Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நெறித் திருமணம்

Featured Replies

அப்போ சபேசன் உங்களுக்கும் மங்களம் உண்டாகட்டும்... ( தமிழ் பற்றி இன்னும் ஒரு தலைப்பின் ஆராயலாம்)

தமிழில் இருந்தும் சிலதுகள் ( பார்ப்பணன் தந்தது எண்டு நீங்கள் சொன்னது) வடக்கு நோக்கி போய் இருக்கிறது எண்று ஒத்து கொள்கிறீர்கள்... மகிழ்ச்சி... !!

நாங்கள் இந்துக்கள் அல்ல சைவர்கள் ( சைவம் என்பது செம்மை எனும் சிவன்) எண்ற போதெல்லாம் மதத்தை எதிக்க்கிறேன் எண்று வடக்கத்தியர் நடவடிக்கை பற்றி கட்டுரைகள் தந்தீர்கள்.... நாங்கள் தமிழர்கள் சைவர்கள் என்பதை நீங்கள் ஒத்து கொண்டதும் இல்லை...

இப்போ சைவர்களின் பக்தி பாசுரங்கள் பாடி திருமந்திரங்கள் ஓதி( ஓதவைத்து) இருகிறீர்கள்... திருமந்திரத்தை எழுதிய திருமூலரும் கூட வைனவத்தை கடுமையாக எதிர்த்தவர்... அங்கே நீங்கள் இண்றுவரை எதிர்த்ததும் கூட வைனவம் பற்றியதும் வைணவத்தின் முட்டாள்தனமான திணிப்புக்களை மட்டுமே...

திருமூலரும் நீங்களும் ஒண்றுதான்... திராவிட கொள்கை என்பது நீங்கள் காட்டும் வெறும் பகட்டு... உங்களுக்குள் ஒரு சைவன் ஒளிந்து இருப்பது நன்கு தெரிகிறது...!!

காரணம் மதம் இல்லாத தமிழ் திருக்குறளை நீங்கள் படித்து திருமணம் செய்து இருக்கலாம்.... ஆனால் சைவ தமிழ் பக்தி பாசுரங்கள் படித்து இருக்கிறீர்கள்...!

திருமணம் எனும் தண்ணீரில் உங்களின் திராவிட கறுப்பு சாயம் வெளுத்து விட்டதாகத்தான் தெரிகிறது...

  • Replies 180
  • Views 42.5k
  • Created
  • Last Reply

வெற்றிவேல், சபேஸ் போன்றவர்கள் இது ஒரு சைவத் தமிழ் திருமணம் என்று சொல்கிறார்கள்.

வெற்றிவேல் அனைத்துத் தமிழர் திருமணங்களிலும் தேவாரங்களும், திருமந்திரமும் ஒலிக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.

நல்லது!

என்னுடைய திருமண அழைப்பு மடலை சில கிறிஸ்தவ நண்பர்களுக்கு கொடுத்த போது, அவர்கள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நேரம் செல்லவே வருவோம் என்றார்கள். அதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. அவர்கள் தமது திருமணத்தை தமிழில்தான் செய்கிறார்கள். அவர்கள் நேரம் பிந்தி வருவதால் யாரும் எதையும் இழக்கப் போவது இல்லை.

நான் நேரத்திற்கு வரவேண்டும் என்று விரும்பியது இந்துத் தமிழர்களைத்தான். அவர்களுக்கு தமிழ் நெறித் திருமணத்தை அறிமுகம் செய்வதுதூன் என்னுடைய நோக்கம்.

இப்பொழுது நீங்கள் என்னுடைய திருமணத்தை "சைவத் தமிழ் திருமணம்" என்று சொல்கின்ற போது அது எனக்கு மகிழ்ச்சியைத்தான் தருகிறது.

இப்பொழுது என்னுடைய அன்பான வேண்டுகோள்!

நாங்கள் தமிழர்கள். நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை எதுவாக இருந்தாலும், அதற்கேற்றபடி எமது நிகழ்வுகளை நடத்தக் கூடியவாறு தமிழ் மொழி எமக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. எமது தாய்த் தமிழை புறந்தள்ளுவதை நிறுத்துவோம். தமிழர்களின் திருமணங்களை தமிழிலேயே செய்வோம்.

நீங்கள் சைவர்களாக இருங்கள், அல்லது இந்துக்களாக இருங்கள், அல்லது வள்ளுவ நம்பிக்கையாளர்களாக இருங்கள், அல்லது எதன் மீது நம்பிக்கையற்றவர்களாக இருங்கள். ஆனால் தயவு செய்து முதலில் தமிழர்களாக இருங்கள். உங்கள் வீட்டின் திருமணங்களை தமிழில் நடத்துங்கள்.

என்னுடைய ஒரு அறிவிப்பு!

ஐரோப்பிய நாடுகளில் "தமிழ் நெறித் திருமணம்" செய்வதற்கு யாராவது விரும்பினால், அதற்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன். தேவைப்பட்டால் நேரில் வந்து நடத்தித் தரவும் நாம் தயார். அது பக்தி நெறித் திருமணமாக இருக்கட்டும், குறள் நெறித் திருமணமாக இருக்கட்டும், இவைகள் இரண்டும் சேர்ந்த திருமணமாக இருக்கட்டும், இவைகள் இல்லாத பகுத்தறிவத் திருமணமாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் "தமிழ் நெறித் திருமணமாக" இருந்தால் போதும். நான் வருவேன். பக்தி நெறித் திருமணத்தில்பக்திப் பாசுரங்களை பாடுவதற்கும் எனக்கு தயக்கம் இல்லை.

ஆகவே அன்பார்ந்த உறவுகளே! தயங்காமல் என்னை அழைக்கலாம். தமிழ் வாழ என்னால் ஆனதை செய்வேன்.

  • தொடங்கியவர்

சபேசன் முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொண்டார் மற்றும் தனிப்பட்ட விடயங்கள் சார்ந்த விமர்சனங்களிற்கு அப்பால் தமிழில் திருமணம் செய்து கொண்டமை பாரட்டத் தக்கது.

எத்தனையோ பேருக்குத் தமிழ் முறையில் திருமணம் செய்ய ஆசை இருந்தும் ஒரு திருமணத்தில் பலரும் சம்பந்தப்படுவதால் (மனைவி, மனைவியின் பெற்றோர், தனது பெற்றோர், உறவினர்கள்) அந்த முறையில் திருமணம் செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அத்தனை சவால்களையும் சந்தித்து தமிழ்த் திருமணம் செய்தது வரவேற்கத்தக்கதே.

`தமிழ்த் திருமணம்' என்பது கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் செய்து கொள்வது என்ற ஒரு மாயை இருப்பது பலரும் இந்தத் திருமண முறையை விரும்பாததற்குக் காரணம். ஆனால் சமயப் பாசுரங்கள் பாடப்பட்டும் `தமிழ்த் திருமணம்' செய்யப்படலாம் என்று சபேசன் செய்து காட்டியிருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை தமிழ்ப் பாசுரங்களுடனோ அல்லது திருக்குறளுடனோ ஏன் தமிழ் மந்திரங்களுடனோ திருமணம் செய்யப்படலாம். அங்கே தமிழ் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இது போன்ற திருமணங்கள் பல பகுதிகளிலும் நடக்க நடக்கத் தான் மக்கள் மத்தியில் தமிழ்த் திருமணங்கள் குறித்த அச்சங்கள் நீக்கப்படும்.

அது மட்டுமன்றி சபேசன் அவர்கள் செய்தது போல நற்காரியம் என்ற வகையில் ஒவ்வொரு திருமணத்திலும் தாயகம் சார்ந்து ஒரு நற்காரியம் செய்யப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. புலத்திலே ஒவ்வொரு ஆண்டிலும் எத்தனை திருமணங்கள் நடக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் இத்தகைய நற்காரியங்கள் செய்யப்படுகின்ற போது துன்பத்திலே துவழ்கின்ற அந்த மக்களுக்கு சிறிய ஆறுதலாவது கிடைக்குமல்லவா?

தமிழ்த் திருமண முறைகள் குறித்து பல தமிழறிஞர்களும் கூடி ஆராய்ந்து அதனை நூலுருவில் கொண்டு வர வேண்டும். அது ஒரே முறையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் விரு;பபத்திற்கேற்ப சில சில மாற்றங்களைச் செய்யக் கூடியதாய் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கலாம். (பிராமணிகள் ஒரே முறையிலா திருமணம் செய்விக்கிறார்கள. ஒவ்வொருவரும் தமது இஸ்டப்படி தானே செய்விக்கிறார்கள்)

அந்த வகையில் புலத்திலே பலரும் பல காரணங்களால் செய்யத் தயங்குகின்ற அல்லது செய்ய முடியாமல் போன ‘தமிழ்த் திருமணத்தைச’; செய்த சபேசனை வாழ்த்துவதற்கு வயதில்லாத காரணத்தால் வளமாக வாழ (நான் வணங்கும்) இறைவன் அருள்புரியட்டும் என்று வணங்குகிறேன்.

அந்த வகையில் புலத்திலே பலரும் பல காரணங்களால் செய்யத் தயங்குகின்ற அல்லது செய்ய முடியாமல் போன ‘தமிழ்த் திருமணத்தைச’; செய்த சபேசனை வாழ்த்துவதற்கு வயதில்லாத காரணத்தால் வளமாக வாழ (நான் வணங்கும்) இறைவன் அருள்புரியட்டும் என்று வணங்குகிறேன்.

அது போல் கிறித்தவ தமிழர்களும் தேவாலயங்களில் தங்கள் திருமண வேளையில் திருக்குறள் ஓதவும், பியானோ, கிட்டார் போன்ற ஆங்கில இசைக்கருவிகளை தேவாலயத்தில் இசைப்பதற்கு பதிலாக தமிழிசை கருவிகளான மேளம், நாகசுரம் போன்றவற்றை இசைக்கும்படியும் நாம் கோரவேண்டும்.

