முன்னணி வீரர்கள் இருந்தும் இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்குக் காரணம் இதுவா?
பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
எழுதியவர்,பிரதீப் கிருஷ்ணா
பதவி,பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மண்ணில் முதன் முறையாக ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது நியூசிலாந்து.
வெற்றியோடு தொடரைத் தொடங்கியிருந்தாலும், அடுத்தடுத்து தோல்விகளால் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது.
ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தவிர்த்து இந்திய அணியின் அனைத்து முன்னணி வீரர்களுமே இந்தத் தொடரில் இடம்பிடித்திருந்தார்கள்.
நியூசிலாந்து அணியிலோ வில்லியம்சன், சான்ட்னர், ஹென்றி, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அப்படியிருந்தும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் வீழ்த்தியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?
மிடில் ஓவர்களில் இந்தியா vs நியூசிலாந்து
மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம், 2 சதங்கள் என இந்தத் தொடரின் நாயகனாக விளங்கினார் டேரில் மிட்செல். 176 என்ற சராசரியில் 352 ரன்கள் எடுத்தார் அவர். அதையும் 110.34 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் எடுத்தார்.
ராஜ்கோட், இந்தூர் ஆகிய இரு இடங்களிலும் சதமடித்து இந்தியாவுக்கும் வெற்றிக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தினார் மிட்செல்.
நான்காவது வீரராக ஆடிய மிட்செல், மிடில் ஓவர்களாக கருதப்படும் 11 முதல் 40வது ஓவர் வரை நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்தார். அவருடன் மற்ற வீரர்களும் ஒத்துழைப்பு தர மிடில் ஓவர்களில் இந்தியாவைக் காட்டிலும் நியூசிலாந்து அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
கரும்பு தின்றால் ரத்த சர்க்கரை உயருமா? - 4 சந்தேகங்களும் விளக்கமும்
இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா?
சாபஹார்: அமெரிக்காவின் அழுத்தத்தால் இரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா?
'கடந்த 8 ஆண்டுகளில் எனக்கு பாலிவுட் வாய்ப்பு நின்றுவிட்டது' - ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி குறித்து பாலிவுட் கலைஞர்கள் கருத்து
End of அதிகம் படிக்கப்பட்டது
"மிடில் ஓவர் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் இரண்டிலும் சொதப்பியதுதான் இந்தியா இந்தத் தொடரை தோற்றதற்கான காரணம்" என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும், வர்ணனையாளருமான நானி.
இரண்டாவது போட்டியின் மிடில் ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இந்த 30 ஓவர்களில் அவர்களுடைய சராசரி ரன்ரேட் 6.43. ஆனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இந்த கட்டத்தில் எடுத்த ஸ்கோர் 142 மட்டுமே. 4.73 என்ற ரன்ரேட்டில் ஆடியிருந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதுவே இந்தூரில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் 6.37 என்ற ரன்ரேட்டில் 191 ரன்களை எடுத்தது நியூசிலாந்து. இந்த முறை அவர்கள் இழந்தது ஒரு விக்கெட் மட்டுமே. மிட்செலோடு சேர்ந்து கிளென் ஃபிலிப்ஸும் சதம் அடித்தார். ஆனால், சேஸ் செய்த இந்திய அணி மிடில் ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களே எடுத்தது. ரன்ரேட் 5.47.
இந்த வித்தியாசம் இந்தியா மிடில் ஓவர் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் இரண்டிலுமே பின்தங்கியதைக் காட்டுகிறது.
படக்குறிப்பு,இந்தத் தொடரில் மிடில் ஓவர்களில் முன்னிலை பெற்ற அணிகளே அந்தப் போட்டியையும் வென்றிருக்கின்றன. வதோதராவில் இந்தியாவும், மற்ற இரு போட்டிகளில் நியூசிலாந்தும் மிடில் ஓவர்களில் முந்தி, போட்டிகளிலும் வெற்றி பெற்றன.
