Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறாண்டு கால வலைப்பூ அனுபவங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிமுகம்:

குருவிகள் என்ற புனைப்பெயரோடு வலைப்பூவில் (Blogger) எழுத ஆரம்பித்து 2009 யூலைத் திங்களோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

ஆரம்பம்:

நாங்கள் (நானும் சில நண்பர்களும்) ஆரம்பத்தில் (2003 யூலையில்) பிளாக்கர் உலகில் நுழைந்த போது ஒரு சில தமிழ் பிளாக்கர்களே வலைப்பூ உலகில் இருந்தனர். அப்போது இந்த பிளாக்கர்களுக்கு என்ன சரியான தமிழ் பதம் என்பதே முக்கியமான பேச்சாக இருந்தது.

வழிகாட்டிகள்:

அப்போதைய பொழுதுகளில் வலைப்பூப் பதிவுகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்களில் திசைகள் மாலன், சுரதா யாழ்வாணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

சுரதா யாழ்வாணன் பிளாக்கர்களுக்கு யாழ் இணையத்தில் குடில்கள் என்று தமிழில் பெயரிட்டார். இருந்தாலும் பின்னர் திசைகள் மாலன் அவர்கள் (யூலை 2003 இல்) -( வலைப்பூ என்ற பதம் திசைகளில் மாலனால் அறிமுகம் செய்யப்பட முன்னர் வேறொருவரால் மாலனுக்கு அறிமுகம் செய்யப்பட்டதாக நா. கணேசன் என்ற வலைப்பதிவர் தெரிவித்திருப்பது தற்போது இங்கு மேலதிக தகவலாக இணைக்கப்பட்டிருக்கிறது.) முன்மொழிந்த வலைப்பூ என்பதே அநேகரின் எண்ணத்தைக் கவர.. அது 6 ஆண்டுகளுக்குள் தமிழில் மிகப் பிரசித்தம் பெற்றுவிட்டது.

ஆரம்பத்தில் பிளாக்கர்களில் தமிழில் எழுதுவது சிரமமாக இருந்தது. சுரதா யாழ்வாணன் மற்றும் மதி கந்தசாமி, காசி ஆறுமுகம் போன்றவர்களின் வழிகாட்டுதலினூடு பலர் பிளாக்கர்களில் தமிழை சரிவர உபயோகிக்கக் கற்றுக் கொண்டனர்.

எங்களுக்கு தமிழில் வலைப்பூவில் எழுத வழிகாட்டியவர்களாக சுரதா யாழ்வாணன், யாழ் இணைய நிறுவுனர் மோகன், நண்பர்களான கணணிப்பித்தன் மற்றும் கீதம்.net பாலா போன்றவர்கள் விளங்கினர்.

பிரவேசம்:

எமது ஆரம்ப வலைப்பூவாக செய்திகள் என்ற தலைப்பில் kuruvikal.blogspot.com என்ற முகவரியோடு செவ்வாய்க்கான பயணத் தகவல்களைக் காவிக் கொண்டு வந்த அறிவியல் அல்லது விஞ்ஞானச் செய்திகளுக்கான வலைப்பூ இருந்தது. இன்று வரை அதனை நானும் எனது நண்பர்கள் சிலரும் அதன் இலக்குப் பிசகாத வகைக்கு பரிகரிக்க முற்பட்டு வருகின்றோம். ஆனால் ஒரு சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் செய்திகள் என்ற தலைப்பில் இருந்த எமது அறிவியல் வலைப்பூ தற்போது விஞ்ஞானக் குருவி - செய்திகள் என்ற தலைப்பில் இயங்கி வருகிறது. அதே முகவரியில்.

