Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாபக்கேடு

Featured Replies

சுதந்திரம் நோக்கிப் பயணித்து

சூனியத்தை அடைந்த

சூட்சுமத்தில் தான் இன்னும் எமது

வெட்கம்கெட்ட இறுமாப்பு உயிர்வாழ்கின்றது

முகங்கள் தொலைந்த உருவங்களில்

என்னும் அழுகை சிரிப்பு சத்தங்கள்

அதைவிட மேலான கோபங்கள் ஆவேசங்கள்

வெறியோடு நெஞ்சு மயிரைப் புடுங்கி

அண்ணாந்து ஊதியபோதும்

முகத்தை உணரமுடியவில்லை

நாம் தொலைந்து போனோம்

எம்முடன் எடுத்துவந்த

சாப மூட்டைகளில் தலையை சாய்த்து

புலம்பிக்கொண்டிருக்கின்றோம்

சாப மூட்டையுடன் தலைமுறை தலைமுறையாக நடந்து

ஒருவழியாக மயானத்தை அடைந்துவிட்டோம்

சுடலைஞானம் தனக்கு தனக்குதான் பிறந்துவிட்டது என்று

அங்கேயும் குத்துப்பாடு நடக்கின்றது

விசும்பலும் வெளிப்படும் கண்ணீரும்

பிரசவ வலிகளும் நாதியற்றுப்போனது

இருந்தும்

நடைபிணங்களின் வாய்கள்

ஓயாது அரசியல் பேசுகின்றது

தெருப்போக்கனாய் நாடோடியாய்

அகதியாய் அடிமையாய் சுயம் மாறியபோதும்

எம்மோடு வாழும் சாபங்களை

வாழவைத்துக்கொண்டிருக்கின்றோம்

தெற்கில் இருந்து வந்த டாங்கிகளும்

வடக்கில் இருந்து வந்த தேர்களும்

பலப்பரீட்சை நடத்தியதில்

வன்னி உருக்குலைந்து போனது

வடம் பிடித்த மக்கள் முடமாகிப்போனார்கள்

ஊனமுற்ற உடல்கள்

போரின் வேதனையை பற்றி பேசுகின்றது

ஊனமுற்ற மனங்கள்

போரின் தோல்வியைப் பற்றி பேசுகின்றது

புதிய தேர்கள் தயாரக இருக்கின்றது

சோடினைகள் பலமாக இருக்கின்றது

வடம்பிடிக்கும் மக்கள் முடமாகிவிட்டார்கள்

ஆனாலும் தேரிலிருந்து இறங்க முடியாது

முடமானவர்களை தூக்கிவிடவும் ஏலாது

வெள்ளை வீதிகளில் வெள்ளோட்டம் விடவே

நேரம் போதாமல் இருக்கின்றது.

சத்தியமும் தர்மமும்

சாவுகளை உயிர்ப்பிப்பதில்லை

சிந்திய கண்ணீரை மீண்டும்

உணர்வுகளுக்குள் சேர்ப்பதில்லை

இருந்தும்

எம்மிடமே இல்லாத இரண்டும்

எமக்கு துணை இருக்கும் என்று நம்புகின்றோம்

தேரில் இருக்கும் வரை உங்களுக்கு

கண்ணீர் தீர்த்மாக தெரியும்

பசி விரதமாக தெரியும்

குருதி குங்குமமாகத் தெரியும்

அழத்தென்பில்லாத உணர்வுகள்

பக்தியாகத் தெரியும்

தேசிய வரத்தை தவிர

உங்களால்

எதையும் அவர்களுக்காக

வழங்கமுடியாது

நீங்கள் தரும் வரமாகவே

அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை

உங்களால்

எக்காலத்திலும் உணரவும் முடியாது

ஊனமுற்ற உடல்கள்

போரின் வேதனையை பற்றி பேசுகின்றது

ஊனமுற்ற மனங்கள்

போரின் தோல்வியைப் பற்றி பேசுகின்றது

உடன்பாடில்லை. ஊனமுற்ற மனங்களிற்கும் வேதனைகளைப் பற்றிப் பேசத் தோன்றும். அவை பேசிக்கொண்டும் தான் இருக்கின்றன.

