Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நந்தலாலா" -- நல்லாருக்கு

Featured Replies

திரைப்படம் என்பது பொதுவாக ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே நோக்கப்படினும், நன்றாகச் செதுக்கப்பட்ட படைப்புக்கள் பார்த்து முடித்தபோது அப்படத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க முடியாததாய் ஆக்கும். நந்தலாலா திரைப்படம் அவ்வாறாக அமைந்துள்ள ஒரு படம் என்பது எனது கருத்து. அண்மையில் கமலின் "மன்மதன் அம்பு" திரைப்படத்தை அதன் பாடல் இசை மற்றும் வரிகள் சார்ந்தும் கமல் என்ற தனித்துவம் சார்ந்தும் பலத்த எதிர்பார்ப்புடன் பார்க்க வெளிக்கிட்டு, அவஸ்த்தைப் பட்டபடி பார்த்து படம் முடியும் தறுவாயில் ஒன்றில் கமல் சாகவேண்டும் அல்லது நான் சாகவேண்டும் என்ற அளவிற்கு வெறுப்பாகியிருந்த நிலையில் இனிமேல் தமிழ் படம் பார்ப்பதை விட்டுவிடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் மிஷ்க்கின் நந்தலாலா மூலம் எனது தமிழ்பட வெறுப்பை நொருக்கித் தள்ளியுள்ளார்.

படம் பற்றிய எனது பார்வைக்குள் செல்ல முன்னர், இசை ஆகட்டும் எழுத்தாகட்டும் படம் ஆகட்டும் இன்னுமொன்றின் சாயலில் இருக்கின்றது என்று முன்னெல்லாம் பலதடவை சொல்லத் தோன்றுவதுண்டு. ஏறத்தாள அமிரின் ஜோகி திரைப்படம் (2005ம் ஆண்டு வெளியான Tsotsi என்ற படத்தின் அப்பட்டமான திருட்டு) வரை எனக்கு இந்த உணர்வு இருந்ததுண்டு. முன்னர் “முருகதாஸ்” என்று களவெடுத்த படத்திற்கு முருகதாஸ் போட்டபோது ஆத்திரம் கொப்புளித்தது. ஆனால் இப்போது மனிதன் என்பதன் பொதுமை பலகோணங்களில் ஒன்றாகவே எனக்குப் படுவதால், யார் யாரிடம் எந்தச் சிந்தனையைக் கொள்ளையடித்தார்கள் என்பது முக்கியமற்றுப் போயுள்ளது. சிந்தனை உள்வாங்கப்பட்டதே என்றும் அது எவ்வாறு பிரதிபலிக்கப்படுகிறது என்பதுவுமே அவசியமாகிறது. ஒரு வேளை நந்தலாலாவைக் கூட கோமார்க் மக்காத்தியின் ‘த றோட்’ என்ற சிந்தனையின் சாயலில் எவரிற்கேனும் எட்டிப்பிடித்து ஒப்பிடத்தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நந்தலாலா தனக்கான தனித்துவத்தைத் தாராளமாககப் பெற்று நிற்பதாகவே தோன்றுகின்றது. எனவே சாயல்கள் பற்றிய ஆராய்ச்சி இங்கு தவிர்க்கப்படுகின்றது.