ஈடுபாடுகள்:

அதன் பின் 2004ம் ஆண்டு சுரதா யாழ்வாணன் அவர்கள் ஆரம்பித்த yarl.net வழங்கிய பிளாக் வசதியைப் பயன்படுத்தி தேடற்சரம் என்ற பெயரில் thedatsaram.yarl.net என்ற முகவரியோடு உருவாக்கிய வலைப்பூவில் குருவிகள் என்ற அதே புனைப்பெயரில் எனது எண்ணங்களில் பிறந்த தேடல்களின் விளைவுகளைப் பதிவாக்கினேன். அதில் கவிதைகள், அக்கால உலக.. உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட விமர்சனங்கள்.. கட்டுரைகள் எழுதி இருந்தேன். துரதிஸ்டவசமாக அவ்வலைப்பூ 2005 வாக்கில் செயலிழந்து போனது.

அதன் பின் அதே நாமத்தோடு 2006 ஜனவரித் திங்களில் பிளாக்கரின் உதவியோடு thedatsaram.blogspot.com என்ற முகவரியில் ஒரு வலைப்பூவை ஆரம்பித்தேன். yarl.net வலைப்பூவில் இழந்த பல விடயங்களை மறப்பது கடினமாக இருந்தாலும் மறக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட அதை மறந்துவிட்டு இதில் பல்வகை அம்சங்களையும் எழுத ஆரம்பித்தேன். இருந்தாலும் எனது அந்த முயற்சி அவ்வளவு சுவாரசியமாக எனக்கு அமையவில்லை. அறிவியலூடு அதிகம் ஈடுபாடு கொண்டிருந்ததாலும் ஏலவே இருந்த தேடற்சரம் வலைப்பூ செயலிழந்ததால் எழுந்த சலிப்புத் தன்மையும் புதிய தேடற்சரத்தின் மீதான சுவாரசியத் தன்மை இழக்கப்படக் காரணமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

புதிய வருகைகள் (திரட்டிகள் உள்ளடங்கலாக):

இதற்கிடையே 2003 பிற்பகுதிகளில் தமிழ் வலைப்பூக்களை திரட்டி வழங்கும் எண்ணத்தை சுரதா யாழ்வாணன், காசி ஆறுமுகம் போன்றவர்கள் வெளிப்படுத்தி பிளாக்கர்களை ஒரு வலைப்பூவில் அகர வரிசைப்படி வலைப்படுத்திக் காட்டினர்.

அதன் பின் திசைகள் மாலன் திசைகளிலும் மதி கந்தசாமி காசி ஆறுமுகம் போன்றவர்கள் வலைப்பூக்களை திரட்டிகளிலும் வகைப்படுத்த ஆரம்பித்தனர். அப்போதெல்லாம் அவர்கள் எமது அறிவியல் வலைப்பூவுக்கு முக்கியத்துவம் அளித்து அறிவியலிற்கு தமிழில் இவ்வாறான ஒரு வலைப்பூ அமைந்திருப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் எமது வலைப்பூவை திரட்டிகளில் முதன்மைப்படுத்தி வெளிப்படுத்தி வந்தனர்.

அதன் பின் தமிழ்மணம்.. தேன்கூடு போன்ற வலைப்பூ திரட்டிகள் அதிக தொழில்நுட்ப வசதிகளோடு 2004/5 ம் ஆண்டில் இருந்து செயற்பட ஆரம்பித்தன. தமிழ்மணம் வலைப்பூ திரட்டி உலகில் குறிப்பிடத்தக்க செல்வாக்கோடு இன்றும் அதன் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. தேன்கூடு சமீப காலமாக செயற்படுவதாகத் தெரியவில்லை. அதற்கு ஈடாக பல புதிய வலைப்பூ திரட்டிகள் தமிழில் வந்துவிட்டன.

வலைப்பூ திரட்டிகள் எவ்வாறு பெருகினையோ அதே போன்று வலைப்பூக்களின் எண்ணிக்கையும் 2003 இல் சில பத்துகளாக இருந்து இன்று பல நூறுகளாகப் பெருகிவிட்டன.

ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவினரின் ஆக்களையே வலைப்பூக்களில் காண முடிந்தது. ஆனால் இன்று பல் வகைத் தன்மை வலைப்பூக்களில் பரந்து விரிந்து கிடந்து மணம் வீசுகின்றமை மகிழ்வளிப்பதாக இருக்கிறது.

இருந்தாலும் அன்றைய சிறிய குழுக்களுக்குள் இருந்த ஒற்றுமை இன்றைய பெரிய வலைப்பூக் குழுமத்துள் குறைந்து வருவதாகவே எனக்குப்படுகிறது. ஆக்கங்களை, திறமைகளை, தமது எண்ணங்களை, சுவாரசியங்களை, அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்ய வந்த வலைப்பூக்களை ஒரு சிலர் இன்று அவற்றைக் கடந்து வலைப்பதிவர்களை மனதால் காயப்படுத்த பாவிப்பதைக் காண முடிகிறது. இது மனதுக்கு மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகவே இருக்கிறது. இந்த நிலை விரைந்து மாறி வலைப்பதிவர்கள் தமக்கிடையே நட்புக்களைப் பலப்படுத்தி தம்மை ஒரு வலுவான கருத்தியல் சக்தியாக மாற்றிக் கொள்ள முயல வேண்டும். நாமும் அதற்காக மற்றைய வலைப்பதிவர்களோடு இணைந்து ஒற்றுமையோடு செயற்படுவோம்.

புதிதாய் உதித்தவை:

மேலும்.. 2006ம் ஆண்டில் எங்களைப் பாதித்த ஒரு நிகழ்வை அடுத்து குப்பையாகியுள்ள இந்த அழகான உலகைப் பற்றிய பதிவுக்கான ஒரு வலைப்பூவை ஆரம்பித்தோம். அதற்கு குண்டுமணி என்று பெயரிட்டு kundumani.blogspot.com என்ற முகவரியில் அறிமுகப்படுத்தினோம். இயன்றவரை இந்த உலகில் நிகழும் அரசியல், சமூக விடயங்கள் தொடர்பில் எங்களது எண்ணத்தில் தோன்றும் கண்ணோட்டங்களை கருத்துக்களை நானும் எனது நண்பர்கள் சிலரும் ஒரே பெயரில் பதிவு செய்து வருகின்றோம்.

எனது இணையச் சகோதரி ஒருவரின் முயற்சியால் yarl.net வலைப்பூவில் எழுதி தொலைந்து போன கவிதைகள் மற்றும் சில ஆக்கங்கள் யாழ் இணையத்தின் பழைய கருத்துக்களத்தில் பதிவு செய்யப்படிருந்தமை இனங்காணப்பட்டு மீட்டுத் தரப்பட்டது. அவற்றையும் எனது புதிய சில கவி வரிகள் போன்று இருப்பதாக நான் கருதும் சில படைப்புக்களையும் குருவிகள் என்ற நாமத்தில் kuruvikal.wordpress.com முகவரியில் வலைப்பூ ஒன்றில் பதிவு செய்து வருகின்றேன்.

சந்தித்த சோதனைகள்:

வலைப்பூ உலகில் எங்களுக்கு முகம் தெரியாத நண்பர்களே அதிகம். எனது முகத்தையோ எனது நண்பர்களின் முகத்தையோ நாம் எமது வலைப்பூக்களூடு வெளிக்காட்டுவதில்லை. ஏனெனில் எமது வலைப்பூக்களின் நோக்கம் எமது முகத்தைக் காண்பிப்பதல்ல. எமது எண்ணங்களை ஆக்கங்களை வெளிக்காட்டுவதே.

இருந்தாலும் எமக்கும் சோதனைகள் வந்தன. ஆனால் எவரும் எம்மை வார்தைகளுக்கு அப்பால் காயப்படுத்தவில்லை. எமது வலைப்பூக்களை சேதப்படுத்தவில்லை. அந்த வகையில் வலைப்பூ உலகில் உள்ள அனைவரையும் எமது நண்பர்களாகவே நண்பிகளாகவே நோக்குகின்றோம். எதிர்காலத்திலும் நோக்குவோம்.

