இஞ்சியின் முழு பலன்களை பெற அதை நம் உணவில் எவ்வாறு சேர்க்க வேண்டும்?
பட மூலாதாரம்,Getty Images
9 மணி நேரங்களுக்கு முன்னர்
கர்ப்பம், பதற்றம், வயிற்றுப் புழு தொற்றுகள், பயணத்தின்போது ஏற்படும் வாந்தி எனப் பல விஷயங்கள் அவ்வப்போது நமக்கு பிரச்னை தரலாம்.
ஆனால், உணவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் அவற்றைச் சரிசெய்ய உதவுமா? அவற்றுக்கு வேறு ஏதேனும் ஆரோக்கியம் தொடர்பான பலன்கள் உண்டா?
அப்படிப்பட்ட ஒரு பொருள்தான் இஞ்சி. இது குமட்டல் உள்படப் பல நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு காரமான பொருளாக உள்ளது. இது உண்மையிலேயே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
இஞ்சியால் குமட்டலை நிறுத்த முடியுமா?
இதன் பின்னுள்ள அறிவியல் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆய்வுகள் இஞ்சி பலருக்கு குமட்டல் அறிகுறிகளைக் குறைப்பதாக கூறுகின்றன. பிரிட்டன் தேசிய சுகாதார சேவையும் குமட்டலுக்கு இஞ்சி கலந்த தேநீரைக் குடிக்குமாறு பரிந்துரைக்கிறது. ஆனால் இஞ்சி எப்படி இதைச் செய்கிறது?
"இதற்குக் காரணம் அதன் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள்தான். இது செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. அதன் மூலம் அசௌகரியத்தை போக்கி, வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது" என்று உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவியல் சங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான ஆன்னா டேனியல்ஸ் விளக்குகிறார்.
பல ஆய்வுகள் இஞ்சி மாத்திரைகளில் கவனம் செலுத்தி இருந்தாலும், இஞ்சி பிஸ்கட், இஞ்சி சிரப், இஞ்சி தேநீர் ஆகியவற்றின் செயல்திறனை ஆராயும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இஞ்சி குமட்டல் அறிகுறிகளைக் குறைத்துள்ளதைக் காட்டியுள்ளன.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,தன்னிடம் வரும் நோயாளிகளில் பலர் இஞ்சி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வதாகக் கூறுகிறார் பேராசிரியர் கிறிஸ்டன் டெமோருயல்
இஞ்சியால் ஏற்படும் நன்மைகள்
இஞ்சி குமட்டலுக்கு உதவுவது மட்டுமின்றி, பிற உடல்நலப் பிரச்னைகளிலும் பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா?
உதாரணமாக, அழற்சியைப் போக்குவது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது போன்றவற்றை அது செய்கிறதா?
உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை 'வலுப்படுத்தும்' ஓர் அதிசயப் பொருள் என்று எதுவும் இல்லை. உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள், தாதுக்கள் அடங்கிய ஆரோக்கியமான, சமச்சீர் உணவைப் பின்பற்றுவது முக்கியமென வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டிருப்பதால், சில பொருட்கள் அதற்கு உதவக்கூடும். இஞ்சி அத்தகைய பொருட்களில் ஒன்று என டேனியல்ஸ் நம்புகிறார்.
"இஞ்சியில் ஜிஞ்சரால் போன்ற உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்கள் உள்ளன. இது சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. சிறிய அளவு, அதாவது ஒரு தேக்கரண்டி அல்லது ஒரு பூண்டுப் பல் அளவு, உங்களுக்குப் பல நன்மைகளை வழங்கும்," என்கிறார் அவர்.
"அதிலுள்ள அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்களால், இஞ்சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்த் தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்," என்று அவர் விளக்கினார்.
அதன் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளை எடுத்துக்காட்டும் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஒருவேளை தன்னுடல் தாக்க நோய்கள் (நோயெதிர்ப்பு மண்டலம் உடலைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஆரோக்கியமான செல்களை தவறாகத் தாக்கும் நிலை) உள்ளவர்களுக்கு இது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கலாம். கொலராடோ பல்கலைக் கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு, இது உடலில் ஏற்படும் அழற்சியில் இருந்து பாதுகாக்க உதவும் என்று பரிந்துரைக்கிறது.
பட மூலாதாரம்,Getty Images
இத்தகைய அறிகுறிகளுக்கு ஒரு நிவாரணியாக மக்கள் ஏற்கெனவே இஞ்சியை எடுத்துக் கொண்டிருப்பதே, பேராசிரியர் கிறிஸ்டன் டெமோருயல் இந்த ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்ததற்கான காரணம்.
"தன்னுடல் தாக்க நோய்களால் பாதிக்கப்பட்ட எனது நோயாளிகளில் பலர் இஞ்சி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். இஞ்சி உடலில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை ஆராயும் ஆய்வுகள் அதிகம் இல்லை."