அத்தோடு இஸ்லாமிய தமிழர்களையும் குர் ஆனுக்கு பதிலாக திருக்குறள் ஓதி திருமணம் செய்ய வைக்க சபேசன் போன்றவர்கள் முயற்சிப்பது மேலும் சிறப்பு.

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

வணக்கம் வெற்றிவேல்

நான் திருக்குறளை ஓதித் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே. தமிழில் திருமணம் செய்ய வேண்டும் என்று தானே சொன்னேன்.

அந்த வகையில் கிறிஸ்தவர்கள் தமிழில் தானே விவிலியம் வாசித்துத் திருமணம் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனின் இத் திருமண முறையே வரவேற்கின்றேன். அவருக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

ஆனால் இங்கு கருத்தெழுதுபவர்களின் கேள்வியை இவர் புரிந்து கொள்ளவில்லையோ, அல்லது அப்படியான கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இருந்து தவிர்த்துக் கொள்ளவே இப்படியான பதில்களை எழுதுகின்றார் என்று புரியவில்லை.

1. தாலியை எதிர்த்துவிட்டு, ஏன் தாலி கட்டினீர்கள் என்ற என்ற கேள்விக்குப் பதிலைக் காணமுடியவில்லை. சமூகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கு எதிராக நடந்து கொண்டேன் என்பதைத் தான் சொல்கின்றீர்கள். கர்ப்பமுற்ற பெண்ணுக்குத் தாலி கட்டக் கூடாது என்ற வழக்கம் இருப்பதாகத் தெரியவி;ல்லை. பல காதலர்கள் கர்ப்பமுற்றதால் தான் பாய்ந்தடித்துத் திருமணம செய்து கொள்கின்றார்கள். தவிரவும் மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் தமிழ் சினிமாவில் கூட கர்ப்பமுற்ற காதலியைத் திருமணம் செய்வதாகக் காட்டியிருக்கின்றன. எனவே நீங்கள் அவ்வாறு சொல்லவிளைவது உங்களை நியாயப்படுத்தவே.

2. மங்கலம் என்ற சொல் தமிழில் இருந்து வடமொழிக்குப் போயிருக்கலாம் எனச் சொல்ல முனைகின்றீர்கள். கடவுள் பற்றிய வாதங்களில் எல்லாக் கடவுளுமே ஆரியத்தில் இருந்து வந்தது, தமிழில் இருக்கவில்லை என்ற வாதத்தைத் தாங்கள் வைத்து வந்ததை நான் அவதானித்திருக்கின்றேன். ஏன் இந்தக் கடவுள்கள் தொடர்பாகவும், தாங்கள் தமிழில் இருந்து போன கடவுள்கள் என்ற கொள்கையை இப்போது ஏற்க முன்வருவீர்களா?

இப்போது தாலி தொடர்பாக நீங்கள் சமாளிக்கு;ம சங்கடங்களைத் தவிர்க்கவே "தமிழ் முறைத் திருமணம்" என்ற வார்த்தைகளை ஏற்படுத்த முனைகின்றீர்கள். இதே பதிகங்களை எழுதினவர்களைத் தான், நீங்கள் இப்பதிகங்கள் பொய்யானவை. சென்ற நூற்றாண்டிலோ, அதற்கு முந்திய நூற்றாண்டிலோ பலரால் எழுதப்பட்டது என்று விவாதித்துமிருந்தீர்கள்.

எது எப்படியோ தமிழனின் மதம் சைவமே இல்லை என்று எனத் தர்க்கித்து வந்த நீங்கள் இறுதியில் ஏற்றுக் கொண்டது மகிழ்வினைத் தருகின்றது. முருகனை விட அதிகம் தமிழில் பாடப்பட்டவரும், தமிழ் கலாச்சார வளர்ச்சியில் முன்நிறுத்தப்பட்டவரும் சிவனே ஆவார்.

உங்களுக்கும், உங்களின் மனைவிக்கும் என் வாழ்த்துக்கள் பலப்பல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் திருமணத்தின் போது ஒரு சிறுமாற்றம் நடந்தது. மங்கலநாண் வந்து சேர்ந்ததும் மணமகள் மணமகளுக்கு ஒரு கூறைச் சேலையை கொடுத்து கட்டிவர அனுப்புவார். அது அவசியம் இல்லை என்று எனக்குப் பட்டதால், அதை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கவில்லை. ஆனால் என்னுடைய மனைவி தன்னால் ஒரு இடத்தில் தொடர்ந்து இருக்க முடியாது என்று சொல்லி விட்டார். கூறைச் சேலை சம்பந்தமான நிகழ்வு இருந்தால் நல்லது என்று அவர் விரும்பினார். கடைசியில் அவசரமாக ஒரு கூறைச் சேலை வாங்கி அதையும் நிகழ்ச்சியில் சேர்த்தேன்

ஆடிக்கறக்க முடியாததை பாடிக்கறந்து இருக்கின்றார்கள்... அவ்வளவு தான்.....

வணக்கம் வெற்றிவேல்

நான் திருக்குறளை ஓதித் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே. தமிழில் திருமணம் செய்ய வேண்டும் என்று தானே சொன்னேன்.

அந்த வகையில் கிறிஸ்தவர்கள் தமிழில் தானே விவிலியம் வாசித்துத் திருமணம் செய்கிறார்கள்.

வணக்கம் காவ்யா!

கிறித்தவ தமிழ் திருமணங்களில் விவிலியத்திற்கு பதிலாக குறளை ஓதவேண்டும் என நான் கோரவில்லை. விவிலியத்தோடு சேர்த்து குறளும் ஓதட்டுமே என்று தான் சொல்லி இருக்கிறேன். அத்தோடு தமிழிசை கருவிகள் மேளம், நாகசுரம் போன்றவற்றை பியானோவிற்கு பதிலாக தேவாலயங்களில் இசைக்க முன் வருவார்களா? என்ற இரண்டாவது கேள்விக்கு நீங்கள் ஏனோ பதில் அளிக்கவில்லை !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு சபேசன், நீங்கள் யார், எந்த நாட்டில் வசிக்கின்றீர்கள் என்று எனக்கு தெரியாது.. உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாம் என்ற ஒரு நம்பிக்கையில் இரு கேள்வி கேட்கின்றேன்... உங்கள் தொழில் என்ன என்பதை கூறுவீர்களா? நீங்கள் ஏதோ ஒரு தேவைக்காக உங்கள் மனதில் உள்ள உங்களில் ஊறியுள்ள ஒரு பழக்கவழக்கத்தை தவறாக சுட்டி வேறு ஒரு விடயத்தை சரியாக கூறுவதற்காக வாதம் (வீண்) செய்வதாக தோண்றுகின்றது. உங்கள் கருத்துகளில் உறுதி இல்லாததோடு ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கின்றன.

உங்களிடம் விடையை எதிர்பார்த்து.....

நீங்கள் இதன் மூலம் எதனை சாதிக்க முயல்கின்றீர்கள்?

எதற்காக ஆண்டாண்டு காலமாக நாம் மற்றும் நம்மை சார்ந்தவர்கள் பின் பற்றி வந்த பழக்க வழக்கங்களை மாற்ற முயல்கின்றீர்கள்? முன்னோர் தொடக்கி வைத்த சம்பிரதாயங்களை ஏன் பிழையாக கருது கின்றீர்கள்? ஒரு புதிய சமூகத்தை உருவாக்க நினைக்கின்றீர்களா?

ஏதாவது ஒரு வரலாற்றில் இடம் பெற விரும்புகின்றீர்களா அல்லது ஒரு புரட்சி செய்ய வேண்டும் என்ற வெறி உங்கள் மனதில் இருக்கின்ற போதும் எதன் மூலம் அதை செய்வது என்பது தெரியாமல் இதனை தேர்ந்து எடுத்தீர்களா?

பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்... நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் முறையில் எங்காவது ஒன்றாக வாழ்ந்து விட்டு பெண் கர்ப்பவதியான பின்னர் தான் தாலி கட்ட வேண்டும் என்று இருக்கின்றதா? நீங்கள் கூறியிருக்கின்றீர்கள், உங்கள் திருமண விடயங்களை யாழில் இணைத்தமைக்கு காரணம் அந்த வாசகங்களை மற்றவர்களும் அவர்கள் உங்களை போன்று திருமணம் செய்ய விரும்பினால் பாவனை செய்ய வேண்டும் என்பதற்காக..... உங்களை போல... பெண்னை கற்பவதி ஆக்கி விட்டு கல்யாணம் செய்வது தமிழ் முறை அல்ல என்பதை உங்கள கருத்து (?) க்களில் சேர்த்து விடுங்கள்..... உங்களுக்கு இல்லை என்றாலும் தமிழ் பண்பாடு தெரியாத எவரும் தமிழர் பற்றி தப்பான் அபிப்பிராயத்தை கொண்டு விடக்கூடாது... இற்றைக்காலத்தில்.. .எத்தனையோ வேற்று இனத்தவர்கள் தமிழை இனையம் மூலம் கற்று வருகின்றார்கள்......அவர்களில் சிலர் யாழ் இனையத்தை பயன் படுத்துவதும் எனக்கு தெரியும்... ஒரு பல்கலைக்கழகத்தில் இலங்கை பிரச்சனை குறித்து ஒரு தொடர்பாடல் நடை பெற்ற போது, யாழ் இனையத்தை சுட்டிக்காட்டி, தமிழ் மக்களின் மன நிலை பற்றி ஒரு ஆங்கிலேயர் பேசினார்.....

