறத்தில் வசிக்கும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றதோடு தாய்லாந்து நாட்டில் பணிபுரிந்த முப்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கம்போடியவிற்கு திரும்பி வருகின்றனர்.

அத்துடன், கம்போடியாவுடனான எல்லைப்பகுதியில் நேற்று மாலையிலிருந்து தாய்லாந்து இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 817 கிலோ மீற்றர் தூரம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்போடியாவின் வடமேற்கு பகுதியின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஆரம்பித்த துப்பாக்கிச்சூடுகள் தற்போது எல்லையின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதோடு, தாய்லாந்தின் F16 விமானங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய டிரோன்கள் கம்போடியாவின் எல்லைப்புற கிராமங்களின் முக்கியமான பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆசியான் (ASEAN) அமைப்பின் ஒத்துழைப்போடு உலக நாடுகளினால் இரு நாடுகளுக்கும் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் தாய்லாந்து ஆரம்பக்கட்ட சமாதான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராக இல்லை என அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பதற்ற நிலையை தணித்து சமாதான பேச்சுவார்த்தையை கொண்டுவர கம்போடியா ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்தை நாடி நிற்கிறது. இருப்பினும் இது தொடர்பான இறுதி முடிவுகள் இன்னுமே எட்டப்படாமையால் தொடர்ந்து இரு நாடுகளிலும் பதற்றமான போர் சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து - கம்போடியா மோதலின் மையமாக உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான 'சிவன் கோவில்'

கம்போடியா-தாய்லாந்து மோதல், கம்போடியா, தாய்லாந்து, சிவன் கோயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கம்போடியா மற்றும் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ப்ரே விஹார் கோயில்

26 ஜூலை 2025

புதுப்பிக்கப்பட்டது 27 ஜூலை 2025

தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் ராணுவ மோதலில் இதுவரை குறைந்தது 16 பேர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை (2025, ஜூலை 25) காலை முதல் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. கம்போடியாவின் ராணுவ தளத்தின் மீது வான்வழி குண்டுவீச்சு நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளான தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கும் முந்தையது. கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தபோது, இரு நாடுகள் இடையே எல்லை வகுக்கப்பட்டபோது, இந்த சச்சரவு தொடங்கியது.

இந்த சிக்கலானது, 2008ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் ஒன்றை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்றபோது பதற்றமாக மாறியது.

சிவாலயத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாற்றுவதற்கு தாய்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டதில், இரு தரப்பிலும் பல வீரர்களும் பொதுமக்களும் இறந்தனர்.

கம்போடியா-தாய்லாந்து மோதல், கம்போடியா, தாய்லாந்து, சிவன் கோயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த மே மாதத்தில் நடைபெற்ற மோதலில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் மேலும் அதிகரித்தன.

கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளும் பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தாய்லாந்திலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதை கம்போடியா தடை செய்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் துண்டித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் படைபலத்தை அதிகரித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Play video, "தாய்லாந்து - கம்போடியா இடையே மோதல் ஏன்? அடுத்து என்ன நடக்கும்?", கால அளவு 3,25

03:25

p0ls9rn0.jpg.webp

காணொளிக் குறிப்பு,

சிவன் கோவிலின் ஆயிரம் ஆண்டு வரலாறு

கம்போடியாவின் சமவெளிகளில் உயரமான பீடபூமியின் விளிம்பில் அமைந்துள்ள ப்ரே விஹார் கோயில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்கிறது யுனெஸ்கோ. இந்தக் கோவில் கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மதத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

11ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தின் பிரதான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஒன்பதாம் நூற்றாண்டில் அங்கு உருவாக்கப்பட்ட துறவி மடம் ஒன்றே பிற்காலத்தில் மிகப்பெரிய ஆலயமாக கட்டப்பட்டது என்று ஆலய வரலாறு கூறுகிறது.

தொலைதூர இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ பாரம்பரிய தளம் நன்கு பாதுகாக்கப்படுகிறது. மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் செதுக்கப்பட்ட கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ப்ரே விஹார் கோவில் தகராறில் சர்வதேச நீதிமன்றம் 1962 ஜூன் 15 அன்று தனது தீர்ப்பை வழங்கியது.

தனது பிரதேசத்தில் ப்ரே விஹார் கோவில் இடிபாடுகள் இருக்கும் ஒரு பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் அளித்திருந்தது.

இந்த இடம், கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மதத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்தக் கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்கவும், 1954 முதல் அங்கு நிறுத்தப்பட்டுள்ள தாய்லாந்து படைகளை திரும்பப் பெற உத்தரவிட கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது கம்போடியா.

நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு எதிராக தாய்லாந்து முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்தது, அவை நீதிமன்றத்தால் 1961 மே 26 அன்று நிராகரிக்கப்பட்டன.

1962 ஜூன் 15 அன்று அதன் இறுதித் தீர்ப்பில், 1904 ஆம் ஆண்டு பிராங்கோ-சியாமிஸ் ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய பகுதியை நீர்நிலைக் கோட்டின்படி வரையறுத்ததாகக் கூறியது. மேலும் கூட்டு எல்லை நிர்ணய ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடம், கம்போடியாவின் எல்லைக்குள் கோயிலைக் காட்டியது.