நந்தலாலா

இந்தப்படத்தின் சிறப்பு என்பது படத்தின் நகர்ச்சியில் செறிந்து கிடப்பது சிறப்பு. அதாவது கதாநாயகன் என்ன செய்தார், கதாநாயகியின் கவர்ச்சி எவ்வாறிருந்தது, எவ்வாறு ஆரம்பித்து எவ்வாறு முடிந்தது என்றில்லாமல் படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு படமாகும் அளவிற்கு, படத்தின் ஒவ்வொரு காட்சியும் கதை சொல்லும் அளவிற்கு நேர்த்தியாகப்படம் அமைந்துள்ளது. அதிகபட்சம் நிறைவுகள் தான் உள்ளது என்பதால் என்னை வெறுப்பேற்றிய ஒரே ஒரு குறையை மட்டும் முதலில் கூறிவிட்டு நிறைவுகளிற்குள் செல்லலாம். எனது பார்வையில் இப்படத்தின் மிகப்பெரும் குறை, என்னை வெறுப்பேற்றிய குறை, மிஷ்க்கின்னின் தாயாராக நடித்துள்ள பாத்திரம் (இது நடிகை றோகினியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை). இத்தனை நேர்த்தியாகப் படம் பண்ணிய மிஷ்க்கின் இந்தப்பார்திரத்திற்காக நடிகைத் தெரிவில் ஏன் இவ்வாறு கோட்டை விட்டார் என்று தெரியவில்லை. மிஷ்க்கின் மற்றும் அவரது அவரது அண்ணாவையும் பார்க்கையில் அவர்களது வயதிற்குக் கூடிய முதிர்ச்சி அவர்களின் உடல்களில் தெரிகிறது. ஆனால், அவர்களது தாயாராகப், பலவருடம் உளவியல் பாதிக்கப்பட்டுக் கொல்லையில் கட்டிப்போடப்பட்டிருந்த ஒருவரின் கால்களைப் பார்த்தால், அது ஒப்பனைகளையும் தாண்டி, கொழுகொழுவென்று இளமை ததும்பி வெளித்தெரிகிறது. அத்தாயாரை மிஷ்க்கின் தூக்கும் போது அத்தாய்ப்பாத்திரத்தின் முரண்டு பிடிப்புப் கூட வயது என்ற ஒரு விடயம் பற்றியோ, உடல் உள தளர்வு என்ற விடயங்கள் பற்றியோ கருத்திலெடுக்காது வெறுப்பேற்படுத்துகிறது. இந்தப்பாத்திரத்திற்கான நடிகை தெரிவின் கோட்டை விடுகை என்பது படத்தின் பல பெருமைகளைச் சிதைப்பதாய் வெறுப்பேற்றியது என்பதைப் பதிந்து கொண்டு சிறப்புகளிற்குள் இனிச் செல்லலாhம்.

இப்படத்தின் கதை பற்றி இங்கு நான் கூறவில்லை. அவ்வாறு இது தான் கதை என்று கூறுவதற்கான படமும் இதுவல்ல. படத்தின் நகர்ச்சியில் என்னை ஈர்த்த காட்சிகள் மற்றும் பார்திரங்களைப் பற்றியும் அவை சொல்லாமல் சொன்னதாய் எனக்குப் பட்ட கதைகளையும் மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். ஒருவேளை படம் பார்க்காதவர்கள் படத்தைப் பார்த்தபின் இதை வாசிப்பது நல்லது.

லாறி ட்றைவர் நாசர்

படத்தில் பன்னிரண்டே நொடிகள் நடித்துள்ள நாசரின் முகம் தெரிந்த சொற்ப வினாடிகளில் அவர் லாறி ஓட்டியடி தூக்கத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார். அவரின் விழிகள் மூடியபடியே இருக்கின்றன. எதிரே இன்னுமொரு வண்டி வருகிறது. அவ்வண்டி ஹோர்ண் அடித்துப் பார்த்தும் நாசரை எழுப்பமுடியாதுபோக, நாசரின் வண்டியுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக எதிரில் வந்த வண்டிச் சாரதி தனது வண்டியினைப் பள்ளத்தில் செலுத்த அவ்வண்டி சரிந்து போகிறது. தூக்கத்தில் இருந்து சொற்ப வினாடிகள் களித்து எதிர்வண்டியின் ஹோர்ண் சத்தத்தைக் கிரகித்து நாசர் அதிர்ந்து எழுந்து பார்க்கிறார் சாலை வெறித்தோடிக் கிடக்கிறது. எனவே நிஜத்தில் வண்டி எதுவும் எதிரே வரவில்லை, தான் கேட்ட ஹோர்ண் சத்தம் வெறும் பிரமையே என நாசர் தனக்குத் தானே நினைத்து முறவலித்தபடி தனது ஹோர்ணினை இருமுறை ஒலி எழுப்பி விட்டுத் தொடர்ந்து பயணிக்கிறார். பார்வையாளரிற்குப் பள்ளத்தில் பாய்ந்து புகைந்து கொண்டிருக்கும், நாசர் காணத்தவறிய வண்டியின் காட்சி காண்பிக்கப்படுகின்றது.