பின்னூட்டல்கள்:

நானோ எனது நண்பர்களோ பிற வலைப்பூக்களை கிரமமாக வாசித்தாலும் பின்னூட்டல்களை விடுவதை பெரும்பாலும் தவிர்ப்போம். காரணம் பின்னூட்டல்களே பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைகளுக்கு காரணமாகி இருக்கின்றன.

பின்னூட்டல்களின் உண்மையான நோக்கம் வெறும் பாராட்டுகள் அல்லது குறைகள் சொல்வதல்ல. குறித்த ஆக்கம் தொடர்பான வாசகனின் பிற வலைப்பதிவரின் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்வதே ஆகும். ஆனால் பலர் ஆக்கங்கள் தொடர்பான தமது எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தாது தேவையற்ற முரண்பாடுகளை வளர்ப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

பல பின்னூட்டங்கள் நட்பு ரீதியாக இருக்கின்றனவே தவிர ஆக்கங்கள் படைப்புக்கள் கருத்துப்பகிர்வுகள் தொடர்பில் கருத்துக்களை விமர்சனங்களை வெளிப்படையாக பகிர்வனவாக இல்லை. இது ஒரு மாற்றத்துக்கான, கருத்தியல் வளர்ச்சிக்கான, விடயங்களின் உள்வாங்கல்ளுக்கான சரியான வழிமுறையாகத் தெரியவில்லை. இந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக தமிழ் வலைப்பூ உலகில் இந்த நிலை ஒரு மரபாக வளர்ந்து வருகிறது.

விமர்சனங்கள்:

வலைப்பூக்களில் வலைப்பதிவர்கள் எதனையும் எழுதலாம். ஆனால் வாசகனுக்கு ஒன்றை விமர்சிக்கும் தகுதி இருப்பதை மறுக்க முடியாது. எனவே வலைப்பூப் பதிவர்கள் படைப்புக்கள் ஆக்கங்களுக்கு ஏற்ப பல வகை விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும் அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டும்.

விமர்சன கர்த்தாக்களும் வாசகர்களும் தமது விமர்சனங்களை ஆரோக்கியமாக முன்வைத்து பதிவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை நல்க வேண்டும். பதிவுலகில் அனைத்துத் தரப்பினருக்கும் உணர்ச்சிவசப்படுதலுக்கு இடமிருந்தாலும் அதைத் தவிர்க்க முயல்வது நன்று.

ஊக்குவிப்புக்கள்:

எமது வலைப்பூ பல தரப்பட்டவர்களாலும் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. யாழ் இணையம் ஆரம்ப காலம் தொட்டு எமக்கு எமது ஆக்கங்களை பிரசுரிக்க உதவி வருகிறது. வலைப்பூ (ஒக்டோபர் 2003) (நவம்பர் 2003) மற்றும் சந்திரவதனா (யூலை 2004) போன்றவர்களின் வலைப்பூக்கள்களிலும் வலைப்பூக்கள் பற்றிய பதிவுகளில் எமது வலைப்பூக்கள் பற்றியும் ஆரம்ப காலம் தொட்டுக் குறிப்புகளைச் சேர்த்து வந்துள்ளனர். அதுமட்டுமன்றி தமிழ் விக்கிபிடியா தனது அறிவியல் பகுதியில் எமது வலைப்பூவையும் பட்டியலிட்டுள்ளது. ஆனந்த விகடன் கடந்த ஆண்டு யூலையில் (16-07-2008) எமது விஞ்ஞானக் குருவிகள் வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்தது.