மேலும், மானசீகமாக பௌதீகநோவை ஒத்த நோவை உணர்ந்த மனங்களும் இருக்கவே செய்கின்றன. ஒரே வித்தியாசம், மானசீக நோக்கள் உயிரைப்போக்குவதில்லை. இது மிகமிகப்பெரும் வித்தியாசம் தான் என்பதை மறுப்பதற்கில்லை.

புதிய தேர்கள் தயாரக இருக்கின்றது

சோடினைகள் பலமாக இருக்கின்றது

வடம்பிடிக்கும் மக்கள் முடமாகிவிட்டார்கள்

ஆனாலும் தேரிலிருந்து இறங்க முடியாது

முடமானவர்களை தூக்கிவிடவும் ஏலாது

வெள்ளை வீதிகளில் வெள்ளோட்டம் விடவே

நேரம் போதாமல் இருக்கின்றது.

அருமை.

சத்தியமும் தர்மமும்

சாவுகளை உயிர்ப்பிப்பதில்லை

சிந்திய கண்ணீரை மீண்டும்

உணர்வுகளுக்குள் சேர்ப்பதில்லை

இருந்தும்

எம்மிடமே இல்லாத இரண்டும்

எமக்கு துணை இருக்கும் என்று நம்புகின்றோம்

அருமையிலும் அருமை. அதிலும் "சிந்திய கண்ணீரை உணர்வுகள் மீண்டும் சேர்ப்பதில்லை" என்ற வரி, எப்பிடிப்பாராட்டுவது என்று தெரியவில்லை, அத்தனை சிறப்பானதும் ஆளமானதுமான வரி.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

வலியும் சோகமும் விரக்தியும் தேற்ற முடியாத உணர்வுகளும் ... அழகாய் சொல்லபட்டு இருக்கிறது.

சத்தியமும் தர்மமும்

சாவுகளை உயிர்ப்பிப்பதில்லை

சிந்திய கண்ணீரை மீண்டும்

உணர்வுகளுக்குள் சேர்ப்பதில்லை

தேரில் இருக்கும் வரை உங்களுக்கு

கண்ணீர் தீர்த்மாக தெரியும்

பசி விரதமாக தெரியும்

குருதி குங்குமமாகத் தெரியும்

அழத்தென்பில்லாத உணர்வுகள்

பக்தியாகத் தெரியும்

யதார்த்தத்தினை நிதர்சனமாக சொல்லும் வரிகள்.

ஒழுங்கான மேய்ப்பன் இல்லாமல் தவிக்கும் அடிபட்ட ஆட்டுமந்தைகளாய்.... அலையும் தமிழினம்!!!!! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமும் தர்மமும்

சாவுகளை உயிர்ப்பிப்பதில்லை

சிந்திய கண்ணீரை மீண்டும்

உணர்வுகளுக்குள் சேர்ப்பதில்லை

இருந்தும்

மனதின் வேதனை ரணமாக்கியபடியே...........

உங்கள் கவிதை அழகு சுகன்.

ஒழுங்கான மேய்ப்பன் இல்லாமல் தவிக்கும் அடிபட்ட ஆட்டுமந்தைகளாய்.... அலையும் தமிழினம்!!!!! :lol:

மேய்ப்பன் கட்டாயம் தேவையா? மேய்ப்பன் இல்லாமல் ஒரு இனம் வாழமுடியாதா? :blink:

நடைபிணங்களின் வாய்கள்

ஓயாது அரசியல் பேசுகின்றது

அப்ப இனி ஈழத்தமிழன் அரசியல் பேசக்கூடாதோ? :wub:

நல்ல கவிதை

நல்ல கவிதை.

ஆனால் இதில் உள்ள உண்மையைத்தான் எம் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. கற்பனைகளிலேயே வாழ்ந்துவிட்டோமே.