"எனவே, நியூட்ரோபில்ஸ் எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை அழற்சி செல்களில் அதன் விளைவைப் பார்ப்பதன் மூலம் இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை நாங்கள் ஆராய விரும்பினோம். முடக்கு வாதம், லூபஸ், ஆன்டிபாஸ்போலிப்பிட் சிண்ட்ரோம் போன்ற பல தன்னுடல் தாக்க நோய்களில் நியூட்ரோபில் செல்கள் அதிகப்படியாகச் செயல்படக்கூடும்."
மனித உடலில் அதிகப்படியான நியூட்ரோபில்களை இஞ்சியால் கட்டுப்படுத்த முடியும் என்பதை உறுதி செய்யும் முதல் ஆய்வு எங்களுடையதுதான். இஞ்சியால் கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட அழற்சி செல்லை எங்களால் நிரூபிக்க முடிந்ததால், இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால் எந்தெந்த மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய எங்கள் கண்டுபிடிப்புகள் உதவும்.
இதன்மூலம், சில தன்னுடல் தாக்க நோய்களின் அறிகுறிகளைக் குறைக்க இஞ்சி உதவக்கூடும் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், "எங்கள் ஆய்வில் இஞ்சி சத்து மாத்திரை பயன்படுத்தப்பட்டது. அதே மாதிரியான விளைவை, இஞ்சி தேநீர் அல்லது வெறும் இஞ்சி கொண்டிருக்குமா என்பதை அறிவது கடினம். ஏனெனில் பொதுவாக சத்து மாத்திரைகளுடன் ஒப்பிடும்போது இந்த வகைகளிலான இஞ்சி நுகர்வுகள் மூலம் உடலில் அதன் செறிவு குறைவாக உள்ளது," என்று டெமோரூயல் விளக்குகிறார்.
"எதிர்கால ஆய்வுகளில் தேநீர் மற்றும் உணவுகளில் உள்ள இஞ்சியின் விளைவையும் ஆராய்வது முக்கியம். ஏனெனில் இது முக்கியமானதாக இருக்கலாம். எங்கள் ஆய்வில் தன்னுடல் தாக்க நோய் இல்லாதவர்களும் சேர்க்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது."
"தன்னுடல் தாக்க நோய்கள் உள்ளவர்களிடமும், குறிப்பாக முடக்கு வாதம், லூபஸ், வாஸ்குலிடிஸ், ஆன்டிபாஸ்போலிப்பிட் சிண்ட்ரோம் போன்ற அதிகப்படியான நியூட்ரோபில்கள் இருப்பதை வைத்து வகைப்படுத்தப்படும் தன்னுடல் தாக்க நோய்கள் உள்ளவர்களிடமும் இதேபோன்ற விளைவுகளைக் காண்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அந்த ஆய்வுகளை நாங்கள் இன்னும் விரிவாகச் செய்ய வேண்டியுள்ளது."
பட மூலாதாரம்,Getty Images
இஞ்சி வலி நிவாரணியாக செயல்படுமா?
"இஞ்சிக்கு வலி நிவாரணிப் பண்புகளும் உள்ளன. அது தசை வலி, புண் ஆகியவற்றைத் தணிக்க உதவும்" என்கிறார் டேனியல்ஸ்.
உடற்பயிற்சியால் ஏற்படும் தசை வலியில் கவனம் செலுத்தும் ஆய்வுகளால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓர் ஆய்வின்படி, இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவு தீவிர உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு ஏற்படும் தசை வலியைக் குறைக்கும். மற்றோர் ஆய்வில், உடல் வலிமைப் பயிற்சி(Strength training) செய்தவர்கள் பச்சை இஞ்சி அல்லது சூடுபடுத்தப்பட்ட இஞ்சியை எடுத்துக் கொள்வது தசை வலியைக் குறைக்கிறதா என்று ஆராயப்பட்டது.
இஞ்சியால் கிடைக்கும் பிற நன்மைகள்
"இஞ்சி கொழுப்பு அளவையும் ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது. இதற்கு இதயத்தைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்" என்கிறார் டேனியல்ஸ்.
இத்தாலியில் உள்ள கட்டானியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பயாஜியோ ஃபாலிகோ இந்தக் கூற்றுகளை ஆராய்ந்துள்ளார்.
"ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தெற்காசியாவின் அன்றாட சமையலிலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் இஞ்சி முக்கியமானதாக இருந்து வருகிறது. உணவுக்கு சுவையையும் நறுமணத்தையும் சேர்ப்பதுடன், ஆஸ்துமா, காய்ச்சல், அஜீரணம், இரைப்பைக் குடல் அசௌகரியம் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது."
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஆஸ்துமா, அஜீரணம் உள்படப் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க இஞ்சி வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறார் பேராசிரியர் பயாஜியோ ஃபாலிகோ
ஃபாலிகோவின் ஆய்வு விரிவானதாக இருந்தது. இஞ்சியின் 'உயிரியல் ரீதியாகச் செயல்படும் கூறுகளை' ஆராய்ந்து, அவை உண்மையில் உடல்நலப் பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றனவா என்பதை அவர் அறிய விரும்பினர்.
"ஜிஞ்சரால் என்பது இஞ்சியில் உள்ள ஒரு சேர்மமாகும். இது அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது," என்று அவர் விளக்குகிறார்.