மேலும் வலைப்பதிவர்கள் சிலர் தமது வலைப்பதிவுகளில் வலைச்சரங்களில் இணையத்தளங்களில் எமது வலைப்பூ தொடர்பான இணைப்புக்களையும் வழங்கி ஊக்குவித்துள்ளனர்.

நன்றிகள்:

எமது வலைப்பூக்கள் எமது படைப்புக்களை, ஆக்கங்களை மட்டும் தாங்கி வருவனவாக இருக்கலாம். ஆனால் அதனை வாசிப்பவர்களே எமது வலைப்பூக்களின் வளர்ச்சியின் தூண்கள். அவர்கள் வாசிக்காவிட்டால் நாம் எழுதப் போவதில்லை.

அதுமட்டுமன்றி தமிழ் வலைப்பதிவுலகில் உள்ள சக வலைப்பதிவர்கள் எல்லோரும் எம்மோடு நட்புரீதியாகவே பழகி வந்துள்ளனர். ஒருபோதும் பெரிய முரண்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை.

எதிர் விமர்சனங்களை, நேர்மையான விமர்சனங்களை நாம் எப்போதும் வரவேற்கிறோம். நீங்கள் செய்யும் விமர்சனங்களே எம்மை வழிநடத்தும் காரணிகள். நாம் எதை எழுதுகின்றோம்.. தேவையானதைத்தான் எழுதுகிறோமா, அவசியமானதைத்தான் எழுதுகிறோமா, சரியாகத்தான் எழுதிகிறோமா என்பதைத் தீர்மானிப்பது வாசகர்களின் கருத்துக்களிலாலேயே பிரதிபலிக்கப்படுகின்றன.

அந்த வகையில் எமது வலைப்பூ ஆக்கங்களுக்கு இதுவரை பின்னூட்டங்கள் இட்டு ஆக்கங்களுக்கு தங்கள் வாக்குகளை இட்டு தங்கள் கருத்துக்களை எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் மற்றும் திரட்டிகளில் எமது வலைப்பூக்களை அறிமுகம் செய்து பட்டியலிட்டு வைத்திருக்கும் திரட்டிகளின் உரிமையாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மேலும் எமக்கு பல வழிகளிலும் உதவி நல்கிய வலைப்பூ உலக நண்பர்கள், பதிவர்கள் அனைவருக்கும் இணைய நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் இப்பதிவினூடு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்ந்து உங்களின் ஆதரவையும் விமர்சனங்களையும் ஊக்குவிப்புக்களையும் நல்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு எமது வலைப்பூக்களின் வாசம் தொடந்து வீசும் என்று உறுதியளித்து இப்பதிவை இத்தோடு நிறுத்தி உங்களின் தலைவலிக்கு விடுதலை அளிக்கின்றோம்.

(தனிப்பட்டு பல வலைப்பதிவர்கள் எம்மோடு நெருங்கி உறவாடினும் எல்லா வலைப்பதிவர்களையும் சமனாகவே மதித்து வருகின்றோம். எல்லோரையும் ஒரே வகையில் வலைப்பதிவுலக நண்பர்களாக இங்கு குறிப்பிட்டு இருக்கின்றோம். எனவே யாரும் தங்களை விசேடித்துக் குறிப்பிடவில்லை என்று குறை நினைக்கக் கூடாது என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றோம். திரட்டிகள் மற்றும் எமது வலைப்பூக்களில் இருந்துச் செய்திகளை ஆக்கங்களைப் பெற்றும் பிரசுரித்து வரும் இணையத்தளங்கள்.. வானொலிகள்.. பத்திரிகைகள் ஆகியவற்றிற்கும் பொதுவான நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். தனித்து நன்றிகளை தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகின்றோம்.)

மீண்டும்.. இன்னொரு பதிவில் சந்திக்கும் வரை நன்றிகளோடு வணக்கங்கள்.

- குருவிகள் மற்றும் நண்பர்கள்.