  • கருத்துக்கள உறவுகள்

//ஊனமுற்ற உடல்கள்

போரின் வேதனையை பற்றி பேசுகின்றது

ஊனமுற்ற மனங்கள்

போரின் தோல்வியைப் பற்றி பேசுகின்றது//

என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள்...யதார்த்தமான கவிதை...தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான , யதார்த்தமான வரிகள் அழகு சுகன் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெருப்போக்கனாய் நாடோடியாய்

அகதியாய் அடிமையாய் சுயம் மாறியபோதும்

எம்மோடு வாழும் சாபங்களை

வாழவைத்துக்கொண்டிருக்கின்றோம்

ஆண்டாண்டுகாலமாய் விதைத்த நச்சுசெடி, அழிப்பது கொஞ்சம் கடினம் தான். கர்ணனின் கவசம் போல.

புதிய தேர்கள் தயாரக இருக்கின்றது

சோடினைகள் பலமாக இருக்கின்றது

வடம்பிடிக்கும் மக்கள் முடமாகிவிட்டார்கள்

ஆனாலும் தேரிலிருந்து இறங்க முடியாது

முடமானவர்களை தூக்கிவிடவும் ஏலாது

வெள்ளை வீதிகளில் வெள்ளோட்டம் விடவே

நேரம் போதாமல் இருக்கின்றது.

தேர் இழுக்க வேண்டிய தேவை இருக்கும் போது இழுத்து தானே ஆகவேண்டும்??

ஒருவேளை கட்டுத்தேர்,சித்திரத்தேர்,பெரியதேர்,சின்னதேர் என்று வடிவத்தை மாத்தியேனும் இழுக்க வேண்டிய கட்டாயம்,தேவை இருக்கே???

ஆள்மாறியேனும் வடம்பிடிக்காவிட்டால் அதுவும் வரலாற்றுத்தவறு தானே சுகன் அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் உங்களுடைய இக்கவிதை எனக்கு சிற்சில பாரிய மயக்கங்களைத் தோற்றுவித்திருக்கிறது மேலே இன்னுமொருவன், ஜீவா போன்றோரின் வாதங்களையும் ஏற்பாக வைத்துக்கொண்டு எனக்குத் தோன்றிய விடயங்களையும் உங்கள் முன் வைக்கிறேன். புரிந்துணர்வுள்ள நண்பர்களாக கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம். அந்த வகையில்...

தலைமுறை தலைமுறையாக சாபத்தைச் சுமந்தபடி ஒரு வழியாக மயானத்தை அடைந்து விட்டோம்

சுடலைஞானம் தனக்குத் தனக்குத்தான் பிறந்துவிட்டது என்று அங்கேயும் குத்துப்பாடு

சுகன் தலைமுறை தலைமுறையாக சாபம் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விடயத்தைத் தொடர்ந்து சுடலைஞானம் பிறந்ததென்று குத்துப்பாடு என்று நீங்கள் கூற வருவதில் எனக்கு சிறிது மயக்கம் தோன்றுகிறது. இக்கவிவரிகளில் சாபம் என்றும் சுடலை ஞானம் என்றும் எவற்றைக் குறிப்படுகிறீர்கள்?

விசும்பலும், கண்ணீரும் நாதியற்றுக் கிடப்பதை நடைபிணங்கள் அரசியல் பேசித்தான் வெளிப்படுத்தவேண்டும். அரசியல் பேசாதவிடத்து விசும்பலும் கண்ணீரும் கணக்கெடுக்கப்பட மாட்டாது. வல்லமை இல்லாதவர்கள் வலியைக்கூடச் சொல்லியழ முடியாது. இதற்கு தாயகமே சிறந்த உதாரணம். (எம்மை அழித்த சக்திக்கு எதிராக அரசியல் பேச வேண்டும் எமக்குள் அல்ல என்பதை மறுப்பதற்கில்லை)

வடக்கிலிருந்து வந்த தேர்களும்

தெற்கிலிருந்து வந்த டாங்கிகளும்

பலப்பரீட்சை நடத்தியதில் வன்னி உருக்குலைந்து போனது.