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மணமக்களுக்கு எனது உளம்கனிந்த திருமண வாழ்த்துக்கள்.

இதுவரை வாசித்து அறிந்ததில் எனக்குத் தோன்றும் எண்ணங்கள்..

1) சபேசன் சமுதாய அழுத்தங்களுக்கு (ஒரு திருமணம் செய்தல், தாலி கட்ட நிர்ப்பந்தித்தல் போன்றவை) அடிபணிந்து விட்டார்.

2) மனைவியின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப சில விட்டுக்கொடுப்புகளைச் செய்திருக்கிறார்.

3) மொத்தத்தில், தமிழால் வென்று பகுத்தறிவில் தோற்றுவிட்டார்.

எனது எண்ணப்பாடுகள் தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்.

அத்தோடு இஸ்லாமிய தமிழர்களையும் குர் ஆனுக்கு பதிலாக திருக்குறள் ஓதி திருமணம் செய்ய வைக்க சபேசன் போன்றவர்கள் முயற்சிப்பது மேலும் சிறப்பு.

என்ன நக்கலா...?? அவர் எழுதி இருப்பதை ஒருக்கா மீண்டும் படியுங்கோ...!!!!!

நான் நேரத்திற்கு வரவேண்டும் என்று விரும்பியது இந்துத் தமிழர்களைத்தான். அவர்களுக்கு தமிழ் நெறித் திருமணத்தை அறிமுகம் செய்வதுதூன் என்னுடைய நோக்கம்.

அதாவது அவரின் புத்திமதிகள் எல்லாம் இந்து தமிழர்களுக்கு மட்டும் தானாம்...!!

தமிழர்களில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் தனது சாதியில் கூடியவர் அல்லது குறைந்தவர் எண்டு நினைத்தாரோ என்னவோ....!

Edited by தயா

பொன்னையா,

"தாலி தமிழர்களுடையது அல்ல" என்ற கருத்து பல பகுத்தறிவாளர்களிடம் உண்டு. ஆனால் நான் தாலி தமிழர்களுடைய மரபாக இருந்திருக்கக்கூடும் என்பதை ஏற்று கருத்துக்களை வைத்திருக்கிறேன். "தாலி" என்று ஒரு குறுங்கதை எழுதியிருக்கிறேன். அதிலும் தாலி தமிழர்களுடைய திருமணத்தின் ஒரு அடையாளமாக இருந்ததாக எழுதியிருப்பேன்.

ஆனால் தாலி மனிதரை ஆதிக்கம் செய்வதைத்தான் நான் எப்பொழுதும் கண்டித்து வந்திருக்கிறேன். தாலி என்பது ஒரு ஆபரணம். அன்பின் அடையாளமாக அதைக் மனைவிக்கு அணிவிப்பதை நான் என்றைக்கும் குறை சொன்னது இல்லை. மனிதரை ஆதிக்கம் செய்யும் தாலியை திருமணத்தில் வைத்தே மறுத்துரைத்து அன்பின் அடையாளமாக தாலியைக் கட்டினேன்.

சமூக மற்றும் மதவியல் அடையாளம் கொண்ட தாலியை நான் கட்டுவது இல்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதன்படிதான் என்னுடைய திருமணத்தை நடத்தினேன்.

ஒரு சிறு விடயம் சொல்கிறேன். தாலி கட்டுகின்ற போது நான் மட்டும்தான் கட்டினேன். மற்றவர்களை சுரை போட அனுமதிக்கவில்லை. தாலி கட்டி முடித்தவுடன் மனைவியை இடப் பக்கம் அமரச் சொல்லி உறவினர்கள் சொன்னார்கள். அதையும் நான் செய்யவில்லை. முன்பக்கம் இருந்த சில பெண்கள் என்னுடைய மனைவிக்கு இடப் பக்கம் போகும்படி சைகை காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாம் இடம் மாறவில்லை. இது ஒரு சிறு உதாரணம்.

தாலி என்பதன் ஊடாக சமூகம் எம்மீது எவ்வித செல்வாக்கு செலுத்தவும் நாம் அனுமதிக்கவில்லை. தாலி என்பது எமது தனியுரிமை. நீங்கள் சொல்கிற தாலி வேறு. அந்தத் தாலி என்னுடைய திருமணத்தில் இடம்பெறவில்லை. உங்களுடைய தாலி தருகின்ற பொருளும் என்னுடைய திருமணத்தில் இடம்பெற்ற தாலி தருகின்ற பொருளும் வேறு வேறானவை.

சமூகம் கொண்டிருக்கும் தாலியை நான் எதிர்க்கிறேன்.

இது பற்றி போதுமான அளவு நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

அடுத்தது கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு தாலி அணிவிப்பது பற்றி கேள்வி எழுப்பியிருந்தீர்கள். கர்ப்பமானால் மூன்று மாத காலத்திற்குள் தாலியை கட்டும்படி சமூகம் சொல்கிறது. இதைப் பற்றி நீங்கள் வேண்டுமானால் விசாரித்துப் பாருங்கள். பெண் கர்ப்பமானவுடன் மூன்று மாத முடிவதற்குள் அவசரம் அவசரமாக தாலி கட்டி திருமணம் செய்த குடும்பங்களை எனக்குத் தெரியும். எமக்கு மூன்று மாதம் கடந்து சில மாதங்களாகி விட்டது. அதனால்தான் தாலி கட்டக் கூடாது என்று அடம்பிடித்தார்கள்.

சும்மா,

ஈழத்தில் இருந்து மூன்று மாத அனுமதியில் என்னுடைய தாயார் வந்து நிற்கின்றார். அவர் நிற்கும் போது திருமண செய்வதற்கு நான் விரும்பியதால், தற்பொழுது செய்தேன். பெண் கர்ப்பமாக இருக்கும் போதுதான் திருமணம் செய்ய வேண்டும் என்று இதை தவறாக விளங்குகின்ற அளவிற்கு முட்டாள்களாக யாரும் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

திருமணத்தை செய்வதா? செய்தால் எப்பொழுது செய்வது? என்பது அவரவர் வசதியைப் பொறுத்து அவரவர் எடுக்க வேண்டிய முடிவு. திருமணத்தை இந்தக் காலத்தில்அல்லது இந்தக் காலத்திற்குள்தான் செய்ய வேண்டும் என்று தமிழர் திருமணத்தில் எந்த வரையறையும் இல்லை. கர்ப்பமாக இருக்கும் போதும் செய்யலாம். கர்ப்பமாக இல்லாத பொழுதும் செய்யலாம். குழந்தை குட்டி பெற்ற பிறகும் செய்யலாம். அது உங்கள் விருப்பம்.

தமிழர்கள் தமிழில் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் இங்கே சொல்லப்படும் விடயம்.

நிறையக் கேள்விகள் வருவதால் சில கேள்விகளுக்கு பதில் எழுத மறந்து விடுகிறேன். பொன்னையா "மங்கலம்" என்ற சொல் தமிழில் இருந்து வடமொழிக்கு போனது போன்று இந்துக் கடவுள்களும் தமிழில் இருந்து வடமொழிக்கு போயிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டிருந்தார்.

நான் முருகனுக்காக இதுவரை முந்நூறு தடவைக்கு மேல் வாதாடியிருப்பேன். முருகன் தமிழ்க் கடவுள் என்று கட்டுரைகள் எல்லாம் எழுதியருக்கிறேன். தமிழ்க் கடவுளான முருகனை ஆரியர்கள் ஸ்கந்தனாக்கி விட்டார்கள் என்று சொல்லியிருக்கிறேன். இவற்றை நீங்கள் படிக்கவில்லையா?

முருகன், சுடலைமாடன் என்று நிறையக் தமிழ் கடவுள்களை இந்து மதம் உள்வாங்கி வைத்திருக்கிறது. இது வரலாறு. இதை நான் எப்படி மறுக்க முடியும்?

பலர் இங்கே நான் எழுதுபவற்றில் பாதியைத்தான் படிக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. சிலவேளை எழுதுகின்ற நான்தான் விளக்கம் குறைவாக எழுதுகிறேனோ தெரியவில்லை.

அதை விட நான் ஒன்றைச் செய்கின்ற போது பல காரணங்கள் அதற்கு இருக்கிறன. அனைத்துக் காரணங்களையும் நான் தெளிவாகச் சொல்கிறேன். ஆனால் கேள்வி கேட்பவர்கள் மற்றக் காரணங்களை மறந்து ஏதாவது ஒரு காரணத்தை மட்டும் தூக்கிப் பிடித்து கேள்வி கேட்கிறார்கள். இது தவறு.

டங்குவாரின் மூன்று கருத்துக்களில் இரண்டாவது கருத்தை ஓரளவிற்கு ஏற்றுக் கொள்கிறேன். மனைவியின் கருத்துக்கும் மதிப்புக் கொடுத்து செய்த திருமணம் இது. பகதிப் பாசுரங்கள் இடம்பெற்றதற்கு அவர் ஒரு முக்கிய காரணம்.

முதலாவது கருத்தை நான் முற்று முழுதாக மறுக்கிறேன். சம்பந்தப்பட்ட என்னால்தான் அதை தீர்மானமாக சொல்ல முடியும். சமுதாயத்தின் அழுத்தம் திருமணத்திற்கு எதிராகத்தான் இருந்தது. இந்த உண்மையை நீங்கள் நம்பாது விட்டால், என்னால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய மிக நெருங்கிய உறவினர்களே நேரடியாக திருமணத்திற்கு எதிராக எம்முடன் பேசினார்கள்.