ஆதார இணைப்புக்களுடன் மூல ஆக்கம் இங்கு கீழே உள்ளது. அதைப் படிப்பதும் அவசியம். உங்களுக்கு இக்கட்டுரையில் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அதாவது வலைப்பூ பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய விபரங்கள் தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பின் கீழ் உள்ள முகவரியிலும் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

பதிவுக்கு: http://kundumani.blogspot.com/

(குருவிகளின் வலைப்பதிவுகள் சார்பில் நெடுக்காலபோவனாகிய நான் இப்பதிவை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அறிமுகம்:

குருவிகள் என்ற புனைப்பெயரோடு வலைப்பூவில் (Blogger) எழுத ஆரம்பித்து 2009 யூலைத் திங்களோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

------

------

(குருவிகளின் வலைப்பதிவுகள் சார்பில் நெடுக்காலபோவனாகிய நான் இப்பதிவை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.)

குருவிகளும் , நெடுக்ஸ்சும் ஒருவரா அல்லது வேறுவேறானவர்களா ......... ? குழப்புறீங்களே ....... :wub:

முதலாவது விசயம்,

குருவி வலைப்பூவிண்ட முகவரியையும் இதில போட்டு இருக்கலாம், மற்றது இதை வலையில் உலகம் பகுதியில போடாமல் உறவாடும் ஊடகம் பகுதிக்கு நகர்த்தினால் யாழ் முகப்புக்கு வரும். பலர் பார்வையிடுவார்கள்.

இரண்டாவது விசயம்,

நான் இடைக்கிடை குருவி, மற்றும் குண்டன்மகன் வலைப்பூக்களிற்கு வந்து வாசிச்சு இருக்கிறன். கூடுதலாக குருவியில வந்து பின்னர் இங்கு இணைக்கப்பட்ட கவிதைகள் பிடிச்சு இருக்கிது.

மூன்றாவது விசயம்,

குருவி வலைப்பூவில இருக்கிறவருக்கு அந்நியன் படத்தில் வாரமாதிரி multi personality disorder இருக்கிதோ? குருவியாகவும், நெடுக்காலபோவானாகவும், குண்டன்மகனாகவும் அடிக்கடி ஆள்மாறாட்டம் செய்துகொண்டு இருக்கிறார் (பகிடிக்குத்தான் கோவிக்ககூடாது :wub: ).

நான்காவது விசயம்,

குண்டன்மகன் வலைப்பூவில பதியப்படும் சில கட்டுரைகளில் ஆட்களைவசைபாடமுன்னம் ஒன்றுக்கு ரெண்டுதரம் யோசிச்சுவிட்டு வசைபாடலாம். சும்மா வாயுக்கு வந்தபடி வசைபாடுவதன்மூலம் ஆட்கள் திருந்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

குருவிகளும், குண்டன்மகனும் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளும்இ குண்டன்மகனும் மேலும் வளர்ச்சியடைய எனது மனப்புர்வமான வாழ்த்துகள்!

குருவிகளும் , நெடுக்ஸ்சும் ஒருவரா அல்லது வேறுவேறானவர்களா ......... ? குழப்புறீங்களே ....... :wub:

உங்களுக்கு இப்படி ஒரு குழப்பம் சிறி அண்ணா... எனக்கு 'நெடுக்கலபோவன்' ஆ அல்லது 'நெடுக்காலபோவான்' ஆ என்று குழப்பம்... :wub:

இருந்தாலும், ஆறாண்டு கால வலைப்பூ அனுபவங்களை சொன்ன விதம் நல்லா இருக்கு.... பதிவுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சாதனைகளுக்கு ஒரு சபாஷ் ....போடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கூறியுள்ள அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். :wub:

வலைப்பூவில் பலரும் பல தரப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அவற்றையும் சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்யின்... வலைப்பூக்கள் பற்றிய அறிமுகங்களும்.. கவனிப்புக்களும் பங்களிப்புக்களும் கூடுமல்லவா.