மிடில் ஓவர்களில் இந்திய பந்துவீச்சு பின்தங்கியது ஏன்?
கடைசி இரண்டு போட்டிகளின் மிடில் ஓவர்களில், மொத்தம் 60 ஓவர்களில் இந்தியா வீழ்த்தியது 3 விக்கெட்டுகள் தான். இது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.
இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் சும்பன் கில், "எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. சர்க்கிளுக்கு உள்ளே ஐந்து வீரர்கள் இருக்கும்போது விக்கெட் வீழ்த்த முடியவில்லையெனில் அதன்பிறகு அது மிகவும் கடினம். புதிய பந்தில் நன்றாகத்தான் வீசினோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் தைரியமாகப் பந்துவீசியிருக்கலாம்" என்று தெரிவித்தார்.
"விக்கெட் எடுக்கவேண்டிய முக்கியமான இந்தக் கட்டத்தில் இந்திய அணி அதைச் செய்யத் தவறிவிட்டது" என்று சொல்லும் நானி, கேப்டன் சுப்மன் கில் கூட இரு தவறுகளை செய்ததாக கூறுகிறார்.
"குல்தீப் யாதவ் பந்தை நன்கு தூக்கிப் போடுபவர், விக்கெட் எடுப்பவர். ஆனால், மிட்செல் அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் அவர் மிகவும் 'flat'-ஆகவே பந்துவீசிக் கொண்டிருந்தார். அப்படியிருக்கும்போது அவருடைய விக்கெட் எடுக்கும் தன்மையே போய்விடும். ஒரு பௌலர் அப்படி சற்று யோசிக்கும்போது, கேப்டனோ, வேறு யாராவதோ சென்று அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை யாரும் செய்யவே இல்லை. அவர் ராஜ்கோட் போட்டியில் 82 ரன்கள் கொடுக்கக் காரணமே அதுதான்.'' என்கிறார் நானி.
இந்தியாவின் முக்கிய 'விக்கெட் டேக்கிங் பௌலர்' என்று கருதப்படுபவர்களுள் ஒருவரான குல்தீப், இந்தத் தொடரில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். நியூசிலாந்து பேட்டர்கள் அவருக்கு எதிராக யோசிக்காமல் அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் அவர்களது ரன்ரேட் மிடில் ஓவர்களில் மிகவும் சீராகச் சென்றது.
ஜடேஜா மீது விமர்சனம்
அதேபோல், ஜடேஜாவைப் பயன்படுத்திய விதம் குறித்தும் நானி தன் விமர்சனத்தை முன்வைத்தார்.
"ஒரு ஸ்பின்னரை எப்போது பந்துவீச்சுக்குக் கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியம். மூன்றாவது போட்டியில் ஜடேஜாவை 30-வது ஓவரில்தான் கில் பயன்படுத்தவே தொடங்கினார். என்னதான், பௌலர் ஃபார்மில் இல்லாவிட்டாலும், ஒரு முன்னணி ஸ்பின்னர் இருக்கும்போது அவர் மீது நம்பிக்கை வைக்கவே வேண்டும்" என்று சுட்டிக்காட்டினார்.
அதேசமயம், ஜடேஜாவின் செயல்பாடு பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
ஒருநாள் போட்டிகளில் ஜடேஜாவின் செயல்பாடு சமீபமாக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்தத் தொடரில் 23 ஓவர்கள் வீசிய அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பந்துவீச்சில் அவரது எகானமியும் 6.13 என அதிகமாகவே இருக்கிறது. கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரேயொரு விக்கெட் தான் வீழ்த்தியிருக்கிறார்.
கிரிக்பஸ் வலைதளத்தில் உரையாடிய ஜாஹிர் கான் மற்றும் அஜிங்க்யா ரஹானே, ஜடேஜா - அக்ஷர் பட்டேல் இடையிலான போட்டி பற்றிப் பேசியிருந்தார்கள்.