மூன்றாவது கருத்தையும் என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு பேச்சுக்கு என்னுடைய விருப்பத்தின் படி பக்திப் பாசுரங்கள் இன்றி திருமணம் செய்தேன் என்று வைத்துக் கொள்வோம். பகுத்தறிவு என்பது பெண்ணுக்கும் சம உரிமை வழங்குவது. என் மனைவியின் விருப்பத்தை புறக்கணித்து என்னுடைய முடிவின்படி திருமணம் செய்திருந்தால் பெண்ணுக்கு சம உரிமை வழங்காமல் "பகுத்தறிவில்" தோற்று விட்டேன் என்று அப்பொழுது சொல்ல மாட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் வழிபாடு அல்லது அனைவருக்கும் அர்ச்சகர் உரிமை என்று கேட்டால், 'உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே, பிறகேன் கோயில் விசயங்களில தலையிடுறியள்' எண்டுறது.

வணக்கம் நல்லவன்,

யாரும் விரும்பினால் கோவிலை திறக்கலாம். ஊரிலை எண்டால் சொந்தமாக காணி வாங்கி, உங்கள் செலவிலேயே கோவிலை கட்டி அதற்கு நீங்கள் பூசகராக இருக்கலாம். வெளிநாடென்றால் காணி வாங்க வசதி இல்லையெண்டாலும் எங்கேயாவது ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, உங்கள் செலவிலேயே கோவில் போல வடிவமைத்து நீங்களாகவே விளம்பரபடுத்தி, நீங்களே பூசகராக இருக்கலாம். இதை சட்டத்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் சிலவேளை வராமல் விடலாம். அதைவிடுத்து ஏன்தான் மற்றவர்களின் கோவிலில் அர்ச்சகர் உரிமை கேக்கிறீர்களோ தெரியாது. ஊரிலும் புலம்பெயர் நாடுகளிலும் தனியார் கோவில்களும் உள்ளன. அவர்கள் பிராமண குலத்தை சேர்ந்தவர்களை பூசகர்களாக நியமித்துள்ளனர். அது அவர்களின் உரிமை அல்லது விருப்பம். காரணங்களும் வேறுபடலாம். உ.ம் பெயர் பெற்ற ஜயர் என்றால் வியாபாரம் ஓகோ என பேகும்என்ற நோக்காக இருக்கலாம். ஆனால் பக்தர்கள் பெயர்பெற்ற ஜயர் என்றால் விதிப்படி பூசைகளை செய்வார்கள் என அக்கோவிலுக்கு செல்வார்கள்.

இல்லையெண்டால் ஒரு கோவிலை திறந்து (புனிதமாக) எந்த வித விலைப்பட்டியலும் இல்லாமல் யாரும் வந்து விரும்பின மாதிரி (தமிழிலை எண்டா என்ன, ஆங்கிலத்தில் எண்டா என்ன, சமஸ்கிருதத்தில் எண்டா என்ன) வணங்கலாம் என திறவுங்கோ. நிச்சயமாக நான் அந்த கோவிலுக்கு வருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஒரு அறிவிப்பு!

ஐரோப்பிய நாடுகளில் "தமிழ் நெறித் திருமணம்" செய்வதற்கு யாராவது விரும்பினால், அதற்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன். தேவைப்பட்டால் நேரில் வந்து நடத்தித் தரவும் நாம் தயார். அது பக்தி நெறித் திருமணமாக இருக்கட்டும், குறள் நெறித் திருமணமாக இருக்கட்டும், இவைகள் இரண்டும் சேர்ந்த திருமணமாக இருக்கட்டும், இவைகள் இல்லாத பகுத்தறிவத் திருமணமாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் "தமிழ் நெறித் திருமணமாக" இருந்தால் போதும். நான் வருவேன். பக்தி நெறித் திருமணத்தில்பக்திப் பாசுரங்களை பாடுவதற்கும் எனக்கு தயக்கம் இல்லை.

ஆகவே அன்பார்ந்த உறவுகளே! தயங்காமல் என்னை அழைக்கலாம். தமிழ் வாழ என்னால் ஆனதை செய்வேன்.

நல்ல விசயம். தமிழர் தமிழில் திருமண விழா வைப்பதானால் நடத்துனர்/ஓதவார்/அய்யர் எதற்கு? மீண்டும் பிராமண ஜயரை பகுத்தறிவு அய்யர் replace பண்ணுறார். அவ்வளவுமே. :rolleyes::wub:

கொஞ்ச காலத்தில வாற போற செலவு அந்த செலவு இந்த செலவெண்டு பணம் ஒண்டும் அறவிட மாட்டீர்கள் தானே?

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கறக்க முடியாததை பாடிக்கறந்து இருக்கின்றார்கள்... அவ்வளவு தான்.....

:rolleyes::wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் "தமிழ் நெறித் திருமணம்" செய்வதற்கு யாராவது விரும்பினால், அதற்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன். தேவைப்பட்டால் நேரில் வந்து நடத்தித் தரவும் நாம் தயார். அது பக்தி நெறித் திருமணமாக இருக்கட்டும், குறள் நெறித் திருமணமாக இருக்கட்டும், இவைகள் இரண்டும் சேர்ந்த திருமணமாக இருக்கட்டும், இவைகள் இல்லாத பகுத்தறிவத் திருமணமாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் "தமிழ் நெறித் திருமணமாக" இருந்தால் போதும். நான் வருவேன். பக்தி நெறித் திருமணத்தில்பக்திப் பாசுரங்களை பாடுவதற்கும் எனக்கு தயக்கம் இல்லை.

தமிழனின் திருமண நெறியை சந்தியில நிற்கிற நாலு பேர் தீர்மானிக்கிற அளவுக்கு தமிழனும் தமிழர் விழுமியங்களும் தமிழர்களின் அறிவுதிறனும் இன்னும் தரங்கெட்டுவிடவில்லை என்றே நினைக்கிறேன்.

சபேசன் நீங்கள் பகுத்தறிவு என்று உங்களை பின் தொடரச் சொன்னீர்கள். எவரும் வருவதாக இல்லை. உடனடியா ஏலவே வாழ்த்து கொண்டிருந்த பெண்ணுடன் திருமணம் என்ற ஒன்றை செய்துவிட்டு... அதுதான் தமிழ் நெறி எங்கிறீர்கள். அதனைப் பின் தொடர் எங்கிறீர்கள்.

நீங்களே உங்களுக்கு தரித்துக் கொண்ட சில பெயர்களையும் ஊடகங்கள் சிலவற்றையும் உங்கள் பிரச்சார நோக்குக்கு பாவிக்கிறீர்கள்.

எந்த ஆராய்வுமற்ற அந்த ஊடகங்களும்.. உங்களுக்கு திருகு இட்ட பொம்மை போல தலையசைப்பதற்காக.. தமிழன் அசைப்பான் என்று எண்ணக் கூடாது...!

உங்களிடம் ஒரு கேள்வி... ஏலவே கூடி வாழ்ந்துவிட்டு.. திருமணம் செய்.. தாலி கட்டு என்று... எந்தத் தமிழ் நெறி செப்பியுள்லது. அப்படி சொன்ன தமிழ் நெறியை உங்களால் இனங்காட்ட முடியுமா..???! :wub::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருந்து மூன்று மாத அனுமதியில் என்னுடைய தாயார் வந்து நிற்கின்றார். அவர் நிற்கும் போது திருமண செய்வதற்கு நான் விரும்பியதால், தற்பொழுது செய்தேன். பெண் கர்ப்பமாக இருக்கும் போதுதான் திருமணம் செய்ய வேண்டும் என்று இதை தவறாக விளங்குகின்ற அளவிற்கு முட்டாள்களாக யாரும் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

திருமணத்தை செய்வதா? செய்தால் எப்பொழுது செய்வது? என்பது அவரவர் வசதியைப் பொறுத்து அவரவர் எடுக்க வேண்டிய முடிவு. திருமணத்தை இந்தக் காலத்தில்அல்லது இந்தக் காலத்திற்குள்தான் செய்ய வேண்டும் என்று தமிழர் திருமணத்தில் எந்த வரையறையும் இல்லை. கர்ப்பமாக இருக்கும் போதும் செய்யலாம். கர்ப்பமாக இல்லாத பொழுதும் செய்யலாம். குழந்தை குட்டி பெற்ற பிறகும் செய்யலாம். அது உங்கள் விருப்பம்.

தமிழர்கள் தமிழில் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் இங்கே சொல்லப்படும் விடயம்.

தமிழருக்கு என்றான பாரம்பரிய திருமணச் சடங்கு எப்படி இருந்தது.. அதில் என்னென்ன அம்சங்கள் இருந்தன.. அதற்கான ஆதாரங்கள் எவை..??!

அவற்றை எப்படிப் பெற்றீர்கள்.. அதன் படி நீங்கள் வகுத்துக் கொண்டதா உங்கள் தமிழ் நெறி திருமணம்..

அல்லது எதேச்சையாக நீங்களே உங்களுக்குள் இனங்கண்ட "தமிழ் நெறியின்" கீழ் செய்து கொண்ட திருமணமா இது. உண்மையில் உங்களின் எழுத்துக்களை அவதானிக்கிற போது எந்த ஆதார அடிப்படைகளும் இன்றி நீங்களே உங்களுக்குள் விளங்கிய மட்டில்.. தீர்மானித்து அமைத்துக் கொண்ட சபேசனின் திருமண நெறிக்கு தமிழ் திருமண நெறி அல்லது தமிழர் திருமண நெறி என்று பெயரிட்டுக் கொள்வதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள அவர்கள் ஒன்றும் இழிச்ச வாயர்கள் அல்ல சபேசன். ஒரு சிலர் அப்படி இருக்கலாம் எல்லோரும் அல்ல..!