யாழ் இணையத்திற்கு வலைப்பூப் பதிவர்கள் பலரை உருவாக்கிய பெருமை உண்டு. அது இதிலும் வெளிப்பட்டுள்ளது.

ஒரு உதாரணத்துக்காகவே இப்பதிவை இங்கு கொண்டு வந்து போட்டேன்.

கலைஞனின் சில காத்திரமான கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களைப் போய் சேரும் என்றே நினைக்கிறேன். :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி குடும்பம் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவி குடும்பம் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

சம்பந்தப்பட்டவர்களை உங்கள் செய்தி போய் சேரட்டும். நன்றி கு.சா. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அறிமுகம்:

குருவிகள் என்ற புனைப்பெயரோடு வலைப்பூவில் (Blogger) எழுத ஆரம்பித்து 2009 யூலைத் திங்களோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

குருவிகளுக்கு மட்டும் பிரத்தியேகமான வாழ்த்துக்கள்.

மேலும் வலைப்புக்களை அசத்த தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளும் , நெடுக்ஸ்சும் ஒருவரா அல்லது வேறுவேறானவர்களா ......... ? குழப்புறீங்களே ....... :wub:

இருவரையும் வேறுவேறாக நினைச்சுப் பாருங்க வேறு வேறுதான்.

இருவரையும் ஒருவராக நினைச்சுப் பாருங்க சாட்சாத் இருவரும் ஒருவரேதான்.

நான் எழுதியதில் ஏதும் புரிந்ததா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் குடும்பம் மேலும் உயர உயர பறக்க வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் ,குண்டுமணி வலையுலகில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வலைப்பூக்கள். அநேகமாக வலைப்பூக்கள் மெஞ்ஞானம், பகுத்தறிவு, இலக்கியம், அரசியல், சமூகம், விஞ்ஞானம் மற்றும் அலட்டல் என்று பலவகைப்படுத்தலாம். அதில் குருவியாரின் வலைப்பூ விஞ்ஞானச் சார்புடையதாகவும், சமூக நிலவரங்களை எடுத்தியம்புவனவாகவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வலைப்பூக்களாக இருக்கின்றன. ஆறாண்டு காலத்தை வலைப்பூப் பதிவில் நிறைவு செய்த குருவியாருக்கு மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வலைப்பதிவு

வலைப்பதிவுகள் 1990 களின் இறுதியில் தோற்றம் கண்டன. எளிதாக வலையில் தமது படைப்புக்களை பகிர்வதையும், பின்னூட்டங்கள் மூலம் வலைப்பதிவர்களிடம் தொடர்பாடலையும் ஏதுவாக்கி வலைப்பதிவுகள் மிக வேகமான வளச்சியைக் கண்டன. ஒருங்குறி மூலம் தமிழ் மொழியில் எழுதுவதும், படிப்பதும் இலகுவாகியது. புதுவை எழுதி, ஏ கலைப்பை மூலம் தமிழ்த் தட்டச்சு எளிதானது. தமிழில் வலைப்பதிவுகள் 2003 இல் முதலாவதாக எழுதப்படத் தொடங்கின. அப்போது வலையில் பரவலாக வாசிக்கப்பட்ட திசைகள் இதழிலும் வலைப்பதிவுகள் பற்றி பரந்த அறிமுகங்கள் நிகழ்ந்தன. இந்திய மொழிகளில் தமிழிலேயே முதன் முதலில் பரவலாக வலைப்பதிவுகள் எழுப்பட்டன.

தமிழ் வலைப்பதிவுகள் பரவலாக எழுதப்படுவதை தொகுக்கும் முதல் முயற்சியாக தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல் 2003 உருவாக்கப்பட்டது. வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டியாக தமிழ்மணம் வெளிவந்தது.

விஞ்ஞானக் குருவியும் இதில் இடம்பெற்றுள்ளது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

நன்றி.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.