இந்தியாவுக்கு அமெரிக்கா 500% வரி விதித்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் அலசல்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம்
9 ஜனவரி 2026, 12:44 GMT
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய மசோதா குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன
'ரஷ்ய தடைகள் மசோதா' என்று அழைக்கப்படும் இந்த மசோதா, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டால், 'லிண்ட்சே கிரஹாம் மசோதா' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அந்த சூழலில், இந்தியாவின் முன் இரண்டு விருப்பத் தெரிவுகள் மட்டுமே இருக்கக்கூடும். இந்தியா 500 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டும் அல்லது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்.
டொனால்ட் டிரம்பின் இத்தகைய தொடர்ச்சியான முடிவுகளைப் பார்க்கும்போது, அமெரிக்க அதிபரின் அதிகாரத்திற்கு ஏதேனும் எல்லை உள்ளதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
அமெரிக்க செனட்டர் கிரஹாம் புதன்கிழமை அன்று எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், செனட்டர் ப்ளூமெந்தல் மற்றும் பலருடன் இணைந்து தான் பல மாதங்களாகத் தயாரித்து வந்த 'ரஷ்ய தடைகள் மசோதாவிற்கு' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மலிவான விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் ரஷ்ய அதிபர் புதினின் 'போர் இயந்திரத்திற்கு' ஊக்கமளிப்பதாகவும், அந்த நாடுகளைத் தண்டிப்பதற்கான அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு இந்த மசோதா வழங்கும் என்றும் கிரஹாம் குறிப்பிட்டிருந்தார்.
ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமானது. ஆனால், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளுக்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை கணிசமாகக் குறைந்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒருவேளை ரஷ்ய தடைகள் மசோதா நிறைவேற்றப்பட்டு, இந்தியா மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து பேசும் 'உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி' நிறுவனத்தின் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, "இப்படியொரு சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி முழுமையாக நின்றுவிடும். அதாவது, அமெரிக்காவிற்கு இந்தியா செய்யும் 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி சிக்கலுக்கு உள்ளாகும்," என்கிறார்.
"இதுவரை டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தார். ஆனால் தற்போதைய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதா நிறைவேறும் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும், இந்தியா தனது கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க விரும்பினால், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். வாங்க விரும்பவில்லை என்றால், அதையும் தெளிவாக கூற வேண்டும். ஒரே நேரத்தில் அமெரிக்க வரிகளால் ஏற்படும் இழப்புகளை அனுபவித்துக்கொண்டே, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியையும் குறைப்பது சாத்தியமில்லை." என்றார் அஜய் ஸ்ரீவாஸ்தவா.
பட மூலாதாரம்,Reuters
"டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த எண்ணெயானது, ஜூன் மாதத்தில் இருந்த தினசரி 21 லட்சம் பேரல் என்ற உச்ச அளவை விட 40% குறைந்துள்ளது. விளாடிமிர் புதினின் போர் இயந்திரத்திற்கான பணம் கிடைப்பதைத் தடுப்பதற்கும், யுக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக இந்த மசோதா கருதப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது, இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்காகும்." என்று அமெரிக்க ஊடக நிறுவனம் ப்ளூம்பெர்க் கூறியுள்ளது
வரி விதிப்பை அமெரிக்க அதிபர் எதேனும் ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்வாரா?
'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, டிரம்பிடம் கண்ட ஓர் நேர்காணலில், அவரது உலகளாவிய அதிகாரங்களுக்கு ஏதேனும் எல்லை உண்டா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், "ஆம், ஒன்று இருக்கிறது. அது என்னுடைய தார்மீக நெறி, எனது சொந்த அறிவு. அது ஒன்றுதான் என்னை தடுக்கக்கூடிய ஒன்று" என தெரிவித்தார்.
மேலும், "எனக்கு சர்வதேச சட்டங்கள் தேவையில்லை. நான் மக்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கவில்லை," என்றும் கூறினார்.
"டிரம்ப் நிர்வாகம் சர்வதேசச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டுமா?" என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "ஆம், நான் பின்பற்றுகிறேன். ஆனால் அதை நான்தான் தீர்மானிப்பேன். சர்வதேசச் சட்டம் குறித்த உங்கள் வரையறை என்ன என்பதைப் பொறுத்தே அது அமையும்."
அமெரிக்கா மீண்டும் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறதா?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று
இந்தியா தலைமையிலான சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) உட்பட சுமார் ஒரு டஜன் சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் அமெரிக்கா விலகியுள்ளது.
ஐஎஸ்ஏவிலிருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் முடிவு தொடர்பாக இதுவரை இந்திய அரசாங்கம் இன்னும் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தியாவும் பிரான்சும் இணைந்து நிறுவிய இந்த அமைப்பில் 90க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் உள்ளன. சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் தலைமையகம் டெல்லியில் உள்ளது.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதராகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதராகவும் நியமிக்கப்பட்டிருக்கும் செர்ஜியோ கோர் இந்த வாரம் டெல்லிக்கு வரவிருக்கிறார். ஜனவரி 12 அன்று அவர் இந்தியத் தூதராக பதவியேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க முடிவுகள் குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள தி இந்துவின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜோனி, ''இந்த மிகவும் கடுமையான 500 சதவீத வரி சட்டம் அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ள 'முழுமையான உத்தி ரீதியிலான கூட்டாண்மை' என்ற அடிப்படை கருத்தையே இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.'' என தெரிவித்துள்ளார்.