இந்த வரைபடத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தாய்லாந்து வாதிட்டது. மேலும், ''இந்த வரைபடத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை வரைபடத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அது தவறான எண்ணத்திலேயே செய்யப்பட்டிருக்கும்'' என்று தாய்லாந்து வாதிட்டது

இருப்பினும், தாய்லாந்து உண்மையிலுமே அந்த வரைபடத்தை ஏற்றுக்கொண்டதாகவும், கோயில் கம்போடிய எல்லைக்குள் அமைந்துள்ளது என்றும் நீதிமன்றம் முடிவு செய்தது.

அத்துடன், அங்கு நிறுத்தப்பட்டுள்ள ராணுவ அல்லது காவல்துறை துருப்புக்கள் அனைத்தையும் தாய்லாந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 1954க்குப் பிறகு ஆலயத்தில் இருந்து அகற்றப்பட்ட அனைத்தையும் கம்போடியாவிற்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மோதல், தாய்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தற்போதைய மோதல் போராக மாறக்கூடும் என்று தாய்லாந்து எச்சரிக்கிறது

எச்சரிக்கை விடுத்த தாய்லாந்து - காரணம் என்ன?

எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி வெடிப்பில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, கம்போடியாவிலிருந்து தனது தூதரை தாய்லாந்து திரும்ப அழைத்துக் கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு வியாழக்கிழமை, தாய்லாந்தும் கம்போடியாவும் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டிக் கொண்டன.

எல்லைக்கு அருகே தாய்லாந்து துருப்புக்களைக் கண்காணிக்க கம்போடிய ராணுவம் டிரோன்களை நிறுத்தியபோது மோதல் தொடங்கியதாக தாய்லாந்து கூறுகிறது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் 'போராக உருவெடுக்கக்கூடும்' என தாய்லாந்து எச்சரித்துள்ளது. இந்த மோதலால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கம்போடியா ஷெல் தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது. ராக்கெட்டுகள் வீசப்படும் எல்லைக்குள் உள்ள அனைத்து கிராமங்களையும் காலி செய்துள்ளது.

பொதுமக்கள் மீது கிளஸ்டர் வெடிமருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் கிளஸ்டர் வெடிமருந்துகளைப் பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் தாய்லாந்து கிளஸ்டர் வெடிமருந்துகளை பயன்படுத்துவதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தாய்லாந்து பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதியை காக்க வேண்டுகோள் விடுக்கும் சர்வதேச நாடுகள்

"விரோதப் போக்கை உடனடியாக நிறுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், மோதலை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்" என இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

"தாய்லாந்து-கம்போடியா எல்லையில் வன்முறை அதிகரிப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த செய்திகள் கவலைகளை அதிகரிக்கின்றன" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் வழக்கமான ஊடக சந்திப்பு ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

கம்போடியா மற்றும் தாய்லாந்துடன் அரசியல் மற்றும் உத்தி ரீதியிலான உறவுகளைக் கொண்டுள்ள சீனா, மோதல் குறித்து "ஆழ்ந்த கவலை" கொண்டிருப்பதாகக் கூறியது.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வார்கள் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இரு நாடுகளிடமும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c741j3pyeldo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவன் டொனால்ட் ரம்ப் தாய்லாந்து-கம்போடியா பிரச்சனையை தீர்க்க போவதாக சிறு செய்தி ஒன்று வந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

524913883_1197735905702599_7374808082698

525211830_1197735909035932_4260679614750

524721397_1197735932369263_8057892806567

கம்போடியா - தாய்லாந்து போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் கோலாலம்பூரில் ஆரம்பமாகின!

கம்போடிய பிரதமர் ஹுன் மானெட்டும் தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்யும் மலேசியாவில் நேருக்கு நேர் சந்தித்துப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர், தற்போதைய ஆசியான் தலைவரான மலேசியப் பிரதமர் இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிப்பதுடன்; சீனா, மற்றும் அமெரிக்கா சமாதான பேச்சுக்கான நேரடி ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

Vaanam.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-361.jpg?resize=750%2C375&ssl

தாய்லாந்து – கம்போடியா போர்நிறுத்தம் நிச்சயமற்ற நிலையில்!

எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக திங்களன்று (28) இரு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை கம்போடியா “வேண்டுமென்றே” மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையிலும் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து நாட்கள் குண்டுவீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இது ஒரு நிலையற்ற தொடக்கமாக அமைந்துள்ளது.

தாய்லாந்து இராணுவம் நள்ளிரவுக்குப் பிறகு துப்பாக்கிச் சூட்டை நிறுத்தியதாகக் கூறுகிறது.

ஆனால் இன்று காலை வரை “பல இடங்களில்” கம்போடியத் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வந்தாக அது கூறுகிறது.