சுகன் வன்னியில் பலப்பரீட்சையா நடந்தது? அப்படியானால் இவ்வளவு காலமும் சிங்களத்துடனான எங்கள் போராட்டம் வெறும் பலப்பரீட்சையா? உங்கள் கருத்தை ஏற்க முடியாது. எனக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து சிங்கள அரச சக்திகளால் பாதிக்கப் பட்டுகொண்டிருந்ததே வாழ்வானது. அப்படிப்பட்ட நான் சிங்களத்தை எதிர்த்தால் அது பலப்பரீட்சை என்றதாக அமையுமா உங்கள் கூற்று.

"தேரில் இருக்கும் வரை உங்களுக்கு

கண்ணீர் தீர்த்மாக தெரியும்

பசி விரதமாக தெரியும்

குருதி குங்குமமாகத் தெரியும்

அழத்தென்பில்லாத உணர்வுகள்

பக்தியாகத் தெரியும்"

இவற்றை தவிர்த்துப்பார்த்தால் அடிமைத்தனம் அற்புதமாய்த் தெரியும். இருக்கிறோம் என்ற உயர்திணையின் சடத்தன்மைக்கு உரித்துடையவர்களாகிய மாற்றம்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை. தேரில் இருந்து படிப்பவர்களும், வடம்பிடித்துப் படிப்பவர்களும் வெவ்வேறு பொழிப்புரைகள் தரமுடியும்.

மேய்ப்பன் கட்டாயம் தேவையா? மேய்ப்பன் இல்லாமல் ஒரு இனம் வாழமுடியாதா?

தமிழர்கள் பண்டுதொட்ட காலம் வரை அரசாட்சியின் கீழ் இருந்து பழகியவர்கள். காலனியாதிக்கம் நிகழ்ந்த காலங்களில் வெளிநாட்டவர் உள்ளூர் ராஜதானிகளை வைத்துத்தான் மக்களை ஆண்டார்கள். காலனியாதிக்கம் நீங்கிய காலங்களிலும் தமிழர்களின் தலைவர்களாக வந்தவர்கள் பழைய அரசர்களின் பெருமைகளைப் பறைசாற்றி மக்களை மேய்க்கவே முனைந்தனர். போதாததற்கு தமிழ்த்திரைப் படங்களின் கதாநாயகர்களையும் மோகித்ததனால் தமிழர்களுக்கு மேய்ப்பன் இல்லாமல் எதுவும் செய்யமுடியாத நிலை. இதனால்தான் பல தமிழர்கள் தற்போது ஆட்டுக்குட்டிகள் போன்று முட்டிமோதிக் கொண்டிருக்கின்றார்கள். ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் ஆடுகள் வேதனையோடு மேய்ப்பனை எதிர்பார்த்துக்கொண்டு நிற்கின்றன.

  • தொடங்கியவர்

சுகன் உங்களுடைய இக்கவிதை எனக்கு சிற்சில பாரிய மயக்கங்களைத் தோற்றுவித்திருக்கிறது மேலே இன்னுமொருவன், ஜீவா போன்றோரின் வாதங்களையும் ஏற்பாக வைத்துக்கொண்டு எனக்குத் தோன்றிய விடயங்களையும் உங்கள் முன் வைக்கிறேன். புரிந்துணர்வுள்ள நண்பர்களாக கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம். அந்த வகையில்...

தலைமுறை தலைமுறையாக சாபத்தைச் சுமந்தபடி ஒரு வழியாக மயானத்தை அடைந்து விட்டோம்

சுடலைஞானம் தனக்குத் தனக்குத்தான் பிறந்துவிட்டது என்று அங்கேயும் குத்துப்பாடு

சுகன் தலைமுறை தலைமுறையாக சாபம் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விடயத்தைத் தொடர்ந்து சுடலைஞானம் பிறந்ததென்று குத்துப்பாடு என்று நீங்கள் கூற வருவதில் எனக்கு சிறிது மயக்கம் தோன்றுகிறது. இக்கவிவரிகளில் சாபம் என்றும் சுடலை ஞானம் என்றும் எவற்றைக் குறிப்படுகிறீர்கள்?