மேலோட்டமாய்ப் பார்க்கையில், மேற்படி காட்சி ஒரு சாதாரண காட்சியாகத் தெரியினும் ஆழமானமதாகவே படுகிறது. வாழ்வில் எத்தனை ஆபத்துக்களில் இருந்து ஏதோ காரணத்தால் நாம் தப்பித்துக்கொள்கிறோம். இருந்தும் நாம் தப்பி விட்டதால் எம்மைக் கடந்துபோன ஆபத்தைக் கிரகிக்கவோ புரிந்து கொள்ளவோ அப்புரிதல் சார்ந்து எமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவோ நாம் தவறிவிடுகிறோம். ஏதிர்வரும் ஆபத்தோடு நாம் மோதி அவ்வாபத்தை நாம் எதிர்கொண்டாலேயன்றி, மற்றைய நேரங்களில் எமது பாதைகள் பற்றி மீழ் பரிசீலிக்கும் நேரமோ சந்தர்ப்பமோ அற்றவர்களாக, அதற்கான தேவைகளை உணராதவர்களாக எம்பாட்டிற்கு எம்போக்கில் சென்றபடி சென்று கொண்டே இருக்கின்றோம். எம்முன் காட்சிகள் விரிந்தபடி தான் இருக்கின்றன, நாம் எவற்றைக் காணுகின்றோம் எவ்வாறு காணுகின்றோம் என்பதைப் பொறுத்துப் பலகாட்சிகள் எம்முன் விரிந்தும் எமக்குப் பலனற்றுப் போய்விடுகின்றன.

இராணுவ சீருடை உந்துருளி நபர்கள்

திரைப்படத்தின் பயணத்தில் இராணுவ சீருடை ஒத்த சீருடையில் இரு பாத்திரங்களை நாம் சந்திக்கின்றோம். இராணுவத்தை ஒத்த பச்சைச் சீருடை மற்றும் தலைக்கவசம், இராணுவம் ஒத்த பயணப்பொதிகள், இராணுவ வண்டியினை ஒத்த உந்துருளி. ஓட்டுனர் உயரமான பருமனானவர். பின்னாலிருப்பவர் குள்ளமானவர் தொடர்ந்து சாக்லெட் உண்டுகொண்டிருக்கிறார். இப்பாத்திரங்கள், பல இதர பாத்திரங்களைப் போல அதிகம் பேசவில்லை. அதனால் இப்பாத்திரங்கள் சொல்லும் கதையைக் கிரகிப்பதும் பார்வையாளர்களின் பொறுப்பாகிப் போகிறது.

தலைக்கவசம் (ஹெல்மட்) அணிந்த ஒருவரைக் காண்கையில் அவரிற்கு முடியிருக்குமாக அல்லது மொட்டையாயிருப்பாரா என்று எமக்கு எண்ணத்தோன்றுவது அரிது. அதுவும் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் இருவர் ஹெல்மட் அணிந்திருப்பது எமது மனதின் எதிர்பார்ப்போடு உடன்படும் சாதாரண காட்சி என்பதனால் அக்காட்சி சார்ந்த விசாரணைகளோ, ஹெல்மட்டிற்குள் மண்டையில் முடியிருக்குமா இல்லையா என்ற ஆராய்ச்சிகளோ எமக்குத் தேவைப்படுவதில்லை. ஆனால் மிகவும் அற்புதமாக இப்படத்தில் மிஷ்க்கின் பாத்திரம் இந்த மோட்டார் சைக்கிள் நபர்களின் ஹெல்மட்டைக் கழட்டுகிறது. ஓட்டுனரின் ஹெல்மட்டைக் கழட்ட அங்கு மொட்டைத் தலை தெரிய, மிஷ்க்கின்னும் சிறுவனும் சிரிக்கிறார்கள். பின்னர் மற்றையவரின் ஹெல்மட் கழட்டல் அங்கும் மொட்டைத் தலை அதற்கும் சிரிப்பு. சிரிப்பு என்பது, குறித்த ஒரு சந்தர்ப்பத்தில் இது தான் சரியான நடைமுறை என்ற எமது எதிர்பார்ப்பிற்கு முரணான காட்சிகளின் வெளிப்பாட்டிலேயே பிறக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்க்ள். ஹெல்மட் அணிந்திருந்த வரை உள்ளிற்குள் மொட்டைத்தலை இருக்குமா என்று சிந்திக்கத் தவறிய பார்வையாளர்களும் கூட ஹெல்மட் கழட்டப்பட்டு மொட்டைத் தலை தெரிந்தபோது மிஷ்க்கின் மற்றும் சிறுவனின் பாத்திரங்களோடு சேர்ந்து சிரிக்கிறார்கள். சமூகம் தனது ஏமாற்றத்தைச் சிரித்து மழுப்புகிறது. எப்படி?