அதேநேரம், நள்ளிரவில் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே “எந்த ஆயுத மோதல்களும் இல்லை” என்று கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சு AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்த உள்ளூர் தளபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் ஒரு கம்போடிய சிப்பாய் மோதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே நூற்றாண்டு பழமையான சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பாக பதற்றங்கள் கடந்த வாரம் அதிகரித்தன.

கடந்த வாரம் ஐந்து தாய் வீரர்கள் கண்ணிவெடி வெடிப்பில் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவை முழு அளவிலான மோதலாக மாறியது.

தாய்லாந்து தனது எல்லையின் சில பகுதிகளை மூடி, கம்போடிய தூதரை வெளியேற்றி, புனோம் பென்னிலிருந்து தனது தூதரை திரும்ப அழைத்தது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், கம்போடியா தாய்லாந்தின் மீது பல ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அடுத்த நாட்களில் இரு தரப்பினரிலும் அதிகமான பொதுமக்கள் இறந்தனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

போர் நிறுத்தத்திற்கான காலக்கெடுவான திங்கட்கிழமை (28) நள்ளிரவு வரை இரு படைகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் தொடர்ந்தன.

தாய்லாந்து கம்போடிய நிலைகள் மீது மேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

https://athavannews.com/2025/1441023

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5a0a6d00-6a86-11f0-94c2-67abb8c81c0e.jpg

தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல் ! காரணம் இதுவா !

தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருப்பது தாய்லாந்து கம்போடியா இடையிலான எல்லை மோதல்.

இந்த எல்லை மோதலுக்கு காரணமாக இருக்கும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரே விஹார் கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்றபோது அது தாய்லாந்து கம்போடியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமாக மாறியது.

இந்த சர்ச்சைக்குரிய கோவிலின் ஒரு சிறிய வரலாறு குறித்து பார்ப்போம்.

11ஆம் நூற்றாண்டில் ப்ரே விஹார் கோவிலின் பிரதான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஒன்பதாம் நூற்றாண்டில் அங்கு உருவாக்கப்பட்ட துறவி மடம் ஒன்றே பிற்காலத்தில் மிகப்பெரிய கோவிலாக கட்டப்பட்டது என்று கோவில் வரலாறு கூறுகிறது.

தொலைதூர இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ பாரம்பரிய தளம் நன்கு பாதுகாக்கப்படுகிறது.

மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் செதுக்கப்பட்ட கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தனது பிரதேசத்தில் ப்ரே விஹார் கோவில் இடிபாடுகள் இருக்கும் ஒரு பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் அளித்திருந்தது.

இந்த இடம், கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மத தலம்.

இந்தக் கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்கவும், 1954 முதல் அங்கு நிறுத்தப்பட்டுள்ள தாய்லாந்து படைகளை திரும்பப் பெற உத்தரவிட கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது கம்போடியா.

நீதிமன்ற அதிகார வரம்பிற்கு எதிராக தாய்லாந்து முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்தது, அவை நீதிமன்றத்தால் 1961 மே 26ஆம் திகதி நிராகரிக்கப்பட்டன.

பின்னர் இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் 1962 ஜூன் 15 அன்று தீர்ப்பு வழங்கியது .

அன்று வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில், 1904ஆம் ஆண்டு பிராங்கோ-சியாமிஸ் ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய பகுதியை நீர்நிலைக் கோட்டின்படி வரையறுத்ததாகக் கூறியது.

மேலும் கூட்டு எல்லை நிர்ணய ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தின்படி, கம்போடியாவின் எல்லைக்குள்ளேயே கோயில் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது.

ஆனால், இந்த வரைபடத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை என்று தாய்லாந்து வாதிட்டது. மேலும், இந்த வரைபடத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒருவேளை வரைபடத்தை ஏற்றிருந்தால், தவறான புரிதலில் அது நடந்திருக்கும் என்றும் தாய்லாந்து வாதிட்டது.

ஆனால், தாய்லாந்து உண்மையில் வரைபடத்தை முன்னர் ஏற்றுக்கொண்டதை கண்டறிந்த நீதிமன்றம், கோயில் கம்போடிய பகுதிக்குள் அமைந்துள்ளது என தீர்ப்பளித்தது.

அத்துடன், அங்கு நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்கள் அனைத்தையும் தாய்லாந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 1954க்கு பிறகு கோவிலில் இருந்து அகற்றப்பட்ட அனைத்தையும் கம்போடியாவிற்குத் திருப்பி தர வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.

இந்நிலையில்தான் எல்லைக்கு அருகே தாய்லாந்து துருப்புக்களைக் கண்காணிக்க கம்போடிய ராணுவம் டிரோன்களை நிறுத்தியபோது மோதல் தொடங்கியதாக தாய்லாந்து கூறுகிறது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தாய்லாந்து-கம்போடியா இடையில் மோதல் ஆரம்பமானது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் ‘போராக உருவெடுக்கக்கூடும்’ என தாய்லாந்து எச்சரித்துள்ளது.

இந்த மோதலால் இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையிலும் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து நாட்கள் குண்டுவீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நேற்றைய தினம் மலேசிய பிரதமர் தலைமையில் கோலாலம்பூரில் இரு நாட்டு பிரதமர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441056

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.