இதை உணர்த்தும் விதமாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அரசு ஒப்பந்தங்களுக்கு சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து ஆண்டு கட்டுப்பாடுகளை நீக்க இந்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே நடந்த தீவிரமான மோதலுக்குப் பிறகு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பட மூலாதாரம்,Reuters
இந்தியாவால் 500% வரியை எதிர்கொள்ள முடியுமா?
வெளியுறவுக் கொள்கை குறித்த ஆய்வு மையமான அனந்தா மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி, அமெரிக்காவின் இந்த உத்தி மற்றும் புதிய மசோதா குறித்து எக்ஸ் வலைதளத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார்.
"லிண்ட்சே கிரஹாமின் இந்த மசோதா கடந்த ஒன்பது மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. யுக்ரேனின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஏற்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் பகுதியாக இது தற்போது மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது. தங்களுடைய இறுதித் திட்டத்தை ரஷ்யாவிடம் முன்வைக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தயாராகி வருகின்றன."
"இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாதிப்பு உண்டு என்றாலும் அமெரிக்காவின் உண்மையான இலக்கு சீனாதான். இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் மீது அமெரிக்கா தடைகளை விதித்தால், அதற்குப் பதிலாக யுக்ரேன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் உடன்பாட்டிற்கு வரக்கூடும். அந்த ஒப்பந்தத்தின்படி, யுக்ரேன் தனது சில பகுதிகளை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கலாம்."
"இந்தியாவின் கொள்கை எப்போதுமே யதார்த்தம் மற்றும் நடைமுறைச் சிந்தனையின் அடிப்படையிலேயே இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், இந்தியா விரைவில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு வரும் என்று நம்புகிறேன். இந்தியா ஏற்கனவே 50 சதவீத வரி விதிப்பால் திணறி வரும் நிலையில், 500 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்வது சாத்தியமற்றது." என தெரிவித்துள்ளார்
அத்துடன், ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ரஷ்ய எண்ணெய் இல்லாமலும் இந்தியாவால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும், தனது வாடிக்கையாளரான இந்தியாவை இழந்தாலும் ரஷ்யாவால் தன்னைச் சமாளித்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
கடந்த ஓராண்டில் இந்திய-அமெரிக்க உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் இந்த உறவு 'தீவிர சிகிச்சைப் பிரிவில்' (ICU) நீடிக்கவே வாய்ப்புள்ளதாகவும் இந்திராணி பாக்சி எச்சரிக்கிறார்.
அமெரிக்காவின் 500 சதவீத வரி மசோதா குறித்து பேசும் இந்திராணி பாக்சி, '' இதிலிருந்து சில நாடுகளுக்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும். தகவல்களின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சில சிறப்பு விலக்குகள் அளிக்கப்படும். அதாவது, ஐரோப்பா எந்தத் தடையுமின்றி ரஷ்ய எரிசக்தியைத் தொடர்ந்து கொள்முதல் செய்யும். அமெரிக்கா இப்போதும் ரஷ்யாவிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்குகிறது. 2028 வரை அமெரிக்கா தனக்குத்தானே இந்த விலக்கைத் தொடருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை."
"தற்போதைய சூழலில் இந்த உண்மைகள் புறக்கணிக்கப்பட்டு, இந்தியா மற்றும் சீனாவை வில்லன்களாகக் காட்டும் முயற்சிகளே அதிகம் நடக்கும். அண்மையில் லத்தீன் அமெரிக்காவில் வெனிசுவேலா விவகாரத்தில் சீனாவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் மீதான வரி விதிப்பால் சீனாவும் பெரும் நட்டத்தை சந்திக்க நேரிடும். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இலக்காக இரான் மாறக்கூடும்." என்கிறார் இந்திராணி பாக்சி.
இதற்கிடையில், இந்த அமெரிக்காவின் புதிய மசோதா குறிப்பாக இந்தியாவைக் குறிவைக்கக்கூடும் என்றும், அதே சமயம் சீனா ஓரளவிற்குப் பாதுகாப்பாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் 'தி எகனாமிக் டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ரஷ்யாவின் எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடு சீனா
சீனாவுக்கு பாதிப்பு இருக்குமா?
ரஷ்ய எண்ணெயை அதிகளவில் வாங்கும் நாடுகளில் சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுமே முக்கியமானவை. அமெரிக்கா, புதிய மசோதாவின் மூலம் இந்த மூன்று நாடுகளையுமே குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இதுவரை இந்தியா மீது மட்டுமே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவிற்கு எதிராக எவ்வித தண்டனை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய வர்த்தக நிபுணர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, "இந்த மசோதா செனட்டில் நிறைவேற்றப்பட்டாலும், நடைமுறையில் இது சாத்தியமில்லை. இது இந்தியாவை மட்டுமே குறிவைக்கும். சீனா அதற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
'ஆர்டி இந்தியா செய்தியிடம் பேசிய முன்னாள் இந்திய வர்த்தகச் செயலாளர் அஜய் துவா , "500% வரி என்பது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைத் தடுப்பதற்கான வழிமுறையே தவிர வேறில்லை. இது வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குச் சமம்," என்றார்.
"நாம் தற்போது 25 சதவீத வரியைச் செலுத்தி வருகிறோம். ஒருவேளை 500 சதவீத வரி விதிக்கப்பட்டால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை அமெரிக்காவில் யாரும் வாங்க முடியாது. எனவே, கூடிய விரைவில் இந்தியா மாற்றுச் சந்தைகளைக் கண்டறிய வேண்டும்," என்றும் அவர் எச்சரிக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/clyw2ze65xeo
By
ஏராளன் ·