விசும்பலும், கண்ணீரும் நாதியற்றுக் கிடப்பதை நடைபிணங்கள் அரசியல் பேசித்தான் வெளிப்படுத்தவேண்டும். அரசியல் பேசாதவிடத்து விசும்பலும் கண்ணீரும் கணக்கெடுக்கப்பட மாட்டாது. வல்லமை இல்லாதவர்கள் வலியைக்கூடச் சொல்லியழ முடியாது. இதற்கு தாயகமே சிறந்த உதாரணம். (எம்மை அழித்த சக்திக்கு எதிராக அரசியல் பேச வேண்டும் எமக்குள் அல்ல என்பதை மறுப்பதற்கில்லை)

வடக்கிலிருந்து வந்த தேர்களும்

தெற்கிலிருந்து வந்த டாங்கிகளும்

பலப்பரீட்சை நடத்தியதில் வன்னி உருக்குலைந்து போனது.

சுகன் வன்னியில் பலப்பரீட்சையா நடந்தது? அப்படியானால் இவ்வளவு காலமும் சிங்களத்துடனான எங்கள் போராட்டம் வெறும் பலப்பரீட்சையா? உங்கள் கருத்தை ஏற்க முடியாது. எனக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து சிங்கள அரச சக்திகளால் பாதிக்கப் பட்டுகொண்டிருந்ததே வாழ்வானது. அப்படிப்பட்ட நான் சிங்களத்தை எதிர்த்தால் அது பலப்பரீட்சை என்றதாக அமையுமா உங்கள் கூற்று.

"தேரில் இருக்கும் வரை உங்களுக்கு

கண்ணீர் தீர்த்மாக தெரியும்

பசி விரதமாக தெரியும்

குருதி குங்குமமாகத் தெரியும்

அழத்தென்பில்லாத உணர்வுகள்

பக்தியாகத் தெரியும்"

இவற்றை தவிர்த்துப்பார்த்தால் அடிமைத்தனம் அற்புதமாய்த் தெரியும். இருக்கிறோம் என்ற உயர்திணையின் சடத்தன்மைக்கு உரித்துடையவர்களாகிய மாற்றம்தான் தெரியும்.

உங்கள் கருத்துக்ள் சந்தேகங்கள் மீது மறுவாதம் செய்வதற்கு பதிலாக நான் குறிப்பிட்ட கருத்துக்களையே வலியுறுத்த விரும்புகின்றேன். உங்கள் பக்க கருத்துக்களில் கேள்விகளில் சந்தேகங்களில் உள்ள நியாயங்களை நிராகரித்து பதில் அளித்து நான் சொல்லிய கருத்தை முன்நிறுத்த விரும்பவில்லை.

எமது அழிவுகளுக்கான காரணங்கள் அகமாகவும் புறமாகவும் நோக்கமுடியும். புறத்தில் சிங்களம் இந்தியா இன்ன பிறநாடுகளின் சூழ்ச்சிகள் போட்டிகள் அகத்தில் எமது பிரிவினைகள் ஏற்றதாழ்வுகள் சமூக முரண்பாடுகள் சமூக உளவியல் என பலதும் நீண்டு செல்கின்றது. கருத்துக்களத்தில் நான் அகநிலை சார்ந்தவனாகவே முதலில் நிற்கின்றேன். அவற்றையே பெரும்பாலும் நான் விவாதத்துக்கு உட்படுத்த விரும்புகின்றேன். அவ்வாறான ஒரு அடிப்படையில் தான் எனது எழுத்துக்கள் அமைகின்றது.

பூர்வீக பூமியில் சிங்களக் குடியேற்றங்களும் புலம்பெயர்ந்து பிற தேசங்களில் நாமாக குடியேறுவதுக்கும் இடையில் அடிப்படையில் சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றது. ஏற்கனவே அக நிலையில் சிதைந்த இனம் என்ற வடிவத்தை இந்த ஒற்றுமைகள் மேலும் சிதிலமாக்குகின்றது. இந்த இடத்தையே நான் மயானம் என்று கூற முற்பட்டிருக்கின்றேன். இது எமது புரிதலுக்கு அப்பாற்பட்டதில்லை. இந்த இடத்திலும் நாம் திருந்தமுடியவில்லை குறிப்பாக அகநிலை முரண்பாடுகளை சரி செய்ய முற்படவில்லை என்பதையே கூற முற்பட்டிருக்கின்றேன்.