அக்ஷர் பட்டேல் நிச்சயம் ஜடேஜாவுக்கு தொடர் நெருக்கடி கொடுப்பார் என்று கூறிய ஜாஹிர் கான், "இந்த ஃபார்மட் மாறிவருகிறது. மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தும் பௌலராக இருந்தால் மட்டும் போதாது, நீங்கள் விக்கெட் எடுக்கத் தொடங்கவேண்டும். அதை ஜடேஜா புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார்.
ரஹானேவோ, "ஒருநாள் போட்டிகளுக்கு நிறைய வேரியேஷன்கள் தேவை. ஜடேஜா சிறந்த வீரர் என்றாலும் அவர் ஒரே மாதிரியான வேகத்தில் பந்துவீசக் கூடியவர். அதை பேட்டர்கள் கணித்துவிடுவார்கள். அதேசமயம் அக்ஷர் படேலிடம் நிறைய வேரியேஷன்கள் இருக்கின்றன" என்று கூறினார்.
வழக்கமாக ரன்களைக் கட்டுப்படுத்தும் ஜடேஜா ஒருபக்கம் அதிக ரன்களைக் கொடுத்ததுமே, குல்தீப் மீதும் அது நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும்.
இந்த இடத்தில் தான் இந்திய அணி வருண் சக்கரவர்த்தி போன்ற ஒரு விக்கெட் எடுக்கக்கூடிய பௌலரைத் தவறவிட்டதாகச் சொல்கிறார் நானி. சாம்பியன்ஸ் டிராபியில் நன்கு செயல்பட்ட அவரை, இப்போது ஒதுக்கி வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், வருண் இருந்தால் இந்த மிடில் ஆர்டர் விக்கெட் பிரச்னை நிச்சயம் தீர்ந்துவிடும் என்றார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்தத் தொடரில் இந்திய ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார் டேரில் மிட்செல்
மிடில் ஓவர் & மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னை
நியூசிலாந்து அணி மிடில் ஓவர்களில் நன்றாக ரன் சேர்க்க வில் யங், கிளென் ஃபிலிப்ஸ் போன்றவர்கள் மிட்செலுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததும் ஒரு காரணம்.
இந்த ஒத்துழைப்பு விராட் கோலிக்கோ, இரண்டாவது போட்டியில் கேஎல் ராகுலுக்கோ கிடைக்கவில்லை.
இந்தத் தொடரில், இந்திய மிடில் ஆர்டர் (நான்காவது முதல் ஏழாவது வரிசை வரை களமிறங்கும்) பேட்டர்களின் சராசரி 34.7. இதுவே நியூசிலாந்தின் சராசரி 80.86. அதில் பெரும்பகுதி ரன்களை எடுத்த மிட்செலின் பங்களிப்பை நீக்கினாலும் கூட அந்த சராசரி 42.8 ஆக இருக்கும். இந்த வித்தியாசத்துக்குக் காரணம் இந்தியா இங்கு நிறைய விக்கெட்டுகளை இழந்தது.
"இந்திய பேட்டர்களுக்கு ஸ்பின் ஆட வருவதில்லை. அதுதான் இதற்கான மிகப் பெரிய பிரச்னை" என்று இதற்கான காரணத்தைக் கூறுகிறார் நானி.
"இது கொஞ்சம் கடுமையாகக் கூடத் தெரியலாம். ஆனால், அதுவே உண்மை. இந்திய பேட்டர்கள் ஸ்பின்னுக்கு எதிராக முன் வந்து விளையாடவே அஞ்சுகிறார்கள். காலை நகர்த்தவே அவர்கள் மறந்துவிட்டார்கள். முதல் போட்டியின் ஒருகட்டத்தில் ஷ்ரேயாஸ், ஆதித்யா அஷோக் ஓவரில் சிறப்பாக ஆடினார். அதன்பிறகு இந்திய அணி ஸ்பின்னை சரியாகவே கையாளவில்லை" என்றும் அவர் கூறினார்.