தமிழரின் பாரம்பரியப்படி.. திருமணம் என்றால் என்ன.. எப்போது திருமணம் செய்து கொண்டனர்.. எப்போது திருமணச் சடங்கு தமிழரின் பண்பாட்டில் புகுந்து கொண்டது.. அதன் கால அளவு என்ன.. எவ்வாறான நடைமுறைகள் இருந்தன.. எப்போது திருமணம் ஆகாமலே கூடி வாழ்ந்த பெண்ணுடன் திருமணம் செய்யும் நடைமுறை தமிழரின் திருமண நடைமுறைக்குள் செலுத்தப்பட்டது.. இப்படி.. நிறைய வினாக்கள் தொக்கு நிற்க.. நீங்களோ உங்களின் எண்ணப்படி.. ஏதோ ஒரு நிகழ்வைச் செய்துவிட்டு.. இதுதான் தமிழ் நெறி திருமணம் எங்கிறீர்கள்.. அதற்கு வாழ்த்துச் சொல்ல நாலு பேரை நியமிச்சும் வைச்சிட்டு.. அதுவே தமிழ் நெறி என்றும் சொல்லிக் கொள்ளச் செய்திருக்கிறீர்கள்.

இதை எந்த ஆராய்வுமற்ற தமிழன் நம்பலாம்.. ஏனையவர்கள்.. இதை நம்பி.. இதை ஒரு தமிழர் நெறியாக ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. என்னைக் கேட்டால் இது சபேசன் என்ற தனிமனிதனின் விருப்ப திருமணச் சடங்கு. அவ்வளவே..! இதை தமிழ் நெறி திருமணச் சடங்கென்று பெயரிடுவதை வன்மையாக எதிர்ப்பதுடன்.. இப்படி தமிழின் பெயரால் மோசடிகளைச் செய்வதையும் அவற்றறை விளம்பரப்படுத்துவதையும் ஒரு தமிழுணர்வுள்ள தமிழனாகக் கண்டிக்கிறேன்..! :wub::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறு விடயம் சொல்கிறேன். தாலி கட்டுகின்ற போது நான் மட்டும்தான் கட்டினேன். மற்றவர்களை சுரை போட அனுமதிக்கவில்லை.

நானும் தாலி கட்டும் போது நான் தான் கொடியின் சுரையை பூட்டினேன். உறவினர்களுக்கு முன்னரே நான் இது பற்றி சொல்லியிருந்ததால் யாரும் கிட்டவே வரவில்லை. அது ஒவ்வொருவரையும் பொறுத்தது. அவை வந்து உதவுறதுக்கு காரணம்நாங்கள் ரென்சனில சரியா பூட்டாமல் தாலி நிலத்தில விழுந்தால் கெட்ட சகுனம் எண்டு தான். அது மூட நம்பிக்கை (இதுக்கும் சைவத்துக்கும் தொடர்பில்லை). எங்கடை ஆக்கள் சிலதுகளை சில சடங்குகளுக்கு செய்வதனால் மற்றய நேரங்களில் செய்ய விரும்புவதில்லை. உதாரணமாக தகப்பன் இறந்து மகன் கொள்ளி வைக்கும் போது மொட்டை அடிக்கிறதாம். அநேகமாக மூத்த மகன் தான் தகப்பனுக்கு கொள்ளி வைக்கிறது வழமை (இது கூட தேவையில்லாமல் சகோதரங்களுக்குள்ளை மனஸ்தாபங்கள் வராமல் இருக்க வைத்த எழுதப்படாத சட்டம் அல்லது விதிமுறை). எங்கள் வீட்டில் நான் மூத்த மகன். பொழுது போகாட்டி வெய்யில் காலத்திலை மொட்டை அடிக்கிறனான். இப்ப எல்லாருக்கும் பழகிட்டுது. ஆனால் நான் மொட்டை அடித்த ஆரம்ப காலங்களில் வயது போன உறவினர்கள் எல்லாம் ஏச்சு. ஏநெண்டு கேட்டால் கொள்ளிவைக்கத்தானாம் மொட்டை அடிக்கிறது.

என்ன சொல்றேன் எண்ணடால் சிலர் சில சடங்குகளுக்கு செய்வதை மற்றய நேரங்களில் செய்ய பயப்பிடுவார்கள்.

அதுக்காக தான் தாலி கட்டும் போது உறவு பெண்கள் மணவறைக்கு பின்னால் வந்து உதவி செய்வார்கள். நான் எனக்கு கைநடுக்கம் இல்லை அதனால நானே கட்டுறேன் எண்டு வேண்டாம் எண்டு சொல்லிட்டேன்.

அடுத்தது கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு தாலி அணிவிப்பது பற்றி கேள்வி எழுப்பியிருந்தீர்கள். கர்ப்பமானால் மூன்று மாத காலத்திற்குள் தாலியை கட்டும்படி சமூகம் சொல்கிறது. இதைப் பற்றி நீங்கள் வேண்டுமானால் விசாரித்துப் பாருங்கள். பெண் கர்ப்பமானவுடன் மூன்று மாத முடிவதற்குள் அவசரம் அவசரமாக தாலி கட்டி திருமணம் செய்த குடும்பங்களை எனக்குத் தெரியும். எமக்கு மூன்று மாதம் கடந்து சில மாதங்களாகி விட்டது. அதனால்தான் தாலி கட்டக் கூடாது என்று அடம்பிடித்தார்கள்.

இதுக்கு காரணம் முதல் மூன்று மாதங்கள் என்றால் வயிறு பெரிசா தெரியாது. இல்லாட்டி சனம் நாலு மாதிரி கதைக்கும் எண்ட காரணத்தால தான் ஏதோ குற்றம் மாதிரி அப்பிடி சொல்றது. அநேகர் சமுதாயத்துக்கு பயப்படுறது. அதனால பிள்ளை சனத்துக்கு முன்னால திருமணம் செய்யாட்டிலும் பறவாய் இல்லை நாலு சனம் திருமணத்துக்கு முன்னர் கற்பவதி ஆகிவிட்டாள் என்று பழி சொல்லாமல் இருக்கவேணும் எண்டு விரும்பிறது.

சிலர் சட்டத்துக்காக திருமணம் செய்ய வேண்டும் என மேலே கூறியிருந்தனர். உங்கடை உங்கடை நாடுகளில எப்படியோ தெரியாது. கனடாவில திருமணம் சட்டபடி செய்து தான் பிள்ளையை பதிவு செய்ய வேணுமெண்டில்லை. முறைப்படி திருமணம் செய்யாமலே ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்தால் எண்டு அவை கணவன் மனைவி போன்று அணைத்து விடயங்களிலம் அங்கீகரிக்கவடுவினம். ஒரு வருடத்துக்கு; மேலாக சேர்ந்து வாழ்ந்தால் வருமான வரியை கூட குடும்பமாக செய்யலாம். திருமணம் பதிந்திருக்க தேவை இல்லை. பிள்ளை பிறந்தால் தாயினுடையதோ அல்லது தந்தையினுடையதோ குடும்ப பெயரை குழந்தைக்கும் சூட்டலாம்.

நாம் கூட என் மனைவியின் குடும்ப பெயரைத்தான் எமது மகனுக்கு குடும்ப பெயராக வைத்தோம் காரணம் எனது குடும்ப பெயர் எனது அபப்hவின் முதற்பெயர். மனைவியின் குடும்ப பெயரை திருமணத்திற்கு பின்னர் எனது முதற்பெயராக மாற்றியிருந்தோம். என்ர முதற் பெயரை மகனுக்க குடும்ப பெராக வைக்க வேண்டுமென பதிவு அலுவலகத்தில கிண்டு படுறத விட மனைவியின் குடும் ப பெயரை மகனின் குடும்ப பெயராக சூட்டுவது இலகு. எங்கள் இலக்கும் அதுவே. என்ன சொல்றேன் எண்ணடால் பிள்ளை பெத்து சட்டபடி பதியிறதுக்கு திருமணம் செய்திருக்கு தேலையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன், நான் கேட்ட கேள்விகளுக்கு பதில வராத போதும்,. உங்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். உலகில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் மத ரீதியாக மட்டுமே நடைபெறுகின்றன. எந்த ஒரு இனத்துக்கும் பொதுவாக திருமண முறைகள் இல்லை. இந்து முறைப்படி திருமணத்தில் தாலி அணிவிப்பது தான் முறை. தமிழர்கள் மட்டும் அல்ல, இந்து மதத்தை பின் பற்றும், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், தமிழர்கள் மற்றும் நேபாளியர்கள் இந்த தாலியை அல்லது தாலி போன்றதொன்றை அணிவிக்கின்றார்கள். இது இந்து சமய திருமண அடையாளம். இந்து சமய திருமணத்தில் ஜந்து முக்கிய விடயங்கள், தாலி, குங்குமம், காப்பு,மெட்டி மற்றும் மூக்குத்தி. இவை அணிவதன் காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

நீங்கள் உங்கள் மதத்தையும் இனத்தையும் ஒன்று படுத்தி நீங்களும் தெளிவற்று, மற்றவர்களையும் தெளிவற்றவர்களாக்குகின்றீர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறள் முதலில் வந்ததா, தமிழ் முதலில் தோன்றியதா, இந்து மதம் முதலில் தோன்றியதா?

குறள் எழுதும் முன்னர் ஒரு வேளை தமிழர்களும் மற்றய மேற்கத்திய இனம், மதத்தை பின்பற்றுவர்கள் போல, சில காலம் ஒன்றாக வாழ்ந்து எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்த்து விட்டு, குறள் எழுத்தப்பட்ட பினனர் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மலர் தூவ, சீ...குறள் ஓத.... தாலியை, சீ... மங்கள நாண் களை மாறி மாறி கட்டி இருப்பார்களோ.... பகுத்தறிவு பகுத்தறிவு என்கின்றீர்களே.. அது உங்களிடம் இருக்கின்றதா என்ற சந்தேகம் பலருக்கு வருவத்ற்க்கு நீங்களே காரணி....