பலப்பரீட்சை என்ற எனது குறியீடு குறித்து நிங்கள் முரண்படுவது நியாயமானது. இப்போது எம்மால் தேசியமாக இனம்காணக் கூடிய ஒன்றெனில் அது சிங்களத்தின் நெருக்கடிக்குள்ளாக வாழ்வை பூர்வீக பூமியில் தக்கவைத்திருக்கும் மக்களே. இந்த மக்களும் அவர்கள் வாழ்வுக்கும் அப்பாற்பட்டு தமிழ்த்தேசியம் குறித்து பேசமுடியும் என்றால் தேசியத்தை முன்னெடுக்க முடியும் என்றால் தேசியம் எவ்வாறு எங்கிருந்து வடிவமைக்கப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது. சிங்கள பேரினவாதத்திடம் இருந்து விடுபட தமிழ்த்தேசியம் போராடியது. இன்றும் போராட முற்படுகின்றது. ஆனால் மக்களிடம் இருந்து அது விலகிக்கொண்டது. அல்லது மக்கள் அதன் சிந்தனைமுறையில் இருந்து விலகிக்கொண்டார்கள். எமது வாழ்வு சிங்கள அரசஅதிகாரங்களால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்ததே வாழ்வானது என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன் ஆனால் எனது கருத்து எமக்குள் நாம் மோதி பாதிப்படைந்ததை குறிப்பிடுகின்றது. பிரிவினை வாதங்கள் பிரதேசவாதங்கள் உள் மோதல்கள் மத பிரிவினைகள் எல்லாம் நடக்கும் பொழுது நாம் சிங்களம் ஏற்படுத்தும் பாதிப்பையே உற்றுநோக்கிக்கொண்டிருந்தோம். நானும் இதற்கு விதிவிலக்கில்லை. தேசியம் அதன் சிந்தனை முறை மக்களிடம் இருந்து விலகி விலகி வறுமைப்பட்டவர்களை நோக்கி குறுகிக்கொண்டு சென்றது. நிர்ப்பந்த நிலைக்குச் சென்றது. முடிவில் பயங்கரவாதமாக முற்றுப்பெற்றது. இது குறித்த புறநிலைப் பார்வையை நான் மறுதலிக்கவில்லை ஆனால் நான் எழுத முற்படுவதெல்லாம் அகநிலைசார்ந்த கூறுகளையே. எமது அழிவின் விரைவு என்பது அகநிலை முரண்பாடு சார்ந்தது என்பதை நான் ஆழமாக நம்புவதால் அதைப்பற்றியே எழுத முற்படுகின்றேன். இக்களத்தின் எனது பெரும்பாலான கருத்துக்கள் இந்த அடிப்படையிலேயே அமைகின்றது.

அகநிலையில் நாம் எல்லைகளற்று பல்வேறு அடிப்படையுடன் முரண்பட்டு பிளவுபட்ட நிலை என்பதும் சிதைவுகளும் இனம் என்ற பொது வடிவம் இறந்த நிலைக்கு ஒப்பானதாக இருக்கின்றது. இதன் அடிப்படை நிலையை சரிசெய்வதற்கு முனையாமல் புறநிலை அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கும் அரசியல் என்பது வலிமையற்றது. நாம் அரசியல் பேசித்தான் ஆகவேண்டும் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை எனது கருத்து அதற்கான தகுதியை வளர்ப்பது குறித்து இருக்கின்றது. முரண்பாடுகளை ஓரளவேனும் சரிசெய்ய ஒரு அடிப்படையை அணுகு முறையை உருவாக்குவோம் ஐக்கியப்படுவோம் அரசியல் பேசுவதற்கான அடித்தளத்தை உருவாக்குவோம் பேசுவோம் என்றவாறே எனது கருத்துக்கள் அமைகின்றது.

அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.