கடைசி 2 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயராலும் அப்படியான ஆட்டத்தைக் கொடுக்க முடியவில்லை. அவர் வேகப்பந்துவீச்சாளர்களிடம் விரைவாக வீழ்ந்துவிட்டார்.
அடுத்து வந்த நித்திஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரலும் சுழலை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. இப்படி ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்ததால், கோலி, ராகுல் ஆகியோரும் ரன் சேர்ப்பதை விட விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது. அதனால், ரன் ரேட் வெகுவாகக் குறைந்தது.
இந்திய பேட்டர்களின் பயத்தால், லெனக்ஸ் போன்ற ஒரு புதிய வீரர் கூட ஆதிக்கம் செலுத்துவதுபோல் தெரிந்ததாகக் கூறினார் நானி.
"நாளை சான்ட்னர், சோதி போன்றவர்கள் வந்துவிட்டால் இந்த வீரர்கள் பிளேயிங் லெவனிலேயெ இருக்கமாட்டார்கள். ராஜ்கோட் போட்டியில் பந்துவீசியபோது பிரேஸ்வெல் தன் முதல் 8 ஓவர்களில் 18 ரன்கள் தான் கொடுத்திருந்தார். அவருக்கு எதிராக இந்திய பேட்டர்கள் கடைபிடித்தது சரியான அணுகுமுறையே அல்ல." என்றும் அவர் கூறினார்.
மறுபுறம் நியூசிலாந்து அணியோ இந்தியா போல் அல்லாமல், ஸ்பின்னர்களை தைரியமாகக் கையாண்டதுதான் அவர்கள் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமாக அமைந்தது.
குறிப்பாக குல்தீப் யாதவுக்கு எதிராக அதிரடியாக ஆடினார்கள். குல்தீப் இந்தத் தொடரில் வீசிய முதல் ஓவரிலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார் கான்வே. டேரில் மிட்செல் பல தருணங்களில் இறங்கி வந்து பவுண்டரிகள் அடித்தார். குல்தீப் ஒரு ஆபத்தான பௌலராகக் கருதப்பட்டாலும், நியூசிலாந்து பேட்டர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கவில்லை.
குல்தீப்புக்கு எதிராக அப்படி ஆடியது பற்றி இரண்டாவது போட்டிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் பிரேஸ்வெல், "எங்கள் பேட்டர்கள் சூழ்நிலையை உணர்ந்து நன்றாக ஆடினார்கள். அதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்றார்.
அதேசமயம், மிடில் ஆர்டர் பிரச்னை என்பது இன்றோ நேற்றோ தோன்றிய பிரச்னை அல்ல என்றும், இந்தியாவுக்குக் காலங்காலமாகத் தொடரும் ஒரு பிரச்னை என்று குறிப்பிட்டார் நானி.
"இந்தியாவுக்கு இந்த மிடில் ஆர்டர் பிரச்னை எப்போதுமோ இருந்து வந்திருக்கிறது. என்ன பெரும்பாலும் யாராவது ஒருவர் காப்பாற்றிவிடுவார். அவ்வப்போது மொத்தமாக வெளிப்பட்டுவிடும். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல." என்றார் நானி.
தென்னாப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்தியா தோற்ற போதும் கூட சுழலுக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் பிரச்னை பெருமளவு விவாதிக்கப்பட்டது.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் தவிர்த்து, மற்ற போட்டிகளில் இந்திய மிடில் ஆர்டர் நியூசிலாந்தின் ஸ்பின்னர்களை தைரியமாக எதிர்கொள்ளவில்லை என்கிறார் நானி
ஆல்ரவுண்டர்கள் அதிகமாக இருப்பது தான் பிரச்னையா?
இந்தியாவின் இந்தத் பேட்டிங் தடுமாற்றத்துக்கு அதிக ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்த்திருப்பது ஒரு காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. நித்திஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக 'ஸ்பெஷலிஸ்ட்' பேட்டர்களைப் பயன்படுத்தலாமே என்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர்.
இந்தியாவின் தடுமாற்றத்துக்கு இது காரணமா என்று கேட்டால், இல்லை என்று மறுக்கிறார் நானி.