இராணுவ சீருடை மோட்டார் சைக்கிள் நபர்களை ஏன் இயக்குனர் படத்தில் சேர்த்தார் என்று திட்டவட்டமாக அவர் தான் கூறமுடியும். ஆனால் எனது பார்வையில் நான் நினைக்கிறேன் இராணுவசீருடை மற்றும் சிப்பாய்கள் என்பது இங்கு சமூகத்தையே சித்தரிக்கின்றது. அதாவது, இராவம் என்பது ‘ஓர்டர் கரி அவுட்’ மனநிலையினைப் பிரதிபலிப்பது. இராணுவ வீரர்களிற்குச் சுயசிந்தனை அனுமதிக்கப்படாதது. கொடுக்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் சிப்பாயின் வேலையே இன்றி கட்டளையின் பின்புலம், கட்டளையின் தார்ப்பரியம் முதலியன பற்றியெல்லாம் சிப்பாய் அலட்டிக்கொள்ள முடியாது--குறிப்பாகக் களத்தில். அவ்வாறு அலட்டின் உயிர் இழக்கப்படும். கொடுத்த கட்டளையினை தனது உயிரைக்கூடக் கொடுக்கச் சித்தமாய் சிப்பாய் நிறைவேற்றிக்கொண்டிருப்பதைப் பார்ப்பவர்களிற்கு அச்சிப்பாய் தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அல்லது நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் கட்டளையோடு உடன்படுவதாகவே எண்ணத் தோன்றும். ஆனால் நிஜத்தில் அனைத்துச் சிப்பாய்களும் தாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் கட்டளைகளோடு உடன்படுபவர்களாக இருக்கவேண்டியதில்லை. சமூகம் என்பது கூட ஏறத் தாள இவ்வகையினது தான். சமூக வழமைகள், ஒழுங்குகள், கட்டுப்பாடுகுகள், சட்டங்கள் என்பவற்றுக் கட்டுப்பட்டு நடந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவ்வழமைகளோடு உடன்படுகிறார்கள் என்று அர்த்தமில்லை. வெளித்தோற்றத்திற்கும் உள் விருப்பு வெறுப்புகளிற்குமிடையே பலத்த வேறு பாடு இருக்கலாம். பருமனான சிப்பாய் வீரனிற்குக் குழந்தை ஒத்த சாக்கிலட் பிரியமும் ஆசைகளும் இருக்கலாம். ஹெல்மட்டிற்குள் ஒளிற்ந்திருக்கும் மண்டையில் முடியிருக்கலாம் அல்லது மொட்டையாய் இருக்கலாம். சமூகத்தில் சில பாத்திரங்கள் சில நேரங்களில் இதர பாத்திரங்களைப் பார்த்து எள்ளி நகையாடலாம், ஆனால் அதற்காகச் சமூகம் என்பது ஒருசீரானது (ஹொமோஜீனியஸ) அல்ல. வெளிப்பார்வைக்கு சமூகத்தின் உன்னத பெறுமதிகள் மற்றும் வழமைகளால் எல்லோரும் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதாய்த் தோன்றினும், பல ஹெல்மட்டுக்கள் கழட்டப்படுiயில் முரணான காட்சிகள் விரிகின்றன.