Edited by chumma....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபேசன் அண்ணா!

உங்கள் திருமணத்திற்கும் அப்பாவாகவும் இருக்கின்றீர்கள்போல்...... அதற்கும் எனது மனமமார்ந்த வாழ்த்துக்கள்!

எல்லோருடைய கருத்துக்களையும் ஆழ்ந்து வாசித்தேன் முக்கியமாக உங்களுக்கு எதிரான கருத்துக்களை திரும்ப திரும்ப வாசித்தேன். ஒரு உண்மை ஒன்றை புரிந்துகொள்ள முடிகின்றது. நியாயமான கருத்தாடல்.... நாகரீகமான கருத்தாடல் மூலம் தமிழ் சமூதாயத்தை மாற்றிவிடலாம் என்று எண்ணினால் அது எளிதானதல்லா. மூடர்களை அறிவாழிகளாக்குவது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன் ( சபேசனக்கு எதிரான கருத்துக்களை எழுதும் சக உறவுகள் நான் உங்களை மூடர்கள் என்று எழுதியதாக நினைக்க வேண்டாம் தொடர்ந்து வாசிக்கவும்). ஒரு மூளைநலம் குன்றியவரை நலமடைய செய்வதற்கு பல நேரங்களில் நாமும் மூளை நலம் குன்றியவர்போன்று நடிக்க வேண்டிய உங்களின் கட்டாயத்தை என்னால் புரியமுடிகின்றது. ஆனால் அதை நீங்கள் பல முறை சொல்லியும் சிலருக்கு விழங்காதது எனக்கு ஆச்சரியமாகவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபேசன் அண்ணா!

உங்கள் திருமணத்திற்கும் அப்பாவாகவும் இருக்கின்றீர்கள்போல்...... அதற்கும் எனது மனமமார்ந்த வாழ்த்துக்கள்!

எல்லோருடைய கருத்துக்களையும் ஆழ்ந்து வாசித்தேன் முக்கியமாக உங்களுக்கு எதிரான கருத்துக்களை திரும்ப திரும்ப வாசித்தேன். ஒரு உண்மை ஒன்றை புரிந்துகொள்ள முடிகின்றது. நியாயமான கருத்தாடல்.... நாகரீகமான கருத்தாடல் மூலம் தமிழ் சமூதாயத்தை மாற்றிவிடலாம் என்று எண்ணினால் அது எளிதானதல்லா. மூடர்களை அறிவாழிகளாக்குவது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன் ( சபேசனக்கு எதிரான கருத்துக்களை எழுதும் சக உறவுகள் நான் உங்களை மூடர்கள் என்று எழுதியதாக நினைக்க வேண்டாம் தொடர்ந்து வாசிக்கவும்). ஒரு மூளைநலம் குன்றியவரை நலமடைய செய்வதற்கு பல நேரங்களில் நாமும் மூளை நலம் குன்றியவர்போன்று நடிக்க வேண்டிய உங்களின் கட்டாயத்தை என்னால் புரியமுடிகின்றது. ஆனால் அதை நீங்கள் பல முறை சொல்லியும் சிலருக்கு விழங்காதது எனக்கு ஆச்சரியமாகவில்லை

சபேசனை உசுப்பேத்தி விட்டால்.. இந்து சமயத்தை கடிக்கிறது தொடரும் என்று நினைச்சிட்டீங்கள் போல..! :rolleyes:

"கைப்புள்ள அரிவாளோட வாறான்.. இன்று எத்தனை தலை உருளப் போகுதோ" என்று வடிவேலை.. பார்த்துச் சொல்லுற நகைச்சுவை போல இருக்குது.. உங்களின் வரிகைகளை வாசிக்கேக்க..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முறைத் திருமணம்.. செய்வது எப்படி...

இரு மணம் இணையும் திருமணங்கள் இன்று பழமை தவறி, பல வழிகளில் நடந்தேறி வருகின்றன.

தமிழர் திருமண முறைகளை நாம் ஒட்டுமொத்தமாய் மறந்து வருகிறோம் அல்லது வசதிக்கேற்ப பிறழ்ந்து வருகிறோம். கால மாற்றத்திற்கேற்ப சுருக்கமாக, வழமையான முறையின்றி நடந்து வருகின்றன திருமணங்கள்.

வரதட்சணைக்கு வேலையே இல்லாத தமிழர் திருமணங்கள் முன்பு எப்படி நடந்தேறின தெரியுமா?.. மூத்தோர் வைத்துவிட்டுப் போயிருக்கும் முறைகள் தெரியுமா?

கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா...

தமிழ் திருமண நிகழ்வுக்கான பொருட்கள்:

மஞ்சள், குங்குமம், திருநீறு, கற்பூரம், பச்சரிசி, தேங்காய், தேன், பன்னீர், முந்திரி, திராட்சை, கற்கண்டு, குங்குமப்பூ, வெற்றிலை, வெட்டுப் பாக்கு, வாழைப் பழம், எலுமிச்சை, அவல், சர்க்கரை, நவதானியம், வேள்விப் பொருட்கள் அனைத்தும் அடங்கிய பூரணாகுதி, பசும்பால், பசு நெய், கலசம், உதிரிப் பூக்கள், தாமரைப் பூ, அருகம்புல், 3 ¬முழம் பட்டுத் துண்டு, குத்துவிளக்கு, மாவிலை, பித்தளை செம்பு, நிறைகுடம் தண்ணீர், தலை வாழை இலை, அரிசி மாவு

(இந்தப் பட்டியலில் வரதட்சணை, தங்கம் இதெற்கெல்லாம் நம் மூத்தோர்கள் வேலையே வைக்கவில்லை என்பதைப் பாருங்கள்)

முன்னேற்பாடுகள்:

இறைவன், இறைவி நிறை குடம் வைக்கும் இடத்திலும், மணமக்கள் அமரும் இடத்திலும் "எட்டிதழ்த் தாமரை" மாக்கோலம் போட வேண்டும். அதன் முன்பாக நடத்துபவர் அமர்ந்து "ஐம்பெருந்தூய்மைகளை" செய்ய வேண்டும்.

அது என்ன ஐம்பெருந்தூய்மைகள்?:

ஒரு சொம்பில் தூய நீர் எடுத்துக் கொண்டு, அதனை நீரினில் நான்காய் நிகழ்ந்தாய் போற்றி எனப் போற்றி, வாச மலரைப் போற்றிய நீரில் இட்டு வணங்க வேண்டும்.

ஒரு பூவினை நீரினில் நனைத்துப் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி என்று போற்றித் தெளிக்க வேண்டும்.

தொடர்ந்து இறைவா! மண்ணும், நீரும், நெருப்பும், வளியும், வானும் உங்கள் அருளால் தூய்மையாகுக என வேண்ட வேண்டும். யாக்கைப் பொன்னெடுங்கோயிலாய்ப் புகுந்தாய் போற்றி, உயிருக்கு உயிரானாய் போற்றி எனப் போற்றி, உடல் மேல்தெளித்து உடல், ஆன்மத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

வழிபடும் பொருட்களின் மேல் எல்லாம் சிவனென நின்றாய் போற்றி செய்ய வேண்டும்.

தூய நற்சோதி ஆனவ போற்றிசெய்ய வேண்டும்.

. இந்த ஐம்பெருந்தூய்மைகள் நிறைந்த பின், நுனி வடக்கு நோக்கி இருக்கும்படி தாமரைக் கோலத்தின் மீது தலை வாழையை இட வேண்டும்.

அதன் மேல் நெல், பச்சரிசி பரப்பி ஐம்முக முக்கோணச் சக்கரத்தை வரைந்து அதில் ஓம் என எழுத வேண்டும்.

நிறை குடங்களுக்குள் நறும்புகை காட்டித் திறுநீறு, தூய சந்தனம், பன்னீர், பச்சைக் கற்பூரம் கலந்த நீரை மூல மந்திரத்தை ஓதிக் கொண்டே நிறைகுடங்களில் ஊற்ற வேண்டும்.

ஒவ்வொன்றிலும் காசு இட்டு, மாவிலை வைத்து, மஞசள் பூசிய தேங்காய்களை அதன் மீது வைக்க வேண்டும். நிறைகுடங்களின் உள்ளும், தேங்காயின் மேலும் தருப்பையினால் கூர்ச்சமிட்டு வைக்க.

நிறைகுடங்களுக்குச் சந்தனம், மஞ்சள், பொன்னரிசி, குங்குமம் இட்டு, குடங்களுக்கு மாலையும் இட வேண்டும்.

வழிபாட்டைத் தொடங்கும் முன்:

1.பார்வையால் வேறுபடுத்தல்

"நம சிவாய" எனும் திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டு வலக்கை நடுவில், ஆள்காட்டி விரல்களை நீட்டி ஏனைய விரல்களை மடக்கி நுனி வாயிலாக பார்க்க வேண்டும்.

2. தெளித்தல்

"நம சிவாய" என ஓதிக் கொண்டு, ஒரு மலரை நீரில் நனைத்து வழிபாட்டுக்குரிய பொருட்களின் மேல் தெளிக்க வேண்டும்.

3. உள்ளிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தல்

"நம சிவாய" ஓதிக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலால் பொருட்களை மும்முறை தட்டுதல் (இவ்வாறு தட்டுவதால் அப்பொருட்களின் உள்ளிருக்கும் ஆற்றல் வெளிப்படும்.)