"இந்தியாவின் 'டெயில்' அதாவது பின்வரிசை பேட்டிங் மிகவும் பெரியது. பும்ரா, சிராஜ், குல்தீப், வருண், அர்ஷ்தீப் ஆகியோரில் மூவர் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார்கள் எனும்போது ஆல்ரவுண்டர்கள் தேவை. ஜடேஜாவின் இடத்தில் அக்ஷரும், நித்திஷ் இடத்தில் ஹர்திக்கும் வந்துவிட்டால் பிரச்னைகள் சரியாகிவிடும்" என்று சொல்கிறார் அவர்.
2027 உலகக் கோப்பை நடக்கும் தென்னாப்ரிக்க ஆடுகளங்களில் நித்திஷ் ரெட்டியாலும் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று அவர் சொல்கிறார்.
இந்த பேட்டிங் பிரச்னைக்குக் காரணம் என்ன?
ஒரு நிலைத்தன்மை இல்லாதது தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் நானி. இதுபற்றிப் பேசிய அவர், "வீரர்கள் யாருக்கும் தங்கள் இடம், ரோல் பற்றிய தெளிவு இல்லை. சில வீரர்களுக்கு அடுத்த போட்டியில் ஆட இடம் கிடைக்குமா என்ற பயம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் ஒரு அரைசதம் அடித்து இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள். ஸ்பின்னர்களுக்கு எதிராக தைரியமாக ரிஸ்க் எடுத்து ஆடவேண்டிய சூழ்நிலையில் அவர்கள் அப்படிச் செய்யாததன் காரணம் இந்த நிலையற்ற தன்மைதான். தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்கும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என்றார்.
அணியில் செய்யும் மாற்றங்கள், அணியின் வரிசையில் செய்யும் மாற்றங்கள் அனைத்துமே வீரர்களைப் பாதிக்கின்றன என்கிறார் அவர்.
இந்த விஷயத்திலும் கூட இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. முதலிரு போட்டிகளில் ஏழாவது வீரராகக் களமிறங்கிய பிரேஸ்வெல், கடைசிப் போட்டியில் ஆறாவது வீரராக பேட்டிங் செய்தார். மற்றபடி டாப் 7 இடங்களில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.
ஆனால், இந்திய அணியில் அப்படி இருக்கவில்லை. டாப் 4 ஒரே மாதிரி இருந்தாலும், 5 முதல் 7 வரை பல மாற்றங்கள் நடந்தன.
இது இந்தத் தொடரில் இந்தியாவின் 5 முதல் 7 வரையிலான பேட்டிங் வரிசை:
முதல் ஒருநாள் போட்டி: ஜடேஜா, ராகுல், ஹர்ஷித் ராணா
2வது ஒருநாள் போட்டி: ராகுல், ஜடேஜா, நித்திஷ் ரெட்டி
3வது ஒருநாள் போட்டி: ராகுல், நித்திஷ் ரெட்டி, ஜடேஜா
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போன்ற போட்டிகளில் வீரர்களுக்கு ஒரு நிலையான இடமும், தெளிவான ரோலும் இருக்கவேண்டும் என்கிறார் நானி. இந்த இந்திய அணியில் ஒருசில வீரர்களுக்கு அது இல்லாதது பெரிய பிரச்னையாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த மிடில் ஓவர் சுழல் பிரச்னைகள் இருந்தாலும், 2027 உலகக் கோப்பை தென்னாப்ரிக்காவில் நடப்பது ஒரு வகையில் நம்பிக்கையான விஷயம் என்று சொல்கிறார் நானி.
இருந்தாலும், அதற்காக ஒரு 20 வீரர்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் கொடுத்து, அதிலிருந்து உலகக் கோப்பை அணியைத் தேர்வு செய்யவேண்டும் என்கிறார். அதேசமயம், அந்த வீரர்களுக்கும் நிலையான இடமும், தெளிவான ரோலும் கொடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c5yvll0nn3wo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.