விலைமாது மற்றும் மிஷ்க்கினிடையேயான குகைக்குள்ளான உரையாடல்

மிஷ்க்கின் பாத்திரம் தனது இடை அளவிற்கு பெரிதான ஜீன்சினை அணிந்து அது விழுந்து விடாதிருப்பதற்காகக் கையால் தனது காற்சட்டையினைப் பிடித்தபடி பயணிக்கின்றது. அக்காற்சட்டையில் பட்டி இருக்கின்றது. ஆனால் அதை உபயோகிக்க மிஷ்க்கின் பாத்திரத்திற்குத் தெரியவில்லை. இந்நிலையில் வழியில் சந்திக்கும் ஒரு விலைமாதுப் பாத்திரம், மோட்டார் சைக்கிள் நபர்கள், மிஷ்க்கின் மற்றும் சிறுவன் ஒரு குகைக்குள் தங்க நேர்கிறது. வெளியே மழை பெய்து கொண்டிருக்கின்றது. அப்போது அங்கு அவ்விலைமாது தனது உள்ளத்தின் வலிகள் பற்றிப் பேசி தன்னை நினைக்கையில் தனது உடல் நாறுகிறது மனமும் நாறுகிறது என்று அழுகிறாள். அதைக்கேட்டதும் விசுக்கென்று எழுந்த மிஷ்க்கின் பாத்திரம் அப்பெண்ணின் கையைப் பிடித்து அவளைக் குகைக்கு வெளியே இழுத்துச் சென்று சற்று சேற்றினை எடுத்து அவளது கையில் அப்பி விட்டுப் பின் அச்சேறை பெய்துகொண்டிருக்கும் மழைநீரில் கழுவி, பார்த்தாயா அழுக்கும் மணமும் போய்விட்டது குளி குளி என்று உரக்கக் கத்துகிறது. நேகிழ்ந்து போன அப்பெண், மிஷ்க்கின் பாத்திரத்தின் காற்சட்டையினை அதில் தொங்கிக் கொண்டிருந்த பட்டியால் கட்டி விளாது நிற்கச் செய்கிறாள்.

மிகச் சிறு விடயமாக மேலே வெளிப்படும் காட்சி ஆழங்களை அள்ளிக் காட்டுகிறது. காற்சட்டையில் தொங்கிக்கொண்டிருக்கும் பட்டியினால் கட்டி காற்சட்டை விழாது செய்வது எத்தனை இலகுவானது என்று பெண்ணிற்குத் தோன்றுகின்றதோ அத்தனை இலகுவானது தான் அப்பெண் தனது உடலும் மனமும் நாறுகிறது என்று எண்ணிப் புழுங்கிக் கொண்டிருக்கும் நாற்றத்தைப் போக்குவதும் என்று மிஷ்க்கின் பாத்திரம் வெளிப்படுத்துகின்றது. உடல்நாற்றம் போக்கக் குளிப்பது சரி என்பது பெண்ணிற்குத் தெரிந்திருக்கும் ஆனால் அவளது மனநாற்றம் தான் அவளை வாட்டியது. ஆனால் அந்த மன நாற்றம் என்பது மற்றையவர்கள் சார்ந்ததாய், மற்றையவர்கள் போட்டுவைத்த பெறுமதிகளில் இருந்து மற்றையவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற சமூக அடிப்படையில் தான் எழுகிறது. அங்கு இக்காட்சியில் அந்த விலைமாது இத்தகைய தத்துவவிசாரணை எதையும் நடத்தவில்லை, ஆனால் இன்னுமொரு மனிதன் குளி உனது நாற்றம் நீங்கி விடும் என்று கூறியமை அவளையும் அறியாது அவளது மனநாற்றத்தையும் குறைப்பதை அவளால் உணரமுடிகிறது. கண்ணீர் பெருகுகின்றது. வீரியமான காட்சி.

ஓவ்வொரு காட்சியாய் இரசிக்கக்கூடிய இப்படத்தை முழவதும் ஒரு பதிவில் எழுத முடியவில்லை. ஆனால் படத்தின் தன்மையினை வெளிப்படுத்துவதற்காகச் சில மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சியியும் ஆழமாய் அனுபவித்துப் பார்க்கும் வகைய உள்ள ஒரு சமூக விமரிசனமாகவே இப்படம் எனக்குப் படுகின்றது. பலதட்டு மக்கள், சமூகம், பெறுமதிகள், பயங்கள், எதிர்ப்பார்ப்புக்கள் என ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்த்தி முடிவில் மிஞ்சுகின்றது. பாராட்டுக்கள் மிஷ்க்கின்.

Edited by Innumoruvan

  • 3 months later...