"உயிரியல் ரீதியாகச் செயல்படும் மற்றுமொரு சேர்மம் '6-ஷோகோல்'. இதுவும் அழற்சி எதிர்ப்பு, புண் எதிர்ப்பு, புரோஸ்டாக்லாண்டின் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, ஊடுருவல் எதிர்ப்பு போன்ற பல மருந்தியல் மற்றும் சுகாதாரப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு, இதுவொரு சக்தி வாய்ந்த சளி நீக்கி அல்லது திசு எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்."
இது தொடர்பாக மனிதர்களிடையே பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஒருபுறம் இருக்க, மறுபுறம் இஞ்சி உங்கள் அனைத்து மருத்துவப் பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்துவிட வேண்டாமென ஃபாலிகோ எச்சரிக்கை விடுக்கிறார்.
"இஞ்சி தொடர்பாக இரண்டு விஷயங்களில் நான் உறுதியாக உள்ளேன். முதலாவதாக, ஓர் உணவுப் பொருளின் லேபிளில் இஞ்சியின் படம் இருப்பதாலேயே அந்தப் பொருளால் பயன் கிடைக்கும் என்று அர்த்தமல்ல. இரண்டாவதாக, நீங்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்துவிட்டு, அதை இஞ்சியைக் கொண்டு ஈடுசெய்ய முடியாது."
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இஞ்சியின் நன்மைகளை முழுமையாகப் பெற விரும்பினால் அதைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுமாறு டேனியல்ஸ் பரிந்துரைக்கிறார்
இஞ்சியின் முழு பலன்களை பெற அதை நம் உணவில் எவ்வாறு சேர்க்க வேண்டும்?
"இஞ்சியை உரிக்க வேண்டிய அவசியமில்லை" என்கிறார் தி குட்னஸ் ஆஃப் ஜிஞ்சர் அண்ட் டர்மரிக் என்ற சமையல் புத்தகத்தின் ஆசிரியரான எமிலி ஜோன்சென்.
"அதன் தோலை நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்து, உங்கள் விருப்பப்படி நறுக்கிக் கொள்ளலாம் அல்லது துருவிக் கொள்ளலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவில் புதிதாக இஞ்சியை சேர்த்துக் கொள்பவர்களாக இருந்தால், "அதற்கு வலுவான சுவையும் காரத்தன்மையும் உள்ளது. எனவே அதை உங்கள் சமையலில் சிறிது சிறிதாகச் சேர்க்கத் தொடங்குங்கள்" என்று ஜோன்சென் அறிவுறுத்துகிறார்.
"முதலில் அதை ஒரு பானத்தில் முயன்று பாருங்கள்; ஒரு குவளையில் சிறிது இஞ்சியைத் துருவி, ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, அதன் மீது சூடான நீரை ஊற்றினால், ஒரு சுவையான, இதமான பானம் தயார்."
அதன் பிறகு, அதை வதக்கிய காய்கறிகள், சாப்பாடு வகைகள் போன்ற பிற உணவுகளில் சேர்க்கத் தொடங்கலாம்.
இஞ்சியைப் பயன்படுத்தி சமைக்கும்போது அதன் மருத்துவ பலன்களை முழுமையாகப் பெற விரும்பினால், அதைச் சிறிய துண்டுகளாக நறுக்குமாறு டேனியல்ஸ் பரிந்துரைக்கிறார்.
"இது செல் சுவர்களை உடைத்து, அதன் சத்துகளை எளிதில் உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. எனவே, துருவிய அல்லது பொடியாக நறுக்கிய இஞ்சியை தேநீரில் சேர்ப்பது நல்லது."
இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான மற்றும் சில வழிகளையும் அவர் பரிந்துரைக்கிறார்: "துருவிய இஞ்சி, ஆலிவ் எண்ணெய், வினிகர், தேன், ஒரு சிட்டிகை சோயா சாஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சாலட் டிரஸ்ஸிங் தயாரிக்கலாம் அல்லது பொடியாக நறுக்கிய அல்லது துருவிய இஞ்சியை நிறைய காய்கறிகள் மற்றும் கடல் உணவு, மீன், கோழி அல்லது டோஃபு போன்ற கொழுப்பற்ற புரதங்களுடன் சேர்த்து வதக்கிய உணவுகளில் சேர்க்கலாம்."
"கருப்பு மிளகு மற்றும் மஞ்சளில் முறையே பைபரின் மற்றும் குர்குமின் எனப்படும் இயற்கைச் சேர்மங்கள் உள்ளன. இந்தச் சேர்மங்கள் இஞ்சியின் சத்துகளை உடல் சிறப்பாக உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றன. இதன்மூலம் உடலுக்கு இஞ்சியில் இருந்து அதிகப் பலன் கிடைக்கிறது. எனவே இந்த மூன்றையும் ஒரு சூடான பானத்தில் சேர்ப்பது, இஞ்சியின் பயன் திறம்படக் கிடைப்பதற்கு உதவும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cjw143gd5djo
By
ஏராளன் ·