4. அமைதிப்படுத்தல்

"நம சிவாய" எனும் திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலால் பொருட்களைச் சுற்றி, அதன் பின் கையைக் கவிழ்த்துக் காட்டுதல் (பொருட்களிலிருந்து வெளிப்படும் ஆற்றலை சுற்றிக் காட்டிய இடத்தினுள் அமைதிப்படுத்தி இருக்கமாறு செய்தல்)

திருமண நிகழ்வுகள்:

(மணமகன், அருகில் உள்ள திருக்கோயிலுக்குச் சென்று வந்த பின்னர், மணமக்களை உரிய இடத்தில் அமர்த்தி நிகழ்வுகளைச் செய்ய வேண்டும்)

மொத்தம் 17 வகை திருமண நிகழ்வுகள். அதன் விவரம்:

1. திருவிளக்கு வழிபாடு.

வழிபாடு நடைபெறும் இடத்தில் மங்கலப் பெண்டிரைக் கொண்டு விளக்கேற்றச் செய்ய வேண்டும். சோதியாய்ச் சுடராய் ஒளிவளர் விளக்காய் இறைவனைக் காணும் நம் நெறியில் பொருள்களை விளங்கச் செய்வதும், நன்மைக்குக் காரணமாகியதுமான விளக்கினை வழிபட வேண்டும்.

பேரொளிப் பிழம்பான அம்மையப்பனைக் கண்டு, கருதி, கைகூப்பித் தொழ வேண்டும்.. சுடரின் செம்பகுதி இறைவன், உள் ஒளிரும் நீல ஒளி இறைவி. ஆதலால் சுடரில் அம்மையும் அப்பனும் இணைந்து ஒளிருகிறார்கள் என்பது நம்பிக்கை.

"உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக

மடம்படு உணர்நெய் அட்டி உயிரெனும் திரிமயக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே" (திருநாவுக்கரசர் தேவாரம்)

"கோடாமல் என்றும் குறையாமல் எங்கள் குலம் என்றும்

வாடாமல் வாழ வரம் தருவாய்! மனம் மாயை வழி

ஓடாமல் உள்ளே ஒடுங்கும் தவம் உணர்வறிய

ஆடாமணியொளிச் சோதியே! பூவில் அமர்ந்தவனே! "

என ஓதி, இறைவன் எழுந்தருளியதற்கு அடையாளமாக உச்சியிலும், திருவடியிலும் மலரினை இட வேண்டும்.

"எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி!

எரிசுடராய் நின்ற இறைவா போற்றி

கொல்லர் மழுவாட் படையாய் போற்றி!

கொல்லும் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி!

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி!

கற்றார் இடும்பை காளைவாய் போற்றி!

வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி!

வீரட்டம் காதல் விமலா போற்றி!

(திருநாவுக்கரசர் தேவாரம்)

எனப் போற்றி ஓதி, நறுமலர் அல்லது வில்வம் தலிய தளிர் கொண்டு எட்டுப் போற்றிகளையும் "எண்மலர்" வழிபாடாகச் செய்ய வேண்டும்.

அப்பொழுதில் மணமக்கள் வேண்டுதல் (இருவரும்):

"இன்ப விளக்காக இருக்கின்ற பெருமானே! இன்று நாங்கள் தொடங்கும் இல்லற வாழ்வு என்றும் இன்ப ஒளி வளர்த்து ஓங்கி இன்புற அருள்வீராக".

2. நிறைகுடப் புனித நீர் வழிபாடு:

அம்மையப்பர் கலசங்களுக்குச் சற்றுத் தள்ளி வலப்புறமாக வைக்கப்பட்டுள்ள புனித நீர் நிறைகுடத்திற்கு வழிபாடு செய்யும் முறை.

"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்

குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்

தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப

அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே" (திருநாவுக்கரசர் தேவாரம்)

என ஓதி நிறைகுட நீரில் எல்லாச் சிவ தீர்த்தங்களும் நிரம்பியதாக ஏற்று வருணனை எழுந்தருளச் செய்ய வேண்டும். நறும்புகை விளக்கொளி காட்டி வழிபட வேண்டும்.

"கடல்களின் அரசே வருணா போற்றி

நன்னீர்ப் பெருங்கடல் பொன்னே போற்றி

நீருக்கதிபதி நிறைவே போற்றி

மகரவாகனம் மகிழ்ந்தாய் போற்றி

புனிதன் சடைஅமர் வனிதை போற்றி

கங்கையென்னும் மங்கை போற்றி

யமுனை நதியெனும் நல்லாய் போற்றி

நருமதை நதியாம் நல்லருள் போற்றி

சிந்து நதியின் சிறப்பே போற்றி

துங்கா நதி நங்காய் போற்றி

காவிரி நதியாய் காப்பாய் போற்றி

வைகை நதியாய் வந்தாய் போற்றி

ஆன்பொருனை அரசி போற்றி

தண் பொருனைத் தாயே போற்றி!"

எனப் போற்றி, மலரிட்டக் கற்பூர ஒளி காட்ட வேண்டும்.

மணமக்கள் இருவரும் கூற வேண்டியது:

"உமையொரு பாகன் சடையிடை அமர்ந்த கங்கைப் பெருந்தாயே! வைகை அன்னையே! எங்கள் உடலும் உள்ளமும் உயிரும் சூழலும் குளிர்ந்து என்றும் நலம் விளங்க அருளுக" என மணமக்கள் வேண்டியதும், மணமக்களைப் புனித நீர் நிறை குடத்திற்கு மலரிடச் செய்ய வேண்டும்.

நிறைகுட நீரினை, வழிபாட்டுப் பொருட்களின் மேலும், மணமக்கள் மேலும் மாவிலையால் தெளிக்க வேண்டும்.

3. திருநீறு அணிவித்தல்:

"காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் கைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணத் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே" (சம்பந்தர் தேவாரம்)

என்று திருநீற்றுச் சிறப்போதி, மணமக்கள் அணிந்து கொள்ளத் திருநீறு, சந்தனம், குங்குமம் தர வேண்டும்.

4. விநாயக பெருமான் வழிபாடு

எடுத்துக் கொண்ட செயல் எவ்வித இடையூறுமின்றி நடைபெற இன்றியமையாததான, மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையாரை வழிபட வேண்டும்.

"கங்கையும் பணிவென் திங்களும் விரைத்த கடுக்கையும்

தொங்கலும் அரவும்

தங்குபொற்சடையும் முக்கணும் தாதை தாணு மென்றுணர்ந்த

மென் மலர்க்கை

அங்குச பாசமணிந்து வெற்பு உயிர்த்த ஆரணங்கு அன்னை

என்றுணர்த்தி

வெங்கலி முழுதும் துமித்தருள் எக்கியசாலை விநாயகரடி பணிவாம்"

என்றோதி, விநாயகப் பெருமானை எழுந்தருளச் செய்ய வேண்டும். பின்னர் உச்சியில் நீர் சொரிதல், உட்கொள்ள நீர் தருதல், திருவடிக் கமலங்களை நீராட்டுதல், திருமேனியை நீராட்டுதல் ஆகியன செய்ய வேண்டும். நறும்புகை, விளக்கொளி காட்டி, கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

"தேவர்க்கு இடையூறு யாவையும் தீர்த்தமைத் தேவா போற்றி!

மூவர்க்கு அரசளித்த தன்மை நற்பொருளே போற்றி!

சேடிவக்கு அடிமையாக்கி சிறியனேன் தம்மை காப்பாய்

மேவிய புகழ்படைத்த விக்கினராசா போற்றி! போற்றி! "

எனப் போற்றி மலரிட வேண்டும்.

"அங்கம் வேதம் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ

மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்

செங்கயலார் புனல் செல்வமிகு சீர்கொள் செங்காட்டம் குடியதனுள்

கங்குல் விளங்கெரி ஏந்தியாடும் கணபதியீச்சரம் காறவே"

"மும்மதத்தன் என்றொரு பெயர் தனக்கு மொய் கூந்தற்

கொம்மை வெம்முலைக் கொற்றொடிக் கொடிச்சியை இலைவேல்

கைமலர்ந்தனி இளவற்கும் கஃறெனும் கானத்து

அம்மந்து புக்கு உறுத்தவன் அடிமலர் பணிவாம்"

என்றோதிக் கற்பூரம் காட்ட வேண்டும்.

மணமக்கள் இருவரும் வேண்டிட:

"எக்கிய சாலை விநாயகர் பெருமானே! எங்கள் இல்லற வாழ்வு அனைத்து வகையிலும் என்றும் இனிதே நிறைவுற அருளுக"

5. காப்பு அணிவித்தல்:

முக்கொம்புடைய விரலி மஞ்சளை வெற்றிலையில் மஞ்சள் நூலால் கட்டி பிள்ளையாருக்கு முன்பு வைத்து வழிபாடு செய்க. ஒரு தட்டில் முழுத் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து அதனை மணமகனைப் பிடித்துக் கொள்ளச் செய்து வலது கையில் காப்பினை அணிவிக்கவும். மணமக்களுக்கு இடது கையில் அணிவிக்கவும்.

"மாறிலா நிறை வளர்ந்தரு புகலியின் மணமீக்

கூறு நாளின் முன்னாளினில் வேதியர் குழாம்

நீறு சேர் திருத் தொண்டரும் நிகரிலாதவருக்கு

ஆறு சூடினார் அருள்திருக் காப்பு நாண் அணிவார்" (பெரிய புராணம்)

எனவும்

"பங்கயனும் மாமகேசர் பாதபூசனை செய்து ஏத்தி

அங்குரந் தெளித்து முன் கைக்கங்கணம் ஆர்த்தல் செய்தார்"

என்றும் காப்பு அணியும்போது ஓத வேண்டும்.

மணமக்கள் இருவரும் கூற வேண்டிய குறள்:

"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (குறள் 43)

-அஸ்வின் தாயுமானவர்

Thatstamil

http://www.yarl.com/forum/index.php?showto...amp;mode=linear

தொடர்ச்சி.........