இப்படத்தின் கதை பற்றி இங்கு நான் கூறவில்லை. அவ்வாறு இது தான் கதை என்று கூறுவதற்கான படமும் இதுவல்ல. படத்தின் நகர்ச்சியில் என்னை ஈர்த்த காட்சிகள் மற்றும் பார்திரங்களைப் பற்றியும் அவை சொல்லாமல் சொன்னதாய் எனக்குப் பட்ட கதைகளையும் மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். ஒருவேளை படம் பார்க்காதவர்கள் படத்தைப் பார்த்தபின் இதை வாசிப்பது நல்லது.

ஆனால் என்னைப் பொறுத்தவரை நந்தலாலா தனக்கான தனித்துவத்தைத் தாராளமாககப் பெற்று நிற்பதாகவே தோன்றுகின்றது. எனவே சாயல்கள் பற்றிய ஆராய்ச்சி இங்கு தவிர்க்கப்படுகின்றது.

உங்கள் கருத்தே எனதும்.

நந்தலாலா குறித்த உங்கள் பார்வையை வித்தியாசமாகவும் ஆழமாகவும் முன்வைத்துள்ளீர்கள். காட்சிகள் ஊடாக உங்கள் பார்வையை புரிந்துகொள்ள முற்படுதல் கூட ஒரு புதிய அனுபவமாகவே உள்ளது.

தாய்மை தாயன்பு போன்றன மிகைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாய மாயையில் நாம் இருக்கின்றோம். இந்த மாயைகள் உடைத்து நொறுக்கப்படுகின்றதே நந்தலாலாவின் நுணுக்கம் என்று என்னால் உணரமுடிகின்றது. ஒரு பண்பாட்டு அடயாளத்துடன் கலாச்சார அடயாளத்துடன் , ஆணாதிக்கம் மத மாயைகள் ஊடாக அன்பின் அது சார்ந்த உணர்வுகளின் பெறுமதிகள் தாயன்பு போன்றவற்றுள் சிறைவைக்கப்படுகின்றது. அச் சிறைகளை உடைத்து அவைகளை சுதந்திரமாக்கும் போது அவைகள் எங்கும் நிரம்பிவழிகின்றது. அல்லது தாயன்பு எங்கும் நிரம்பி வழிகின்றது.

பல்வேறு விதமான சமூக மாயைகளுள் அகப்பட்டிருக்கும் உணர்வுகளின் புனிதம் குறித்த கேள்விகள் அடிப்படையில் தமிழ்ச்சினிமாவில் இது ஒரு முக்கியமான திரைப்படம் என்றே நான் கருதுகின்றேன். இந்தப்படத்தில் இசை பெரும் பணியை செய்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கமலின் "மன்மதன் அம்பு" திரைப்படத்தை அதன் பாடல் இசை மற்றும் வரிகள் சார்ந்தும் கமல் என்ற தனித்துவம் சார்ந்தும் பலத்த எதிர்பார்ப்புடன் பார்க்க வெளிக்கிட்டு, அவஸ்த்தைப் பட்டபடி பார்த்து படம் முடியும் தறுவாயில் ஒன்றில் கமல் சாகவேண்டும் அல்லது நான் சாகவேண்டும் என்ற அளவிற்கு வெறுப்பாகியிருந்த நிலையில் இனிமேல் தமிழ் படம் பார்ப்பதை விட்டுவிடலாமா என்று கூடத் தோன்றியது.

"மன்மதன் அம்பு" படம் பாதிதான் பார்த்தேன் அதன்பிறகு யாராவது நல்ல படம் என்று சொன்னால் மட்டும் படம் பார்ப்பது என்ற முடிவில் இருக்கிறேன்.

படத்தை பற்றிய விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்தேன் இப் படம் எனக்குப் பிடித்திருந்தது

நல்ல படங்கள் என்றால் பார்ப்பேன்.

'நந்தலாலா' ஒரு ஜப்பானிய சினிமாவின் மீள்பதிவு என்றவுடன் ஆர்வம் போய்விட்டது. விமர்சனத்தை பார்த்தால் பார்க்கலாம் போலுள்ளது.

யதார்த்த சினிமாவை விரும்பிப்பார்க்கும் எனக்கு நந்தலாலா ஏனோ மனதில் ஒட்டவில்லை.படம் முழுக்க ஒரு செயற்கைத்தனம் இருந்தது போன்ற உணர்வு.

மிஷ்கினின் பேட்டிகள் வாசிப்பதாலோ என்னவோ நிறைவை தரவில்லை.

நான் எப்ப வரும் என்று காத்திருந்து பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் மிஷ்கினின் பாத்திரப் படைப்பில் இருந்த குளறுபடிகளால் படம் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை. ஒரு வேளை என் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததோ தெரியவில்லை

இப்ப, அழகர் சாமி குதிரை படத்தினை எதிர்பார்க்கின்றேன்....பாப்போம் எப்படி இருக்கு என்று

படத்தில் பன்னிரண்டே நொடிகள் நடித்துள்ள நாசரின் முகம் தெரிந்த சொற்ப வினாடிகளில் அவர் லாறி ஓட்டியடி தூக்கத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார். அவரின் விழிகள் மூடியபடியே இருக்கின்றன. எதிரே இன்னுமொரு வண்டி வருகிறது. அவ்வண்டி ஹோர்ண் அடித்துப் பார்த்தும் நாசரை எழுப்பமுடியாதுபோக, நாசரின் வண்டியுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக எதிரில் வந்த வண்டிச் சாரதி தனது வண்டியினைப் பள்ளத்தில் செலுத்த அவ்வண்டி சரிந்து போகிறது. தூக்கத்தில் இருந்து சொற்ப வினாடிகள் களித்து எதிர்வண்டியின் ஹோர்ண் சத்தத்தைக் கிரகித்து நாசர் அதிர்ந்து எழுந்து பார்க்கிறார் சாலை வெறித்தோடிக் கிடக்கிறது. எனவே நிஜத்தில் வண்டி எதுவும் எதிரே வரவில்லை, தான் கேட்ட ஹோர்ண் சத்தம் வெறும் பிரமையே என நாசர் தனக்குத் தானே நினைத்து முறவலித்தபடி தனது ஹோர்ணினை இருமுறை ஒலி எழுப்பி விட்டுத் தொடர்ந்து பயணிக்கிறார். பார்வையாளரிற்குப் பள்ளத்தில் பாய்ந்து புகைந்து கொண்டிருக்கும், நாசர் காணத்தவறிய வண்டியின் காட்சி காண்பிக்கப்படுகின்றது.

மேலோட்டமாய்ப் பார்க்கையில், மேற்படி காட்சி ஒரு சாதாரண காட்சியாகத் தெரியினும் ஆழமானமதாகவே படுகிறது. வாழ்வில் எத்தனை ஆபத்துக்களில் இருந்து ஏதோ காரணத்தால் நாம் தப்பித்துக்கொள்கிறோம். இருந்தும் நாம் தப்பி விட்டதால் எம்மைக் கடந்துபோன ஆபத்தைக் கிரகிக்கவோ புரிந்து கொள்ளவோ அப்புரிதல் சார்ந்து எமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவோ நாம் தவறிவிடுகிறோம். ஏதிர்வரும் ஆபத்தோடு நாம் மோதி அவ்வாபத்தை நாம் எதிர்கொண்டாலேயன்றி, மற்றைய நேரங்களில் எமது பாதைகள் பற்றி மீழ் பரிசீலிக்கும் நேரமோ சந்தர்ப்பமோ அற்றவர்களாக, அதற்கான தேவைகளை உணராதவர்களாக எம்பாட்டிற்கு எம்போக்கில் சென்றபடி சென்று கொண்டே இருக்கின்றோம். எம்முன் காட்சிகள் விரிந்தபடி தான் இருக்கின்றன, நாம் எவற்றைக் காணுகின்றோம் எவ்வாறு காணுகின்றோம் என்பதைப் பொறுத்துப் பலகாட்சிகள் எம்முன் விரிந்தும் எமக்குப் பலனற்றுப் போய்விடுகின்றன.

இன்னுமொருவன்,

இந்தக் காட்சியை நானும் அவதானித்தேன், பலரும் அவதானித்து இருப்பார். ஆனால் இதனை நிஜ வாழ்வில் வரும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் உணர்வு இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டு இருக்கும் போது ஏற்பட்டதா அல்லது படம் பார்த்த பின் இந்தப் படத்தின் காட்சிகளை அசை போடும் போது ஏற்பட்டதா அல்லது இது பற்றி விமர்சனம் ஒன்று எழுதுவம் என்று வெளிக்கிட்டு எழுதும் போது எழுந்ததா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.