6. அம்மையப்பர் வழிபாடு

பிள்ளையார் வழிபாடு, காப்பணிதல் செய்த பின்னர் நிறைகுடங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.

"வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக்

கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்

தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச் சுடர்த்திங்கள்

சடையானைத் தொடர்ந்து நின்றென்

தாயானைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி

தேவர்க்கு என்றும்

சேயானைத் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே

சிந்திக்கப் பெற்றேன் நானே. " (திருநாவுக்கரசர் தேவாரம்)

என்றோதி இறைவனையும்,

"புண்ணியம் செய்தனமே புதுப்பூங்குவளைக்

கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்

பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே" (அபிராமி அந்தாதி)

என்றோதி அம்மையையும் நிறை குடங்களில் எழுந்தருளச் செய்திட வேண்டும்.

"நிலையான் காண் தோற்றவன் காண் நிறையானான் காண்

நீரவன் காண் பாரவன்காண் ஊர் மூன்று எய்த

சிலையவன் காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை

ஒருபாகம் சேர்த்தினான் காண்

கலையவன் காண் காற்றவன் காண்காலன் வீழக் கறுத்தவன்

காண் கயிலாயம் என்னும் தெய்வ

மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான்

காணவன் என் மனத்துளானே"

என்று ஓதி, மலரிட்டு வழிபட வேண்டும். பின்னர் உச்சியில் நீர் சொரிதல் முதலியவற்றைச் செய்ய வேண்டும். நறும்புகை, விளக்கொளி, கற்பூரம் காட்ட வேண்டும்.

"முன்னியா நின்ற முதல்வா போற்றி

மூவாத மேனி உடையாய் போற்றி

என்னியா எந்தை பிரானே போற்றி

ஏழிசையே உகப்பாய் போற்றி

மன்னிய மங்கை மணாளா போற்றி

மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி

கன்னியர் கங்கைத் தலைவா போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி"(திருநாவுக்கரசர் தேவாரம்)

என்று இறைவனையும்

"பூமேவு குழல் போற்றி, பொற்புமிகு கருணை மொழி வதனம் போற்றி

மாமேவும் அறம் வளர்க்கும் வண்மை செறி திருக்கரம் ஒண்வசம் போற்றி

கோமேவும் மூவுலகும் ஈன்று சிறிதும் தளராக் கொங்கை போற்றி

தூமேவும் நான்மறைச் செஞ்சிலம்பு அலம்பும் அகிலாண்டேசுவரிதாள் போற்றி"

என்று இறைவியையும்

"பன்னிரு கரத்தாய் போற்றி

பசும்பொன் மாமயிலாய் போற்றி

முன்னிய கருணை ஆறு

முகப்பரம் பொருளே போற்றி

கன்னியர் இருவர் நீங்காக்

கருணை வாரிதியே போற்றி

என்னிரு கண்ணே கண்ணுள்

இருக்குமா மணியே போற்றி"என்னும் போற்றி கூறி முருகப் பெருமானையும் தளிரும் மலரும் தூவி வழிபட வேண்டும்.

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்த ஆரமுத

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையானேன் தளக்குச்

செம்மையே ஆய சிவபாதம் அளித்த

செல்வமே சிவபெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந்து அருளுவதினியே" (திருவாசகம்)

என்றோதி கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

மணமக்களிடம் சிறிது மலரினைக் கொடுத்து,

"இன்ப வடிவாகிய இறைவனே! அருள் வடிவாகிய இறைவியே! எங்கள் இல்லற வாழ்வு அன்பும், அருளும் பெருகி மலர அருளுக" என வேண்டி மலரிடச் செய்ய வேண்டும்.

7. எரியோம்பல்:

வேள்விக் குண்டத்தின் நாற்புறமும் தருப்பைகளை வைக்க, பத்துத் திசைகளிலும் உள்ள காவலர்களுக்குத் திருநீறு, சந்தனம், மஞ்சளரிசி குங்குமம், மலர்கள் இட வேண்டும்.

"நீறணி பவளக்குன்றமே நின்ற நெற்றிக் கண் உடையதோர் நெருப்பே

வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா

ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத்தரசே

ஏறணி கொடியெம் ஈசனே உன்னைத் தொண்டனேன் இசைமாறிசையே!"என்று ஓதி, வேள்வி நெருப்பில் முழுமுதற் பொருளாகிய சிவபரம் பொருளை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

மணமக்களிடம் மலர்களைக் கொடுத்து

"கதிரோன் முதலான கோள்களே, கார்த்திகை முதலான வின்மீன்களே, நாங்கள் இல்லற வாழ்க்கை தொடங்கும் இந்த நல்ல நேரத்தில் உங்கள் இன்ப ஒளியை எமக்கு அருள்வீராக"

என்று ஒன்பான் கோள்களை வழிபடச் செய்ய வேண்டும்

மீண்டும் மணமக்களிடம் மலர்களைக் கொடுத்து:

"தன்னை அடைந்தவற்றைத் தன்மயாக்கும் எம் பெருமானே எங்கள் வாழ்வில் வந்து பொருந்துகின்ற அனைத்தும் என்றும் இன்பமாகவே மலர அருள்வீர்களாக" என்று வேண்டச் செய்ய வேண்டும்.

"செம்மலரான் உமையாள் குண்டத்துச் செந்தீயிட்டு

நிறை ஓமம் காட்டம் உரித்துச் சேர்ந்து பொம்மலுற்று

அடிசிருக்கு சிருவத்தால் நெய்பூரிப்ப விம்மலுற்று

எழுந்த தம்மா வேள்வித் தீ வலம் சுழித்தே" (திருவிளையாடற் புராணம்)

என்று ஓதி பின்னர் திசைக் காவலர்களுக்கு நறும்புகை, விளக்கொளி காட்ட வேண்டும்.

கற்பூரம் காட்டி திருவருட் சக்தியை நிறைகுடத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

8. தாய் தந்தையர் வழிபாடு

மணமக்களைத் தத்தம் பெற்றோரின் பாதங்களை நீராட்டிப் பால்விடச் செய்து, சந்தனம், மஞ்சளரிசி, குங்குமம் இடச் செய்து, மலரிடச் செய்க. பின்னர் அவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்கச் செய்ய வேண்டும். அப்பொழுது பெற்றோர்களிடம் மஞ்சளரிசியும் மலரும் கொடுத்து ஆசிர்வதிக்கச் செய்திட வேண்டும்.

மணமகன் வழிபடும்பொழுது:

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்

மூன்றாய் உலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க

ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த்

தோன்றாந் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே" (திருநாவுக்கரசர்)

என்றும்

மணமகள் வழிபடும்பொழுது:

"அப்பன் நீ! அம்மை நீ! ஐயனும் நீ!

அன்புடைய மாமனும் மாமியும் நீ!

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ!

ஒரு குலம் சுற்றம் ஒர் ஊரும் நீ!

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ!

துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ!

இப்பொன் நீ! இம்மணி நீ! இம்முத்தும் நீ!

இறைவன் நீ!ஏறு ஊர்ந்த செல்வன் நீ!"என்றும் ஓத வேண்டும்.

9. கொடுப்பதும் கொள்ளுதலும்

மணமகளின் பெற்றோர்கள் கூற வேண்டியது:

"எங்கள் அன்புத் திருமகள் (மணப்பெண்ணின் பெயரைச் சொல்லி) தங்களுடைய பண்புசால் திருமகன் (மணமகன் பெயரைச் சொல்லி) திருமணம் செய்தளிக்கிறோம்"

மணமகன் பெற்றோர் கூற வேண்டியது:

"எங்கள் பண்புசால் மகன் (மணமகன் பெயரைச் சொல்லி) தங்களுடைய அன்புத் திருமகள் (மணமகள் பெயரைச் சொல்லி) திருமணம் செய்து கொள்கிறோம்."

"கொடுப்பதும் கொள்வதும்" நிகழும்போது ஒரு தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுக்க வேண்டும்.

10. மங்கல நாண் அணிவித்தல்

ஒரு தட்டில் முழுத் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, அதன் மேல் திருமாங்கல்ய நாணை வைத்து அவையோரிடம் ஆசி பெற வேண்டும்.

அ) "தண் கமலத்து இருந்து ஈசன் அடிக்கமலம் மனக்கமலம் தன்னில்

வைத்து வண் கமலக் கண்ணானை மணவாளன்

எனப்பெறுவான் மாதவம் செய்து

ஒண் கமலாயன் எனும் பேரொளி ஆர்த்த திருவாரூர் உகந்தணிந்த

பெண் கமலம் கைக்கமலம் பிடித்த ஒளிதனைத் தொழுது வாழ்வோம்"

ஆ) "மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னிக்

குணிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடை மேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே"

என்று ஓதி அம்மையப்பரைத் திருமாங்கல்யத்தில் எழுந்தருளச் செய்து, நறும்புகை, விளக்கொளி காட்ட வேண்டும்

மணமக்களிடம் மலர்கள் கொடுத்து,

"அருள் வடிவாக இருக்கும் இறைவனே! எங்கள் வாழ்வின் அடையாளமாக இருக்கின்ற இந்தத் திருத்தாலியிலே என்றென்றும் மகிழ்வுடன் எழுந்தருள்வீராக" என்று வேண்டுடி மலரிட்டு வணங்கச் செய்ய வேண்டும்.

வழிபாடுசெய்த திருத்தாலியை அனைவரிடம் காட்டி வணங்கச் செய்து, நல்ல நேரத்தில் மணமகனை மணமகளுக்குத் திருமங்கல நாணை அணிவிக்கச் செய்ய வேண்டும்.

(தொடரும்)..

http://www.yarl.com/forum/index.php?showto...amp;mode=linear

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.